மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 18

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`மரங்கள் அதே இடத்தில் நின்று நின்று இறுக்கமானதாக மாறும். மனிதன் பயணித்துப் பயணித்து பூவைப்போல் எடை இழந்து இலகுவானவனாக மாற வேண்டும்.’’

- பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 18

தந்தை வழி (1951-பனிக்காலம்)

ள்ளிரவு புளிய மரக் காட்டுக்குள் கொம்பையா ஒரு கையில் காவற்கம்பும், மறு கையில் வெட்டருவாளும் ஏந்தியபடி நடு மண்சாலையில் நின்றுகொண்டிருந்தார். தலையில் சாக்குத்துணியால் முக்காடிட்டு முகத்தை மறைத்தபடி பத்துப் பன்னிரண்டு பேர் கையில் துரட்டிக் கம்பை ஓங்கியபடி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கொம்பையாவைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென திடுக்கிட்டு நின்று இரண்டடி பின்வாங்கினார்கள். அதேநேரத்தில் புளியமரத்தின் மேலே நிற்கும் ஒருவன் கொம்பையாவின் கழுத்தை நோக்கித் துரட்டியைக் கீழே இறக்கினான். சற்று தூரத்தில் புதியம்புத்தூர் சந்தைக்குச் செல்லும் பார வண்டிகளும் வில்வண்டிகளும் சாரையாய் வந்து கொண்டிருந்தன. அந்த வண்டிகளின் குறுக்குக் கட்டையில் தொங்கும் லாந்தர் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் நகர்ந்து வருவது ஒரு மஞ்சள் நிறப் பாம்பு இருளுக்குள் ஊர்ந்து வருவது போலிருந்தது.

கொம்பையாவைப் பார்த்து அரண்டுபோய்ப் பின்வாங்கியவர்கள் இப்போது தங்கள் கையிலிருக்கும் துரட்டியின் முனையிலிருக்கும் சிறு அருவாளை கொம்பையாவின் உடல் நோக்கியும் கழுத்து நோக்கியும் குறிபார்த்தார்கள். கொம்பையா கண்ணெல்லாம் உக்கிரமாக நின்றுகொண்டிருந்தார்.

கொள்ளையர்கள் சந்தைக்குச் செல்லும் பார வண்டிகளையும், வில்வண்டிகளில் வரும் தனவான்களையும் கொள்ளையிடத் திட்டமிட்டிருந்தார்கள். இப்போது குறுக்கே நிற்கும் கொம்பையாவை அடித்து வீழ்த்தினால் தான் வரிசையாய் நிற்கும் புளிய மரங்களின் மேல் ஏறி வண்டிகளை தோது பார்த்துக் கொள்ளையிடலாம். புளியமரத்தின் மேலிருப்பவன் கூட்டத்தில் தலைக் கொள்ளையனின் கண்ணசைப்போ, கழுத்தசைப்போ என்ன வகையில் சைகை வரும், கொம்பையாவின் சங்கை அறுக்கலாமென்று அவனைப் பார்த்தபடியேயிருந்தான்.

கொம்பையா ஒரு சுற்று, சாக்கு போர்த்தியிருந்த எல்லாக் கண்களையும் பயமில்லாமல் பார்த்தபடியிருந்தார். ஒரு கண் மட்டும் பயமும், நிதானமுமில்லாமல் அலைந்தபடியேயிருந்தது. கொம்பையா அந்தக் கண்களை முந்தைய நாள் ஆற்றில் நாய்களைக் குளிப்பாட்டியபடியிருந்த காளியின் கண்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார். கிட்டத்தட்ட அப்படித்தானிருந்தது. தூரத்து வண்டிகளின் ஜல் ஜல் சப்தங்கள் சிறு ஒலியாய் கேட்கத் துவங்கியது. கொள்ளையர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அந்தக் கண்ணிலிருந்து மரத்தின் மேலிருப்பவனுக்கு சைகை செய்ய அவன் நினைக்கையில் மரத்திலிருப்பவனின் தலையில் எங்கிருந்தோ வீசியெறியப்பட்ட கருங்கல் பொத்தென்று அடித்து அவன் தலையில் ரத்தம் வழிந்தது. வலியில் சிறு சப்தத்தோடு அவன் கையிலிருந்த தொரட்டியைக் கீழே நழுவ விட்டான். கொம்பையாவிற்கு அது கரியனின் வேலைதான் என்பது நன்றாகத் தெரிந்திருந்தது.

எல்லோரும் மரத்தின் கிளையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு கொம்பையாவைத் தாக்கத் தயாரானார்கள். கொம்பையா அரிவாளைத் தன் காலடியில் போட்டுவிட்டு காவற்கம்பை ஒரு சுழற்று சுழற்றிவிட்டுக் குனிந்து, சிக்குபவர்களின் கரண்டைக் கால்களைக் குறிவைத்து ஓங்கி அடித்தார். நாலைந்து பேர் வலி பொறுக்கமாட்டாமல் கெந்தி கெந்தி விலகி ஓடினர். இப்போது எல்லா திசைகளிலிருந்தும் கொம்பையாவின் உடலைக் கொக்கியாய் இழுத்து வகிர தொரட்டிகள் அவர் உடலை நோக்கிச் சீறிக்கொண்டு வரத் துவங்கின. கொம்பையா தன் காவற்கம்பைச் சரமாரியாய்ச் சுழற்றி வீசிச் சண்டையிடத் துவங்கினார். அவ்வப்போது குனிந்து குனிந்து சிக்கும் கரண்டைக் கால்களில் பொடீர் பொடீரென்று கனத்த அடி. வலிபொறுக்கமாட்டாமல் சுருண்டு கீழே விழுந்தார்கள். ஜல் ஜல் சப்தம் அருகில் வரத் துவங்கியது. பார வண்டியிலிருந்தும், வில் வண்டியிலிருந்தும் நிறைய பேர் ஓடி வரத் துவங்கினார்கள். கொள்ளையர்களால் மரத்தில் ஏறி மறைய முடியவில்லை. கால்களை இழுத்துக்கொண்டு நாலாபுறமும் போய் கருவேல மரங்களுக்குள் இறங்கி ஒளிந்துகொண்டார்கள். சிலர் வலிபொறுக்காமல் கால்களை இழுத்துக்கொண்டு அங்கேயே கிடந்தார்கள். வண்டியில் வந்தவர்கள் நகரமாட்டாமல் கீழே விழுந்து கிடப்பவர்களை அமுக்கிப் பிடித்துக் கட்டினார்கள்.

கரியன் இருளுக்குள்ளிருந்து வந்து கொம்பையாவின் அருகில் நின்றான். ``நல்ல வேல செஞ்சலே...'' என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்தார். ஒரு சிலர் கருவேல மரங்களுக்குள் ஒளிந்திருப்பவர்களைத் தேடி அரிக்கேன் விளக்குகளோடு உள்ளே இறங்கத் தயாரானார்கள். கொம்பையா அவர்களை ஒரு நிமிடம் அமர்த்தினார். உள்ளே வசம் தெரியாமல் இறங்கினால் தொரட்டிக் கம்புகள் எங்கிருந்தாவது வந்து சங்கை அறுக்கும். அவர்கள் கரண்டைக் காலில் அடிபட்டவர்கள், நெடுந்தூரம் நடக்க முடியாது. சூதானமாய் தேடும்படி சொன்னார். சிலர் பந்தங்களைக் கொளுத்திவிட்டு உள்ளே இறங்கினார்கள். அங்கங்கே சிறு சிறு சலப்புக்குப் பின் மேலும் மூன்று பேரைக் கட்டி இழுத்து வந்து அங்கே போட்டார்கள். கொம்பையாவின் கண்கள் மட்டும் ஊடுருவி குத்துச்செடிகளுக்குள் மறைந்திருக்கும் அந்தப் பதற்றமான கண்களைப் பார்த்தபடியேயிருந்தது. அவருக்கு அது நிச்சயம் காளியின் கண்கள்தான் என்பது உறுதியாகத் தெரிந்தது. அவர் அந்தக் கண்களை அப்படியே விட்டுவிட்டார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 18

வண்டிக்காரர்கள் ஒவ்வொரு முகத்தையும் மூடியிருக்கும் சாக்குகளை நீக்கிவிட்டு எந்த ஊர்க்காரர்கள் என்று அடையாளம் பார்க்கத் துவங்கினார்கள். கொம்பையாவும், கரியனும் அதில் எந்த முகமாவது ஜமீன் வீட்டில் கண்ட முகமா என்று கூர்ந்து பார்த்தார்கள். ஒருவருமில்லை. ஒரு சிலருக்கு அதிர்ச்சியாயிருந்தது. தன்னுடைய உறவினர்களும், ஊர்க்காரனும்கூட அதிலிருந்தார்கள். எல்லோருமே ஒரே ஊர்க்காரர்களில்லை. ஓரிரண்டு பேர் ஓட்டப்பிடாரம் பக்கமிருப்பவர்கள். சிலர் கடம்பூர் பக்கமிருப்பவர்கள். சிலர் அவர்களை அடித்து அவர்களின் சேக்காளிகள் பற்றிச் சொல்லும்படி வற்புறுத்தினார்கள். பிடிபட்டவர்களை என்ன செய்யலா மென்று பேச்சு வந்தது. புளியங்காடு தாண்டி ஊர் எல்லையிலிருக்கும் கருப்பர் கோயில் புளியமரத்தில் கட்டிவைத்துவிட்டு ஊருக்குள் போய் சர்க்கார் ஆட்கள் யாருக்காவது தாக்கல் சொன்னால், அவர்கள் ஊர் மக்களோடு சேர்ந்து இவர்களை சர்க்கார் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுவார்களென்று யோசனை சொன்னார்கள்.திருடர்களால் நடக்க முடியவில்லை. அவர்கள் கையையும் காலையும் விழுதுகளால் கட்டி பார வண்டிகளின் பின் பக்கம் தொட்டில்போல அவர்களின் உடலைத் தொங்கவிட்டார்கள். கொம்பையா கடைசியாய் ஒரு முறை குத்துச் செடிக்குள் தெரியும் கண்களைப் பார்த்தார். இன்னும் அந்தக் கண் அதே பதற்றத்தோடு அங்கேயே இருந்தது. கொம்பையா அதை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அதிகாலை நான்கு மணி இருக்கும். பேசியது போலவே ஊர் எல்லையில் கருப்பர் கோயில் புளியமரத்தில் திருடர்களைக் கட்டி வைத்துவிட்டு ஓரிரண்டு ஆட்கள் ஊருக்குள் போய் சர்க்கார் ஆட்கள் யாராவது இருக்கிறார்களாவெனப் பார்க்கக் கிளம்பினார்கள். ஆண்களும் பெண்களும், நண்டும் சிண்டுமாக ஊரே கையில் கம்புகளோடும், ஆயுதங்களோடும் திரண்டு வந்தது. பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் தொடர்ந்து எத்தனை கொலைகளும் கொள்ளைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த ஊர்க்காரர்களே ஓரிருவர் தொரட்டிக் கம்புக்கு சங்கு அறுபட்டு இறந்திருக்கிறார்கள். பார வண்டிக்காரர்கள் எல்லாம் அய்யாவும், அந்தப் பையனும் ஒத்தையா நின்னு முடிச்ச காரியமென்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார்கள். கொம்பையாவை ஊர்க்காரர்கள் வெகுவாக மெச்சினார்கள். ஊரில் சர்க்கார் ஆபீசராக ஒரு இளம் வயது தபால் ஆபீசர் மட்டுமிருந்தார். சர்க்கார் முத்திரையைக் கையில் தொடும் யாருக்கும் அதிகாரமிருந்தது. தபால் ஆபீசர் தன் அஞ்சலக மேலுடையை உடம்பில் அணிந்துகொண்டு வந்திருந்தார். அதில் சர்க்கார் முத்திரையிருந்தது. திருடர்கள் தண்ணீர் கேட்டு முனங்கினார்கள். அருகில் மணியாச்சியில்தான் காவல்நிலையமிருந்தது. தபால் ஆபீசர் மணியாச்சி காவல் அதிகாரிகளுக்கு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு அணாக் காசை எடுத்து அதில் அரசாங்க முத்திரையிருக்கும் பகுதியை வண்டிச் சக்கரத்தின் கறுப்பு மையில் தேய்த்து அச்சு வைத்துக் கொடுத்தார். ஊர் ஆட்கள் நாலைந்து பேர் அதை எடுத்துக்கொண்டு வண்டியைக் கட்டிக்கொண்டு மணியாச்சிக்கு காவலர்களை அழைத்துவரக் கிளம்பினார்கள்.

திருடர்கள் தண்ணீர் கேட்டு மன்றாடினார்கள்.யாரும் கொடுப்பதாயில்லை. ஓரிரு சிறுவர்கள் சிறு சிறு கல்லை எடுத்து சிரித்தபடி திருடர்களின் மீது எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் அவர்களை அதட்டினார்கள். பொழுது கொஞ்சமாய் புலரத் துவங்கியது. திருடர்களின் முகங்கள் கொஞ்ச கொஞ்சமாய் தெரியத் துவங்கியது. நண்பர்களோடு திருடர்களின் மேல் கல்லெறிந்து விளையாடிய ஒரு சிறுவன் அதிர்ந்து அமைதியானான். ஒரு சிறுகல்லை திருடர்களின் மேல் எறிய ஆயத்தமான தன் உடனிருக்கும் சிறுவனின் கைகளை எறிய விடாமல் தடுத்து நிறுத்தினான். மற்ற சிறுவர்கள் அந்தச் சிறுவனை ஏன் என்பது போல் பார்த்தார்கள்.

அவன் பதில் ஏதும் பேசாமல் மெல்ல எழுந்து திருடர்கள் கட்டப்பட்டிருக்கும் மரத்தின் அருகில் போனான். நெடுநேரமாய் தலை குனிந்திருக்கும் ஒரு திருடனை அவன் கீழே அமர்ந்து குனிந்து பார்த்தான். அவன் பார்க்க முற்படுகையில் திருடன் தன் தலையை மேலும் ஆழமாகக் குனிந்து கவிழ்த்தான். அந்தச் சிறுவன் இப்போது மேலும் மேலும் குனிந்து, தன் கழுத்தைச் சாய்த்துப் பார்த்தான். அந்தத் திருடனின் கண்களிலிருந்து இப்போது கண்ணீர்த் துளிகள் நிலத்தில் சிந்தின. அந்தச் சிறுவன் இப்போது பெருங்குரலெடுத்து ``அப்ப்ப்பா...'' என்று அழுதபடியே ஓடிப் போய் அந்தத் திருடனின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதான். ஊர்க்காரர்கள் ஓரிருவர் அருகில் வந்து அவனை அடையாளம் பார்த்தார்கள். திருடனின் கால்களைக் கட்டியிருக்கும் சிறுவனை அவனின் மாமா வந்து இழுத்தார். அவன் தன் அப்பனின் காலை விடுவதாயில்லை. கொம்பையாவிற்கு இதைப் பார்க்கையில் மிகவும் மனச்சங்கடமாயிருந்தது. இப்போது மற்ற சிறுவர்கள் வேண்டுமென்றே அந்தச் சிறுவனின் அப்பன்மீது சிறுகல்லை விட்டு எறிந்தார்கள். அவன் இப்போது தரையிலிருந்து தன் கை நிறைய மண்ணை அள்ளி அள்ளி அவர்களின் மீது விடாமல் அழுதபடியே எறிந்தான். ``போங்கடா...போங்கடா... அது எங்கப்பாடா.''

கொம்பையா அந்தச் சிறுவனை மண் எறியவிடாமல் பிடித்துக்கொண்டு அவனைத் தன்னோடு வாரிச் சுற்றி அணைத்துக்கொண்டார். அவன் ஏங்கி ஏங்கி அழுதான். பின் அவரிடமிருந்து முண்டி தன்னை விடுவித்துக்கொண்டு அழுதபடியே அவரை அடிக்கத் துவங்கினான். ``உன்னாலதான்... உன்னாலதான்... போ...உன்னாலதான். எங்கப்பா கயத்த அவுத்து விடு'' அவன் கோபமும் கெஞ்சலுமாயிருந்தான். கொம்பையாவுக்கு அவனைப் பார்க்கப் பாவமாயிருந்தது. சிறிது நேரத்தில் அந்தச் சிறுவனின் அம்மா அங்கு வந்தாள். அவன் முதுகில் இரண்டு அடி அடித்து ``வீட்டுக்கு வாடா... அவன் உன் அப்பனேயில்ல. நம்மகூட வாழ மாட்டேன்னு தாலி அறுத்திட்டுப்போன பயல அப்பேங்குற வெக்கமாயில்ல... வாடா'' அவனை அந்தப் பெண் தரதரவென இழுத்தாள். அவன் முரண்டுபிடித்துக்கொண்டு அவளிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு போய் மீண்டும் தன் அப்பனின் கால்களைக் கட்டிக்கொண்டான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 18

அந்தப் பெண் அந்தச் சிறுவனை மீண்டும் அடித்து இழுத்தாள். ``ஏலா... வெயிலாட்சி அவன அடிக்காதளா'' திருடன் முனங்கினான். அப்போது அவள் அவனைப் பார்த்தாள். முகமெல்லாம் ரத்தம் வடிந்தபடியிருக்கும் அந்த முகத்தை அவள் பார்த்தபோது அவளுக்கே அழுகையாக வந்தது. வெடித்து அழுதாள். ``அழாதளா.'' அவள் மண்ணில் விழுந்து அழுதாள். ``எய்யா கருப்பா... உனக்கு கண்ணு அவிஞ்சி போச்சா... என்னை இப்படி ஈனப்பொழப்பு பொழைக்க வச்சிட்டியே. ஊரே காரித் துப்பித்தான் இந்த ஆள நான் திரும்ப பாக்கணுமா. என் பொழப்ப இப்படி சந்தி சிரிக்க வெச்சிட்டியே... எங்கள ஏன் இப்படி நட்டாத்துல விட்டுட்ட. எய்யா கருப்பா...'' அந்தப் பெண்ணை நாலைந்து பெண்கள் வந்து அமர்த்தி அழைத்துப் போனார்கள். இப்போது சிறுவன் பனையோலையில் பதநீர் குடிக்க மட்டையை மடிப்பது போல் மடித்து அந்தக் குழியில் நீர் எடுத்து வந்து தன் அப்பனுக்குப் புகட்ட வந்தான். ``ஏலே... அய்யா... வேணாமுடா. நான் இப்படியே செத்துப்போறேன்.''அவன் ஏங்கி ஏங்கி அழுதான். பனையோலை மட்டையிலிருந்து நீர் சிறிது சிறிதாய்க் கீழே வழிந்துகொண்டிருந்தது. சிறுவன் இன்னும் அருகில் கொண்டு வந்தான். பனையோலை அவன் உதட்டைத் தட்டிய பொழுது அவன் மறுக்காமல் உறிஞ்சிக் குடித்தான். ``எய்யா மத்தவங்களுக்கும் கொஞ்சம் தண்ணி எடுத்தாந்து தாரீயா?''

சிறுவன் மீண்டும் ஓடிப்போய் நீர் எடுத்து வந்து அவன் அப்பனுக்கு அடுத்து கட்டப்பட்டிருப்பவனுக்குப் புகட்டினான். கொம்பையா ஊர்க்காரர்களிடம் அவர்களுக்குத் தண்ணீர் தரும்படி கேட்டுக்கொண்டார். யாரும் அருகில் போக விரும்பவில்லை. அச்சப்பட்டு எட்ட நின்றுகொண்டார்கள். யாரும் நீர் எடுத்து வந்து தரவில்லை. கரியன் நீர் எடுத்து வந்து தர சிறுவன்தான் எல்லோருக்கும் நீர் புகட்டினான்.

பொழுது புலரும்போது சர்க்கார் காவலர்கள் நாலைந்து பேர் வந்தார்கள். கால்கள் கைகள் கட்டியவாக்கில் ஒரு பார வண்டியில் அவர்களை மொத்தமாகப் போட்டார்கள். சிறுவன் அழுதபடியிருந்தான். திருடனின் மனைவி சித்த பிரமை பிடித்தவள்போல் அப்படியே நின்றாள். வண்டி நகரத் துவங்கியது. சிறுவன் அழுதபடி வண்டியின் பின்னாலேயே போக நினைத்தான். அவன் மாமன்காரன் அவனைப் போகவிடாமல் இறுக்கப் பிடித்துக்கொண்டான். திருடனுக்கு கண்களை விரித்து தன் மகனையும் மனைவியையும் பார்க்கக் கூச்சமாயிருந்தது. கண்களை இறுக்கமாய் மூடியிருந்தான். ஆனாலும் இனிப் பார்க்க வாய்ப்பிருக்குமோ என்னமோ என்று நினைத்துக்கொண்டு திருடன் கண்களைத் திறந்து அவர்களைக் கண்களுக்குள் நிரப்பி வைத்துக்கொள்ள முயன்றான். புலரும் சூரியனின் வெளிச்சம் அவன் கண்களைத் திறக்க விடாமல் சுட்டது. அவன் கண்களிலிருந்து கண்ணீராய் வந்தது. அவன் மல்லாந்து கிடந்த தன் உடலைப் புரட்டி குப்பறக் கிடத்தி தன் மகனையும் மனைவியையும் பார்த்தான். வண்டி நகர்ந்து போய்க்கொண்டேயிருந்தது. அவன் பார்த்துக்கொண்டேயிருந்தான். எல்லோரின் உருவங்களும் சிறியதாகி சிறியதாகி புள்ளியானது. ஆனால் ஒரு உருவம் மட்டும் சிறியதிலிருந்து பெரிதாகி பெரிதாகி ``அப்பா... அப்பா'' என்று அழைத்தபடி அவனை நோக்கி ஓடி வரத் துவங்கியது.

அவர் பின்மதியத்தில் ஜமீன் பங்களாவிற்குள் நுழையும்போது அந்த இடம் பெரிய அமைதியிலிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். ஜமீன் வீட்டின் குறுக்கும் மறுக்குமாய்த் திரியும் வேலைக்காரர்கள் ஒருவருமில்லை. ஜமீனின் மூத்த மனைவிதான் சொன்னார். ``இங்க வேல பாத்த காளி இப்போம் கொஞ்ச முன்னாடி செத்துப்போய்ட்டாம். எல்லாம் துக்க வீட்டுக்குப் போயிருக்காங்க.'' தூரத்தில் எங்கேயோ சங்கு ஊதும் சப்தம் ஒலித்து ஒலித்து அடங்கியது. கொம்பையா காளியின் வீட்டைத் தேடிப் போனார். அவர் அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பெண்கள் கூடிக் கூடி ஒப்பாரி பாடும் சப்தம் கேட்டது. வேங்கடம் இவர்களைப் பார்த்ததுமே அழுதபடி ஓடி வந்தான். இப்போது வேங்கடம் ஆண் போலில்லாது சேலையும் பொட்டும் சூடியிருந்தான். ``அய்யா பாத்தீங்களா... என்ன விட்டுட்டு என் காளி போயிட்டான்யா...’’ -வேங்கடம் தன் முடியை அவிழ்த்து விட்டிருந்தான். முடி நீளமாய் பிடரிக்குக் கீழ் கிடந்தது. ஊர் எல்லையில் ஆலமரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்ததாகச் சொன்னார்கள். கொம்பையா இறுக்கமான முகத்துடன் காளியின் உடல் அருகே போய் நின்றார். அவரின் கண்கள் அவன் கரண்டைக் காலில் காயமிருக்கிறதாவெனத் தேடிக்கொண்டிருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... 1977

``நீ உடன் வராத இந்தப் பயணம் முழுக்க இருள் சூழ்ந்திருந்தது.''

- பராரிகள்

மகன் வழி ( 1977 - மழைக்காலம்)

வேம்பு சூரவேலின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்டாள் ``சொல்லு, யாரு அவ?''- சூரன் அந்தப் பெண் அச்சு அசலாக தனது அண்ணன் மனைவியைப் போலிருந்ததால் அந்தப் பெண்ணிடம் பேசினேன் என்று சொன்னான். வேம்பு நம்புவதாக இல்லை. அவளுக்கு அழுகையாக வந்தது. ``உன்ன நான் என்னலாமோ நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீ எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்ட.'' சூரவேல் தான் சொல்வது சத்தியமாக உண்மை என்று மன்றாடினான். அவளை மயிலாத்தா கோயிலுக்கு அழைத்துப் போய் சத்தியம் செய்தான். ``நீ நம்புற இந்த சாமி மேல சத்தியம்'' அதன் பிறகே வேம்பு அமைதியானாள். தான் பிறந்த கதையிலிருந்து தன் அண்ணனைப் பிரிந்த கதை வரைக்கும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 18

அதிகாலையின் பறவைகள் குரல் கேட்கத் துவங்கியது. வேம்பு சூரனின் தோளில் சாய்ந்தபடி தன் புருவத்தை உயர்த்தியபடி அவன் அரை முகத்தைப் பார்த்தபடியிருந்தாள். சூரனின் கழுத்தில் வேம்புவின் மூச்சு வெம்மை வந்து வந்து போனது. அவனை இறுக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டாள். சூரனின் தோளில் அவளின் கண்ணீர்த் துளிகள் பட்டபோது அவன் அவளின் தலையை நிமிர்த்தி அவள் முகத்தை இமைக்காது பார்த்தான். என்ன நினைத்தானோ, அவளின் நெற்றியிலும் கழுத்திலும் கன்னத்திலும் உதட்டிலும் வேகவேகமாக முத்தமிட்டான். அவன் நிறுத்திய போது வேம்புவும் அதுபோலவே செய்தாள். வேம்பு நிறுத்தியபோது சூரன் தொடர்ந்தான். இருவரும் நெடு நேரத்திற்குப் பிறகு சிரித்துக்கொண்டார்கள். வெயிலும் மழையும் ஒருசேர அடிப்பதுபோல சிரிக்கும் நேரமும் அவர்கள் நான்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டுதானிருந்தது. சூரன்தான் கவனித்தான். சற்று தூரத்தில் நின்று யாரோ அசையாது இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதை. வேம்புவிற்குப் பார்த்தமாத்திரத்தில் தெரிந்துவிட்டது. அது தன் சித்தப்பா கங்கையன் தானென்று. இருவரும் அமைதியானார்கள். மயிலாத்தா கோயிலின் கல் திண்டிலிருந்து இறங்கி நின்றார்கள். கங்கையன் அவர்களின் அருகில் நகர்ந்து வந்தார். அவர் முகமெல்லாம் நிரம்ப நிரம்ப சந்தோஷமும் பூரிப்புமாயிருந்தது. அவர் ஓங்கி ஓங்கி சப்தமிட்டுச் சிரித்தார். தன் மகளை அருகிலழைத்து வாஞ்சையாய் தலையை வருடிக்கொடுத்தார். சூரனின் கையை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டார். என்ன நினைத்தாரோ திடீரென மயிலாத்தா கோயில் கல்திண்டிலமர்ந்து விசும்பி விசும்பி அழத் துவங்கிவிட்டார். வேம்பு அவரை எப்படியெல்லாமோ சமாதானம் செய்து பார்த்தாள். அவர் அழுகை நிற்கவேயில்லை. வேம்பு தன் சித்தப்பனின் அருகில் அமர்ந்து அவரின் தலையைத் தன் மடியின் மேல் சாய்த்துக்கொண்டாள். இப்போது அவர் சிறுகுழந்தைபோல சுருண்டு படுத்துக்கொண்டார். தன் இரு கரங்களையும் கூதலுக்கு வைத்துக்கொள்வதுபோல் தன் கால்களுக்குள் செருகி வைத்துக்கொண்டார். வேம்பு முக்கால்வாசி நரைவிழுந்த அவரின் தலை முடியைத் தன் கரங்களால் வருடிக்கொடுத்தாள்.

``என்னன்னு சொல்லு சித்தப்பா.''

``எத்தனை தடவ கேக்குறேன் சொல்லு.அழாத.''

இப்போது கங்கையனின் அழுகை தேய்ந்து தேய்ந்து அடங்கியது. சட்டென வேம்புவின் மடியிலிருந்து கண்களைத் துடைத்தபடி எழுந்து அமர்ந்தார்.

``வேம்பு. என்ன ஆனாலும் அந்தப் பாரபட்டிக்காரன்கூட உன்ன அனுப்பி வைக்க மாட்டேன். என் உயிரே போனாலும் இது சத்தியம்.''

ஏழு கடல்... ஏழு மலை... - 18

வேம்பு புருவத்தைச் சுருக்கி தன் சித்தப்பனைப் பார்த்தாள். `` புரியல. இப்போம் பாரபட்டிக்காரனப் பத்தி ஏன் பேசுற?''

அவர் அமைதியாக இருந்தார். ``சொல்லு சித்தப்பா. அந்தாளப் பத்தி இப்போ என்ன பேச்சு?''

அவர் முகம் இறுகித் தலைகவிழ்ந்து நின்றார். வேம்புவிற்கு ஏதோ தவறாக நடப்பதுபோல் பட்டது. கத்தினாள். ``இப்போம் என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?''

``உன்னக் கூப்பிட்டுப் போறதுக்கு அந்தாள வரச் சொல்லிட்டேன்.'' வேம்பு பேய் அறைந்ததுபோல் தன் சித்தப்பனைப் பார்த்தாள்.

``ஏன் சித்தப்பா இப்படிப் பண்ணுன?’’

``எனக்கு வேற வழி தெரியல. பண்ணுனதெல்லாம் தப்பு. இனிமே நல்லபடியா வச்சி வாழறேன்னு சொன்னான், அதான்.''

வேம்பு தன் கரங்களால் முகத்தில் அறைந்து அறைந்து அழுதாள். ``இதுக்கு நீயே என்னக் கொன்னு போட்ருக்கலாமே...'' பொழுது விடியத் துவங்கியபோது செங்கல் சூளையின் வாசலில் ஹாரன் சப்தம் கேட்டது. வேலை செய்பவர் யாரோ போய் கதவைத் திறக்கப் போனார்கள்.

அவர் பதறி அடித்தபடி ஓடி வந்தார். ``அய்யா, போலீஸ் வண்டி வந்திருக்கு.''

எல்லோர் முகத்திலும் இறுக்கமும் இருளும் படியத் துவங்கியது.

~ ஓடும்