மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 19

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`பயணிகளின் கடவுளும் ஒரு நாடோடி.’’ - பராரிகள்

தந்தை வழி (1951-பனிக்காலம்)

காளி பிணமாகக் கிடப்பதைப் பார்த்து கொம்பையாவிற்கு திடுக்கென்றிருந்தது. தனக்குப் புளியங்காட்டுத் திருடர்களோடு தொடர்பிருந்தது நாளை ஊர்முழுக்கத் தெரிந்துவிடும் என்றுதான் காளி தூக்கிட்டு இறந்திருப்பானென்று கொம்பையா நினைத்துக்கொண்டார். தன்னால்தான் காளியின் இந்தச் சாவு நிகழ்ந்திருக்கிறது என்று பெரிதும் மனவருத்தமடைந்தார். வேங்கடம் தலைவிரி கோலமாக பெண்போல சேலை உடுத்தி ஒப்பாரி வைக்கும் பெண்களோடு சேர்ந்துகொண்டு மாரடித்து அழுதான். அரும்பாய் மீசை வளர்ந்த முகத்தில் அகலமாய் சிவந்த பொட்டும், பூவும் சூடி தன் கணவனின் இறப்புக்கு அழுவதைப்போல் அழுதான். நிறைய ஆண்கள் வேங்கடத்தைக் கிண்டல் செய்தார்கள். ஒரு சிலர் காளிக்கும் வேங்கடத்திற்குமான உறவைப் புரிந்துகொண்டர்கள். கொம்பையாவிற்கு காளியின் கரண்டைக் காலில் அடிபட்ட காயமிருக்கிறதாவெனப் பார்க்க வேண்டும் போலிருந்து. பாதம்வரை தழைய கோடி வேஷ்டி உடுத்திப் படுத்துக்கிடப்பவனின் கால்களைத் தொட்டுக் கும்பிடுவதுபோல் வேஷ்டியைச் சிறிது தள்ளிப் பார்த்தார். காவற்கம்பால் அடிபட்டதன் தடம் ரத்தம் கன்றிச் சிவந்திருந்தது.
ஏழு கடல்... ஏழு மலை... - 19

காளியின் உடலைப் பச்சை ஓலையில் பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல ஈம வேலைகள் நடந்தன. கொம்பையாவும் கரியனும் உடன் போகத் தீர்மானித்தார்கள். வேங்கடம் இப்போது ஓங்கிக் குரலெடுத்து அழத் துவங்கினான். அவன் உடல் எடுத்துச் செல்லும் பாதை முழுக்க அழுதபடியே பின்னாலேயே வந்தான். அழுதழுது உடலில் வலுவில்லாது போய் அவ்வப்போது கீழே விழுந்து முகமும் உடம்பும், மண்ணும் புழுதியும் படிய தரையில் கிடந்தான். ``ஏ பயலுகளா, காளி பொண்டாட்டி கீழ விழுகுறா, தூக்கி விடுங்களே’’ - வயசாளிகள் சிறு எள்ளலோடு இளந்தாரிகளைப் பார்த்துச் சொன்னார்கள். நிறைய பேர் பல்பூத்துச் சிரித்தவாறு தூக்கி விட்டார்கள். எல்லோருக்கும் வேங்கடம் கேலிப்பொருளாகத் தெரிந்தான். சுடுகாடு செல்லும் வழியில் அங்கங்கு சில பேர் பனங்காட்டுக்குள் போய் சாராயம் குடித்துவிட்டு வந்தார்கள். வேங்கடமும் ஒரு பனங்காட்டுப் பாதைக்குள் போய்விட்டு நொடிப்பொழுதில் மீண்டும் வந்தான். எப்படியும் ஒரு பானை சாராயம் குடித்திருப்பான். தள்ளாடினான். அவன் கண்கள் முழுக்கத் திறக்க மாட்டாமல் அரைக் கண்ணாய்ச் செருகியிருந்தன. காளியை இழந்து அவ்வளவு மன வலியோடிருக்கும் வேங்கடத்திற்கு சாராய போதை சிறிது நேரம் வலியை நீக்கும் வழியாயிருக்குமென கொம்பையா நினைத்துக் கொண்டார்.

ஆற்றங்கரையோரமிருக்கும் சுடுகாட்டில் அடுக்கடுக்காய் விறகு அடுக்கி அதன்மேல் காளியின் உடலைப் படுக்க வைத்தார்கள். வேங்கடம் கிட்டத்தட்ட சுயநினை வில்லாமல் அலம்பிய படியே நின்றுகொண்டி ருந்தான். கரியன் கீழே விழாதவாறு வேங்கடத்தைப் பிடித்துக் கொண்டான். நீர்ப்பானை சுற்றி உடைத்து காளியின் உடலை எருவாட்டியால் மூடி கற்பூரக்கட்டி வைத்து அதில் சிதை மூட்டிய போது வேங்கடம் சன்னதம் வந்ததைப்போல ஒரு சிலுப்பு சிலுப்பி கரியனின் பிடியை உதறி விட்டு ``எய்யா... எய்யா... ய்யா காளீ’’ என்று கத்தியபடி சிதைத்தீக்குள் பாய்ந்து அப்போதுதான் எரியத் துவங்கியிருந்த காளியின் உடலைக் கட்டி அணைக்க வந்தான். காளியை அணைப்பதற் குள்ளாகவே வேங்கடத்தின் ஆடையில், முடியில் தீப்பற்றிக் கொண்டது. யாரும் சுதாரிப்பதற்குள் நொடிப்பொழுதில் இது நடந்து விட்டது. கரியன் கொம்பையாவின் உருமாத் துண்டை உருவிக்கொண்டு விறுவிறுவெனப் பின்னாலேயே ஓடி துண்டை மாலை போடுவதுபோல வேங்கடத்தின் கழுத்தில் போட்டு வெடுக்கென இழுத்து வெளியே வீசினான். அவன் பருத்திச்சேலையெல்லாம் மொசுமொசுவெனத் தீப்பற்றி எரிந்தது. கொம்பையா சூட்டோடு வேங்கடத்தைத் தூக்கிக்கொண்டு போய் அடுத்த நாலெட்டிலிருக்கும் ஆற்றில் போய்ப் போட்டார். இறப்புச் சடங்குக்கு வந்த எல்லோரும் மிகச் சாதாரண மாகவே இருந்தார்கள். அவர்களிடம் எந்தப் பதற்றமுமில்லை. கூட்டத்தில் வேங்கடத்தின் உறவினர்கள் மட்டும் ஒரு சிலர் ஆற்றுக்குள் இறங்கி வேங்கடத்தைக் கரைக்கு அழைத்து வந்தார்கள். நெருப்பில் பாதிக்கு மேல் எரிந்த புடவையோடு உடம்பில் காயமேதுமிருக்கிறதாவென அவர்கள் பார்த்தார்கள்.

கொம்பையாவிற்கு ஒரு நிமிடம் திகைப்பாயிருந்தது. ஏன் இவர்களைத் தவிர வேறு யாருமே வேங்கடத்தைத் தடுக்க முனையவில்லை? சில வருடங்கள் முன்பு வரை கணவன் இறந்தால் பெண்களும் அதே நெருப்பில் விழுந்து இறந்துபோனால் சொர்க்கத்தில் தன் கணவனோடு கலந்துவிடுவார்களென நம்பும் மூடநம்பிக்கையான சம்பிரதாயம் இன்னும்கூட இந்த நாடெங்கும் வேரூன்றிக்கிடப்பதுதான் காரணமாயிருக்கும். கொம்பையாவிற்கு சதியை நினைக்கும்போதே தனது உடலில் அனல் சூடு அடிப்பதுபோலிருந்து. வெள்ளைக்காரர்கள் இப்படி சிதையில் விழுந்து பெண்கள் சாவதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் போட்டிருந்தார்கள். அவர்கள் இந்த நாட்டை விட்டுப் போய் நாலைந்து வருடங்களாகி விட்டதென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்போதும் அது நிகழ்ந்துகொண்டு தானிருக்கிறது. கொம்பையா வட இந்தியாவிற்கு சந்தை காரணங்களுக்காகச் செல்லும்போதெல்லாம் அதிகமாகவே இப்படியான காரியங்கள் நிகழ்வதை நேரடியாகவே பார்த்திருக்கிறார். ஆனால் ஆண்களுக்கு இப்படியான எந்த சட்டங்களுமில்லை.

ஏழு கடல்... ஏழு மலை... - 19

நல்லவேளையாக நெருப்பு சேலையிலிருந்து உடலுக்குப் பற்றும் முன்னமே கரியன் வெளியே இழுத்துப் போட்டுவிட்டான். ஆனாலும் ஓரிரு இடங்களில் தீக்காயம் பட்டிருந்தது. அவர்கள் இப்போது வேங்கடம் காளியின் மீது வைத்திருந்த அன்பை ஓரளவு புரிந்து கொண்டி ருப்பார்கள். வேங்கடம் சடசடவென விடைத்து எரியும் காளியின் உடலை எந்தச் சலனமு மில்லாமல் பார்த்தபடி யிருந்தான். வேங்கடத்தின் அண்ணன் தன் தோள்மேல் கிடந்த துண்டையெடுத்து வந்து வேங்கடத்தின் மேல் போட்டான். வேங்கடம் கொம்பையாவைப் பார்த்து `அய்யா இப்படி ஆகிடுச்சே’ என்பதுபோல் தன் கரங்களை விரித்துக் காண்பித்தான். கொம்பையாவிற்கு தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று குற்ற உணர்ச்சியாயிருந்தது. கரியனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஜமீன் பங்களாவை நோக்கிக் கிளம்பினார்.

ஜமீன் பங்களாவிற்குள் நுழைந்து நேராக வைக்கோல் படப்பு நோக்கி நடந்தார். சுற்று முற்றும் பார்த்தபடி நடந்தார். இனி எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதுபோல நிமிர்ந்து ஜமீன் பங்களாவின் மாடிகளையும் அதன் எல்லா ஜன்னல்களையும் ஒரு நிமிடம் பார்த்தார், எந்தக் கதவின் அல்லது ஜன்னலின் ஊடாக வாவது ஏதாவது தலை தட்டுப்படுகிறதாவென. ஒருவருமில்லை.

கரியனை விட்டு வைக்கோல் பிரியின் சுற்றுத் தட்டை உருவிப் போடச் சொன்னார். அதில் ஒரே ஒரு தொரட்டி மட்டும் செருகி வைக்கப்பட்டு இருந்தது. யாரோ ஒருவன் மட்டும் இன்னும் மாட்டாமல் தப்பியிருக்கிறானெனத் தோன்றியது. தொரட்டியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வைக்கோல் பிரியை அதேபோல அடைத்துப் போடச் சொன்னார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சுருட்டைப் பற்ற வைத்தார். அவருக்கு மனசு சங்கடமாயிருந்தது. காளியின் சாவுக்கு தான்தான் காரணம் என்று நினைத்து நினைத்து மருகினார். ஆனாலும் அந்த ஒத்தத் தொரட்டி நினைவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே வைக்கோல் படப்பைப் பார்த்தார். அங்கு ஆட்கள் யாரும் தட்டுப்படவில்லை.

வேங்கடத்தை அவன் வீட்டு ஆட்கள் நன்கு ஆற்று நீரில் முக்கி முக்கி எடுத்து போதையைக் குறைத்து அழைத்து வந்தார்கள். வேங்கடம் இப்போதும் சுடுகாட்டைத் திரும்பித் திருப்பிப் பார்த்தவாறு நடந்து போனான். பாதி வழிக்குச் சென்றுகொண்டிருக்கும் போது ``நீங்க போங்க நான் வாரேன்’’ சொல்லிவிட்டு அவர்களை முன்னே போக விட்டுவிட்டுப் பிந்தினான். தனியே நடந்து காளி தூக்கிட்ட மரத்தடிக்கு வந்தான். அங்கு காளி தூக்கிட்ட கிளையில் பாதியாய் அறுந்து தொங்கும் வேஷ்டி இருந்தது.

வேங்கடத்திற்கு ஒருநிமிடம் ஏதோவொன்று உறுத்தியது. `இறந்தவன் இடுப்பில் சாகும்போது வேஷ்டியிருந்தது. அப்போ அவன் தொங்குனது யாரோட வேஷ்டில. அதுக்குன்னு வீட்டுல போயி வேஷ்டி எடுத்திட்டு வந்தா செத்தான்?’ இப்போது பாதி அறுந்து தொங்கும் வேஷ்டி காளியினுடையதுதானா என்று வேங்கடத்திற்கு சந்தேகமாயிருந்தது. விறுவிறுவென மரமேறினான். எப்படியும் வேஷ்டியில் சலவைக்குறியிருக்கும். ஊரில் ஒவ்வொரு வீட்டுக்காரரின் சலவைத் துணிகளுக்கும் சலவைக் காரர்கள் சிகப்பு அல்லது கறுப்பு மையினால் தனித்த அடை யாளக் குறி வைப்பார்கள். அந்த மைக்குறி நீரில் எவ்வளவு அலசினாலும், வெள்ளாவியில் எவ்வளவு வேக வைத்தாலும் அழியாது. சிறு சிறு வட்டமும் கோடும் புள்ளிகளும் அந்த அடையாளத்திலிருக்கும். இப்படி வைக்கும் ஒவ்வொரு குறியும் ஒன்றுபோல் இருக்காது. சில நேரங்களில் காடுகளுக்குள் அல்லது நீருக்குள் இறந்து பலநாள்கள் ஆகி முகம் சிதைந்து கிடப்பவர்களை ஆடைகளிலிருக்கும் மைக்குறியை சலவைக் காரர்களிடம் காட்டி இன்னாரென்று அடையாளம் கண்டுபிடிப்பார்கள்.

வேங்கடம் அறுத்தது போக மிச்சமிருக்கும் வேஷ்டியை மரத்திலிருந்து அவிழ்த்து எடுத்துக்கொண்டு கீழே வந்தான். துணியில் சலவைக்குறியிருந்தது. வேங்கடத்திற்கு அதைப் பார்த்ததும் ``அட ச்சே’’ என்று இருந்தது.வேஷ்டியை அறுத்து எடுத்துக்கொண்டு போன துணியோடு பாதி சலவைக்குறி போய்விட்டது. அறுத்து எடுத்துப்போன கையோடு அதை நெருப்பி லிட்டுக் கொளுத்தி விட்டார்கள். இந்தத் துணியில் கால்வாசிதான் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த வேஷ்டியை எடுத்துக்கொண்டு சலவைக்காரர் வீட்டிற்கு வந்தான். சலவைக்காரர் மிச்சமிருக்கும் குறியோடு ஊரின் எல்லா சலவைக்குறியோடும் ஒப்பிட்டுப் பார்த்தார். ``வட்டமும் ஒரு கோடும் மூணு புள்ளியும், ஒருவேள ஜமீன் வீட்டு ஆளுங்க ளோடதாக் கூட இருக்கலாம். உபாத்தியார் வீட்டு வேஷ்டிக்கும், செக்காலை செட்டியார் வீட்டு வேஷ்டிக்கும்கூட இப்படித் தான் துவக்கக்குறி வரும். கிழிந்த வேஷ்டித் துணியை அவனிடம் குடுத்தார். ``ஒரு நிமிஷம் குடு’’ மீண்டும் வாங்கிக் கொண்டு அந்த வேஷ்டித்துண்டைப் பார்த்தான். அதில் பெரிய வட்டமாய் ஓரிடத்தில் மஞ்சளும் சிகப்புமாய் சீழ் வடிந்த அடையாளம். வேங்கடம் அதை வாங்கி மூக்கின் அருகில் கொண்டு போய் லேசாக மோந்துபார்த்தான். உண்மைதான். சீழ் பிடித்த புண்ணின் நாற்றம். ``வேஷ்டிக்கு உரிமைப்பட்டவனுக்கு இடுப்புக்குக் கீழ ஏதோ நாட்பட்ட காயமிருக்கு.’’ வேங்கடம் அதை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஜமீன் இரவில் ஆகாரம் சாப்பிட விருந்தினர் களான கொம்பையாவையும் கரியனையும் வரச் சொல்லி ஆள் அனுப்பி விட்டார். அதேபோல இருவரும் வந்து உணவெடுத்துக்கொண்டார்கள். கிளம்பும்போது கொம்பையா சொன்னார். ``இந்த ரெண்டு நாளா நல்லா உபச்சாரம் பண்ணி கவனிச்சிக்கிட்டீங்க. ரெம்ப சந்தோசம். நாளைக்கு விடிகாலைக்குக் கிளம்பலாம்னு இருக்கோம்’’. ``கிளம்பப்போறீங்களா?’’ ஜமீன் அமைதியானார். ``ஆகட்டும். உங்க நோக்கம்போல விடிகாலைக்குக் கிளம்புங்க. உங்ககிட்ட செத்த நேரத்துக்கு பழக்கம் பேசிக்கிட்டு இருக்கணும் போலத் தோணுது.’’ கொம்பையா அவரை ஏறிட்டுப் பார்த்தார். ``ரெம்ப இல்ல. நாலு வெத்தல போட்டு முடிக்கிற நேரம்தான்.'' கரியனை அனுப்பிவிட்டு ஜமீனோடு முற்றத்தில் கிடக்கும் பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். ஜமீன் சுற்றுமுற்று கவனமாய்ப் பார்த்து விட்டு பேசத் துவங்கினார்.

``ஊர்லயும், இங்க வீட்லயும் கொஞ்ச நாளா நடக்குற எதுவும் சரியா இல்ல. மனசுக்கு எதுவுமே பிடிக்கல. ஒரு காரணமுமில்லாம இந்தக் காளி தூக்குல தொங்கிட்டான். சின்னதுலயிருந்து இங்குனேயே கிடந்த பய. பாவம். கொஞ்ச நாளா இங்க அக்கம்பக்கத்துல யார் யாரோ சாகுறாங்க. யேவாரத்துக்கு வழிப்போக்கா வந்த அசலூர் யாவரிங்கதான் அதுல நிறையபேர். அவக வண்டி மாடுங்களும் சாமான், சரக்குலாம்கூட திருடு போயிகிட்டிருக்கு. ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் போட்டுட்டாங்க, இப்போ எல்லா உரிமையும் அரசாங்கத்துக்கிட்டயும், போலீஸ்காரவு ககிட்டயும்தான். நான் இப்போ பல்லு புடுங்குன பாம்பு. இப்பலாம் என் வாக்குக்கு இங்க ஒரு மருவாதியுமில்ல. சும்மா பழைய பகட்டுல ஓட்டிகிட்டு இருக்கேன். பழகுன தோஷத்துக்கு மக்களும் இன்னும் மரியாத பண்றாங்க’’ - கொம்பையா ஒவ்வொரு வார்த்தைக்கும் சப்தத்தாலும், தலையசைப்பாலும் ``ம்’’ கொட்டினார். ஜமீன் சிறிது நேரம் வார்த்தைகளை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார். பின் நாத்தளுதளுக்க மீண்டும் பேசத் துவங்கினார்.

``இன்னும் எத்தன நாளைக்கி நான் உசுரோட இருப்பேன்னு தெரியலங்க. அப்படியே விட்டா நோக்காடுல ஒரு வருசத்துக்குள்ள போயிடுவேன். ஆனா அதுக்கும்கூட காலம் பொறுக்காம முன்கூட்டியே உசுர எடுக்கணும்னு திரியுறாங்க. யாராயிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது. சொத்த சரியா பகுறலன்னு என் மூத்த மகன் ஜெயவீரனுக்குக் கோபம். போதாக்குறைக்கு பெண் மக்களுக்கும் சொத்த பகுந்து குடுத்துட்டேன். பாவம் அதுகளும் என் வாரிசுக தான. ஆணோ பொண்ணோ என் விததான. ஜெயவீரன் மூணாம் பெண்டாட்டிக்கி பொறந்தவன்தான். முறப்படி மூத்த பெண்டாட்டிக்கு வாரிசு இருந்தா அவன்தான் ஜமீன் வாரிசு. இப்போந்தான் அந்தச் சின்னப் பயலுக்கு ஏழு வயசாகுது. ஒரு மூச்சி அவன கொல்லணும்னு பழியா கிடந்தான். இப்போ என்ன...'' மீண்டும் அமைதியானார்.

``நேத்து ராத்திரிக்கி மேக்காத்த ஜன்னல் வழியா குறு அருவா கட்டுன ஒரு தொரட்டிக் கம்பு என் கழுத்தத் தேடி வருது. நல்லவேள முழிச்சிக்கிட்டு இருந்ததால தப்பிச்சேன்.’’ ஜமீன் தன் மேல் துண்டை நீக்கி கழுத்துக் காயத்தைக் காண்பித்தார்.

``நான் எப்படியோ போறேன். பாவம் அந்தச் சின்ன பய ஏழு வயசுதான் ஆகுது. அவன நினச்சாதான் பக்குனு இருக்கு. நெஞ்சு கிடந்து அடிச்சிக்குது. நல்ல வேலையா போட்டோ படம் பிடிக்க வந்தவங்ககூட ரகசியமா மதராசுக்கு அனுப்பி வச்சிட்டேன். இந்த விஷயம் இன்னும் ஜெயவீரனுக்குத் தெரியாது. மூணு நாலு மாசமா அந்தச் சின்னப்பயல கொல்றதுக்கு எப்படியெல்லாமோ சுத்திக்கிட்டு இருந்தான். அந்தக் காளி பய மட்டும்தான் அந்தச் சின்னப் பயல காவல் காத்து பத்திரமா பாத்துகிட்டு இருந்தான். இன்னிக்கி அவனும் தொங்கிட்டான்.’’ கொம்பையாவுக்கு ஒரு நிமிடம் குழப்பமாயிருந்தது. காளி இவ்வளவு நல்லவன்னா அந்தத் திருட்டுக் கும்பலோட ஏன் அங்க வந்திருந்தான்... தாம் பார்த்தது காளியின் கண்கள்தானா? ஒரு நிமிடம் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார். நூறு சதம் காளியின் கண்கள்தான். சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு கொம்பையா கிளம்பப் போனார். ஜமீன் எழுந்து கொம்பையாவின் கரங்களை சிறு நடுக்கத்தோடு பற்றிக்கொண்டார். ``நான் ஒருவேள உயிரோட இருந்தா திரும்பப் பாக்கலாம்.'' அவரின் கண்கள் நீர்கட்டி நின்றது. கொம்பையா அவரின் கரங்களை மீண்டும் ஒரு முறை அழுந்தப் பற்றிவிட்டு கிளம்ப ஆயத்தமானார். ``ஊருக்குக் கிளம்புற வரைக்கும் இன்னிக்கி ஒரு நாள் இரவு மட்டும் உங்க ஜன்னல்கள இறுக்கமா மூடிக்கோங்க. திறக்க வேண்டாம். விடிகாலையில கிளம்பி நல்ல படியா போயிட்டு வாங்க.’’- கொம்பையா கும்பிட்டு விடைபெற்றுக்கொண்டு தான் தங்கியிருக்கும் வீட்டிற்குக் கிளம்பினார். வழியெல்லாம் ஜமீனின் குரல் அவரின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. ``இன்னிக்கி ஒரு நாள் இரவு மட்டும் உங்க ஜன்னல்கள இறுக்கமா மூடிக்கோங்க. திறக்க வேண்டாம்.’’

“பதற்றம் கொள்ளாதே, நான் இந்த பூமியை விட்டு எங்கேயும் தொலைந்துபோக மாட்டேன்.’’ - பராரிகள்

மகன் வழி ( 1977 - மழைக்காலம்)

சூளைக்கு போலீஸ் வாகனம் இவ்வளவு விடிகாலையே வருமென கங்கையன் எதிர்பார்க்கவில்லை. தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சரணடைவதாகத்தான் சொல்லியிருந்தார். தான் மறைமுகமாகச் செய்துகொண்டிருக்கும் சில தவறான வேலைகளில் வேம்புவின் பெயரும் அடிபட்டு அவள் வாழ்க்கையும் மோசமாகப் போய்விடக்கூடாது. அவள் நன்கு வாழ வேண்டிய பெண்மகள். சூளையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு மிச்சசொச்ச காலத்தை செய்த தவற்றுக்கெல்லாம் தாமே முன் வந்து தண்டனை அனுபவித்துக்கொள்ளலாமென நினைத்துதான் நேற்று மாலை போலீசுக்காரர்களிடம் போய்ச் சொன்னார். பாரப்பட்டிக்காரன் காலையில் வந்து அழைத்துக் கொள்கிறேனெனச் சொன்னதால் அவனிடம் வேம்புவை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பலாமென நினைத்தார். அதற்குள் போலீஸ் வண்டி வந்து விட்டது.

வேம்பு தன் சித்தப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ``ஏன் சித்தப்பா இப்படிப் பண்ணுன. எனக்கு இப்போ யார் இருக்கா, சொல்லு... ஏன் இப்படிப் பண்ணுன?’’ கங்கையன் போலீஸ் வண்டிக்குப் போய் அங்கு அமர்ந்திருந்த அதிகாரியிடம் பணிவாகக் கேட்டார். ``என் மகள அனுப்பி வெச்சிட்டுக் கிளம்பலாமாங்க.செத்த நேரத்துல அவுக மாப்ள வந்து கூப்பிட்டுப்பாரு'' - பேசிக்கொண்டிருக்கும் போதே ``திருட்டு நாயே... வண்டில ஏறுடா. பெரிய இவரு, துரைய வெயிட் பண்ணி அவர் சொல்றப்போதான் வண்டில ஏத்திக் கூட்டிட்டுப் போகணுமாம்ல. திருட்டு நாயி... யாருகிட்ட என்ன பேசுற.''

``இல்லங்க... கொஞ்ச நேரம்.''

ஏழு கடல்... ஏழு மலை... - 19

கங்கையன் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிகாரி பளிச்சென்று அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அந்த மொத்த இடமும் ஒரு நிமிடம் பேச்சுமூச்சில்லாமல் ஒடுங்கி அமைதியானது. கங்கையன் போலீஸ் வண்டிக்குள் ஏறி அமர்ந்தார். வண்டி வேம்புவின் அருகில் வந்து ஒரு அரை வட்டமடித்துத் திரும்பிப் போனது. வேம்பு அப்படியே குத்துக்காலிட்டு அந்த மண்தரையில் அமர்ந்துகொண்டாள். கங்கையன் வண்டியில் அமைதியாக அமர்ந்திருந்தார். வண்டியில் மேலதிகாரி கேட்டார். “உனக்கு முத கேஸு எந்த ஸ்டேஷன்ல.” ``மணியாச்சி ஸ்டேஷன்லங்க. 1951-ல - புளியங்காட்டுத் திருட்டு.’’

``ம்... எத்தனை வருஷம்?’’

``57 வரைக்கும் பாளையங்கோட்டையில இருந்தேங்க.''

``ம். அநேகமா இப்பயும் அங்கதான்.’’

கங்கையன் அமைதியாக இருந்தார். தன் வேஷ்டியை கணுக்காலுக்கு மேல் ஏற்றிப் பார்த்தார். புளியங்காட்டுத் திருட்டுக்குப் போன இடத்தில் காவற்கம்பால் காலில் பட்ட காயத்தின் தழும்பு. அன்றிலிருந்துதான் கணுக்கால் சிப்பி உடைந்துபோய் அவரால் வேகமாக ஓட முடியாமல்போனது.

போலீஸ் வண்டி கிளம்பிப்போன சிறிது நேரத்திற்குள்ளாகவே பாரப்பட்டிக்காரனின் கார் சூளைக்குள் நுழைந்தது. பாரப்பட்டிக்காரன் இருண்ட நிறத்தில் நெடுநெடுவென வளர்ந்திருந்தான். நல்ல சுருள் சுருள் முடிகள். உடையிலும், கால் செருப்பிலும் படாடோபமிருந்தது.

வேம்புவுக்கு அவனைப் பார்த்ததுமே ``ச்சீய்’’ என்றிருந்தது. அவள் அவனிடம் எதுவுமே பேசாமல் அமைதியாகத் தலைகவிழ்ந்து நின்றுகொண்டிருந்தாள். பாரப்பட்டிக்காரன் வேம்பின் அருகில் வந்து கிளம்பலாமாவென மெதுவாகக் கேட்டான். வேம்பு அவனை நிமிர்ந்து பார்த்து அமைதியும் நிதானமுமாகச் சொன்னாள் ``இன்னிக்கி ஒரு நா விடு. நாளைக்கி காலைல இதே நேரம் இங்க வா. மறுபேச்சு பேசாம உன்கூட வாறேன்.’’ அவன் மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் மீண்டும் காரிலேறிக் கிளம்பிச் சென்றான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 19

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூளையில் வேலை செய்பவர்கள் கலைந்து சென்றார்கள். வேம்பு சூரனின் அருகில் வந்து நின்றுகொண்டு அவன் முகத்தைப் பார்த்தபடியே நின்றாள். ``நாளைக்கி நான் பாரப்பட்டிக்காரன்கூட போயிடுவேன். இனிமே ரெண்டு பேரும் யார் நினைச்சாலும் யாரும் யாரையும் பாக்க முடியாது. நாளைக்கி நான் மொத்தமா அழுதுக்குறேன். இன்னிக்கி ஒரு நா உன்கூட சந்தோசமா இருக்கணும்.’’ சூரன் அவளை புரியாமல் பார்த்தான். ``பாரப்பட்டிக்காரன் புள்ள ரெண்டாவது புள்ளையா இருந்துக்கட்டும். உன் புள்ளதான் எனக்கு முத புள்ளையா இருக்கணும். நான் பெத்துக்குற முத புள்ள காமத்துக்குப் பெத்ததா இருக்கக் கூடாது. காதலுக்குப் பெத்ததா இருக்கணும்.’’

சூரன் அப்போதும் அமைதியாகவே இருந்தான்.

வேம்பு சூளையின் நடுவே போய் நின்று கொண்டு கத்திச் சொன்னாள். ``யாரும் மயிலாத்தா கோயிலத் தாண்டி மாங்காட்டுக்குள்ள நாளைக்கிக் காலைல வரைக்கும் வராதீங்க, சொல்லிட்டேன்.’’ அவள் சூரனை அழைத்துக்கொண்டு மயிலாத்தா கோயிலை நோக்கி நடந்தாள்.

- ஓடும்