
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
தந்தை வழி ( 1952 - வேனிற்காலத் தொடக்கம் )
‘`இந்தக் கால்கள் எத்தனை மலையுச்சிகளுக்கு
என்னை அழைத்துப் போயிருக்கிறது தெரியுமா?’’
~ பராரிகள்
பீமராசாவின் தோற்றத்தில் கொம்பையாவை உணர்ந்த கரியன், அந்த இடத்திலிருந்து கத்தியபடியே ஓடினான். எல்லோரும் ‘ஏன் இவன் இப்படிக் கத்தி அழுதபடியே ஓடுகிறான்’ என்பது தெரியாமல் மலங்க மலங்க அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பொழுது சரிந்து இருளத் தொடங்கியது. கரியன் வேகவேகமாக இருளுக்குள் நடந்தான். நெடுந்தூரம் வரை எந்தச் சிறு விளக்கின் வெளிச்சமும் தெரியவில்லை. தூரத்தில் ஒரு கோயில். இருளில் அதன் கோபுரம் மட்டும் தனியே கரிய நிறத்தில் எழும்பி நிற்பது தெரிந்தது. யாரோ திரி விளக்கு போட்டிருப்பார்கள்போல. சிறிய கல் விளக்கில் மஞ்சள் விதை போல் ஒளி பாந்தமாய்த் தெரிந்தது. அருகில் செல்லச் செல்ல ஒரு கற்கோயில் துலக்கமாய்த் தெரிந்தது.கோயிலின் நுழைவாயிலில் பெரிய மண்டபம் இருந்தது. நிறைய ஆட்கள் அதில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகில் நிறைய பொதி ஏற்றிய வண்டி மாடுகள் நின்றுகொண்டிருந்தன, சிறிய வியாபாரிகள் கைச்சுமையைத் தன் தலைமாட்டில் வைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். கரியனும் அவர்களோடு சேர்ந்து உறங்கினான்.
காலையில் அரவம் கேட்டுக் கண்விழித்துப் பார்த்தபோது எல்லா ஆட்களும் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசும் மொழி தெரியாததால் எல்லோரின் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லோர் வாயிலிருந்தும் ஒரு முறையாவது `கங்காவரம்' என்ற வார்த்தை வந்து விழுந்தது. நிறைய பேர் அருகிலிருக்கும் ஆற்றில் குளித்து முடித்து தம் வேட்டியையும் கெளபீனத்தையும் அலசி ஈரமாய் அதையே அணிந்துகொண்டார்கள். விபூதியை நீரில் குழைத்து நெற்றியிலும் கண்டத்திலும் நெஞ்சிலும் கையிலும் கோடுகளாகப் பூசிக்கொண்டார்கள். ஈரமான விபூதி வெயில் பட்டு நொடிக்குள் உலர்ந்து வெண்மையாய் பளிச்செனத் தெரியத் துவங்கியது. பின் கோயிலுக்குள் நுழைந்து எல்லோரும் சாமி கும்பிட்டு வெளி வந்தார்கள். அவன் வாயிலில் நின்று பார்க்கும்போது தூரத்தில் பெரிய லிங்கமொன்று கருவறையிலிருப்பது தெரிந்தது. சட்டெனக் கோயிலின் உள்ளே ஒரு மனிதர் மட்டும் சத்தமாக தமிழ்க் குரலில் பாடினார்.

``ஓம்... உலகாளும் ஈஸ்வரா உமாமகேஸ்வரா
எமை ஆளும் சங்கரா. விஸ்வநாதா, தேவாதி தேவா, கைலாய நாதா...
எம்பெருமானே... எழுந்தருள்வாயே
எம்மையும் இந்த உலகையும் காத்து அருள்புரிவாயே...''
கரியன் சத்தம் வந்த திசைக்குக் கோயிலுக்குள் ஓடினான்.
அங்கு சந்நியாசி போன்றும், பூசகர் போன்றும் தோற்றமளிக்கும் ஒருவர் கையில் திருவோட்டோடு கௌபீனம் மட்டும் கட்டி நின்று, கருவறையைப் பார்த்து கையைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கியபடியிருந்தார். கரியன் அவரை அழைத்தான்.
``ஐயா...'' அவர் கண்விழித்து அவனைப் பார்த்தார்.
``நீங்க தமிழ் பேசுவீங்களா?''
``பேசுவேனா... இவ்வளவு நேரம் பாடவே செஞ்சேனே. கேக்கலையா?'' உற்சாகமும் கனிவுமாய் அவர் குரல் மிகவும் நட்புடன் இருந்தது.
``அதான் கேட்டேன்.''
``ம்... சொல்லுங்க... பேரென்ன?''
``கரியன்.''
``அப்படியா, நல்லது. நான் கிணறுபூதத்தான். சொந்த ஊரு சங்கரன்கோவில் பக்கத்துல. ஆமா, இங்க என்ன விஷயமா வந்தீங்க?''
கரியன் இங்கு வந்த கதையை அவரிடம் சில நிமிடங்களில் சொல்லி முடித்தான்.
அவரும் தன்னைப் பற்றிச் சொல்லத் துவங்கினார். ``நான் ஊர் ஊரா யாசகம் வாங்கி சாப்பிட்டு வயித்தக் கழுவுற சிவாச்சாரி. போற இடமெல்லாம் ஈசன் பாட்டப் பாடி பிச்ச எடுத்து வயித்தக் கழுவிக்கிட்டு இருக்கேன். கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்ககூட இருக்கு. ஊர்ல நல்ல வசதி. ஆறு தலமுற சொத்து அப்படியே இருக்கு. நல்ல நிறைவான தாம்பத்தியம்.
நான் லட்சணமில்லாமப் பாடுவேன். என் மனைவி ரெம்ப நல்லாப் பாடுவா. கோயில்கள்ல விசேஷ நாள்கள்ல அவ உக்கி உருகிப் பாடுனா கருவறையிலேருந்து கடவுளே எந்திரிச்சி வந்திருவாரு. அப்படி ஒரு உருக்கமான சாரீரம். எனக்கு நெல்லுப்பேட்டைலதான் யாவாரம். மூட்டை மூட்டையா நெல்ல அட்டிபோட்டு வச்சி கிலோவுக்கு எவ்வளவு லாபம் வரும்னு கணக்குப் பாக்குறதுலயே கண்ணும் கருத்துமா இருந்துட்டேன். அவ குரலுக்கு ஒரு நாளும் ரசிகனா இருந்ததே இல்ல; அவ உடம்புக்கு மட்டும்தான்.
ஆனா என் தம்பி அப்படி இல்ல. அவனுக்கு சங்கீதத்துல அப்படி ஒரு நாட்டம். ஜி.என்.பி., அரியக்குடி, செம்மங்குடி சீனிவாசன்னு எல்லார் குரலையும் கிராமபோன்ல கேட்டுக்கிட்டே இருப்பான். என் மனைவி கொழுந்தனிடம் எப்பவுமே பாட்டுலயும், சங்கீதத்துலயும் சந்தேகம் கேட்டுக்கிட்டே இருப்பா. அவன் ஒரு பாட்ட ஒலிக்க விட்டுட்டு ‘இது யார் குரல்’னு கேட்பான். பெரும்பாலும் என் மனைவி தப்பாத்தான் சொல்வா. ஆனா என் தம்பி அவ கேட்கும் எல்லாக் குரலையும் சரியா அடையாளம் கண்டுபிடிச்சிச் சொல்லிடுவான். போதாக்குறைக்கு அவர்களைப் போலவே சாரீரம் எடுத்து அவளுக்குப் பாடியும் காட்டுவான். அவங்களுக்குள்ள அது ஒரு பொழுதுபோக்கு. ரெண்டு பேருக்கும் ரெண்டு வயசுதான் வித்தியாசம். ரெண்டு பேருக்கு நடுவுலயும் தப்பா எதுவுமே இல்ல. நானும் அவங்கள தப்பா மதிப்பிடல.

ஒரு நா தூங்கும்போது தோணுச்சு, என்ன வாழ்க்க இதுன்னு. தலமுறை தலமுறைக்கு சொத்து இருக்கு. எதுக்கு வேல, தாம்பத்தியம், உறவுகள்னு சட்டுனு எதுலயும் பற்று இல்லாமப் போயிடுச்சி. நிறைய இனிப்பு சாப்பிட்டா சட்டுனு முகத்துல அடிச்சிற மாதிரி பணத்தப் பாத்தாலே அப்படி ஒரு எரிச்சல். காலைல எந்திருச்சு மனைவிகிட்ட சொன்னேன், நான் பரதேசம் போறேன்னு. அவ ஒத்துக்கல. ‘விட்டுட்டுப் போகாதீங்க’ன்னு சொன்னா.கொஞ்ச நேரம் அழுதா. என்ன பைத்தியம்னு சொன்னா. எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் என்ன வழின்னு கேட்டா. என்னை சந்தேகப்படுறீங்களான்னுகூட கேட்டா.
என் உடன்பிறந்தவன்கிட்ட பேசினேன். என் மனைவிகிட்டயும் பேசினேன். அவனுக்குத் திருமணம் ஆகல. ரெண்டு பேரும் விருப்பமில்லாம சம்மதிச்சாங்க. ஊர் என்ன சொல்லும்னு பயந்தாங்க. ‘ஊருக்காகவா நாம வாழ்றோம். நமக்கு நாம உண்மையா இருந்தா போதும்’னு சொல்லி என் பங்கு சொத்தையும் என் தம்பிக்கு எழுதிக் குடுத்திட்டேன். பிள்ளைங்களுக்கு அந்த நேரம் விவரம் தெரியாது. சின்னதுங்க; மூணு நாலு வயசுதான். சமயத்துல முகச்சாயல் ஒன்னா இருக்குன்னு என் தம்பியப் பாத்து அப்பான்னு போயி கட்டிப்பாங்க. பின்னாடி அதுவே நிசமாப் போச்சி.
கிளம்பி வந்து பதினேழு வருஷம் ஆகிருச்சி. மனுசப்பய மனசு குரங்குதான. திடீர்னு ஒருநாள் திரும்பவும் அந்த வாழ்க்கைக்குப் போகணும்னு தோணுச்சு. வீட்டுக்குப் போனேன். குடுத்த எல்லாத்தையும் திருப்பிக் குடுன்னு தம்பிகிட்ட கேக்க முடியாதுல்ல. போய் பாத்துக்கிட்டு வரலாமேன்னுதான் போனேன். அங்க எல்லாரும் என்னய மறந்து நல்லா சந்தோசமா இருக்காங்க. ரெண்டு மூணு முற பிள்ளைங்கள எட்ட நின்னு முகம் பாத்துகிட்டு வந்துட்டேன். இப்போல்லாம் போறதில்ல. துறக்கணும்னு முடிவு பண்ணியாச்சுன்னா எல்லாத்தையும் அந்த நொடிக்கே துறந்திடணும். சில நேரம் அது முடியுறதில்ல. இதுவும் ஒரு வகையில பயணம்தான். எங்க போறோம்னு தெரியாது. நீ சந்த சந்தயா திரியுற. நான் கோயில் கோயிலா திரியுறேன் அவ்வளவுதான்.
மனசுக்கு ஒட்டாத எதையும் செய்யக் கூடாது தம்பி. ஒட்டாம இருக்குறது எப்பவும் பிஞ்சி கீழ உதுந்து விழுந்திடும். மனசுக்கு ஒட்டாம நான் என் மனைவிகூட வாழ்ந்தா, பாவம் அவளுக்கு வாழ்க்கை நரகமாயிடும். ஒத்திசைவா இருக்காது. ரெண்டு மாடும் ஒரே திசைக்குத்தான் வண்டி இழுக்கணும். திசைக்கொன்னா இழுத்தா வண்டி எப்படி நகர்றது, போற இடத்துக்கு எப்படி போய்ச் சேர்றது.''
``ம்.''
``கவலையேபடாத. இப்படியே நாடோடியா திரியத்தான் உனக்குப் பிடிச்சிருக்குனா, வாழ்க்க முழுக்க இப்படியே திரி. இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பத்திருபது மைலுக்கு ஒரு ஊர்ல நிச்சயம் சந்த நடக்குது. நாலு மாட்டுக்குக் கூளம், தண்ணி வச்சின்னா ரெண்டு வாயி சோறு எவனும் போட்டுடுவான். மனுசங்க பேசுற மொழி புரியலன்னா என்ன, மனசு சுலவமா புரிஞ்சிரும். அத வச்சி எங்கனாலும் போயிட்டு வந்திறலாம்.''
``செரி.''
``சாப்பிட்டியா?''
``இல்லைங்க.''
``ம்... போயி, கோயிலுக்குப் பின்னால ஒரு ஆறு ஓடும், அதுல முங்கி எந்திரிச்சிட்டு வா.சாப்பிடலாம்.''
“இன்னொரு விஷயம். அது ஒரு ஆறு இல்ல, மூணு ஆறு. ஒரே ஆத்துக்குள்ள மூணு ஆறுக கலந்து ஓடுது. நீ தண்ணிக்குள்ள இறங்குனீன்னா தெரியும். உன் பாதம் வரைக்கும் நனைக்கிற ஆறு வேற, இடுப்பு வரை நடுவில ஓடுறது வேற, கழுத்து வரை ஓடுறது வேற ஆறு. கண்ண மூடி நின்னு பாரு அத உணர முடியும். மேல அள்ளிக் குடிச்சா புது மழையோட ருசிகொண்ட தண்ணியும், நடுவில அள்ளிக் குடிச்சா நல்ல இனிப்பாவும், பாதத்தில ஓடுற தண்ணில உப்புக்கரிப்பும் இருக்கும். உண்மையாத்தான் சொல்றேன். வேணும்னா மூணு தண்ணியையும் குடிச்சிப் பாத்திட்டு வா.''
கரியன் சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு ஆற்றை நோக்கிக் கிளம்பினான்.
குளித்து முடித்துவிட்டு சிறிது நேரத்தில் வந்தவன், ``உண்மதான். நான் நிக்கும்போது தெரியுது. மூணு ஆற்றோட வேகமே வேற வேற மாதிரி இருக்கு. இது எப்படி?’’ என்று கேட்டான். அவர் வானத்தை நோக்கி அண்ணாந்து கைகளை விரித்து ‘கடவுளின் செயல்’ என்பது போல் பார்த்தார்.
``கடவுளுக்கு என்ன தெரியும், இயற்கை அப்படி இருக்குல்ல'' எனக் கரியன் சொன்னான்.
கிணறுபூதத்தான் “அப்படியும் வச்சிக்கலாம்” என்று சொன்னபடி கோயில் மண்டபத்துக்கு அழைத்துப் போனார். அவரின் திருவோட்டில் தயிரில் பிசைந்த சோறு இருந்தது.
``சாப்பிடு.'' கரியனிடம் நீட்டினார்.
``உங்களுக்கு?''
``எனக்கு வேண்டாம். துறவி மூணு வேளயும் சாப்பிடணும்னு நினைக்கக்கூடாது. குறைவா சாப்பிட்டு நிறைவா வாழணும். நேத்து ராவுக்குத் தான் சாப்பிட்டேன். அடுத்த போஜனம் இன்னிக்கி ராவுக்குத்தான். உனக்காகத்தான் வாங்கி வெச்சேன்.''
``ம்.''
நல்ல ருசியான தயிரூற்றிப் பிசைந்த சோறு. அமுதம்போலிருந்தது. வாழ்நாளில் அவன் இப்படியான ஒரு தயிர் சாதத்தை சாப்பிட்டதேயில்லை. ஒரு வாய் வைத்த உடனே கிணறுபூதத்தானைப் பார்த்தான்.
``ருசி எப்படி?''
வாய் முழுக்கச் சோறு அடைத்திருப்பதால் கண் புருவங்களை உயர்த்தி ‘அருமை’ என்பது போல் காட்டினான்.
``இந்தக் கோயில் தயிர்ச்சோறு ருசிக்கு ஒரு காரணம் இருக்கு. ஆயிரம் வருசமா புங்கனூர்னு ஒரே இனத்து மாட்டோட பாலுலதான் இங்க சாமிக்கு அபிஷேகம். அதைத்தான் உறைகுத்தி தயிராவும் ஆக்குறாங்க. இந்த முத உறை தயிருதான் வழி வழியா ஆயிரம் வருசத்துக்கு மேல தினம் தினம் தொடருதுன்னு சொல்றாங்க. இந்தச் சோத்துல இப்போ இருக்குறது ஆயிரம் வருஷத்து ருசி.''
கரியன் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தான்.
கிணறுபூதத்தான் சிறிய யோசனையோடு கேட்டார். ``என்னோட கங்காவரம் வாரியா? இங்க இருந்து கிளம்புற ஆட்களெல்லாம் அங்கதான் போறாங்க. சந்த கூட்டுறாங்க. இங்க பக்கத்துலதான். நாலு மைலு நடந்தா வந்திரும்.’’
``ம். போலாம்.''
ஆற்றில் திருவோட்டைக் கழுவி அரச இலைகளால் ஈரம் போகத் துடைத்துக் கொடுத்தான்.

இருவரும் அங்கிருந்து கங்காவரம் நோக்கி இளம்வெயிலில் நடக்கத் துவங்கினார்கள். வழியெல்லாம் குடை விரித்ததுபோல் வரிசையாய் வாகை மரங்கள் இரண்டு மைல் தூரத்துக்கும் மேல் நின்றுகொண்டிருந்தன. தரையெல்லாம் வாகை மரத்தின் இளம் மஞ்சள் பூக்கள் உதிர்ந்துகிடந்தன. ஒரு சில அப்போதுதான் உதிர்ந்து அந்தரத்தில் தரைக்கு வந்துகொண்டிருந்தன. கிணறுபூதத்தான் சில பூக்களை எடுத்துத் திருவோட்டில் போட்டுக்கொண்டார்.
``சலம் வச்ச புண்ணு, கொப்புளம், வீக்கம், தீக்காயத்துக்கு நல்ல மருந்து. வழில யாருக்காவது வேணும்னா அரச்சி பூசி விடலாம். யாருக்காவது தேவைப்படலாம்.''
இருவரும் உச்சிவெயிலுக்கு முன் கங்காவரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆற்றின் கரையை ஒட்டிப் பெரிய திடலில் சந்தை கூட்டியிருந்தார்கள்.
சந்தையில் எல்லாத் திக்குகளிலிருந்தும் மாடுகள் வந்துகொண்டிருந்தன. சந்தையின் தென் திசையிலிருந்து ஓர் உருவம் நூற்றுக்கணக்கான மாடுகளின் முன்னால் தலைக்காளைபோல் வந்துகொண்டிருந்தது. ஒரு நிமிடம் கொம்பையாவோ என்பதுபோல் நினைக்கத் தோன்றும் அதே உருவம். பீமராசா சந்தைக்குள் வந்துகொண்டிருந்தார். அதே நேரம் வேறொரு திசையிலிருந்து 17 வயது மதிக்கத்தக்க ஓர் இளம்பெண் கையில் மூன்று மாடுகளின் கயிறுகளைப் பிடித்தபடி சந்தைக்குள் நுழைந்தாள். மூன்றும் ஓங்குதாங்கான ஓங்கோல் மாடுகள். சந்தைக்குள் முதல் முதலாக ஒரு பெண் மாடுகளைப் பிடித்து வருவது கரியனுக்கு ஆச்சரியமாயிருந்தது. தைரியமான அந்தப் பெண்ணின் உருவம் அவனுக்குள் என்னவோ செய்யத் துவங்கியது. கிணறுபூதத்தானிடமிருந்து விலகி அந்தப் பெண்ணை நோக்கிக் கரியனின் கால்கள் தன்னை மீறி நடக்கத் துவங்கின. கிணறுபூதத்தான் புன்னகைத்தார்.
மகன் வழி (1978 - முதுவேனிற்காலம்)
‘`வாழ்வின் எல்லா நோய்களுக்குமான அருமருந்து, திசைகாட்டியும் நாட்காட்டியும் தேவைப்படாத ஒரு பயணம்தான்.’’ ~ பராரிகள்
லாரி புறவழிச்சாலையின் வழியாக இந்தூருக்குள் நுழைந்தது. மத்தியான இந்தூர் சாலை ஜன நெருக்கடியும், தூசியுமாய் கசகசவென இருந்தது. சூரன் இந்தூர் மனிதர்களையும், சாலைகளையும், ஊரின் நடுவே ஊரைப் பிளந்துகொண்டு செல்லும் ரயில் பாதையையும், பழைய கற்கட்டட அரண்மனையையும் லாரிக்குள்ளிருந்து குனிந்து குனிந்து பார்த்தபடி சென்றான். லாரி முக்கியச் சாலையிலிருந்து திரும்பி ஒரு அகன்ற தெருவுக்குள் நுழைந்தது. அந்தத் தெருவில் இருப்பதிலேயே மிகப்பெரிய வீட்டின் வாசலில் லாரி நின்றது. லாரி ஓட்டுநர் அவரிடம் சென்று ஏதோ சொல்ல, அவர் பின்னால் வந்து தொட்டியில் மாடுகளைப் பார்த்துவிட்டு வீட்டின் பெரிய கதவைத் திறந்து லாரியை உள்ளே செல்ல அனுமதித்தார். லாரி அசைந்து அசைந்து உள்ளே சென்றது. வீட்டின் பின் பக்கமாக வருமாறு ஒருவன் லாரியை நோக்கிக் கையசைத்தான். லாரி அவன் சைகை காட்டிய இடத்திற்கு வந்து நின்றது. சைகை காட்டியவன் உள்ளே போய் யாரையோ அழைத்து வந்தான். ஒரு புள்ளிகூடத் தூசுபடியாத வெள்ளை நிறத்தில் வேட்டியைத் தார்ப்பாச்சிக் கட்டி, தோள்பட்டை வரை கதர் பனியன் அணிந்த ஐம்பது வயதைத் தாண்டிய ஒருவர் வந்து நின்றார். லாரியில் நிற்கும் மாடுகளை நோக்கிக் கும்பிட்டுவிட்டு அவற்றைக் கீழே இறக்கி விடச் சொன்னார். நொடிக்குள் அந்த வீட்டின் வேலையாட்கள் எல்லாரும் அங்கு வந்து குவிந்தனர். லாரியிலிருந்து மாடுகளை இறக்கும் வேலை துவங்கியது. இறக்கிய மாடுகளை அந்த மனிதர் பிடிகயிற்றைப் பிடித்துத் தொழுவத்திற்கு அழைத்துப் போனார். மாடுகள் அவரின் இழுப்புக்கு மறுப்பு சொல்லாமல் போயின.
லாரி ஓட்டுநர் அப்போதுதான் சூரனின் காதில் கிசுகிசுத்தார். ``இவர் யாருன்னு தெரியுமா?''
சூரன் தெரியாது என்பதுபோல் மறுத்துத் தலையாட்டினான்.
“இவர் ஒரு பழைய மந்திரி. மாடு வளக்குறதுல அவருக்கு ரெம்ப இஷ்டம். உள்ள வந்து பாரு. இந்தியாவுல இருக்கற எல்லாவகையான நாட்டு மாடுகளும் வச்சிருக்காரு.”
அவர் தொழுவத்தின் பெரிய கதவைத் திறந்தார். எங்கு பார்த்தாலும் ‘ம்மா...ம்மா...’ என்ற சத்தமாக இருந்தது. ஐம்பது மாடுகளை நெருக்கியிருக்கும். சூரன் திரும்பி ஓட்டுநரைப் பார்த்தான்.
``இங்க கொஞ்சம்தான் வச்சிருக்காரு. ஊருக்கு வெளிய பெரிய தோட்டமும் தொழுவமும் இருக்கு. நான் அங்க பல தடவ லாரிய எடுத்திட்டு வந்திருக்கேன்.’’ சூரன் வெறுமனே தலையாட்டினான்.
அந்த மனிதர் இந்தியில் யாரையோ கூப்பிட்டு கயிற்றைக் கொடுத்து மாட்டைக் கட்டச் சொன்னார். அவரின் மனைவியும், மகள்களுமாயிருக்கும் ஆறேழு பெண்கள் புதிய மாடுகளைக் காணவும் ஆரத்தி எடுக்கவும் வந்திருந்தார்கள்.
அவர்கள் மாட்டின் பிரமாண்ட உருவத்தைப் பார்த்துத் தயங்கி நின்றார்கள். அவர் ``நான் இருக்குறேன்ல, பக்கத்துல வாங்க'' என்பதுபோல் இந்தியில் ஏதோ சொன்னார். அந்தப் பெண்கள் தயக்கமாய் அருகில் போய் ஆரத்தி எடுத்து அந்த மாடுகளை வரவேற்றார்கள். சூரனுக்கு இது ஆச்சரியமாயிருந்தது. கதர் பனியன் அணிந்த மனிதர், மாட்டுக்குப் பசுந்தழைகளை எடுத்து உண்ணக் கொடுத்தார். அவை அசைபோட்டபடி உண்ணத் துவங்கின.

கதர் பனியன் அணிந்த மனிதர் சந்தோஷமாக இருந்தார். ஓட்டுநருக்கும் சூரனுக்கும் மொட மொடப்பான நூறு ரூபாய்த் தாள்கள் இரண்டை எடுத்துக் கொடுத்தார். ஆச்சரியமும் சந்தோஷமுமாய் வாங்கிக்கொண்டார்கள். கதர் பனியன் ஏதோ சொல்ல, கூட்டத்தில் ஒருவன் ``வந்திருவாங்க'' என்பதுபோல் சொன்னான். அவர்கள் எல்லோரும் யாருக்கோ காத்திருக்கத் துவங்கினார்கள்.
அப்போது25 வயதிருக்கும்படியான ஒருவர், கையில் மருத்துவர்கள் வைத்திருப்பது மாதிரியான ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கு வந்தார். அவரோடு அவரின் உதவியாளர் பெண் ஒருவரும் வந்திருந்தார். அந்தப் பெண்ணின் கண்கள் இடுங்கிக்கொண்டு, ‘நான் குளிர்ப் பிரதேசத்தில்தான் பிறந்தேன்’ என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. மருத்துவர் புதிதாக வந்த மாடுகளுக்குச் சில தடுப்பூசிகள் போட்டுவிட்டுக் கிளம்பினார். அவர்கள் கிளம்பியதும் கதர் பனியன் வீட்டுக்குள் கிளம்பினார். லாரி வாடகைத் தொகை வாங்குவதற்காக ஓட்டுநரும் சூரனும் காத்திருந்தார்கள். சூரனுக்கு கண்கள் இடுங்கிய பெண்ணைக் கண்டபோது மனதுக்குள் ஏதோ ஒன்று சுரண்டிக்கொண்டே இருந்தது.
அதுபோலவே சிறிது நேரத்தில் ஓட்டுநர் விசாரித்து வந்து சொன்னார். அந்தப் பெண் இந்தியாவின் முதல் வீட்டிலிருந்து கிளம்பி வந்த பெண்ணாம்.
~ ஓடும்