
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`ஊன்றி நிற்கும் மரங்களைப்போலில்லாமல் உதிர்ந்த இலைகளைப்போல் இப்பூமியில் நகர்ந்துகொண்டேயிருப்பேன்.’’
- பராரிகள்
சவேரியார்புரத்து தேவாலய வெண்கலமணியை மூன்று நாள்களாய் மணிக்கூண்டின் உச்சிக்கு ஏற்ற முயன்று எல்லோரும் போராடிக் களைப்படைந்திருந்தார்கள். கொம்பையாவும் அவரது கூட்டமும் ஊருக்குள் நுழைந்து அதை வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். ஊர்க்கூட்டம் வெண்கல மணியை வேடிக்கை பார்ப்பதிலிருந்து விலகி ஊருக்குள் நுழைந்த மாடுகளையும், புதிய மனிதர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து கொம்பையாவின் அருகில் வந்த கூன்விழுந்த வயது மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் அவரை நிமிர்ந்து பார்க்க மாட்டாமல் தனது நடுங்கும் குரலால் ``கொம்பையா'' எனப் பெயர் சொல்லி அழைத்தார். கொம்பையாவிற்கு தன் முகத்தையே பார்க்காமல் தனது பெயரைச் சொல்லி அழைக்கும் கன்னியாஸ்திரியைப் பார்த்து ஆச்சர்யமாய் இருந்தது. சுற்றி நின்றவர்களும் ஆச்சர்யப்பட்டுப்போனார்கள்.
``வேதக்காரம்மா, நான் கொம்பையாதான்னு எப்படி அடையாளம் கண்டீக?''
``ஏன்டா, எனக்குத் தெரியாதா? உன் காலப் பாத்தாலே கண்டுபிடிச்சிடுவேன். அன்னத்தாய் மயன்தான?''
கொம்பையாவிற்கு இன்னும் ஆச்சர்யம் தாங்கவில்லை. ``என் அம்மையத் தெரியுமா?''
``ம்.''
கொம்பையா கூன்விழுந்த கன்னியாஸ்திரியின் முகத்தை அடையாளம் பார்க்க தன் முழங்காலை அப்படியே மண் தரையில் ஊன்றி அமர்ந்தார்.
கன்னியாஸ்திரியின் முகத்தைப் பார்த்தார்.தொண்ணூறு வயதிற்கும் மேலிருக்கும் அந்த சுருக்கமான முகத்தை அவரால் அடையாளம் காண முடியவில்லை. அந்த முதிர்ந்த கன்னியாஸ்திரி இப்போது அவர் முகத்தைத் தனது நடுங்கும் கரங்களால் ஒரு சிறு குழந்தையின் கன்னத்தை வருடுவதுபோல் வருடினார். ஜெபமாலை சுற்றிய தன் கரங்களை கொம்பையாவின் தலைமேல் கை வைத்து ஆசீர்வாதமளிப்பதுபோல் செய்தார்.
கொம்பையா மீண்டும் கேட்டார்.
``எனக்கு அடையாளம் காங்க முடியல. என் அம்மைக்கி வேண்டப்பட்டவங்களான்னும் தெரியல... மொகம் பாக்காமலேயே எப்படி அடையாளம் சொன்னீக, சொல்லுங்க?''
``மனுசன முகம் பாத்துதான் சொல்லணுமாடே யாருன்னு, காலப் பாத்தா தெரியாதா? அந்த மேல் பாதத்துல கருநீலமா கிடக்குற பெரிய மச்சத்த எத்தன வருஷம் ஆனாலும் எனக்கு மறக்காதுடே. உன் அம்ம அத கிருஷ்ணன் மச்சம்னு சொல்லுவா. நான் எங்க யேசுநாதர் பாதத்துல அடிச்ச ஆணித்தடம்னு சொல்லுவேன்.''
``நீங்க கொடைமலையில இருந்தீகளா?''
ஆமாம் என்பதுபோல் கன்னியாஸ்திரி தன் தலையை ஆட்டிக்காட்டினார்.
``பத்துப் பதினோரு வயசுல உன்னப் பாத்தது. உன் மச்சம் விழுந்த கால மட்டும் என்னால எப்பயுமே மறக்கவே முடியாது. முதுகுதான் கூன் விழுந்துபோச்சி. ஆனா பார்வை இன்னும் மங்கல. இன்னிக்கி வரைக்கும் பாக்குற எல்லாக் காலுலேயும் மச்சம் இருக்குதான்னுதான் பாத்துகிட்டே இருப்பேன். இத்தன வருசத்துல வேற யாருக்கும் இந்த மாதிரி கால் மச்சத்த பாத்ததேயில்ல.''

கொம்பையாவிற்குப் புகைமூட்டமாய் சில உருவங்கள் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் உத்திரவாதமாய்த் தெரியவில்லை.
``உன் காலுக்கு உன்னவிட ரெம்ப வயசாகிடுச்சிடா. ரெம்ப தூரம் தொலைவுக்கு நடக்கிறியோ?''
கொம்பையா சிரித்துக்கொண்டார். அவருக்கு ஏனோ தன் அம்மையின் நினைப்பும் உருவமுமாய் கூடிக்கூடி வந்தது. சிறிது நேரத்தில் அதைக் கலைக்க அவரே கூட்டத்திற்குள் போய் வெண்கலமணியை மணிக்கூண்டு உச்சியில் போய் நிறுத்த வழிபார்த்துக்கொண்டிருந்தார்.தன் வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு ஊர் முழுக்க எவரவர் வீடுகளில் கிணற்றில் நீர் இறைக்க வைத்திருக்கும் உருளையும் வடக்கயிறுமிருக்கிறதோ எல்லாவற்றையும் சேகரிக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் ஊரின் எல்லா சாதி சனங்களும் தன் வீட்டுத் தோட்டங்களிலிருந்து இரும்பு வாளிகளைக் கழற்றி வைத்துவிட்டு, கயிற்றைக் கொடுத்தனுப்பினார்கள். தோட்டத்துக் கமலையிலிருந்து நீரிறைத்துக் கொட்டும் மாடுகளும், வடக்கயிறுமாய் மத வேறுபாடில்லாமல் எல்லா ஆண்களும் தேவாலய முற்றத்தில் குழுமியிருந்தார்கள். கயிற்று பலம் மணியை மேலேற்றப் போதாது. அறுந்து விழ வாய்ப்புண்டு என்ற நிலையில் ஊர்ப் பொதுவில் பேசி, பெருமாள் கோயிலிலிருந்து திருவிழாக்களில் தேரிழுக்கப் பயன்படும் இருபது பிரிகொண்ட தடித்த வடக்கயிற்றைக் கொடுத்தனுப்பினார்கள். மாட்டு வண்டியின் இரண்டு சக்கரத்தை ஒன்றாய் இணைத்து அதன் அச்சில் நடுவில் பெரிய உருளையை வைத்து வடக்கயிற்றை மணியின் துளையில் நுழைத்துக் கயிற்றை மாடுகளில் பூட்டிப் பத்தினார்கள்.கொம்பையாவின் தடித்த சப்தம் அவர்களை வழிநடத்தியது. கரியனும் மலையரசனும் அந்தோணிமுத்துவும் ஓடியாடி கயிறு பூட்டவும் இழுக்கவுமாயிருந்தார்கள். உருளையில் வடக்கயிறு சுற்றச்சுற்ற வெண்கல மணி கொஞ்ச கொஞ்சமாய் மேலேறத் துவங்கியது. ஊர் ஜனமெல்லாம் ஆரவாரித்துக் கூச்சல் போட்டது. உச்சிப்பொழுதுக்குள் அதை மணிக்கூண்டின் நிலையில் கொண்டு நிறுத்தினார்கள்.
பாதிரியார் வெண்கல மணியின் நாக்கைத் தீண்டி முதல் ஒலியை எழுப்புமாறு கொம்பையாவைக் கேட்டுக்கொண்டார். கொம்பையா ஓங்கி அடித்தார். டய்ங்... டய்ங்... டய்ங்... கனத்த வெண்கல ஓசை ஊர் அதிரக் கேட்டது. மணியோசை தொலைதூரத்திலிருந்த சுற்றுப்பட்டு ஊருக்கெல்லாம் வயல்வெளியில் தோட்டவேலை பார்த்த சனங்களுக்கெல்லாம் கேட்டதாய் அடுத்தநாள் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஊர்க்காரர்களோடு கலந்தாலோசித்து சந்தியிலிருந்து அந்திவரை ஒரு மணி நேரத்திற்கொருமுறை இப்படி ஓசை எழுப்பலாமென யோசனை கூறினார்கள். மற்ற மதத்தினரின் ஒப்புதலைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாமென ஊர் பாதிரியார் தீர்மானமாய்ச் சொல்லிவிட்டு எல்லோருக்கும் விடைகொடுத்தார்.
பகல் உணவை அவர்கள் கன்னியாஸ்திரிகள் தங்கியிருக்கும் மடத்திலிருந்து கொண்டுவந்து கொடுத்தார்கள்.
இனியும் தாமதிக்கக்கூடாது என்று ஆத்தியப்பன் அவசரப்படுத்தியதால் எல்லோரும் உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் கிளம்பினார்கள். காட்டுப்பாதையில் நடந்து இறங்கு வெயிலுக்குள் கொல்லங்கிணற்றை இலக்காய் வைத்து நடந்து பின் இரவுக்குள் மூவரசங் கோட்டை ஜமீனைச் சென்றடையும் திட்டம். மாலை நான்கு மணியைத் தாண்டி கொல்லங்கிணற்றை அடைந்தபோது ஊரே சவக்களை கண்டிருந்தது. ஓரிரு பெண்கள் உடுத்து சேலையால் தலைக்கு மேல் முக்காடிட்டு நெஞ்சில் அடித்து அழுதபடி சென்றார்கள். ஊரில் எல்லோர் முகமும் இருளடைந்து போயிருந்தது. மலையரசன் விசாரித்துச் சொன்னான். முந்தைய நாள் இரவில் சீவலப்பேரி புளியங்காட்டுக்குள் ஒரு கும்பல் ஐந்து வண்டிமாட்டையும், கல்யாண சாமான்களையும் கொள்ளையடித்து விட்டு, பண்ணையாரின் மகனையும், உடன் வந்தவர்களையும் கொன்றுபோட்டுப் போயிருக்கிறது. கொம்பையா ஊரின் வெளியே மாடுகளை நிறுத்திவிட்டு பண்ணையின் வீட்டுக்கு வந்தார். பண்ணையின் வீட்டில் புதுச்சுண்ணம் அடித்து நீலமும் செஞ்சாந்தும் பூசி கல்யாணத்திற்கு வீட்டை அலங்காரப்படுத்தி யிருந்தார்கள். அவர் வீட்டின் முற்றத்தில் சனக் காடாய் இருந்தது. பெண்கள் ஓவெனப் பெரும் ஓலமிட்டு அழுது கொண்டி ருந்தார்கள். பண்ணை வீட்டின் முன்னால் வண்டியோட்டிகள் துஷ்டி வேட்டியால் மூடப்பட்டு பிணமாய்க் கிடந்தார்கள். கொம்பையா ஒவ்வொரு வேட்டியையும் நீக்கிப் பார்த்தார். எல்லா உடலிலும் கழுத்துச் சங்கு மட்டும் அறுக்கப்பட்டுக் கிடந்தது. புளியமரத் திருடர்கள் தொரட்டியால் அறுத்திருப்பார்கள்போல. பண்ணையின் மகனின் உடல் மட்டும் நிறைய அருவாளால் வெட்டிய காயங்களோடு இருந்தது. வில் வண்டியில் வந்திருந்ததால் மரத்திலிருந்தபடியே கழுத்தைத் தொரட்டியால் இழுத்திருக்க வசமில்லாமல் வெட்டியிருக்கக்கூடும். தலையில் இரண்டு காதுகளுமில்லை.

நேற்று வண்டிக்காரர் பண்ணையின் மகனை அடையாளம் காட்ட அந்த இளவட்டத்தின் காதில் போட்டிருந்த கனத்த சிகப்புக் கடுக்கனைத்தான் அடையாளக்குறி காட்டிச் சொன்னார். கொம்பையாவின் முகமும் இறுகிப் போயிருந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தார். அந்தி சரிந்து இருளத் துவங்கியது. இரைத் தேடப் போன நாரைகளும் பறவைகளும் பழந்தின்னி வெளவால்களும் கூட்டங் கூட்டமாய் அவர்கள் தலைக்கு மேலாக மேற்கு திசைக்குப் பறந்து மரங்களில் அடையப் போயின. இன்னும் மூன்று மைல் தூரம் நடந்து இரண்டு கரம்பை மேடு ஏறி இறங்கினால் ஓடையைக் கடந்து மூவரசங்கோட்டை ஜமீன் வீட்டை அடைந்துவிடலாம். ஓடைக்குள் இறங்கியபோது நீர் நன்கு தெளிந்து குளிர்ந்து ஓடியது. மாடுகள் நீர் அருந்தின. கொம்பையாவிற்குக் கொஞ்சம் மனசு சரியில்லாமலிருந்ததால் ஓடையில் குளித்தால் சற்றுத் தேவலாம்போலிருந்தது. இடுப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டுக் கோவணத்தோடு நீருக்குள் நின்றார். தோளில் குத்துப்பட்ட காயம் இன்னும் ஆறாததால் நெஞ்சு வரை மட்டும் குளித்தார். நீர் அள்ளி முகத்தைக் கழுவினார். கரியனும் மலையரசனும் குளிர்ந்த நீருக்குள் இறங்கிக் குளித்து முடித்தார்கள், அந்தோணிமுத்து ஓடைக்குள் நிறுத்தி வண்டியைக் கழுவினார். குளித்துக்கொண்டிருந்த உள்ளூர்க்காரர்கள் ஓரிருவர் ``எந்தக் காட்டு ஆளுகையா நீங்க. இங்கிட்டு எங்க, கிட போடவா வந்தீக?'' என்று கேட்டார்கள். கொம்பையா மாடு வாங்க ஜமீன் வீட்டுக்கு வந்ததாய்ச் சொன்னார்.
ஜமீன் வீட்டின் முற்றத்திற்கு வந்தபோது அங்கு நிலா வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமில்லை. அந்த வெளிச்சத்தில் அடங்காமல், அகன்றும் நெடிந்தும் கட்டப்பட்டிருந்த அரண்மனை மாதிரி வீட்டைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். ஆத்தியப்பன் ``எங்க ஊர்லகூட அம்புட்டும் பெரிய யாவாரிகதான். ஆனா அங்ககூட இந்த மாதிரி முரட்டு வீடு இல்லயே, எப்பா எத்த பெருசு'' என்று அங்கலாய்த்துக்கொண்டார். வீட்டைச் சுற்றிப் பெரிய கோட்டைச்சுவர். முற்றத்தில் நிறைய வேம்பும் செண்பகமும், ஓரிரு மாமரங்களுமிருந்தன. வீட்டின் நுழைவாயிலில் மல்லியும் கொடிபிச்சியும், நீல நிறத்தில் சங்குப் பூக்களும் பூத்து பறிக்காமல் விட்டு கீழே விழுந்து, சருகும் புதுப் பூவுமாய் நிறைந்துகிடந்தன. இது இப்போது பெண்களிருக்கும் வீடில்லை; பெண்களிருந்த வீடுதான்போல என்று கொம்பையா நினைத்துக்கொண்டார்.
எங்கிருந்தோ ஒரு நாய் குரைக்கத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாய் எங்கெங்கிருந்தோ சில வேட்டை நாய்களின் சப்தங்கள். கொம்பையாவின் நாய் அவரின் காலின் அருகில் வந்து உரசியபடி நின்றுகொண்டது. கரியன் அதன் தலையைத் தடவிக்கொடுத்தான். மாடுகள் மிரளத் துவங்கின. கொம்பையாவிற்கு கட்டிப்போட்ட நாயின் சப்தத்திற்கும், அவிழ்த்துவிடப்பட்ட நாயின் சப்தத்திற்கும் வித்தியாசம் தெரியும். நாய்கள் கட்டிப்போடப்பட்டிருப்பது தெரிந்தது. நாயின் சப்தத்தை வைத்தே அவை என்ன நாய்கள் என்று கணக்கிட்டார். ஏழெட்டு குருமலை நாய்கள், மூன்றோ, நான்கோ கன்னி நாய்கள். யாரும் எங்கும் அசைய வேண்டாம் என்று சொல்லியபடி வீட்டின் நுழைவு வாயில் திசைக்குப் பார்த்தார். வீட்டின் உள்ளே அங்கங்கே பந்தமும், விளக்கும் ஏற்றி வைத்திருந்தார்கள். சுவர்கள் மஞ்சளாய் தெரிந்தது. உள்ளிருந்து யாரோ வேலையாள் வருவது தெரிந்தது. உள்ளிருந்து வந்தவர் ``சேடு'' என்று ஒரு பெரிய சப்தம் கொடுத்தார்.அவ்வளவுதான் எல்லா நாய்களும் ஒருசேர குரைப்பொலியை நிறுத்தின.
வந்தவர் யாரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டார். ஜமீனைப் பார்க்க வேண்டுமென்றதும், ‘‘இளையவரையா, பெரியஜமீனையா’’ என்று ஊடு கேள்வி கேட்டார். பெரியவரை என்றதும், ‘‘அவருக்குக் கொஞ்சம் மேலுக்கு முடியல. சின்னவர பாக்குறீங்களா’’ என்றதும், ஆத்தியப்பன் மெதுவாக அருகில் வந்து, ``பணவரத்துலாம் யாரு பாத்துக்குறா’’ என்றதும், ``அப்போ பெரியவர்தான்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். நாலெட்டு உள்ளே போனவர் மீண்டும் திரும்பி வந்து ‘‘நீங்க பணம் குடுக்கணுமா, வாங்கணுமா’’ என்று கேட்டார். கொம்பையா அவரைப் புரியாமல் பார்க்க, ``அதுக்கில்லே, இளையவர் குடுத்தா வாங்கி வச்சிப்பாரு. வேற யாருக்கும் ரொக்கம் குடுக்குறதுனா பெரியவர்தான்.'' கொம்பையா தான் மாடு வாங்க வந்திருப்பதைச் சொன்னார். ``ஓ... அப்படியா... அப்போ பெரியவர்தான். இன்னும் சொத்துதான் பிரிக்கலயே... இதுவே அடுத்த வாரம் வந்தா நெலமையே மாறிருக்கும்.'' யாரோ வரும் சப்தம் கேட்டு அவர் குரல் மெல்லத் தேய்ந்து, அமைதியான குரலில் ``இருங்க அய்யாகிட்ட சொல்றேன்'' என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.
வீட்டிற்குள்ளிருந்து எலுமிச்சை நிறத்தில் வயதான பெண்மணி ஒருவர் வெளியே வந்தார். இவர்களைப் பார்த்து வணங்கிவிட்டு நெடுநேரம் இருண்டிருந்த முற்றத்தில் தன்னந்தனியாய் வீட்டில் அங்கங்கே வைத்திருக்கும் மாடக்குழி பொந்துகளில் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றிப் பஞ்சுத் திரியிட்டு, பூஜை விளக்கிலிருந்து பிடித்துக்கொண்டு வந்திருந்த வெளிச்சத்தை வரிசையாய் ஒவ்வொரு விளக்குகளாய் ஏற்றி வைத்தார். இப்போது வீடே பிரகாசமாய், மஞ்சளாய் தெய்வ கடாட்சமாய் மாறியிருந்தது. வீடும் முற்றமும் துலக்கமாய்த் தெரிந்தது.
அங்கங்கே நாய்கள் கட்டிக்கிடப்பது தெரிந்தன. எல்லாமே நல்ல முதல்தரமான வேட்டை நாய்கள். ஏலெட்டு வில் வண்டிகளும், ஒரு மோட்டார் வண்டியும்கூட நின்றுகொண்டிருந்தன.
மீண்டும் முற்றத்திற்கு வந்த வேலையாள் பெரியவர் உள்ளே அழைப்பதாய்ச் சொல்ல, கொம்பையாவும் ஆத்தியப்பனும் மட்டும் உள்ளே போனார்கள். வீடு நீண்டு போய்க்கொண்டேயிருந்தது. அங்கங்கே மனிதர்கள் நிற்பது விளக்கு வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்தது. ஒரு பெரிய அறையின் அருகில் வரும்போது வேலையாளின் வேகம் குறைந்து முதுகு தாமே குனிந்து மிகவும் பணிவானது. அவர்களை வெளியே நிறுத்திவிட்டு அந்த அறைக்குள் போன வேகத்தில் மீண்டும் வந்தார். கொம்பையாவும் ஆத்தியப்பனும் உள்ளே நுழைந்தார்கள். அங்கே படுக்கையறையின் மேல் எலும்பும் தோலுமாய் பட்டுவேட்டி மட்டும் அணிந்து ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் கழுத்தில் ஒரு கனத்த பொன் சங்கிலியொன்று பதக்கத்தோடு தொப்புளை மறைத்தபடி தொங்கிக்கொண்டிருந்தது.
கொம்பையாவும் ஆத்தியப்பனும் வணக்கம் சொன்னார்கள். அவர் கைகளைக் கூப்பி வணக்கத்தை ஏற்றுக்கொண்டு ஏதோ பேசத் துவங்கினார். அதற்குள் இடைவிடாமல் இருமல். அவருக்கு மேலும் கீழுமாய் மூச்சிரைத்தது. வேலையாள், அருந்த மிதமான சூட்டில் வெந்நீர் கொடுத்தார். சிறிது பருகியதும் அவருக்குக் கொஞ்சம் தேவலை போலிருந்து. ``என்ன விசயமா பாக்க வந்தீக?’’ பாதி குரலாலும், பாதி சைகையாலும் கேட்டார். இருவரும் வந்த விசயத்தைச் சொன்னார்கள். ``காலைல பாத்துக்கலாம். நல்லபடியா பேசி முடிச்சிக்கலாம்’’ கைகூப்பி விடை கொடுத்தார். தங்கவும் உண்கவும் வேலையாளை ஏற்பாடு செய்துகொடுக்கச் சொன்னார். அந்தக் கோட்டைச் சுற்றுக்குள்ளாகவே அங்கங்கே வந்தவர்கள் தங்க சிறு சிறு வீடுகளிருந்தன. மாடுகளைப் பிடித்துக்கட்டிவிட்டு வருவதற்குள் சுடச்சுட கேழ்வரகு அடையும், புளிக் குழம்பும் தயாரித்து வைத்திருந்தார்கள். தங்குவதற்கு வலது பக்கம் நான்கும் இடதில் நான்குமாய் பெரிய ஜன்னல்கள் வைத்த அறை கொடுத்தார்கள். ஆத்தியப்பன், பெரியவர் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறார் என்று கொம்பையாவிடம் சொன்னார். பயணக் களைப்பில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கினார்கள். கொம்பையா ஒரு சுருட்டைப் பற்ற வைத்தபடி ஜன்னலின் ஓரமாக நின்று நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தார். நேற்றைய நிலவுக்கும் இன்றைய நிலவுக்கும் நடுவே ஆறேழு மனிதர்கள் இறந்து போனதை நினைத்து அவருக்கு வேதனையாயிருந்தது. சுருட்டை தன் கால் பாதத்தில் தேய்த்து அணைத்து ஜன்னல் வழி போடும்போது கவனித்தார். அங்கங்கே மனிதர்களின் ரகசிய சப்தம் கேட்டது. இப்போது முற்றத்தில் வேட்டை நாய்களைக் கழற்றி விட்டிருப்பார்கள்போல. நாக்கைத் தொங்கவிட்டபடி அலைந்துகொண்டிருக்கும் நாய்களின் மூச்சு வாங்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கொம்பையா வந்து படுத்துக்கொண்டார். எப்போது தூங்கினார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
அதிகாலையில் கரியன் மிகுந்த பதற்றமாய் கொம்பையாவை உசுப்பினான்.உறக்கத்திலிருந்து எழுந்து ``என்னடா'' என்பது போல் அவனை நிமிர்ந்து பார்த்தார். அவரை அழைத்துக்கொண்டு போய் ஜன்னலின் வழியே காண்பித்தான். அங்கு பத்துக்கும் மேல் ஈரமாய் ரத்தக் கரை படிந்த தொரட்டிகள் வீட்டின் பின்கட்டுச் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு கிடந்தது.
மகன் வழி ( 1977 -மழைக்காலம்)
‘`தினமும் எந்த மலையின் முகட்டி லிருந்தாவது, எந்த நீர்நிலையின் கரையிலிருந்தாவது ஏதாவது காட்டின் பச்சையினூடாக இருந்து நிலவை அல்லது சூரியனைக் காண்பேன். ஜன்னலினூடே இருந்து அல்ல.’’
- பராரிகள்
கே.சி தன் மகளைக் காணாமல் ஆற்றின் மணலுக்கு வந்தார். ஏற்கெனவே பன்றி அடிபட்டது அவருக்கு மிகுந்த பயமாயிருந்தது.இப்போது மகளைவேறு காணாமல்... வாய் திறந்து உரக்கக் கத்தி அழைத்தார். ``வள்ளிம்மா...’’
வள்ளி ஆற்று நாணலுக்குள் சூரவேலோடு பேசிக்கொண்டிருந்தாள்.
``போதுமா... நான்தான் சொல்றேன்ல. லெட்சுமி என் அக்கா. நான் வள்ளி...''
``ரெண்டு பேரும் ஒரே மாதிரியே இருக்கீங்க...''
``அக்கா தங்கச்சினா அப்படி இருக்க மாட்டாங்களா?''
மீண்டும் பதற்றமாய் கே.சி தன் மகளை அழைத்தார். ``வள்ளிம்மா...’’
இப்போது சூரவேல் அவளைப் பற்றியிருந்த கரத்தை விடுவித்தான்.

அவள் நாணலுக்குள்ளிருந்து எதிர்க்குரல் கொடுத்தாள். ``வந்துட்டேன்பா''
அருகிலிருந்து குரல் வருவதால் கே.சி-க்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
``எங்க இருக்க?''
``இந்த வந்துட்டேன்.''
இயற்கை உபாதைக்கு ஒதுங்கியிருப்பாள் போல என்று நினைத்துக்கொண்டார்.
வள்ளி சூரனிடம் சிறிய குரலில் கேட்டாள், ``என் அக்கா நல்லா இருக்காளா? பாத்திங்களா..?''
``எனக்குத் தெரியாது. நானும் அதுக்கப்புறம் என் அண்ணன பாக்கவேயில்ல.’’
``ம்... நான் போறேன்''
வள்ளி நாணலுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். வரும்போது தனது கீழ் உடைகளைச் சரி செய்தவாறு வந்தாள்.
``என்னமா... தூரமா?’’ என்று கேட்டார்.
``ஆமாப்பா. எனக்கு அங்க ரத்தத்தப் பாத்துகிட்டு இருக்கவே முடியல. என் கால்லயும் ரத்தமா வடியுற மாதிரி தோணுச்சு. அதான் கீழ இறங்கி வந்துட்டேன். தண்ணில கால கழுவிட்டு ஏதும் கற பட்ருக்கான்னு பாத்தேன்.''
``ம்.''
கே.சி பன்றியின் ரத்தம் படிந்த தன் கரங்களை நீரில் நன்றாகக் கழுவினார். வள்ளியும் தன் கைகளைக் கழுவிக்கொண்டாள். என்ன நினைத்தாரோ, ஆற்று மணலில் முழங்காலிட்டு அமர்ந்தபடி சிறுபிள்ளைபோல் ஏங்கி ஏங்கி அழத் துவங்கினார்.
``நான் என்ன பாவம் பண்ணுனேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என் மூத்த மவ என்ன விட்டுட்டு எவன்கூடயோ போயிட்டா.இந்தா இப்போ கார்ல அடிபட்டு பன்னி செத்துப் போச்சி... இன்னும் என்னலாம் நடக்கக் காத்திருக்கோ தெரியல.''
ஆற்றுப் பாலத்திலிருந்து வேம்புவும், அவர்களின் ஆட்களும் இதைப் பார்த்தபடியிருந்தார்கள்.
``இங்கயிருந்து கிளம்பலாம் வேம்பு. நம்ம வேலதான் முடிஞ்சி போச்சில்ல. இனிமே உங்க சித்தப்பா பாத்துப்பாரு. வா கிளம்பலாம்’’ வேம்புவோடு வந்த ஆட்கள் அழைத்தார்கள்.

``சூரன் வர வேண்டாமா?''
``அவன் காலைல வந்துருவான். நாம கிளம்பலாம்.''
சூரன் நாணலுக்குள் ஒளிந்து நின்றபடி ஆற்றுப் பாலத்தில் நிற்கும் வேம்புவையும், ஆற்று மணலில் நிற்கும் கே.சி-யையும் வள்ளியையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
தூரத்தில் சாலையில் ஏதோ ஒரு பெரிய மோட்டார் வாகனம் வரும் வெளிச்சமும், சப்தமும் கேட்டது.
ஆற்றுப் பாலம் ஏதோ ஒரு வாகனம் மட்டுமே செல்லும்படி குறுகலானது. சாலையில் எதிர் திசைக்குச் செல்லும் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. வேம்புவும் உடன் வந்தவர்களும் சாலையைக் கடந்து மரங்களுள் இறங்கி ஓடினார்கள். தூரத்தில் லாரி ஓட்டுபவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. காருக்கு எதிரில் லாரி வந்து வெளிச்சத்தை அணைக்காமல் உறுமியபடி நின்றுகொண்டிருந்தது. முன்னால் அமர்ந்திருந்தவன்தான் சொன்னான். ``மரக்கடக்காரர் காரு மாதிரிதான் இருக்கு.'' இறங்கியவனின் காலில் ஈரமாய் பன்றியின் ரத்தம் ஒட்டியது. அவன் பயந்துபோனான். ஓட்டுநர் வண்டியின் விளக்கை அணைக்காமல் கீழிறங்கி வந்தார். சாலையின் ஓரத்திற்குச் சென்று பார்த்தான். ``ச்சே... கருமுண்டம் மாதிரி பன்னி அடிபட்ருக்குலே, அந்த மனுசன எங்கன்னு தெரியலயே.'' ஓட்டுநர் வண்டி எண்ணைச் சரிபார்த்தார். ``ஆமா அவரு வண்டி தான். வண்டியில் வந்துகொண்டிருக்கும் போது யாரோ ஓரிரண்டு பேர் மரங்களுக்குள் இறங்கி ஓடுனதுபோல இருந்திச்சி பாத்தியா?’’ என்று உதவியாளரிடம் கேட்டார். அவர் ‘‘சரியா பாக்கல’’ என்று சொல்லிவிட்டார்.
வேம்புவும், வேம்புவோடு வந்தவர்களும் தாம் வந்த சிறிய வேனைக் கிளப்பச் சொன்னார்கள். வண்டி சாலையில் ஏறி கொஞ்ச தூரம் போகும்வரை மின்விளக்கை எரிய விடவேண்டாமென்று ஓட்டுநரிடம் வேம்பு கறாராகச் சொல்லிவிட்டாள். ஆனாலும் அதைத் தாண்டி வண்டியை சாவி போட்டு முடுக்கிய போது சப்தமும், சிறிய விளக்கொன்று எரிந்தும் காட்டிக் கொடுத்தது.
தூரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநர் இருநூறு அடிதூரத்தில் சிறிய வாகனமொன்று கிளம்பிச் செல்வதைக் கண்டார். அதே நேரம் கே.சி-யும், வள்ளியும் ஆற்றுப் பாலத்திற்கு மேலே ஏறி சாலைக்கு வந்தார்கள். ஓட்டுநருக்கு இப்போது கே.சி-யை நன்றாக அடையாளம் தெரிந்தது. கே.சி-க்கும் அந்த ஓட்டுநரை நன்றாக அடையாளம் தெரிந்தது.
அதே நேரம் வேம்பு போன வண்டியின் விளக்கை அதன் ஓட்டுநர் பிரகாசமாக எரிய விட்டார். கே.சி-யும் ஓட்டுநரும் வள்ளியும் இப்போது தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் அந்த வாகனத்தைப் பார்த்தார்கள். இப்போது அந்த வாகனம் வேகம் குறைந்து தத்தித்தத்தி நின்றது. லாரி ஓட்டுநர் அந்த வாகனத்தை நோக்கி ஓடத் தயாரானார்.
- ஓடும்