மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 2

ஏழு கடல்... ஏழு மலை...
News
ஏழு கடல்... ஏழு மலை...

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

“அவர்களுக்கு யாரும் எதுவும் தருவதில்லை. அவர்கள் இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்” - பராரிகள் ; தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )

செவலையை அழைத்துப் போவதை நீர் வழியும் கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்த கரியனின் தோளைத் தொட்டு, புங்கை மர நிழலுக்கு அழைத்துப் போனார் கொம்பையா. அவன் புறங்கையைத் திருப்பி அடிபட்ட இடங்களைப் பார்த்தார். சில இடங்களில் வீங்கியும், சில இடங்களில் ரெத்தம் கன்றிப்போயுமிருந்தது. மலையரசனிடம் சொல்லி கரியனுக்கு ஏதாவது உணவு எடுத்து வரச் சொன்னார். பித்தளைக் கும்பாவில் பழஞ்சோற்றில் ஏலெட்டுச் சிறுவெங்காயம் உரித்துப் போட்டு எருமைத் தயிர் ஊற்றி எடுத்து வந்தான். மடித்த சிறு கீற்று வாழை இலையில் கொஞ்சம் கொள்ளுத்துவையல் வெஞ்சனம் இருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 2

கரியன் சாப்பாட்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பிடிப்பு இல்லாமல் சந்தையின் இரைச்சலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

``அதான் அடிவயிறு ஒட்டிக்கிடக்குல்ல...சாப்பிடு பேசிக்கலாம்’’ கரியன் தலை திருப்பாமல் இறுக்கமாய் சந்தையைப் பார்த்தபடி ``நான் வீட்டுக்குக் கிளம்புறேன்'' என்றான்.

சிறிது நேரம் அவனைப் பார்த்தபடியே வெறுமென அமர்ந்திருந்துவிட்டு ``நான் சொன்ன பிறகு கிளம்பலாம்’’ என்று சொல்லிவிட்டு கொம்பையா விறுவிறுவென திடலுக்குள் இறங்கி மாடுகளுக்குள் சென்று மறைந்தார்.

இப்போது சந்தையின் எந்த மாட்டைப் பார்த்தாலும் அவனுக்கு செவலையின் ஞாபகம் வந்தது. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவனை வாடை பிடித்து எப்படி அடையாளம் கண்டுவிட்டது. தனக்குத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். அவனுக்கு இப்போது செவலையையும், அதன் தாயையும் பற்றிப் பழைய நினைவுகள் மேலெழும்பித் திரண்டு திரண்டு வந்துகொண்டிருந்தது.

நாலைந்து வருடங்களுக்கு முன் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த அதே நாளில் தான் செவலையின் அம்மா கரியனின் வீட்டிற்கு வந்தது. அன்று நாடெல்லாம் மிகுந்த உற்சாகமும், சந்தோஷமுமாயிருந்தது. குமரியின் தாலுக்கா அலுவலகத்தின் பெரிய மாடத்தில் நின்று நள்ளிரவு 12-க்கு சங்குநாதம் ஊதினார்கள். காலையில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்கள். அன்று நிறைய வீடுகளில் புதியது உடுத்தி, பண்டங்கள் சுட்டு, பண்டிகைபோலக் கொண்டாடித் தீர்த்தார்கள். கரியன் அன்று முழுக்க நண்பர்களோடு குறுக்கும், மறுக்குமாய் ஓடியாடி விளையாடித் தீர்த்தான்.

திருவிதாங்கூர் மன்னர் இந்தியக் கூட்டாட்சியோடு இணைய தனக்கு விருப்பமிலையெனக் கூறிவிட்டதாய் அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று முழுக்கத் தெருவெல்லாம் ஜன சந்தடியாயிருந்தது. மாலை நான்கு மணியிருக்கும். வானம் இருண்டுகொண்டு கரிய அடுப்புப்புகைபோல் திரண்டு ஊரையே மூடி நின்றது. சிறிய நேரம்தான். கனத்த இரைச்சலோடு பேய்மழை பிடித்துக்கொண்டது. இரவு எத்தனை மணி இருக்கும் என்று தெரியவில்லை. நாராயண பிள்ளை வீட்டின் வேலை ஆள் வந்து கதவைத் தட்டி கரியனின் அப்பா காசியை உடனே கிளம்பி வரச் சொன்னான். தானும் வருவேன் என்று அடம்பிடித்தவனை வேறு வழியில்லாமல் தலைக்கு ஓலைத்தடுக்கைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி அந்த இரவில் உடன் அழைத்துப் போனார். ஊரிலிருக்கும் பணக்காரர்களில் நாராயணபிள்ளை ஐந்து விரல்களுக்குள் வருவார்.

ஏழு நாள்கள் முடிந்து மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அவர் பசுவும் கன்றும் காசிக்குத்தான் உரிமையுடையது என்று தீர்ப்பு சொன்னார்.

அவர்கள் போகும்போது அந்தப் பெரிய வீட்டில் ஏழெட்டுப் பேர் முன் கொட்டகையில் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருந்தார்கள். சரிபாதி பெண்கள். அதில் ஒரு முதிய பெண், நாராயண பிள்ளையின் அம்மாவாக இருக்கலாம்,

``ஏடா நாராயணா, ஆளு வந்தாச்சு சட்டுபுட்டுனு முடிச்சி வேகமா தல வாசல் தாண்டச் சொல்லு’’

நாராயண பிள்ளை இறுக்கமான முகத்தோடு தலையை ஆட்டினார். வீட்டின் வடபுறத்தில் மாடுகள் கட்டப்பட்டிருக்கும் தொழுவத்துக்கு நடந்தார். காசி அவரைப் பின்தொடர்ந்தான்.

தொழுவத்தில் நிறைய மாடுகள் நின்றிருந்தன. உடன் வந்த பெரிய வீட்டுக் கணக்கர் ஒரு இடத்தில் போய் நின்று விளக்கைத் தரை நோக்கித் தாழ்வாகப் பிடித்தார். அங்கு ஒரு பசு வாயில் நுரைதள்ள மூசு மூசுவென்று தரையில் கிடந்தது. அதன் அகன்ற கண்கள் நிலைக்குத்தி கிட்டத்தட்ட பிதுங்கி வெளி வந்துவிடும் போலிருந்தது. வயிறு ஊத்தாம்பட்டிபோல வீங்கி வேக வேகமாக இறங்கி இறங்கி ஏறியது. காசி அருகில் போய் உற்றுப் பார்த்துவிட்டு ``பெருவிரட்டை நோவு மாதிரிதான் இருக்கு. இதுக்கு மலைத் தாழங்காய எடுத்து....’’ சொல்லி முடிப்பதற்குள் நாராயண பிள்ளை ``அதெல்லாம் பண்ணியாச்சு. பிரயோஜனமில்ல’’ என்றார்.

``இன்னும் கொஞ்ச நேரம்தான் கடைசி மூச்சி இந்த வீட்ல போயிடக்கூடாதுன்னு எங்க அம்ம நினைக்கிறா. நிறைஞ்ச வெள்ளிக்கிழமையும் அதுவுமா. பிள்ள நிறைஞ்ச வயித்தோட பசு இறந்தா வீட்டுக்கு விருத்தி இல்ல. எப்படியாவது இங்கிருந்து எடுத்திட்டுப் போயிட்டு மூச்சு அடங்குனதும் செய்ய வேண்டியத செஞ்சிடு. கூட முருகன வச்சிக்கோ.... இது யாரு உன் பையனா…''

``ம்’’

``அவனுக்கு அரைக் கூலி போட்டுக்கோ.’’

``அதான் வருசக்கூலி வாங்கிக்கிறாங்கில்ல, செய்யுற ஒவ்வொரு வேலைக்கும் தனியாவும் கூலி குடுக்கணுமா’’ என்று கணக்கர் தடுத்தார். காசி மன சங்கடமாய் கூலி வேண்டாமென்று மறுத்துவிட்டான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 2

``ஏமானே மாடுகளோடு ஒரு பார வண்டி ஏற்பாடு பண்ணித் தர முடியுமா?’’

‘`வண்டி மட்டும்தான் இருக்கு. மாடுகளை காரையார் வீட்டுல இரவல் வாங்கிட்டுப் போய்ட்டாங்க. அவங்க காளைங்க கொஞ்சம் முத்தல். திருவில்லிபுத்தூர் ஆலயம் பார்க்கப் போய் மூணு நாள் கழிஞ்சிடுச்சி.’’

கணக்கர் முந்திக்கொண்டு ``அதான் ரெண்டு பேர் இருக்கீங்கில்ல, சுலபமா இழுத்திட்டுப் போயிடலாம்’’ என்றார்.

இரண்டு ஆட்களை வைத்து எப்படித் தூக்கி வைக்க... அக்கம் பக்கம் யாரையாவது உதவிக்குக் கூப்பிடலாமா எனக் கேட்கையில் நாராயணப் பிள்ளை மறுத்துவிட்டார். அருகில் இருப்பவர்களுக்குத் தெரிந்தால் எப்படியும் சில மாதங்களுக்காவது இழிபேச்சும், சாஸ்திர பொரணிகளும் இருக்கும். அவரும், வீட்டுப் பெண்களும் சேர்ந்து பசுவைத் தூக்கி பார வண்டியில் கிடத்தினார்கள். பசு தன் மிரண்ட கண்களால் வீட்டு மனிதர்கள் எல்லோரையும் பார்த்தது. அவர்களுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்பதைப்போல முகத்தைத் திருப்பிக்கொண்டு ``வேகமா... வேகமாக் கிளம்புங்க’’ என்றார்கள்.

காசியும் முருகனும் வண்டியின் நுகத்தடியை ஆளுக்கொரு பக்கமாக நின்று மாட்டைப்போல் இழுத்தார்கள். மழை வலுத்துப் பெய்யத் துவங்கியது. கரியன் வண்டியை முடிந்த மட்டும் பின்னிருந்து தள்ளினான். பசுவின் வாயிலிருந்து நுரைத்து நுரைத்து மழை நீரோடு கரைந்தது. பெருமூச்சு எடுத்துக்கொண்டே இருந்தது.வழியெல்லாம் முருகன் கணக்கரைத் திட்டிக்கொண்டே வந்தான். கால் காசு கொடுக்காம வேலை மட்டும் வாங்குறான். இன்னும் குழி எடுக்கணும். இதத் தள்ளி மூடணும். எனக்குத் திராணியில்ல.

காசி அவனை சமாதானம் செய்ய முயன்று கொண்டேயிருந்தான். முடியவில்லை. ஒரு கட்டத்தில் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ கிளம்பு என்று சொல்லிவிட்டான். போக மாட்டான் என்று நினைத்தால் முருகன் உண்மையிலேயே நுகத்தடியிலிருந்து தலையை உருவிக்கொண்டு அப்படியே போட்டது போட்டபடி கிளம்பிப் போய்விட்டான். கரியனை அனுப்பி, தன் மனைவியை உதவிக்கு அழைக்கலாமாவென நினைத்தான். ஏதோ முடிவெடுத்தபடி காசி இப்போது வண்டியின் தாங்குக்கட்டையை வந்து பிடித்துக்கொண்டான். ஒற்றை ஆளாய் வண்டியைத் தன் வீடு நோக்கி இழுத்தான். இப்போது கரியன் இன்னும் பலத்தோடு வண்டியைத் தள்ளினான். வழியெல்லாம் பசு மூசுமூசுவென்று இளைத்தபடி பெருமூச்சு எடுத்தது. கடற்கரை ஓரத்தில் கடைசி வீட்டை நோக்கி இருவரும் வண்டியை இழுத்தார்கள். வண்டி மணலில் சிக்கிக்கொண்டு இழுக்க சிரமாயிருந்தது. ஒரு வழியாய் பசுவைத் தன் வீட்டின் முற்றத்தில் கொண்டுவந்து போட்டார்கள். கரியனின் அம்மா இசக்கி வீட்டின் வெளியே வந்து பார்த்தாள். பசு இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடும் போலிருந்தது. இறந்ததும் காலையில் எடுத்துப் போய்ப் புதைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு காசி உடல் அசதியில் வீட்டின் உள்ளே போய்ப் படுத்துவிட்டான். இசக்கி அமர்ந்தபடி பசுவின் தாவங்கட்டையை மடியில் வைத்து நுரைக்கும் வாயை நீர் கொண்டு கழுவிக் கழுவி விட்டாள். வாயைத் திறந்து கொஞ்சம் நீர் புகட்டினாள். பசு நீர் எடுக்காமல் கடைவாயின் வழியே ஒழுக்கியது. கரியன் அம்மாவின் அருகில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான்.

‘`நீ உள்ள போய்ப் படு’’ என்று எவ்வளவு சொல்லியும் மறுத்துவிட்டான். ஆனால், சிறிது நேரத்தில் தரையில் படுத்து உறங்கிவிட்டான்.

இசக்கி காலை வரை வாயைக் கழுவி விடவும், நீர் புகட்டவுமாயிருந்தாள். காலையில் உறங்கி எழுந்த காசி முற்றத்திற்கு வந்து ``பசு இறந்திடுச்சா’’ எனக் கேட்டான். ``இல்ல...'' உறக்கம் இல்லாத கண்களோடு இருந்தவளைத் திட்டினான்.

‘`சாகப்போற ஜீவனுக்காக நீ ஏன் முழிச்சிட்டுக் கிடக்குற.’’

``வெள்ளிக்கிழமையும் அதுவுமா வீட்டுக்கு லெட்சுமி வந்திருக்கு. அதுவும் நிற வயிறா. அப்படியே விட்டுட்டுப் போக எப்படி மனசு வரும். ஒரு பொம்பள நிற மாசப் பொம்பளைய எப்படி சாக விடுவா?’’

பசுவின் கண்கள் இப்போது நிலைக்குத்தி இல்லாமல் வலதும் இடதுமாய் நகர்ந்தது. நுரை தள்ளுதலும் குறைந்திருந்தது. காசிக்கு பசுவிடம் ஏதோ சின்னத் தெளிவு இருப்பதாய்த் தோன்றியது. உறங்கி எழுந்த கரியன், பசுவின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான். அருகிலுள்ள வீடுகளுக்குப் போய் தன் வயதொத்த பையன்களை வீட்டுக்குப் புதுப் பசு வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தான். அவர்கள் அதை வந்து பார்த்து சீக்கு மாடு... செத்த மாடு… சீக்கு மாடு... செத்த மாடு என்று அவனைக் கிண்டல் செய்தார்கள். இசக்கியின் வறுபுறுத்தல் தாங்காமல் மாட்டு வாகடம் தெரிந்த பழங்கிழவர் ஒருவரை அழைத்து வந்து காட்டினான். பிழைக்க துளியும் வாய்ப்பில்லை. முயற்சி பண்ணுறதுன்னா பண்ணிப் பாருங்க என்று மருந்து சொல்லிவிட்டுக் கிளம்பினார். இசக்கி விரைந்துபோய் கொட்டனிலிருந்து பணம் எடுத்துக் காசியிடம் கொடுத்தாள். அவளிடம் எப்படியாவது பசுவைப் பிழைக்க வைத்துவிட வேண்டுமென்ற பிரயாசை இருந்தது. காசி சலிப்போடு போய் நாட்டு மருந்துகள் வாங்கி வந்தான். வழியெல்லாம், எங்கே குழி எடுக்கலாம், இறந்தபின் மாட்டைத் தூக்கிப் போட யாரை உதவிக்கு அழைக்கலாம் என்பதே பெரும் யோசனையாயிருந்தது அவனுக்கு.

வந்ததும் இசக்கி முதலாளி வீட்டில் கொண்டு போய் பார வண்டியை நிறுத்திவிட்டு வரச் சொன்னாள். அவன் மறுத்துவிட்டான்.

``பசு இறந்த பின் தூக்கிப் போக வேறு யார் பார வண்டி குடுப்பா சொல்லு.’’ பிடிவாதமாய் மறுத்துவிட்டான். மருந்து கொடுத்த பின் மாலையில் சட சடவென கழிந்து தள்ளியது. இரவில் படுத்தபடியே நீர் குடிக்க சட்டியை முண்டி முண்டி நீர் கீழே கொட்டியது. மறுநாள் அதிகாலையில் இசக்கி அவசரமாக காசியைத் தட்டி எழுப்பி முற்றத்துக்கு அழைத்து வந்தாள். அங்கு பசு புட்டானியை உயர்த்தி உயர்த்தி எழ முயற்சி செய்து கொண்டிருந்தது. காசி கரியனை எழுப்பி வந்து காண்பித்தான். பொழுது நன்கு விடிவதற்குள் பார வண்டியைக் கொண்டுபோய் முதலாளி வீட்டில் விட்டு வரத் தீர்மானித்துக் கிளம்பினார்கள். கரியன் வரும்போது இருந்ததைப் போலவே வண்டியைப் பின்னிலிருந்து தள்ளினான். பின்னோக்கித் திரும்பித் திரும்பி மணலில் வண்டிச் சக்கரங்கள் போட்ட கோடுகளைப் பார்த்தபடியே வந்தான். காசி எதிர்பார்த்ததைப்போலவே இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. தொழுவத்தில் கறவைக்காரர் இருந்தார். அவரிடம் வண்டியை நிறுத்தியதைச் சொல்லிவிட்டு அரவம் இல்லாமல் கிளம்பினார்கள்.

அடுத்த நாலைந்து நாள்களில் பசு எழுந்து நின்று ஆகாரம் எடுக்கத் துவங்கிவிட்டது. மூவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. இசக்கி தலையுயர்த்தி வான் நோக்கிக் கரம் குவித்துக் கும்பிட்டாள். வராது வந்த அறிய செல்வம் போல் பசுவைப் பார்த்துக்கொண்டாள். கரியன் இப்போது எல்லா நேரங்களிலும் பசுவோடேயே இருந்தான். காசி கீற்று வேய்ந்து பசு நிற்பதற்குச் சிறு கொட்டகை வேய்ந்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் விடியற்காலையில் பசு கன்று தள்ளியது. நல்ல செவலை நிறத்தில் காளைக் கன்று. விஷயம் அக்கம் பக்கம் முழுக்கப் பரவி எல்லாரும் வந்து பார்த்தார்கள். இசக்கி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சீம்பால் கொடுத்தாள். சிலருக்குப் பொறாமை பிடித்தது.சிறிது நாளில் விஷயம் நாராயண பிள்ளை காதுக்கும் போனது. அவர் ஆச்சர்யப்பட்டார்.

``பரவாயில்லையே சாகக் கிடந்தத பொழைக்க வச்சிட்டானே.’’ கரியனோடு கன்று காடு, கரை, மணல்வெளியெல்லாம் துள்ளித் துள்ளி விளையாடியது. ஒரு நேரம்கூட அதை விட்டுப் பிரியாதிருந்தான்.நான்கைந்து மாதம் கழிந்திருக்கும். ஒரு நாள் பசுவையும் கன்றையும் மேய்ச்சலுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டு வரும் வழியில் கோயிலுக்குச் செல்லும் நாராயணபிள்ளை வீட்டுப் பெண்கள் பசுவையும் கன்றையும் ஆச்சர்யமாகவும், காசியைக் கோபமாகவும் பார்த்துவிட்டுக் கிளம்பினார்கள். காசிக்கு அப்போதே ஏதோ ஒன்று உறுத்தியது. அடுத்த நாளே அவன் வீட்டிற்கு இரண்டு காவலர்கள் வந்தார்கள். நாராயணபிள்ளை வீட்டிலிருந்து பசுவையும் கன்றையும் திருடி வந்ததாகச் சொல்லி காசியின் மீது திருவிதாங்கூர் காவலர்கள் கேஸ் பதிந்தார்கள். காசி நடந்ததைச் சொல்லி பசு இப்போது தனக்குத்தான் உரிமைப்பட்டது என்று தீர்மானமாகக் கூறினான். காவலர்கள் அவனை அடிக்கத் துவங்கி, சிறையில் தள்ளினார்கள்.

இசக்கி பசுவையும் கன்றையும் கொடுத்து விடுகிறோம் என்று நாராயண பிள்ளையிடம் போய் சமாதானம் பேசினாள். அவர் தன் வீட்டுப் பெண்களின் பேச்சை மீறி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கைவிரித்துவிட்டார்.

கேஸ் முடியும் வரை காவலர்கள் பசுவையும் கன்றையும் பிடித்துப் போய் காவல்நிலையத்தில் கட்டி வைத்தார்கள். கரியனும் இசக்கியும் தினமும் காவல்நிலையத்திற்குப் போய் பசுவையும் கன்றையும் பராமரித்தார்கள். எந்த சங்கோஜமுமில்லாமல் தலைமைக் காவலர் தினமும் இலவசமாகத் தன் வீட்டிற்கு கறந்த பால் நாலு படிக்குக் குறையாமல் எடுத்துப்போனார். ஏழு நாள்கள் முடிந்து மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அவர் பசுவும் கன்றும் காசிக்குத்தான் உரிமையுடையது என்று தீர்ப்பு சொன்னார்.

ஆனாலும், அடுத்த மாதமே காசியும் இசக்கியும் வழக்கமாய்ப் போடும் ஒரு சண்டைக்கு அடுத்தநாள் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்த அதிகாலையில் காசி மாட்டையும் கன்றையும் பிடித்துக்கொண்டு போய் யாருக்கோ விற்றுவிட்டு எங்கோ பரதேசம் கிளம்பிவிட்டான்.எல்லோரும் பசுவினுடையதோ, கன்றினுடையதோ சுழிதான் இதற்குக் காரணமென்றார்கள்.

``பகலைவிட இருள் பாதுகாப்பானது. அங்கு அவர்கள் தாயின் வயிற்றுக்குள் இருப்பதைப்போல் உணர்கிறார்கள்.’’ - பராரிகள்

மகன்வழி(1977-மழைக்காலம்)

மகன் வழி சூரவேல்

ஆற்றில் கே.சி மர டிப்போகாரரின் ஆட்களிடமிருந்து தப்பித்து மழை ஈரம் சொட்டச் சொட்ட நிற்காமல் இருளுக்குள் ஓடினான். வெட்டவெளியில் முழங்கால் அளவு மட்டுமே மறையும் சிறு சிறு புற்களும் புதர்களும் மட்டுமே வளர்ந்திருந்தன... மறையக்கூட இடமில்லை.அவன் மிதித்து ஓடும் ஒவ்வொரு அடியிலும் ஈரம் ஒட்டியது. அவன் திரும்பிப் பார்க்கையில் நீளமும் வெளிச்சமுமான மின்னல் ஒன்று ஆற்றின் திசையில் வெட்டியது. அதன் வெளிச்சத்தில் ஆற்றின் மேட்டின் மேல் முன்பை விடவும் நிறைய மனிதர்கள் கும்பலாய் நிறைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் கொடூரமான ஆயுதங்கள் இருந்தன. அவர்களிடம் சிக்கிவிடக் கூடாது. மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடினான். நெடுந்தூரம் வந்துவிட்டான். மூச்சிரைப்பு நிற்கவில்லை. களைப்பில் வளர்ந்திருந்த காட்டுப் புற்களின் மீது படுத்தான். தூரத்தில் மிக நீண்ட வரிசை கொண்ட தென்னைகள் சூழ்ந்த வயல்வெளி இருந்தது. அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்குமென்று நம்பி அங்கு நுழைந்தான். அது உள்ளே போய்க் கொண்டேயிருந்தது. கணக்கிடமுடியாத அளவு தென்னைகள். இருளுக்குள் ஒன்றும் தெரியவில்லை. கட்டை விரலில் ஒரு கல் முட்டி சுருக்கென்று ஒரு வலி. அவன் கீழே குனிந்து பார்த்த பொழுது அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று பின் வேக வேகமாய் அடித்துக்கொண்டது.. கால்களின் கீழ் சுற்றுச் சுவர் இல்லாத பெரிய கிணறு. மெல்லப் பின்னோக்கி இரண்டு எட்டு வைத்து அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தான். மழைநீர் பெரிய பாதாளத்திற்குள் போய் விழுவதுபோல விழுந்துகொண்டிருந்தது. கால்களில் ரத்தக்கசிவு இருந்தது. எச்சில் தொட்டு வைத்தான். அதுவும் மழைநீரில் கரைந்து போனது.

ஏழு கடல்... ஏழு மலை... - 2

சிறிது நேரத்திற்குப் பின் கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது. மழை சிறிய தூறலாய் மாறியது. அந்த இடத்தை இரண்டு மூன்று முறை கழுத்தைச் சுற்றிப் பார்த்தான். அந்தக் கனத்த இருளுக்குள்ளிருந்து ஒரு சிறு கீற்று மஞ்சள் வெளிச்சம் வந்து அணைந்ததைப்போல் தெரிந்தது. அந்தத் திசை நோக்கிக் கூர்ந்து பார்த்தபடி ஜாக்கிரதை உணர்வோடு நடந்தான்.பத்தடி தூரம் நடக்கும்போதே பார்த்துவிட்டான். அங்கு ஒரு வீடிருந்தது. உற்று மிகுந்த கவனமாய்ப் பார்த்தால் மட்டுமே தெரியும்படி. வீட்டின் கூரை முழுக்கப் பச்சைக்கொடிகள் வளர்ந்து ஓடுகளின் நிறம் தெரியாமல் மூடியிருந்தது. ஆறேழு பலா மரங்களுக்கு நடுவில் பழைய ஆனால் உறுதியான கட்டடம் போலிருந்தது. மனிதர்கள் இல்லாத வீடாயிருக்க வாய்ப்புண்டு. வீட்டின் கதவுகள் பூட்டியிருந்தன. இடதுபுறம் சென்று திறந்து கிடந்த ஜன்னலின் வழியே பார்த்தான். இருள் அடைந்திருந்தது. அவன் காலுக்கருகில் அப்போதுதான் குடித்துத் தூக்கி எறியப்பட்ட சிகரெட்டின் புகை கசிந்துகொண்டிருந்து. இங்கு யாரோ இருக்கிறார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 2

``யாரு?’’ உள்ளிருந்து மனிதக் குரல் கேட்டது. ஓடிவிடலாமா என நினைக்கையில் வீட்டின் உள்ளிருந்து கதவைத் திறக்கும் சப்தம். அப்படியே நின்றான். எப்படியும் அறுபது வயதிருக்கும்படியான ஒரு தளர்ந்த மனிதர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் கையிலிருக்கும் டார்ச்சால் வெளிச்சத்தை சூரவேலின் முகத்திற்கு அடித்தார். வெளிச்சம் தாளாமல் அவன் கண்களைச் சுருக்கி, கழுத்தைக் குனிந்தான். மீண்டும் கேட்டார். ``யாரு?’’ அவனுக்கு நாக்கு ஒட்டிக்கொண்டு பேச வரவில்லை.

``நா...நான்...’’ தடுமாறினான். அவர் கையிலிருக்கும் ஊன்றுகம்பை இறுக்கமாய்ப் பிடித்தபடி எச்சரிக்கை உணர்வோடு அவனின் அருகில் நெருங்கி வரத் துவங்கினார். அவன் முகம் பயம் கவ்வி இறுகிக் கறுத்திருந்தது. ``நான்... இந்த ஊரோட கடைசி வீட்ல பொறந்தவன்.’’ அவர் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றார். ``கரியனின் மகனா..?’’ ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான். ``உங்க சாபமும் சேர்ந்து தாண்டா என்ன இங்க உக்கார வச்சிருச்சி’’ வெறுப்பும் அலுப்புமாய்ச் சொன்னார். சூரவேல் ஒன்றும் புரியாமல் பார்த்தான். ``உள்ள வா...’’ உள்ளே அழைத்துக்கொண்டு போனார். தீக்குச்சி உரசி விளக்கை ஏற்றினார். வீடு முழுக்கப் பழைய வெண்கல, பித்தளைச் சாமான்களாய் நிரம்பிக்கிடந்தது. ஒரு ஆள் உயரத்திலிருந்து வரிசையாய் முழங்கால் வரை இருக்கும் பித்தளை விளக்குகள், பெரிய பெரிய பானைகள், சமையல் பாத்திரங்கள், சட்டுவம், குத்து சட்டிகள்... நூற்றை நெருக்கி வகை வகையான கரண்டிகள் எல்லாம் வருஷகாலமாய் புழங்காமல் தூசும் அழுக்கும் படிந்திருந்தன. ``இப்போ சேர்ந்து உங்கவும் வாழவும் எனக்கு ஒரு மனுஷருமில்ல. நான் யாரு தெரியுமா? நாராயண பிள்ளை மகன் கேசவன். ஒரு காலத்தில இந்த ஊரோட பெரிய குடும்பங்களில் நாங்களும் உண்டு. உனக்குச் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. உன் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் என்னைத் தெரிஞ்சிருக்கும்... இரு’’ என்று சொல்லிவிட்டு, போய் ஒரு பெரிய பனைநார்க் கூடையைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து வைத்தார். அதைத் தரையில் வைக்கும்போது க்லங் க்லங் என்று பித்தளை சப்தம் கேட்டது. அதை மூடியிருக்கும் துணியைத் திறக்கையில் கூடை முழுக்க மாடுகளின் கழுத்தில் கட்டும் மணிகளாய் இருந்தன. சளேரென்று அதைத் தரையில் கொட்டி வேக வேகமாகத் தேடி ஒரு மணியை எடுத்தார். ``இந்தா... இது உங்க வீட்டு மணிதான். உங்க தாத்தாவும் கரியனும் எங்க வீட்ல சாகக் கிடந்த பசுவப் புதைக்கத் தூக்கிட்டுப் போகும் போது அது கழுத்துலேருந்து இதக் கழட்டிட்டுத்தான் குடுத்தோம். ஆனா கொஞ்ச நாள்ள பசுவப் பொழைக்க வச்சி, அது கன்னு தள்ளுனப்போ என் அப்பா மாட்டையும், கன்றையும் கேட்டு உன் தாத்தாவ போலீசு வச்சி மிரட்டுனார். போலீசு கொடும பொறுக்காம ஒரு நாள் கரியனும் அவன் அம்மாவும் வந்து குடும்ப வீட்டில் முறையிட்ட போதும், பசுவையும் கன்றையும் தந்துவிடுகிறேன் என்று கெஞ்சிய போதும் என் அப்பா நாராயண பிள்ளை மறுத்து விட்டார். வீட்டுப் பெண்களும் அவர்களை இழுத்துப் போய் வாசல் தாண்டி விடச் சொன்னார்கள். அன்னைக்கு அவள் வாசலில் வைத்து மண்ணள்ளித் தூற்றிய சாபம். வீட்டில் தொடர்ச்சியான நிறைய துர்மரணங்கள். கால்நடைகளும் சீக்கு வந்து தொடர்ச்சியாய் இறந்தன. ஒருசேர கறவை மாடுகளின் பால் சுரப்புகூடக் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது. எல்லா மாடுகளையும் விற்று, தொழுவம் காலியானது. இரண்டு மூன்று முறை வீட்டில் தொடர்ச்சியாக நகைகளும் பெரும் சொத்துகளும் களவுபோனது. அந்த வீட்டில் என்னால் வாழ முடியவில்லை. நிறைய பேர் வயிறெரிந்து போட்ட குல சாபம். என்னை இங்கு தனியாக இருத்திவிட்டது.’’

ஏழு கடல்... ஏழு மலை... - 2

சூரவேல் ``இந்த மணியை நான் எடுத்துக்கட்டுமா?’’ எனக் கேட்டான். கேசவனின் கவனம் வேறு எங்கோ இருந்தது. அவர் தன் காதுகளில் சரக் சரக்கெனத் தென்னஞ் சருகுகளில் நிறைய பேர் நடக்கும் சப்தத்தைக் கேட்டார்.

- ஓடும்