மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 23

ஏழு கடல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

``எங்கு சுதந்திரமான உணர்விருக்கிறதோ பயணி

அதை நோக்கிதான் பயணித்துக்கொண்டிருப்பான்.’’

- பராரிகள்

தந்தை வழி - 1913 முதல் 1915 வரை (பிரிட்டிஷ் இந்தியா)

நீதிபதி எட்வர்ட் வாலீஸின் மகன் மருத்துவர் ஹென்றி, முந்தையநாள் தன்னிடம் வைத்தியம் பார்க்க வந்த கர்ப்பிணிப் பெண் இறந்ததால் மனம் உடைந்து தேம்பித் தேம்பி அழத் துவங்கினான். அன்னத்தாய் அவனைத் தேற்றும் விதமாய் அணைத்துக்கொண்டு அவன் முதுகை நீவி விட்டாள். வாலீஸும், கொம்பையாவும் அதைப் பார்த்தபடியிருந்தார்கள். அந்த இரவு அன்னத்தாய் ஹென்றியை மிகவும் பரிவோடு பார்த்துக்கொண்டாள். இரவெல்லாம் ஹென்றி உறங்காமல் அனத்திக்கொண்டேயிருந்தான். ஹென்றிக்கு அன்னத்தாயின் நெருக்கம் ஓரளவு ஆறுதலாயிருந்ததென்றாலும் அந்த அதிகாலை முதல் ஹென்றியின் உடல் தாளமுடியாத காய்ச்சலால் மிகவும் துன்பப்பட்டது. வெயில் காலத்து வெற்றிலையைப்போல வதங்கிப் போனான். ஹென்றி தனது சிகிச்சையகத்திலிருந்து மருந்து எடுத்து உண்டான். காய்ச்சல் கட்டுப்படவில்லை. இந்தியாவிற்கு வந்ததிலிருந்து இது அடிக்கடி வருவதுதான். பருவமாற்றங்களினால் வருவது. எப்படியும் மூன்றாம் நாள் காய்ச்சல் இந்த உடலை விட்டுப் போய்விடுமென்று நம்பினான். ஆனால், காய்ச்சல் பெருகி உடல் மேலும் மேலும் கொள்ளிக்கட்டையைப் போல் கொதித்தது. உணவெடுக்க முடியாமல் ஓங்களித்துக் கொண்டேயிருந்தான். வாய்க்கு ஏதும் பிடிக்கவில்லை. கசப்படித்துக் கிடந்தது. விஷக்காய்ச்சலாயிருக்குமென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். வாலீஸ் தனக்கு நன்கு தெரிந்த வேறு ஆங்கில மருத்துவர்களை வரவழைத்துப் பார்த்தார். அவர்கள் புதிய புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதித்துப் பார்த்தார்கள். எதுவும் கைகொடுக்கவில்லை. ஹென்றி படுக்கையில் விழுந்து ஒரு வார காலம் ஆகிவிட்டது.

ஏழு கடல்... ஏழு மலை... - 23

ஒரு அதிகாலையில் கிறித்துவ பாதிரியாரும் இரண்டு கன்னியாஸ்திரிகளும் ஹென்றியின் வீட்டிற்கு பிரார்த்தனைக்காகவும், நோயாளிகளுக்கு வீட்டிலேயே வழங்கப்படும் அவஸ்தை அப்பம் கொடுப்பதற்காகவும் வந்தார்கள். அப்போதுதான் வீட்டிற்குள்ளிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து வருவதற்காக அன்னத்தாயின் பெயரை உச்சரித்தார் வாலீஸ். பதில் குரலில்லாமல் நெடுநேரம் மௌனமாயிருந்தது. நீதிபதி வேலையாளை எழுப்பி அன்னத்தாயின் அறைக் கதவைத் தட்டச் சொன்னார். அறைக்கதவை லேசாகத் தள்ளியபொழுது தானாகவே திறந்துகொண்டது. அறையில் அன்னத்தாயும் கொம்பையாவும் இல்லை. படுக்கையில் படுத்துறங்கிய சுருக்கம்கூட இல்லை.

வீட்டைச் சுற்றித் தேடினார்கள். எங்குமில்லை. வாலீஸுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. அன்னத்தாய் இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாக நினைத்தார். அரசாங்கக் காவலர்களுக்குத் தாக்கல் சொல்லச் சொன்னார். காவலர்கள் முதலில் அன்னத்தாயின் ஊருக்குத்தான் வந்தார்கள். ‘`அதிகாலையில் மூன்று அல்லது நான்கு மணியிருக்கும். அவர்கள் வீட்டு மாடு அடைக்கும் தொழுவத்தில் ஏதோ சப்தம் கேட்டு விழித்துப் பார்த்தபோது அன்னத்தாயும், அவளின் மகனும் தொழுவத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு செவலைக் காளைகளை வண்டியில் பூட்டிக் கொண்டிருந் ததாக வயதான தொழுவத்து வேலையாள் சொன்னார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 23

“நான் பார்த்தமாத்திரத்தில், ஏத்தா எப்போம் வந்தவென்று அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். அவ எதுவுமே பேசாமல் தம் மகனை வண்டியில ஏத்திக்கிட்டு ஊருக்கு வடக்குப் பக்கமா போனா. நானும் கொஞ்ச தூரம் அவ வண்டி பின்னாலேயே வெக்கு வெக்குன்னு ஓட்டமும் நடையுமா கேள்வி கேட்டுக்கிட்டே போனேன். அவ எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லல. அவ ஊர் முடியுற இடத்துல வண்டிமாட்டை நிறுத்தி இறங்கி கிழக்கு பாத்து ஊர வணங்கிட்டு கைப்பிடியளவு பிடிமண் எடுத்து சேல நுனில கொட்டி முடிஞ்சிகிட்டா. நான் திரும்பத் திரும்பக் கேட்டேன். ‘இந்த ஊருக்கு இனிமே திரும்ப வர மாட்டியா’ன்னு. அன்னத்தாய் அதுக்கும் எந்த பதிலும் சொல்லல. கொஞ்சம் தள்ளிப் போயி அவளும் அவள் மகனும் ஊர்க் குளத்துல நீர் மொண்டு தொண்டைய நனச்சிக்கிட்டாங்க. குளத்தப் பாத்தும் ஒரு கும்பிடு. நான் அங்கேயே நின்னுட்டேன் அன்னத்தாயும், பிள்ளயும் வண்டியேறி திரும்பவும் மேற்க தேனூர்ப் பாதைக்கு வண்டிய வேகமாகப் பத்திக்கிட்டு மறைஞ்சிட்டாங்க'' என்று தொழுவத்து வேலையாள் சொன்னார்.

காவலர்கள் நீதிபதி வாலீஸிடம் தாக்கல் சொல்லிவிட்டு அன்னத்தாயைத் தேட ஆட்களை முடுக்கிவிட்டார்கள். அடுத்த நாள் மாலைக்குள் துப்புக் கிடைத்தது. தென்கரை ஏரி தாண்டி காட்டுக்குள் பழைய பாண்டிய ராசக்கமார்கள் கட்டிய பெரிய சிவன் ஆலயமொன்று இருந்தது. அன்னத்தாயும் அவள் பிள்ளையும் இரண்டு நாள்களாக அதற்குள் இருப்பதாக. அரசாங்கக் காவலர்கள் சிவனாலயம் நோக்கிக் கிளம்பினார்கள்.

மனிதர்களால் கைவிடப்பட்ட அந்தச் சிவன் ஆலயத்தின் கோபுரம் உயரமாய் மரங்களினூடாக மறைந்து நின்றது. கோபுரம் முழுக்க சிறு சிறு செடிகளும் சிறிய ஆல விழுதுகளும் வளர்ந்து நின்றன. கடவுளர்களின் சிலைகள் முகம் சிதைந்து, மூக்குடைந்து, பாசி பிடித்து கறுத்துப்போயிருந்தன. கோயிலின் உள்ளே தரையெல்லாம் கல்லிடுக்குகளில் பயிரும் பச்சையமுமாய் முழங்காலுக்கு வளர்ந்திருந்தது. கோயிலெல்லாம் புறாக்கள் குணுகும் சப்தம், கல்சுவர்களில் எங்கிருந்தோ ஈரம் வடிந்துகொண்டிருந்தது. ஆலயம் முழுக்க வவ்வால்களின் ஈரப் புழுக்கை நாற்றம். கோயிலின் மூலையில் பெரிய வில்வ மரம் வளர்ந்து நின்றது. கருவறையில் அரை ஆள் உயரத்திற்குப் பெரிய லிங்கமொன்று ஆவுடையோடிருந்தது. லிங்கத்தின் அருகில் அன்னத்தாய் சிறிய அகல் விளக்கேற்றியிருந்தாள். விளக்கின் வெளிச்சத்தில் லிங்கம் கருகருவென்று தெரிந்தது.

அடுத்த நாள் சூரிய உதயத்தின்போது காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது அன்னத்தாய் கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு சிதைந்த கடவுளர்களின் தோளில் மிதித்தபடி ஒவ்வொரு சிலையினிடையே வளர்ந்திருந்த கருந்துளசியைத் தேடித் தேடிப் பறித்துக்கொண்டிருந்தாள். காவலர்கள் வருவது ஏற்கெனவே அவள் தீர்மானித்ததுதான் என்பது போல மாடுகள் வண்டியில் பூட்டப்பட்டுத் தயாராக இருந்தன. கொம்பையா ஓரிடத்தில் வில்வ மரத்தில் கற்களை எறிந்து எறிந்து மரங்களிலிருந்து விழும் வில்வ இலைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தான். காவலர்கள் ‘ஏன் தப்பித்து வந்தாய்’ என்று கேட்டபோது, அன்னத்தாய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவர்களோடு வந்திருந்த தொழுவத்துக் காவல்காரரிடம் வண்டியையும், மாட்டையும் ஒப்படைத்துவிட்டு காவலர்களின் குதிரை வண்டியில் மகனோடு ஏறிக்கொண்டாள். அன்று பின் மதிய வேளையில் குதிரை வண்டி வாலீஸின் வீட்டை அடைந்தது. வாலீஸ் வாசலில் மிகுந்த கோபத்தோடு நின்றுகொண்டிருந்தார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 23

‘‘உன்ன என் வீட்டுக்குக் கூப்பிட்டு வந்து வச்சிருந்ததுக்கு எனக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்திட்ட. எந்த நேரமும் என் மேல ‘மெட்றாஸ் சிட்டி சிவில் கோர்ட்’ நடவடிக்க எடுக்கலாம். அரசாங்கத்த பொறுத்தவரைக்கும் நீ தப்பிச்சிப் போயி திரும்பப் பிடிக்கப்பட்டதாத்தான் பதிவு செய்வாங்க. உனக்கு தண்டனைக் காலம் இன்னும் கூட வாய்ப்பிருக்கு.''

அன்னத்தாய் அவரின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வீட்டின் உள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தாள். ஹென்றியின் சப்தம் ஏதாவது கேட்கிறதா என்று வீட்டின் உள்ளே கண்களையும் காதுகளையும் சுழற்றிப் பார்த்தாள். வீட்டின் உள்ளிருந்து உருக்கமான ஒரு பெண்குரலில் ஆங்கிலப் பாடலொன்று ஒலித்தது. அன்னத்தாய் தன் மகனை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழையப் போனாள். வாலீஸ் அவளைத் தடுத்துவிட்டார். ‘‘இனி நீ இங்கிருக்க அனுமதியில்லை. காவலர்களோடுதான் செல்ல முடியும்.’’

அன்னத்தாய் வாலீஸிடம் கெஞ்சுவதைப் போல் பார்த்தாள். ``இன்று மாலை வரை இங்கு ஹென்றியின் அருகிலிருக்க அனுமதி தரவேண்டும். மாலையில் என்னத் தூக்கில் போட்டாக் கூடப் பரவாயில்ல’’ என்று தீர்மானமாய்ப் பேசியபடி, அவரின் பதிலை எதிர்பார்க்காமல் மகனை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஹென்றியின் அறை நோக்கிப் போனாள். ஹென்றி மெலிந்து முனங்கியபடி படுத்திருந்தான். படுக்கையின் அருகிலிருக்கும் மரநாற்காலியில் நாற்பது வயதிலிருக்கும் ஒரு வெள்ளைக்கார கன்னியாஸ்திரி கண்களை மூடியபடி பிரார்த்தனைப் பாடலை உருக்கமாகப் பாடியபடியிருந்தார். ஹென்றியின் கண்கள் மூடியபடியிருந்தன. ஆனால் அவன் உதடுகள் பிரிந்து சிறிய குரலில் ஏதோ ஒரு பெயரை உச்சரிப்பதைப் போலிருந்தது. அன்னத்தாய் அந்த உதடுகளைக் கூர்மையாகப் பார்த்தாள். ‘‘அன்னா... அன்னா...'' என்றும், சில நேரங்களில் அது ‘‘கொம்பா... கொம்பா'' என்றும் உச்சரித்தன. வாலீஸ் பின்னாலேயே வந்து, அவரும் பாடல் முடிவதற்காகக் காத்திருந்தார். பாடல் முடிந்ததும் அன்னத்தாய் ஹென்றி படுத்திருக்கும் படுக்கையின் நுனியில் அமர்ந்து ஹென்றியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். ஹென்றி இப்போது தன் கண்களை அரைவாசியாகத் திறக்க முயன்றான். கன்னியாஸ்திரி `இவள்தானா’ என்பதுபோல் முகத்தில் ஒரு கேள்விக்குறியோடு வாலீஸைப் பார்த்தாள். வாலீஸ் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை ஆட்டினார். ‘இனி அவள் பார்த்துக்கொள்வாள்’ என்பது போல் இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்

கருந்துளசியை வேகவிட்டு நீரெடுத்துப் புகட்டினாள். வில்வ இலைகளைக் கொதி நீரில் போட்டு அந்த நீரால் அவன் உடலைத் துடைத்தெடுத்தாள். வாலீஸ் கொம்பையாவிடம் ``ஏன் இங்கிருந்து போனீங்க?’’ என்று கேட்டார். அம்மா ஹென்றிக்காக இரண்டு நாள்கள் உண்ணாமல், உறங்காமல் சாமி கும்பிடவும், அந்தக் கோயிலிலிருக்கும் மூலிகைச் செடிகளை எடுத்துவரவும் தன்னை அழைத்துப் போனதாகச் சொன்னான். ஹென்றி மூன்றே நாள்களில் உடல் தேறி அமர்ந்தான். வாலீஸ் தன் ஒரே மகனை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றிக் கொடுத்துவிட்டதாகக் கண்கலங்கிப் பேசினார்.

ஹென்றி மீண்டும் நடமாடத் துவங்கி முற்றத்துப் புல்தரையில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்திய நாளில் மீண்டும் அதே கன்னியாஸ்திரி அங்கு வந்தார். ஹென்றியின் முகத்தில் நோயின் கொடுங்களை போய் மீண்டும் சந்தோசத்தின் ரேகை விரிய ஆரம்பித்ததைப் பார்த்து ஹென்றியிடம் ‘அன்னத்தாய்தான் உன்னைக் காப்பாற்றினாள்’ என்று சொன்னார். மேலும் தன்னை ‘சலேத் ' என்று அன்னத்தாயிடம் அறிமுகம் செய்துகொண்டார். கன்னியாஸ்திரி ஹென்றியிடம் நேரடியாகவே கேட்டார். ‘‘உனக்கு அன்னத்தாயைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமிருக்கிறதா?”. ஹென்றி முகத்தில் பெரிய சந்தோசத்தோடு ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை ஆட்டினான். ஆனால் அன்னத்தாயின் முகத்தில் பயம்தானிருந்தது.

‘எந்த நேரமும் தான் சிறைச்சாலையின் இறுக்கமான சுவர்களுக்குள் தள்ளப்படலாம். இந்த வாழ்க்கை தற்காலிகமானதுதான்’ என்பதை அவள் எப்போதும் மனதில் இருத்தி வைத்திருந்தாள். ஆனாலும் ஹென்றியின் மீது அவளுக்கு இன்னதுதான் என்று சொல்ல முடியாத ஒரு பேரன்பு இருந்தது. அவள் அதற்குப் பெயர் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. கொம்பையா ஹென்றியோடு நன்றாக ஒட்டிக்கொண்டான். அவர்களோடு பழகி ஒரு சில பொருள்களின் பெயர்களை ஆங்கிலத்தில் உச்சரிக்கக்கூடக் கற்றுக்கொண்டுவிட்டான். ஒருவேளை தாம் சிறைச்சாலைக்குள் செல்ல நேர்ந்தால்கூட, கொம்பையாவை ஹென்றியிடம் விட்டுவிட்டுச் செல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள்.

கன்னியாஸ்திரி சலேத், தான் திருப்பணி செய்யச் செல்லவிருக்கும் கொடைமலையிலிருக்கும் தேவாலயத்துக்கு வாலீஸின் குடும்பத்தையும், அன்னத்தாயையும் அழைத்தார். வாலீஸ் இன்னும் இரண்டொரு வாரத்தில் கோடைக்காலம் ஆரம்பித்ததும் தான் எல்லோரையும் அழைத்துக்கொண்டு வருவதாக வாக்களித்தார். சொன்னதுபோலவே அந்த ஆண்டு கோடைக்கு அன்னத்தாயையும் அழைத்துக்கொண்டு கொடை மலையேறினார்கள்.

கொடைமலை தேவாலயத்தில் யேசுநாதர் சிலுவையில் அறையும் புனித வெள்ளிநாளின் முதல்நாள் நடக்கும் சடங்கான பாதம் கழுவும் சடங்கில் கொம்பையாவின் காலை நீரூற்றி தேவாலய பாதிரியார் கழுவும்பொழுதுதான் அருகிலிருந்த கன்னியாஸ்திரி சலேத் பார்த்தார், கொம்பையாவின் காலில் கருநீலத்தில் அவ்வளவு பெரிய மச்சமிருப்பதை. ஆலய சடங்குகள் முடிந்ததும் அன்னத்தாயிடம் வந்து சொன்னார். ‘‘எனக்கு இதப் பாத்தா யேசுநாதர் பாதத்துல அடிச்ச ஆணிதான் ஞாபகத்துல வருது.’’ அன்னத்தாய் சிறிய பொய்க் கோபத்துடன் சொன்னாள். ‘‘வேற ஏதாவது நல்லபடியா சொல்லுங்க. இது கிருஷ்ணன் மச்சம்.'' இருவரும் அமைதியானார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் சிரித்து சகஜமானார்கள்.

அந்தக் கோடைக்காலம் முழுக்க அன்னத்தாயும், கொம்பையாவும் மிகுந்த சந்தோசமாக இருந்தார்கள். அந்த நாள்களில் கொம்பையாவும், அன்னத்தாயும் ஹென்றியோடு தான் உறங்கினார்கள். இருவரும் ஒரு நிமிடம் கூட ஹென்றியை விட்டுப் பிரியவில்லை. கொம்பையா உறங்கியதும் வாலீஸ் கொம்பையாவை எடுத்துவந்து தனது அறையில் தன்னோடு படுக்க வைத்துக்கொண்டார். பொழுது விடிந்ததும் அன்னத்தாய் மீண்டும் கொம்பையாவை எடுத்து வந்து ஹென்றியின் அருகில் கிடத்தினாள். ஹென்றியின் மேல் காலோ அல்லது கையோ போட்டபடி, சில நேரங்களில் ஹென்றியின் வயிற்றுப் பகுதியில் இடுங்கிக்கொண்டு உறங்கினான். ஹென்றியும் அவனை அணைத்தபடி உறங்கினான். அந்தக் கோடையின் முடிவில் மலையை விட்டுக் கீழிறங்குகையில் அன்னத்தாய் கர்ப்பமடைந்திருந்தாள்.

எல்லோரும் கொடைமலையிலிருந்து மீண்டும் தம் வீட்டிற்கு வந்தபோதுதான் வாலீஸிற்கு அந்தக் கடிதம் வந்திருந்தது.

வாலீஸ் உடனடியாகத் தான் மட்டும் மெட்றாஸுக்கு கிளம்பி, தலைமை அதிகாரியின் அலுவலகத்தை வந்தடைந்தார். அவரின் முன்னால் காலணா குறைவில்லாமல் கணக்கும், ரசீதும் ஒப்படைத்தார். கையிலிருந்த ஏழாயிரத்து இருநூறு ரூபாயையும் அதற்கு மாதம் இவ்வளவென வட்டியும் கணக்கிட்டுத் திரும்ப ஒப்படைத்தார். ‘‘இவ்வளவு பணம் இருக்கையில் நீங்கள் ஏன் பணமில்லை என்று பொய் சொன்னீர்கள்?’’ என்று அதிகாரி கேட்டார்.

சிறைச்சாலைப் பணி நிறைவடைந்துவிட்டால் அன்னத்தாய் தன் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலை வருமென்பதும், இப்போது தன் மகன் ஹென்றியும், அன்னத்தாயும், அவளின் மகன் கொம்பையாவும் குடும்பமாக சந்தோசமாக வாழ்வதையும், அன்னத்தாய் இப்போது தன் மகனால் கர்ப்பம் தரித்திருப்பதையும் சொன்னார். ‘‘இந்தக் காரணங்களினால் இப்படிச் செய்ய நேர்ந்துவிட்டது. தயவுசெய்து அந்தப் பெண்ணுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளியுங்கள்’’ என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

நிர்வாகம் மறுத்துவிட்டது.

அடுத்த இரண்டு நாள்களில் கர்ப்பிணியான அன்னத்தாய் மெட்றாஸ் சிறைக்குச் செல்லும்படியாகிவிட்டது. ஹென்றிக்கு மீண்டும் விஷக்காய்ச்சல் படுத்தத் துவங்கி, பதிமூன்றாம் நாள் இறந்துபோனான். அன்னத்தாய்க்கு சிறையில் குழந்தை பிறப்பதில் சிக்கலாகி அவளும் அடுத்த ஆறேழு மாதங்களில் இறந்து போனாள். நீதிபதி வாலீஸ், தினமும் கட்டி முடிக்கப்பட்ட அந்தப் பெண்கள் சிறையின் முன் நின்று அதன் முகப்புச் சுவரை கற்கள் கொண்டு எறிந்துகொண்டேயிருந்தார். ‘‘இந்த ஊர்ல பெண்கள் ஏற்கெனவே சிறைலதான இருக்காங்க. சிறைக்குள்ள இன்னொரு சிறையா?'' எல்லோரும் அவரைப் பைத்தியம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். கொம்பையா அடுத்த சில வருடங்களில் மெல்ல அந்த வீட்டிலிருந்து வெளியேறி மாட்டுச் சந்தைக்குள் நுழையும்படியாகிவிட்டது.

மகன் வழி - (1978 - வேனல் காலம்)

‘`பயணி தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தன்னைக் கொஞ்சம் விட்டு வருகிறான்''

- பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 23

மாடசாமியின் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சூரனை நோக்கி எதிர்வரிசை தகரக் கொட்டகையிலிருந்து காயாம்பூவின் அக்கா வந்துகொண்டிருந்தாள். சூரன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வந்தவள் நேராக மாடசாமியின் காதில் போய் ஏதோ சொன்னாள். மாடசாமி அவளைக் கூர்ந்து பார்த்துவிட்டு ‘‘பரம சுந்தரி, அப்படியிருக்க வாய்ப்பில்லம்மா. நான் விசாரிச்சுச் சொல்றேன். நீ போ.'' அவள் சமாதானம் ஆகாமல் ‘இப்போவே கேளுங்கள்’ என்பதுபோல் அதே இடத்தில் நிலையாக நின்று கொண்டி ருந்தாள். ‘‘நாந்தேன் சொல்றேன்ல. பெறவு கேட்டுச் சொல்றேன். கிளம்பு.''

பரமசுந்தரி சூரனை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே எதிரிலிருக்கும் அவளின் கொட்டகைக்குக் கிளம்பினாள். மாடசாமி சூரனிடம் தீர்மானமாகக் கேட்டார். ‘‘உண்மையச் சொல்லு. நீ இங்க எத்தனாம் நெம்பர் சூளையில வேல பாத்த. நீ இந்தச் சூளைக்குள்ள இன்னிக்கிதான் வாரேன்னு சொல்ற. ஆனா உன் தலையெல்லாம் செம்புழுதியாக் கிடக்கு.'' சூரன் பதில் சொல்ல வருவதற்குள் ஏசண்டு எல்லோரையும் வேலைக்கு வரும்படி அழைத்தான். மாடசாமி சூரனை அழைத்துக்கொண்டு மண் குழைக்கப் போனார். மண் குழைத்துக்கொண்டே சூரன் தனது முன்கதையைச் சொல்லி முடித்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 23

கடைசியில் சூரன் மெதுவான குரலில் கேட்டான். ‘‘இங்கயிருந்து தப்பிக்க எதாவது வழியிருக்கா?''

‘‘அப்படியிருந்தா ஏன் எல்லா சனமும் இங்க இருக் காங்க?எல்லோரும் விதி முடியுற வரைக்கும் இங்க உள்ளதான் இருந்து சாகணும். தப்பிக்க முடியாது. நீ இங்க வந்து இன்னும் ஒரு ராத்திரிகூட பாக்கல. இங்க தங்கிப் பாத்தாத் தெரியும். இரவு யாரும் வெளிய நடமாட முடியாது. பெரிய பெரிய வேட்டை நாய்கள அவுத்து விட்ருவாங்க. இங்க ஆயிரத்துக்கும் மேல இருக்கு. பாவம், அதுகளும் நம்மளப் போல வெளிய தப்பிக்க முடியாம தப்பிக்க நினக்கிறவங்கள விரட்டி விரட்டிக் கடிக்கிறதுக்காக இருக்கு. போதாக் குறைக்கு இரவு காவலுக்கு நூறு அடிக்கி ஒரு ஆள் போட்ருப்பானுங்க. நெடுநெடுன்னு பத்தடில கோட்ட சுவரு வேற. எத்தன மைலுக்கு இருக்குன்னு யாருக்கும் தெரியாது.

அதவிட முக்கியமா, குழந்தைங்க எல்லாத்தையும் நம்மகிட்டயிருந்து நாலு அஞ்சி வயசுலேயே பிரிச்சி எடுத்துகிட்டுப் போயி கல்லு அடுக்க விட்ருவானுங்க. அவங்க எல்லாத்தையும் அங்கங்க தனித்தனியா ஒரு சூளைல வேலைக்கு விட்ருவானுங்க. நம்ம குழந்தைங்க எந்தச் சூளைல இருக்குன்னு அவங்களுக்குத்தான் தெரியும். வருஷம் ஒருக்கா, ரெண்டு தரம் கூட்டிட்டு வந்து நம்ம கண்ணுல காட்டுவானுங்க. எல்லாம் ரெண்டு நாளைக்கித்தான். அப்புறம் திரும்ப கூட்டிட்டு போயிட்டு வேற சூளைல விட்ருப்பானுங்க.

அதவிட முக்கியமா இங்க பதினேழு, பதினெட்டு வயச தாண்டியாச்சுனா பொம்பள எப்பவுமே பிள்ள பெத்துக்கிட்டே இருக்கணும். ஆம்பள, பிள்ள குடுத்துக்கிட்டே இருக்கணும். இங்க வந்ததுக்குப் பின்னால என் மனைவி பதினேழு பிள்ள பெத்துருக்கா. என் மொத மக மட்டும்தான் இங்க வாரதுக்கு முன்னாடி பெத்தது. மத்த எல்லாக் குழந்தைகளும் இங்க வந்து பெத்ததுதான். ஆனா ஒரு குழந்தகூட இப்போ எங்ககூட இல்ல. என் மனைவிக்கு இப்போ வயசாகிடுச்சி. முடியல. இப்போ ரெண்டு வருசமாத்தான் அவ கர்ப்பப்பை ஓய்வா இருக்கு. ஆனா நான் இன்னும் யார் யாருக்கோ பிள்ள கொடுத்துக்கிட்டுதான் இருக்கேன். வேற வழியில்ல. இல்லாட்டி இங்க உயிர் வாழ முடியாது. எங்கயும் தப்பிச்சும் வாழ முடியாது... உயிர் பிழச்சி வாழ்றதே இங்க பெரிய விஷயம். ஆம்பள, பொம்பள, சின்னப் பிள்ளைங்க, வயசானவங்க எதுவும் பாக்க மாட்டானுங்க. தப்பிக்க நினச்சா உடனே கொன்னுடுவானுங்க.

ஏழு கடல்... ஏழு மலை... - 23

இங்க பொறக்குற எல்லா ஆம்பளப் பிள்ளைகளுக்கும் காடன், மாடன், அக்கய்யா இந்தப் பேருங்கதான் வைக்கணும். பொம்பளப் பிள்ளைங்கனா வள்ளியம்மா, பேச்சியம்மா, நஞ்சம்மா, இப்படி கொஞ்ச பேருதான் வைக்கலாம். இங்க பொறந்த புள்ளன்னு பேர வச்சிக் கண்டுபிடிச்சிரலாம். ஆனா யாரு பிள்ளைன்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம். எப்போவது நம்ம சொந்தப் பிள்ளைங்கள நம்மகூடவே வேல பாக்குறப்போ பாப்போம். அவ்வளவுதான், எங்களுக்கு இந்த வாழ்க்க பழகிடுச்சி.

அந்த பிள்ள பரமசுந்தரிக்கி இப்போதான் முத பிள்ள பொறந்துச்சி. அத சரியாக்கூட அவ காங்கல. எங்கயோ போயி விட்டுட்டானுங்க. அதான் பாவம் தட்டழியுறா.''

சூரனுக்கு இந்த இடத்தின் மீது இப்போது பயம் தொற்றிக்கொண்டது.

‘‘உன்னையும் கூப்பிடுவானுங்க. நீயும் இங்க யாருக்காவது பிள்ள கொடுக்கணும். இங்க எந்தப் பெண் வயிறும் சும்மா இருக்க முடியாது. நாப்பது அம்பது வருசமா இந்தச் சூளைங்க இருக்கு. இங்க எந்தக் குழந்தைக்கும் நிரந்தரமா அம்மாவும் கிடையாது, அப்பாவும் கிடையாது. ஒரு சிலர் மட்டும் வெளியயிருந்து கொத்தடிமையா வந்தவங்க. குடும்பமா இருப்பாங்க. சில பேர் கொஞ்ச நாளைக்கி மட்டும் ஒரு குடும்பமா மாறிப்பாங்க. இது ஒரு வினோதமான அதே நேரம் கொடூரமான உலகம். இங்க இருந்து யாரும் தப்பிக்க முடியாது.’’

~ ஓடும்

12- 06 -1915

மெட்றாஸ்

...பெண் கைதிகளுக்கான தனிச் சிறை கட்டும் பணிக்காய் இதுவரை மொத்தப் பணமும் அளித்திருந்தும் அதன் பணிகள் பாதிக்கு மேல் நடக்கவில்லை. நீங்கள் ‘நிர்வாகத்திடமிருந்து பணம் வரவில்லை. வந்ததும் பணியை முடிக்கலாமெ’ன்று சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். பணி நிறுத்தப்பட்டதற்குத் தகுந்த காரணமும், இதுவரை அனுப்பப்பட்ட தொகைக்கு தகுந்த கணக்கும் தாமதிக்காது நேரில் வந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதில் குற்றங்கள் ஏதும் நிரூபணமானால் தங்கள்மேல் நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் தயங்காது என்றும் குறிப்பிடுகின்றோம். மேலும், சிறை கட்டும் பணி முடிவடையும் வரை தங்கள் வீட்டிலிருக்கும் கைதியைத் தாமதிக்காது மெட்றாஸ் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

ஏழு கடல்... ஏழு மலை... - 23

(தலைமை அதிகாரியின் கையொப்பமும், அரசாங்க முத்திரையும்)