
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`சரியான பாதையில் செல்வதில் என்ன இருக்கிறது; தொலைந்துபோவதும், திசைமாறிப்போவதும்தான் அழகான பயணம்.’’ ~ பராரிகள்
தந்தை வழி (1951-பனிக்காலம்)
கொம்பையா ஜமீனிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது ``இன்னிக்கி ஒரு ராத்திரிக்கு மட்டும் உங்க ஜன்னலத் திறக்க வேண்டாம்’’ என்று சொன்னது பெரிதும் மனச்சஞ்சலமாய் இருந்தது. தனது அறை இருக்கும் கட்டடத்தை நோக்கி நடந்தார். வழியில் வைக்கோல் படப்பைக் கடக்கும்போது அவரின் கண்கள் அவரை அறியாமலேயே தொரட்டி செருகி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்தவாறே சென்றது. ஒரு முறை தலை உயர்த்தி மேலே ஜமீனின் மகன் ஜெயவீரனின் அறையைப் பார்த்தார். அவனது அறை விளக்கு ஏற்றப்படாமல் இருள் பிடித்துக் கிடந்தது. நாலெட்டு நடந்தவர் என்ன நினைத்தாரோ திரும்பி வைக்கோல் படப்பிருக்கும் இடத்திற்கு வந்து அந்த ஒற்றைத் தொரட்டி இருக்கிறதாவெனப் பார்த்தார். தொரட்டி அந்த இடத்தில் இல்லை. அவருக்கு ஒரு நிமிடம் பக்கென்றிருந்தது. அறையில் கரியன் தனியாக இருப்பது ஞாபகம் வரவே அறை நோக்கி வெருக் வெருக்கென வேகமாக நடந்தார்.
அறையை நெருங்குவதற்கு முன்னமே ``கரியா... லே... கரியா’’ என்று அழைத்துக் கொண்டே வந்தார். அவர் அறைக்கு வந்து சேர்ந்தபோது கரியன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். பட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டான். ``தூங்கிட்டேன்யா...'' ``செரி செரி படுத்துக்கோ. விடிகாலையில வெரசாக் கிளம்பணும்.’’ கரியன் மீண்டும் படுத்துக் கொண்டான். இரண்டு தொடைகளுக்குள் கரங்களைப் புதைத்துக்கொண்டு குளிருக்குக் குன்னிக்கொண்டு படுத்திருந்தான். அறையின் மூலையில் கிடந்த சாக்கை உதறி எடுத்து வந்து அவன் மேல் போட்டார். குளிருக்கு சாக்குதான் போர்த்திக்கொள்ள வசமாய் இருந்தது. அந்த அறைக்குள் சிறிய கிளியாஞ்சட்டி விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டே எல்லா ஜன்னல்களின் வழியேயும் போய் ஒரு பார்வை சுழற்றிப் பார்த்தார். ஜன்னலைச் சாத்திக்கொள்ளலாமா என நினைத்தார். `இருக்கட்டும், இன்னிக்கி முழிச்சிருந்து யாருன்னு பார்த்திடலாம்’ என்று தீர்மானமாய் நினைத்துக்கொண்டார். கரியன் அறையின் நடுவே படுத்திருந்தான். எந்த ஜன்னலின் வழியே தொரட்டியை விட்டாலும் அவன் உடலைக் கொத்தி இழுத்துவிட முடியும். `விபரீதத்தோடு விளையாட வேண்டாம். பேசாமல் ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டுத் தூங்கலாம்’ என்று மீண்டும் தோன்றியது. மடியில் ஒரு கட்டு சுருட்டும். ஒரு முழுத் தீப்பெட்டியும் இருந்தன. இரவெல்லாம் முழித்திருக்க அது போதும் என்று நினைத்துக்கொண்டே சுவரில் முதுகு சாய்த்து அமர்ந்துகொண்டார். அவரின் வலதும் இடதுமாக நான்கு நான்கு ஜன்னல்களிருந்தன.
வேங்கடம், பண்டுவரின் வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டு நெடுநேரமாய் நின்றான். `இந்த ஜாமத்துல யாரா இருக்கும்?’ என்று மனசுக்குள் கேள்வியோடு ``யாரு... இந்தா வாரேன்’’ என்று சப்தம் கொடுத்தபடி மரக் கதவின் தாழ்ப்பாளை நீக்கினார். வேங்கடம் கையில் கிழிந்த வேஷ்டியைப் பிடித்தபடி நின்றான். கைவிளக்கை வேங்கடத்தின் முகத்திற்கு நேராகப் பிடித்தவாறு ``வேங்கடம்.என்ன இந்த நேரம்... உடம்புக்கு ஏதும் சரியில்லையா, என்னாச்சி?'' என்று கேட்டார். வேங்கடம் ஒன்றும் பேசாமல் கிழிந்த வேஷ்டியை அவர் முன்னால் நீட்டினான். ``இதுல சீழ்பிடிச்ச, ரத்த வாட வருது, யாருக்கோ தொடையில பட்ட காயம்னு நினைக்கேன். ஏதும் வெட்டுக்குத்துக் காயமா இருக்கும். நீரு யாருக்கும் நாட்பட்டு சீப்பட்ட காயத்துக்கு வைத்தியம் பாக்குதீரா... எனக்கு இந்த வேஷ்டி யாரோடதுன்னு தெரிஞ்சிக்கணும்.’’
பண்டுவர் அந்தக் கிழிந்த வேஷ்டியை வாங்கி தன் மூக்கின் அருகில் கொண்டு வந்து மோந்துபார்த்தார். முகத்தைச் சுளித்தபடி சொன்னார்.
“இது ஆயுதம் பட்ட காயம் இல்ல. சிலந்தி கட்டி பழுத்து வெடிச்சி ரத்தமும் சீழ்த்தண்ணியுமா வடிஞ்சிருக்கு.''

``ம்... இப்போ நம்மூர்ல யாருக்காவது சிலந்தி கட்டி வந்து பண்டுவும் பாக்க வந்தாங்களா?''
``நீ எதுக்குக் கேக்குறன்னு சொல்லு... நான் சொல்லுதேன்.’’
வேங்கடம் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு அழுதபடியே சொன்னான், ``எனக்கொண்ணும் வெக்கம் இல்லங்க. காளி என்ன அவன் பொண்டாட்டி மாதிரிதான் நடத்துனான். ஊருக்குள்ளயும் இது தெரிஞ்ச விஷயம்தான். காளி அவனா சாகலைங்க. யாரோ அவனக் கொன்னுதான் மரத்துல தொங்கவிட்ருக்காங்க. சாகும்போது இந்த வேஷ்டிலதான் தொங்கியிருக்கான். இது அவன் வேஷ்டி கிடையாது.’’ பண்டுவர் வேங்கடத்தின் முகத்தைப் பார்த்தபடியே நின்றார். அவருக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. சொன்னால் தனக்குப் பொல்லாப்பு வந்துவிடும் என்று பயந்தார். ஆனாலும் வேங்கடத்தின் கண்ணீரைப் பார்க்கப் பார்க்க அவர் கரைந்துகொண்டே வந்தார். ``பண்டுவரே உமக்குத் தெரியும்ல... உம்ம கால்ல விழுந்து கேக்கேன் சொல்லும்’’ அழுதபடியே கையெடுத்துக் கும்பிட்டான்.
``வேணாம் வேங்கடம், இத விட்டுரு. இனிமே நடக்குறத நல்லபடியா பாத்துக்கலாம். கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும். இரு கொஞ்சம் சாராயம் தாரேன், குடிச்சிட்டு ஆத்தோரமாப் போயி துக்கம் தீர அழுதிட்டு நாலு முங்கு முங்கி எந்திரிச்சிட்டுப் போ. கவலப்படாத. அவங்களுக்கு கடவுள் தண்டன குடுப்பான்.’’
வேங்கடம் கொஞ்சம் கோபமும் மூர்க்கமுமாய்க் கேட்டான். ``அப்போ உமக்கு ஆள் யாருன்னு தெரியும். ஆனா சொல்ல மாட்டிக, அப்படித்தான?’’
``இல்ல வேங்கடம். நாளபின்ன எனக்குப் பொல்லாப்பு வரும். இந்தச் சின்ன ஊர்ல பெரிய மனுஷங்கள பகையாளியாக்கிட்டு இங்குன வாழ முடியுமா, சொல்லு?’’
``வீட்டு வாசலுல வேப்பங்கொல தொங்குன மாதிரி உம்ம மகன யாராவது இப்படி மரத்துல சுருக்குப் போட்டுத் தொங்கவிட்டா உம்ம மனசு எப்படிப் பாடுபடும், சொல்லும்?''
பண்டுவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். ``நிச்சயம் இது ஜமீன் மகன் ஜெயவீரன் வேஷ்டிதான். அவனுக்குத்தான் காலுல சிலந்தி கட்டி பழுத்து வெடிச்சிருக்கு. நான்தான் பண்டுவம் பாத்தேன். ரெண்டு நாளைக்கி முன்னாடிதான் கட்டி உடஞ்சு சீழ் வடிஞ்சது. அது தவர இந்த ஊர்ல 80-ம் நம்பர் நூலுல ஜக்கம்பட்டி வேஷ்டி கட்ற ஆளு யாரு இருக்கா, சொல்லு... நிச்சயம் ஜெயவீரன்தான். நாஞ் சொன்னேன்னு யாருகிட்டயும் சொல்லிப்புடாத செரியா...’’ அவர் தன்னுடலை உள்ளுக்கிழுத்துக்கொண்டு கதவடைத்தார்.

வேங்கடம் சந்தேகப்பட்டது சரிதான். முதலிலிருந்தே அவனுக்கு ஜமீன் வீட்டு ஆட்கள் மேல்தான் சந்தேகமிருந்தது. ஜெயவீரனை நினைக்கும்போதே ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஜமீன் பங்களா நோக்கி ரௌத்திரத்தோடு நடந்தான்.
கொம்பையாவிற்குத் தூக்கச் சடவாய் இருந்தது. சுவரில் முதுகைச் சாய்த்தபடி அமர்ந்தவாறே உறங்கிவிழத் துவங்கினார். நாலைந்து முறை கழுத்து தானே கீழே கீழே சரிந்து பின் திடுக்கிட்டு விழித்து அமர்ந்தபடியிருந்தார். உறக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்று முயன்று தோற்றார். ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்து நன்றாக உறங்கத் துவங்கி விட்டார்.
அதே நேரம் இடது பக்கத்து மூன்றாம் ஜன்னலின் வழியாக ஒத்தைத் தொரட்டி அறைக்குள் நுழைந்து ஏதாவதொரு கழுத்தைத் தேடிக்கொண்டிருந்தது. நிச்சயம் அதன் நோக்கம் கொம்பையாவின் கழுத்துதான். ஆனால் இப்போதைக்கு சிக்கும் எந்தக் கழுத்தையும் அது அறுத்துவிடும் ரத்தப்பசியிலிருந்தது. மஞ்சள் விளக்கின் ஒளியில் ஒருக்களித்துப் படுத்திருக்கும் கரியனின் உடலின் மேல் தொரட்டியிலிருக்கும் குறு அருவாளின் நிழல் கருமையாகவும் பெரிதாகவும் ஆடியபடி தெரிந்தது.
ஜமீன் வீட்டுக் கோட்டைச் சுவருக்குள் யாரோ குதிக்க, மைதானமெங்கும் அவிழ்த்து விடப்பட்ட வேட்டை நாய்கள் பலம்கொண்ட மட்டும் சப்தமாய்க் குரைத்தபடி இருளுக்குள் நிற்கும் அந்த உருவத்தை நோக்கிப் பாய்ச்சலோடு ஓடத் துவங்கின.
நாய்களின் குரைப்பொலியில் கொம்பையா திடுக்கிட்டு விழிக்கவும், தொரட்டியின் முனையில் ஏற்கெனவே ஒட்டியிருந்த ரத்தத்தின் ஒரு துளி கரியனின் முகத்தில் குளுமையாய் விழவும் சரியாக இருந்தது. கொம்பையா ``ஓய்... யேய்’’ என்று அதட்டலோடு சப்தம் கொடுக்க, கரியனும் விழித்த நேரத்தில் உருண்டு நகர்ந்தான். தொரட்டியின் கூர்மை தோற்றுப்போய் தரையைச் சுரண்டிக்கொண்டு சரசரவென ஜன்னலின் வழியே தன்னை இழுத்துக்கொண்டு மறைந்தது. விளக்கின் வெளிச்சத்தில் தொரட்டியின் முனையில் புது ரத்தத்தின் பளபளப்பை கொம்பையா பார்த்தார்.
கோயிலின் உச்சிப் படிக்கட்டில் இருளுக்குள் அமர்ந்தவாறு தனது வீட்டின் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜெயவீரனின் கால்களை வேங்கடம் பின்னாலிருந்து வந்து பிடித்து இழுத்தான்.
ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் கரியனின் குரல்வளை அறுக்கப்பட்டிருக்கும். அவருக்கு வியர்த்துவிட்டது. ஓடிச் சென்று ஜன்னலின் வழியே பார்த்தபோது அங்கு யாருமேயில்லை. தூரத்தில் நாய்களின் குரைப்பொலி சப்தம் தேய்ந்து அடங்கிக்கொண்டிருந்தது. கொம்பையா முதல் ஜன்னலுக்கு அருகில் நின்று மைதானத்தைப் பார்த்தார். தூரத்தில் எல்லா நாய்களும் ஒரே இடத்தில் குவிந்து நின்றுகொண்டிருந்தன.கொம்பையா அறையின் கதவைத் திறந்துகொண்டு மைதானத்திற்குப் போகலாமா என நினைத்தார்.கரியனின் உயிருக்காகவாவது சிறிது நேரம் அமைதியாயிருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டார். ஜன்னலின் வழியே வானத்தைப் பார்த்தார், இன்னும் சிறிது நேரத்தில் விடிவெள்ளி முளைத்துவிடும். இந்த ஊரை விட்டுக் கிளம்பிப் போய்விட வேண்டுமென்று நினைத்துக்கொண்டார்.
மைதானத்தில் வேட்டை நாய்கள் சேலை உடுத்திப் பொட்டிட்ட வேங்கடத்தை அடையாளம் காண முடியாமல்தான் குழம்பிக் குரைத்தன. இப்போது அருகில் வந்ததும் வேங்கடத்தின் உடல் வாசனையை நன்கு மோந்தபடி அவன் கால்களைச் சுற்றி உரசிக்கொண்டு நின்றன.
கரியன் அப்போதுதான் கீழ்ப்பார்வையாக ஜன்னலின் கீழே எக்கிப் பார்த்தான். ஜெயவீரன் அங்கு கையில் தொரட்டியோடு சுவரோடு சுவராகப் பதுங்கி நின்றுகொண்டிருந்தான். கரியன் கொம்பையாவை சைகையால் ஜன்னலின் கீழே பார்க்கச் சொன்னான். ஜெயவீரன் நிமிர்ந்து மேலே பார்க்கவும், கொம்பையா கீழே குனிந்து அவன் முகத்தைப் பார்க்கவும் சரியாக இருந்தது.
ஜெயவீரன் இப்போது தொரட்டியோடு தன் வீட்டின் பின்பக்கக் கோட்டைச் சுவர் நோக்கி ஓடினான். கால்களை அகட்டியவாறு தாங்கித் தாங்கி ஒரு உருவம் கொல்லை நோக்கி ஓடுவதை தூரத்திலிருந்து கண்ட வேங்கடம், அது நிச்சயம் ஜெயவீரன்தான் என்று அடையாளம் கண்டு சேலையை முழங்கால் வரை தூக்கிப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே விரட்டி ஓடினான். கொம்பையா இப்போது வலது பக்கமிருக்கும் ஜன்னல் பகுதிக்கு வந்து கோட்டைச் சுவரைப் பார்த்தார். பெரும் ஆவேசத்தோடு சேலை கட்டிய முரட்டு உடலொன்று ஒரே தாவலில் அவ்வளவு பெரிய கோட்டைச் சுவரைத் தாண்டிக் குதித்து ஓடுவதைப் பார்த்தார்.
அதே நேரம் பெரிய ஜமீனின் அறை இருக்கும் பகுதியிலிருந்து யாரோ பெருங்குரலெடுத்து ``ஐயோ’’ என்று உடைந்து அழும் சப்தம் கேட்டது. அதன் தொடர்ச்சியாய் அந்த சப்தங்கள் இரண்டாய் மூன்றாய் பெருகத் துவங்கியது. அங்கு ஒவ்வொரு அறையிலும் விளக்குகளின் திரிகள் பெரிதாய்த் தூண்டப்பட்டு எல்லா இடமும் மஞ்சளாய் மாறத் துவங்கியது. வேலையாட்கள் எல்லா திசைகளிலிருந்தும் தீப்பந்தங்களோடும், கை விளக்குகளோடும் ஜமீனிருக்கும் இடத்தை நோக்கி வரத் துவங்கினார்கள். அந்த இடமே திடீரென பரபரப்பாய் மாறத் துவங்கியிருந்தது.
கொம்பையா, கரியனை அழைத்துக்கொண்டு ஜமீனின் அறை இருக்கும் பெரிய கட்டடத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். மைதானத்தில் அழுதபடி ஓரிரண்டு வேலையாட்கள் அவரின் எதிரே ஓடி வந்தபடியே கொம்பையாவிடம் ``அய்யா பெரியவர யாரோ கழுத்தறுத்துக் கொன்னுட்டாங்கய்யா’’ சொல்லிக்கொண்டே அவர்கள் தலையிலடித்து அழுதபடி வேகமாய் உள்ளே ஓடினார்கள்.
ஒரு சிலர் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு எல்லா திசைக்கும் கிளம்பினார்கள். ``அவன் யாருன்னு தேடிக் கண்டுபிடிச்சுக் கொல்லுங்க’’ யாரோ ஒருவன் கோபமும் ஆவேசமுமாய்க் கட்டளையிட்டான். கொம்பையாவிற்கும் கரியனுக்கும் கழுத்தறுத்தவன் யாரெனத் தெரியுமென்றாலும் அவர்கள் ஏதும் சொல்வதற்கில்லை. கரியனிடம் ``எதுவும் மூச்சு விட்றாத’’ என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். யாரோ ஒருவர் ஜெயவீரனின் அறைக்கதவைப் பதற்றமாகத் தட்டியபடியிருந்தார். ``அய்யா நம்ம பெரிய ஜமீன யாரோ கொன்னுட்டாங்கய்யா... கதவத் திறங்கய்யா... அய்யா...’’
கொம்பையா பெரியவரின் அறைக்குப் போய் ஆட்களை விலக்கிவிட்டுப் பார்த்தார். பெரியவர் தனக்கு இறப்பு நேரிட்டால் என்னென்ன காரியங்கள் செய்யவேண்டுமென்பதையும், பிரிக்கப்படாத எஞ்சிய சொத்துகளையும் நகைகளையும் யார் யாருக்கு எவ்வளவு எனவும் இப்போது கொஞ்ச நேரம் முன்பு நள்ளிரவு வரை தன்னை எழுதச் சொன்னதாகக் கணக்கர் கொம்பையாவிடம் சொன்னபடியே அந்தக் காகிதங்களைக் காட்டினார். ``ஜன்னல மூடவான்னு கேட்டப்பக்கூட, `வேணாம். எல்லா ஜன்னலையும் நல்லா தெறந்து விடுங்க’ன்னு சொல்லிட்டாரு. அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு’’ என்று சொன்னார்.
ஜெயவீரன் செடி செத்தைகளுக்குள் ஓடி ஊரின் மேற்குத் திசையில் சிறு குன்றின் மேலிருக்கும் குமாரசாமி கோயிலுக்கு ஏறிவிட்டான். அதன் மேலிருந்து ஊர் முழுக்க தெள்ளத்தெளிவாய்த் தெரிந்தது.
ஊருக்குள் பதற்றமாய் ஓரிரு ஜனநடமாட்டம் தெரிந்தது. பின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மெல்ல மெல்ல சிறு சிறு மஞ்சள் வெளிச்சங்கள் தெரியத் துவங்கி. ஜனங்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பந்தங்களோடும் விளக்குகளோடும் வெளியேறி பங்களாவை நோக்கிச் செல்வது தெரிந்தது.
தன் வீட்டில் மொதுமொதுவென எங்கிருந்தெல்லாமோ சூழும் மஞ்சள் விளக்குகளைப் பார்க்கையில் அவனுக்கு ஒரே நேரத்தில் சிரிக்கவும் அழவும் வேண்டும் போலிருந்தது. ஆனால் முந்திக்கொண்டு அழுகைதான் வந்தது. ``ஐயோ அப்பா... உன்னக் கொன்னுட்டேனே... உன்னக் கொன்னுட்டேனே...'' என்று முனகியபடியே சிறிய குரலில் அழத் துவங்கினான். ``மொத்த சொத்தையும் எனக்குக் கொடுத்திருக்க வேண்டியதுதான... நாயே... நாயே. வந்தவன் போனவனுக்கெல்லாம் குடுத்தா சும்மாவா இருப்பேன்’’ நறநறவென்று பல்லைக் கடித்தான். பின் மீண்டும் அழத் துவங்கினான். ``அப்பா...’’
அவன் காதுக்கு ஒரு வார்த்தையும் வந்து சேரவில்லை. அவன் காதுக்குள் பல நாள்களாக வேம்பு ``சூரா... சூரா’’ என்று அழைக்கும் சப்தம்தான் கேட்டுக்கொண்டேயிருந்தது.
கோயிலின் உச்சிப் படிக்கட்டில் இருளுக்குள் அமர்ந்தவாறு தனது வீட்டின் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜெயவீரனின் கால்களை வேங்கடம் பின்னாலிருந்து வந்து பிடித்து இழுத்தான். திடீரெனத் தன் கால்களை ஒரு பெண் பிடித்து இழுப்பதைக் கண்டு அவனுக்கு ஏதும் ஓடவில்லை. சுதாரித்து அருகில் கிடக்கும் தொரட்டியை எடுக்க வருவதற்குள் வேங்கடம் தொரட்டியை ஓங்கி எத்திவிட்டான். தொரட்டி கல் படிகளில் சிறிது நேரம் சரிந்து சரிந்து எங்கோ கீழே போய் விழுந்தது. ``காளிய ஏண்டா கொன்ன?’’ என்ற ஆண் குரல் கேட்டதும் அவனுக்கு தன் கால்களைப் பிடித்திருப்பது வேங்கடம்தான் என்பது நன்றாகத் தெரிந்தது. பற்களைக் கடித்தபடி கோபமாய்ச் சொன்னான் ``என் அப்பன்கூட சேந்துக்குற எல்லாத்தையும் அப்படித்தான் கொல்லுவேன். பேடிப்பயலே, கால விடுறா.’’
வேங்கடம் ``காளீளீளீ...’’ என்று ஆவேசமாய்க் கத்தியபடியே ஜெயவீரனின் கால்களைப் பிடித்து இழுத்தபடி அந்தக் கல்படிக்கட்டுகளில் விறுவென இறங்கினான். டங் டங் டங்கென்று அவன் தலையும் உடலும் கல் படிக்கட்டுகளில் வேகமாக அடித்துக்கொண்டே வந்தன. அறுபது, எழுபது படிகள் வரை ஜெயவீரன் கத்திக்கொண்டே வந்தான். பின் சப்தம் தேய்ந்து அடங்கி அமைதியாக எந்த எதிர்ப்புமில்லாமல் அந்த உடல் வந்தது. கடைசிப் படியான இருநூற்றி ஆறாம் படியில் உயிரற்ற அந்த உடலை அப்படியே போட்டுவிட்டு வேங்கடம் குருமலைக் காட்டுக்குள் ``காளீ... காளீ....காளீ... காளீ’’ என்று மந்திரம்போல உச்சரித்தபடி இரவு, பகல்... இரவு,பகலென... நடந்து போய்க்கொண்டேபோய்க்கொண்டே போய்க்கொண்டே யிருந்தான்.
‘`நாடோடி எப்போதும் இறப்பதில்லை. அவன் கால்கள் நின்றுபோன இடத்திலிருந்து வேறொருவன் அவன் பயணத்தைத் துவக்குகிறான்.’’
~ பராரிகள்
மகன் வழி ( 1977 - மழைக்காலம்)

மறுநாள் அதிகாலை சூளையின் வாசலில் பாரப்பட்டிக்காரனின் கார் சப்தம் கேட்ட அந்த நொடி வேம்பு சூரனை இறுக்கமாகத் தழுவிக் கொண்டாள். அவன் முகமெல்லாம் முத்திட்டாள். சூரன் அவள் முகத்தை இமைக்காது பார்த்தபடியிருந்தான். அவன் மூக்கு விம்மி விம்மி அடங்கியது. ``புண்ணியமாப்போகும், நான் போனதுக்கப்புறமா அழுதுக்கோயேன்’’ அவள் கிளம்பி நாலெட்டு நடந்தபின் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். சூரன் அப்போதும் அவளை உறைந்து பார்த்தபடியிருந்தான். இன்னொரு முறை பாரப்பட்டிக்காரன் ஹாரன் சப்தம் கொடுத்த போது வேம்பு குதித்து ஓடினாள். மயிலாத்தா கோயிலில் நின்று அவசர அவசரமாக சாமி கும்பிட்டுவிட்டு கார் நோக்கி வந்தாள். சூளை ஆட்கள் அவளின் துணிமணி புழங்கு சாமான்களை காரில் கொண்டு போய் வைத்துக்கொண்டிருந்தார்கள். வேம்பு கடைசியாக பன்றியைக் கட்டிப்போட்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தாள். பன்றி கட்டியிருந்த கம்பில் ஒரு கயிறு மட்டும் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. வேம்பு சுற்றி நின்றவர்களிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள். கார் சூளையை விட்டு வெளியே செல்லத் தொடங்கியது. சூரன் மாங்காட்டுக்குள்ளிருந்து தனது கொக்கரையை பெரும் சப்தமெடுத்து ஊதினான். மிகப் பெரிய அழுகையொலி போலிருந்தது அது. காரில் போய்க்கொண்டிருக்கும் வேம்புவிற்கும் கொக்கரை ஓசை கேட்கத் துவங்கியது. வேம்புவிற்கும் அழுகை அழுகையாய் வந்தது. பாரப்பட்டிக்காரனிடம் ``சித்தப்பாவ பாக்கணும், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக முடியுமா?’’ என்று கேட்டாள்.

சூரனுக்கு வேம்பு இல்லாத இந்த வாழ்க்கையை என்ன செய்வதென்று தெரியவில்லை. மேற்கொண்டு சூளையில் இருக்கவும் அவனுக்கு விருப்பமில்லை. மீண்டும் நாடோடியாக கால் போன போக்கில் இலக்கில்லாமல் கிளம்பினான். வழியில் சில லாரிகள் நிறுத்தி ஏற்றிக்கொண்டு எங்கு போகிறதோ அங்கு இறக்கி விட்டன. எதிலும் மனசு ஒட்டவில்லை. கஷ்டமாயிருக்கும் நேரங்களில் கொக்கரையை எடுத்து ஊதினான். கோயில்களில் உண்டு வீதிகளில் தூங்கினான்.

இறுதியாக யாரோ கை காட்டினார்களென்று மெட்றாஸ் தாண்டி பாண்டேஸ்வரம் சூளைக்கு வந்து சேர்ந்தான். பாண்டேஸ்வரம் சூளைகள் மிகப் பெரிதாய் இருந்தன. அங்கு ஒரு சூளையில் ஐந்து அல்லது ஆறு அடுப்புகள் இருந்தன. சவுடு மலைபோல் குவிந்து கிடந்தது. ஒவ்வொரு சூளையிலும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக முந்நூற்றுக்கும் மேல் ஆட்கள் இருந்தார்கள்.அவர்களுக்கு அங்கேயே தங்குவதற்கு தகரக் கூரை வேயப்பட்ட வீடுகள் வரிசையாக இருந்தன. பாண்டேஸ்வரத்திலிருந்து ஆந்திர எல்லை வரை இதேபோல் ஆயிரத்திற்கும் மேல் சூளைகள் இருப்பதாகச் சொன்னார்கள். சூரன் வேலை கேட்டு வந்திருக்கும் புதிய ஆட்களோடு வரிசையில் உட்கார்ந்திருந்தான். பெரும்பாலும் சூளை ஏசண்டுகள் ஆட்கள் யார் வந்தாலும் கழிப்பதில்லை. வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சூரன் தன் பெயரைப் பதிவு செய்துவிட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட தகரக் கொட்டகைக்கு வந்தான். அவனுக்கு எதிலும் மனம் நிலைக்கவில்லை. இன்னமும் மனசெல்லாம் வேம்புதான் அமர்ந்திருந்தாள். ஆட்கள் அங்குமிங்கும் வேலைபார்த்தபடி அலைந்துகொண்டிருந்தார்கள். ஒரு முகமும் அவன் மனதிற்குள் பதியவில்லை.
புதிய சூளையின் தகரக் கொட்டகையில் பொருள்களை வைத்துவிட்டு முகம் கழுவப் போகலாமென்று தண்ணீர்த் தொட்டிக்கு வந்தான். இரண்டு கைகளிலும் அள்ளி நீரை முகத்தில் அடித்தான். நெடுநாள்களுக்குப் பிறகு குளிர்ந்த நீர் அவன் முகத்தில் பட்டதும் உடம்பே சிலிர்த்தது. அள்ளி அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டான். நெடுநாள்களுக்குப் பிறகு உறங்கி எழுபவனைப்போல் இருந்தது. என்ன நினைத்தானோ, அங்கிருந்த நீர்த்தொட்டிக்குள் இறங்கி நாலைந்து முறை முங்கி முங்கி எழுந்து ஈர உடையோடு கொட்டகைக்கு நடந்தான். எல்லோரும் திட்டினார்கள், ``எல்லா ஆட்களும் குளிக்க வச்சிருக்க தண்ணில உள்ள இறங்கிக் குளிச்சிருக்கான் பாரு அறிவுகெட்டவன்.'' அவன் காதுக்கு ஒரு வார்த்தையும் வந்து சேரவில்லை. அவன் காதுக்குள் பல நாள்களாக வேம்பு ``சூரா... சூரா’’ என்று அழைக்கும் சப்தம்தான் கேட்டுக்கொண்டேயிருந்தது.
தகரக்கொட்டகைக்குள் நுழையும்போதுதான் அவனுக்கு ஏதோ பட்டது. தன்னை யாரோ நெடு நேரமாகப்பார்த்துக்கொண்டிருப்பதைப்போல் உணர்ந்தான். உண்மைதான். அவனை நெடுநேரமாக ஒரு பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.
~ ஓடும்