
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
தந்தை வழி - 1913 முதல் 1915 வரை (பிரிட்டிஷ் இந்தியா)
‘`பயணிகளின் கால் தடங்கள் பதிந்த பாதைகள்
சொர்க்கத்திற்குச் செல்லும் குறுக்குவழிகள்’’
- பராரிகள்
நீதிபதி எட்வர்ட் வாலிஸ், பெண்களுக்கான தனிச்சிறை கட்டும் வரையில் கொலைக் குற்றவாளியான அன்னத்தாயைத் தனது பங்களாவில் வீட்டுக்காவலில் வைத்துப் பாதுகாக்க அனுமதி வழங்குமாறு பிரிட்டிஷ் அரசின் தலைமைக்குக் கடிதம் எழுதி அனுமதியும் பெற்று, தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்னத்தாயோடு சிறுவனான கொம்பையாவும் நீதிபதியின் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான். பல நாள்களாக ஒரே உடையை அணிந்திருந்ததால் இருவர் உடைகளிலும் துர்நாற்றமும் கிழிசலுமிருந்தன. தனது பங்களாவிலிருந்த வயது முதிர்ந்த வேலையாளைத் தறிப்பேட்டைக்கு அனுப்பி, இரண்டு சேலைகளும் சிறுவனான கொம்பையாவிற்கு மரக்காயர்கள் வணிகக் குடியிருப்பிலிருந்து நல்ல விலையில் ரகமான இடுப்புத்துணிகளும் வாங்கிவரச் சொன்னார். வேலையாள் சாயமேற்றப்படாத இரண்டு வெள்ளைப் பருத்திச் சேலைகளை அன்னத்தாய்க்கென வாங்கி வந்தார். வாலிஸ் அந்த வேலையாளிடம் ``ஏன் இரண்டுமே வெள்ளைநிறச் சேலையாகத் தேர்வுசெய்து வாங்கி வந்தீர்கள்?'' என்று கேட்டார். ``இந்த நாட்டில் கணவரை இழந்த பெண்கள் இப்படி அணிவதுதான் வழக்கம். அவர்கள் தனது உடலில் வண்ணமயமான எந்தப் பொருளையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மஞ்சள் நிறப் பொன் நகைகள் கிடையாது. மஞ்சள் பூச்சும், நெற்றியில் சாந்தும்கூடக் கிடையாது. இனி வெள்ளை நிறம் மட்டும்தான்’’ என்று வேலையாள் சொன்னார்.

``அது கணவனை இழந்த பெண்களுக்கு; மோசமான ஒரு கணவனை அழித்த பெண்ணுக்கும் அதே வழக்கம்தானா? போய் சாயம் ஏற்றப்பட்ட சேலையை வாங்கி வாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்த வேலையாள் பிடிவாதமாக நகர மறுத்து, ``துரை, இப்படியான காரியத்தை நான் ஒருகாலமும் செய்யமாட்டேன். அது பாவம். என்னை வேலையை விட்டு வேண்டுமானால்கூட அனுப்பிவிடுங்கள்'' என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்றார். வாலிஸுக்கு அந்தக் காரியம் ஆச்சர்யமாக இருந்தது. ``அப்படியென்றால் மனைவியை இழந்த கணவர்களுக்கு இதேபோல் எதையும் இழக்கும் வழக்கம் இந்த நாட்டில் இருக்கிறதா?’’ என்று கேட்டார். உண்மையில் அவர் அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்டார். அந்த முதிர்ந்த வேலையாள் அப்படி ஏதும் இல்லையென்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
இந்த முறை வாலிஸ் தன் மகன் ஜான் ஹென்றியைத் தறிப்பேட்டைக்கு அனுப்பி அன்னத்தாய்க்குச் சேலை வாங்கி வரும்படி சொன்னார். ஹென்றிக்கு எப்படியும் இருபத்திரண்டு, இருபத்து மூன்று வயதிருக்கும். லண்டனில் மருத்துவம் படித்துவிட்டு இங்கு வந்து தந்தையோடு தங்கியிருக்கிறான். தளிர்ப் பச்சை நிறத்திலும் அடர் நீலத்திலும் இரண்டு சேலைகளை அவன் வாங்கி வந்திருந்தான். அன்னத்தாய் அந்தச் சேலைகளை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள். அந்த வேலையாள் அப்போது அங்கு வந்து சொன்னார். ``துரை, நான் அப்பவே சொன்னேன்ல. இங்க இருக்குற பொண்ணுங்க கணவன் எப்படி இறந்தாலும் அவங்க வெள்ளதான் உடுத்துவாங்கன்னு. வேறொரு விஷயம். பிறந்த வீட்டாரோ, கணவன் வீட்டாரோ குடுத்தாலொழிய வேத்து மனுஷர் கொடுத்த உடையை வாங்கி உடுத்திக்க மாட்டாங்க.'' இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் அன்னத்தாய் என்ன நினைத்தாளோ, ஹென்றியின் கையிலிருந்த அந்த உடையை வாங்கிக்கொண்டாள். அடுத்த கணமே அந்த முதிய வேலையாளின் முகம் சிறுத்துப்போனது.
கொம்பையாவை நன்கு குளிப்பாட்டி, தன் புதுச்சேலையால் துவட்டி, அவனுக்குப் புத்தாடையைக் கட்டிவிட்டாள். வாலிஸ் அன்னத்தாயை, இந்த ஒரே அறையில் இருக்காமல் இந்த வீடு முழுக்க நீ எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரலாம். இந்த வீட்டைத் தாண்டிச் செல்ல மட்டும்தான் உனக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார். ஆனாலும் அதன் பின்பும் நான்கைந்து நாள்கள் அன்னத்தாய் ஒரு சிறைக்கைதியாக தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை விட்டு வெளியே வரவேயில்லை. சரியாக உணவு எடுத்துக்கொள்ளவு மில்லை. கொம்பையாவை மட்டும் எப்போதும் இறுக்கக் கட்டிக்கொண்டு இரவு பகல் எல்லா நேரங்களிலும் உறக்கமில்லாமல் விழித்தபடியே யிருந்தாள். இந்தச் சில நாள்களுக்குள்ளாக பொலிவிழந்து மெலிந்து கறுத்துவிட்டாள். தன் மகனுக்காக வாழவேண்டுமென்பதைத் தவிர இந்தப் பூமியில் அவள் உயிரோடு வாழ எந்தக் காரணமுமில்லை என்று அடிக்கடி நினைத்துக்கொண்டாள்.
ஒரு வாரம் கழிந்து ஒரு நாள் தன்னை அறியாமல் மிகவும் அசந்து தூங்கினாள். சூரியன் உதயமாகி நெடுநேரம் ஆகியும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாய் உறங்காதவளைப்போல அன்று உறங்கினாள். காலை எப்படியும் பத்து மணிக்கு மேல் ஆகியிருக்கும். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தவள் அருகில் கொம்பையா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியானாள். தனது அறையைத் தாண்டி அவ்வளவு பெரிய வீட்டின் எல்லா இடத்திலும் பதற்றத்துடன் தேடிப் பார்த்தாள். கொம்பையா பங்களா முற்றத்தில் காலில் அடிபட்ட குதிரைக்கு ஹென்றி மருந்து வைப்பதை வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அழுதபடி ஓடி வந்து கொம்பையாவைக் கட்டி அணைத்து உச்சிமுகர்ந்துகொண்டாள். ஹென்றி அவன் தன்னோடு இருக்கட்டும், தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கொம்பையாவைத் தூக்கி அருகிலிருக்கும் வேறொரு குதிரையின் முதுகில் அமர வைத்தான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அன்னத்தாய் அமைதியாக நடந்தாள். திரும்பப் போகும்போது தனது அறைக்கு வழிதெரியாமல் மொத்த பங்களாவையும் சுற்றிச் சுற்றி வந்தாள். அப்போதுதான் நிதானமாக அந்த முழு வீட்டையும் பார்த்தாள். அந்த வீடு மிகுந்த கலை ரசனையோடு அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சமையல் கூட்டத்திலிருப்பவர்கள்தான் அவளின் அறையை அடையாளம் காட்டினார்கள்.

ஹென்றி மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கத்தான் படித்தான் என்றாலும் அவனிடம் வைத்தியம் செய்துகொள்ள இந்தியர்கள் யாருமே வரத் தயாரில்லை. அவர்களுக்கு ஆங்கில வைத்தியத்தின் மீது நம்பிக்கையில்லாமலிருந்தது. மனிதர்கள் யாரும் வராததால் அவ்வப்போது தனது வளர்ப்பு மிருகங்களுக்கு வைத்தியம் செய்வான். அவனுக்குக் குதிரைகள் மீதும், நாட்டு மாடுகள் மீதும் பெரிய ஆர்வமிருந்தது.பங்களாவின் பின் பக்கம் தொழுவத்தில் எல்லா ரக மாடுகளும் கட்டிக்கிடந்தன. பொழுது போகாமல் இருந்தால் மாடக்குளம் கண்மாய்ப் பகுதியிலும், உலகனேரி கண்மாய்ப் பகுதியிலும் நடக்கும் மாட்டுத்தாவணிகளை வேடிக்கை பார்க்கப் போய்விடுவான். கீழக்குடியிலிருந்து மாட்டு வாகடம் தெரிந்த ஒருவரை வரவழைத்து தினமும் அதையும் கற்றுக்கொண்டிருக்கிறான். இந்தியாவிற்கு வந்த இந்த இரண்டு வருடத்தில் ஹென்றியிடம் இரண்டோ மூன்றோ மனிதர்கள் மட்டுமே வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்.
அன்னத்தாய்க்கு இந்த வீடு தனக்கான தண்டனை போலவே தெரியவில்லை. அவளுக்குக் காற்றோட்டமான பெரிய அறை கொடுத்திருந்தார்கள். நல்ல அகலமான தேக்குக் கட்டிலும் ஓரங்களில் பூவேலைப்பாடுகள் மிகுந்த மெத்தை விரிப்பும்கூட இருந்தன. தனது முந்தைய வாழ்க்கையைவிடவும் இது பலமடங்கு வசதி நிறைந்ததாயிருந்தது. அன்னத்தாய் கொம்பையாவைக் கட்டிலில் கிடத்திவிட்டு எப்போதும் தரையில்தான் படுத்துக்கொண்டாள். அவ்வப்போது அன்னத்தாயின் ஆத்தா வீட்டிலிருந்து பார்க்க ஆட்கள் வந்தார்கள். அன்னத்தாய் யாரையும் பார்க்க மறுத்துவிட்டாள்.வாலிஸ் அவ்வப்போது அன்னத்தாயின் அறைக்கு வந்து சௌகரியங்கள் பற்றி விசாரித்துவிட்டுப் போவார். ஒருபுறம் பெண்கள் சிறை கட்டுவதற்கான பணிகளும் தொடங்கின.
மாதமொருமுறை ஹென்றி சிறைத்துறையின் விதிகளின் படி அன்னத்தாயின் உடலைப் பரிசோதனை செய்ய வந்தான். நாடித்துடிப்பு பார்க்கக்கூட வேறொரு ஆணின் கையில் தனது கையைக் கொடுக்க மறுத்துவிட்டாள். ஹென்றி எப்போதும் எட்ட நின்று அவளைத் தொடாமல் வெறுமென அவளிடம் கேட்டு மட்டுமே அவளின் உடல் நிலையை அறிந்துகொண்டான். அவள் எப்போதும் தான் நன்றாக இருப்பதாகச் சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.
ஒருநாள் வாலிஸிடம் அன்னத்தாய் தன்னால் வெறுமென சாப்பிட்டு உடல் வளர்க்க முடியாது. தனக்கு இந்த வீட்டில் ஏதாவது வேலை கொடுக்கும்படி இறைஞ்சிக் கேட்டுக்கொண்டாள். வேலை பார்க்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. உனக்கு விருப்பமிருந்தால் இந்த வீட்டில் எந்த வேலையை வேண்டுமானாலும் எடுத்துச் செய்யலாமென்று சொல்லிவிட்டார். அடுத்த நாளிலிருந்து அன்னத்தாய் அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வந்து எதாவது வேலை பார்க்கச் சுற்றி வந்தாள். எல்லா வேலையைப் பார்க்கவும் ஆட்கள் சரியாக அமர்த்தப்பட்டிருந்தார்கள். தொழுவத்திற்கும் குதிரை லாயத்திற்கும் வந்தால் அங்கேயும் அவள் வருவதற்கு முன்பாகவே எல்லா வேலைகளும் சரியாக முடிக்கப்பட்டு இருக்கும். அவள் வெறுமென அந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.
ஒரு ஓய்வுநாளில் எல்லோரும் முற்றத்தில் அமர்ந்திருக்க, வாலிஸின் காலின் அருகில் கொத்துவதைப் போல் ஒரு நாகப்பாம்பு நெடுநேரம் படமெடுத்து நின்றுகொண்டிருந்தது. வயதான அந்த வேலையாள்தான் முதலில் அதைப் பார்த்துக் கத்தி பயந்து ஓடினார். ஹென்றியும் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பிலிருந்தான். தூரமாய் நின்று விளையாடிக்கொண்டிருந்த கொம்பையா எந்த பயமுமில்லாமல் அதை அடிக்க பெரிய கழியை எடுத்துக்கொண்டு வந்தான். ஹென்றி தடுத்துவிட்டான். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு படத்தைத் தாழ்த்தி விட்டு வைக்கோல் படப்புக்குள் போய் ஒளிந்துகொண்டது. வைக்கோல்போரை அப்படியே எரித்துவிடலாமென வாலிஸ் சொன்னார். அதன்படியே எரிக்கப் போனவர்களைத் தடுத்து நிறுத்தி அன்னத்தாய் ஒரு மூங்கில் குச்சியால் ஒவ்வொரு கட்டுப் பிரியாக எடுத்துப் போட்டாள். கறையான் புற்றைக் கிளறியதுபோல பாம்புக்குட்டிகள் சர சரவென குட்டி குட்டி நெளிவுகளாய் நெளிந்து நாலா திசைக்கும் ஊர்ந்தன. அருகில் நிறைய பாம்பின் உடைந்த முட்டையோடுகள் இருந்தன. உள்ளிருந்து தாய்ப் பாம்பு சீறியது. அது தாய்ப் பாம்பு, இப்போதுதான் குட்டி போட்டிருக்கிறது. பசிக்கு வெளியே வந்திருக்கும். பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அன்னத்தாய் தாய்ப் பாம்பைப் பிடித்து வெளியே எடுத்தாள். சிறு துணிப் பையை எடுத்து வரச்சொல்லி அதில் அதைப் போட்டாள். பாம்புக்குட்டிகள் ஒவ்வொன்றாய்ப் போய் எங்காவது ஒளிந்துகொள்ளும் முன்னால் அதையும் அள்ளித் துணிப்பைக்குள் போட்டு, காட்டுக்குள் போய் விட்டுவிடச் சொன்னாள். எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துபோனார்கள்.
அடுத்த நாள் ஹென்றி அவளை மிகவும் கடிந்துகொண்டான். ஒரு நிமிடம் அந்தப் பாம்பு கொத்தி யிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டான். அன்னத்தாய் எந்தச் சலனமுமில்லாமல் சொன்னாள். ``சாக வேண்டியதுதான. ஏற்கெனவே நான் செத்த பொணம்தான. என் பிள்ளைக்காக மட்டும்தான் உயிரோட இருக்கேன். பாம்போ மனுசனோ, அதுவும் தாய்தான, அத ஏன் அடிச்சிக் கொல்லணும்?'' ஹென்றிக்கு அரைகுறையாகத்தான் புரிந்தது. மீண்டும் தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.
கொம்பையா முன்னைவிடவும் ஹென்றியிடம் மிகவும் நன்றாக ஒட்டிக்கொண்டான். ஹென்றியோடேயே கிடந்தான். ஹென்றியைப் பெயர் சொல்லி அழைத்தான். ஹென்றி அவனை நன்றாகப் பார்த்துக்கொள்வது அன்னத்தாய்க்குப் பிடித்திருந்தது. அவள் ஒருநாள் ஹென்றியிடம் எங்கிருந்தாவது வளர்க்க இரண்டு எலுமிச்சைச் செடிகள் எடுத்து வர முடியுமா, எனக்கு எலுமிச்சை வாசனை நிரம்பப் பிடிக்கும் என்று சொன்னாள். இதுநாள் வரை எதுவுமே கேட்டிராத அன்னத்தாய் முதன்முறையாகக் கேட்டதால் உடனே கிளம்பிப் போய் பத்துக்கும் மேல் எலுமிச்சைக் கன்றுகளை வாங்கி வந்தான்.வீட்டைச் சுற்றி எலுமிச்சைக் கன்றுகளை ஊன்றி வைத்தாள். சிறியதாய் வட்டப் பாத்திகட்டி காலையும் மாலையும் அந்த எலுமிச்சைக் கன்றுகளை நீரூற்றிப் பராமரிப்பதும், அவற்றுக்கு எரு உரமிடுவதும் அன்றாட வேலையாக எடுத்துக்கொண்டாள். சில நாள்களுக்குள்ளாகவே அந்தப் பெரிய வீட்டின் எல்லா இடங்களிலும் சொந்த வீட்டைப்போல் சங்கோஜமில்லாமல் புழங்கத் துவங்கினாள். அந்த வீட்டின் மனிதர்களிடம் இயல்பாகப் பேசத் துவங்கினாள். தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டின் முற்றத்தில், தொழுவத்தில் அழகான பெரிய ஊடு புள்ளி கோலமிட்டாள். ஒவ்வொரு எலுமிச்சைச் செடியைச் சுற்றியும் சிறிய சிறிய அழகான கம்பிக் கோலங்கள். ஹென்றி ஒவ்வொரு கோலத்தையும் கண்கள் விரிய ஆச்சர்யமாகவும், அழகாகவும் பார்த்தான். தினமும் அவன் கண்கள் விரிவதற்காகவே சிரத்தையோடு அழகான கோலமிட்டாள். ஒருகட்டத்தில் தானொரு சிறைக்கைதி என்ற விஷயமே அவளுக்கு மறந்து போனது.
ஒருநாள் ஹென்றியைப் பார்க்க அவருடைய வீட்டோடு கூடிய சிகிச்சையகத்திற்கு ஒரு கணவனும் மனைவியும் வந்திருப்பதாகச் சொன்னார்கள். வந்திருந்தவர் பெரும் பணம் படைத்தவர்போல் தெரிந்தார். நாற்பது வயதிருக்கும், அவரின் மனைவி மிகவும் மெலிந்து இளமையானவராக இருந்தார். அந்தப் பெண் ஏதோ வலியில் துடித்தபடியிருந்தார். அவரின் வயிறு மிகவும் மேடேறி ஏழெட்டு மாத கர்ப்பிணிப் பெண்போலத் தெரிந்தது. ஹென்றி அவர்களை அழைத்து விசாரித்தார். தங்களுக்கு இதற்கு முன் பிறந்த நான்கு குழந்தைகளுமே பெண் பிள்ளையாகப் போய்விட்டதனால் ஆண் குழந்தைக்காகக் கோயில் கோயிலாக ஏறி இறங்குவதாகவும், இந்தமுறை ஜோதிடர்களும் வயிற்றிலிருக்கும் குழந்தை நிச்சயம் ஆண்தான் என்று சொல்லிவிட்டதாகவும், இருவரும் இங்கு கோயிலுக்கு வந்த இடத்தில் தன் மனைவிக்கு மார்பில் கடுமையான வலி இருப்பதாகச் சொன்னதால் அவசரத்துக்கு இங்கே அழைத்து வந்ததாகவும் சொன்னார்.
ஹென்றி அந்தப் பெண்ணை அதிக பள்ளமில்லாத சிறிய நீர்த்தொட்டிபோல் இருந்த இரும்புக் கட்டிலில் படுக்க வைத்தார். அந்தப் பெண் வலியில் முனங்கியபடியிருந்தார். ஹென்றி அந்தப் பெண்ணின் மேலாடையை நீக்கி வலி இருக்கும் இடத்தைக் காட்டுமாறு சொன்னான். அந்தப் பெண் தன் சேலையை நீக்கக் கையைக் கொண்டு வருகையில் அந்தப் பெண்ணின் கணவன் அந்தப் பெண்ணைத் திட்டினான். ``ஏண்டி வேசி மகளே, என் முன்னாடியே அடுத்தவனுக்கு உன் உடம்பைக் காட்டுவியா... உனக்கு வலியிருந்தா மென்னு முழுங்கிக்கோ. வா கிளம்பலாம்'' என்று அந்தப் பெண்ணைக் கிளப்பினான்.
ஹென்றி அவரிடம் ஒரு மருத்துவரிடம் உடலில் வலியிருக்கும் பகுதியைக் காட்டினால் தானே சரியான வைத்தியம் செய்ய முடியுமென்று கேட்டுப் பார்த்தான். உடலைப் பார்க்காமல், உடலைத் தொடாமல் ஏதாவது வைத்தியம் செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் இவள் வலியைப் பொறுத்துக்கொண்டு இப்படியே இருக்கட்டுமென்று சொல்லிவிட்டார். ஹென்றி அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார். அந்தப் பெண் வலியில் கண்களை இறுக்க மூடியிருந்தாள். தன் பற்களையும் இறுக்கமாகக் கடித்தபடியிருந்தாள். அவளின் கண்களில் நீர் தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருந்தது.
ஹென்றிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஒரு பெண் உடலின் பாகங்கள் வரையப்பட்ட வரைபடத்தைக் கொண்டுவந்து அந்தப் பெண்ணிடம் நீட்டினான். எந்த இடத்தில் வலிக்கிறதென பென்சிலால் சுட்டிக்காட்டும்படி கேட்டான். அந்தப் பெண் மார்புக் காம்பையும், பிறப்புறுப்பின் அருகிலும் சுட்டிக்காட்டினாள்.
ஹென்றி அந்தப் பெண்ணின் கணவரிடம் மீண்டும் ஒருமுறை கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார். ``ஒரு மருத்துவர் ஒரு பெண்ணோட உடம்ப தவறான கண்ணோட்டத்தோட பாக்கவே முடியாது. சொன்னாக் கேளுங்க.'' அவர் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கிளம்ப ஆயத்தமானார். ஹென்றி அவர்களை ஒருநிமிடம் இருக்கச் சொல்லிவிட்டுப் போய் அன்னத்தாயை அழைத்து வந்தான். இந்தப் பெண் இங்க செவிலியர். அதாவது மருத்துவச்சி மாதிரி. உங்க மனைவியோட உடம்ப நான் பாக்க மாட்டேன். இவங்ககிட்ட காட்டுங்க. இவங்க பாத்து என்ன பிரச்னைன்னு சொல்லுவாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி வைத்தியம் பண்ணலாம். உங்க மனைவிய இந்த நிலைமைல இவ்வளவு வலியோட கூட்டிட்டுப் போக வேண்டாம்’’ என்று ஹென்றி கெஞ்சிக்கேட்டுக்கொண்டான். ``யாரு இவளா, இந்த புருஷனக் கொன்னவ என் பொண்டாட்டிக்கு வைத்தியம் பாக்கக் கூடமாட நிக்கப்போறாளாக்கும்? போற உயிரு அவளுக்கு இப்படியே போகட்டும். அடச்சீ நீ வாடி.'' அந்தப் பெண் வலியோடு கிளம்பிச் சென்றாள்.
அடுத்தநாள் கார்த்திகைத் திருநாள். எல்லா வீட்டின் முற்றங்களிலும், மாடங்களிலும் கிளியாஞ்சட்டி விளக்குகளில், பொன்போல் நன்றாகத் துலக்கிய பித்தளை விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரியிட்டு விளக்கு ஏற்றியிருந்தார்கள். ஊரே அகல் வெளிச்சத்தால் மினுங்கியது. அன்னத்தாய் நீதிபதி வாலிஸின் வீடு முழுக்க விளக்கு ஏற்றியிருந்தாள். வாலிஸும், கொம்பையாவும் அன்னத்தாயும் வீட்டின் முற்றத்தில் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் வெளியே சென்றிருந்த ஹென்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அப்போது ஹென்றி தள்ளாடியபடி, மிகவும் சோர்வாக வீட்டின் உள்ளே வந்தான். வாலிஸ் அவன் குடித்துவிட்டு வந்திருப்பதாகச் சிறிய குரலில் சொன்னார். ஹென்றி அன்னத்தாயைப் பார்த்ததும் ஓவென்று கதறி அழுதபடி ஓடி வந்து கட்டிக்கொண்டான். வாலிஸ் ஹென்றியிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். ஹென்றி சிறு குழந்தைபோல ஏங்கி ஏங்கி அழுதான். ஒரு கட்டத்தில் அழுகையோடே சொன்னான். நேற்று தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண் நேற்று இரவு இறந்துவிட்டாள். அவள் கணவனிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். கேட்காமல் அந்தப் பெண்ணை அழைத்துப்போனான். இப்படியாகிவிட்டது என்று சொல்லிவிட்டு மீண்டும் கதறி அழுதான்.இப்போது அன்னத்தாய் ஹென்றியைத் தேற்றும் விதமாய் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அவன் முதுகை நீவி விட்டாள். வாலிஸும், கொம்பையாவும் இதைப் பார்த்தபடியிருந்தார்கள். வேறொரு புறம் வேகமாக பெண்கள் சிறைச்சாலைக்கான கட்டடம் எழும்பிக் கொண்டிருந்தது.
மகன் வழி - (1978 - வேனல் காலம்)
``பயணிகள் வலசை போகும் மனிதப் பறவைகள்''
~ பராரிகள்
பாண்டேஸ்வரம் சூளையில் பார்வையற்றவரின் இரண்டு மகள்களும் தன் தந்தையை அழைத்துக்கொண்டு மீண்டும் அவர்கள் மூன்று ஆண்டு களாகத் தங்கியிருந்த அதே தகரக் கொட்டகைக்கு வந்தார்கள். ``நீங்கல்லாம் நரகத்துக்குத்தாண்டா போவீங்க. கடவுள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் இருக்கான். எனக்கு இல்லாட்டியும் நீங்க அவனுக்குக் கணக்கு சொல்லணும்'' பார்வையற்றவர் சூளை ஏசண்டை நோக்கி சபித்தார். ``கடவுளும் உங்களப்போல குருடுதான். பேசாம இருங்க'' அவரின் மனைவி மௌனமாய் அழுதபடியே அவரை இருத்தினார். தன் இளைய மகளிடம் நுனியில் கிழிந்திருந்த ஒரு கிழிசல் பையைக் கொடுத்துவிட்டு ``காயாம்பூ, அவங்ககிட்ட போயி அரிசிக்கும் பருப்புக்கும் விறகுக்கும் என்ன வழின்னு கேட்டுட்டு வா'' அவள் அம்மா அவளைக் கிளப்ப, அவள் ஏசண்டைத் தேடி அங்கு வந்தாள். அப்போது சூரன் அங்கு ஏசண்டை சவுடு மண்ணுக்குள் போட்டு அடித்துப் புரட்டி கட்டியுருண்டு கொண்டிருந்தான். எல்லோரும் விலக்கி விடாமல் அவர்களைச் சுற்றிக் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஓரிரண்டு பேர் ஏசண்டைக் காப்பாற்ற முன் வந்து சண்டையை விலக்கி விட்டார்கள்.

சண்டையை விலக்கி விட்டவர் கேட்டார், ``எந்தச் சூளையா நீ, இங்க வந்து இவரை அடிச்சிக்கிட்டு இருக்க?'' சூரன் இரைத்து மூச்சு வாங்கியபடியே சொன்னான். ``நான் இன்னிக்கி தாங்க இங்க வாரேன். கைல ஒத்த ரூபாகூட வாங்கல. எனக்கு பதிலு வேற யாரோ வாங்கிட்டுப் போய்ட்டதா பொய் சொல்றாரு. எனக்கு இந்த வேல வேண்டாம். வெளிய விடுங்கன்னா விட மாட்டேங்குறாரு.'' சண்டையை விலக்கி விட்டவர் எதுவும் பேசாமல் மொத்தக் கூட்டத்தையும் அங்கிருந்து கிளப்பி விட்டார். ``போங்க... போயி வேலையப் பாருங்க.'' மொத்தக் கூட்டமும் கலைந்து வேலையைப் பார்க்கச் சென்றது. சூரன் மீண்டும் வந்து ஏசண்டின் கழுத்தைப் பிடித்தான். அந்த ஆள் மீண்டும் வந்து சூரனைப் பிடித்துக்கொண்டார். ``விடு தம்பி.சொன்னாக் கேளுங்க. அப்புறம் சூள அடுப்புக்குள்ள போட்டு விறகோட விறகா எரிச்சிப் போட்றப் போறாங்க. ஒருத்தரும் கேக்க முடியாது.''
ஏசண்ட்டுக்கு இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து ``அவங்கிட்ட வெவரத்தச் சொல்லி வை மாடசாமி'' தன்மேல் ஒட்டியிருந்த சவுடு தூசியைத் தட்டியவாறே அவரிடம் சொன்னான். மாடசாமி சூரனிடம் பேசினார். ``உண்மையிலேயே நீ இங்க புதுசுதான்போல. அதான் வெவரம் தெரியாம ஏசண்ட அடிக்கிற. இங்க ஏசண்ட் மனசு வெச்சாத்தான் எல்லாம் நடக்கும்.''
சூரன் மறுபடியும் சொன்னான், ``எனக்கு இங்க பிடிக்கலங்க. வெளில போகணும். விடச் சொல்லுங்க.''
``என்னப்பா நீ குழந்தை மாதிரி பேசுற. நான்லாம் இங்க பத்து பனிரெண்டு வயசுல வந்தேன். இந்தா நாப்பத்தேழு வயசு ஆகிடுச்சி, இன்னும் வெளிய போக முடியல. இங்க பிடிக்காட்டி வேற சூளைக்கிப் போய்டு.''

மாடசாமி ஏசண்டிடம் கத்திக் கேட்டார். “இவனுக்கு செட்டு குடுத்தாச்சா?”
``குடுத்தாச்சி குடுத்தாச்சி. அரிசி, பருப்பு வாங்குறதுக்கு மட்டும் வெவரத்தச் சொல்லி அனுப்பு.''
காயாம்பூ இப்போது ஏசண்டிடம் அரிசி, பருப்பு, விறகுக்கு விவரம் கேட்டுக்கொண்டிருந்தாள். ``அதே செட்டுதான. போ, வந்து குடுக்கச் சொல்றேன். பெரிய இது மாதிரி குடும்பத்தோடக் கிளம்பி வெளியில போகணும்னு வந்து நிக்கிறீங்க. உங்க அப்பாகிட்ட சொல்லி வையி. இதுக்குள்ளதான் உங்க ஆயுசு. இதுக்குள்ளயே கல்யாணம் காச்சியெலாம் முடிச்சிக்கச் சொல்லு. போ.''
காயாம்பூ அங்கிருந்து கிளம்பினாள். சூரனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு நடந்தாள். அவள் நடையில் எரிச்சலும் கோபமுமிருந்தன.
``சும்மாவே நம்ம சூளைல எவனும் வேலைக்கி தங்க மாட்டேங்குறான்னு மொதலாளி என்னப் பிடிச்சி சகட்டு மேனிக்குத் திட்டுறாரு. இதுல இவன் வேற என்ன அடிக்க வாரான். நானா வாங்கன்னு வெத்தல பாக்கு வெச்சிக் கூப்பிடுறேன். அவனுகளா வந்துட்டு, காசும் வாங்கிட்டு இப்போ உடனே வெளிய போகணும்னா எவன் விடுவான், சொல்லு'' ஏசண்ட் மாடசாமியிடம் கத்திச் சொன்னார்.
சூரன் திரும்பவும் ஏசண்டிடம் திமிறிக்கொண்டு சண்டைக்குப் போனான்.
மாடசாமி சமாதானப்படுத்தி தன்னுடைய செட்டுக்கு சூரனை அழைத்து வந்தார். இருவரும் வாசலில் அமர்ந்துகொண்டார்கள். அவர் மனைவியிடம் சொல்ல, தட்டில் சோறு போட்டு எடுத்து வந்து சூரனிடம் கொடுத்தார்கள். சூரன் தயங்கியபடி இருக்க ``அதெல்லாம் ஒன்னும் இல்ல. வாங்கிக்கோ’’ என்று சொன்னதும் வாங்கி அவதி அவதியாக சாப்பிடத் துவங்கினான். எதிர்வரிசை செட்டிலிருந்து காயாம்பூவின் அக்கா சூரனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
~ ஓடும்