மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 14

ஏழு கடல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`நேற்று மலையிலிருந்தும் இன்று கடலிலிருந்தும்

நாளை சமவெளியிலிருந்தும் உண்பேன்.

நடந்து நடந்து அழுக்கான பயணியின் காலைவிட

இந்த உலகில் அழகானதொன்றை எனக்குக் காட்டு பார்க்கலாம்.”


- பராரிகள்

தந்தை வழி (1951 - முன்பனிக்காலம்)

விருதுநகரிலிருந்து வந்த பஞ்சுப்பேட்டை யாவாரிக்கென மாடுகள் வாங்க கொம்பையா சந்தைக்குள் வந்தார். ஆத்தியப்பனை மரத்தடியில் இருத்திவிட்டு அவரோடு வந்த அந்தோணிமுத்தைத் தன்னோடு அழைத்துக்கொண்டு வெறும் பார்வை பார்த்துவிட்டு வரலாமெனக் கிளம்பினார். ஒரு சுற்று சந்தையின் நீளமும் அகலமுமாய் விறுவிறுவெனச் சுற்றி வந்தார். அரைமணி நேரம் பிடித்திருக்காது. மீண்டும் மரத்தடிக்கு வந்தார். அந்தோணிமுத்துவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ``சரி வாங்க உள்ள போகலாம்.'' எல்லோரும் சந்தைக்குள் நுழைந்தார்கள். உள்ளே போகும்போதே ஆத்தியப்பனிடம் கேட்டுக்கொண்டார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 14

``இங்க நிறைய பேர் உள்ளூர் யாவாரிங்க. நான் மாட்டக் கண்டு சொல்றேன். வில நீங்க பேசிக்கோங்க.''

``நமக்கு பஞ்சு யாவாரம் மட்டும்தான் தெரியும். இதெல்லாம் நமக்குத் தெரியாது. உங்க மேல நம்பிக்க இருக்கு. நீங்க வில முடிச்சிக் குடுங்க.''

``இல்லைங்க. அது சரிப்பட்டு வராது. நீங்க அசலூருக்காரக. உள்ளூர் யாவாரிகளுக்கு ஆதரவா நான் வில சொல்லிட்டேன்னு நினைச்சிக்கக் கூடாது. அது சங்கடமாப்போயிடும். என்ன நம்பி அவ்வளவு தூரத்துலயிருந்துவேற வந்திருக்கீக. சின்னதாகூட நமக்குள்ள மனசு சொனக்கம் வந்திறக்கூடாது. எனக்கு நீங்க தரகுன்னு ஒத்தக் காசு தர வேண்டாம். நீங்க வில பேசிக்கோங்க. செரியா. நான் சரியானதா சொல்றேன்.''

``அதெல்லாம் இல்லங்க. உங்க மேல முழு நம்பிக்க இருக்கு. நீங்களே முடிச்சிக்குடுங்க.''

``அப்படியா... ம்... செரி ஆகட்டும்.''

முதலில் வெள்ளையும் சாம்பலும் கலந்த மயிலக்காளைகளின் அருகில் வந்து முதுகில் தொட்டார். அது சிலிர்த்துக்காட்டியது. காளைக்கு உரிமைக்காரனை அணுகி எடுத்த எடுப்பிலேயே தன் தோள் துண்டைக் கைக்குக் கொண்டு வந்தார். நல்ல விரிகொம்பு மாடுகளாக மூன்றை அடையாளம் காட்டி விலை சொல்லச் சொன்னார். யாவாரி பதறினான்,

``அய்யா உங்ககிட்ட என்னங்க வில பேச. தோணுனத குடுங்க.''

``அதெல்லாம் ஒண்ணும் இல்ல, துண்டு போடு.''

``ஆகட்டுங்க.’’ நொடிப்பொழுதுக்குள் துண்டுக்குள் பேரம் முடிந்துவிட்டது. இதே போலத்தான் பத்திருபது பேரங்கள். உடனே உடனே முடிந்தன. பொழுது உச்சிக்கு வருவதற்குள் விறுவிறுவென இருபது மாட்டுக்கும் மேலாக விலை பேசி முடிந்துவிட்டது. விலைபேசிய மாட்டுக்கு மையால் அடையாளக் குறி போட்டுவிட்டுக் கிளம்பினார்கள். ஆத்தியப்பனுக்கும் அந்தோணி முத்துவுக்கும் குழப்பமாயிருந்தது. ஆத்தியப்பன் சிறுநீர் கழிக்க சந்தையின் ஒதுக்குப்புறமாய் ஒதுங்கப் போகையில் அந்தோணி முத்துவும் உடன் போனார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 14

``என்ன நடக்குது இங்க. மாடுன்னா பல்லு பிடிச்சிப் பாக்கணும், சுழி பாக்கணும், லட்சணம் பாக்கணும். ஒவ்வொரு மாடும் நம்ம மகேங்களுக்குப் பொண்ணு பாக்குறது மாதிரி பாக்கணும். இந்த ஆளு நோக்கத்துக்கு கத்திரிக்கா பொருக்கி எடுக்கறது மாதிரி இத முடி, அத முடின்னு சட்டுபுட்டுன்னு முடிச்சிட்டே போறான். எனக்கென்னமோ சரியாத் தெரியலங்க. மாடு வாங்குறது லேசுப்பட்ட காரியமில்ல. ஒத்த சுழி சரியா இல்லன்னா எம்மாம் பெரிய ராசாவா இருந்தாலும் கட்டமண்ணுல உக்கார வச்சிரும் சொல்லிட்டேன். எனக்கென்னமோ மனசுக்கு சரியாப் படல. வாங்குனது போதும்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டா கொஞ்ச காசு நஷ்டத்தோட முடிஞ்சிரும்.''

``ம்... எனக்கும்தான் எதோ சரியாப் படல... பாக்கலாம். சரிவராட்டி சொல்லிட்டுக் கிளம்பலாம். ஆனா எல்லாரும் இவரத்தான் சொன்னாங்க. ஒருவேள ஆள் அடையாளம் தெரியாம மாத்திச் சொல்லிட்டாங்களான்னு தெரியல. இங்க வேற யாரும் இதே பேர்ல இருக்காங்களா, விசாரிச்சியா?''

``அதெல்லாம் காலையிலேயே விசாரிச்சிட்டேன். எல்லாரும் இவரத்தான் கைகாட்டுனாங்க.''

``ம்...'’

``ஏம் அந்தோணி, உனக்கும் மாடு பாக்கத் தெரியும்ல, இனிமே பெரியவர் பாக்குற மாட்டுல குற கிற இருந்தா தயங்காம வேண்டாம்னு சொல்லு. வர்றத பாத்துக்கலாம்.''

``செரிங்க''

மீண்டும் இருவரும் சந்தைக்குள் வந்தனர். கொம்பையா அவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தவர்போல்

``வாங்க வாங்க. இந்தக் காளைய பேசி முடிச்சிருக்கேன். யாவரிட்ட உரியத குடுத்துருங்க. மலையரசா இதுக்கு அடையாளம் போடு.’’ மலையரசன் அடையாளம் போட்டான். ``நல்ல ராசியான காள. இனிமே பாருங்க உம்ம பட்டி, மாடா நிறைஞ்சிதள்ளும்.''

ஆத்தியப்பன் பணத்தை எடுக்காமல் அமைதியாக நின்றார். ``இத வாங்க வேண்டாம்ங்க.''

அந்தோணி கொம்பையாவின் முகத்தில் அடித்தாற்போல் எரிச்சலாய்ச் சொன்னான்.

ஒரு நிமிடம் எல்லோரும் அமைதியாக உறைந்து நின்றார்கள். கொம்பையா கேட்டார். ``ஏன்?’’

``வயசாளி மாட்ட எங்க தலைல கட்டிவிடப் பாக்குதீரா?''

``அதுவும் ஒருகாலத்துல இளவட்டம் தான்'' மலையரசன் விளையாட்டாக ஒரு வார்த்தையை விட்டான்.

``ஏ... இந்த எகத்தாள மயிரா பேசுற சோலிலாம் வச்சிக்காத சொல்லிட்டேன்.''

``மலையரசா அமைதியா இரு.''

அந்தோணியிடம் கேட்டார் ``இப்போ இந்த மாடு வேண்டாம் அதான. செரி ஏன் வேண்டாம்னு சொல்லு.''

``அய்யா...'' மலையரசன் குறுக்கிட்டான்.

``செத்த இருடா, என்ன சொல்லுத்தாருன்னு பாப்போம்.''

அந்தோணி யாவாரியிடம் மாட்டின் வாயைத் திறந்துகாட்டச் சொன்னார்.

``பாருங்க. எட்டுப் பல்லும் எவ்வளவு பரும்பல்லா இருக்கு.''

``இருக்கட்டும். அதனால என்ன?’’

``இருக்கட்டுமா... ஏங்க, இவ்வளவு பரும்பல்லா இருந்தா வயசாளி மாடுன்னு விரல் சூப்புற பிள்ளைக்கிகூடத் தெரியும்.''

``ஆமா நிசம்தான். அது வயசாளி மாடுதான். ஆனா அவ்வளவு வயசாகல. எட்டுப் பரும்பல்லு வயசானத்துக்கு அறிகுறிதான். ஆனா பல்லுல கறை பிடிக்கல, பல்லுக்கு இடையில சந்து விழுகல. இன்னும் மூணு வருசத்துக்கு தாராளமா பாரம் இழுக்கும். இந்த மொத்த சந்தையிலயும் இருக்குறதுலயே இது மாதிரி எந்தக் காளையும் பாரம் இழுக்காது, சத்தியம் பண்ணிச் சொல்றேன்.

இன்னொரு விஷயம் சொல்லவா. பாரம் இழுக்குமேன்னு இந்த மாட்ட நான் வில பேசல. அது தலக்காள. ஒரு கூட்டத்தையே தலைமை தாங்கிக் கூட்டிட்டுப் போற யானை மாதிரி. மொத்த மந்தையையும் மாட்டுக்காரன் இல்லாட்டியும் இது பாத்துக்கும். எதுக்கும் பிடி கயறுகூட போட வேண்டாம். ஒரு மந்த காள மாட்ட ஒத்த இடத்துல வளக்குறது சாதாரண விஷயம் இல்ல. ஒண்ணோட ஒண்ணு இடிச்சிகிட்டு, சண்ட போட்டுக்கிட்டு கீழ விழுந்து முட்டிகிட்டு, குத்திக்கிட்டு கிடக்கும்.சும்மாவா, கொம்புள்ள பிராணி. அத அமத்துரத்துக்கு அதுக்குள்ளேயிருந்து ஒரு தலக்காள வேணும். இன்னிக்கி பொறுக்குன எல்லா மாடும் கிட்டத்தட்ட ஒத்தக்குடும்பம் தான். இங்க எல்லா ஊர் சந்தைக்கும் கூட்டிட்டுப் போறேன். எந்தப் பசு, எந்தக் காளைக்கு ஈத்து அடிச்சதுன்னு; எது வம்சம் எங்க விருத்தின்னு எனக்குத் தெரியும். எவ்வளவு காலமா இந்தச் சந்தைக்குள்ள சுத்தி வாறேன். மனுசன முகம் பாத்து இன்னார் மகனா, மகளான்னு கண்டுபிடிக்கிற மாதிரி நான் மாடுங்களுக்குக் கண்டுபிடிச்சிருவேன்.''

ஆத்தியப்பன் இன்னும் பணத்தை எடுப்பதாகத் தெரியவில்லை. அப்படியே தலைகுனிந்தவாறு நின்றுகொண்டிருந்தார். அந்தோணி முறைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.

``மனசுக்குப் பிடிக்காட்டி வேண்டாம். மலையரசா, இந்தக் காளைக்கி உரியதக் குடுத்திட்டுக் கூட்டிட்டு வா.''

மலையரசன் அமைதியாக தன் உடுதுணியின் சுருட்டலிலிருந்து பணத்தை எடுத்து எண்ணினான்.

``ஏங்க அசலூருக்காரங்கன்னு இப்படியா ஏமாத்துவீங்க?'' அந்தோணி இன்னும் மனதிற்குள் புகைந்துகொண்டிருந்தார்.

``என்னது.''

``ரெம்ப நல்லவர் மாதிரி தரகு வேண்டாம்னு சொல்லிட்டீரு. ஒவ்வொரு மாட்டுக்கும் வில அதிகமா வச்சி பேசிட்டு. அப்பறமா யாவாரிங்ககிட்ட பணம் வாங்கிக்கிறது அதான, இந்த உள்ளடி வேலையெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?''

``ஏ... நாக்க அறுத்துப்புடுவேன்... யார என்னவே பேசுதீரு'' மலையரசன் கத்தினான்.

``டேய் மலையரசா... இவன் ரெம்ப பேசுறான். போகச் சொல்லு மரியாதையா. கொன்னே போட்டுடுவேன். அசலூர்க்காரன்னு விடுறேன்.இல்ல நடக்குறதே வேற...'' கொம்பையா அவ்வளவு கோபமாய்ப் பேசி யாரும் பார்த்ததேயில்லை.

``டேய், எட்டூர் சந்தைக்குப் போனாலும் இப்படி மாட்ட பொறுக்கி எடுக்க முடியாதுடா...அதுவும் இந்த விலக்கி. நான் உள்ளடி பண்றேனாம்ல. டேய் மலையரசா ஒத்த ஒத்த மாட்டுக்கும் அதது தொகையோட பத்து ரூபா மேல போட்டுக்குடுத்து அவங்கள பைசல் பண்ணிட்டு வா. நான் அங்க இருக்கேன்.’’ விறுவிறுவென துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடந்தார்.

மலையரசன் நெடுநேரம் கழித்து மரத்தடிக்கு வரும்போது சுருட்டு பிடித்தபடி கொம்பையா சிடுசிடுவென அமர்ந்திருந்தார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 14

``என்னடா, அவங்கள அனுப்பி விட்டுட்டீயா...ஏன் இவ்வளவு நேரம்?''

``ம்''

``ஏதும் சண்ட கிண்ட போடலயே?''

``இல்ல''

``நீ போட்ருப்ப...''

மலையரசன் அமைதியாக நின்றான்.

``மாட்ட என்னவே பண்ணுன?''

``அங்குன கரியன் பிடிச்சிக்கிட்டு நிக்கான். கூட காத்தான் நிக்காரு.''

``எதுக்கு இந்த வேண்டாத வேல. யார்கிட்டயாவது வந்த விலைக்குக் குடுத்திட்டு அவன சாப்பிட வரச் சொல்லு.''

``ம்''

சந்தையிலிருந்து வெளியே போன ஆத்தியப்பனும் அந்தோணியும் ஓரிரு புதிய ஆட்களைக் கூப்பிட்டுக்கொண்டு மீண்டும் சந்தைக்குள் நுழைந்தார்கள்.

``என்ன நீங்க, உறவுக்காரக அவ்வளவு தூரத்துலயிருந்து வந்திட்டு வீட்டுக்கு வந்திருக்க வேணாமா?''

``ஏன் மாப்ள, திருநவேலி ஜில்லால நாடறிஞ்ச பெரிய மாட்டுத் தரகரு நம்ம அண்ணாச்சி. அவர கூப்பிட்டுருக்கக் கூடாதா. யார்கிட்டயாவது ஏமாந்திட்டு வந்திருக்க. நல்ல வேள, காச நல்லபடியா திருப்பி வாங்கிட்ட. ஆனா அப்படிலாம் இங்க திருப்பிக் குடுக்க மாட்டங்களே.''

``கவலைப்படாத. இங்க எல்லா யாவாரிகளும், சம்சாரிகளும் நமக்குத் தெரிஞ்சவங்கதாம்.நல்லதா மணியா எடுத்திடலாம். செரியா?''

ஆளாளுக்கு ஆத்தியப்பனை தாங்கு தாங்குவெனத் தாங்கினார்கள். ஆத்தியப்பனுக்கும் அந்தோணிக்கும் இப்போது மிகவும் நம்பிக்கையாயிருந்தது.

முதுகில் கறுப்பு வண்டி மைக்கோடுகளால் அடையாளம் போட்ட மாடுகளைக் கரியன் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். ஆத்தியப்பன் தம் உறவுக்காரர்களிடம் ஜாடை காட்டினார்.

``அந்தா ஒரு பையன் பிடிச்சிட்டு நிக்காம் பாரும். அது அத்தனையும் நமக்குப் பேசுனதுதாம்.''

``அப்படியா... இரு ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வாறேன்.''

காத்தான் அருகிலிருக்கும் யாவாரிகளிடம் வெற்றிலை கேட்கலாமெனக் கிளம்பிப் போனார். கரியன் மாட்டைப் பிடித்துக்கொண்டு நின்றான். கரியன் கையில் பிடித்திருந்த மாட்டை புதுத் தரகர் சுற்றிச் சுற்றி வந்தார். பின் அவசர அவசரமாய்க் கிளம்பி ஆத்தியப்பனிடம் ஓடினார்.

``எல்லாம் ஒன்னாந்தரம்.அருமையான மாடுக. எனக்கென்னவோ நீங்க குடுத்ததா சொன்ன வில ரெம்ப மலிவு. உண்மையாத்தான் சொன்னீங்களா?''

``சத்தியமா.''

`` கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்.''

``அப்படியா... உங்களுக்குக் கொம்பையான்னு மாட்டுத்தரகரத் தெரியுமா?''

``கொம்பையாவா... நல்லாத் தெரியுமே. நம்ம சேக்காளிதான். அவரு மாட்டுத் தரகர்லாம் இல்ல. ரொம்ப பெரிய மனுசன். சொல்லப்போனா எனக்குலாம் நுணுக்கம் கத்துக்குடுத்தவரே அவர்தான். சுத்துப்பட்டுல எந்தச் சந்தைக்கிப் போனாலும் அவருக்குன்னு தனி மரியாத உண்டு. ஏன், அவர உங்களுக்குத் தெரியுமா?''

நடந்த விஷயத்தை ஆத்தியப்பன் சொல்லி முடித்தார்.

மீண்டும் கரியனிடம் அவர்கள் வந்தபோது காத்தானும் அங்கு நின்றுகொண்டிருந்தார். காத்தான் புதுத்தரகரைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டு குசேலம் விசாரிக்கத் துவங்கினார். தரகர், காத்தானிடம் வந்திருந்தவர்கள் தம் சொந்தக்காரர்கள்தாம் என்பதையும், கொம்பையாவைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

``ஆள் தெரியாமத்தான இப்படி ஆகிப்போச்சி''

``அவ்வளவுதான, விடுங்க பாத்துக்கலாம். லிங்கம்பட்டிகாரரே நான் பேசுறேன்.கவலப்படாதீரும்.''

``கரியா, மாட்டப் பாத்துக்கோ. யாருக்கும் வில சொல்லாத. கேட்டா வில முடிச்சிட்டாங்கன்னு சொல்லு. இந்தா வந்திடுறேன்.’’ காத்தான் கொம்பையாவைப் பார்க்கக் கிளம்பினார்.

வந்திருத்தவர்கள் இப்போது கரியனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார்கள். கரியன் அதை உதாசீனப்படுத்திவிட்டு வேறு பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டான். சிறிது நேரத்தில் காத்தான் மீண்டும் அவர்களிடம் திரும்பி வந்தார். இப்போதும் காத்தான் கரியனிடம் சொல்லியபடியே கிளம்பினார். ``யாரும் கேட்டா வில முடிச்சாச்சுன்னு சொல்லு, செரியா.'' கரியன் இப்போது காத்தானைப் பார்த்தும் முறைத்தான். சிறிது நேரத்தில் மலையரசன் வந்தான்.

``எல்லா மாட்டையும் ஓட்டிக்கிட்டு மரத்தடிக்கு வா.''

``ம்.''

அங்கு கரியன் வந்தபோது எல்லோரும் சிறிது சகஜமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

``கரியா, வெரசா கஞ்சி குடி. நாம வடக்க கிளம்பணும். அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் மாடு வாங்கணும்'' கொம்பையா சொல்லிவிட்டு சுருட்டைப் பற்ற வைத்தார்.

மாடுகளுக்குப் பழைய பிடிகயிற்றையும், மூக்கணாங்கயிற்றையும் அறுத்துவிட்டு புதியது மாட்டினார்கள். இறங்கு வெயில் ஆரம்பித்ததும். சந்தைக்குள்ளிருந்து எல்லோரும் கிளம்பத் துவங்கினார்கள். கொம்பையா காத்தானிடம் விடைபெற்றார். ``எப்படியும் இன்னும் மூணு நாலு மாசம் ஆகும்னு நினைக்கிறேன். உம்ம உடம்ப பாத்துக்கோரும்.''

``செரிடா.''

கையில் அடிபட்டிருப்பதால் கொம்பையாவை வில் வண்டியில் வந்து அமரச் சொன்னார்கள். அவர் மறுத்துவிட்டார்.

இருபத்தொரு மாடுகளும், இரண்டு குமாரர்களும், ஒரு நாய்க்குட்டியும் நடக்க கொம்பையா தலைக்காளைபோல் நடந்தார். காட்டுப் பாதை துவங்குமிடத்தில் பொழுது இருட்டத் துவங்கியது.

``என் கண்கள் ஆயிரம் சூரியன்கள்,

ஆயிரம் நிலவுகள் கண்டதால் இவ்வளவு பிரகாசமடைந்தது.’’

- பராரிகள்

மகன் வழி ( 1977 - மழைக் காலம் )

ண்டி ஆத்துப் பாலம் தாண்டி குமரிக்குப் போகும் சாலையில் அநாதரவான அந்தக் காட்டுப்பாதைக்குள் இறங்கி நின்றது. வேம்பு தாங்கள் வந்த வண்டியின் விளக்கை முழுக்க அணைக்கச் சொல்லிவிட்டாள். மையிருட்டு. எல்லோரும் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டார்கள். சாலையின் இரு மருங்கிலும் புளிய மரங்கள் வரிசையாக நின்றன. வேம்பு இருவரை சாலையின் எதிர்ப்பக்கத்திற்கு அனுப்பினாள். அவர்கள் சாலையின் சரிவிற்குள் போய் நின்றுகொண்டார்கள். அவர்கள் இருவர் கையிலும் பெரிய வட்டமாக இரும்புக்கம்பியால் சுருக்குக் கன்னி போட்ட நீண்ட கழி இருந்தது. ஒருவேளை பன்றி வண்டியில் அடிபடாமல் தப்பி விட்டால் மீண்டும் விரட்டிப் பிடிக்க இந்த ஏற்பாடு. வேம்பு பன்றியின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றை இறுக்கப்பிடித்துக் கொண்டு பன்றியின் மேல் பொத்தினாற்போல் அமர்ந்திருந்தாள். கார்கள் வரும்போது எழுந்து கொண்டு பன்றியை ஒரு விரட்டு விரட்டினால் போதும். இடதோ வலதோ முன் சக்கரத்தில் அடிபட்டுச் சாகும். நொடி நேரம் தப்பினாலும் பன்றி கார் வருவதற்கு முன்பாகவே ஓடித் தப்பி விடும். அல்லது, அரைகுறையாய் பம்பரில் அடிபட்டு சிறிய காயத்தோடு செடி செத்தைகளுக்குள் ஓடி மறைந்துவிடும். வேம்புவிற்கு நேரத் துல்லியமாய் மிகச் சரியாய் பன்றியை விடத் தெரியும், எந்த தூரத்தில் கார் வரும்போது அதன் மேலிருந்து எழுந்து விரட்டி விட்டால் சரியாய் டயருக்குள் சிக்கி அது சாகுமென்று. அந்த இருட்டுக்குள் பெரிய குறட்டைச்சப்தம்போல் பன்றியின் கொர் கொர் ஓசை மட்டும் பெரிதாய் வந்துகொண்டேயிருந்தது.வேம்பு சிறிய கயிற்றை எடுத்துப் பன்றியின் வாயைக் கட்டினாள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 14

சூரவேல் வேம்புவின் அருகில் குத்துக்காலிட்டு இடுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இப்போது வேம்பு மூச்சுவிடும் சப்தம் அவனுக்கு அருகில் சன்னமாய்க் கேட்டது. அவ்வளவு அருகில் வேம்புவைப் பார்ப்பது அவனுக்குள் குறுகுறுப்பாயிருந்தது. எதிர்த்திசையிலிருந்து பறவையின் ஒலியோடு பெரியவர் ஒருவர் சைகை செய்தார். வேம்பு அவனை தயாராயிரு என்பதுபோல் கண்ணால் சைகை செய்தாள். சூரன் வேம்புவைச் சிறிய கிறக்கத்தோடு பார்த்தான். வேம்பு அவன் தொடையில் கொஞ்சம் கோபமாய்க் கிள்ளிவைத்தாள்.

``வேல நேரத்துல முழுக்கவனமும் ரோட்ல இருக்கணும். இல்லாட்டி மாட்டிக்கிட்டு எவன்கிட்டயாவது அடி வாங்கிச் சாகணும்.'' மூன்று கிலோமீட்டர் தூரமாவது இருக்க வேண்டும். தூரத்தில் ஒரு காரின் ஹெட் லைட் வெளிச்சம் மஞ்சளாய்த் தெரிந்தது. மஞ்சள் வெளிச்சம் வேகமாய் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. எல்லோரும் தயாராய் இருந்தார்கள். வேம்பு பன்றியின் வாய்க்கட்டை அவிழ்த்தாள். கார் அருகில் வந்தபோது எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். இருபதடி தூரத்தில் கார் வந்தபோது வேம்பு பன்றியின் மேலிருந்து எழுந்திரிக்கத் தயாரானாள். கார் வேகம் குறையத் துவங்கி பத்தடி தூரத்தில் நின்றது. எல்லோரும் பதற்றமானார்கள். வேம்பு மீண்டும் பன்றியின் மீது அமர்ந்துகொண்டாள். வாய்க்கட்டைக் கட்டிய கயிற்றை மீண்டும் துழாவியபோது அது தரையில் எட்டி எடுக்க முடியாமல் கிடந்தது. வேம்பு பன்றியின் வாயைத் தன் கையால் சேர்ந்தாற்போல் சப்தம் வராதவாறு பிடித்துக்கொண்டாள். பன்றி வேம்பைத் தள்ளிவிட்டு ஓடத் துடித்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 14

எல்லோரும் அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று காரைக் கவனித்தவாறே இருந்தார்கள். காருக்குள்ளிருந்து ஒருவன் இறங்கி காரின் பின் பக்கமாய் கொஞ்சம் நடந்து சிறுநீர் கழிக்க ஒதுங்கினான். மீண்டும் அவன் காரின் அருகில் வரும்போது அந்த உருவத்தை சூரன் கூர்ந்து பார்த்தான். அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகம்.

அவன் காரில் ஏறி உட்கார்ந்து கிளம்பும் போது சூரனுக்கு சட்டென ஞாபகம் வந்தது. கே. சி மர டிப்போக்காரர் அது. கார் வேகம் குறைவாக ஓடத் தயாராகியது. சூரனின் அருகில் வர வர முன் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பது நன்றாகத் தெரிந்தது. அதுவும் அவனுக்கு அறிமுகமான முகம்தான். தன் அண்ணன் சுசீந்தரனின் மனைவி போலத்தான் தெரிந்தது. கார் சூரனின் அருகில் வந்து அவனைக் கடந்து போனது. சூரவேல் எழுந்து தன் நினைவில்லாமல் சாலைக்கு மேலேறினான். சிறிது தூரம் சென்ற கார் பின்னால் எதோ உருவம் தெரிந்ததைப் போல் கண்டு மீண்டும் பின்னோக்கி வரத் துவங்கியது. சூரனுக்குக் கண்ணைக் கட்டி விட்டது போலிருந்தது. சட்டென புதருக்குள் இறங்கி வேம்புவைத் தேடினான். அங்கு வேம்புவும் பன்றியும் இல்லை. கார் அவன் அருகில் வந்து நின்றது. உள்ளிருந்து டிரைவர் எச்சரிக்கையாகச் சொன்னார். ``அய்யா கீழ இறங்க வேண்டாம்.'' கதவைத் திறக்க நினைத்தவர் சட்டென மூடினார். ``இந்த ரோட்ல திருட்டு பயம் இருக்கு.'' ``அப்படியா, அப்போ வண்டிய வேகமா விடு. எங்கயும் நிக்காத." டிரைவர் வண்டியை மிகவும் வேகமாக ஓட்டினான். இருபதடி தள்ளி வண்டியில் `வீச்’சென்று ஏதோ அடிபட்டு விழும் சப்தம். வண்டியை நிறுத்தி இறங்கிப் பார்த்தார்கள். பன்றி அடிபட்டு சாகத் துடித்துக்கொண்டிருந்தது.

- ஓடும்