
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
தந்தை வழி (1951 - பனிக்காலம்)
‘`கொம்பையா புதையுண்ட புல்மேட்டு மரத்தைத் தேடி வந்தமர்கின்றன வலசை செல்லும் பறவைகள்.’’
~ பராரிகள்
எல்லாம் நொடிக்குள் நடந்து முடிந்து விட்டன. முழு நிலா வெளிச்சத்தின் கீழ் கொம்பையாவின் உடல் இறந்து சரிந்து கிடந்தது. கொம்பையாவின் உடலின் அருகில் மலையரசனும், கரியனும் சித்த பிரமை பிடித்தவர்களைப் போல் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் கண்களில் இன்னும் மிரட்சி தெரிந்தது. உறைந்துபோன அந்தக் கண்களிலிருந்து நீர் கோடுபோல வழிந்துகொண்டேயிருந்தது. கொம்பையா கழுத்திலிருந்து வழிந்த ரத்தம், மண் தரையில் நீண்ட தூரத்திற்குச் செந்நிறக் கோடாய் ஓடியிருந்தது. அவர் கை இன்னும் இறுக்கமாய், அக்கய்யா வீட்டிற்கு தான் கொடுப்பதாய்ச் சொன்ன ஈட்டுத் தொகையைப் பெருவாரி நகையாக சிறு பொதியில் முடிந்து பிடித்தபடியிருந்தது.

அந்த வீட்டின் நாய் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு வந்து கொம்பையாவின் ரத்தம் வழிந்து உலர்ந்த ஈரமண்ணை நக்கியது. கரியன் அதை விரட்டினான். அது சிறிது நேரம் நகர்ந்து செல்வதும், பின் மீண்டும் வந்து ரத்த மண்ணை நக்குவதுமாயிருந்தது. அது இப்போது கொம்பையாவின் முகத்தைத் தன் நாவால் நக்கத் துவங்கியது. கரியன் ஒரு கல்லை எடுத்து அதன் மேல் எறிந்தான். சாம்பல் நிற அதிகாலை. நேரம் எப்படியும் ஐந்தை நெருங்கியிருக்கும். வைக்கோல் போரின் மேலிருந்து முதல் கோழி கூவியது.
ஓட்டு வீட்டின் புகைபோக்கி வழியே புகை மேலெழும்பி வந்துகொண்டிருந்தது. இப்போது ஒன்பது ஜன்னல்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் திறக்கத் துவங்கின. வீட்டிற்குள்ளிருந்து புது அரிசியில் சோறு வடிக்கும் வாசனை வந்தது.கொம்பையாவின் உடலின் மேல் நிலைகுத்திப் பார்த்துக்கொண்டிருந்த கரியனும் மலையரசனும், சோற்று வாடையை முகர்ந்து ஒருவரை ஒருவர் குழப்பமாய்ப் பார்த்துக்கொண்டார்கள்.
வீட்டிற்குள்ளிருந்து சளார் சளாரென யாரோ தன் உடலில் நீரை வேக வேகமாக மொண்டு ஊற்றும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறக்கும் சத்தம். நஞ்சம்மா ஈரப் புடவையோடு வெளியே வந்தாள். நஞ்சம்மாவின் ஒரு கை பெரிய சோற்றுப் பானையைத் தாங்கி ஏந்தியிருந்தது. அதன்மேல் மூடியிருந்த உலைமூடியின் கண்கள் வழியே வெந்த சோற்றின் புகை வெளி வந்துகொண்டிருந்தது. நஞ்சம்மா அந்த உலைமூடியைத் தூக்கி எறிந்தாள். இப்போது புகையும், சுடுசோற்றின் வாசனையும் பெரிதாக வந்துகொண்டிருந்தது. சோற்றுப் பானையில் சூடு தகித்துக் கொண்டிருந்தது. நஞ்சம்மா சூட்டை உணராமல், கை மாற்றாமல் அப்படியே ஏந்தியிருந்தாள். அவள் நெஞ்சு விம்மலோடும், கோபத்தோடும் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. சோற்றுப் பானையை அப்படியே கொம்பையாவின் முன் வைத்தவள் தன் கையை அகப்பை போல் சோற்றுப் பானைக்குள் விட்டு சுடச்சுட சோற்றை அள்ளினாள். நஞ்சம்மாவின் பரந்த கையில் அரைப் பானைச் சோறாவது வந்திருக்கும். அந்த வெள்ளைச் சோற்றிலிருந்து சுடச்சுட புகையாய் வந்துகொண்டிருந்தது.

நஞ்சம்மா சரிந்துகிடக்கும் கொம்பையாவின் உடலுக்கு அருகில் போய் அவரின் அறுந்த தலையை முடியைப் பிடித்துத் தூக்கி அவரின் முகத்தைப் பார்த்தாள். அவரின் கண்கள் அப்போதும் திறந்திருந்தன. நஞ்சம்மாவைப் பார்ப்பதுபோலிருந்தது. கழுத்தை உயர்த்தியதும் அவரின் கழுத்திலிருந்து மிச்ச சொச்ச ரத்தம் வழியத் துவங்கியது. சூடான சோற்றை அந்த ரத்தத்தில் பிசைந்து பெரிய பெரிய சோற்று உருண்டையாய் நாலு உருண்டை பிசைந்தாள். அந்த வீட்டைச் சுற்றியிருக்கும் அக்கய்யாவின் ஆவிக்கு ஊட்டுக் கொடுப்பதுபோல் திசைக்கொரு உருண்டையாய் ரத்தச்சோற்றை வீசி எறிந்தாள்.
பின் அதே ஆவேசமும் ஆங்காரமுமாய் மீண்டுமொருமுறை மொத்தச் சோற்றையும் கொம்பையாவின் ரத்தம் வழிந்து ஓடிய மண் தரையில் கொட்டி மண்ணோடும் ரத்தத்தோடும் அந்தச் சோற்றைப் பிசைந்து பிசைந்து பல வருடப் பசிகொண்டவள்போல் உண்ணத் துவங்கினாள்.
உள்ளிருந்து சளார் சளாரென மீண்டும் நீரை மொண்டு உடலில் ஊற்றும் சத்தம் தொடர்ச்சியாய்க் கேட்கத் துவங்கியது. அதே போல ஈரப்புடவையோடு இப்போது அக்கய்யாவின் அம்மா வந்து நஞ்சம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டார். உள்ளிருந்து ஈர உடைகளோடு அக்கய்யாவின் ஏழு பெண் மக்களும் வரிசையாய் வரத் துவங்கி நஞ்சம்மாவைச் சுற்றி வட்டமாய் அமர்ந்துகொண்டார்கள்.
அக்கய்யாவின் அம்மா ஒப்பாரிபோல் பாடத் துவங்கினாள்.
''போச்சே போச்சே என் பூமி தருசா போச்சே
போச்சே போச்சே என் கரையெல்லாம் வறண்டு போச்சே
போச்சே போச்சே என் நிலமெல்லாம் வெடிச்சுப் போச்சே
போச்சே போச்சே என் காடெல்லாம் முள்ளா வளந்து மூடிப்போச்சே
போச்சே போச்சே என் வீடெலாம் பாம்பா நிறைஞ்சு போச்சே
போச்சே போச்சே கோட்டானும், வவ்வாலும் கூடவே குடியிருந்து போச்சே
போச்சே போச்சே எங்க வாழ்க்க இருண்டு போச்சே
போச்சே போச்சே எல்லாமே உன்னோட போச்சே
அக்கய்யா... எல்லாமே உன்னோடவே போச்சே...’’
மற்ற எல்லாப் பெண்மக்களும் தலைவிரிக்கோலமாய் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி அழத் துவங்கினார்கள்.

சிறிது நேரம் அழுது முடித்தபின் எல்லோரும் வரிசையாக வீட்டிற்குள் செல்லத துவங்கினார்கள். நஞ்சம்மா மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தாள். மலையரசன் எழுந்து கொம்பையாவின் உடலைத் தூக்கித் தன் தோளில் போட முயன்றான். அவனால் கொம்பையாவைத் தூக்க முடியவில்லை. பிண கனம் கனத்தது. கரியனும் சேர்ந்து அவன் தோளில் ஏற்ற, எவ்வளவோ முயற்சி செய்தார்கள். நஞ்சம்மா எழுந்து எந்தப் பிரயத்தனமும் காட்டாமல் கொம்பையாவின் இறந்த உடலை எடுத்துத் தன் தோளில் போட்டபடி வெக்கு வெக்கென வேகமாக நடக்கத் துவங்கினாள். அவர் கையிலிருந்த நகைப் பொதி அங்கே அப்போதே கீழே விழுந்தது. யாரும் எடுக்கவில்லை.
அவர்களுக்குப் பின்னால் கிழக்கில் பொழுது ரத்தச் சிவப்பாய் விடியத் துவங்கி மஞ்சளாய் உருமாறத் துவங்கியது. நடை சிறிது நேரத்திலேயே சிறிய ஓட்டமாய் மாறத் துவங்கியது. இருவரும் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய்ப் போனார்கள். சிறிது தூரத்திலேயே ஒரு வில்வ மரத்தின் கீழ் வேகம் குறைத்து நஞ்சம்மா நின்றாள். அங்கு ஏற்கெனவே கொம்பையாவின் நீளமான உடலுக்கு சரியான அளவில் ஒரு குழி வெட்டப்பட்டிருந்தது. நஞ்சம்மா அந்தக் குழிக்குள் கொம்பையாவைப் போட்டுவிட்டு குனிந்து தன் கைநிறைய மண் அள்ளி வானைப் பார்த்து வணங்கிவிட்டு குழிக்குள் முதல் கை மண்ணள்ளிப் போட்டாள்.
நஞ்சம்மா அதே வேகத்தோடு தன் வீடிருக்கும் திசை நோக்கி சூரியனுக்கு நேராக நடக்கத் துவங்கினாள். இருவரும் திகைத்துப் பார்த்தபடியிருந்தார்கள். பின் குழிக்குள் இறங்கி சிறிது நேரம் கொம்பையாவின் முகத்தைப் பார்த்தபடி நின்றார்கள். கொம்பையாவின் குழிக்கு அருகில் ஆறடிக்கு மட்டும் ஒரு சிறிய சதுரத்தில் முற்றிய நெல் தாள்கள் கிடந்தன. மலையரசனுக்கு நினைவுக்கு வந்தது. இதே வில்வ மரத்தடியில்தான் சில வருடங்களுக்கு முன் அக்கய்யாவைப் புதைத்தார்கள். நெல் வளர்ந்து கிடப்பதுதான் அக்கய்யாவைப் புதைத்த இடமாக இருக்கும். நஞ்சம்மா உண்ட ரத்தச் சோறு அக்கய்யாவின் உடலைச் செரித்து உண்ட நெல்மணிகளாகத்தான் இருக்கும். இது ஏற்கெனவே திட்டமிட்டதுதான்போல.
மலையரசன் அக்கய்யாவின் கதையை கரியனுக்கு சொல்லத் தொடங்கினான்.
``அக்கய்யா மாட்டுக்குப் போடுற மூக்கணாங்கயிற்றையும் பிடிக்கயிற்றையும் சேர்த்துக் கட்டி அந்தா தூரமா ஒரு மணல் மேடு தெரியுதே, அங்க ஒரு மரத்துல தொங்கிட்டாரு. அவமானம் தாங்க மாட்டாம அப்படிப் பண்ணிட்டாரு. அக்கய்யா வருசத்துக்கு நாலு தடவ பத்து மந்த ஓங்கோல் மாட்ட பத்திக்கிட்டு தமிழ்நாட்டுச் சந்தைக்கி வருவாரு. ஓங்கோல் மாடுங்க நல்லா ஓங்கு தாங்கா, கழுத்தாம் பட்டைலாம் நல்லா சேல மடிப்பு மாதிரி அலை அலையா மடிஞ்சி தரையத் தொடுற மாதிரி இருக்கும். அந்தப் பெரிய உருவத்துக்குச் சின்னக் கொம்புங்க. சிவாலய நந்திய நேர்ல பாத்த மாதிரி இருக்குறதால மாடு சந்தைய எட்டுறதுக்குள்ள உனக்கு எனக்குன்னு போட்டி போட்டு வாங்கிட்டுப் போயிடுவாங்க. அவர் திரும்பப் போகும்போது இங்க இருக்குற காங்கேயம், உம்பளச்சேரி, புளிக்குளம், புங்கனூர் மாடுகள ஓட்டிட்டுப் போவாரு. அப்படித்தான் சந்தைல பாத்து கொம்பை யாக்கும் அக்கய்யாக்கும் பழக்கம்.
போகப் போக அவங்க ரெண்டு பேரும் அப்படி நெருக்கமான நண்பர்களா மாறிட்டாங்க. வருசத்துக்கு நாலு தடவ வருவாரு. தெக்க மதுர சந்தைக்கும், கமுதி சந்தைக்கும், மேற்க அந்தியூர்ச் சந்தைக்கும் வருவாரு. அவங்க பழக்கமும் யாவாரமும் நல்லாதான் போய்க்கிட்டு இருந்தது. ஒருக்கா நஞ்சம்மாவ கல்யாணம் பண்ணிக் கணும்னு சொல்லி இங்க மாடுகள யாவாரத்துக்கு ஓட்டிட்டு வரும்போது அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு. அந்த நேரம் நஞ்சம்மாக்கு ஏற்கெனவே கல்யாணம் நடந்து நாலு பெண் மக்க இருந்தாங்க. அவங்க வீட்டுக்காரர் செத்துப்போயி ஏற்கெனவே நாலஞ்சி வருஷம் ஆகிடுச்சு. நஞ்சம்மா நல்ல வசதியான ஜமீன் மாதிரி பெரிய வீட்ல பொறந்த பொம்பள. ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க யாரும் ஒத்துக்கல. அவங்க கணவர் வீட்ல இருந்து எதிர்ப்பு. பொறந்த வீட்ல இருந்தும் எதிர்ப்பு. கொம்பையாவ நம்பி வந்ததும் கொம்பையாதான் மதுர தாவணில கருப்பர் கோயிலுல தாலி எடுத்துக் குடுத்து, கட்ட வெச்சிருக்காரு. எல்லாம் சந்தோசமாத்தான் போச்சி. அக்கய்யாக்கு அடுத்தடுத்து பொம்பளப் பிள்ளைங்க. ஒவ்வொரு குழந்தைக்கும் கொம்பையாதான் தாய்மாமன் சீரு மாதிரி வெள்ளில அரசிலைக்கொடியும், காதுக்குப் பொன்னகையும் எடுத்துச் செஞ்சிருக்காரு. அந்த அளவுக்கு நட்பும் உறவுமாத்தான் இருந்திருக்காங்க.
ஒரு தடவ அக்கய்யா ஆந்திரத்திலேருந்து மாடுகள விக்க பத்திக்கிட்டு இங்க வரும்போது கடுமையான மழைக்காலம். வழியெல்லாம் ஆத்துல வெள்ளம். வெள்ளம் வடிஞ்சதும் போகலாம்னு ரெண்டு மூணு வாரமா அக்கய்யாவும், அவங்க ஆட்களும் ஆத்தோரமா அங்கயே பொங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்திருக்காங்க. ராத்திரி ஒரு பெரிய வெள்ளத்துல மனுஷங்களும் மாடுகளும் மொத்தமா தண்ணியோட போயி ஜலசமாதி ஆகிடுச்சு. அக்கய்யாவும், ஒண்ணு ரெண்டு மனுஷங்களும் மட்டும்தான் தப்பிச்சிருக்காங்க. தொழில்ல பெருவாரியான நஷ்டம். அடுத்த ரெண்டு வருஷம் அவர் எந்தச் சந்தைக்கும் வரவேயில்ல. கொம்பையா நேர்ல பாக்க இங்க வந்திருக்காரு. அவர் ஏழு பெண் மக்களோட கஷ்ட ஜீவனம் அனுபவிச்சிக்கிட்டு இருக்குறத பாத்துக்கிட்டு பொறுக்க மாட்டாம, `நான் சந்தைல உனக்கு மாடு பிடிச்சி விடுறேன். ஒத்தக் காசு நீ தர வேண்டாம். வித்து முடிச்சி அடுத்த சுத்துக்கு நீ அங்க வரும்போது தந்தாப் போதும்’ அப்படின்னு சொல்லிட்டுப் போனாரு. அப்படியும் அவர் ஒத்துக்கல. கொஞ்ச நாள்ல கொம்பையாவும் அக்கய்யாவ மறந்துட்டாரு.
அப்போதான் நெல்லூர்ச் சந்தைக்கு வந்திருக்கும்போது நாலஞ்சி மாட்டு யாவாரிங்க கொம்பையாகிட்ட முறையிட்டுருக்காங்க. சந்தைக்கு ஓட்டிக்கிட்டு வார மாடுகள தீவட்டிக் கொள்ளைக்காரங்க மறிச்சி ஓடிக்கிட்டுப் போறாங்கன்னு. எதுத்த நாலஞ்சி பேர கொன்னு போட்ருக்காங்கன்னும் அவங்க முறையிட்டாங்க.
சந்தையில ஒரு துப்பு கிடச்சி, யாவாரிங்க எல்லோரும் கொம்பையாவக் கூட்டிக்கிட்டு ஓங்கோல் பக்கமா வந்திருக்காங்க. கிடைச்ச துப்பு தப்பா இருக்குன்னு யாவாரிங்க வெறுங்கையோட திரும்ப நினைச்சாங்க. ‘இவ்வளவு தூரம் வந்திட்டு அக்கய்யா வீட்டுக்குப் போகலைன்னா சரியா இருக்காது’ன்னு எல்லாரையும் கூப்பிட்டுக்கிட்டு இங்க வந்திருக்காரு. அதே நேரம் அக்கய்யாவும் பல வருசத்துக்குப் பிறகு ஒரு மந்த மாட்டக் கூட்டிக்கிட்டு சந்தக்கிப் போகலாம்னு எதுத்து வந்திருக்காரு. ரெண்டு பேரும் ரெம்ப நாளைக்கி அப்புறம் பாத்துக்கிட்டதால கட்டி அணைச்சிக்கிட்டாங்க. கூட வந்த யாவாரிங்களுக்கு அதிர்ச்சி. மொத்த மாடும் அவங்களோடது. காதோட காதா வச்சி கொம்பையாகிட்ட விசயத்தச் சொல்றாங்க. கொம்பையாக்கும் அதிர்ச்சிதான்.
விசாரிச்சதுல எல்லாமே களவாடப்பட்ட மாடுங்கதான். கொம்பையாக்கு பேச்சும் மூச்சும் ஓடல. அவர் யாவாரிங்களுக்கு ஈட்டுத் தொக குடுக்குறேன்னு சொல்லிப் பாத்தாரு. யாரும் ஒத்துக்கல. கொம்பையா எவ்வளவு மறுத்தும் ஊர் ஆட்கள பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்க. ‘ரெம்ப மலிஞ்ச வெலக்கி நெல்லூர்க்காரர் ஒருத்தர் குடுத்தார், பணமும் வித்து முடிச்சிட்டுத் தரச் சொல்லிட்டார்’ அப்படின்னு அக்கய்யா எல்லோர் முன்னாலும் ஒப்புதல் கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட நெல்லூர்க்காரரையும் அடையாளம் காட்டினார். அக்கய்யாக்கு மாடுங்களக் கொடுத்தவன், ‘நான் குடுக்கல’ன்னு எல்லார் முன்னாடியும் பழியா சாதிச்சிட்டான். பொருள் இப்போ அவன் கையில் இல்லை என்பதால் அவன் நழுவிக்கிட்டான். அக்கய்யா கையில் பொருள் இருப்பதால் அவர்தான் நிரூபிக்க வேண்டும். அவரால் நிரூபிக்க முடியல. மிகுந்த அவமானத்திற்குள்ளாகிட்டார். எல்லோர் முன்னாடியும் கதறி அழுது பார்த்தார். தன் நண்பன் கஷ்டப்படுவதைப் பொறுக்கமாட்டாமல் கொம்பையா தான் தண்டம் கட்டுவதாய்ச் சொல்லி, தன்னிடமிருந்த தொகையைக் கொடுத்தார். அக்கய்யா அதை மறுத்தார்.
‘நான் எந்தத் தப்பும் செய்யல. மாடுகள அவங்கள ஓட்டிக்கிட்டுப் போகச் சொல்லு. ஆனா தண்டம் கட்டாத. அப்படிக் கட்டுனா இந்த ஊர்ல நான் திருடன்னு காலத்துக்கும் பேர் நிலைச்சிடும்’ என்று அக்கய்யா எவ்வளவு தடுத்தும் கொம்பையா தண்டம் கட்டினார். கட்டிவிட்டுக் கிளம்பும்போது கொம்பையா நாக்கில் சனியன் மாதிரி அந்த வார்த்தை வந்து விழுந்தது.
‘நடந்தத மறந்திடு. இனிமே இந்த மாதிரி காரியம் செய்யாத. உன் பிள்ளைகளப் பத்திக் கவலப்படாத, நான் கர ஏத்துறேன். இனிமே திருட்டுக்குப் போகாத’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பத் துவங்கினார். அக்கய்யா உடைந்துபோய்விட்டார். அவர் காலில் விழுந்து கதறினார். `யார் நம்புனாலும் நீ எப்படி நம்புன?’ கொம்பையா அமைதியாய் நின்றார். `நீ என்ன நம்பலல்ல?’ மீண்டும் மீண்டும் கேட்டபோதும் கொம்பையா அமைதியாகவே நின்றார். அந்தச் சொல்தான், அந்த ஒரு சொல்தான் அக்கய்யாவின் உயிரை எடுத்தது. யார் நம்பினாலும் கொம்பையா நம்பியிருக்கக் கூடாது. `என்னை எப்படி அந்தச் சொல்லால் காயப்படுத்தலாம்?’ அடுத்த நாள் காலையில் மணல் மேட்டிலிருக்கும் மரத்தில் கழுத்தில் சுருக்கிட்டுச் செத்துத் தொங்கினார்.
விஷயம் கேள்விப்பட்டு பாதி வழியில் போய்க்கொண்டிருந்த கொம்பையா ஊருக்குள் ஓடி வந்தார். அதற்குள் உண்மையில் மாட்டைத் திருடியவர்களின் விவரமும் ஆட்களும் ஊருக்குள் கிடைச்சாங்க. கொம்பையா நிலைகுலைந்து போய்ட்டார். அங்க வந்தபோது அக்கய்யாவின் மனைவி தலைவிரிக்கோலமாய் நின்று கொண்டிருந்தார். அக்கய்யாவின் அம்மாவும், அக்கய்யாவின் சிறு சிறு பிள்ளைகளும் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தார்கள். நஞ்சம்மா கொம்பையாவைப் பார்வையால் எரிப்பது போலப் பார்த்தாங்க. கொம்பையாவிற்கு அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. தலை குனிந்துகொண்டார். `யார் நம்புனாலும் நீ நம்பியிருக்கக்கூடாது. உன் வார்த்ததான் என் புருஷனக் கொன்னுச்சு. எங்க எல்லாரோட வாழ்க்கையையும் கொன்னுடுச்சு.’
கொம்பையா எல்லார் முன்னிலும் அக்கய்யாவின் ஏழாம் வருஷ படையலுக்கு எல்லாப் பிள்ளை களையும் கரையேத்துற தொகையைக் கொடுப்பதாய் வாக்களித்தார். அதுவரை குடும்பச் செலவுக்குத் தொகையும், இருபது பசுக்களையும், பத்துக் காளை மாட்டையும் வாங்கிக் கொடுத்தார்.
நஞ்சம்மா எதையும் தன் கையால் வாங்கிக்கொள்ளவில்லை. இறுதியாய் அக்கய்யாவின் வீட்டிற்குக் கொம்பையா சென்ற போது நஞ்சம்மா சொன்ன வார்த்தை, `நான் உன்கிட்ட இருந்து என் கையால வாங்குற பொருள் ஒண்ணு இருக்கு. அத ஏழாம் வருஷம் நீ வரும்போது வாங்கிக்கிறேன்.’ கொம்பையா நஞ்சம்மாவை நிமிர்ந்து பார்த்தார். `அது என்னன்னு பாக்குறியா. உன் உசுரு.’ ’’
மகன் வழி ( 1978 - வேனல் காலம் )
‘`பயணிக்கு நாளையைக் குறித்த பயமில்லை.
அவன் இன்றை இன்றே வாழ்கிறான்.’’
~ பராரிகள்
சூரன் வட நாட்டிற்குச் செல்லும் லாரியொன்றை மறித்து ஏறினான். லாரிக்காரர் செல்லும் வழியில் நெல்லூர், கவாலி வழியாக ஓங்கோல் போய்விட்டு அங்கிருந்து இந்தூருக்குச் செல்வதாகச் சொன்னார். சூரன் அதைப் பற்றி ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு சாலையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான். சாலையில் தமிழ் எழுத்துகள் மறைந்து தெலுங்கு எழுத்துகள் கண்ணில் பட ஆரம்பித்தன. இருளத் துவங்கியதும் வழியில் கவாலியில் நள்ளிரவு தங்குவதற்காக லாரிகள் நிறைந்து கிடக்கும் சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்கள். அங்கு அவனைப் போலவே வெவ்வேறு லாரிகளில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். பொருளாதாரப் பற்றாக்குறையான மனிதர்களுக்கு குறைந்த விலைக்கு மனிதர்களை ஏற்றி வேறொரு இடத்தில் கொண்டு விட இது போன்ற லாரிகளும், அதன் ஓட்டுநர்களும் உதவியாய் இருக்கிறார்கள். சூரனுக்கு அடுத்து எங்கு செல்வதெனத் தெரியவில்லை. லாரி ஓட்டுநர் சூரனை சாப்பிட அழைத்தார். சூரன் அவரோடு சாப்பிடக் கிளம்பினான். சூளையில் வெறும் கஞ்சியும் குப்பைக் கீரைகளும் மட்டும் சாப்பிட்டு நாக்கு தன் சுவை நரம்புகளை அறுத்துக்கொண்டது போலிருந்தது. உணவகத்தில் நல்ல சாப்பாட்டு மணம் வந்தது. நிறைய நாளுக்குப் பிறகு கொஞ்சம் சுவையும் மணமுமான உணவை உண்ணப்போகிறான் என்பதே அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது.

நெடுஞ்சாலையோரத்திலிருந்த அந்த உணவகத்திற்கு நிறைய டூரிஸ்ட் பஸ்களும், வாகனங்களும் வந்தது நின்றன. நன்றாக உடையும் நகைகளும் அணிந்துகொண்டு அந்த நள்ளிரவில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சாப்பிட விருப்பம் கொண்டு இறங்குவது அவனுக்குப் பெரிய சுதந்திர உணர்வைக் கொடுத்தது. சூளையின் இறுக்கம் மெல்ல மெல்ல அவனிடமிருந்து விலகுவது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. நன்றாக சுவைத்துச் சாப்பிட்டான். நெடுநாள்களுக்குப் பிறகு அவனுக்கு விருப்பமான, அதிகமான உணவு கிடைத்தது. கைகழுவிவிட்டு லாரியில் ஏறப் போனான். அப்போதுதான் முப்பது, நாற்பதடி தூரத்தில் ஒரு டூரிஸ்ட் வாகனத்தின் அருகில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். தனக்கு நன்கு அறிமுகமான, தனக்கு மிகவும் பிடித்த பெண்ணின் முகம்போல அந்தப் பெண்ணின் முகம் இருந்தது. சூரன் இறங்கி ஓடினான். இருபதடி தாண்டி வந்த போது தெரிந்துவிட்டது. அது வேம்புவின் முகம். அவன் அருகில் வருவதற்குள் அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டது. ``வேம்பு... வேம்பு...’’ கத்தியபடி ஓடினான். வளையல்களில் ஊக்குகளைக் கோத்திருக்கும் அதே கரம். ஜன்னலின் வழியே பாதி மறைந்தபடி தெரிந்தது.
வாகனம் அதற்குள் வேகம் எடுத்து நெடுஞ்சாலையில் இறங்கி ஓடத் துவங்கியது. அவன் மூச்சிரைக்க சாலையைப் பார்த்தவாறு நின்றான். அவன் வந்த லாரி ஓட்டுநர் அவனை அழைத்தார், ``கிளம்பலாமா?’’

லாரியில் ஏறி உட்கார்ந்ததும் வழியெல்லாம் வேம்புவைப் பார்த்த அதே வாகனம் வருகிறதாவெனப் பார்த்தான். இரவெல்லாம் தூங்காமல் பார்த்தபடியே வந்தான். அவன் முகத்தில் குளுமையான அதிகாலைக் காற்று தழுவியபடி வந்தது. சிறிது நேரத்தில் அவனை அறியாமல் உறங்கிவிட்டான். காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, லாரி ஓங்கோலில் ஒரு தேநீர்க் கடையில் நின்றுகொண்டிருந்தது. இன்னும் முழுமையாக விடியவில்லை. இருட்டுக்குள் தூரத்தில் பார்த்தான். சிறிய குன்றுபோல ஏதோ தெரிந்தது. ஓட்டுநர் காலை உபாதை கழிக்க சாலையின் ஓரத்தில் அடர்ந்த செடிகளுக்குள் சென்றார். சூரன் தேநீர் குடித்து முடித்து சிறிது நேரம் மர பெஞ்சில் அமர்ந்திருந்தான். சூரியன் மஞ்சள் நிறத்தில் அந்தக் குன்றுபோலத் தெரிந்ததன் பின்னிருந்து எழும்பத் துவங்கியது. அப்போதுதான் பார்த்தான். அது குன்று இல்லை.குன்றைப்போல் கறையான் புற்று. அவன் தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய புற்றைப் பார்த்ததேயில்லை. ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து லாரி ஓட்டுநர் சொன்னார்.
``அந்தக் கறையான் புத்துக்குள்ள ஒரு பெரிய வீடே இருக்குதாம். அந்த வீட்டுக்குள்ள ஒன்பது பொண்ணுங்க பல வருசமா கதவையே திறக்கலையாம். கறையான் புத்து எழுப்பி அந்த வீட்டையே மூடிடுச்சாம். நிறைய பேர் அந்த ஒன்பது பேருக்கும் செல வச்சி அத சாமியா கும்பிடுறாங்க.’’
~ ஓடும்