
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`பிரதேசங்களுக்கு எல்லை உண்டு; பயணிகளுக்கு இல்லை.
பயணி தான் வசிக்கும் பிரதேசத்தின் எல்லையைப் போரில்லாமல் விரிக்கிறான்.’’
- பராரிகள்
தந்தை வழி (1951 - முன்பனிக்காலம்)
இருபத்தொரு மாடுகளும் இரண்டு குமாரர்களும் ஒரு நாய்க்குட்டியும் உடன் நடக்க, கொம்பையா தலைக் காளைபோல் நடந்தார். ஆறேழு மைல்கள் நடந்திருப்பார்கள். மருதூர் தாண்டி காட்டுப் பாதை துவங்குமிடத்தில் பொழுது இருட்டத் துவங்கியது. ஆத்தியப்பன் தனது வில்வண்டியில் அமர்ந்தவாறு அரை பர்லாங் தூரம் முன்னால் போய்க் கொண்டிருந்தார். கொம்பையா வண்டியை நிறுத்தச் சொல்லுமாறு மலையரசனைக் குரல் கொடுக்கச் சொன்னார். மலையரசன் தனது கீழ் உதட்டை மடித்து அடையாள ஒலி கொடுக்க ஆத்தியப்பனின் வில் வண்டி அங்கேயே நின்றது. கொம்பையா, இரவு இங்கு கல்மண்டபத்தில் ராத் தங்கல் போட்டுவிட்டு அதிகாலைக்கு எழுந்து கிளம்பலாமென்று சொன்னார்.
அந்தோணி முத்து ``சீவலப்பேரி தாண்டிட்டா தேவலன்னு தோணுது. ஒரு விரட்டு மாட்ட விரட்டிட்டா இன்னும் ஒரு மணி நேரத்துல போயிடலாம். அங்க எங்கயாவது தங்கல் போடலாம்'' என்றார்.

``வேண்டாம், ராவுல ஆத்தக் கடக்க வேண்டாம். ஆழம் தெரியாம மாட்டப் பத்திக்கிட்டுப் போக முடியாது. மேக்கொண்டு வழியெல்லாம் புளியங்காடு. நிறய திருட்டும் வழிப்பறியும் நடக்குற இடம். இங்குன தங்கலாம்’’ கொம்பையா சொன்னார்.
`` நீங்க கூட வரும்போது எங்கள எந்தத் திருடன் மறிப்பான்? யாருக்கு அவ்வளவு தைரியமிருக்கு. நிறுத்தாமல் போயிடலாம்’’ அந்தோனிமுத்து சொல்ல,
``அவரு சொல்றார்னா எதாவது காரணம் இருக்கும். குறுக்க பேசிக்கிட்டு இருக்காத'' ஆத்தியப்பன் அவனை அதட்டினார்.
வண்டியையும் மாட்டையும் வெயிலாட்சி கோயிலிருக்கும் ஆற்றுப் பாதைக்கு ஓட்டினார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. கோயில் மண்டபத்தில் ஏற்கெனவே இரண்டு வில் வண்டிகளும், ஆறேழு பார வண்டிகளும் நின்றுகொண்டிருந்தன. யாரோ ஒரு குடும்பத்திலிருந்து வந்து பெண்கள் கோயிலில் கல் வைத்து அடுப்பு மூட்டி பொங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் ஆண்கள் நான்கைந்து பேர் கல் மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார வண்டியில் வந்திருப்பார்கள் போல. நாலைந்து சிறு பிள்ளைகள் அங்கு மணல் வெளியில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மொத்தமாய் இவ்வளவு மாடுகளைப் பார்த்ததும் தங்கள் விளையாட்டை அப்படியே நிறுத்திவிட்டு மாட்டை வேடிக்கை பார்க்க வந்தார்கள். அந்தோணிமுத்துவும் தங்கள் வண்டியிலிருந்து மாட்டைக் கழற்றி விட்டார். மலையரசன் எல்லா மாட்டையும் தண்ணி காட்ட ஆற்றுக்கு அழைத்துப் போனான். கரியனும் உடன் போனான். நீர் அருந்தியதும் மாடுகள் கொஞ்சம் தெளிச்சியாய் இருந்தன. மாடுகளை மீண்டும் கல்மண்டபத்துக்கு ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு மலையரசனும் கரியனும் ஆற்றின் ஓரமாய் நாணல் வளர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார்கள். இருவரும் வேகவேகமாக அங்கு வளர்ந்து கிடக்கும் காட்டுப் புற்களை அறுத்து எடுத்து பெரிய கட்டாய்க் கட்டி ஆளுக்கு நாலு நடை சுமந்து வந்து மாடுகளுக்குப் போட்டார்கள்.
அங்கு நின்று கொண்டி ருந்த பார வண்டிகளில் நிறைய கருப்புக்கட்டியும் வாழை த்தார்களும், சமையல் சாமான் களும், புதிய ஜமக்காளமும் கோரைப்பாயும், இதர வீட்டு சரக்குகளும் வண்டி நிறைந்து கிடந்தது. அதில் ஒரு வில் வண்டியில் மெத்தை போட்டு நல்ல பட்டு விரிப்பும், முதுகு சாய்க்கும் இடம் அலுப்பும் வலியும் தெரியாமல் இருக்கப் பட்டுத்தலையணைகள் வைத்து ஜோடிக்கப்பட்டிருந்தது. பெருந்தனக்காரரின் வண்டி என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.
வண்டிக்காரர்கள் அரிக்கன் விளக்கில் எண்ணெய் போட்டு விளக்கு ஏற்றும் முனைப்பிலிருந்தார்கள். ஓரிருவர் கொம்பையாவை அடையாளம் கண்டுகொண்டு அவர்களே வந்து பழக்கம் பேசினார்கள்.
``கொல்லங்கிணறு பண்ணையார் மகளுக்குக் கல்யாணம். அதான் திருநவேலிக்கி வந்து கல்யாண சரக்கு வாங்க வந்தோம். அந்த வில் வண்டிகிட்ட நிக்கிறவர்தான் பண்ணையோட மவன்.'' காதில் கனத்த சிகப்புக் கடுக்கன் போட்டவரை அடையாளம் காட்டிச் சொன்னார்கள்.

``ஓ... செரி செரி... இப்போம் என்ன கிளம்பியாச்சா?''
``ஆமா... விடிய காலைக்குள்ள சாமான்கள சேக்கணும்.மறுநா கல்யாணம் வச்சிருக்காரு, அதாம்.''
``ம்... பண்ணைகிட்ட இருந்திட்டுப் பொழுது விடிய போகச் சொல்லு. புளியங்காட்டுல கொஞ்சநாளுக்குள்ள நிறைய அசம்பாவிதம் நடந்துபோச்சி.''
``கேக்க மாட்டாரு. பிடிச்ச பிடிக்கி நிப்பாரு. அங்குன மணியாச்சிலகூட சாமான்கள வாங்கிக்கலாம்னுதான் சொன்னோம். அவர் ஏத்துக்கல.''
அதற்குள் பண்ணைமகன் வண்டியில் மாட்டைப் பூட்டுமாறு கத்தினான். அரிக்கேன் விளக்குகளை வண்டிகளின் கீழே கொண்டு வந்து கொக்கிகளில் மாட்டினார்கள். ``செரி, சூதானமா போயிட்டு வாங்க.''
``ஆகட்டுங்க.''
அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
கரியன் கொம்பையாவின் காயத்திற்கு நாயுருவி பிடுங்கி வந்து பாறைக்கல்லில் வைத்து அரைத்து, கொழுந்து எடுத்து வந்து காயத்தில் பூசினான். ``மருந்துக்குப் பச்சிலை எடுக்கணும்னா பொழுதடைய எடுக்கக் கூடாது. நடந்து வரும் போதே பிடிங்கி வச்சிக்கோ, செரியா...''
``செரி.''
மலையரசன் கரியனை ஆற்றுக்கு மீன் பிடிக்கக் கூப்பிட்டான். இருவரும் கிளம்பி ஆற்றுக்குள் சென்றார்கள். கொம்பையா சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்தபடி மாடுகளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். கல் மண்டபத்தில் பொங்கலிட வந்த ஆட்களில் சிலர் கொம்பையாவிடம் பழக்கம் பேச வந்தார்கள். மூப்பர் ஒருவர்தான் ஆரம்பித்தார்.
``ஏங்க, மாடுகல்லாம் உங்களுக்கு வாங்கிட்டுப் போறீகளா?''
``இல்லங்க. அந்தா இருக்காரே பஞ்சு யாவாரி, அவருக்கு வாங்குனது.''
``ஓ... வண்டி மாட்டுக்கா.''
``ஆமா''
``ம்... ஏங்க அய்யா, நல்ல உழவு மாடெல்லாம் என்ன வில போகுது?''
``அது மாட்டப் பொறுத்தது. ஓரளவு நல்லதுன்னா எண்பது, தொண்ணூறுக்கு வாங்கலாம். கொஞ்சம் முத்தல்னா முப்பது, நாப்பதுக்குக்கூட வாங்கலாம்.''
``ஆத்தி... கொள்ள விலையால இருக்கு. பவுணு விலைக்கா மாடு வில போகுது?''
``ஏன் உமக்குத் தெரியாதா? விசாரிக்கிறத பாத்தா பத்து, பதினஞ்சி வாங்கி தொழுவத்த நிறைக்கப் போறீக போலயே?''
``எங்கய்யா ஒத்த மாட்டுக்கே வழியில்லாம இருக்கு. இவ்வளவு நாளா செத்த மாட்டத்தான எங்ககிட்ட குடுத்தாங்க. இந்தா இத்தன ஜென்மமா உழச்சி இப்போதான் கொஞ்சம் நிலம் சொந்தமா கிடச்சிருக்கு.''
``ஓ... அதான் பூசயும் பொங்கலுமா?''
``ஆமாங்க. கடம்பூர் ஜமீனோட நிலம்தான். தொக ஏதும் கொடுத்து வாங்கல. தானமா குடுத்துட்டாரு. எங்கூரு ஆளுக ஒரு நாப்பது அம்பது பேருக்குப் பட்டா போட்டுக் குடுத்தாரு.எங்க வம்சத்துல இப்போதான் மொத மொத சொந்தமா நிலம் வச்சிக்கிறோம்.''
கொம்பையா ஆச்சர்யமாய் அவர்களைப் பார்த்தார்.
``யாரோ அங்கிட்டு வடக்கயிருந்து ஒருத்தர். வினோபாவாமே. காந்தி கூடலாம் இருந்தாராம்.ஊர் ஊரா நடந்து போயி நிறைய நிலம் வச்சிருக்குற பெரிய பெரிய ஆளுங்ககிட்ட பேசி நிலத்த தானமா வாங்கி இல்லாதவங்களுக்குக் குடுக்குறாராம். அப்படித்தான் நமக்கும் கொஞ்சம் போல பட்டா போட்டுக் குடுத்திருக்காக.''அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. ``என்னத்த குடுத்துட்டானுங்க. எதுக்கும் ஆகாத போகாத களர் நிலத்ததான குடுத்தாங்க. என்னமோ அவங்க விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்குற நிலத்தக் குடுத்திட்ட மாதிரி பேசுற'' அவரின் மகன் வெடுக்கெனப் பேசினான்.

``ஏலே சின்னசாமி, என்ன இப்படிப் பேசுத?''
``பின்ன எப்படிப் பேசச் சொல்றீக... எத்தன தலமுறையா அந்த நிலத்துல இறங்கி அவகளுக்காக விவசாயம் பண்ணிக் கொடுக்குறோம். ஏன், நல்ல மனுசன்னா வெளையுற நிலத்த எல்லாத்துக்கும் பிரிச்சிக் குடுக்கலாம்ல. மனசு வராதே.''
``வாய மூடுடா. இவ்வளவு நாளு யாருக்கோ உழச்சோம்ல. இனிமே நமக்குன்னு கொஞ்சகாலம் பாடுபட்டா அந்தக் களர் நிலம் பொன்னா வெளைஞ்சிடப் போவுது அவ்வளவுதான.’’
``நெனப்புத்தான்.''
``டேய் நல்லாப் பாருடா. இன்னும் ரெண்டு மூணு வருசத்துல அந்த நிலத்த எப்படி மாத்திக் காட்டுறேன்னு. எப்பாடுபட்டாவது பணம் சேத்து என்னப்போல வைரக்கியமான ஒரு கிழட்டு மாட்டயாவது வாங்கி உழுதுபுடுவேன் பாரு. மாடு வாங்குற வரைக்கும் நானும் உங்க அம்மயும்கூட நுகத்தடில கழுத்த நுழச்சிகிட்டு உழுதுபுடுவோம். அப்புறம் பாரு.''
``ஏம்பா இப்படிலாம் பேசுத. பேசாம இரும்'' அவர் மகன் அதட்டினான்.கொம்பையாவிற்கு அவர்களைப் பார்க்க ஆச்சர்யமாக இ ருந்தது.
``இந்த வண்டி மாடுக உங்களோடது இல்லையா?''
``இல்லைங்க. வண்டி மாடு வச்சிக்கிற அளவுக்கா நம்ம பொழப்பு இருந்துச்சி. இது இரவல் மாடுங்க. ஒரு நா இரவலுக்கு ஒரு வாரத்துக்கு அவக நிலத்துல வேல பாக்கச் சொல்லுவாக, நண்டும் சிண்டுமா பிள்ளைகள வச்சிக்கிட்டு அவ்வளவு தூரம் பூச வைக்க நடந்து வர முடியுமா சொல்லுங்க?''
``ம்.''
அவர்கள் வீட்டுப் பெண்கள் பொங்கல் பொங்கியதற்கு அடையாளமாய் குலவையிட்டார்கள்.
``ஒரு வாயி பொங்கச் சோறு, வாங்க.''
``பயலுக ஆத்துக்குப் போயிருக்கானுக.வந்துரட்டும். நீங்க பூசையெல்லாம் முடிங்க.''
``ரெண்டும் உங்க பிள்ளைகளா?''
``ஆமாங்க.''
``நல்ல துடியான பயலுக... ம்.''
``ஒரு சத்தம் குடுங்க. இளவட்டங்களுக்கு சுட சுட சாப்பிடத்தான் பிடிக்கும்.''
``டேய்ய்ய்....''
ஆற்றுப் பாதையிலிருந்து ஈரமான உடலோடு கரியனும் மலையரசனும் வந்தார்கள். அவர்கள் கையில் பெரிய ஓலைக்கொட்டானிருந்தது. அதில் துள்ளலும் நெளிவுமாயிருந்தது. கெளுத்தியும் விராலும் உள்ளே நீருக்காய் வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தன.
மலையரசன் கொம்பையாவிடம் வந்து காட்டினான். ``ஏன்டா, விராலுலாம் கிடக்கு.'' அங்கிருந்த சிறுபிள்ளைகள் வந்து வேடிக்கை பார்த்தார்கள். ஒரு குழந்தை தேங்காய்ச் சிரட்டையில் நீரை மொண்டு வந்து அந்த மீன்களின் மேல் ஊற்றியது. கொம்பையாவிற்கு அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்போது இரக்கம் சுரந்துகொண்டு வந்தது.
பூசை போட்டவர்கள் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இளவயதுடைய பெண் ஒருவள் மூத்தோனைப் பார்த்துக் கேட்டாள்.
``ஏன் மாமா, என் வீட்டுக்காரர்கிட்ட சொன்னீங்களாமே, உழவு மாட்டுக்கு பதிலா நீங்களும் என் அத்தையும் சேந்து உழப் போறீங்கன்னு. ஏன் இப்படிப் பேசுறீக. உழவு மாடு வாங்கணும்னா என் கழுத்துல கிடக்கிறத வித்தாப் போச்சி.''
``ஏ... ஆத்தா'' மூத்தோன் பதறினார்.
``பேசாம இரு. உனக்குன்னு உன் அம்ம வீட்ல போட்டுவிட்ட பவுனு. ஏன் இப்படிலாம் பேசுத'' எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார்கள். கொம்பையா அவர்களை இருந்துவிட்டு காலையில் கிளம்பச் சொன்னார். ``வழியில ராக் கொள்ள. சின்னப் புள்ளைக, பொம்பளையலுகள வச்சிக்கிட்டு ராவுல போவ வேண்டாம். கூதல் வேற அடிக்கி.''
``இருக்கட்டும்ங்க. பொழுது விடியுறதுக்குள்ள வண்டிய உரியவங்ககிட்ட ஒப்படைக்கணும். அப்படிச் சொல்லித்தான் வாங்கிட்டு வந்தோம். இப்போ கிளம்புனாத்தான் விடிகாலைக்குள்ள போக முடியும்.''
அரைமனதாய்த் தலையாட்டினார். எல்லோரும் வண்டியில் சாமான் சட்டுகளை ஏற்றி அமர்ந்தார்கள். வண்டியில் மூடு இல்லாமல் வானத்தைப் பார்த்துத் திறந்தமேனிக்குக் கிடந்தது. ``கொஞ்சம் இருங்க'' கிளம்ப இருந்தவர்களை நிறுத்தினார்.
ஆத்தியப்பனிடம் ஏதோ பேசிவிட்டு வந்தவர். இளம் காளையாய் இரண்டைப் பிடித்துக்கொண்டு வந்து சின்னசாமியிடம் பிடிகயிற்றைக் கொடுத்தார். எல்லோரும் திக்குமுக்காடிப்போனார்கள். ``நல்லா வெள்ளாம பண்ணுங்க.’’ சிறு பிள்ளைகள் ``அய்யா நம்ம வீட்டுக்கு மாடு வருது... மாடு வருது'' என்று சந்தோசக் கூச்சலிட்டார்கள்.
மூத்தோன் கரம் கூப்பிக் கண்ணீர் மல்க நின்றார். அதெல்லாம் ஒண்ணும் இல்ல. கிளம்புங்க.
``அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வரணும்.''
``அவசியம் வாரேன். நேரத்துக்குக் கிளம்புங்க.'' மீன்களுக்கு நீரூற்றிய சிறு பிள்ளையிடம் மலையரசன் அந்த மீன்கூடையை ஒப்படைத்தான். ``கொன்னா பாவம் தின்னா போச்சி. நல்லா ருசியா இருக்கும். சாப்பிடு.'' அந்தச் சிறு பிள்ளை கூடையைத் திறந்து பார்த்தபடி மீன்களுக்குத் தண்ணீர் ஊற்றியபடி கிளம்பியது. கொம்பையா அந்தச் சிறு பிள்ளைகளுக்கு தன் கனத்த முரட்டுத் தோள்துண்டை போர்த்திக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தார். வண்டி கிளம்பியது.
கல் மண்டபத்தில் எல்லோரும் உறங்கத் துவங்கினார்கள். கொம்பையா நெடுநேரம் உறக்கம் வாராமல் அமர்ந்திருந்தார். மனச்சஞ்சலமாயிருந்தது. அருகில் எரியும் நெருப்பை எந்தப் பிடிப்புமில்லாமல் பார்த்துக்கொண்டேயிருந்தார். சிறிது நேரத்தில் கண்கள் செருகி உறங்கத் துவங்கினார். அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது. திடுக்கிட்டு விழித்தார். வேறு யார் யாரோ இங்கு இருப்பதுபோல் அவருக்கு உள்ளுணர்வு தோன்றியது.
யாரையும் எழுப்பாமல் காவற்கம்பை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் நடக்கத்துவங்கினார். மீண்டும் கல்மண்டபத்துக்கு வந்தார். இருப்புக் கொள்ளவில்லை. அதேநேரம் அந்தோணி முத்து எழுந்து பார்த்தார். ``நீங்க தூங்கலையா?''
``இல்லை. எதோ மனச்சஞ்சலமாவே இருக்கு. ஒரு எட்டு இந்தப் புளியங்காட்டத் தாண்டிப் போயிட்டு வந்திரட்டுமா?''
``நானும் வாரேன்''
``இல்ல வேண்டாம். இங்க யாராவது காவலுக்கு வேணும். நான் மலையரசன எழுப்பிக்கிறேன்.''
மலையரசனை உசுப்பினார். அவன் உறக்கக் கலக்கத்திலிருந்தான். கரியனை எழுப்பினார். அவன் உடனே எழுந்துகொண்டான். அவனோடு புளியங்காட்டுக்குள் நுழைந்தார். ஒரு பர்லாங் தூரம் நடந்திருக்க மாட்டார். சிறிது தூரத்தில் பொங்கலிட வந்த குடும்பத்தினரின் அழுகைகுரல்கள்போல் கேட்டது. ஓடினார். மூத்தோன் கொம்பையாவைப் பார்த்ததும் கதறியபடி எதிரில் ஓடி வந்தார்.
``நீங்க எவ்வளவு சொல்லியும் கேக்காம கிளம்புனோம். இப்ப பாருங்கய்யா இப்படி ஆகிடுச்சு.'' கொம்பையாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. குடும்பத்தினருக்கு அருகில் போனார். சின்னசாமியின் மருமகள் கழுத்தறுபட்டு உயிருக்குத் துடித்துக் கொண்டிருந்தாள். ``புளியமரத்து மேலயிருந்து பொன் சங்கிலிய அறுக்க நினைச்சி தொரட்டியால கழுத்த அறுத்துட்டாங்கய்யா. யாரு எவருன்னு ஆளக் காங்கல. மரம் மரமா தாவி ஓடிட்டான். விரட்டிப் பிடிக்க முடியல.''
அவளின் கழுத்திலிருந்து ரெத்தம் பீச்சி அடித்தபடியிருந்தது. மூச்சு வாங்க அந்தப் பெண் மிகவும் சிரமப்பட்டாள். அவளை ஒரு மரத்தடியில் சாய்த்து வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அவள் மூச்சு நின்றுபோனது. ‘‘வண்டிக்காரங்க வைவாங்க, நாங்க கிளம்புறோம்’’ என்றபடி அவளின் பிணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் அவர்கள் கிளம்பினார்கள். அம்மா இறந்தது தெரியாமல் அந்தப் பெண்குழந்தை அப்போதும் சிரட்டை நீரை வாய் திறக்கும் மீன்களுக்கு ஊற்றியபடியிருந்தது.
அடுத்த நாள் காலையில் அக்கம் பக்கம் ஊர் முழுக்க இதையே பேசினார்கள். கொம்பையா மனசு சரியில்லாமல் மீண்டும் பயணத்தைத் துவங்கினார். நன்கு புலர்ந்த காலையில் அவர்கள் சவேரியார்புரத்தை அடைந்தார்கள். ஊருக்கு நடுவே பழைமையான பெரிய தேவாலயமிருந்தது. அதன் முன் ஊர் மக்கள் முழுக்கக் கூடியிருந்தார்கள். கூட்டத்தை விலக்கிப் பார்க்கையில் ஒரு மனிதனைவிட நான்கு பங்கு உயரமான தேவாலய வெண்கல மணியொன்று தரையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. மணியின் நாவு மட்டுமே ஆறடிக்கு இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாக ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள். இரண்டு மூன்று நாள்களாய் அந்த மணியை மேலேற்ற வழி தெரியாமல் சிரமப்படுவதாய் ஊர் மக்களும் பாதிரியாரும் கன்னிகாஸ்திரிகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது முதுகு கூன் விழுந்த ஒரு முதிய வயது கன்னியாஸ்திரி ஒருவர் நடுங்கியபடி கொம்பையாவின் எதிரில் வந்தார். அவரால் எதிரில் நிற்கும் கொம்பையாவை நிமிர்ந்து முகம் பார்க்க முடியவில்லை. ஆனால் தன் நடுங்கிய குரலால் அழைத்தார் ``டேய், கொம்பையா...''
‘`பயணம் எப்போதும் நடுவிலிருந்து துவங்குகிறது. அதில் துவக்கம், முடிவு இல்லை. நான் என் தந்தையோடு துவங்கினேன். என் மகனோடு(ளோடு) முடிப்பேன்.’’
~ பராரிகள்

மகன் வழி ( 1977 - மழைக்காலம் )
காரிலிருந்து கே.சி. மரடிப்போக்காரர் இறங்கி முன்னால் வந்தார். காரின் இடது சக்கரத்தின் அடியில் ரெத்தம் பெரிய தொட்டிபோல் பரவிக்கிடந்தது. உயிர் போகாமல் பன்றி இன்னும் கால்களை வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது. கே.சிக்கு உடலெல்லாம் வியர்த்து சட்டை நனைந்து விட்டது. சூரன் சாலைக்கு மேலேறி காரை நோக்கி நடந்தான். காரில் அமர்ந்திருந்த பெண் தன் அண்ணன் சுசீந்தரனின் மனைவிபோல் தெரிந்தது. அந்தப் பெண்ணும் காரின் கதவைத் திறந்துகொண்டு கீழிறங்கினாள். கே.சி அந்தப் பெண்ணை, கீழே இறங்காமல் வண்டியிலேயே அமர்ந்திருக்கும்படி சொன்னார். கே.சிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. பன்றி நடு ரோட்டில் துடித்துக்கொண்டிருந்தது. இறந்துபோனாலாவது ஓரத்தில் இழுத்துப்போட்டுவிட்டுக் கிளம்பலாம். அருகில் போனால் கடித்துவைத்துவிடுமோ என்ற பயமிருந்தது. வேறு ஏதாவது வாகனங்கள் வந்தால் உதவி கேட்கலாமென்று நினைத்துக்கொண்டிருந்தார்.

பன்றி இறந்தால் குடும்பம் நிர்மூலம் என்று சொல்லக்கேட்டிருக்கிறார். தன் உறவினர் ஒருவரின் குடும்பம் இப்படித்தான் நிர்மூலமானது. அவரின் வாகனத்தில் பன்றி அடிபட்டு இறந்து அடுத்த வருடத்திற்குள்ளாகவே மொத்தக் குடும்பமும் தொழிலும் நிர்மூலமானது. அந்தக் காட்சி அவரின் கண்முன் வந்து வந்து போனது. ஏற்கெனவே மகள் ஜாதி மாற்றி காதல் திருமணம் செய்துகொண்டதால் ஊருக்குள் அவர் பெயர் கெட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். இப்போது இதுவேறு.காருக்குள்ளிருந்த பெண் மீண்டும் கீழே இறங்கக் கதவைத் திறந்தாள். கே.சி மீண்டும் ஏதோ சொல்ல, அந்தப் பெண் அவரிடம் ஏதோ சமாதானம் சொல்லிவிட்டு காரின் முன் பகுதிக்கு வந்தாள். அங்கு பன்றி ரத்த வெள்ளத்தில் உயிர்விடத் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போனாள். அவளின் செருப்பின் அடி முழுக்க பன்றியின் ரத்த ஈரம். இப்போது அவளாகவே காரின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தாள். சூரன் காரின் அருகில் நெருங்கிக்கொண்டிருந்தான். தூரத்திலிருந்து வேம்புவும் மற்றவர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நடப்பதைப் பார்த்துக்கொண்டே ஒளிந்து நின்றார்கள்.

பன்றி துடிப்பை நிறுத்தி கால்களை விறைத்தது. கே.சி தன் சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டுக்கொண்டு பன்றியின் காலைப் பிடித்து முள் வேலிக்குள் இழுத்துப் போடத் தயாரானார். அதன் கால்களைப் பற்ற கைகளை அருகில் கொண்டு போன போது எங்கோ ஒட்டியிருந்த பன்றியின் கடைசி உயிர் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கியது. அவ்வளவு தான் கே.சி பயந்து கத்திவிட்டார். முகம் முழுக்க ஒரு நொடிக்குள் வியர்த்து வெலவெலத்துப் போனது. அவரின் கை முழுக்க ஈரமாய் ரத்தக்கறை. மீண்டும் கையைப் பன்றியின் அருகில் கொண்டு போய் அதன் கால்களைப் பிடித்து இழுத்தார். மறைந்து பார்த்துக்கொண்டிருக்கும் வேம்புவிற்கு என்னவோபோலிருந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அந்தப் பன்றிக்கு தன் மேல் எவ்வளவு பிரியமிருந்தது. அது தன்னை நம்பி மட்டும்தான் இந்த வாகனத்தில் ஏறியிருக்கும் அதை நம்ப வைத்து தன் சுயநலத் திற்காய்க் கொன்று விட்டதைப்போல் நினைத்தாள்.
கே.சி பன்றியை இழுக்க மாட்டாமல் இழுத்து சாலையின் ஓரத்தில் போட்டார். அவர் கை முழுக்க பன்றியின் ரத்தம். கழுவ கொஞ்சம் நீர் கிடைக்குமாவென தன் காரைத் திறந்தபொழுது காருக்குள்ளிருந்த அவரின் மகள் காணாமல் போயிருந்தாள். காரின் பின்பக்கமாய் வந்தார். அந்தப் பெண்ணின் செருப்பிலிருந்த ரத்தக் கறை சாலையிலிருந்து கீழிறங்கி ஆற்று மணலுக்குள் நின்றது.
- ஓடும்