மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 32

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

‘`எதையாவது அல்லது யாரையாவது இழந்ததாக நீ உணர்ந்தால்
உடனே பயணத்திற்குத் தயாராகு -
பயணம் வேறொன்றை அல்லது வேறொருவரை உனக்கு அளிக்கும்.’’ - பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 32

கொம்பையாவை இழந்தபின் மலையரசனும் கரியனும் என்ன செய்வதெனத் தெரியாமல் வெறுமையாய் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் கண்களில் இரண்டு நாள்களாய் அழுதழுது கண்ணீர் வற்றிப்போய் கண்கள் நீர்ப்பளபளப்பில்லாமல் களைப்பாய்த் தெரிந்தன. மலையரசன் ஒரு முடிவோடு எழுந்தான்.

“வா கிளம்பலாம்.''

கரியன் ‘எங்கே போவது’ என்பது போலப் பார்த்தான்.

‘‘திரும்ப நம்ம ஊருக்கே போகலாம். தெக்க நாலு சந்தையில மாடு பிடிச்சிக் குடுத்துப் பொழச்சிக்கலாம்.''

கரியன் வரமாட்டேனென்று மறுப்பதுபோல் இடதும் வலதுமாகத் தலையாட்டினான்.

‘‘எங்க போகப் போற. நாலு காசு சேத்துட்டு கல்யாணம் காட்சின்னு ஏதாவது பண்ணிக்கிட்டு வாழப் பாரு. இப்படி நாடோடிப் பொழப்பாப் போச்சுன்னா நாளபின்ன ஒரு இடமா உக்காந்து வாழ மனசு ஒட்டாது பாத்துக்கோ. சொல்றேன்ல, வா கிளம்பலாம்.''

இந்த முறையும் தீர்க்கமாய் மறுத்துத் தலையாட்டினான்.

‘‘பின்ன என்னடா பண்ணப்போற?''

‘‘இப்படியே வடக்க சந்த சந்தையா போகப் போறேன். பெரியாம்பள அப்படித்தான வாழணும்னு பிரியப்பட்டாரு.''

‘‘டேய்... அவருக்குக் குடும்பம், குழந்த, குட்டின்னு ஒண்ணுமில்ல. அதான் இப்படி தெக்கும் வடக்குமா சந்த சந்தையா திரிஞ்சாரு. நம்மால அந்த மாதிரிலாம் வாழ முடியாதுடா. அவரு இந்த நாட்ல எங்கெல்லாம் சந்த நடக்கும்னு அத்துப்படியா இருப்பாரு. நமக்கு அதெல்லாம் எப்படித் தெரியும் சொல்லு?’’

ஏழு கடல்... ஏழு மலை... - 32

‘‘அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லண்ணே. கத்துக்கலாம். இந்த நாட்டுல எல்லாருக்கும் கால்நடைங்கதான் பெருஞ்சொத்து. இந்தியா முழுக்க நீ எங்க சுத்துனாலும் பத்தூருக்கு ஒரு மாட்டுச் சந்தைய பாத்திடலாம்.’'

‘‘டேய் கரியா, சொன்னாக் கேளு. அவருதான் இப்படி சந்தக் கிறுக்குப் பிடிச்சி ஊர் ஊராத் திரிஞ்சாரு, நாடோடி மாதிரி இந்த நாட்ட குறுக்கும் நெடுக்குமா எத்தன தடவ நடந்தே சுத்தி வந்திருக்காரு தெரியுமா... நமக்கல்லாம் இது சரிப்பட்டு வராதுடா. வா, கன்னியாகுமரிக்கே போகலாம். அங்க கடலப் பாத்துக்கிட்டு நாலு தென்ன ஓல வேஞ்சி கூர போட்டு வாழ்ந்திடலாம். சொந்த ஊர்ல எவனாது ஒரு வாயி கஞ்சிக்கு வழி காட்டிடுவான்.''

‘‘ஒத்த வாயி கஞ்சிக்குத்தான் வாழ்றோமா? நான் கொம்பையா மாதிரிதான் வாழப்போறேன். எனக்கு இப்படி வாழத்தான் பிடிச்சிருக்கு.ஏண்ணே, எல்லாருக்குமே சொந்த ஊர்ல வாழப் பிடிக்கும்னு நீ நம்புறியா?

அங்க நாம யாரு, நம்ம வம்சம் என்ன, கொடிவழி என்ன, கொலம் கோத்ரம் என்னன்னு எல்லாத்துக்கும் தெரியும். பெரிய சாதிக்காரனுக்கு எதுவும், எங்கயும் பிரச்சன இல்ல. எனக்கு ஊரு வலி. நான் திரும்ப அங்க வர மாட்டேன். எனக்கு அங்க வேற யாருமில்ல. என் அம்மையும் ரோகம் வந்து வேதக்காரங்க ஆசுபத்திரில இருக்கா. காலத்துக்கும் அவ அந்த நாலு சுவத்துக்குள்ளதான் வாழணும். வெளிய வந்தா கல்லால அடிப்பாங்க தெரியுமா? என்னிக்கி என் அம்ம மேல விழுந்த கல்லு என் மேலயும் விழுந்துச்சோ, அன்னக்கித்தான் அவ இனிமே இந்த ஊருல நடமாட முடியாதுன்னு அந்த ஆசுபத்திரிக்குள்ள போயி உக்காந்துகிட்டா. இனி ஆயுசுக்கும் அவ அங்கதான். வாழ்ற காலத்துலயே அவள ஈனப் பொணம் மாதிரிதான் பாத்தானுங்க. நான் அங்க வரல.''

‘`அப்படினா வேற எங்கடா போவ?’’

‘‘அப்படியே ஊர் ஊரா நகந்து காத்து மாதிரி போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான். எங்கயாவது நிலையா தங்குனாத்தான.ஜாதி என்ன, சமூகம் என்னன்னு கேள்வி வரும்?''

“ஏண்டா... நாள பின்ன கல்யாணம் காட்சின்னு எதுவும் வேண்டாமாடா?''

‘‘அத பாத்துக்கலாம். என்னிக்காவது சூரியன் என் தலை மாட்டுல உதிச்சி நிக்கிறப்போ, என்ன மாதிரியே எதாவது ஒரு நாடோடி எனக்கு எதுத்து வந்து ஒரு நா நிப்பா. நான் அவகூட வாழ்ந்துக்குறேன். அவளோடயே ஊர் ஊரா சுத்தப் போறேன்.''

‘‘ம்... அப்போ கண்டிப்பா ஊர் திரும்பற எண்ணம் இல்ல, அப்படித்தான?''

கரியன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டினான்.

‘‘உனக்கு மாடுகளப் பத்திக்கூட முழுசா நுணுக்கம் தெரியாதேடா. எப்படிப் பொழைக்கப் போற?''

``நான் ஊர் ஊரா பொழைக்கப் போகல; வாழப் போறேன். எனக்குப் பிடிச்ச மாதிரி... சந்த சந்தயா வேடிக்க பாத்துக்கிட்டு... புதுசு புதுசா மனுஷங்களையும் மாடுகளையும் பாத்துக்கிட்டு, விடியுற ஒவ்வொரு நாளையும் வேற வேற ஊர்ல இருந்து... அப்படியே காலத்துக்கும் வாழலாம்னு போறேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் என்னிக்கும் மாறாது. என் முதுகுல எல்லா நாளும் மாடுக தின்கிற வைக்கப்போரும், மாட்டுச் சாணியும் எங்கயாவது கொஞ்சமாவது ஒட்டிக்கிட்டு இருக்கும்.’’

‘‘நல்லா பேசுறடா. பொழச்சிருவியா? கூடப் பொறந்தவன் மாதிரி இவ்வளவு நாளு என்கூடயே இருந்துட்ட. கடைசியா கேக்குறேன், எங்கூட வாயேன்.''

‘‘இல்லண்ணே, நீ போயிட்டு வா. என்னப்பத்தி ஒண்ணும் கவலைப்படாத. மாடென்ன, சாகும் போது கன்னுக்குட்டிக்கி புல்லு புடுங்கிப் போட்டுட்டா சாகுது? நீ போயிட்டு வா.''

``ம்...’’

மலையரசன் தன்னிடமிருந்த துணிப் பொதிக்குள் கையை விட்டு ஒரு பொருளை எடுத்துக் கரியனிடம் கொடுத்தான்.

``இந்தா.''

‘‘என்னதுண்ணே இது, மாட்டுக் கொம்பா?''

‘‘ஆமா. இது கொக்கர. ஒரு வாத்தியம். வாயில வச்சி ஊதுறது. கொம்பையாவோடதுதான். அவர் எனக்குக் குடுத்தது.’’

கரியன் வாங்கிக்கொண்டான். மலையரசன் தன் வேட்டி முடிப்பிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான். ‘‘இதுதான் இருக்கு, வாங்கிக்கோ.''

‘‘வேண்டாம். நீங்க வெச்சுக்கோங்க.''

‘‘மறுக்காம வாங்கிக்கோடா.''

‘‘ம்... இதுமட்டும் போதும்.'' ஒரு சிறிய தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை மலையரசனிடம் கொடுத்தான்.

மலையரசன் கரியனை இறுக்கமாய்க் கட்டிக்கொண்டான். வற்றிய கண்ணிலிருந்து மீண்டும் நீர் வழிந்தது.

மலையரசன் கேட்டான். ‘‘எப்போடா திரும்ப வருவ?''

‘‘வருவேன்னுதான் தோணுது. எப்பன்னு தோணல. என் ஞாபகமா உனக்குக் குடுக்க ஒண்ணுமேயில்லண்ணே. இந்தச் சூரியனும் நிலாவும்தான் இருக்கு. எப்பல்லாம் என்ன நினைக்கிறியோ அப்பல்லாம் வானத்தப் பாரு, சரியாண்ணே... நானும் பாத்துக்குறேன். தெனம் தெனம் தூங்குறப்போ நினைச்சிக்கோ, ரெண்டு பேரும் ஒண்ணா இந்த வானத்துக்குக் கீழதான் படுத்திருக்கோம்னு. செரியா? நீ எதுவும் கவலைப்படாதண்ணே...கிளம்பு.’’

மலையரசன் மீண்டுமொருமுறை கரியனை அணைத்துக்கொண்டான்.

இருவரும் பெருமூச்சு விட்டு, கிளம்பத் தயாராகும்போது கரியன் கேட்டான், ``பெரியவரோட உருமாத் துண்ட எனக்குத் தர்றியாண்ணே. அது இருந்தா அவர் என்கூடவே இருக்குற மாதிரி ஒரு தெம்பு இருக்கும்.’’

‘‘இந்தாடா...'' - பொதிக்குள்ளிருந்து நீளமான அந்தத் துண்டை எடுத்தான். துண்டுக்குள் சுற்றிக்கிடந்த யாழ்ப்பாணச் சுருட்டு ஏழெட்டு கீழே விழுந்தது.

‘‘இதுவும் இருக்கட்டும்.'' கொம்பையாவின் சுருட்டுகளையும் எடுத்துத் தன் வேட்டிக்கட்டில் செருகிக்கொண்டான்.

இருவரும் முதுகுக்கு முதுகு காட்டி எதிர் எதிர் திசைகளில் நடக்கத் துவங்கினார்கள்.

கரியன் கொம்பையாவின் உருமாத் துண்டைத் தன் தோள்களில் சாத்திக்கொண்டான். கையில் அவரின் காவற்கம்பு. விறுவிறுவென நடக்கத் துவங்கினான். மொழி தெரியாத அந்த ஊரில் பெரிய வண்டிப் பாதையின் தடம் பார்த்தபடியே நடக்கத் துவங்கினான். வழியெல்லாம் மாட்டுவண்டிகள் காய்கறிச் சந்தைக்கும், தானியச் சந்தைக்கும் பொதியேற்றிப் போய்க்கொண்டிருந்தன. வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டி, சட்டை அணியாத மேல் உடம்பில் நெஞ்சுக் கோட்டிலும், நெற்றியிலும் பெரிய நாமம் போட்ட நிறைய மனிதர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். யாரிடமும் பேச்சுக் கொடுக்க முடியவில்லை. பார்த்த மாத்திரத்தில் இவன் நாடோடி என்பது எல்லோருக்கும் புரிந்தது. நாடோடிக்கென்று எப்போதுமிருக்கும் ஒரு விட்டேத்தி முகம் இப்போது கரியனுக்கும் வந்துவிட்டது. மண் சாலையோரம் அங்கங்கு குளக்கரையில் மதியநேரம் கட்டுச் சாதத்தைப் பிரித்து அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கரியன் குளத்தில் கொஞ்சம் நீரள்ளிப் பருகலாமென்று போனான். கோயிலுக்கு யாத்திரை செல்லும் ஒரு குடும்பம் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. கரியனைப் பார்த்ததும் ஒரு முதிய பெண் அவனை அழைத்து கையில் பெரிய தாமரை இலையை விரித்தார். குழம்பில் பிரட்டப்பட்ட நாலைந்து பெரிய சோற்று உருண்டைகளை வைத்தார். கரியன் மறுப்பேதும் சொல்லிக் கொள்ளாமல் வாங்கிக்கொண்டான். சாப்பிட்டு, குளத்தில் நீர் அள்ளிக் குடித்தபின் அந்தப் பெரிய ஆலமர நிழலில் நிறைய பேர் படுக்கத் துவங்கினார்கள். கரியனும் சிறிதுநேரம் உடலைச் சாய்க்கலாமென நினைத்து அப்படியே அந்த மண் தரையில் சாய்ந்தான். அருகிலிருக்கும் குளத்தின் ஈரக்காற்றில் படுத்தவுடனே கண்கள் சொருகியது. இரண்டு நாள்களாக உறக்கமில்லாததால் அயர்ந்து உறங்கினான். மாலை நான்கு மணிக்கு மேல் ஆள் அரவம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 32

அவன் விழித்து எழுந்தபோது அவனால் நம்பவே முடியவில்லை. அவனைச் சுற்றி நான்கு மந்தை மாடுகளுக்குக் குறைவில்லாமல் நின்றுகொண்டிருந்தன. சுற்றிலும் நிறைய மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். நிச்சயம் இது ஏதோ சந்தைக்கு மாடுகளை ஓட்டிச் செல்லும் கும்பலாகத்தான் இருக்கும். எல்லோரும் புகைத்துக்கொண்டும், சிரித்தபடி பேசிக்கொண்டும், ஒரு சிலர் குளத்தில் இறங்கிக் குளித்துக்கொண்டுமிருந்தனர். கரியனின் தலைமாட்டில் நாலைந்து தாமரை இலைகளைச் சேர்த்துக்கட்டிய பொட்டலமிருந்தது. கரியன் எழுந்து அதைப் பிரித்துப் பார்த்தான். யாத்திரை சொல்லுபவர்கள் அவனின் இரவு உணவுக்காக அவர்களிடமிருந்த உணவுகளைப் பொட்டல மாகத் தாமரை இலையில் வைத்து வாழைநாரால் கட்டித் தொங்கவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தரையில் வைத்தால் வேறு ஏதாவது ஜீவன்கள் வாய்வைத்து உலப்பிவிடும் என்பதால் அவர்கள் இப்படிச் செய்திருக்கக்கூடும். அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. இந்த உலகத்தில் ஒரு வாய்ச் சோறு அளிக்க எல்லோருக்கும் மனமும் கரமும் இருக்கின்றன.

சுற்றிலும் மாடுகள் நிற்பது அவனுக்கு உண்மையிலேயே சந்தைக்கு நடுவிலிருப்பது போல் மனதுக்குத் தெம்பாயிருந்தது. அருகிலிருந்தவர்கள் கரியனை நோக்கி சிநேகமாய்ப் பார்த்துக் கொண்டார்கள். கரியன் உறக்கச் சடவு போக குளத்திலிறங்கிக் குளிக்கலாமெனத் தீர்மானித்து நீருக்குள் இறங்கினான். நீர் அவனது வேதனையைச் சிறிது சிறிதாய்க் கரைத்துக்கொண்டிருந்தது. கரையெழும்பி மேலே வந்து ஆடைகளை அணிந்துகொள்ளும்போது பார்த்தான்.

கொம்பையாவைப் போல் அதே வயதில், அதே இறுக்கமும் மெலிவும் தேகமாய்க் கொண்ட ஒரு மனிதர், தன் வாயில் சுருட்டைப் பற்ற வைத்தபடி சுற்றியிருப்பவர்களிடம் தெலுங்கில் பேசியபடி அமர்ந்திருந்தார். கரியன் அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். கொஞ்சம் வெளுப்பாய் இவரின் முகவெட்டு வேறுமாதிரி இருந்தது என்றாலும், கொம்பையாவிடம் இருக்கும் அதே கம்பீரம். எந்தப் புதிய மனிதர்களிடமும் சட்டென ஒட்டிக்கொண்டு அந்த இடத்தையே தன் தலைமையின் கீழ் கொண்டுவரும் ஆளுமை கொண்ட அதே கண்கள். அவரின் வாய், மூக்கின் வழியே சுருட்டின் வெண்புகை திரண்டு திரண்டு சிறுசிறு மேகமாய் வந்துகொண்டேயிருந்தது. இப்போது அவரும் இவனைக் கவனிக்கத் துவங்கினார்.

கரியன் கூட்டத்தைத் தாண்டிக்கொண்டு அவரின் முன் செல்லத் துவங்கினான். அவர் தன் கண்களைச் சுருக்கிக்கொண்டு தன்னை நோக்கி வரும் கரியனைப் பார்க்கத் துவங்கினார். அவர் முன் வந்தபோது அவனுக்கு என்ன பேசவெனத் தெரியவில்லை. கரியனின் கண்கள் அவனை அறியாமல் நீரைச் சுரந்துகொண்டு வந்து வழிய விட்டது. அந்தப் பெரியவர் எழுந்து தகப்பனைப்போல் வாஞ்சையோடு கரியனை அணைத்துக்கொண்டார். கொம்பையாவிடம் அடிக்கும் அதே பிராணிகளின் வாடை இவர் மேலும் அடித்தது. கூட்டத்தினர் அந்தப் பெரியவரை ‘பீமராசா’ என அழைத்தார்கள்.

கரியனுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. மீண்டும் கொம்பையாவைப் போல் வேறொரு மனிதனிடமும் அன்பால் சிக்குண்டுவிடுவோமோ என்று பயந்தான். கொம்பையாவின் இழப்பிலிருந்தே அவனால் மீள முடியாத இந்த நேரத்தில், அவரைப் போலவே சந்தை சந்தையாய்த் திரியும் ஒரு மனிதன் தன்னோடு பயணம் செய்ய அழைப்பதை அவனால் நம்ப முடியவில்லை. இது ஏதோ பிரமை என்பதுபோல் பயந்து ``வேண்டாம், நான் வரல... நான் வரல’’ என்று கத்தியபடியே அந்த இடத்திலிருந்து ஓடத் துவங்கினான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 32

மகன் வழி ( 1978 - வேனல் காலம் )

‘‘உலகம் எவ்வளவு மாயமானது, அது தினமும் எவ்வளவு விஷயங்களை உனக்கு ஒளித்து வைத்துப் பரிசளிக்கிறது!

உனக்கான பரிசைப் பெறாமலேயே நீ இங்கு இருக்கிறாய் - பயணிக்கத் தயாராகு.’’ - பராரிகள்

ஓங்கோலில் ஒரு பெரிய கொட்டடியிலிருந்து லாரியில் இரண்டு மாடுகளை ஏற்றினார்கள். சூரன் ஓட்டுநருக்குக் கூடமாட சிறிய சிறிய உதவிகள் செய்தான். தாட்டியமும் ஆகிருதியுமான அந்த மாடுகள் இரண்டு நிற்கும்போதே மொத்த லாரியும் நிறைந்தது போலிருந்தது. மாடுகளின் தாடை மடிப்புகள் அலையலையாய் விசிறி போல் அதன் இரண்டு முன்னங்காலுக்கு நடுவே போய் முடிந்தது.

‘‘இந்த மாடுங்க ரெம்ப அழகா இருக்குல்ல?'' ஓட்டுநரிடம் கேட்டான். அவர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டிவிட்டு லாரியில் ஏறி இருக்கையில் அமர்ந்தார்.

ஓட்டுநருக்கும் பின்னால் மாடுகள் நிற்கும் தொட்டிக்கும் நடுவே ஜன்னல் மாதிரி செங்கல் அளவிற்குச் சிறிய துண்டு வெட்டப்பட்டிருந்தது. பின்னால் இருக்கும் சரக்குகளை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள இந்த ஏற்பாடு. சூரனும் வண்டியில் ஏறி அமர்ந்தான். வண்டியை எடுக்கும் முன் ஓட்டுநர் எதார்த்தமாகத் திரும்பி அந்தச் சிறிய துளையைப் பார்க்கையில் அந்த இரண்டு மாடுகளின் நான்கு கண்களும் அந்தத் துளையின் வழியே ஓட்டுநரையும் சூரனையும் பார்த்துக்கொண்டிருந்தன. ஓட்டுநருக்கு ஒரு நொடி திடுக்கென்றிருந்தது. அந்தச் சிறிய ஜன்னல் துளையைச் சிறிய கதவால் மூடிக் கொக்கியை மாட்டினான்.

சூரன் கேட்டான், ``ஏன், என்னாச்சி... அது பாட்டுக்கு பாத்துக்கிட்டு வரட்டும், நம்மளும் அப்பப்போ இருக்கான்னு பாத்துக்கலாம்ல?''

‘‘பாத்துக்கலாம். வண்டில ஒரு சின்ன ஸ்க்ரூ கழண்டு விழுந்தாக்கூட என்னால கண்டுபிடிச்சர முடியும். ஏதோ எடைகுறையுதேன்னு நமக்குள்ளேயே சின்னதா ஏதோ ஒண்ணு சொல்லும். இது எல்லா லாரி ஓட்றவங்களுக்கும் இருக்குற ஒரு விஷயம்தான்.''

‘‘ம்.''

‘‘அந்த மாடுங்க ஓட்ட வழியா பாக்குறதப் பாத்தா எனக்கு ஏதேதோ ஞாபகம் வருது, அதான் மூடிட்டேன்.''

‘‘செரி.''

ஓட்டுநர் வண்டியை அரைவட்டமாய்த் திருப்பி சாலைக்கு ஏற்றினார். சிறிது நேரம் போனதும் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

‘‘பதினஞ்சு பதினாறு வருசத்துக்கு முன்னாடி நான் கிளீனரா ஓடிக்கிட்டு இருந்தேன். கோவிச்சிக்கிட்டு வீட்ட விட்டு ஓடி வந்து பல வருஷமா வடஇந்தியாக்குப் போற லாரியிலதான் வேல. நம்ம ஸ்டேட்டுக்குள்ளேயே ஓடிக்கிட்டு இருந்தா யாராவது பாத்து திரும்பக் கூட்டிட்டுப் போயி எங்க அப்பாகிட்ட விட்ருவாங்கன்னு பயம். அதனால முழுக்க வட இந்தியா லாரிலதான் வேல. என்னப்போல வீட்ட விட்டு ஓடி வார பசங்களுக்கு இந்தத் தொழில்தான் நல்ல வாய்ப்பு. தினம் புதுசு புதுசா ஊரு பாக்கலாம். சம்பளம், சாப்பாடு, பீடிக்கட்டு, வேகமாவே பெரிய மனுஷனாகிட்ட மாதிரி ஒரு இது...''

சூரன் `ம்’ கொட்டினான்.

``அப்படித்தான் ஒரு நாள் குஜராத்துல ரெம்ப சின்ன கிராமத்துல இருபது, முப்பது மாடுங்கள லாரில அடைக்க ஏத்திக்கிட்டு தூரமா வேற ஊர்ல நடக்குற ஒரு பெரிய மாட்டுச் சந்தைக்குப் போறோம். இதே மாதிரி சின்ன ஜன்னல் திறந்து கிடந்தது. நான் அப்பப்போ ஜன்னல் வழியா தொட்டில மாடுங்களாம் சரியா இருக்கான்னு பாத்துக்கிட்டே வாறேன். முத வரிசைல இருக்குற மாடுங்கள விட்டுட்டு பின் வரிசைலயிருந்து ஒரு மாடு எல்லா மாட்டுங்களோட காலுக்கு இடை வழியா என் கண்ணப் பாத்துக்கிட்டேயிருக்கு. எனக்கு ஒண்ணுமே புரியல. என்னால அந்தக் கண்ணப் பாக்கவே முடியல. எப்பவுமே எதையோ சொல்ல வாரது மாதிரியே இருக்கு அந்தக் கண்ணு. ஒரு கட்டத்துல சின்ன ஜன்னல நான் அடச்சிட்டேன். காலைல இருந்து சாயந்தரம் வரைக்கும் லாரி போய்க்கிட்டே இருக்கு. ‘சரி, இப்போ திறக்கலாம்’னு திறந்து பாத்தா அப்பவும் அந்த மாட்டுக் கண்ணு இமைக்காம என்னப் பாத்துக்கிட்டே இருக்கு. நான் அரண்டு போயி திரும்பவும் சாத்திட்டேன். அதே மாதிரியே அன்னைக்கி நைட்டெல்லாம் அப்பப்போ திறந்து திறந்து பாத்தா, அது கண்ண விலக்கவே இல்ல. பாத்துக்கிட்டே இருக்கு. அடுத்த நா விடிகாலைல வண்டி சந்தைல வந்து நிக்கிது. யாவாரிங்க மாட்ட இறக்க வந்துட்டாங்க. எப்படியும் லட்சம் மாடுங்க நிக்கும். என் வண்டில கதவ இறக்கிட்டு மாடுங்கள வரிசையா கீழ இறக்குறோம். அப்பவும் அந்த மாடு என்னப் பாத்துகிட்டே இருக்கு. ‘இது என்னடா வம்பாப் போச்சு’ன்னு நான் அந்தப் பக்கம் திரும்பிக்கிட்டேன். அந்த மாடு இறங்கிப் போயி சந்தையோட சந்தையா கலக்கப் போச்சி. அப்போதான் பாக்குறேன். அதோட விலாவுல `ஆ’வன்னாவும், `உ’வன்னாவும் ஒட்டிப் போட்ட மாதிரி சூட்டுத் தழும்பு இருக்கு. என் சின்ன வயசுல ஒரு கிடாரிக் குட்டிக்கு என் அப்பா இப்படி வாகட சூடு போட்ருக்காரு. இந்த குஜராத்துல தமிழ் எழுத்துல வாகட சூடு போட்ட மாட்டப் பாத்ததும் எனக்கு என்னவோ போல ஆகிடுச்சு. ஒரு நிமிஷம் சுதாரிச்சிட்டு அந்த மாட்டத் தேடிப் பாத்தா, அது சந்தயோட சந்தையா கலந்து காணாமப் போயிடுச்சி. சாயந்தரம் வரைக்கும் தேடுனேன். கிடைக்கல. அதுலயிருந்து எனக்கு இந்த ஜன்னல் வழியா மாட்டுக் கண்ணப் பாக்க பயம்.''

ஏழு கடல்... ஏழு மலை... - 32

‘‘ம்.''

‘‘நீ பேசாம என்கூட கிளீனரா வந்திடுறியா?''

அவன் பேசாமல் அமைதியாக இருந்தான். ஓட்டுநர் திரும்பவும் கேட்டார். ‘‘டே...உன்னத்தான் கேக்குறேன். என்கிட்டே கிளீனரா வேலைக்கி வரியா?''

அவன் வரவில்லை என்பதுபோல் தலையை ஆட்டினான்.

‘‘அப்போ என்ன பண்ணப் போற?''

சூரன் அமைதியாக இருந்தான்.

‘‘சோத்துக்கு?''

‘தெரியல’ என்பதுபோல் இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தான்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள். பிறகு சூரன் சொன்னான், ``இந்தூர்ல இறங்கிக்கிறேன். நான் இந்தியாவோட முதல் வீட்டுக்குப் போகணும்.’’

அவன் சொல்வது புரியாமல் ஓட்டுநர் கேட்டார், ``ஏன்?’’

``ஏன்னா நான்தான் இந்தியாவோட கடைசி வீட்ல கடைசியாப் பொறந்தவன்.''

ஓட்டுநர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

~ ஓடும்