மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 34

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி (1952 – 54 இள மழைக்காலம்)

‘`பயணி ஆற்றை அதன் ஊற்றுக்கண்ணிலிருந்து முடிவு வரை அறிவான்.’’

~ பராரிகள்

ங்காவரம் சந்தைக்குள் கரியன் முதல்முறையாக பதினேழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிடிகயிறுகளைப் பிடித்தபடி மூன்று மாடுகளோடு வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனுடைய கால்கள் தன்னையறியாமலே நாலு எட்டு அவளை நோக்கி முன்னகர்ந்தன. கிணறுபூதத்தான் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்று கொண்டிருந்தார். அவரது முகத்தில் புன்னகை பூக்கத் துவங்கியது. கரியன் சுதாரித்துக்கொண்டு திரும்பி கிணறுபூதத்தானைப் பார்த்தான். அவரின் புன்னகை விரியத் துவங்கியபோது, அவனுக்கு மனதிற்குள் சின்னதாய் கூச்சம் வரத் துவங்கி மீண்டும் கிணறுபூதத்தானிடம் வந்தான்.

``உன் மனசுக்கும் உடலுக்கும் ஒரு பெண் தேவைப்படுறா, வேகமா தேடிக்கோ. உன் தகப்பனப்போல இருந்த ஒருத்தர இழந்திருக்க. இந்த மாதிரி பெரிய இழப்பிலேருந்து வெளி வர மனசுக்கு ஒரு பெண் இருந்தாலேயொழிய சரியாகாது.''

கரியன் அவரின் சொற்களை ஆமோதிக்காமல் அமைதியாக இருந்தான். அங்கிருந்த கூட்டத்திலிருந்து நிறைய பேர் வந்து கிணறு பூதத்தானிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். தங்கள் கால்நடைகளையும் ஆசீர்வதிக்கும்படி அவரை அழைத்துப் போய்க் காட்டினார்கள். கரியன் மரத்தடியிலேயே நின்றுகொண்டிருந்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 34

பீமராசா தூரத்திலிருந்து கரியனைக் காட்டி அருகிலிருப்பவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அதிலொருவரிடம் ஏதோ சொல்லி அனுப்ப, அவர் கரியனை நோக்கி வந்தார். வந்தவர் தெலுங்கில் பீமராசாவைக் கையைக் காட்டி ஏதோ சொல்ல, கரியன் அவர் சொல்வது புரியாமல் முழித்துக்கொண்டிருந்தான். வந்தவர் அவன் கையைப் பிடித்து பீமராசா அமர்ந்திருக்கும் திசைநோக்கி இழுத்தார். கரியனுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் ``சாமீ... சாமீ...’’ என்று கிணறுபூதத்தானை அழைத்தான். அவர் அருகில் வந்து கையைப் பிடித்திருந்தவரிடம் என்ன வேண்டுமென தெலுங்கில் விசாரித்தார். வந்திருந்தவர் ``இந்தப் பையன் அப்படியே அசலா பீமராசாவின் இறந்துபோன மகனப் போலவே இருக்கானாம். அதான் பீமராசா அழைச்சிட்டு வரச் சொன்னாரு’’ என்றார்.

ஓரிரு நொடிகள் அமைதியாய் இருந்துவிட்டு ``சரி நீ போ... நான் கூட்டிட்டு வரேன்'' என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.

கரியன் சந்தையில் ஆங்காங்கே நிற்கும் மாட்டு மந்தைகளைத் தாண்டி மரத்தடியில் அமர்ந்திருக்கும் பீமராசாவை ஊடுருவிப் பார்த்தான். அவரும் அதேபோல, கண்கள் கலங்கியபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 34

கிணறுபூதத்தான் அவரிடம் கரியனை அழைத்துப் போனார். பீமராசா கரியனை பிரயாசையோடு விழுங்குவதைப்போல் பார்த்தார். அவன் தலை, தோள்களைக் கையால் தடவிப் பார்த்தார். ``நேத்து சிம்மகுர்தி ஆத்துக்கிட்ட உன்னப் பாக்கும்போது, அப்படியே நாலு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன என் மகன பார்த்த மாதிரியே இருந்துச்சி. நீயும் என் பக்கத்துல வந்த. என்ன நினைச்சியோ, நிமிஷத்துல அங்க இருந்து ஓடி எங்கயோ காணாமப் போய்ட்ட. வழியெல்லாம் எப்படித் தேடினேன் தெரியுமா? திரும்ப இங்க உன்னப் பாப்பேன்னு நினைச்சிக்கூடப் பாக்கல. நான் அங்க வந்து நின்னா நீ திரும்பவும் இங்க இருந்து போயிடுவியோன்னுதான் இவர அனுப்பி விட்டேன்.'' அவர் கண்களில் நீர் கட்டி நின்றது. கிணறுபூதத்தான் அவர் சொன்னதைத் தமிழில் பெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கரியனால் விளக்கிச் சொல்லமுடியவில்லை. `உங்ககிட்ட நிறைய விஷயம் அப்படியே கொம்பையாகிட்ட இருந்த மாதிரியே இருக்கு’ மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.சட்டென கரியனின் உதடுகள் நடுங்குவது போலாகி பீமராசாவைக் கட்டிக்கொண்டு அழத் துவங்கிவிட்டான். ``பெரியாம்பள... பெரியாம்பள...'' அவரும் அழத் துவங்கினார். ``கிருஷ்ணா... கிருஷ்ணா...’’ என்று பெயரை உச்சரித்தபடி அவனை இறுக்கமாய்க் கட்டிக்கொண்டு கத்தி அழத் துவங்கிவிட்டார். சந்தைக்கூட்டம் முழுக்க அவர்களை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டது. பீமராசா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு கரியனின் கண்களையும் ஈரம் போகத் துடைத்துவிட்டார். கரியனை அப்படியே தன்னருகில் அமர வைத்தார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 34

பெரிய பித்தளைத் தூக்கில் எடுத்து வந்திருந்த சோற்றையும், பழைய மீன்குழம்பையும் தூக்கின் மூடியில் போட்டுக் கொடுத்தார். கரியன் தயங்கியபடியே வாங்கிக் கொண்டான். பீமராசா கிணறுபூதத்தானைத் தனியே அழைத்துக்கொண்டு போய்ப் பேசினார். ``அப்படியே ஒரு எட்டு என் ஊரு கரவாடி வரைக்கும் வந்து ரெண்டு நாளு தங்கிட்டுப் போனா என் குடும்பம் முழுக்க சந்தோஷப்படும். அத எப்படியாவது நீங்கதான் பண்ணிக் குடுக்கணும். அவன் இறந்து போனதிலேருந்து என் மனைவி முகத்துலயும் பிள்ளைங்க முகத்து லயும் கொஞ்சம்கூட சந்தோஷம் இல்ல. ரெண்டு நாளுல நிச்சயம் அனுப்பி விட்டுடுவேன். எப்படியாவது வரச்சொல்லுங்க. நீங்க சொன்னா அவன் கேப்பான்.''

கிணறுபூதத்தான் மறுத்துத் தலையாட்டினார். ``வேண்டாம். உங்க வீட்ல இப்போதான் கொஞ்ச கொஞ்சமா உங்க பையன மறக்க ஆரம்பிச்சிருப்பாங்க. இப்போ திரும்ப இவனக் கூட்டிக்கிட்டுப் போயி ஞாபகப்படுத்த வேண்டாம். ஒரு ரெண்டு நாளைக்கி அவங் களுக்கு சந்தோஷமா இருக்கும். திரும்ப அவன இழக்கும்போது அவங்களுக்கு வலிக்கும். வேண்டாம், இருக்கட்டும். நீங்க பாத்துட்டிங்கில்ல, இப்படியே அவன் கிளம்பட்டும்.''

பீமராசா கையெடுத்துக் கும்பிட்டார். கிணறு மறுத்துவி ட்டார். ``வேண்டாம். ரெண்டு நாளு சந்தோஷத்துக்காக நீங்க பண்றது உங்க மனைவிக்கும், பிள்ளை களுக்கும் பெரிய கஷ்டத்தக் குடுத்துரும்.’’ பீமராசா சட்டென கிணறுபூதத்தான் காலைப் பிடித்தார். ``சாமீ...’’

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டேயிருந்த கரியன் சட்டென சாப்பாட்டை வைத்து விட்டு ஓடி வந்தான். கொம்பையாவின் செய்கையும் சாயலுமிருக்கும் ஒருவர், காலில் விழுவது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. கிணறு பூதத்தானிடம் கேட்டான், ``என்னவாம்?''

``உன்ன அவர் வீட்ல வந்து ரெண்டு நாளு தங்கிட்டுப் போகச் சொல்றாரு. அவங்க மனைவியும் பிள்ளைங்களும் உன்னப் பாத்தா சந்தோஷப்படுவாங்களாம்.’’ அவர் சொல்லி முடித்த அடுத்த நொடியே கரியன் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னான், ``சரி, வாங்க போகலாம்.''

கிணறுபூதத்தான் கரியனை ஆச்சரியமாகப் பார்த்தார். பீமராசாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அடுத்த சில நிமிடங்களில் ஊர் ஆட்களிடம் சொல்லி வில் வண்டி ஒன்றைக் கொண்டுவந்தார்கள். வண்டி கரவாடி நோக்கிப் புறப்பட்டது. வண்டி பீமராசாவின் வீட்டு வாசலில் நின்றபொழுது ஒரு சிறு பெண்பிள்ளை ‘அப்பா வாராரு’ என்று சொல்லியபடி உள்ளே ஓடியது. கிணறுபூதத்தானுக்கு ஏதோ உள்ளுக்குள் அடித்தது. பீமராசா கரியனை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தார்.

பெரிய முற்றம், சுற்றிலும் மணல் நிறத்தில் பெரிய பெரிய யானைகள் படுத்திருப்பதுபோல ஐந்து வைக்கோல் குமிகள். தூரத்திலிருந்து பீமராசாவின் மனைவி கத்திக் கதறியபடி ஓடிவந்தார். வேகவேகமாக அருகில் வந்து கரியனை அழுதபடி கட்டித் தழுவிக்கொண்டார். ``அப்பா கிருஷ்ணா...''

வீட்டுக்குள் போன சிறு பெண்குழந்தை ஓர் இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அந்த இளம்பெண் தட்டுத்தடுமாறி ஓடிவந்தாள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே அந்தப் பெண் உரக்கக் கத்தியபடி வந்தாள். வீட்டின் வெளியேயும், உள்ளேயும் கூட்டமாய்க் கூடியது. அழுதபடி வேகமாய் வந்த இளம்பெண், கரியனை அருகில் பார்த்ததும் ஒருகணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். பின் மெல்ல இயல்புக்குத் திரும்பி கண்களைத் துடைத்துவிட்டு தன் பிள்ளையை இழுத்துக்கொண்டு வீட்டின் பின்கட்டுக்குப் போனாள். அந்தப் பெண்குழந்தை ``அப்பா... அப்பா...’’ என அழத் துவங்கியது. கரியனுக்கு என்னவோ போலாகிவிட்டது.

பீமராசாவின் மனைவி ``உன் பேர் என்னப்பா?’’ எனக் கரியனிடம் ஆதூரமாய் விசாரித்தார். பீமராசாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கிணறுபூதத்தான்தான் பேசினார். அந்தப் பெண் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார். ``என்னவிட கிருஷ்ணா பொண்டாட்டியும், அவன் பிள்ளையும்தான் ரொம்பப் பாவம்’’ என்றார். கரியனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே, ``அப்படியே கிருஷ்ணனைப்போலவே இருக்க. ஆனா நீ கிருஷ்ணா இல்ல.எனக்குத் தெரியும். வெறும் முகம் மட்டுமே கிருஷ்ணன் இல்லல்ல. வா... சாப்பிடு’’ என்று சமையல் கட்டுக்கு அழைத்துப் போனார். பீமராசா கொல்லையிலிருந்து வாழை இலைகளை நறுக்கி எடுத்து வந்தார். உணவு போட்டுவிட்டு கரியனைப் பார்த்தபடியே எதிரில் அமர்ந்தார். ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி எழுந்து போய் அந்தச் சிறுகுழந்தையை அழைத்துவந்தார். எப்படியும் ஆறு வயதிருக்கும். கரியன் அந்தக் குழந்தையைத் தன் மடியில் அமர வைத்துக் கொண்டான். அந்தக் குழந்தை திரும்பித் திரும்பி கரியனின் முகத்தைப் பார்த்தது. கரியன் அந்தக் குழந்தைக்கு ஊட்டி விட்டான். குழந்தை எத்தனை நாள் பசியோ என்பது போல அவனிடம் நன்றாக எவ்வளவு ஊட்டினாலும் வாங்கிக் கொண்டது. எல்லோருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. ``வழக்கமா ரெண்டு வாய்க்கே அவ பின்னாடி ஓடணும்’’ என்றார்கள். கரியன் அந்தக் குழந்தைக்குத் தண்ணீர் புகட்டிவிட்டு கை, வாயைக் கழுவி விட்டான்.

எல்லோரும் முற்றத்தில் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குழந்தை கரியனை விட்டு நகரவேயில்லை. அவன் அமர்ந்திருக்கும்போது அவன் மடியில் சாய்ந்தபடி அப்படியே படுத்துக்கொண்டது. எத்தனை நாள்கள் தேக்கிவைத்த உறக்கம் என்பதுபோல அப்படி ஒரு தூக்கம். அந்த முகத்தில் நெடுநாள்களுக்குப் பிறகு ஒரு நிம்மதி இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. பீமராசாவின் மனைவிதான் சட்டெனச் சொன்னார். ``சரிப்பா, நீங்க கிளம்புங்க.’’ பீமராசா அவர் மனைவியை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.

``கிருஷ்ணாவப் போலவே இருக்கான். அவ்வளவுதான. உண்மையிலேயே பாத்தது ரெம்ப சந்தோஷம். எனக்கு குழந்தைய நினைச்சாத்தான் ரெம்ப கஷ்டமா இருக்கு. தூங்கி முழிக்கிறதுக்குள்ள கிளம்புங்க. அது ஏதோ கனவுன்னுகூட நினைச்சிக்க வாய்ப்பிருக்கு. ரெண்டு மூணு நாளு இங்க தங்கிட்டா பாவம் ரெம்ப ஏங்கிப் போய்டுவா. கிருஷ்ணா மனைவியும்தான். அவ இங்க வரல. ஆனா எத்தன தடவ அந்த ஜன்னல்ல இருக்குற சின்னத் துளை வழியா அவ கண்ணு பாத்துச்சி தெரியுமா? வேண்டாம். இப்பத்தான் கிருஷ்ணாவை எல்லாரும் மறந்து இந்த வீடு அழுக சத்தம் இல்லாம இருக்கு.''

கரியன் குழந்தையை மெதுவாகத் தன் கால் தொடையிலிருந்து தலையணைக்கு மாற்றினான். எல்லோரும் சத்தம் காட்டாமல் கிளம்பினார்கள். ஜன்னலுக்குள்ளிருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. கரியனுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. வண்டியில் ஏறி அமர்ந்தான். பீமராசாவின் அம்மா, கரியனை நோக்கிக் கும்பிட்டார். அவர் கையில் தன் மகனுக்குத் தருவதைப்போல புதுவேட்டியும் துண்டுமிருந்தன. ``நீ நல்லாருக்கணும்பா. இன்னொருக்க இங்க வரவேண்டாம்.’’ மீண்டுமொருமுறை கும்பிட்டுவிட்டு வீட்டிற்குள் கிளம்பினார். வண்டி கிளம்பி நாலு வீடுகள்தான் தாண்டியிருக்கும். ``அப்பா’’ என்று கத்திய குழந்தையின் சத்தம் கேட்டது. கரியனுக்கு என்னவோ போலாகிவிட்டது.

வண்டி நான்கு முக்குச் சாலைக்கு வந்ததும் கரியன் இறங்கிக் கொண்டான். கிணறுபூதத்தானிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுக் கிளம்பினான். ``எங்கே போற’’ என்று அவர் கேட்க, பதில் இல்லாமல் நடந்தான்.

வண்டி ஒருபுள்ளியாக மறைந்தது. ஒரு மைலுக்கு மேல் நடந்துவிட்டு ஆள் இல்லாத சாலையில் அவன் மட்டும் தனியாக இருக்கும்போது கத்திச் சொன்னான். ``மாடு சாகுறப்போ கன்னுக்குட்டிக்கி புல்லு புடுங்கிப் போட்டுட்டா சாகுது. கிளம்பு. போய்க்கிட்டே இரு. போய்க்கிட்டே இரு...​''

எங்கெங்கோ இரண்டு மூன்று வருடங்கள் சிறு சிறு சந்தைகளுக்கு அலைந்து திரிந்துவிட்டு பாலைவன மணல் அப்பிக்கிடக்கும் ஜெய்சால்மர் சந்தைக்கு வந்து சேர்ந்தான். அவன் அங்கு வந்து சேர்ந்த போது லேசான மழைக்காலம். வானம் தினமும் மாலையில் லேசான கம்பித் தூறல்கள் போடும். பொழுதே ரம்மியமாகிவிடும். ஊர் முழுக்க சிறியதும் பெரியதுமான நிறைய அரண்மனைகளும், பழைய வீடுகளுமிருந்தன. அவன் அங்கு நடக்கும் பெரிய சந்தைக்குள் நுழைந்தான். அவ்வளவு பெரிய சந்தைத் திடலையும் ஜனக் கூட்டத்தையும், இவ்வளவு வகை வகையான பிராணிகளையும் அவன் இதற்கு முன்பு பார்த்ததே யில்லை. பெரும்பாலும் ஒட்டகங்கள்தான் தெரிந்தன. யானைகளும் குதிரைகளும் மாடுகளும் விற்பனைக்கு நின்றன. குரங்கு களையும் கரடிகளையும்கூட விற்பனைக்கு எடுத்து வந்திருந் தார்கள். கரியனுக்கு ஆச்சரிய மாயிருந்தது. எந்தச் சந்தையிலும் கிடைக்காத பிராணிகள்.

சந்தையின் விளிம்புகளைச் சுற்றிவரவே மூன்று மணி நேரம் பிடித்தது. இருள் வரத் துவங்கியபோது சந்தையில் அங்கங்கு பெரிய கல்தூண்களில் பெரிய எண்ணெய் விளக்கிட்டு வெளிச்சம் ஏற்றியிருந்தார்கள். அங்கங்கு கும்பலாய் விறகு போட்டு சுற்றிலும் வட்டமாய் அமரத் துவங்கியிருந்தார்கள். கூட்டத்தில் இரண்டு விரல் நீளத்திற்குக் கஞ்சாச் சுருட்டைச் சுற்றி வரிசையாய்ப் புகைக்க ஆரம்பித்தார்கள். வட்டத்தில் அமர்ந்திருப்பவர்கள் யார் எவர் என்ற அறிமுகமில்லாமல்கூட எல்லோரும் வரிசையாய் ஒருவர் மாற்றி ஒருவர் புகைத்துப் புகைத்து அடுத்தவருக்குக் கைமாற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கரியனும் ஒரு வட்டத்தில் போய் அமர்ந்தான். அவன் முறைக்கு கஞ்சாச் சுருட்டு வரும்போது புகைக்காமல் அடுத்தவருக்கு மாற்றிக் கொடுத்தான்.

ஆறாவது ஏழாவது என கஞ்சாச் சுருட்டின் முறை வந்துகொண்டேயிருந்தது. எல்லோரும் நிறை போதையில் தளும்பினார்கள். முதன்முதலாக ஒருவன் அருகில் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னான். எல்லோரும் அவன் கை சுட்டிய இடத்தைப் பார்க்கத் துவங்கினார்கள். கரியனும் பார்த்தான். அங்கு சிறுகுச்சியைப் போட்டு நெருப்பு எரிந்துகொண்டிருந்து. சுற்றிலும் ஏழு வெண் குதிரைகள் நின்று கொண்டிருந்தன. அதில் ஓரிரண்டிற்கு மட்டும் உடலில் சிறு கறுப்புப் புள்ளிகள். குதிரை ராஜ வனப்பாய், கம்பீரமாய் இருந்தது. குதிரையின் நடுவே ஊடுருவிப் பார்த்தான். அங்கு ஒரு இளம்முதியவர். வயது இப்போதுதான் ஐம்பதைத் தாண்டியிருக்கும். அங்கு பழைய ராஜாக்கள் அணியும் பட்டுடைகள்போல் அணிந்து நீளமான முடியும், தாடியும் வைத்திருந்தார். அவரின் பட்டுடையில் நிறைய அழுக்கும் கிழிசலுமிருந்தன. கூட்டம் முழுக்க அவரைப் பார்த்துக் கெக்கலித்துச் சிரிக்கத் துவங்கியது. கரியன் அந்தக் கூட்டத்திலிருந்து தனியே எழுந்தான். எல்லோரும் சிரிப்பை விட்டுவிட்டு அவனைப் பார்க்கத் துவங்கினார்கள். கரியன் மெல்ல அந்த ஏழு குதிரைகளை நோக்கி நடக்கத் துவங்கினான். வழியில் யாரோ சொன்னார்கள், ‘அவர்தான் இந்த ஊரின் இறுதி ராஜ வாரிசு’ என. கரியன் அவரை நெருங்கி அவர் முகத்தைப் பார்த்தான். அவர் பார்வை குனிந்து பார்த்தபடி பூமியைத் துளைத்துப் போய்க் கொண்டேயிருந்தது.

மகன் வழி

(1978 - முதுவேனிற்காலம்)

‘`ஆறும் பயணியும் நிலையாய் எங்கும் தங்குவதில்லை.’’

~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 34

‘`அந்தப் பெண்தான் இந்தியாவின் முதல் வீட்டுப் பெண்’’ என்று ஓட்டுநர் சொன்னதைக் கேட்டு சூரனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அந்தப் பெண்ணை எப்படியாவது சந்திக்க வேண்டுமெனச் சொன்னதும், ஓட்டுநர் அந்தப் பெண்ணின் இருப்பிடம் குறித்து விசாரிக்கத் துவங்கினார். ``அந்தப் பெண்தான் முதல் வீட்டுப் பெண் என்று ஒருமுறை முன்னாள் மந்திரியிடம் அந்த மருத்துவர் சொல்லும்போது நான் அங்கிருந்து கேட்டேன்’’ என்றார். ஓட்டுநர் விஷயத்தைச் சொன்னார். ``இவன்தான் நம்ம நாட்டுல கடைசி வீட்ல இருந்து கிளம்பி வந்தவன். அதான் அந்தப் பொண்ணப் பார்த்ததும் ஆச்சரியமாகிட்டான்.’’

வேலைக்கு இருப்பவர், ``மருத்துவரைப் பார்த்தால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துவிடலாம். இங்கு அந்தப் பெண் மூன்று அல்லது நான்கு முறைதான் வந்திருக்கிறார்’’ என்று சொன்னார்.

மருத்துவரின் முகவரியை வாங்கிக்கொண்டு முக்கியச் சாலையிலிருக்கும் அந்தச் சிறிய கிளினிக்கிற்குச் சென்றார்கள். அவர்கள் சென்றபோது கிளினிக் மூடியிருந்தது. மூடிய ஷட்டரின் மேல் ஏதோ மருந்து நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒரு பெண் மருந்து டப்பாவைப் பெயர் தெரியும்படி கையில் வைத்திருப்பது மாதிரியான படம் வரையப்பட்டிருந்தது. மாலைக்கு மேல்தான் கிளினிக்கைத் திறந்தார்கள். திறக்கும் போது வந்த பெண்ணிடம் ஓட்டுநர் அந்தப் பெண்ணை அடையாளம் சொல்லி விசாரித்தார். அந்தப் பெண், தனக்கு எதுவும் தெரியாது, மருத்துவரிடம் கேட்டால்தான் தெரியும் என்று சொல்லிவிட்டுப் போய் கிளினிக்கை சுத்தம் செய்யத் துவங்கிவிட்டார். மருத்துவர் வரும் வரை அவர்கள் காத்திருந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 34

ஒருவர் தன் வளர்ப்பு நாயோடும், ஒருவர் பசுவோடும் அவர் வரவிற்காகக் காத்திருந்தார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவர் அங்கு வந்து சேர்ந்தார். ஓட்டுநர் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தார். மருத்துவர் ``உண்மைதான். அந்தப் பெண்தான் இந்த நாட்டின் முதல் வீட்டிலிருந்து கிளம்பி வந்த பெண். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி வேறு எந்த விளக்கமும் என்னால் சொல்ல முடியாது. இன்று காலையில்தான் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றி அந்தப் பெண் இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்’’ என்றார். ``அந்தப் பெண் இங்கு வந்து ஐந்து மாதமே ஆகிறது. பிராணிகள் மருத்துவம் சார்ந்து ஆர்வம் கொண்ட பெண் அவர். ஆனால் படிப்பாக அது சார்ந்து எதுவும் படிக்கவில்லை என்றாலும் விலங்குகள் சார்ந்தும், அதன் நோய்களும் அதற்கான அறிகுறிகளும் சார்ந்து அந்தப் பெண்ணுக்கு நுணுக்கமான அறிவு இருந்தது. உண்மையில் என்னைவிட அவளுக்கு அதிகம் தெரியும்’’ என்றார். ``அந்தப் பெண்ணிடம் விசேஷமான ஒரு குணம் உண்டு. எல்லாப் பிராணிகளும் அவளிடம் எளிதாக வசப்படும். அவள் அதன் நெற்றியிலோ முதுகிலோ தடவினால் அந்தப் பிராணிகள் அடுத்த நொடியே அவளிடம் பலகாலம் பழகியதைப் போல் அன்பை வெளிப்படுத்தும். பெரும்பாலும் அந்தப் பெண்ணின் துணையோடு போனால் எந்தப் பிராணியும் மிரளாமல் நிற்கும், ஊசியோ, மருந்தோ கொடுப்பதும் எங்களுக்கும் எளிது. அதனால்தான் அந்தப் பெண்ணை வேலையில் வைத்திருந்தேன்’’ என்றார்.

``நான் அந்தப் பெண்ணிடம் பலமுறை கேட்டிருக்கிறேன், உனக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறதென. அந்தப் பெண்ணின் அப்பா எல்லாப் பிராணிகளோடும் நெருங்கும் வசியத்தை அந்தப் பெண்ணுக்கு சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுத்ததாய்ச் சொல்லி யிருக்கிறார். இன்று காலையில் எங்களுக்குள் விளையாட்டாய்த் துவங்கிய ஒரு வாக்குவாதம் முற்றி, கோபத்தில் அந்தப் பெண்ணை ‘இங்கிருந்து வெளியே போ’ என்று சொல்லிவிட்டேன்’’ என்றார்.

மேலும், ‘‘அந்தப் பெண் இப்படியே அங்கங்கு சில மாதங்கள் வேலை செய்தபடி நகர்ந்து நகர்ந்து இந்தியாவின் கடைசி வீட்டைச் சென்று பார்ப்பதுதான் தன் வாழ்நாளின் ஆசை என்று என்னிடம் பலமுறை சொல்லி யிருக்கிறாள்’’ என்றார்.

மருத்துவர் ஓட்டுநரிடம் சூரனைக் காட்டி ``இவர் யார்?’’ என்று கேட்டார். ஓட்டுநர் ``அந்தப் பெண்ணைப்போலவேதான். இவன்தான் இந்த நாட்டோட கடைசி வீட்ல இருந்து கிளம்பி வந்த பையன்’’ என்றார்.

மருத்துவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

~ ஓடும்