மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 29

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

பயணம் நமக்கு அளிக்கும் முக்கியமான கொடை - புதிய உறவுகள்.

~ பராரிகள்

கோம்பையில் முருகராசா, கழுதைக் கொட்டடிக்குக் கொம்பையாவை ரேக்ளா வண்டியில் வைத்து அழைத்து வந்தான். அங்கு கொட்டடிக் காவலுக்கு நின்ற துடியான கோம்பை நாய்கள் கொம்பையாவைப் பார்த்ததும் குரைக்கத் தொடங்கின. முருகராசாவின் மச்சினன் வேலையாளிடம் எல்லா நாய்களையும் அவிழ்த்து விடச் சொன்னான். எல்லா நாய்களும் செம்மண் புழுதியைப் பறக்கவிட்டபடி கொம்பையாவை நோக்கி ஓடிவந்தன. கொம்பையா ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக உணர்ந்து, சுற்றிலும் பார்வையை ஓட்டி தடித்த குச்சிகள் ஏதும் இருக்கிறதாவென ஒரு சுற்று பார்த்தார். அதற்குள் நாய்கள் அவரின் அருகில் வரவும், அப்படியே அமைதியாக நின்றுகொண்டார். அவ்வளவும் வேட்டை நாய்கள். கொம்பையாவை மூக்கை இழுத்து இழுத்து மோந்து பார்த்தன. ஓரிரண்டு கோரமாய் தம் பற்களைக் காட்டி ‘கர்... கர்...’ என்று பயம்காட்டிக்கொண்டிருந்தன. அவர் எல்லா நாய்களின் கண்களையும் ஆழ்ந்து ஒருமுறை பார்த்தார். பின் மெதுவாக கீழே காலை மடக்கிக் குத்துக்கால் போட்டு உட்கார்ந்தார். மிக அருகில் நின்ற மணல் நிற நாயின் தாவாங்கட்டையைப் பிடித்துத் தடவிக் கொடுத்தார். அது மெதுவாக அவரின் முகத்தை வாசனை பிடித்தபடி நின்றது. சந்தை சந்தையாகத் திரியும் அவரின் உடலில் வரும் பிராணிகளின் வாடையால் அவர் தனக்குத் தீங்கு விளைவிக்காத மனிதர் என்று நினைத்திருக்கக் கூடும். தாவாங்கட்டையை உயர்த்தி, கொஞ்சமாய் கண்களை மூடியபடி அது தடவிக்கொடுக்க அனுமதித்தது. சில நொடிகளிலேயே கொம்பையாவின் முகத்தை நக்கி ஈரப்படுத்தத் துவங்கியது. மற்ற நாய்களும் அவரின் மேல் தம் முகத்தை இடித்தபடி வந்து நின்றன. கொம்பையா எல்லா நாய்களையும் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். ‘சேடு... சேடு...’ என்று சின்ன அதட்டலுடன் அவர் விரட்டியதும் எல்லா நாய்களும் வேறு திசைக்கு ஓடின. கொம்பையா திரும்பி முருகராசாவையும் அவரின் மச்சினனையும் பார்த்தார். அவர்கள் பேயறைந்ததுபோல் நின்றார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 29

‘‘மனுசப் பயல்களவிட இந்த நாயிக்கி நல்லவன், கெட்டவன் தெரியும். செரி, ஆகட்டும்... பணத்தக் குடுங்க, வேகமா கிளம்பணும்.”

முருகராசா தன் மச்சினனை அதட்டினார். ‘‘ஏன்டா, மக்க மனுசர் வாரப்போ இதுகள அவுத்து விடலாமா? இந்நேரம் கடிச்சி கிடுச்சி வெச்சிருந்தா என்ன பண்றது சொல்லு?''

``அதுக கொலச்சிகிட்டே இருந்துச்சின்னு தான் அவுத்து விடச் சொன்னேன். இல்லாட்டி நம்மள நாலு வார்த்த பேச விடாது. வள் வள்ளுன்னு மூச்சி விடாம கத்திக்கிட்டே இருக்கும்.’’

‘‘ம்...'' முருகராசா கொம்பையாவை அழைத்துப் போய் ஒரு கயிற்றுப் பின்னல் கட்டிலில் அமர வைத்தார். வேலையாளிடம் கண்ணைக் காட்டியதும் நாலைந்து பெரிய மண் கலயத்தில் பனம்பால் எடுத்து வந்தான். கூடவே வாழைக் கிழிசலில் வெஞ்சனமும், மசிய அரைக்காமல் நெறுநெறுவென அரைத்த கடலைத் துவையலும்.

‘‘கள்ளு குடிக்கல்லாம் நேரமில்ல... பணத்த எடுத்துக் குடும். நான் அப்படியே வாங்கிட்டுக் கிளம்பணும். பொழுதடையுறதுக்கு முன்ன கிளம்புனாத்தான் ரெண்டு, மூணு நாளுல ஓங்கோல் போய்ச் சேர முடியும்.''

‘‘இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு கலயம் சாப்பிடாமப் போனா எப்படி? நல்ல ஒத்தப் பனக் கள்ளு''

‘‘வேணாம் முருகு.''

கிட்டத்தட்ட கொம்பையாவின் கையை விரிக்க வைத்து வலுக்கட்டாயமாய்த் திணித்தார். ‘‘குடிங்க.''

வேறு வழியில்லாமல் தன் வாயில் சரித்து ஊற்றினார் கொம்பையா. கொடும் புளிப்பில்லாமல் நல்ல இளங்கள். கொம்பையாவுக்கு சின்ன வயதிலிருந்தே பனம்பால் குடித்தே வளர்த்த உடம்பு. அதனால்தான் அவர் தேகம் நல்ல இறுக்கமான பனங்கருப்பட்டி போல் இருக்கிறது. முருகுவும் தன் வாயில் ஒரு கலயத்தைச் சாய்த்து ஊற்றினார். வாயின் இரண்டு ஓரங்களிலும் பால் வழிவதுபோல் வழிந்தது. புளிப்பை அடக்க எல்லோரும் வாழைக் கிழிசலிலிருந்து கடலைத் துவையலைத் தொட்டு நக்கிக்கொண்டார்கள்.

கொம்பையா கேட்டார். ‘‘பணத்த இங்கதான் வெச்சிருக்கீறா?''

‘‘ஆமா. இங்குனதான் இருக்கு.''

‘‘இந்த பக்கம் திருட்டு பயம் இல்லயா?''

‘‘இத்தன நாய்களத் தாண்டி இங்க ஒருத்தனும் வந்துக்க முடியாது. அப்படி வந்த மொத ஆளு நீங்கதான். அத்தனையும் வேட்டைக்கிப் பழக்குனது.''

‘‘ம்.''

‘‘கடிக்கி ஒரு கிலோ சதைய பிச்சி எடுத்திரும். அம்புட்டும் தரமான காட்டுக் கோம்ப.''

‘‘இங்க ஒளிக்கவும் மறைக்கவும் இடமில்லையே. எதும் பொதச்சி கிதச்சி வெச்சிருக்கீரா?''

முருகராசா ஏதும் சொல்லாமல் மண்டையை மட்டும் ஆட்டினார். மேலுமொரு கலயம் கள்ளை எடுத்து மடக்மடக்கென்று ஒரே மூச்சில் குடித்துவிட்டு எழுந்து நின்று கொம்பையாவின் கையைப் பிடித்து இழுத்தார்.

‘‘இப்படி என்கூட வாங்க.''

ஏழு கடல்... ஏழு மலை... - 29

கொம்பையா கையில் தாங்கியிருந்த கலயத்தை அப்படியே கீழே மண் தரையில் வைத்துவிட்டு அவரோடு கிளம்பினார்.

ஓட்டுச் சாய்ப்பு போட்ட இடத்தின் கீழ் பனை நாரினால் கட்டப்பட்டு சாக்குகளாய் நின்றன. நாற்பது, ஐம்பது சாக்குகளில் ஒவ்வொன்றிலும் ஒரு ஆளைப் போட்டு மூடி வைத்தது போலிருந்தது. ஒரு சாக்கைக் கட்டியிருக்கும் பனை நாரை அவிழ்த்து, தூக்க முடியாமல் தூக்கித் தலைகீழாய் மெல்லக் கொட்டினான். எல்லாம் கழுதைச் சாணிகள்.

எருபோலக் காய்ந்து கிடந்தன. ஈரம் உலர்ந்து போனதால் அவற்றில் களிமண் போல நாற்றமில்லாமல் இருந்தது. முருகராசா ஒரு காய்ந்த விட்டையை எடுத்து கைகளினால் பாதியாய் உடைத்தான். உள்ளிருந்து கனத்த பொன் கம்மலொன்று நிறை மஞ்சள் நிறத்தில் பொத்தென்று கீழே விழுந்தது.

``எல்லாம் கழுதச் சாணின்னு பாக்காதீங்க. சாணி போட்டதுமே ஈரத்தோட நகையை உள்ள வச்சி காய வச்சிடுவேன். ஒருத்தனுக்கும் தெரியாது. எந்தத் திருடனாவது கழுதச் சாணிய திருடிக்கிட்டுப் போவானா? அதான். அதுக்குள்ள போயி ஒளிச்சி வெச்சேன். இப்போ இத எடுத்துக்கிட்டு எங்கனாலும் போகலாம். எந்தத் திருடனும் குறுக்க மறிக்க மாட்டான். எப்படி என் யோசன?’’

முருகராசா அடுத்தொன்றை எடுத்து உடைத்தார். உள்ளிருந்து வடக்கயிறு மாதிரி ஒரு பொன் சங்கிலி. இப்படியே வேறொன்று, வேறொன்று. எல்லாவற்றிலும் ஏதாவது பொன் பொருள் இருந்தது. கடைசியாய் உடைத்துக் காண்பித்ததில் ஒரு சிறு பிள்ளையின் காதுக் கடுக்கனும், சிறு கழுத்துச் சங்கிலியும், கைக்காப்புமாய் எல்லாம் ஒரு குழந்தையினுடையது போலிருந்தது. ‘‘ஒத்தை மூட்டைய முழுசா எடுத்துக்கோங்க கொம்பையா. எனக்கும் என் குடும்பத்துக்கும் கொஞ்ச நஞ்சமா நீங்க செஞ்சிருக்கீங்க. எல்லாம் நீங்க போட்ட பிச்ச தான்.'' அவரின் கால்கள் பின்னிக்கொண்டு போதையில் தடுமாறியது.

ஏழு கடல்... ஏழு மலை... - 29

‘‘ஒண்ணு இல்ல, ரெண்டு மூட்டையா எடுத்துக்கோங்க. வேணாம், இது எல்லாத்தையும் எடுத்துக்கோங்க.''

முருகராசாவின் மச்சினன் அவரின் அருகில் வந்து கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டான்.

‘‘இப்போ பேசாம இருக்கப் போறீங்களா, இல்லையா? போதும், உங்களுக்கு போத ரெம்ப ஏறிக்கிடக்கு. மதி கெட்டுக் கெடக்குறீங்க. இருக்குற எல்லாத்தையும் வாரி வழங்கறதுக்கா அங்கயிருந்து வந்தீரு?’’

கொம்பையா அவனை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு திரும்பி முருகராசாவிடம் கேட்டார். ``அந்தச் சின்னக் குழந்தய உயிரோட விட்டீங்களா? இல்ல, கொன்னுட்டீங்களா?’’

முருகராசா ‘யாரை’ என்பது போல் பார்த்தார்.

‘‘இந்தச் சாணிக்குள்ள கிடக்குறது சின்னப் புள்ள நகைதான. எப்படியும் மலங்காட்டுல வழிப்பறி பண்ணித்தான இந்தச் சின்ன நகைய எடுத்திட்டு வந்திருப்ப.''

முருகராசா மிரட்சியுடன் கொம்பையாவைப் பார்த்தார்.

‘‘சொல்லும். உம்மைப் பத்தி நான் எப்படிலாம் நினைச்சிருந்தேன். எல்லாச் சந்தைலயும் எத்தன மனுசங்கள பழகியிருப்பேன். ஆனா உம்மையத் தான் நான் இவ்வளவு நம்புனேன். இத்தனை வருசமா எல்லா மனுசங்களையும் நான் சரியா எடைபோட்ருவேன்னு நம்பிகிட்டு இருந்தேன்.ஆனா உம்ம விசயத்துல அது பொய்யாப் போச்சி.''

‘‘இப்போ என்ன ஆச்சி. உங்க பணத்தத் தாராம நான் ஏமாத்திடலையே. பல மடங்கா திருப்பி எடுத்திட்டுப் போங்கன்னுதான் சொல்றேன். நீங்க என்கிட்டே குடுத்தத விட ரெண்டு, மூணு பங்கு ஜாஸ்தியாவே எடுத்துக்கோங்க. நஞ்சம்மாக்கு நீங்க குடுத்த வாக்கக் காப்பாத்த மட்டுமில்ல, உங்ககூட இருக்குற பசங்கள நல்லபடியா கரையேத்தி விடவும் இந்தக் காசு உதவியாயிருக்கும். அந்தப் பசங்கள நல்லதா ஒரு மந்த மாடுக வாங்கி விடச் சொல்லுங்க.''

‘‘இந்தப் பாவப்பட்ட காசுல வாங்கிப் போட்டா மந்த பெருகாது. அழிஞ்சிரும். இப்போ பேச்ச விடும். எனக்கு நான் குடுத்தது மட்டும் திருப்பிக் குடுத்தா போதும்.''

‘‘பாவமோ, புண்ணியமோ, நமக்கு லாபமான்னு மட்டும்தான் பாக்கணும்.''

‘‘முருகு, எப்பேர்ப்பட்ட மனுசன் நீரு. இப்படி மாறிட்டீரே. வேதனையா இருக்கு.''

‘‘ஒண்ணும் இல்லாத காலத்துல நீங்கதான் வெச்சி முன்னேறிக்கோன்னு பணம் உதவி பண்ணுனீங்க. அந்த நன்றிக் கடனுக்குத்தான் ஒண்ணுக்கு மூணா திருப்பித் தரேன்னு சொல்றேன். வாங்கிக்கோங்க.''

‘‘எனக்கு என்னோடத மட்டும் குடும். கிளம்புறேன். இனிமே உங்க மூஞ்சில முழிக்கிறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன்.''

முருகராசா வேகமாகக் கொம்பையாவின் காலைப் பிடித்தார். ‘‘அப்படிலாம் சொல்லாதீங்க.''

முருகராசாவின் மச்சினன் கத்தினான். ‘‘யோவ்... மச்சான், உனக்கு சூடும் சொரணையுமில்லயா? ஆத்தத் தாண்டி வரும்போதே சொன்னேன், இந்தாள கழுத்தறுத்துத் தண்ணிக்குள்ள விட்ரலாம்னு. நீதான் ‘நல்லவரு வல்லவரு, உதவி பண்ணுனவரு’ன்னு வியாக்கியானம் பேசிட்டு வேணாம்னு சொல்லிட்ட.''

கொம்பையா அதிர்ச்சியுடன் முருகராசாவைப் பார்த்தார். முருகராசா என்ன சொல்வதெனத் தெரியாமல் தன் உருமால் துண்டை எடுத்து மச்சினனை அடித்தார். அவன் அவரைப் பிடித்துத் தள்ளி விட்டான். அவர் தன்மேல் படிந்த செம்மண் தூசியைத் தட்டிவிட்டு தலையில் அடித்துக்கொண்டே எங்கோ ஓடினார். கொம்பையா அவரின் பின்னால் ஓட எத்தனித்த போது, பின்னாலிருந்து அவரின் முதுகில் தடியால் ஓங்கி ஒரு அடி விழுந்தது. கொம்பையாவிற்கு விண்ணென்று வலித்தது.

கொம்பையா திரும்பி முருகராசாவின் மச்சினனைப் பார்த்தார். அவன் கையில் பெரிய தடியோடு நின்றுகொண்டி ருந்தான். ‘‘ஒத்தக் காசு தர முடியாது. இடத்த காலி பண்ணும். ஓடும்.''

கொம்பையா வேலிப்படலை நோக்கி ஓடினார். ஓரத்தில் செதில் செதிலாய் பனங்கருக்குகள் இருக்கும் ஒரு பனை மட்டையைத் தோண்டி எடுத்து வந்தார். வேலையாள் ஓலைக்குள்ளிருந்து அருவாளை உருவிக்கொண்டு கொம்பையாவை வெட்ட ஓடி வந்தான். கொம்பையா எதிரில் நிற்கும் முருகராசா மச்சினனைப் பனை மட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்தார். அவன் பொத்தென்று மல்லாக்க பேச்சுமூச்சில்லாமல் விழுந்தான். அருவாளோடு ஓடிவந்த வேலையாள் அப்படியே உறைந்து நின்றான். அருவாளைக் கீழே போட்டுவிட்டு கொம்பையாவை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டான். தன் எஜமானனை அடித்துக் கீழே வீழ்த்தியதால் அந்த எல்லா நாய்களும் கொம்பையாவைத் தாக்க ஓடி வந்தன. கொம்பையா ஆனது ஆகட்டும் பார்க்கலாமென்று அப்படியே நின்றார். நாய்கள் அவர் அருகில் வந்து வேகம் குறைந்து நின்றன.

வேலையாள் முருகராசாவின் மச்சினனைத் தலையைப் புரட்டி உயிர் இருக்கிறதாவெனப் பார்த்தான். ‘‘உயிரெல்லாம் இருக்கு. ஒண்ணும் பிரச்சன இல்ல. நுணுக்கமா கேளு, மூச்சி விடுற சத்தம் கேக்குது.''

அவனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. ஒரு பித்தளைச் சொம்பில் நீர் கொண்டு வந்து முருகராசாவின் மச்சினன் முகத்தில் தெளித்தான். சிறு முனகலோடு அவன் கண் விழித்துப் பார்த்தான். அவனால் முதுகை நிமிர்த்த முடியவில்லை. முதுகுத் தண்டு உடைந்திருக்க வாய்ப்புண்டு. கொம்பையா ஒரு மூட்டை கழுதைச் சாணியைத் தூக்கிக்கொண்டு ரேக்ளா வண்டியை நோக்கி நடந்தார். அவரை நோக்கிக் குரைக்காமல் அப்படியே கழுத்தை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருந்த நாய்களைப் பார்த்து, பற்களைக் கடித்தபடி முருகராசாவின் மச்சினன் சொன்னான். ``ஏலே... இருளா! மொத வேலையா. இந்த மொத்த நாயையும் வெட்டிக் கொன்னு புத. வந்தவன வாச வர வழியனுப்பிட்டு வாரத்துக்குப் பேரு காவ நாயாடா?''

கொம்பையா வேலிப்படலை உடைத்துக்கொண்டு ரேக்ளா வண்டியைக் கம்பம் மெட்டுப் பாதைக்கு ஓட்டினார். வேலிப்படலைத் தாண்டும் பொழுது ஒரு நாய்க்கு முகத்தில் முதல் வெட்டு விழுந்தது. பெரும் ஓலமெடுத்து அந்த நாய் அழுகையோடு கத்தியது. கொம்பையாவிற்கு அந்தச் சத்தம் பெரும் வேதனையைக் கிளப்பியது. வேலையாள் அடுத்த நாயை நெருங்கும் முன் மற்ற நாய்கள் அவன் குரல்வளையை நோக்கிப் பாய்ந்தன. அவன் அலறும் ஓசை கேட்டதும்தான் கொம்பையா விற்குக் கொஞ்சம் நிம்மதியாயிருந்து. அடுத்த சில நொடியிலேயே முருகராசாவின் மச்சினன் கத்தும் ஓசையும் கேட்டது. கொம்பையாவிற்கு மேலும் நிம்மதியாயிருந்தது.

போகும் வழியில்தான் பார்த்தார். வண்டிப் பாதை ஓரமாயிருக்கும் ஒற்றைப் புளியமரத்தில் முருகராசா தூக்கில் தூங்கிக்கொண்டிருந்தார். எப்படியும் கொம்பையா இந்தப் பாதையில் வரக்கூடுமெனத் தீர்மானித்துதான் அவர் இந்த மரத்தில் தொங்கியிருக்கக் கூடும். சட்டென்று கொம்பையாவிற்கு மனசு கனமாகிவிட்டது.

கழுதைச் சந்தையில் மலையரசனும் கரியனும் முருகராசாவின் இளைய மச்சினனோடு பேசியபடியிருந்தார்கள். அவன் சந்தை வாசலைப் பார்ப்பதும் இவர்களோடு லயமில்லாமல் பேசுவதுமாக இருந்தான். அவனுக்கு எதுவுமே ஒட்டமுடியாமல் இருந்தது. தூரத்தில் கொம்பையா வண்டி ஓட்டிக்கொண்டு வருவதைப் பார்த்து வாசலை நோக்கி ஓடினான். மலையரசனும் கரியனும் அவன் பின்னால் வாசலுக்கு ஓடினார்கள். கொம்பையாவையும் அவர்மேல் படிந்திருக்கும் செந்தூசியையும் பார்த்தான். பிறகு பின்னால் இருக்கும் கழுதைச் சாணி மூட்டையையும் பார்த்தான். அவனுக்கு ஏதோ விளங்கிவிட்டது. ‘மச்சான்’ என்று கத்தியபடியே கோம்பைச் சாலையை நோக்கி ஓடினான்.

மகன் வழி ( 1978 - வேனல் காலம் )

பயணிக்காதவன் வாழும்போதே இறந்தவனாகிறான்.

~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 29

ரமசுந்தரியையும் காயாம்பூவையும் ஒவ்வொரு கையில் இழுத்துக்கொண்டு சூரன் இருட்டுக்குள் ஓடினான். துப்பாக்கிச் சத்தம் சன்னமாய்க் கேட்டது. ஒவ்வொரு துப்பாக்கி வெடித்து முடியும்போதும் நாலைந்து அழுகுரல்கள் புதிதாய் எழுந்து அடங்கின. அந்த இருட்டு பெருங்குரலில் அழுதுகொண்டிருந்தது. வாழும் ஆசையுடன் தப்பித்துச் சென்றவர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு அருகிலிருக்கும் சாலையையையும் ஊரையும் தொட்டுவிட ஓடினார்கள். மாடசாமியின் மனைவி அழுதுகொண்டே சூரனோடு ஓட்டமும் நடையுமாய் வந்தாள்.

‘‘மாடசாமி அண்ணனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. காலைல எல்லாரையும் மீட்டுடலாம்.’’

பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். இருளுக்குள் எந்த ஆள் நடமாட்டமும் தெரியவில்லை. தொலைதூரத்திலும் யாரும் வருவது மாதிரி தெரியவில்லை. காயாம்பூதான் கவனித்தாள், தூரத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள் தெரிவதை. அந்தப் புள்ளி வளர்ந்து வளர்ந்து அதன் வட்டம் விரிந்துகொண்டு நெருங்கி வந்தது. சூரன் எல்லோரையும் அப்படியே மண்சாலையின் அருகே கருவேலத்தின் ஓரங்களில் படுத்துக்கொள்ளச் சொன்னான். இரண்டு பக்கமாகப் பிரிந்து பரமசுந்தரியும் மாடசாமியின் மனைவியும் ஒரு பக்கத்திலும் சூரனும், காயாம்பூவும் மண் சாலையின் மற்றொரு பக்கத்திலும் தரையில் பாம்பு ஊர்வதுபோலப் படுத்துக்கொண்டார்கள்.ஏழாம் நாள் நிலவின் வெளிச்சத்தில் சாம்பல் உருவமாய் நால்வரும் தெரிந்தார்கள். காயாம்பூ சூரனின் அருகில் ஒட்டியபடி, அவன் கரங்களை இறுக்கமாய்ப் பிடித்தபடி தரையோடு தரையாகப் படுத்துக்கொண்டாள். எதிர் திசையிலிருந்து சூரனின் அருகில் உரசியபடி படுத்திருக்கும் தன் தங்கையை எரிச்சலும் பொறாமையும் கலந்தபடி பரமசுந்தரி பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய வெளிச்சத்தோடு ஒரு முரட்டு வாகனம் சூளை இருக்கும் திசையிலிருந்து மெல்ல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. எல்லோருக்கும் திக்கென்றிருந்து. இப்போது கொஞ்ச நேரம்தான் நிதானமாக இருந்த இருதயம் எல்லோருக்கும் மீண்டும் படபடவென அடிக்கத் துவங்கியது.

ஏழு கடல்... ஏழு மலை... - 29

ஆனால் பரமசுந்தரிக்கு அந்த வாகனத்தைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. அவளின் எண்ணமெல்லாம் ‘காயாம்பூ எப்படி சூரனை உரசிக்கொண்டு அவன் அருகிலிருக்கலாம்’ என்று மட்டுமேயிருந்தது. ஒரு நிமிடம் வரும் வாகனத்தின் முன்னால் ஓடி எல்லாரையும் காட்டிக்கொடுத்து விடலாமா என்றுகூட நினைத்தாள். வாகனம் நெருங்கி வந்துவிட்டது. அதன் முன்னால் பெரிய வெளிச்சத்தோடு எரியும் விளக்குகள். பகல் போல நெடுந்தூரத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. அவர்கள் அருகில் சில அடி தூரமிருக்கையில் வந்தபோது அந்த வாகனம் நின்றது. சூரன் அப்போதுதான் தலை உயர்த்திப் பார்த்தான். சற்றுத் தள்ளி உறுமலுடன் நிற்பது ஒரு பழைய லாரி. அந்த லாரியிலிருந்து இப்போது பத்திருபது பேர் இறங்கி புதருக்குள் ஓடினார்கள். தூரத்தில் யாரோ நாலைந்து பேர் நிற்பதுபோல் தெரிவதால் அங்கு ஓடினார்கள். ‘‘இதற்கு மேல் யாரும் போயிருக்க வாய்ப்பில்லை’’ என்றபடி ஒருவன் வண்டியை மீண்டும் சூளையை நோக்கித் திருப்பச் சொன்னான். அவன் சொல் கேட்டு அவர்கள் வண்டியை சாலையிலிருந்து புதருக்குள் இறக்கி திருப்பத் துவங்கினார்கள்.

வண்டியிலிருந்து இறங்கிப் போனவர்கள் ஆட்கள் யாருமில்லையெனச் சொல்லி மீண்டும் வண்டியில் வந்து ஏறினார்கள். ஒருவன் மட்டும் கடைசியாய் வண்டியை ரிவர்ஸ் பார்க்க நின்றுகொண்டிருந்தவன், வண்டியின் பின்பக்க வெளிச்சத்தில்தான் பார்த்தான். நிறைய பேர் அங்கு தரையோடு தரையாய்ப் படுத்திருந்தார்கள். இவ்வளவு நேரம் வண்டியின் சக்கரம் ஏறி நின்று கொண்டிருப்பது நாலு மனித உடல்களின் மேல் என்பதை அப்போதுதான் உணர்ந்தான். அவன் முகத்தைப் பார்த்த வண்டி ஓட்டுநர் ``என்னாச்சு போலாமா?’’ என்றார்.

``முன்னால போங்க.’’

அந்த உடல்கள் கொஞ்சமாய் ஒரு துள்ளலுடன் அடங்கியது. அவன் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்காமல் வண்டியில் ஏறிக்கொண்டான். ‘‘ம்... போகலாம்.’’ வண்டி தன் புட்டத்தைக் காட்டியவாறு திரும்பியது.

காயாம்பூவின் மேல் கண்ணாயிருந்த பரமசுந்தரி, வண்டி சூளையை நோக்கித் திரும்பிய அதே நொடி விறுவிறுவென கோபமாய் எதிர்ப்புறம் இறங்க சாலையைக் கடக்கத் துவங்கினாள். அதையும் வண்டியிலிருந்தவன் பார்த்தான். சூரன் பரமசுந்தரியைக் கோபமாய்ப் பார்த்தான்.

``அதுக்குள்ள ஏன் இங்கிட்டு வந்த?’’

``அப்படித்தான் வருவேன். ஏ தள்ளிப் போடி. அவன என்னத்துக்கு இப்படி உரசிக்கிட்டு, அவன் கையப் பிடிச்சிக்கிட்டு... விடுடி.’’

காயாம்பூ இவளுக்கு என்ன ஆச்சு என்பதுபோல் பார்த்தாள். ``இப்போ கைய எடுக்குறியா, இல்லையா? இல்லாட்டி நான் கத்தி, போன வண்டிய திரும்ப வர வெச்சிருவேன் பாத்துக்கோ.’’

சூரன் பரமசுந்தரியை நோக்கி அறைய தன் கையைக் கொண்டுபோனான். அப்போது எதிர் திசையிலிருந்து நிறைய சாம்பல் உருவங்களாய் மனிதர்கள் இருளுக்குள்ளிருந்து எழுந்து நின்றார்கள்.

~ ஓடும்