மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 25

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

``பயணம் தூரத்தாலும் உயரத்தாலும் ஆழத்தாலும் ஆனதல்ல;

அது தரும் அனுபவத்தாலானது’’

~ பராரிகள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

ந்த இரவில் அடைமழை பிடித்துக்கொண்டதால் வேறு வழியில்லாமல் கொம்பையா பஞ்சுப்பேட்டையில் தங்கும்படி யானது. நாளை காலை கிளம்பி தேனி மலைக்காட்டுப் பக்கம் மட்டக் குதிரைகளுக்கும், பொதி கழுதைகளுக்கும் நடக்கும் சந்தைக்குப் போகுற ஏற்பாடு. இன்று சாயந்தரமே கிளம்பினால்தான் நாளை காலை சந்தையை அடைய முடியும். வருடத்திலேயே சந்தை மூன்று நாளைக்குத்தான் கூட்டுவார்கள். மதியத்தில் கொண்டு வந்ததைப் போலவே அந்தோனி பித்தளைத் தூக்குகளில் இரவிலும் ஆதியப்பன் வீட்டிலிருந்து சோளச்சோறும், மாங்காய் அரிந்து போட்ட சாம்பாரும், கெட்டியாய் எண்ணெய்க் கத்திரிக்காய் வெஞ்சனமும், பிரண்டைத் துவையலும் கொடுத்தனுப்பியிருந்தார்கள். அந்தோனி எல்லோருக்கும் பரிமாற சாப்பாட்டை எடுத்து வைத்தார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 25

``மார்கழில இப்படி ஒரு மழைய கண்டுருப்போமா... ச்சே... நசநசன்னு கிழட்டு மழையாவுல இருக்கு'' அந்தோனி அலுத்துக்கொண்டார். மார்கழி மழையின் குளிர், சாணம் மொழுகிய தரையில் ஜிலீர் என்று கால் தொடைக்கு ஏறியிருந்தது. குளிருக்குக் காரசாரமாய்ச் சாப்பிடுவது நன்றாக இருந்தது. நாலைந்து உருண்டை சேர்த்து உண்டார்கள். பஞ்சுப்பேட்டையின் ஓடுகளில் மழைநீர் வழிந்து நீர்க்கோடாய் ஒழுகியது. கொம்பையா அதில் கை கழுவிவிட்டு இரண்டு கையையும் சேர்த்து வைத்து வழியும் நீரைப் பிடித்துத் தன் உறைந்த நாக்குக்குக் குடிக்கக் கொடுத்தார். சுருட்டு குடிக்க இடம்தேடினார். காலையிலிருந்து பஞ்சுப்பேட்டையில் சுருட்டு குடிக்க முடியாமல் பெருவாரியாய் அவதிப்பட்டுவிட்டார். இப்போது குடித்தே ஆகவேண்டும் போலிருந்தது.

அந்தோனி ``உரசிட்டு நெருப்புக் குச்சிய நல்லா மழத் தண்ணிக்குள்ள முக்கிப் போட்டுடுங்க. குடிச்சிட்டு சுருட்டுக் கங்கலையும் தண்ணிக்குள்ள நல்லா முக்கிடுங்க. பல வருசத்துக்கு முன்னாடி நெருப்புப் பிடிச்சி ஒரு அசம்பாவிதம் நடந்துபோச்சி. அதுல இருந்து பேட்டைக்குள்ள யாரும் நெருப்பும் வத்திப்பெட்டியும் எடுத்திட்டு வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இங்க பேட்டைக்குள்ள ரங்கநாதர் கோயிலுக்கு வெளிய இரவெல்லாம் பெரிய கல்விளக்கு எரிய விட்ருப்பாங்க, அதுல இருந்து நெருப்பு பிடிச்சிக்க வேண்டியதுதான்'' என்றார்.

கரியனும் மலையரசனும் ஆளுக்கொன்றாய் பெரிய யானை வயிறு போலிருக்கும் பஞ்சுப் போராவின் மேல் மல்லாந்து படுத்துக்கொண்டார்கள்.சுருட்டு குடித்துவிட்டு வந்து கொம்பையாவும் ஒரு பெரிய போராவின் மேல் துண்டை விரித்துப் படுத்துக்கொண்டார். நாய் அவரின் காலடியில் வந்து படுத்துக்கொண்டது. வேறொரு போராவின் மேல் படுத்திருந்த அந்தோனியிடம் கேட்டார். ``கொண்டைய ராஜு உம்ம முதலாளிக்கி உறவுக்காரரா?''

``அப்படிலாம் இல்லைங்க. ‘‘முதலாளிக்கி ரெம்ப வேண்டப்பட்டவரு. ஆத்தியப்பன் அண்ணாச்சிக்கி கொண்டையா மேல ரெம்ப மரியாத உண்டு. இந்தா தொங்குதுல, இந்தக் காலண்டர்ல இருக்குற சாமி படம் இவர் எழுதுனதுதான். நாலஞ்சி வருஷம் முன்னாடி மொத மொத அம்பாள் காப்பிக்காரங்க கடைல ஒரு காலண்டர் போடணும்னு சொன்னப்போ இவர்தான் இப்படி தேவகடாட்சமா தத்ரூபமா எழுதிக் குடுத்தாரு. அந்த வருசம் அந்தக் காலண்டருக்கு ஏக அடிபிடி. அம்பாள் காப்பிக்காரங்க அவங்க வாடிக்க ஆளுக்கு மட்டும்தான் குடுத்தாங்க. அத பாத்துட்டு அடுத்த வருஷம் எல்லா எண்ண கம்பெனிக்காரங்களும், பருப்பு மில்லுக்காரங்களும், பஞ்சு மில்லுக்காரங்களும் யாரு யாரையோ வரைய வச்சி காலண்டர் குடுத்தாங்க. ஒருத்தருக்கும் திருப்தி இல்ல. அம்பாள் காப்பிக்காரங்க குடுக்கற காலண்டர்ல இருக்குற தெய்வங்கள பாக்கும்போதே பரவசமா இருந்துச்சி.’’

போராவின் மேல் படுத்திருந்த கரியனும் மலையரசனும் எழுந்து உட்கார்ந்தார்கள். ``அவரப் பத்திச் சொல்லனும்னா கத கதயா சொல்லலாம் அம்புட்டு இருக்கு.’’

ஏழு கடல்... ஏழு மலை... - 25

``ஒரு காலத்துல நம்மள மாதிரி ஆளுங்கள கோயிலுக்குள்ள போறதுக்கே யாரும் அனுமதிக்கல. அப்படியே உள்ள போனாலும் எங்கயோ தூரமா நின்னு சாமி முகமே தெரியாம, இருக்குற திசைய பாத்து ஒரு கும்பிடு, அவ்வளவுதான். கும்பிட்ட சாமியே மனுஷன் மாதிரி எதுத்து வந்து நின்னாலும் யாருக்கும் அடையாளம் தெரியாது. அந்த மாதிரி இருந்தப்போதான் இவரு வரைஞ்ச காலண்டர் சாமி எல்லா வீட்டுக்குள்ளயும் வந்துச்சி. மக்களுக்கெல்லாம் புல்லரிச்சுப் போச்சி. நெதம் நெதம் கண்ணு முன்னாடி சாமிய இவ்வளவு பக்கத்துல பாப்போமான்னு. எல்லாம் கண்ணாடி வெச்சு சட்டம் அடிச்சி சொவத்துல மாட்டிக்கிட்டாங்க. ஆத்தியப்பன் அண்ணாச்சி பஞ்சி யேவாரத்துக்கு வடநாட்டுக்கெல்லாம் போய் வாராருல, அங்ககூட இவர் வரஞ்ச சாமிங்க படம்தான் எல்லாச் சொவத்துலயும் காலண்டரா தொங்கிட்டுக் கிடக்குன்னு சொல்வாரு. எல்லோரும் எங்கெங்கயோ புரச்சி வருது, புரச்சி வருதுன்னு சொல்றாங்க... என்னக் கேட்டாக்க எல்லார் வீட்டுக்கும் சமமா சாமிய கூட்டிட்டு வந்தாரு பாருங்க. இதுதான் பெரிய புரச்சி.''

கொம்பையா ஆமோதிப்பதுபோல் தலையாட்டினார்.

``கொண்டையாவப் பத்திப் பேசுறதுனா அவர் வரஞ்சத நமக்கு அச்சு எடுத்துக் குடுத்த மெசினப் பத்தியும் சொல்லணும். அத வாங்கிட்டு வந்த அந்த சிவகாசி முதலாளிக பத்தியும் சொல்லணும்.’’

``உறக்கம் வர்ற வரைக்கும் அதச் சொல்லும்.'' மலையரசன் கதை கேட்கும் மனநிலையிலிருந்தான்.

``இருபது, முப்பது வருஷம் முந்தி இங்க சிவகாசியிலிருந்து அண்ணன் தம்பிக ரெண்டு பேரு தீப்பெட்டி யேவாரம் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணி அதப் பத்தித் தெரிஞ்சிக்க கொல்கத்தா போயிருக்காங்க. அப்போ அங்க மட்டும்தான் தீப்பெட்டி கம்பேனி ஒண்ணு இருந்திருக்கு. இங்கிலீசுக் காரங்களுக்கு அதிகமா தீப்பெட்டி தயாரிச்சு விக்கிற கம்பேனி. அங்க கொஞ்ச நாளு கூடமாட இருந்து அண்ணன் தம்பி ரெண்டு பேரும் வேலைய கத்துக்கிட்டு திரும்ப இங்க ஊருக்கு வந்து அங்க பொரட்டி இங்க பொரட்டி, அத வித்து இத வித்து, கொஞ்சம் பணம் எடுத்துக்கிட்டுப் போயி ஒரு பழைய ஜெர்மன் கம்பேனி மெசினு வாங்கியாந்தாங்க.

இங்க சிவகாசில அதாம் மொத தீப்பெட்டி கம்பேனி. மெசினு வந்த வேகத்துல சட சடன்னு தீப்பெட்டியா அடிச்சித் தள்ளுச்சி. ஆனா இங்க அக்கம் பக்கம் சுத்தியிருக்குற மனுஷங்களுக்கு பெருசா ஏதும் வேலயில்ல. சட்டுனு அந்த முதலாளி அந்த மெசின யாழ்ப்பாணக்காரர் ஒருத்தருக்கு வித்துட்டாரு. அப்புறம் எல்லாத்துக்கும் கைல மடிச்சு ஒட்டி தீப்பெட்டி செய்யுறத பழக்கிக் குடுத்தாங்க. இந்தப் பக்கம் எல்லாருக்கும் வேல கிடைச்சது.

தீப்பெட்டிக்கு மேல ஓட்டுற விலாச லேபிளுங்க அடிக்க காலுல மிதிச்சி மிதிச்சி அச்சு எடுக்கற பழைய மெசினு இருந்துச்சு. ஒரு நாளைக்கி ஆயிரம், ரெண்டாயிரம் தீப்பெட்டிக்குதான் லேபிள் அச்சடிக்க முடியும். ஆனா தீப்பெட்டி ஒட்டி கொடவுன்ல குமிஞ்சி கிடந்துச்சு, எப்போ லேபிள் அச்சடிச்சி எப்போ ஓட்டன்னு. இப்போம் அஞ்சாறு வருஷம் முன்னாடி வேறொரு அச்சாபீஸ் மெசினு வாங்கிட்டு வந்தாங்க மொதலாளிமாருங்க.

லட்சம் தீப்பெட்டிக்கு ஒரு மணி நேரத்துல அச்சடிச்சி முடிச்சிருச்சி. ஏக வில போட்டு வாங்கிட்டு வந்த மெசினு. சும்மா இருந்தா காசு நஷ்டம்னு அதுல வேற என்னலாம் அச்சடிக்கலாம்னு யோசிச்சப்பதான் மெசின் வாங்குன ஜப்பான் கம்பெனில இருந்து அந்த வருஷக் கடைசில ஒரு புத்தர் படம் போட்ட காலண்டர் அனுப்பியிருக்காங்க. அப்போ வந்த யோசனதான்.

நல்லா படம் வரையுற ஆட்கள தேடி ஆள் விட்ருக்காரு. அப்போதான் கோவில்பட்டில சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடக குரூப்ல மேடைல திரைச்சீலைங்க வரையுற இவரக் கண்டுபிடிச்சாங்க. இந்தப் பக்கம் இப்பொம்லாம் வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன பழைய போட்டோ பிடிக்குற மெசின வெச்சிக்கிட்டு போட்டா பிடிச்சித் தாராங்க. இங்கயும் ரயிலடி ரோடு முடியுற இடத்துல வெல்கம் ஸ்டூடியோன்னு ஒரு கட போட்ருக்காங்க. பெரிய பெரிய மொதலாளிமாருங்க வீட்டுப் பிள்ளைங்க கல்யாணம் முடிஞ்சதும் சேந்து வந்து இங்க போட்டோ பிடிச்சிக்கிறாங்க. கல்யாணம் நடக்குற கோயிலவிட இங்க இந்த ஸ்டூடியோ வாசல்லதான் பொண்ணு வீட்டுக்காரங்களும், பையன் வீட்டுக்காரங்களும் ஈ மாதிரி மொச்சிகிட்டு நிக்கிறாங்க. இத எதுக்குச் சொல்ல வந்தேன்னா... இப்போம் இந்த ஸ்டூடியோக்குப் பின்னாடி ஒரு திரைல நந்தவனம், அன்னப்பட்சின்னு எதாவது நிசமான உருவம் மாதிரி வரஞ்சி வெக்கிறாங்க. அதெல்லாம் கொண்டையா வரஞ்சி குடுத்ததுதான்.

கொண்டைய ராஜு கிட்ட சிவகாசி முதலாளி அந்தக் காலண்டரைக் காட்டி ‘இது மாதிரி நம்மூர் தெய்வங்கள வரஞ்சி குடுக்க முடியுமா’ன்னு கேட்டாரு. கொண்டையா சந்தோசமா சரின்னு சொல்லிட்டு கொஞ்சம் பணம் முன்தொகையா வாங்கிட்டு எந்த சாமிய வரையலாம்னு கோயில் கோயிலா அலையுறாரு. நிறைய கோயிலுக்குள்ளே இவரையும், இவர்கூட வந்த ஆட்களையும் உள்ள விடல. சில கோயிலுள்ள எட்ட நின்னே சாமிய பாத்தாரு. வரையுறவங்களுக்கு நல்லா நுணுக்கமா சாமிய பக்கத்துல நின்னு பாத்தாதான தெரியும். இவரு நல்ல விசயத்துக்குத்தான கேக்குறாருன்னு ரெம்ப நாளைக்கப்புறம் ஒரே ஒரு கோயில்ல மட்டும் சம்மதிச்சிருக்காங்க. பொழுதடஞ்சி இருட்டுனதுக்கு அப்புறம் அங்க இருந்த ஆட்கள வச்சி உள்ள போயிருக்காரு. ஒரு பட்டர்தான் சாமிக்கு முழு அலங்காரமும் பண்ணி கருவறைய திறந்து விட்ருக்காரு. அந்த மூணு நாலும் நெதம் இரவுல சாமிக்கு அலங்காரம் பண்ணி நகை சாத்தி வச்சிடுவாங்க. அங்க உக்காந்து கல் விளக்கு வெளிச்சத்துல விடியுற வரைக்கும் வரைஞ்சதுதான் மொத காலண்டர். அந்த வருஷம் சிவகாசி மொதலாளி ஆயிரமோ ரெண்டாயிரமோதான் அச்சடிச்சி எல்லா பெரிய மனுஷங்களுக்கும் சும்மா அனுப்பி விட்டாரு. அடுத்த வருஷத்துல இருந்து எல்லா கம்பெனிக்காரங்களும் தனவான்களும் ஆளாளுக்கு காலண்டர் அடிச்சித் தரச் சொல்லி குமிஞ்சிட்டாங்க. இப்போக்கூட அம்பாள் காப்பிக்காரங்க வீட்டுக்கு எதோ வரையுறதுக்கு வந்திருக்காரு.’’

மூவரும் அந்தோனியை கண்களில் ஆச்சரியம் பொங்கப் பார்த்தார்கள். கொம்பையா சிமினி விளக்கை எடுத்துக்கொண்டு சுவரில் தொங்கும் அந்தக் காலண்டரின் அருகில் போய்ப் பார்த்தார். கரியனும் மலையரசனும் போராவிலிருந்து இறங்கி அவரின் பின்னால் போனார்கள். மதுரை மீனாட்சி அம்மனின் உருவம் அவ்வளவு தத்ரூபமாய், தெய்வ கடாட்சமாயிருந்தது. அந்தோனி வேறொரு அறையைத் திறந்து காட்டினார். முதலாளி அமர்ந்திருக்கும் அறை அது. அந்த அறைச் சுவரில் கொண்டையா வரைந்த சரஸ்வதி, லட்சுமி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் படங்கள் கண்ணாடி போட்ட சட்டத்திற்கு ள்ளிருந்தன.

``இப்போ நாலைஞ்சி வருசமா எல்லா வீட்டுலயும் இவர் வரைஞ்ச படங்கதான் சாமி. எல்லாரும் இப்போதான் சாமிய நல்லா மனசு குளிர பாக்குறாங்க.''

கொம்பையா ஆமோதிப்பது போல் ``ம்'' கொட்டினார்.

வெளியே மழை நின்றிருப்பதுபோல் தெரிந்தது. கிட்டங்கியின் வெளியே வந்தார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். அடுப்புக் கரிப்புகை போல கரிய மேகங்கள் எங்கோ நகர்ந்து போய்க்கொண்டிருந்தன. நிலவு வெளிச்சம் கொஞ்சமாய் தலைகாட்டத் துவங்கியது. நேரம் என்ன இருக்குமென்று அந்தோனியைப் பார்த்துக் கேட்டார்.

``பதினொண்ணுதான் இருக்கும்.''

``ம்''

அந்த இரவில் ஈரமான மண்ணையும், அங்கங்கே தேங்கியிருக்கும் கொஞ்சம் மழை நீரையும் பார்க்கையில் அவர் மனதுக்கு இனம் புரியாத சந்தோசம் வந்தது. தன் வாயில் ஒரு யாழ்ப்பாணச் சுருட்டைப் பற்ற வைத்தார். ``ஏய்...மலையரசா...''

மலையரசன் ஓடி வந்தான்.

``நீ என்னடா இங்க இருக்கியா, இல்ல, எங்கூட வாறீயா?''

அந்தோணி குறுக்கிட்டு ``மலையரசன் இருந்தா கூடமாட எங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்'

கொம்பையா திரும்பி மலையரசனைப் பார்த்தார். ``நா உங்ககூட வாரேன்யா.''

``ம்... செரி போயி ரெண்டு பேரும் படுத்துக்கோங்க. காலைல வேகமா எந்திருச்சு மேற்க கிளம்பணும்.''

அவர்கள் கிட்டங்கிக்குள் போய்ப் படுத்துக்கொண்டார்கள்.

``காலையில சாப்பிட்டுட்டுத்தான கிளம்புவீங்க?''

``இல்ல விடியுறதுக்குள்ள கிளம்பணும். அப்பத்தான் அங்க நாள காலைக்குள்ள போயி சேர முடியும்.’’

``ம்''

அந்தோணி உள்ளே போய்ப் படுத்துக்கொண்டார்.

கொம்பையா நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் வானத்தின் புகை உருவத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

விடிகாலையில் அந்தோனி எழுந்து பார்த்த போது நாயும், மூவரும் காணாமல் போயிருந்தார்கள்.

நால்வரும் மேற்கே ஒரு மலைப் பகுதியில் கழுதைச் சந்தை நடக்கும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

மகன் வழி ( 1978 - வேனல் காலம் )

``ஒரு பயணி இந்த பூமி முழுக்க வனமும் வானமுமாக்கி, தன்னைப் பறவையாக்கித் திரிவான்’’

~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 25

காலையில் ஏசண்டு எல்லோரையும் வேலைக்குக் கிளம்பும்படி விரட்டிக் கொண்டிருந்தார். ‘சூரியன் வந்து எவ்வளவு நேரமாச்சு, இன்னும் கிளம்பலையா...’ ஒவ்வொரு கொட்டகையாகக் கத்திக்கொண்டே வந்தார். சூரனின் கொட்டகைக்கு வரும்போது ``இனி வேலைக்கி வர முடியாது, என்ன வெளிய விடுங்க'' என்று அவரிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். ஏசண்டு ``சரி'' என்று சொல்லிவிட்டு மற்றவர்களை வேலைக்குக் கிளப்பிவிடுவதில் முனைப்பாயிருந்தார். எல்லாக் கொட்டகைகளும் காலியாயிருந்தது.

பரமசுந்தரி மாடசாமியிடம் வந்து எதோ சொன்னாள். மாடசாமி பதறிப் போய் ஏசண்டிடம் ``அந்தப் பயல விட்று பாவம், அடிச்சி கிடிச்சி கொன்றாதிங்க.''

``நீ பேசாம உன் வேலையப் பாரு. சொளையா அவ்வளவு பணம் குடுத்துக் கூட்டிட்டு வந்துருக்கு அவன. வேலைக்கு வந்து கடன அடைக்க வேண்டாமா, சொல்லு. பாவம், வாங்குன கடனுக்கு பொம்பளப் பிள்ளைங்களே இங்க வந்து கல் அறுத்துக் காசு அடைக்குதுங்க. அவனுக்கென்ன காட்டெரும மாதிரி இருக்கான். வேல பாக்க மட்டானாமா. இங்க இருக்குறதுனா வேல பாத்துதான் ஆகணும். இல்லாட்டி செத்துப் போகணும். கொத்தார வரச் சொல்லி ஆள் விட்ருக்கேன். வேற வழி இல்ல.''

ஏழு கடல்... ஏழு மலை... - 25

``அதான் அந்தப் பணத்த அவன் கையால வாங்கலன்னு சொல்றானே. எப்படியோ உள்ள வந்துட்டான். நீதான் பெரிய மனசு பண்ணி அவன வெளிய விடச் சொல்லணும். நாங்களாவது கைய நீட்டிக் காச வாங்கிட்டு உள்ள வந்தோம்.''

``நீ உன் வாய மூடிக்கிட்டு வேலையப் பாரு மாடசாமி. கொத்தார் வரட்டும், அப்புறம் பாத்துக்கலாம்.''

பரமசுந்தரியும் காயாம்பூவும் மனசுக்குள் பதறினார்கள். மாடசாமி ``கடைசியாய் நான் ஒருக்க பேசிப் பாக்கவா'' என்று ஏசண்டிடம் கேட்டார்.

``அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.''

சிறிது நேரத்தில் ஒல்லியாய் கைகளிலும் கால்களிலும் நரம்புகள் சிடுக்கு சிடுக்காய் நார் போல் பின்னிக்கிடக்கும் இறுக்கமான உடல் கொண்ட கொத்தார் அங்கு வந்தான். அவன் கையில் இரும்புப் பூண் போட்ட உலக்கை இருந்தது. அவனோடு அவனைப் போலவே வயிறு ஒட்டிய ஆனால் இறுக்கமான உடலும் கூர்மையான பார்வையும் விடைத்த காதுகளுமிருக்கும் செம்மண் நிற நாயொன்று ஓடி வந்தது. கொத்தார் ஒரே ஆள்தான். அவனுக்கு எப்போதுமே இரண்டே கேள்விகள்தான். ‘வேல பாக்கப் போறீயா, போகலையா?’ ‘போறேன்’ என்றால், அப்படியே விட்டுவிடுவான். இல்லையென்றாலோ அல்லது கோபமாய் ஏதாவது பேசினாலோ கையிலிருக்கும் உலக்கையால் சாகும்படி ஒரே அடிதான். பிரச்னை செய்யும் ஆட்களால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புண்டு என்பதால் இப்படி அடித்துக் கொல்வதைப் பற்றி சூளை முதலாளி ஒன்றும் சொல்வதில்லை.

கொத்தார் ஏசண்டிடம் ஆளைக் காட்டும்படி கேட்டான். ஏசண்டு கொத்தரைக் கூப்பிட்டுக்கொண்டு கொட்டகை இருக்கும் திக்குக்கு நடந்தான். கொத்தார் கை உலக்கையை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டான்.இன்னும் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்பட்டு விடும், ‘இந்தச் சூளையில் சூரன் உயிருடன் வாழ்வானா, அல்லது பிணமா’ என்று.

மாடசாமிக்கு ஐயோவென்றிருந்தது. `எப்படியும் அவன் கேக்கப் போறதில்ல. வீம்பு பிடிச்சிக்கிட்டு அடி வாங்கிச் சாகப்போறான்.’ ஆற்றாமையும் வேதனையுமாய் உச் கொட்டினார்.

சூளையில் மண் குலைக்குமிடத்தில் மயான அமைதி இருந்தது. பரமசுந்தரிக்கும், காயாம்பூவுக்கும் திக்திக்கென்றிருந்தது. எல்லோரும் அமைதியாக சூரனின் கதறலுடன் இறுதிக் குரல் ஒலிக்குமாவென அவன் கொட்டகையிருக்கும் திசை நோக்கிக் காதைக் கூர்மையாக்கி வைத்துக் காத்திருந்தார்கள்.

கொட்டகையிலிருந்து எந்த சப்தமுமில்லை. எல்லோரும் மெதுவாக நடந்து கொட்டகைப் பகுதியில் எட்டிப் பார்த்தனர். கொத்தாரும் ஏசண்டும் ஒவ்வொரு கொட்டகையாக உள்ளே போய் வந்தார்கள். கொத்தாரின் முகம் கடுகடுவென்றிருந்தது. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டனர். காயாம்பூவின் கண் தெரியாத அப்பா தன் மகளிடம் மெதுவான குரலில் கேட்டார் ``என்ன, எந்த சத்தமுமில்ல?''

``என்ன நடக்குதுன்னு தெரியல. செத்த அமைதியா இரு, சொல்றேன்.''

கொத்தார் தன் செம்மண் நிற நாயை எங்கேயோ விரட்டினான். ``சேடு... சேடு...'' அது மண்ணை மோந்துகொண்டே முன்னோக்கி ஓடியது. ஏசண்டு பின்னால் திரும்பி ஒளிந்து ஒளிந்து வேடிக்கை பார்க்கும் மனிதர்களிடம் கத்தினான்.

``எங்கடா அவன ஒளிச்சி வெச்சிருக்கீங்க...இங்கயிருந்து தப்பிக்க முடியாதுன்னு அவனுக்குத் தெரியாதா? இப்போ எல்லாம் கைய விட்டுப் போயாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் பொணமாத்தான் வருவான் பாரு.''

மூசுமூசுவென மண்ணை மோந்தபடியே சென்ற நாய் ஓரிடத்தில் வந்து ஊளையிடத் துவங்கியது. வேறு வேறு சூளைகளிலிருக்கும் நாய்கள் எதிர்க்குரல் கொடுக்கத் துவங்கின. அருகிலிருக்கும் சூளையிலிருந்து கொத்தாரைப் போலவே அடித்துக் கொல்லும் ஆட்கள் நாய்கள் ஓடிவர தத்தம் ஆயுதங்களோடு அங்கு வந்தார்கள். எல்லா நாய்களும் ஒன்றுபோலவே கரடு கரடாய் இலந்தை முட்கள் வளர்ந்து கிடக்கும் திசை பார்த்துக் கத்தின.

கொத்தார் இலந்தை முள் காட்டைச் சுட்டிக்காட்டினான். ``இதுக்குள்ளதான் ஓடியிருக்கான்.’’

இலந்தைக் காடு பல ஆண்டுகளாக ஆட்கள் உள்ளே போக முடியாமல் ஓரிரண்டு மைலுக்கு முட் புதராய் வளர்ந்து கிடந்தது. யாரும் உள்ளே நுழைய முடியாது. நாய்கள் நாலெட்டு வைப்பதற்குள் வாயிலும் உடம்பிலும் முள் குத்திக் கிழித்துவிடும். நாய்கள் அதனால் உள்ளே போகாமல் கரையிலிருந்தே குரைத்தன. எல்லாரும் குழம்பிப் போனார்கள். ‘இதுக்குள்ள எப்படிப் போயிருக்க முடியும். வாய்ப்பேயில்லை.’

கொத்தாருக்கும் அப்படித்தான் தோன்றியது. எல்லா ஆட்களையும் அழைத்துக்கொண்டு வேறு திசைக்குத் தேடக் கிளம்பினான். ஆனால் நாய்கள் நகர மறுத்துவிட்டன. மீண்டும் மீண்டும் அந்த திசையை நோக்கியே விடாது குரைத்தன. கொத்தாருக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். வெயில் கடுமையாய் சுட்டெரித்தது.

சூரன் இலந்தை முள் காட்டுக்குள் நீர் தாகத்தோடு வேர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தான். அவன் உடலில் பல இடங்களில் இலந்தை முள் கீறல்களாயிருந்தது. முகத்தில் ஒரு கீறலுமில்லை. வெளியே நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. சூரனுக்கு தீவிரமாய் தாகமெடுத்தது.

கொத்தாருக்கு இன்னும் குழப்பம் தீரவில்லை. இவ்வளவு முட்களைத் தாண்டி எப்படி உள்ளே போயிருக்க முடியும். ஒருவனை அருகிலிருந்த உயரமான மரத்தின்மீது ஏறிப் பார்க்கச் சொன்னான்.

~ ஓடும்