மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 30

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

‘`ஒரு பயணியின் கால்கள் தன் பயணத்தை நிறுத்திக்கொள்ளும்போது வேறொருவரின் கால்கள் அவன் பயணத்தைத் தொடர்கின்றன.’’

~ பராரிகள்

கொம்பையா மலையரசனையும் கரியனையும் அழைத்துக்கொண்டு ஆந்திராவில் ஓங்கோலுக்குச் சென்றார். ஓங்கோலுக்கு வந்து இறங்கிய அந்த மூன்றாம் ஜாம அதிகாலையில் இன்னும் இருள் வடியாமல் பொழுது கறுத்து இருந்தது. கொம்பையா வானத்தைப் பார்த்தார். கிழக்கில் விடிவெள்ளி தூரமாய்த் தெரிந்தது. எப்படியும் நேரம் மூன்றிலிருந்து நான்குக்குள் இருக்கும். கரியன் தூக்கக்கலக்கத்தோடு கொம்பையாவோடு நடந்தான். அக்கய்யா வீடு வயல் வெளியின் நடுவிலிருந்தது. வீட்டின் வாசலில் இருபுறம் நீளமான இரண்டு தென்னை மரங்களும், மாமரங்களும் இருளில் கறுப்பாய் நின்றன. நன்றாக அகலமான வீடு. சுற்றிலும் நீளமாய் கல் சுவர்கள் எடுத்திருந்தார்கள். வலதும் இடதும் உயரமான கல் சுவரில் ஓட்டுச் சாய்ப்பு சரித்து மாட்டுத்தொழுவம் அடைத்திருந்தார்கள். ஒருபுறம் முழுக்க கனத்து, கம்பீரமான ஓங்கோல் மாடுகள். கழுத்தில் அலை அலையாய்த் தாடை மடிப்பிருந்தது. மாடுகள் கால்மடித்துப் படுத்திருந்தன. பார்த்த மாத்திரத்தில் சிவாலயத்தில் வரிசையாய் நந்தியை அமரவைத்து கருங்கல்லில் வடித்தது போலிருந்தது. உண்மையில் எல்லா சிவாலயங்களிலும் இறையின் முன்னால் கால்களை மடக்கி அமர்ந்திருக்கும் கல் நந்திகள் ஓங்கோல் வகை மாடுகள்தான். அதன் எதிர்ப்புறத் தொழுவத்தில் மற்ற எல்லா ஊர் ரகங்களிலும் மாடுகள் ஜதை ஜதையாய் நின்றன. எல்லா மாடுகளும் நிறம் தெரியாமல் ஒன்றுபோல கறுத்த நிறத்தில்தான் தெரிந்தன. இரண்டு தொழுவத்திற்கும் நடுவே வைக்கோல் படப்பும் பெரிய தீவனத் தொட்டியும் இருந்தன. தொழுவத்தில் இரண்டு திசையையும் சேர்த்து வைப்பதுபோல் `ப’ வடிவத்தில் வீடிருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 30

வீட்டில் மனித நடமாட்டமில்லை. இன்னும் சிறிது நேரத்தில் கறவைக்கு தொழுவத்து மனிதர்கள் யாராவது விழித்துக் கொள்வார்களாயிருக்கும். கொம்பையா என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கிருந்து வேறு எங்காவது கிளம்பிச் சென்றுவிட்டு விடிந்ததும் வரலாமென்று கிளம்பினார். வீட்டின் பின்பக்கம் சிறிது தூரம் காலார நடந்தால் அரைமணிக்கெல்லாம் கடற்கரையை அடைந்து விடலாம். அங்கே போய் உட்கார்ந்துவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வரலாமாவென யோசித்துக்கொண்டிருக்கையில். வீட்டின் காவலுக்கு நின்ற நாய் வாசலைப் பார்த்துக் குரைத்தது. நாய் கட்டிக் கிடந்ததால் கயிற்றோடு கழுத்தை இறுக்கிக்கொண்டு குரைக்கத் துவங்கியது. அரவம் கேட்டு வீட்டின் ஒன்பது ஜன்னல்களில் ஒரு ஜன்னலை மட்டும் வளையல் பூட்டிய வயதான கரமொன்று திறப்பது தெரிந்தது.

ஜன்னல் கெண்டியைத் திறக்கும்போதே தெலுங்கில், ``யாரது, கொம்பையாவா?’’ என நடுங்கிய குரலில் உச்சரிப்பது கேட்டது. அந்த வயதான குரல் கேட்ட அடுத்த நொடியே வீட்டில் எல்லா ஜன்னல்களும் வரிசையாய் பட படவெனத் திறப்பது தெரிந்தது. வீட்டின் உள்ளே யாரோ பெரிய திரியிட்ட காடா விளக்கை ஏற்றினார்கள். காடா விளக்கின் வெளிச்சம் வீடு முழுக்க மஞ்சளாய்ப் பரவி வீட்டின் உள்ளே எல்லா ஜன்னல்களிலும் வெவ்வேறு வயதுடைய பெண்களின் கரங்கள் தெரிந்தன. ஜன்னலில் எல்லாக் கரங்களிலும் வளையல்கள் தெரிந்தன. கொம்பையா வளையல்கள் அணியாத நஞ்சம்மாவின் கரத்தைத் தேடினார். வலது மூலை ஜன்னலில் நஞ்சம்மாவின் வளையல் அணியாத சந்தன நிறக் கரம் தெரிந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 30

கொம்பையா அமைதியான குரலில் ``நஞ்சம்மா'' என்ற பெயரை உச்சரித்தார். நாய் குரைக்கும் சத்தத்தில் அவர் குரல் எடுபடவில்லை.

வயதான பெண், குரைக்கும் நாயை சத்தமிட்டு அமர்த்தினார். ``நஞ்சம்மா'' என அவர் மறுபடியும் அழைக்க, சிறிது நேரம் எந்த மறு சத்தமும் எழாமல் இருந்தது. எல்லா வளையல் கரங்களும் தத்தம் ஜன்னல்களை சத்தம் வராமல் இழுத்து சாத்தின. ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் மஞ்சள் வெளிச்சம் மறைந்துகொண்டே வந்து இறுதியில் வலது மூலையில் நஞ்சம்மா ஜன்னலில் மட்டும் இருந்தது.

ஒரு வயதான பெண்மணி எழுந்து வந்து பெரிய தலைவாசல் கதவைத் திறந்துகொண்டு படியிறங்கினாள். நஞ்சம்மாவின் கை அப்போதும் ஜன்னலிலிருந்தது. அவள் பார்த்தபடி இருப்பாளாயிருக்கும். கொம்பையா தூரமாய் மலையரசனோடும் கரியனோடும் வீட்டின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தார். வயதான பெண்மணி தள்ளாடியபடி மெல்ல நடந்து கொம்பையாவின் அருகில் வந்து. ``நீ இன்னிக்கி வருவன்னு தெரியும்'' என்று தெலுங்கில் சொன்னார். கொம்பையா தன்னிடமிருந்த சிறிய துணிப் பொட்டலத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். ``நான் சொன்னதுக்கும் அதிகமாவே இருக்கு.’’ அந்தப் பெண் அதை வாங்காமல் அப்படியே நின்று அதை உறைந்து பார்த்துக் கொண்டிருந்தார். சில நொடியில் உடைந்து பெரிய குரலில் அழத் துவங்கினார். ``அக்கய்யா...அக்கய்யா.''

ஏழு கடல்... ஏழு மலை... - 30

அவருக்கு எப்படித் தேற்றுவது எனத் தெரியவில்லை. உள்ளிருந்து யாராவது வருவர்களா எனப் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் வெளியே வரவில்லை. அப்போதும் நஞ்சம்மா ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். கொம்பையா அந்தப் பெண்ணிடம் துணிப் பொட்டலத்தை நீட்டியபடியே நின்றார். அந்த வயதான பெண் அதை வாங்காமல் பின்னால் திரும்பி மீண்டும் வீடு நோக்கி நடக்கத் துவங்கினார். கொம்பையாவை நோக்கித் தெலுங்கில் திட்டினார். ``இத கொடுத்து செத்துப்போன உயிர ஈடு செஞ்சிரலான்னு நினைக்கிறியா. இந்த மொத்த வீடும் இப்போ ஆண் இல்லாம பெண்கள் மட்டுமே இருக்குற மாதிரி செஞ்சிட்டியே'' அந்தப் பெண் கத்தியவாறே உள்ளே போய் கதவை சத்தமாய் அடித்துச் சாத்தினார்.

கொம்பையா வீட்டின் கதவைத் திறந்து உள்ளே போக முயன்றார். கடைசி ஜன்னலிலிருந்து நஞ்சம்மா கத்தினார். ``இந்த வீட்டுக்குள்ள நீங்க வரக்கூடாது.''

கொம்பையா அப்படியும் அந்த வீட்டின் கோட்டைச் சுவருக்குள் நுழைந்தார். கொம்பையா மலையரசனிடமும் கரியனிடமும் ``நீங்க இங்கயே நில்லுங்க. உள்ள வர வேண்டாம்’’ என்று உத்தரவு போட்டுவிட்டார். நாய் மீண்டும் குரைத்தது. யாரோ ஒரு புதிய மனிதன் தொழுவத்தைக் கடப்பதால் எல்லா மாடுகளும் மிரண்டன. கொம்பையா மூடிக்கிடக்கும் தலைவாசல் கதவின் முன் நின்று கதவைத் தட்டினார். ``நஞ்சம்மா, கதவத் திறக்கச் சொல்லு.’’ யாரும் கதவைத் திறக்க முன்வரவில்லை.

நஞ்சம்மா இருக்கும் ஜன்னலுக்குப் போனார். ``நஞ்சம்மா, ஊருக்கு முன்ன சத்தியம் பண்ணுன மாதிரி இத எடுத்திட்டு வந்திருக்கேன் தயவு செஞ்சி வாங்கிக்க.'' நஞ்சம்மா எந்தச் சலனமுமில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். எடுத்து வந்திருந்த அந்தத் துணிப் பொட்டலத்தை ஜன்னலின் வழியாக நஞ்சம்மாவுக்குக் கொடுக்க எட்டி நீட்டினார். நஞ்சம்மா தன் கையை உள்ளிழுத்துக்கொண்டார்.

தெலுங்கில் கத்தினார், ``இங்க இருந்து போ... இந்தக் காசும் நகையையும் குடுத்திட்டா என் வாழ்க்கைய திருப்பிக் குடுத்திர முடியுமா? ஊருக்கு நீ பண்ணுன சத்தியத்த நான் ஏத்துக்கல. காசும் பணமும் எல்லாத்தையும் எப்படி ஈடுகட்டும். என் ஏழு பெண் மக்களும் அப்பன் இல்லாம எப்படித் தவிச்சாங்கன்னு தெரியுமா? அவர பெத்த தாயி எப்படி தவிக்கிறான்னு தெரியுமா? என் நிலைமைய என்னன்னு சொல்ல.ஆசையா வாழ வேண்டிய வயசுல இப்படி எல்லாத்தையும் அழிச்சிட்டு உக்காந்திருக்கேனே...நீ கொண்டு வந்திருக்கிறத வெச்சி இத ஈடு செஞ்சிரலாமா, சொல்லு?’’

``நஞ்சம்மா, இப்பவும் சொல்றேன், அக்கய்யா சாவ எத குடுத்தாலும் ஈடு கட்டிர முடியாது. நான் பண்ணுனது தப்புத்தான். அதுக்காக என் ஜென்மம் முழுக்க இந்த வீட்டுக்கு உழச்சிப் போடவும் தயாராத்தான் இருக்கேன். அன்னைக்கி ஊர் மனுசங்க முன்னாடி ஒத்துக்கிட்ட மாதிரி ஏழு பெண் மக்களுக்கும் அக்கய்யா இருந்தா என்ன செய்வாரோ அதப் போல, ஒத்துக்கிட்டதவிடக் கூடுதலாவே கொண்டு வந்திருக்கேன். வேற என்ன வேணும்னு கேளு. நான் செய்யுறேன். தொழுவக்காரனா இங்க கிடந்துக்குறேன். எல்லாப் பிள்ளைகளையும் கர ஏத்தி விடுறேன். அக்கய்யா அம்மாவுக்கு பெத்த மகேன் மாதிரி நான் இருந்து பாத்துக்குறேன். அக்கய்யா என் நண்பன். ஏதோ ஒரு விதத்துல அவன் சாவுக்கு நான் காரணமாகிட்டேன். இது வரைக்கும் என் வாழ்நாளெல்லாம் சேத்து வெச்ச மொத்தப் பணம் இது. காலணாக் காசக்கூட செலவு பண்ணாம பத்திரமா வெச்சிருந்து சேமிச்சது. எடுத்துக்கோங்க. இது அக்கய்யாக்கு ஈடு இல்லதான். ஆனா எல்லாப் பிள்ளைகளுக்கும் வழி பண்றதுக்கு இது உதவியாயிருக்கும்.

இதுக்கு அப்பறமும் என் ஆயுசு முடியுற வரைக்கும் நான் உழைக்கிற மொத்தத்தையும் கொண்டு வந்து இங்க ஒப்படைச்சிடுறேன். இத வாங்கிக்கோங்க. அக்கய்யா உயிரத் தவிர வேற என்ன வேணும்னாலும் கேளுங்க. நான் எப்பாடுபட்டாவது கொண்டு வந்திருறேன்.’’

‘`எனக்கு உன்னோட உயிரு வேணும்.’’

ஒரு நிமிடம் எல்லோரும் அதிர்ச்சியானார்கள். வீட்டிற்குள் அக்கய்யாவின் அம்மா தன் தளர்ந்த குரலில் பேசினார். நஞ்சம்மா அவரை ஏறிட்டுப் பார்த்தார்.

“உண்மையாத்தான் சொல்றேன். எனக்கு கொம்பையா உயிர் வேணும்.''

கொம்பையா எல்லாவற்றிற்கும் தயாரானவர் போல் பேசினார். ``எடுத்துக்கோங்க.''

மலையரசன் வீட்டின் கோட்டைச் சுவருக்குள் இறங்கத் தயாரானான். கொம்பையா அதட்டினார். ``நீங்க ரெண்டு பேரும் எனக்கு என்ன நடந்தாலும் உள்ள வரக்கூடாது, சொல்லிட்டேன்.’’

கரியன் கத்தினான். சுற்றிலும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை வயல்வெளிகள்தானிருந்தன.கொம்பையா திரும்பி அவனைக் கண்களைக் காட்டி அமைதிப்படுத்தினார்.

நஞ்சம்மா தன் ஜன்னலை இழுத்துச் சாத்திக்கொண்டாள். சிறிது நேரம் எந்த சத்தமுமில்லாமல் நிசப்தமாகியிருந்தது. தலைவாசல் கதவைத் திறக்கும் சத்தம். கரியன் என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். வீட்டிற்குள்ளிருந்து பெண்கள் வரிசையாய் வரத் தொடங்கினார்கள்.

மொத்தம் ஒன்பது பெண்கள், அக்கய்யாவின் ஏழு பெண்மக்களும், அக்கய்யாவின் அம்மாவும் இறுதியாக நஞ்சம்மாவும் வெளியே வந்தார்கள். நஞ்சம்மாவின் கையில் நீண்ட அருவாளிருந்தது. நஞ்சம்மா நன்கு சந்தன நிறத்தில் ஓங்குதாங்காக இருந்தார். விரிந்த முடியில் நிறைய சடை பிடித்துப்போயிருந்தது. கொம்பையா அக்கய்யாவின் ஏழு மக்களையும் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். பின் கிழக்குப் பக்கமாகத் திரும்பி நெடுஞ்சாண் கிடையாக மண்ணை விழுந்து முத்தமிட்டுக்கொண்டார். நுழைவாயிலின் பக்கமாகத் திரும்பி மலையரசனையும் கரியனையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டார். அக்கய்யாவின் பெண்மக்கள் கொம்பையாவைப் பின்பக்கமாய் வந்து இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டார்கள். கொம்பையா கைகளை உதறிவிட்டார். எதுவும் தேவையில்லை எனச் சொல்லிவிட்டு மண்ணில் முழங்கால் போட்டு அமர்ந்துகொண்டார்.

நஞ்சம்மா முழங்காலில் அமர்ந்திருக்கும் கொம்பையாவின் நெஞ்சில் ஓங்கி தனது காலை வைத்தார். பின் வெட்ட அவரின் கழுத்துக்கு அருவாளை ஆவேசமாய்க் கொண்டு வந்தார். கொம்பையா இமைக்காமல் எந்த பயமுமில்லாமல் நஞ்சம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். நஞ்சம்மா கொம்பையாவின் கழுத்தின் அருகில் அருவாளைக் கொண்டு வரும் போது அவள் மனது பலகீனமாகி அரிவாள் பிடி தரை நோக்கிக் கீழிறங்கியது.

கொம்பையா அவளிடம் ``கண்களை மூடிக்கொண்டு வெட்டு. என் கண்களைப் பார்க்காதே’’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால் நஞ்சம்மா ஒவ்வொருமுறையும் அருவாளை தரை நோக்கித் தாழ்த்தினாள். இறுதியாக கொம்பையா ``அக்கய்யாவை வெட்டியதை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்’’ என்று மீண்டும் மீண்டும் சொன்னார்.

நஞ்சம்மா இந்த முறை நிச்சயம் வெட்டிவிடுவதைப் போல ஆவேசமாய் அரிவாளைக் கழுத்துக்குக் கொண்டுவந்தார். அவரால் முடியவில்லை. ``உன்னக் கொல்லணும்னு தோணுது. ஆனா என்னால முடியல, எதோ தடுத்துக்கிட்டே இருக்கு. உன்னக் கொன்னு நான் இன்னும் எத்தன வருஷத்துக்குக் குற்ற உணர்ச்சில சாகுறது. ஆனாலும் உன்னக் கொல்லணும்னு தான் ஆசையா இருக்கு.’’ அரிவாளைக் கழுத்தின் மேல் வைத்தபடி பேசினார். கொம்பையா அந்த அரிவாளில் தன் சங்கைத் தானே அழுத்தி அறுத்துக்கொண்டார். கூர்மையான அந்த அரிவாள் அவரின் தொண்டையில் நொடிக்குள் ஒரு சிகப்புக் கோட்டை வரைந்தது. முழங்காலைப் பிரிக்காமல் அப்படியே தலை தொங்கிக் கீழே மண்ணைப் பார்த்தது. மொத்த உடலும் இடது புறமாய்ச் சரிந்து மண்ணில் விழுந்தது.

கரியனும் மலையரசனும் நுழைவாயிலை ஏறிக் குதித்து கொம்பையாவை நோக்கி ஓடி வந்தார்கள். அவர் உடல் துடித்துத் துடித்து அடங்கியது. இருவரும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினார்கள். எல்லாப் பெண்களும் வரிசையாய் வீட்டுக்குள் செல்லத் துவங்கினார்கள்.கரியனும் மலையரசனும் கொம்பையாவின் உடலைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தார்கள். அவரின் உயிர் அடங்கிப்போயிருந்தது. பெரும் ஓலமெடுத்து இருவரும் அழத் துவங்கினார்கள். உடல் முழுக்க பிராணிகளின் வாடை அடிக்கும் மனிதனின் இறந்த உடலை தொழுவத்தின் எல்லா மாடுகளும் உறைந்து பார்த்தபடி நின்றன.

மகன் வழி ( 1978 - வேனல் காலம் )

‘`எல்லாப் பயணிகளின் கால்களும் ஒரே சாயல் கொண்டவைதான்.’’

~ பராரிகள்

ந்த இருளுக்குள் மண் தரையில் தரையோடு தரையாய்ப் பதுங்கியிருந்த மனிதர்கள் வரிசையாய் எழுந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். காயாம்பூதான் பார்த்தாள். ஒரு உருவம் காற்றில் எல்லா மனிதர்களையும் தொட்டுத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டிருப்பதை. ``அப்பா...’’ என்று அழைத்தபடி அவள் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டாள். தூரத்தில் தார்ச்சாலை தெரிந்தது. எல்லோரும் விரைந்து தார்ச்சாலை இருக்கும் இடத்திற்கு ஓடத் துவங்கினார்கள். அதை எட்டிவிட்டால் போதும், சூளை அடிமையாக இல்லாமல் நாமும் ஒரு சாதாரண மனிதனைப்போல் வாழ்ந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே எல்லோரும் விரைந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேர் தார்ச்சாலையை எட்டிவிட்டார்கள். அவர்கள் சந்தோஷமாய் பிரவாகமெடுத்து அழத் துவங்கினார்கள். எத்தனை ஆண்டுகள் உள்ளே கொத்தடிமையாய் வாழ்ந்துகொண்டிருந்தோம். ‘அப்படி உள்ளேயே வாழ்ந்து உள்ளேயே இறந்து விடுவோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.’ நினைக்கும் போதே எல்லோருக்கும் பதறியது. நேரம் செல்லச் செல்ல இன்னும் ஒரு சிலர் தப்பித்து வரத்துவங்கி நெடுஞ்சாலை முழுக்க சூளை ஆட்களாகத் தெரிந்தார்கள். பொழுது புலரத் துவங்கியது. உள்ளேயிருக்கும் மனிதர்களையும் எப்படியாவது மீட்டு எடுத்து வந்துவிடத் தீர்மானித்து அந்தப் பக்கமாய் வரும் எல்லா வாகனங்களையும் நிறுத்தி உதவி கேட்டார்கள். காயாம்பூவின் அப்பா மாடசாமி குறித்துக் கவலையடைந்தார்.சூரன் அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் உதவி கேட்கலாமென்று சொன்னான். கூட்டத்திலிருந்த ஒருவர் ``அவர்களும் இந்தச் சூளைக்காரர்களுக்கு உடந்தையானவர்களாகத்தான் இருக்க முடியும். இங்கிருந்து அடுத்த ஏழு கிலோமீட்டர் தூரத்தில் என்ன நடக்குதுன்னு இதுவரைக்கும் தெரியாதவங்களாவா இருந்திருப்பாங்க'' என்றார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 30

சூரன் அந்தப் பக்கமாய் வந்த வாகனங்களை நிறுத்தி, செல்லும் வழியில் பெண்களை தூரமாய்க் கொண்டு இறக்கிவிடச் சொன்னான். காயாம்பூவும் பரமசுந்தரியும் ஒருவர் மாற்றி ஒருவர் ஏற மறுத்து நின்றார்கள். அவர்கள் சூரனையும் தங்களோடு வரச் சொன்னார்கள். காலியாய் வந்த ஒரு லாரி அடுத்த நாற்பது கிலோ மீட்டரிலிருக்கும் மெட்ராசுக்கு எல்லாரையும் ஏற்றிக்கொண்டு போய் விட சம்மதித்தது. நூற்றுக்கும் மேல் அங்கு நின்ற எல்லோரும் ஏறிக் கொண்டார்கள். வண்டி கிளம்பத் துவங்கியதும் எல்லோருக்குள்ளும் தாம் வாழ்ந்து விடுவோமென்ற நம்பிக்கை பெருமூச்சாய் வந்தது.

சிலர் தங்கள் உறவுகள் இன்னும் அங்கு சிக்கிக்கொண்டிருப்பதால் இந்த விடுதலையை முழுமையாய் அனுபவிக்க முடியாமல் கவலையோடிருந்தார்கள். மெட்ராஸ் எல்லைக்குள் வந்த உடனே சூரன் வண்டியை நிறுத்தச் சொன்னான். எல்லோரும் இறங்கிக்கொண்டார்கள். சூரன் காவல் நிலையத்தின் உள்ளே போய்ச் சொன்ன அடுத்த பத்திருபது நிமிடத்திற்குள் அந்த இடமே பரபரப்பானது. பெரிய பெரிய வாகனங்கள் போலீஸ்காரர்கள் நிரம்பி வந்தன. சூரன் அந்த இடத்தை அடையாளம் காட்டுவதாக அவர்களோடு கிளம்பினான்.

விடிந்தபோது எல்லா போலீஸ் வாகனங்களும் சூளைக்குள் நுழைந்தன. அங்கங்கு நிறைய பேர் விடுதலை உணர்வோடு கதறி அழும் சத்தம் கேட்டது. உடன் வந்த காவலர்கள் ‘இவ்வளவு நீளத்திற்கு ஆந்திரா எல்லை வரை இவ்வளவு சூளைகளா, இவ்வளவு கொத்தடிமைகளா’ என்று திகைப்படைந்தார்கள். அவர்கள் அன்று முழுக்க யார் யாருக்கோ தகவல் பரிமாறிக்கொண்டேயிருந்தார்கள். காவல் வாகனங்கள் அன்று முழுக்க வந்து கொண்டேயிருந்தன. கோட்டைச் சுவர்கள் அடுத்த நான்கு நாள்கள் வரை இடிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தன. சூரன் மாடசாமியைத் தேடினான். நிறைய இறந்த உடல்களோடு மாடசாமியின் இறந்த உடலும் கிடந்தது. மதியத்திற்குள் சூளை அடிமைகள் எல்லோரும் மீட்கப்பட்டார்கள். நிறைய பேர் இறந்துபோயிருந்தார்கள். மனிதர்களைப் பறி கொடுத்தவர்கள் துக்கமாய் இருந்தார்கள். தன் தாயையும் தகப்பனையும் யாரென்று அறியாத சிறுவர்கள் அங்கு நிறைய நின்று கொண்டிருந்தார்கள். அரசாங்க வண்டியில் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு மெட்ராஸுக்கு வாகனங்கள் புறப்பட்டன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களும் வண்டியில் ஏற்றப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கூலிக் குற்றவாளிகள். சூளையின் முதலாளிகள் தப்பித்துக்கொண்டார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 30

அன்று மாலைக்குள் கிட்டத்தட்ட எல்லோரையும் மீட்டுவிட்டார்கள். சிறுவர்களை தாய் தந்தையருக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. ஐந்நூற்றுக்கும் மேல் சிறுவர் சிறுமியர் அங்கு இருந்தார்கள். பரமசுந்தரியும் தன் மகனை அங்கு தேடினாள். அவளால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளின் அப்பாதான் சொன்னார். ``நம்ம வயித்துல பொறந்தாதானா? எல்லாம் நம்ம பிள்ளைங்கதான். யாராவது ஒருத்தன கூட்டிக்கிட்டு வா.'' பரமசுந்தரி இவனாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தபடி ஒருவனைத் தன் கைக்குள் பிடித்து வைத்துக்கொண்டாள். அவளைப்போலவே நிறைய பெண்கள், பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் இழுத்துக்கொண்டார்கள். அப்படியும் பாதிக்கு மேல் சிறுவர்களும் சிறுமிகளும் நின்றார்கள். அவர்களை ஏதாவது காப்பகங்களில் சேர்த்துவிடத் தீர்மானித்தார்கள். பிறந்ததிலிருந்தே சிறைச்சாலைக் கொட்டடி போன்ற சூளையில் வளர்ந்த குழந்தைகள் இப்போது காப்பகங்களில் வளர வேண்டுமா? எல்லோரும் மேலும் தங்களுக்கு ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்டார்கள்.

எல்லோரும் அரசாங்க உதவியோடு அவரவர் ஊர்களை நோக்கிச் செல்லத் துவங்கினார்கள். காயாம்பூவும் பரமசுந்தரியும் தங்கள் ஊருக்குக் கிளம்பத் துவங்கினார்கள். காயாம்பூவிற்கு சூரனை விட்டுக் கிளம்ப மனமில்லை. பரம சுந்தரிக்கும் அப்படியேதான் இருந்தது. பரமு சூரனிடம் மீண்டும் ஒருமுறை கேட்டாள். ``சத்தியமா சொல்லு. இந்தக் குழந்தைய நான் உனக்குப் பெக்கலையா?''

``சத்தியமா இல்ல. நீ என்ன மொத மொத பாத்த அன்னைக்கிதான் நான் சூளைக்கே வந்தேன். இது சத்தியம்.''

``ம்.''

காயாம்பூ எதுவும் பேசவில்லை. எல்லோரும் கிளம்பினார்கள். சூரன் தன் கால் போன போக்கில் எங்கேயோ தனியாக நடந்து போய்க்கொண்டிருந்தான். அவன் தலை முழுக்க இன்னும் செம்மண் புழுதி அப்படியேயிருந்தது. நெடுஞ்சாலைக்கு வந்து கிடைத்த லாரியை மறித்தான். வடநாட்டுக்குச் செல்லும் லாரியொன்று அவனை ஏற்றிக்கொண்டது.

~ ஓடும்