
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`சமுத்திரத்தின் பயணத்திற்குத் தயாரான பின்
ஓடைகளின் ஆழம் பற்றி அச்சம்கொள்ள என்ன இருக்கிறது.’’
- பராரிகள்
தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )
நான்கு மணியிருக்கும். பொழுது சரியத் துவங்கி மாலையின் இளம்வெயில் அடிக்கத் துவங்கியது. கரியன் இன்னும் சாப்பிடாமல் சந்தையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான். சந்தையில் மாடுகள் விற்க உள்ளே வருவதும், விற்று வெளியே செல்வதுமாய் இருந்தது.
சிறிது நேரத்தில் கொம்பையாவும் இன்னும் சிலரும் மீண்டும் புங்கை மரத்தினடியில் வந்து அங்கு கிடக்கும் பட்டியக்கல்லில் அமர்ந்தார்கள். மலையரசன் எங்கயோ போய் ஆளுயரம் இருக்கும் பெரிய வாழை இலையை வெட்டி எடுத்து வந்திருந்தான். கொம்பையா இடுப்பிலிருக்கும் வேஷ்டியைக் கழற்றிவிட்டுக் கோவணத்தோடு படுக்கச் சொன்னார்.தயங்கியபடி நின்ற கரியனை கொஞ்சம் கனத்த குரலில் அதட்டலுடன் சொன்னார். இப்போது கரியன் வேஷ்டியை உருவி புங்கைமரக் கிளையில் போட்டுவிட்டுக் கோவணத்தோடு, விரிக்கப்பட்ட வாழை இலையில் படுத்தான்.

வந்திருந்தவர்களில் ஒருவர் கல்குளம் வைத்தியர். உடலில் காயங்களை ஆராய்ந்து விட்டு அங்கேயே அடுப்பு மூட்டி சிறு மண் சட்டியில் தைலம் காய்ச்சத் துவங்கினார். கொம்பையா தன் வேஷ்டியில் சுருட்டி வைத்த யாழ்ப்பாணச் சுருட்டை வாயில் வைத்து அடுப்பிலிருந்து கங்கெடுத்துப் பற்ற வைத்தார். கரியனுக்கு அவ்வளவு நெருக்கமாய் வரும் சுருட்டு வாடை பிடித்திருந்தது. தைலம் காய்ச்சியவர் வெதுவெதுப்பான சூட்டோடு கரியனின் உடலில் பூசினார். வலி பொறுக்காமல் அலறினான். கொம்பையா சுருட்டை உள்ளங்காலில் வைத்து அணைத்துவிட்டு மண்சட்டியைத் தான் வாங்கித் தைலத்தை எடுத்து அவன் காயத்தில் அழுந்தாமல் மெல்லத் தடவினார். கொம்பையாவின் இறுக்கமான கைகள் பட்டதும் எங்கிருந்தோ கரியனுக்குத் தன் தகப்பனின் நினைவு பீறிட்டு வந்தது. கொம்பையா தைலத்தின் பிசுக்கு போக தன் கைகளில் தரையிலிருந்து மணலை அள்ளி அள்ளிக் கைகளில் தேய்த்துக் கழுவுவதுபோல் செய்தார்.
``உங்கப்பன நீ பாத்து ஒரு நாலஞ்சி வருசம் இருக்குமாடே.''
கரியனுக்கு திடுக்கென்றிருந்தது. கொம்பையாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
``அவர உமக்குத் தெரியுமா?’’
``எனக்குத் தெரியாது. ஒங்கூரு யாவாரி ஒருத்தர் சொன்னாரு.''
``உங்க அம்மைக்கு என்னவே நோவு?''
கரியன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.
``உங்க அம்மைக்கு நோவுன்னுதான் விட்டுட்டுப் போனாரா?''
கரியன் எதுவும் பேசாமல் கோவணத்தோடு குத்துக்காலிட்டு அமர்ந்த காலுக்குள் முகத்தைப் புதைத்தபடி நெடுநேரம் அமைதியாக இருந்தான்.
``எதுக்குவே மாட்டத் திருடுன?’’
இப்பவும் அமைதியாக இருந்தான்.
மலையரசன் வந்து கொம்பையாவை யாரோ அழைப்பதாகச் சொல்ல, மீண்டும் சந்தைக்குள் கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார். கரியன் தன் வேஷ்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு வேகமாக கொம்பையாவை நோக்கி ஓடி வந்தான். கொம்பையா எதார்த்தமாய்த் திரும்புகையில் கரியன் அவரின் பின்னே சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தான்.
‘ என் அம்மைக்குப் பெருஞ்சீக்கு. உடம்பெல்லாம் வெளுத்து வெள்ள வெள்ளையா...ஒரு மாதிரி இருக்கும். வெங்குஷ்டம். அதான் அந்த ஆளு என் அம்மைய விட்டுட்டு அங்குன பழனிக்கு பரதேசிப் பயலா போயி திருவோட்ட தூக்கிட்டான்.``
``அம்ம இப்போ கன்னிகாஸ்திரிக மடத்துக்குள்ள ஒரு ஆஸ்பத்திரில இருக்கா. எனக்கும் ஒட்டிக்குமாம். காலத்துக்கும் அந்த நாலு சொவத்துக்குள்ளதானாம். வெளிய வர மாட்டாளாம்.’’
``அவளுக்கு மாத்துத் துணிகூட இல்ல. கைக்காசும் இல்ல. ஏதாவது அவ கைல குடுக்கணும்னுதான் மாட்டக் களவாண்டேன்.
அதான் கொட்டாரத்துல மந்த மந்தையா மாடு நிக்குதில்ல, இந்த ஒரு மாட்ட அவுத்துக்கிட்டா என்னவாம்'' ஒரே மூச்சில் சொல்லி முடித்த கரியனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
கொம்பையா கரியனின் அருகில் நெருங்கி வந்து அவன் தலையில் கைவைத்து அழுத்தினார்.
மீண்டும் புங்கமரத்தின் திசைக்குக் கையைக் காட்டி…
``அங்குன போயி இரு. இப்போம் வந்து பணம் தரேன். உன் அம்மைகிட்ட போய்க் குடு. குடுத்திட்டு விடிகாலைக்குள்ள இங்குன வந்திரு. மேற்க பெருஞ்சந்தைக்குக் கிளம்புறோம். என்கூட இரு. சரியா?''
இருவரும் சிறிது நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். பின் இருவரும் முதுகு திருப்பி நடந்தார்கள்.
இப்போது கரியனுக்குப் பேய்ப்பசி பசித்தது. பித்தளைக் கும்பாவைக் கையிலெடுத்து சோற்றைக் கரைத்து மென்றும் குடித்தும் முடித்தான்.
இருட்டத் துவங்கிய நேரத்தில் கொம்பையாவும் மலையரசனும் மரத்தடிக்கு வந்தார்கள். கொம்பையா கரியனிடம் ஐம்பது ரூபாய் எண்ணிக் கொடுத்தார். கரியன் தயங்கியபடி வாங்கிக்கொண்டான்.
பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தபடியே ``இன்னுமொரு ஐம்பது ரூபாய் சேத்துத் தர முடியுமா?’’ என்று கேட்டான்.
கொம்பையா அவனை சிறு கோபமும் எரிச்சலுமாய் ``யாருடா இவன்...'' என்பதுபோலப் பார்த்தபடி
``ஏய்... நூறு என்ன சின்னப் பணமா?’’
``காலத்துக்கும் உங்ககிட்ட வேல பாத்து அடச்சிருதேன்’’ கைகளில் சத்தியம் அடித்தான். கரியன்
மலையரசன் குறுக்கிட்டு…
``ஏவே குடுத்து வச்ச மாதிரி கேக்க. உனக்கு விலவாசி தெரியுமா? நூறு ரூபாய்க்கி இதே சந்தைல நல்லதா மூணு கறவை மாடு வாங்கிறலாம். புண்ணியத்துக்குக் குடுக்குறத அவ்வளவு குடு இவ்வளவு குடுன்னு அதிகாரம் பேசிக்கிட்டிருக்க...''
கொம்பையா மலையரசனை அதட்டினார்.
``அவனுக்கு வேணுங்குறத அவன் கேக்குறான். விடு. இந்தா…’’ என்று இன்னொரு ஐம்பதை அவனிடம் நீட்டினார். ``வாங்கிக்க’’ கரியன் வாங்கிக்கொண்டான்.
``கிளம்பு. சந்தைக்கு வெளிய கருப்புக்கட்டி ஏத்திக்கிட்டு உன் ஊருக்குப் போற பார வண்டி ஒண்ணு கிளம்புது, வண்டிக்காரர்கிட்ட சொல்லியாச்சு. அவரே நாளைக்கி அதிகாலைல வாழைக்குல ஏத்திக்கிட்டு இங்க வந்திருவார். நீ அவரோடு போயி பணத்தக் குடுத்துட்டு இங்குன வா.'' கிளம்பினான்.
``இரு... மேல் உடம்புல துணி இல்லாம குளிரும். இத வச்சிக்க...'' கொம்பையா தன் தலையில் உருமால் சுற்றியிருந்த நீளமான துண்டை உருவிக்கொடுத்தார். கரியன் வாங்கிக்கொண்டான்.
மலையரசனை அவனோடு போய் வண்டியை அடையாளம் காட்டிவிட்டு வரச்சொன்னார்.
வழியெல்லாம் வண்டிக்காரர் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தார். கரியன் எதுவுமே பதில் பேசவில்லை. அதிகாலை இதே பாதையில் செவலையைப் பிடித்துக்கொண்டு வந்ததை நினைத்தான். வண்டி கொட்டாரத்தை நெருங்கத் துவங்கியது. இப்போது அவனுக்கு செவலையின் ஞாபகம் வலுவாய்ப் பிடித்துக்கொண்டது. கொட்டாரம் இருக்கும் திசையைப் பார்த்தான். தூரத்திலிருந்து கொட்டாரத்தில் எரியும் மஞ்சள் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. கரியன் வண்டியிலிருந்து குதித்தான். வண்டிக்காரர் ``கொம்பையா உன்னைய குமரில தாம்வே இறக்கி விடச் சொன்னாரு'' என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் இருளுக்குள் கொட்டாரம் இருக்கும் திசை நோக்கி விறுவிறுவென நடந்தான். வண்டிக்காரர் சப்தம் கொடுத்தார் ``ஓய்...'' அவன் போய் க்கொண்டேயிருந்தான். சிறிது நேரம் நின்றுவிட்டு வண்டி கிளம்பியது.
கொட்டாரத்துத் தொழுவத்தின் அருகில் வந்து நின்றான். கிட்டத்தட்ட முந்நூற்றுக்கு மேல் மாடுகளிருக்கும் பெரிய தொழுவம். மனித நடமாட்டம் இல்லை.
கரியன் நேற்று செவலையை ஒட்டிக்கொண்டு போன பின் தொழுவத்தின் கழிவுகளும் அழுக்குக் கூளங்களும் கொட்டும் பாதையைப் பெரிய கதவு வைத்து மூடி ஆளுயரத்திற்கு உடைமுள் இறைத்துப் போட்டிருந்தார்கள். தொழுவத்தின் பின்பக்கம் வந்து நின்றான். மதில் நீண்டு உயர்ந்து இருந்தது. அவனுக்கு இப்போது எப்படியாவது செவலையைப் பார்த்துவிட வேண்டும். நேற்று அது இருந்த இடத்தை உத்தேசமாய் மனதில் ஓட்டினான். உள்ளே நுழைந்ததுமே நாலாவதோ ஐந்தாவதோதான் அது நின்றுகொண்டிருந்தது. இப்போது வேறு எங்காவது இடம் மாற்றிக்கூடக் கட்டியிருக்கலாம். சிறுபிராயத்தில் செவலையை அழைக்க அவன் வழக்கமாய் பற்களை மூடியபடி நாக்கைச் சுழற்றி மடித்து க்கும்... க்கும்... க்குமென்று ஒலியை எழுப்புவான். அதே அடையாள ஒலியை இப்போது மெதுவாக எழுப்பியபடியே மதிலின் நீளம் முழுக்க நடந்தான். எந்த மறு சப்தமும் இல்லை. மீண்டும் மீண்டும் அதே போல சப்தம் எழுப்பியபடி நடந்தான். இப்போது இடது பக்க மூலையிலிருந்து ம்மா ம்மா என்ற சப்தம் கேட்கத் துவங்கியது. அங்கு ஓடினான்.
ஓடிப்போய் எங்கிருந்தோ இரண்டு கூரான முளைக்குச்சிகளை எடுத்து வந்தான். தொழுவத்து சுவர் செம்மண்ணும் ஊடைக்கு ஊடே கருங்கல்லும் வைத்து கைப்பூச்சாய்க் கட்டப்பட்டிருந்தது.
நெடுநேரம் பிரயத்தனப்பட்டு மண்ணை உரசி உரசி சுவரிலிருந்து ஒரு கை மட்டும் நுழையும் அளவு சிறு கல்லைப் பெயர்த்து எடுத்துப் போட்டான்.
எப்படா கல் பெயர்க்கப்படும் என்று காத்திருந்ததுபோல அடுத்த விநாடியே அந்தத் துளையின் வழியே செவலையின் கண் தெரிந்தது. கரியனின் கண்கள் இப்போது செவலையின் கண்ணில் தெரிந்தது. கரியன் தன் கைகளை உள்ளே நுழைத்து செவலையின் நெற்றியை ஆதூரமாகத் தடவினான். ஓரிரு நிமிடம்தான். ஆள் அரவம் கேட்டுக் கையை வெடுக்கென எடுத்தான்.

தொண்ணூறு வயது முத்தச்சன் கையில் பித்தளைத் தொங்குவிளக்கைப் பிடித்தபடி வந்து செவலையின் அருகில் நின்று நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். விளக்கைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் நடுங்கின. செவலை முத்தச்சனின் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டு குனிந்து நீர் அருந்தியது. சித்திரை ராமன் அந்த இடத்திற்கு வந்தான். முத்தச்சன் சித்திரை ராமனிடம் ``ஆனாலும் அது அவனோடு போயிருக்கக் கூடாது’’ என்று கோப மூச்சோடு சொல்லிவிட்டு தள்ளாடித் தள்ளாடி புறவாசல் படியேறி வீட்டிற்குள் நடந்தார். அவர் வீட்டின் நடுக்கூடம் நோக்கி நடந்து வருவதற்குள் தொழுவத்தில் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது.
கரியனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. நடுங்கியபடி துளையின் வழியே கண்களைச் செலுத்திப் பார்த்தான். செவலையின் கண்களில் எந்தப் பதற்றமுமில்லை. செவலையின் உடல் ஏதும் தவங்குகிறதாவெனப் பார்த்தான். அதுவுமில்லை. அப்படியென்றால் துப்பாக்கி சப்தம்... துளையின் வழியே பரபரவெனத் தேடிப் பார்த்தான். அங்கு பனைமரக்கட்டையில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த தயிர்ப் பானை உடைந்து அதன் செம்மண் கழுத்து மட்டும் கயிற்றில் தொங்கியபடி ஆடிக்கொண்டிருந்தது. நிம்மதியாயிருந்தது. இப்போது தொழுவத்துப் பக்கமிருந்து வேறொரு மனிதனின் கண் இவன் கண்ணைப் பார்த்தது. சுதாரித்து ஓட நினைப்பதற்குள் நாலைந்து கரங்கள் கரியனைப் பிடித்துச் சுவரோடு அவன் முகத்தை அமுக்கிப் பிடித்தது. கரியனை வீட்டின் முற்றத்திற்கு இழுத்து வந்தார்கள். சித்திரை ராமன் கையில் குழல் துப்பாக்கி ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார். அருகில் மழை ஈரம் பட்டு நன்கு கறுத்த மேனியிலிருக்கும் இளம் குருத்து யானையொன்று தென்னைமட்டையைக் கடித்தபடி நின்றுகொண்டிருந்தது. வீட்டின் பெண்கள் உட்பட மொத்த மனிதர்களும் அங்கே சூழ்ந்து நின்றார்கள். முத்தச்சன் உடல் நடுக்கத்தோடு அங்கு வந்தார். பெண்களை வீட்டினுள் போகச் சொன்னார்.
``ஏடா ராமா, பசுவும் காளையும் தெய்வத்தின்ட வாகனங்கள். அதோட ரெத்தம் குல நாசத்துக்கு இட்டுப்போகும் வழி...''
``அறியும் அச்சா''
``ம்... காளைய ஒண்ணும் செய்யண்டாம்.கொட்டாரத்துக் காவலத் தாண்டிக் காளைய ஒட்டிக்கொண்டு போன இந்த நாயிண்ட மகன சுட்டுக் கொல்லு. தொழுவத்துக் காவல்காரனை எட்டி மிதிச்சி வெளிய தள்ளு...’’
``ம்’’
``நான் திருட வரல. மாட்ட வில குடுத்து வாங்கத்தான் வந்தேன். என்கிட்ட பணம் நூறு ரூபா இருக்கு.’’
முத்தச்சன் கோபமாக நடுங்கிய குரலில் சொன்னார். ``யாரு மாட்ட யாருடே வாங்குறது. ராமா அவனக் கொல்லுடா.’’ சித்திரை ராமன் துப்பாக்கியை உயர்த்தினான். கரியன் மொத்தக் கூட்டத்திலிருந்தும் திமிறி உயிர்பயத்தோடு பெருங்குரலெடுத்துக் கத்தத் துவங்கினான்.
கலவரச் சூழலைக் கண்ட யானை தனக்குத்தான் ஆபத்தோ என்றஞ்சி அதுவும் பெருங்குரலெடுத்துப் பிளிறியது.

‘`பயணத்தில் பல ஆண்டுக்கு முன் உங்கள் தகப்பன் இளைப்பாறிய அதே மரத்தில் நீங்களும் இளைப்பாற வாய்ப்புண்டு : மரம் இருவரையும் அறியும்.’’
- பராரிகள்
மகன் வழி- (1977 - மழைக் காலம்)
சூரவேல் தென்னந்தோப்பிலிருந்து வெளியேறி தார்சாலைக்கு வந்து விறுவிறுவென நடந்தான். அடிக்கொருதரம் பின்னால் திரும்பி வாகனங்கள் ஏதும் வருகிறதாவெனப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு மைல் தூரத்திற்கும்மேல் நடந்திருப்பான் ஆற்றுப்பாலத்தின் அருகில் வந்து திரும்பிப் பார்த்த போது தூரத்தில் இருட்டுக்குள் இரண்டு மஞ்சள் வெளிச்சம் நகர்ந்து வருவது தெரிந்தது. மரடிப்போக்காரரின் வாகனமாக இருக்குமோ என்ற சந்தேகம் வர அவசரப்பட்டு எந்த வாகனத்தையும் நிறுத்திவிடக்கூடாது என்று நினைத்தபடி சாலையின் ஓரத்தில் கிடந்த பெரிய கருங்கற்களைத் தூக்கிக் கொண்டு வந்து சாலையில் போட்டான். பெரிய கற்கள் என்பதால் நிச்சயம் வாகனத்தை நிறுத்துவார்கள். கீழே இறங்கும் ஆட்களை வைத்து யார் என்று முடிவு செய்துவிடலாம். இப்போது மஞ்சள் வெளிச்சம் பெரிய ஒளிப்பாய்ச்ச லோடு மிக அருகில் வந்து விட்டது. கொஞ்சம் முன்னால் போய் சாலையை விட்டு இறங்கி மரங்களுக்குள் பதுங்கிக் கொண்டான். நினைத்தபடியே கற்கள் கிடக்கும் இடத்தின் அருகே வந்ததும் மூக்கு நீண்ட பெரிய லாரியொன்று உறுமி உறுமி சப்தத்தைக் குறைத்து நின்றது. லாரிக்குள் இருந்த ஒருவன் ``வழி மறித்து லாரிகள் திருடும் கும்பலாய் இருக்க வாய்ப்புண்டு, யாரும் இறங்க வேண்டாம். வண்டியையும் அணைக்க வேண்டாம்’’ என்று சொல்ல, சுற்றிலும் பார்வையை ஓட்டினார்கள். ஓரிரு நிமிடத்திற்குப் பின் கனத்த இரும்புக் கம்பியைக் கையில் பிடித்தபடி ஒருவன் இறங்க பின்னாடியே மேலும் இருவரும் இறங்கினார்கள். அதில் ஒருவன் கையில் ஆயுதம்போல் யானைப் பாகன் வைத்திருக்கும் அங்குசம் இருந்தது. சூரனுக்கு நிச்சயம் இது வேறு யாரோ என்பது தீர்மானமாகி விட்டது. இறங்கியவர்கள் ஜாக்கிரதையாய் எல்லா திசைகளிலும் பார்த்தபடி கற்களை உருட்டி சாலையின் கீழே தள்ளி அவசரமாய் மேலே ஏறினார்கள். லாரி இப்போது சப்தமாய் உறுமியபடி வேகமாய்க் கிளம்பியது.
சூரன் ``நிறுத்துங்க... நிறுத்துங்க’’ என்று சப்தமிட்டபடியே மரத்திற்குப் பின்னிருந்து வந்து லாரியின் எதிரில் ஓடி வந்தான். லாரி அவனை நெருங்கி வந்து உறுமியபடி நின்றது. லாரியில் அமர்ந்திருந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தார்கள். சூரன் ஓட்டுனரின் பக்கம் போய் தனிந்த குரலில் ``நான்தான் கல்லக் கொண்டு வந்து ரோட்டில் போட்டேன்'' என்றான். உள்ளே இருந்தவர்கள் ஏன் என்பதுபோல் பார்த்தார்கள்.
``அப்ப தான் வண்டிய நிறுத்துவீங்கன்னு...என்ன வண்டில ஏத்திப்பிங்களா? போற வழில எங்கயாவது இறக்கிவிட்டீங்கன்னா புண்ணியமாப்போகும். ரெம்ப தூரம் நடந்து வரேன்'' கை எடுத்துக் கும்பிட்டான். எல்லோரும் தத்தம் கைகளில் இறுக்க பிடித்திருந்த ஆயுதங்களையும் தத்தம் உடல்களையும் தளர்த்தினார்கள். எல்லோருக்கும் பெருமூச்சும் நிம்மதியும் வந்தது. உள்ளிருந்து ஒருவன் சிரித்தான். தொடர்ச்சியாய் எல்லோர் முகத்திலும் சிரிப்பு தெரிந்தது. ஓட்டுநர் மட்டும் கோபமும், எரிச்சலுமாயிருந்தார்.

``ஏன்டா... அதுக்குக் கல்லக் குறுக்க போட்டு வெப்பியா, செத்த மூதி. ஏறித் தொல'' இடது பக்கமாய் வந்து ஏறினான். ஏற்கெனவே அங்கு மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.
வண்டி நகரத் துவங்கியது. அந்த இருண்ட சாலையில் கனமான மஞ்சள் வெளிச்சம் பாதை காட்ட, போய்க்கொண்டி ருந்தார்கள். ஓட்டுநரிடம் கேட்டான். ``வண்டி எங்க போகுது?''
ஓட்டுநர் கண்ணை ரோட்டிலிருந்து திருப்பாமல் பதில் சொன்னார் ``திருநவேலி போவுது. அங்குன நெல்லையப்பர் கோயில்ல நாளைக்கி ஒரு விசேஷம்லா. வழில ஒரு இடத்துல நிறுத்தி ஆணய ஏத்திக்கிட்டு போகணும்''
``என்னயும் அங்குன விட்ற முடியுமா?''
``வழில ஆணய ஏத்திக்கிட்டுப் போகணுமேடே''
``பரவால்ல''
``ம்’’
சிறிது நேரம் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அங்குசம் வைத்திருந்தவரிடம் ஓட்டுநர் கேட்டார்.
``நீரு ஏன் கதய நிறுத்திட்டீரு... மிச்சத்தச் சொல்லும்.''
``எனக்கு வழில கல்லு வச்சி மறிக்கவும் யாரோ களவாங்கத்தான் இப்படி மறிக்கிறாங்களோன்னு நினைச்சிட்டேன் அதேன். ம்... எதோட நிறுத்தினேன்?''
வேறொருவன் சொன்னான் ``அவன சுட சித்திரை ராமன் துப்பாக்கியோட நின்னாரு.’’
``ம்... அதான்... இப்போம் அவன் கையக் கட்டி அவரு முன்னால நிறுத்திருக்காங்க. அவரு கேட்டதுக்கு நான் இங்க மாட்டத் திருட வரல. அத வில குடுத்து வாங்கத்தான் வந்தேன். இந்தா எங்கிட்ட நூறு ரூபா பணம் இருக்குன்னு சொன்னான்.''
``அப்போம் மாட்டு வில அவ்வளவுதானா...'' அவர்களில் யாரோ கேட்டார்கள்.
``அதுக்கும் குறவுதான். ஆனா அவன் அந்த மாட்டுக்கு அவ்வளவு தரேன்னு சொன்னான். சின்னதுல தான் வளத்த மாடுன்னு ஒரு பாசமிருக்கும்ல…''
``ம்''
``முத்தச்சன் அவனைக் கொன்னு போடச் சொல்லி உத்தரவு போட்டுட்டுப் போயிட்டாரு. சித்திரை ராமன் துப்பாக்கிய பாதியா முழங்காலுல வச்சி உடைக்கிற மாதிரி செஞ்சி அதுல தோட்டாவத் திணிச்சிட்டு துப்பாக்கிய திரும்பவும் ஓட்ட வச்ச மாதிரி மூடி அவனச் சுட குறி பாக்குறாரு.
அவன் ஓ...ன்னு சத்தம் போட்டுக் கத்தி அழுகுறான்.
சுத்தி இருந்த ஆட்களும், ராமனும் அவன கத்தி அதட்ட... வீட்டு ஜன்னல் வழியா அவன ஒண்ணும் செய்ய வேண்டாம்னு வீட்டுப் பெண்கள் கத்த... எல்லாத் திக்குலேருந்தும் ஒரே ஜன இரைச்சல்.
அப்போ நம்ம காளிக்குப் பன்னெண்டோ, பதிமூணோதான் வயசு...''
``இது யாரு புதுசா காளி?''
``அது ஆணையோட பேரு. இப்போ நாம ஏத்திக்கப் போறமே... அதுதான்.''
``காளி பருவத்துக்கு வந்து அப்போதான் முதல் மஸ்து. ஏற்கெனவே நாலு நாளா காதுகிட்ட நீர் வடியுது. பெண் சேர்க்கைக்கு விடல.... மதம் பிடிச்சி பிளிறி கிடச்சவங்களையெல்லாம் துதிக்கையால சுழற்றி எறிஞ்சி அந்த இடத்தையே பீதி ஆக்கிட்டான். ஆணைய நானும், பெரிய மாவுத்தன் ராஜனும் சேந்து போராடி வழிக்குக் கொண்டுவரதுக்குள்ள அவன் எங்கயோ இருட்டுக்குள்ள தப்பிச்சிப் போயிட்டான். அவன் பின்னங்கை கட்டியிருக்கு. ரெம்ப தூரம் போயிருக்க முடியாதுன்னு தேட ஆள் அனுப்புனா, மறுநாள் காலைல வரைக்கும் தேடி ஆளக் காணோம்னு வெறுங்கையோடதான் வந்தாங்க.’’
``ம்''
சூரவேல் தன் தகப்பனின் கதைதான் என அறியாமல் அவனும் கேட்டபடி வந்தான்.

வண்டி தார்ச்சாலையிலிருந்து இறங்கி, கொட்டாரத்தின் பின் வாசலுக்குச் சென்று நின்றது. எல்லோரும் இறங்கினார்கள். சூரவேலும் இறங்கினான். லாரி அணைக்காமல் இருந்ததால் முன் விளக்கின் வெளிச்சம் சுவரில் அடித்தது. மாவுத்தன் இருங்க... நான் போய் ஆட்களை எழுப்பி கதவைத் திறக்கச் சொல்லிவிட்டு வரேன் என்று முன் வாசலுக்குக் கிளம்பினான். ஓட்டுநர் சிறுநீர் கழிக்க மரத்தின் பின் போனான். ஒருவன் தொழுவத்து மூடிய கதவைச் சுட்டிக்காட்டினான். அது உடை முட்கள் போட்டு மூடிப் புதராய்க் கிடந்தது. சூரவேல் நகர்ந்துபோய் லாரியின் வெளிச்சம் அடிக்கும் சுவரில் தெரியும் சிறு துளையின் வழியே தன் கண்களை வைத்துப் பார்த்தான். உள்ளே பெரிய தொழுவம் தெரிந்தது. அங்கங்கே சில காளைகளும் பசுக்களும் நின்றிருந்தன. நான்கோ, ஐந்தோ டிராக்டர்கள் இருந்தன. மாவுத்தன் அழைத்தார். ``ஏ... அங்க என்னவே பண்ணுத... வா...’’
எல்லோரும் கொட்டாரத்தின் முன் வாசலுக்கு வந்தார்கள். முற்றத்தில் பெரிய மஞ்சள் வெளிச்சத்தில் தளர்ந்த உடலோடு சித்திரை ராமன் நின்றுகொண்டிருந்தார்.
எப்படியும் எழுபதைத் தாண்டி வயதிருக்கும். அருகில் யானை காளி நின்றுகொண்டிருந்தது. எல்லோரும் வணங்கினார்கள்.
சூரவேல் வணங்காது அமைதியாக நின்றுகொண்டிருந்தான். சித்திரை ராமன் பார்வையைக் கூர்மையாக்கி ``உன்ன எங்கயோ பாத்துருக்கேனே...'' முனங்கியபடி இன்னும் கூர்ந்து பார்த்தார். அப்போதுதான் மாவுத்தனும் அவனைக் கவனமாகப் பார்த்தான். மாவுத்தனுக்குத் தெரிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.
- ஓடும்