
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
தந்தை வழி (1951-பனிக்காலம்)‘`
பயணி தன் ஒரே வாழ்வில் நூறு வாழ்வை வாழ்கிறான்.’’
~ பராரிகள்
கொம்பையாவும் கரியனும் ஜமீன் வீட்டிலிருந்து விருதுநகருக்குக் கிளம்பினார்கள். வழியில் காடுகரையிலிருந்து விளைச்சல் தானியங்களை எடுத்துக் கொண்டு கோவில்பட்டி பேட்டைகளுக்குச் செல்லும் பார வண்டிகள் நிறைய வந்தன. கொம்பையாவும் கரியனும் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டி கிளம்பி மயிலோடை தாண்டியிருக்காது. தூரத்தில் சவேரியார்புரத்து தேவாலய மணி இடைவிடாமல் அடிக்கும் ஓசை மெலிந்து கேட்டது. வண்டிக்காரர்தான் சொன்னார். ``வயதான கன்னியாஸ்திரீ ஒருத்தங்க தேவாலயத்துல இருந்தாங்க. நேத்து ரெம்ப முடியாமப் போச்சி... பாவம் சீவன் போயிடுச்சி போல...'' கொம்பையாவுக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. கழிந்த வாரம்தான் சவேரியார்புரத்தில் அந்த வேதக்காரம்மாவைப் பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது... ``கூன் விழுந்து ஒரு அம்மா இருந்தாங்களே அவுகளா?'' வண்டிக்காரரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். ``ஆமா.''
தன் காலின் மச்சத்தை வைத்து இத்தனை வருடம் கழித்தும் அடையாளம் கண்டுகொண்ட அந்த வேதக்காரம்மாவின் தரைபார்த்து கூன் விழுந்த முதிய உடல் நினைவுக்கு வந்தது. இப்போது வரை அந்த அம்மாவின் பெயர் தெரியவில்லை. வண்டிக்காரரிடம் கேட்டார். வண்டிக்காரர் சட்டென்று சொன்னார், ``சலேத்தம்மா.’’
1913 - வேனல் காலம்
( பிரிட்டிஷ் இந்தியா )
கொம்பையாவிற்குத் தன் அம்மா அன்னத்தாயின் உருவம் நினைவுகளாய் மேலெழும்பி வந்தது. அந்த நாளும் நினைவுக்கு வந்தது. கொம்பையா பிறந்ததிலிருந்து எட்டு வயது வரை அம்மாவை இப்படியொரு உக்கிரமாய்ப் பார்த்ததேயில்லை... அவள் எப்போதும் அப்பனின் எல்லாத் தவறுகளையும் பொறுத்துக்கொள்பவள். கொஞ்சம்கூட முகம் கோண மாட்டாள். வெறுப்பு காட்ட மாட்டாள். சிறு முனங்கல்கூட இருக்காது. எல்லாவற்றையும் அமைதியான முகத்தோடு எதிர்கொள்வாள். ஊரில் எல்லோரும் சொல்வார்கள். ``அன்னத்தாய் பொறந்த வீடு எப்பேர்ப்பட்ட குடும்பம்...அன்னத்தாய் கல்யாணத்துக்கு எத்தன சீர் வரிச, அன்னைக்கி தண்ணி இல்லாத பெரிய கம்மா முழுக்க சீர் எடுத்திட்டு வந்த பார வண்டியும், அவுக வீட்டு வில்லு வண்டியும்தான் நின்னுச்சி. சீர் எடுத்திட்டு வந்த வண்டியே எப்படியும் நாப்பது வண்டிக்கி நின்னது. ஆனா உங்கப்பன் மாயாண்டி வீட்டுல நாலு வண்டி சீர் வெக்கக்கூட இடமில்ல... ஊர் அடைக்க தென்னம்பந்தல் போட்டு மொத்த ஊர் சனத்துக்கும் மூணு நா அரிசிச் சோறும், கடாக்கறியும் போட்டு அந்த அழகு பெத்த பிள்ளைய இப்படி இவனுக்குக் கட்டிக் குடுத்துட்டுப் போனாங்க. கல்யாணம் முடிச்சிக் குடுத்திட்டு பொண்ணு வீட்டு சனமெல்லாம் அவக அவக வீட்டுக்குள்ளகூட போயிருக்காது. மாயாண்டி கூத்தியா வீட்ல போயி கிடந்தான்.’’ ஊர் சனமெல்லாம் அன்னத்தாயைப் பற்றிப் பேசும் பொழுது மனம் நொந்து பேசுவார்கள்.

அன்னத்தாயின் அப்பா பொண்ணுக்கு பெரிய மெத்த வீடு கட்டிக்கொடுத்திருந்தார். மலையாள தேசத்திலிருந்து நல்ல கருந்தேக்கு உருட்டு வாங்கி இந்தத் தைமாதம் ஆரம்பித்து அடுத்த இரண்டு வருடம் கழிந்து தை மாதம் வரை மர ஆசாரி வேலை நடந்தது. அன்னத்தாய் எல்லா வருடமும் தவறாது கர்ப்பமடைந்தாள். வரிசையாய் எல்லாப் பிள்ளைகளும் பிறந்து பிறந்து இறந்துபோனது. குலதெய்வத்திற்கு நேர்ச்சை வைத்து கொம்பையா ஆறாவதாகப் பிறந்தார். அதன் பிறகும் ஒரு பெண்பிள்ளை மட்டும் பிறந்து அதுவும் பருவத்தில் காமாலை கண்டு இறந்துபோய்விட்டது. ஒத்தையாய் வளர்ந்த கொம்பையாவை மொத்த ஊர் சனமே சீராட்டி வளர்த்தது.
மாயாண்டி சுத்துப்பட்டு தாசிப் பெண்களின் உடல்கள் அலுப்புத்தட்ட, சீராய்க் குடுத்த வில்வண்டியில் மைனர் போல கிளம்பி அடிக்கடி அருகிலிருக்கும் மதுரைக்குப் பெண்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தான். அன்னத்தாயின் கழுத்தில் கிடந்த நகைகள் ஒவ்வொன்றாய் மதுரையிலிருக்கும் தாசிப் பெண்களின் கழுத்திற்கு இடம் மாறிக்கொண்டிருந்தது. அன்னத்தாய் கழற்றிக் கொடுக்காவிட்டால் மாட்டை அடிக்கும் சாட்டைக் கம்பால் கன்னாபின்னாவென்று அடிக்கத் துவங்குவான். அவள் அழுகை சப்தம் வெளியே கேட்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பாள். பல நாள்கள் மாயாண்டி வீட்டுக்கு வராமல் இருந்தாலே மிகவும் சந்தோஷமடைந்தாள். அன்னத்தாய் கும்பிட்டுக் கேட்டுக் கொண்டதற்காக அவளின் அப்பாவும், அண்ணன்களும்கூடப் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சாயுங்காலமும் மாட்டு வண்டிகள் பத்தி விடாவிட்டாலும் அதுவாகவே கிளம்பி தாசி வீடுகளின் வாசலில் போய் நிற்கும் அளவிற்கு மாடுகளுக்குப் பழக்கமாகிவிட்டது.
அன்னத்தாய் கொம்பையாவை எப்போதும் தன் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். எப்போதும் அதிகாலையே எழுந்து குளித்து வீட்டின் தொழுவம் முழுக்க தீக் கங்கல் வளர்த்து சாம்பிராணிப் புகை பெருக்கி விடுவாள். அவளிருக்குமிடம் எப்போதும் தேவகடாட்சம் நிரம்பியிருக்கும். காலப்போக்கில் அவள் முகத்தில் எப்போதும் சொல்ல முடியாத பெரிய சோகமும் அமைதியும் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. வீடு தங்காத தன் அப்பன் முகம்கூட கொம்பையாவிற்கு கலங்கலாகத்தான் நியாபகத்திலிருந்தது.
இவ்வளவு நாள்களாக பொறுமையும் அமைதியுமாயிருந்த அம்மாவை அன்றுதான் சிறுவனான கொம்பையா அவ்வளவு உக்கிரமாய்ப் பார்த்தான். அன்று இரவில் மதுரையிலிருந்து சதிராடும் பெண் ஒருவளை மாயாண்டி தன் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டான். மனதிற்குள் குமுறியபடியே அன்னத்தாய்தான் வீட்டுக்கதவைத் திறந்து விட்டாள். வழக்கமாய் அன்னத்தாயும் மாயாண்டியும் உறங்கும் படுக்கையறையில் அன்னத்தாயை வெளியேற்றிவிட்டு அந்தப் பெண்ணும், மாயாண்டியும் உள்ளே போய் கதைவடைத்துக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் பணவிசயமாக ஏதோ வாக்குவாதமாகி அந்தப் பெண் உள்ளேயிருந்து கத்திக் கூப்பாடு போடத் துவங்கிவிட்டாள்.அதன் தொடர்ச்சியாய் மாயாண்டி அந்தப் பெண்ணை சமாதானப்படுத்துவது கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டின் மையத்தில் கொம்பையாவோடு படுத்திருந்த அன்னத்தாயின் கண்களில் நீர் மாலை மாலையாக வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் படுக்கையறைக் கதவைத் திறந்து மாயாண்டி அன்னத்தாயின் பொன் கைவளையல்கள் நான்கையும் கழட்டிக்கொடுக்கச் சொல்லி நிர்பந்திக்க, அன்னத்தாய் தர மறுத்து சிறியதாய் விசும்ப, மாயாண்டி ஓங்கி ஒரு அறைவிட்டான். சற்றுத்தள்ளி உறங்கிக்கொண்டிருந்த சிறுவனான கொம்பையாவின் மேலே போய் அன்னத்தாய் விழுந்தாள்.

பதறி உறக்கத்திலிருந்து எழுந்த கொம்பையா நெடுநாள்களுக்குப் பிறகு தன் அப்பா வந்திருப்பதைப் பார்த்து மிகுந்த பிரயாசையோடு அப்பாவென்று அழைத்தபடியே அவரின் அருகில் செல்ல, மாயாண்டி தன் எட்டு வயது மகனை இடது கையில் அப்படியே தூக்கி தூரத்தில் விசிறியடித்தான். கொம்பையா உடல் சுவரில் அடித்துத் தரையில் விழுந்து ஒருநிமிடம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது.
அந்தக் கணம்தான் அன்னத்தாய் முகம் மாறத் துவங்கி வீட்டின் மரத்தூணில் ஆணியில் பிடிசெருகி நிற்கும் அருவாளைக் கையிலெடுத்து ஒரே வெட்டாக மாயாண்டியின் கழுத்தை வெட்டித் தரையில் வீழ்த்தினாள். கழுத்தில்லாத மாயாண்டி காலை விரித்தபடி தூணில் முதுகு சாய்த்து அமர்ந்துவிட்டான். தலை தனியே வீட்டின் நடுமுற்றத்தில் கிடந்தது. சிறிது நேரத்தில் அவன் உடல் துடித்துத் துடித்து அடங்கியது. அன்னத்தாய் மாயாண்டியின் தலையைக் காலால் ஓங்கி ஓங்கி ஏத்தி உதைத்துக் கொண்டி ருந்தாள். அவளின் படுக்கையறையிலிருந்து மிரட்சியோடு வெளிவந்த அந்த தாசிப் பெண் அரைகுறை உடையோடு வீட்டிலிருந்து கத்தியபடி வெளியேறி ஊருக்குள் ஓடினாள். ஊரில் வரிசையாக எல்லா வீட்டிலும் கதவுகள் திறக்கும் சப்தம் கேட்டது. எல்லோரும் அன்னத்தாயின் வீட்டை நோக்கிக் கிளம்பி வந்தார்கள்.
கொம்பையா சிறுவலியோடு முனங்கியபடி மயக்கம் தெளிந்து விழித்துப் பார்க்கையில் வீடே சனக்காடும், சப்தமுமாயிருந்தது. எல்லோரையும் விலக்கிவிட்டுப் போய் தன் அம்மாவைப் பார்த்தான். முகமெல்லாம் ரத்தம் பூசியபடி ஆங்காரமும் ஆவேசமுமாய் எதையோ எத்தி எத்தி விளையாடிக்கொண்டிருந்தாள். பயமாயிருந்தது. எட்ட நின்று கொண்டான். யாருமே அவளின் அருகில் போகவில்லை. சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். கொம்பையா முதன்முறையாக இப்படியான தன் தாயின் முகத்தைப் பார்க்கிறான். அவளின் முகம் அன்று பத்ரகாளியின் முகத்தைப்போலிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பின்தான் பார்த்தான். அங்கே உதைபட்டுக்கொண்டிருப்பது தன் அப்பனின் தலையென்று. சிறியதாய் விடியத் துவங்கியபோது சோர்வாகி அப்படியே சப்பணங்கால் போட்டு அமர்ந்துவிட்டாள். திரும்பிப் பார்த்து கொம்பையாவை தலையசைத்துத் தன் அருகில் வருமாறு அழைத்தாள். தயங்கியபடியே போன கொம்பையாவை இழுத்துத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டாள். கொம்பையாவிற்கு அம்மாவின் உடல் தணலாய் இருப்பது போலிருந்தது. அவளின் உடல் குலுங்கிக் கொண்டேயிருந்தது. அம்மாவின் உடல் நொடிக்குள்ளாக மென்மையும் அமைதியும் இழந்து இறுக்கமும் துடியுமாய் மாறியது போலிருந்தது. இது தன் அம்மாவின் உடல் இல்லையோ என்றுகூட நினைத்துக்கொண்டான். ஊர்ப் பெண்கள் பெரிய பானையில் நீர் கொண்டுவந்து அன்னம்மாவின் தலையில் ஊற்றினார்கள். கொம்பையாவும் அம்மாவின் மடியில் அமர்ந்தவாறு நீரை உடலுக்கு வாங்கிக்கொண்டான். ஆண்கள் இறைத்துக் கொடுக்க... இறைத்துக்கொடுக்க பெண்கள் வரிசையாய் கொண்டுவந்து ஊற்றிக்கொண்டேயிருந்தார்கள். அதிகாலை தலைக்கோழி கூவி வெயில் வந்த பிறகும்கூட கிட்டத்தட்ட அன்று ஊர்க் கிணறே வற்றிப் போகுமளவு இறைத்து ஊற்றினார்கள்.
ஊர்த் தலையாரி மதுரை அரசாங்கக் காவலருக்குத் தாக்கல் சொல்ல ஆள் விடலாமா அல்லது நமக்குள்ளாகவே பேசி எரித்துவிடலாமாவெனப் பேசிக்கொண்டி ருந்தார்கள். மாயாண்டியின் வயது முதிர்ந்த தாயாரைத் தவிர அவன் பிணத்திற்காய் அழ எந்தக் கண்களுமில்லை. அன்னத்தாய் தன் மகனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஒரு கையில் மாயாண்டியை வெட்டிய அருவாளை எடுத்துக்கொண்டு சூரியனிருக்கும் திசை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
அழுதபடியும், அவளை அன்னம் அன்னமென்று கூப்பிட்டபடியும் ஊரே அவள் பின்னால் வந்துகொண்டிருந்து. அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை. ஒரு கட்டத்தில் கூப்பிடுவதை நிறுத்திவிட்டு. ஊர் எல்லையைத் தாண்டிய பின்னும்கூட எல்லாப் பெண்களும் அமைதியாய் அவளின் பின்னாலேயே வந்து கொண்டிருந்தார்கள். அன்று அந்த ஊரில் எந்தப் பெண்களுமில்லை. பெண்களில்லாத ஊர் போல ஒரு நொடியில் ஊரே சூனியம் பிடித்துப் போய்விட்டது.
அடுத்த எட்டு மைல் தூரத்திலிருக்கும் கலெக்டர் பங்களாவிற்குப் போய் கொலை ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு அன்னத்தாய் கொம்பையாவோடு சரணடைந்தாள். கலெக்டர் மூத்த அரசாங்கக் காவலர்களையும், அவசரகால நீதிபதியையும் தனது பங்களாவிற்கே வரவழைத்தார். எல்லோருமே வெள்ளைக்காரர்களாயிருந்தார்கள். ஊர்த் தலையாரி துபாஷியின் மூலம் நடந்ததை விளக்கினார். அவர் வெள்ளைக்காரர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, ``இந்தப் பொண்ணு ரெம்ப நல்ல மனுசிங்க. இப்படி ஒருத்தன எந்தப் பொண்ணுதான் சகிச்சுப்பா. பாத்து நல்ல படியா வழி சொல்லுங்க'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அன்னத்தாய் தன் மகனை விட்டுப் பிரிய முடியாது, எந்தக் கொடுமையான சிறையிலிருந்தாலும் தன் மகனோடு இருந்துகொள்வதாகச் சொன்னாள். கொம்பையாவும் தன் அம்மாவைப் பிரிய பெரிதும் முரண்டு பிடித்தான். எட்வர்ட் வாலிஸ் என்ற அந்த நீதிபதிதான் கொம்பையா தன் அம்மாவோடு இருந்துகொள்ளட்டும் என்று சொல்லி ஒப்புதல் வழங்கினார்.

அவர்களுக்கு மேலுமொரு சிக்கல் இருந்தது. இங்கு பெண்களுக்கெனத் தனிச் சிறை இன்னும் கட்டப்படாமலிருப்பதால் அன்னத்தாயை எங்கே அடைப்பது என்பதில் குழப்பம் உருவானது. கலெக்டர் பங்களாவில் அமர்ந்து அவர்கள் மாலை வரை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் தற்போது அரசாங்கத்தின் வசமிருக்கும் அந்த நூற்பு ஆலையின் கிட்டங்கியில் சில நாள்கள் அடைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். அதன்படியே அன்று இரவு அன்னத்தாயையும், கொம்பையாவையும் அங்கு கொண்டு போய் அடைத்தார்கள். காவலுக்கும் ஆட்கள் போட்டிருந்தார்கள்.
நெடுநாள்களாக தொழிலாளர்கள் பிரச்னையின் காரணமாக அந்த நூற்பு ஆலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் மூன்று வேளையும் நீதிபதி எட்வர்ட் வாலிஸின் பங்களாவிலிருந்து உணவு கொடுத்து விட்டார்கள். எட்வர்ட் வாலிஸ் கிட்டத்தட்ட ஐம்பது வயதின் அருகிலிருக்கும் மனிதர். நாற்பத்தி ஏழோ, எட்டோ இருக்க வாய்ப்புண்டு. அவரின் மனைவி காலமாகி மூன்று ஆண்டுகளாகின்றன. வீட்டில் அவரும் அவரின் மகனும் மட்டும்தான். பெரும்பாலும் அவரே சமைக்க மெனக்கெடுகிறார். இந்திய சமையல்காரர் ஒருவர் இருக்கிறாரெனினும் அவருக்கு ஆங்கிலேய உணவுப் பதார்த்தங்கள் எதுவும் சரிவரக் கைவரவில்லை. இந்தியர்களுக்கு உணவில் காரசாரம் அதிகமிருக்க வேண்டும். வெள்ளைக்காரர்கள் அதற்கு நேர் எதிர். அவர்களுக்கு சமைக்கும் உணவிற்கு மேலாக காரம் மற்றும் மசாலா வகைகளின் கரண்டியை கிட்டத்தட்ட காட்டிவிட்டு எடுத்துவிட்டால் மட்டும் போதும். காரத்தையும் மசாலாவையும் அவர்களுக்கு உணவில் சேர்க்க வேண்டியதில்லை. ``சில்லி'' என்று அவர்கள் உச்சரித்தாலே அவர்களின் முகம் சிவந்துவிடும். கண்களில் நீர் கட்டிவிடும். இரண்டு நாள்களாக உணவு எடுக்காமலிருந்த அன்னத்தாய் இரண்டாம் நாள் இரவு கொண்டு வந்த உணவைச் சாப்பிடலாமென்று எண்ணி குழம்பைப் போலிருந்த சூப்பை எடுத்து சிறிது வாயில் வைத்துப் பார்த்தாள். உப்பும் உறைப்புமில்லாமல் சப்பென்றிருந்தது. வாய்க்கு விளங்கவில்லை. கொம்பையா அப்படி இல்லை, எதையும் கழிக்காமல் உண்டான்.
தினமும் நீதிபதி எட்வர்ட் வாலிஸ் அன்னத்தாயை வந்து பார்த்து கொலை தொடர்பான விஷயங்களைச் சேகரித்துக் கொண்டு போனார். அவர் மதராஸிலிருக்கும் தலைமை நீதிபதிக்கும், கொல்கொத்தா தலைமை அலுவலகத்துக்கும் பெண்களுக்குத் தனிச் சிறை கட்டும் வேலையை விரைந்து துரிதப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கடிதம் எழுதினார்.
அவர் இங்கிலாந்திலிருக்கும் அரசின் தலைமைக்கு வேறொரு கடிதமும் எழுதினார். இப்படியான மோசமான வாழ்வியல் சித்ரவதைகளைக் கொண்ட அந்தப் பெண் கொலைக்குற்றவாளி ஆவதில் எந்த ஆச்சர்யமுமில்லை. எனவே அந்தப் பெண்ணுக்கு மிகவும் குறைந்தபட்ச தண்டனை மட்டும் வழங்க தம்மை அனுமதிக்குமாறு கேட்டுப்பார்த்தார். அவர்கள் அதைப் பின்னர் பரிசீலிக்கலாம், அதுவரை அந்தப் பெண் சிறையில் இருக்கட்டுமென பதில் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவர் கோரியிருந்த வேறொரு கோரிக்கைக்கு அவர்கள் ஒப்புதல் வழங்கியிருந்தார்கள். அது,
`...... நீங்கள் கேட்டிருந்தபடி பெண்கள் சிறை கட்டும்வரை அந்தப் பெண்ணை உங்கள் வீட்டுச் சிறையில் பாதுகாக்கவும். அதற்குத் தேவையான காவல்துறை உதவிகளை எடுத்துக்கொள்ளவும். மேலும், பெண்கள் சிறை கட்டுவதற்கான நிதியை விரைவில் வழங்க ஆணையிடுகிறோம்.’
இப்படிக்கு
( தலைமை அதிகாரியின் கையொப்பமும், அரசாங்க முத்திரையும் )
இந்த பதில் நீதிபதி எட்வர்ட் வாலிஸுக்குத் தேவலாம் போலிருந்து. அன்றே அவர் காவல் அதிகாரிகளின் உதவியோடு மூடித் திரையிட்ட சர்க்காரின் குதிரை வண்டியில் வைத்து அன்னத்தாயையும், சிறுவனான கொம்பையாவையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.‘
`ஒரு நாடோடியின் பொதிமூட்டை கதைகளால் நிரம்பியது.’’
~ பராரிகள்
மகன் வழி ( 1977 - மழைக்காலம்)
பாண்டேஸ்வரம் சூளையில் யாரோ ஒரு பெண் சூரனை நெடுநேரம் வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சூரன் அந்தப் பெண்ணைத் திரும்பி பார்க்கும் போதும் அந்தப் பெண் தன் பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை. சூரனின் மேல்தான் நிலைக்குத்திப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நிறைய பேர் அந்தப் பெண்ணோடு மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் அருகில் சில பழைய பாத்திரங்களும், மண்சட்டியும் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு அருகில் கிடந்தன.அநேகமாய் அவர்கள் சூளையை காலி செய்துவிட்டுக் கிளம்புபவர்களைப் போலிருந்தார்கள்.

அந்தப் பெண் தன் வயதான அப்பனின் காதில் ஏதோ சொன்னாள். அந்தப் பெண் சொல்லி முடிந்ததும் சட்டென அந்த மனிதரும் சூரனின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். ஆனால் அவர் பார்வை சூரனிடமிருந்து சற்று விலகியிருந்தது. அவர் தூரத்தில் எதையோ பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் கண் இமைகள் கழுத்தறுபட்ட கோழியின் உடலைப்போல படபடவென அடித்துக்கொண்டேயிருந்து. அவர் தன் கூட்டத்திலிருந்து தடுமாறியபடி எழுந்தார். அவர் தடுமாறி எழுந்தபோது அவரின் மகளும், மற்றவர்களும் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அவர் அவர்களின் கையை உதறிவிட்டு கைகளை மட்டும் முன்னால் நீட்டியவாறு காற்றில் எதையோ துழாவுவது போல் செய்தபடி சூரன் நிற்கும் திசைக்கு வந்தார். சூரனுக்கு அப்போதுதான் அவர் பார்வையில்லாத மனிதர் என்பது தெரிந்தது. ``தம்பி, நீங்க இருபதாம் நம்பர் சூளைல இருந்தவர் தான?''
சூரன் மறுத்து ``அதெல்லாம் இல்ல, நான் இன்னிக்கிதான் இங்க உள்ள வந்திருக்கேன்'' என்று சொன்னான்.
அந்தப் பெரியவர் சூரனின் கரங்களைப் பிடித்துக்கொண்டார். ``தம்பி உண்மைய சொல்லுங்க. என் மகளப் பத்திக்கூட ஒண்ணுமில்ல. அவ பிள்ளைய எங்க விட்டீங்கன்னு மட்டும் சொல்லுங்க. நாங்க சூளையிலேருந்து வெளியப் போறோம். அந்தச் சின்னப் பிள்ளைய எங்க விட்டிங்கன்னு மட்டும் சொல்லுங்க. எந்தச் சூளையிலிருந்தாலும் ஏசண்டுகள விட்டு எப்படியாவது கண்டுபிடிச்சி கொண்டாந்துறேன். யாருகிட்ட விட்டீங்கன்னு மட்டும் சொல்லுங்க.'' அவர், சூரனின் கைகளைப்பற்றி, கும்பிட்டுக் கேட்டார்.
சூரன் அவரின் கைகளை பலம் கொண்டு உதறினான்.'' யாருக்கோ பிள்ள பெத்துட்டு என்னய அப்பனாக்கப் பாக்குறீங்களா? போயா அங்கிட்டு.'' அவர் மீண்டும் சூரனின் கையைப் பிடித்தார். ``அந்த இருட்டுல உன்னப் போலத்தான் தெரிஞ்சதா சொல்றா.''

``யோவ்... போறியா இல்லையா...'' சுள்ளென்று எரிந்து விழுந்தான். இப்போது பார்வையற்றவரின் குடும்பத்தினர் அமர்ந்திருந்த கூட்டத்தில் வேறொரு பெண்ணும் சூரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அநேகமாய் அவள் முதல் பெண்ணின் தங்கையாக இருக்கலாம். அதே சாயலிலிருந்தாள்.பின்னாலிருந்து பார்வையற்றவரை ஏசண்டு அழைத்தான்.
``இங்க என்னய்யா நின்னுகிட்டு இருக்க. இன்னிக்கி வேல பாக்கலயா. மூட்ட முடிச்செல்லாம் வெச்சிக்கிட்டு ஆட்களோட இங்க வந்து உக்காந்துருக்க.''
``அய்யா, எங்க ஆளுகளுக்கு மூணு வருஷத்துக்குத்தான் காண்ட்ராக்ட் எழுதிக் கூட்டிட்டு வந்தாங்க. நேத்தோட மூணு சித்திரை முடிஞ்சிபோச்சி. ஊருக்குப் போகணும். அதான் கிளம்பிட்டோம். உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு உக்காந்துருக்கோம்.''
``காண்ட்ராக்ட் முடிஞ்சிபோச்சா. யாரு சொன்னா. தலைக்கு ரெண்டாயிரம் ரூபா குடுத்துதான் கூட்டிட்டு வந்தோம். ஆனா மூணு வருசத்துக்குத்தான்னு யாரு சொன்னா. ஆயுசுக்கும் காண்ட்ராக்ட் போட்ருக்கு. சாகுமட்டும் இங்கயிருந்து யாரும் வெளிய போக முடியாது. உங்கள விலைகொடுத்து வாங்கியாச்சு. போங்கடா, போயி வேலையப் பாருங்க. இங்க பிடிக்கலனா வேற சூளை முதலாளிகிட்ட காசு வாங்கி இங்க குடுத்திட்டு அங்க போயி சேந்துக்கோங்க. இங்க நூத்துக்கணக்குல சூளைங்க இருக்கு. சொல்லு, நானே நல்ல வெலக்கி உங்களை வித்து விடுறேன். கைல நூறோ, நூத்தம்பதோ பணமும் வாங்கித் தாரேன் ஆனா இங்க இருந்து வெளிய மட்டும் போக முடியாது, சொல்லிட்டேன்.''
``அய்யா, என் பொம்பளப் பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும். தயவு செஞ்சி எங்கள வெளிய விடுங்க. இத்தன வருஷம் செங்கல் அறுத்து உங்ககிட்ட வாங்குனத அடைச்சாச்சு. நீங்க முதலாளியக் கூப்பிடுங்க. நாங்க பேசுறோம்.''
``எது, உங்ககிட்ட பேசுறதுக்கு முதலாளி வரணுமா? போங்கடா, போயி வேலையப் பாருங்க. இனி ஆயுசுக்கும் இங்கதான் இருக்கணும். பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணணும்னா இங்க சூளைல வேல பாக்குற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி வெய்யி. அத விட்டுட்டு வெளிய போகணும்னு நினச்சா உயிர் இருக்காது சொல்லிட்டேன்'' சொல்லி விட்டு ஏசண்டு போய் க்கொண்டேயிருந்தார்.
ஏசண்டின் கைகளைப் பிடித்துக் கெஞ்சுவதற்காக பார்வையற்றவர் காற்றில் அவரின் கரங்களைத் தேடிக்கொண்டேயிருந்தார். சூரனின் கரங்கள் அவருக்குத் தட்டுப்பட அதைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார். ``அய்யா, வயசுக்கு வந்த ரெண்டு பிள்ளைங்க இருக்கு. எப்படியாச்சும் எங்கள வெளிய விட்ருங்க.’’ சூரன் மெதுவாக அந்தக் கரங்களை எடுத்து விட்டான். பார்வையற்றவருக்கும் அது வேறு யாருடைய கரங்களோ என்பது அறிந்து திரும்ப தன் கூட்டத்தின் அருகில் தடுமாறிப் போனார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சூரனுக்கு தான் ஒரு பெரிய இரும்புக்கோட்டைக்குள் வந்து மாட்டிக்கொண்டதைப்போல உணர்ந்தான். அதற்குள் பார்வையற்ற அந்தப் பெரியவரின் இரண்டு மகள்களும் ஓவெனக் கத்தி அழ ஆரம்பித்துவிட்டனர். சூரனுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
சூரன் ஏசண்டின் பின்னாலேயே ஓடிப்போய் அவரை நிறுத்தினான். ``அய்யா நான் ஏதும் பணம் வாங்கல. என்ன வெளிய விடுங்க, நான் போகணும்.''
ஏசண்டு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சொன்னார், ``நீ வாங்கலன்னா... உன்னக் கொண்டு வந்து விட்டவன் வாங்கிட்டுப் போய்ட்டான்.'' சூரனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ``அவன் யாருன்னே எனக்குத் தெரியாதுங்க. கோயில்ல படுத்திருந்தேன். வேலைக்கு வாரியான்னு கேட்டான். வந்தேன். எந்தப் பணமும் நான் வாங்கல.''
ஏசண்டு அவன் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் போய்க் கொண்டேயிருந்தான். பார்வையற்றவரின் இரண்டு மகள்களும் சூரனைப் பார்த்தபடியே தங்கள் துணிப்பொதிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் அவர்கள் முன்பு தங்கியிருந்த அதே இடத்திற்கு நடக்கத் துவங்கினார்கள்.
~ ஓடும்