
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`கண்கள் பாதையைத் தொலைத்துவிட்டு நிற்கும்போதெல்லாம்
கால்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துத் தரும்’’
- பராரிகள்
தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )
கரியன் அதிகாலையில் தொழுநோய் ஆஸ்பத்திரியின் வெளியே அதன் பெரிய மரக்கதவு திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.மார்கழிப்பனியில் கூதல் அடித்தது. கொம்பையாவின் உருமால் துண்டை எடுத்து இறுக்கமாய் உடலில் கழுத்தும் காதும்கூடப் புதைந்திருக்கும்படி சுற்றிக்கொண்டு குன்னியபடியே கல் படியில் அமர்ந்திருந்தான். ஆஸ்பத்திரியின் புறத்தோற்றத்தைப் பார்த்தான், நான்கடி கனத்திற்குச் சுண்ணாம்பும் கடுக்காயும் முட்டையின் வெள்ளையும் போட்டுக் கலந்து பூசிய இறுக்கமான பழைய சுவர். சுற்றிலும் தென்னையும் பனையும் பாக்கும் பலாவும் ஓங்கி நின்றிருந்தன. கட்டடத்தின் தலைமேல் பார்த்தான். சிவந்த கனமான கொல்லம் ஓடுகள் மார்கழிப் பனி மூட்டத்திற்குள் மறைந்து மறைந்து தெரிந்தன. அந்தப் பகுதியே புகை அடைத்துப்போய்த்தான் இருந்தது. புகை விலக விலக வேறு சிலரும் அங்கங்கே சுற்றுச் சுவரில் அமர்ந்திருப்பது மங்கலாய்த் தெரிந்தது. தன் கை மணிக்கட்டைப் பார்த்தான். சித்திரை ராமனின் ஆட்கள் தேங்காய் நார்க் கயிறுகளால் இறுக்கிக் கட்டியதன் வலியும், வரிவரியாய்த் தடமும் இருந்தன. வேஷ்டியில் அங்கங்கே சகதியும், செடிகளின் பச்சையும் இழுவிக் காய்ந்திருந்தன. புகை மூட்டத்திற்குள் நடுவிலிருந்து யாரோ சுருட்டு பற்ற வைத்தார்கள். கரியனுக்குக் கொம்பையாவின் ஞாபகம் வந்தது. ‘`பணம் தரேன், உன் அம்மைகிட்ட போய்க் குடு.
குடுத்திட்டு விடிகாலைக்குள்ள இங்குன வந்திரு. மேற்க பெருஞ்சந்தைக்குக் கிளம்புறோம். என்கூட இரு. சரியா?’’
மீண்டும் மீண்டும் கொம்பையாவின் குரல் ஒலித்தது. ‘இந்த நேரம் அவர் கிளம்பியிருக்க வாய்ப்புண்டு’ மனதிற்குள் நினைத்தபடியிருக்க… சட்டென ஆஸ்பத்திரியின் கதவைத் திறந்தார்கள். எல்லோரும் நுழையப்போவதைப்போல எழுந்து அருகில் வந்தார்கள். ‘`நில்லுங்க… நில்லுங்க’’ யாரோ அவர்களைத் தடுத்தார்கள். உள்ளிருந்து ஓலைப் பாயில் கிடத்தி இரண்டு மூன்று பேர் வெண் துணியால் முழுக்க மூடிய இறந்த பெண் சவத்தைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். கரியனுக்கு பயமாயிருந்தது. அவன் வாய் ``எம்மா... எம்மா... ம்மா’’ எனத் தன்னியல்பாய் முனகத் துவங்கியது. வெள்ளை முக்காடிட்ட கன்னியாஸ்திரிபோல இருந்த முதிய பெண் கையில் மெழுகுவத்தியை ஏந்தி ஏதோ ஜெபம் போல முணுமுணுத்தபடி வந்தார். இப்போது எல்லோரும் பரபரப்பாய் முண்டியடித்து அருகே போனார்கள். கரியன் அந்தப் பெண் என்ன பெயரை உச்சரிக்கப்போகிறாரோ என பயமும் ஆர்வமும் கலந்து அவரின் உதடுகளையே பார்த்தபடியிருந்தான்.

``அன்னம்மா வீட்ல இருந்து யாராவது வந்துருக்கீங்களா?’’
ஒரு மூலையிலிருந்து ``அய்யோ... அம்மே’’ என்று மூன்று அழுகுரல்கள் ஓங்கி ஒலித்தன.
``அப்பாடா...’’ நிம்மதியும் ஆசுவாசமுமாயிருந்தது கரியனுக்கு. அங்கு நிறைய பேருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அதற்குள் நிறைய பேர் ஆஸ்பத்திரிக்குள் உள்ளே முண்டிக்கொண்டு போகத் துவங்கிவிட்டார்கள். கரியன் அந்த அழுகுரல்களை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே உள்ளே போனான். எல்லாம் பிஞ்சுக்குரல்கள்.
உள்ளே பெருநோய்ப் பிணியாளர்களைப் பார்க்க எல்லோரும் காத்திருந்தார்கள். பெயரிட்டு ஒவ்வொருவராய் அழைக்க, சிலர் உள்ளே போனார்கள். அங்கிருந்தவர்களிடம் “இசக்கியம்மாளின் மகன் வந்திருக்கிறேன்” என்று சொன்னான். பணிப்பெண் உள்ளே போய்விட்டு, போன வேகத்தில் திரும்ப வந்தார்.
``உன்னப் பார்க்க விரும்பலன்னு உன் அம்ம சொல்லுச்சு. இங்கெல்லாம் வர வேண்டாமாம்.’’ கரியன் ``எம்மா’’ என்று அழுதபடியே அவளிருக்கும் அறையைத் தேடி உள்ளே ஓடினான். எந்த அறையென்று தெரியாமல் ஒவ்வொரு அறையாக ஓடினான். ‘`எம்மா...’’
எல்லா அறையிலும் பிணி நாற்றம்.
சட்டென ஒரு அறையின் கதவு மூடும் சப்தம் கேட்டு திரும்பிப் போய் அந்த அறையின் கதவைத் தட்டினான்.
மாவுத்தன் இப்போது அவனைக் கீழே இறங்கச் சொல்லி, தான் மேலே ஏறி அமர்ந்து செலுத்தினான். மங்கள வாத்தியங்கள் இசைக்க அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவுருவத்தை யானையின் மேல் ஏற்றி வைத்தார்கள்.
``எம்மா கதவைத் திற’’
உள்ளிருந்து ``ஏலே கரியா, இங்குன ஏன் வந்த... உன்ன இங்க வரக் கூடாதுன்னு சொன்னேன்ல லே’’ என்று இசக்கி அழுகையும் கோபமுமாய் கடிந்து சொன்னாள்.
``கதவத் திறம்மா’’ ஓங்கி ஓங்கித் தட்டினான். அங்கங்கே சிலர் எட்டிப்பார்த்துவிட்டு... ‘இந்த ஆஸ்பத்திரியில் இது வழக்கம்தான்’ என்பது போல மீண்டும் அவரவர் வேலையைத் தொடர்ந்தார்கள்.
``எம்மா நான் எங்க போக உன்ன விட்டுட்டு...எனக்கு யார்லா இருக்கா? உன்கூடத்தான் இருப்பேன்.’’
``அய்யோ கடவுளே, என் பிள்ளக்கி நாதியத்துப் போச்சே... எங்குனயாவது போயி பொழச்சிக்கோலே... இங்க வராத, உனக்கும் ஒட்டிக்கும்.’’
``எம்மா கதவத் திற. உன்ன ஒருக்கா பாத்திட்டுப் போயிடுறேன்.‘‘
``வேணாம்டே. ஏலே அய்யா, சொன்னாக் கேளு. நீ நல்லா இருப்ப. உன் வம்சம் தளைக்கும்... என் ஆயுசும் சேத்து நீ நல்லா வாழ்வ. கிளம்பு’’ துரத்தினாள்.
``எம்மா ஒருக்கா பாத்துக்குறேன்மா’’
ஜன்னலைத் திறந்து விட்டுவிட்டு... பத்தடி தள்ளி நின்று சுவரில் போய் சாய்ந்துகொண்டு அழுதாள்.
``எம்மா...’’ ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி ஒரு கையை உள்ளே விட்டு அம்மாவை அருகில் அழைப்பதுபோல் செய்து ``ஒருக்கா என்னத் தொடுமா... எம்மா...’’
எவ்வளவு கேட்டும் கல்மனதாய் மறுத்து விட்டாள்.
``கரியா, இந்தச் சனியன் ஒட்டுவாரொட்டி. போ... அங்குன எட்ட நில்லு’’
அழுது அழுது கண்ணீர் வற்றிப்போனது இருவருக்கும்...
நூறு ரூபாய் பணத்தை ஜன்னலுக்குள் எறிந்தான்.
``ஏதுடே இவ்வளவு பணம்... லே கரியா, எங்குனயும் திருடுனியா?’’ பதறினாள். ``கரியா...கரியா’’ அதற்குள் அவன் கிளம்பிவிட்டான்.
கரியன் சந்தைத் திடலுக்கு வந்து சேரும்போது நேரம் பத்து மணியைத் தாண்டிவிட்டது. வெயில் உறைப்பு ஏறி இருந்தது. ஒரு மாடும் மனிதருமில்லாமல் சந்தை காலியாக இருந்தது. காலியான சந்தை இன்னும் பெரியதாய்த் தெரிந்தது. நேற்று இந்த இடம் எவ்வளவு இரைச்சலும் கரைச்சலுமாய் இருந்தது. ஒரு நிமிடம் அவன் காதுக்குள் மொத்த இரைச்சலும் வந்து போனது. முந்தைய நாளின் சந்தை நடந்ததன் அறிகுறியாய் உதிரி கூளங்களும் சாணமும், அறுத்துப் போட்ட மாட்டின் கழிவு கயிறுகளும் நிறைந்து கிடந்தன. எங்காவது கொம்பையா அல்லது மலையரசன் தட்டுப்படுகிறார்களாவெனத் தேடினான். இல்லை. கரியனுக்குப் பதற்றமாயிருந்தது. கொம்பையாவை ஒரு நிமிடத்தில் தொலைத்து விட்டோமோ என்று இருந்தது.
புங்கைமர நிழலுக்கு ஓடினான். அங்கு கொம்பையாவின், நாய் மல்லியின், வேறு சில கால்தடங்களும் கிடந்தன. கொம்பையா குடித்துப் போட்ட சுருட்டுத்துண்டுகள் நிறைய கிடந்தன.சந்தை முழுக்க மீண்டும் ஒரு முறை பார்வையை ஓட்டினான். தூரத்தில் ஒரு வயதான பெண் சாணி பொறுக்கிக் கொண்டிருந்தார். விரைந்து அந்தப் பெண்ணின் திசை நோக்கி நடந்தான். அருகில் வர வரத்தான் கவனித்தான். அந்தப் பெண்ணிற்குப் பார்வையில்லை. வாசனையில் சாணங்களைக் கண்டறிந்து அதன் அருகில் போய் தரையைத் தடவித்தடவி அள்ளி பிரம்புக் கூடையில் போட்டுக்கொண்டிருந்தாள். அவன் அருகில் போனபோது ``யார் அது?’’ என்று கேட்டாள்.
``கொம்பையாவ பாக்கணும்...’’
``எந்தக் கொம்பையா... சந்த கூட்டுறவரா...’’
``ம்’’
``யாருக்கோ ரெம்ப நேரமா காத்துகிட்டு இருந்துட்டு கொஞ்சம் முன்னாடிதான் மூணு நாலு சேக்காளிகளோட கிளம்பிப் போறாரு’’
``எவ்வளவு நேரம் இருக்கும்‘‘
``ஒரு மணி நேரம் தாண்டியிருக்காது. எட்டப் போனா பிடிச்சிறலாம்.’’
``எங்க போனாருன்னு தெரியுமா அம்மே?’’
``இல்லயே.’’
``அடுத்து எப்போ சந்த கூட்டுவாங்க?’’
``வாரவாரம் புதங்கிழமைக்குக்கூடும். ஆனா இனிமே அவர் கூட்ட மாட்டார். அவருக்குத்தான் கெடு முடிஞ்சிபோச்சில. இன்னும் ஒரு வருசத்துக்கு வேற ஆளுங்கதான் கூட்டுவாங்க. நாகையான்னு ஒருத்தரு வருஷ ஏலத்துக்கு எடுத்திருக்காங்க.
``அப்போ அவர் வர மாட்டாரா..?’’
``தெரியலயே... நாகையாவும் அவரும் கீரியும், பாம்பும்... வர மாட்டார்னுதான் நெனைக்கேன்’’
``மேற்க பெருஞ்சந்தனு ஊரு எங்க இருக்கு?’’
``பெருஞ்சந்தன்னா ஊர் பேரு இல்ல. பெரிய சந்த. திருநவேலி பக்கம் கயத்தாறு, நாகலாபுரம் சந்தயா இருக்கும்.’’
``ம்’’
``சீவலப்பேரியாக்கூட இருக்கலாம்.’’
``ம்’’
மூக்கை வேகவேகமாக ஆழ்ந்து உறிஞ்சினாள். ``யாரோ ரெண்டு ஆட்க வராங்க.’’
பின்னால் திரும்பிப் பார்த்தான். இரண்டு பேர் இவர்கள் இருக்கும் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
தூரத்தில் அவர்கள் வந்த வில் வண்டி நின்று கொண்டிருந்தது.
``எப்படி ரெண்டு பேருன்னு சொன்னீங்க.’’
``அதான் ரெண்டு வாசம் அடிக்குல. எட்ட எங்குனயோ காள மாடு நிக்கிதா..?’’
``ம்.’’
``அது வாசமும் அடிக்கி’’
அதற்குள் அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள். ``கொம்பையாவ எங்கயும் கண்டீகளா?’’
``நீங்க யாரு?’’
``வேண்டப்பட்டவங்கதான்.’’
``கொஞ்சம் முன்னதான்… ஒரு மணி நேரம் இருக்கும். கிளம்பிப் போறாரு. உங்களயும் வரச் சொல்லியிருந்தாரா?’’
``ம்’’
``எந்த திசைக்குப் போறேன்னு சொன்னாரு?’’
``பெருஞ்சந்தக்கிப் போறதா இந்தப் பிள்ளக்கிட்ட சொல்லிருக்காரு.’’
``ஓ... அங்குன போயிருக்காரா?’’
``பெருஞ்சந்தனா அது எந்த திசைக்கய்யா இருக்கு.’’
``மேலப்பாளயமாத்தான் இருக்கும். நாங்க கிளம்புறோம்.’’
``ஆகட்டும், கொஞ்சம் பொறுங்க. இந்தப் பிள்ளையும் அவரப் பாக்கத்தான் வந்துருக்கு. வண்டில ஏத்தி அவர்கிட்ட விட்ருங்க. நீ அவங்க கூட போப்பா...’’

கொஞ்சம் யோசிச்சி ``வரச் சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். அவர்கள் கொஞ்சம் தள்ளிப் போனதும் அந்த முதிய பெண் சேலை முந்தியிலிருந்து எடுத்து ``இது கொம்பையாவோடதுதானா பாரு...’’
அரைக்கட்டு யாழ்ப்பாண சுருட்டும், ஒரு ராணி தீப்பெட்டியும் இருந்தது.
``ஆமா’’
``ம்... குடுத்துரு.’’ வாங்கிக்கொண்டு அந்த வண்டி நோக்கி நடந்தான். அவன் ஏறிக்கொண்டதும் வண்டி கிளம்பியது. வில் வண்டியில் அவன் இப்போதுதான் முதன்முறையாக பிரயாணம் செய்கிறான். பார வண்டியில் பலமுறை போயிருக்கிறான். இந்த வில்வண்டி கம்பீரமாய், நேர்த்தியாய் இருந்தது. பெரிய பிரம்பால் வில் வளைத்து வரிசையாய் ஊன்றி குறுக்குக் கட்டை கொடுத்து மூங்கில் பின்னலால் வேய்ந்திருந்தார்கள். கீழே மாடு வாய் வைக்காத புது வைக்கோலைப் படப்பிலிருந்து உருவிக் கீழே பரப்பி வைத்திருந்தார்கள். மெத்மெத்தென இருந்தது. ஒருமுறை கரியன் அவன் அப்பாவோடு பாரவண்டியில் சென்றபோது கீழே பரப்பிக்கிடந்த வைக்கோலில் சாரைப் பாம்பொன்று இருந்திருக்கிறது. பின் வண்டியை நிறுத்தி, அதை அடித்தார்கள். கரியனுக்கு இப்போது வைக்கோலின் அடியில் இல்லாத ஒரு பாம்பு நெளிந்தது. அது வெறும் மனப்பாம்பு என்று நினைத்துவிட்டு வெளியே பார்த்தான்.
சந்தையை விட்டு நெடுந்தூரத்திற்கு வந்து விட்டது வண்டி. பாதை முழுக்க இரண்டு பக்கமும் ஒன்று ஒன்றாய் எண்களால் கரிக்கோடு போட்டதுபோல வரிசை வரிசையாய் கறுத்த பனைமரங்கள் நின்றுகொண்டிருந்தன. அதன் இடைவெளியில் தூரத்தில் ஏதோ ஒரு நடுத்தரமான ஊர் தெரிந்தது. அங்கு கொஞ்சம் ஓட்டுசாய்ப்பு வீடுகளும், பனை மற்றும் தென்னையோலை வீடுகள் கொஞ்சமும் தெரிந்தன. அவன் முகத்தில் சிறு சிறு நீர்ப் பொட்டுகள். சிணுசிணுத்துக்கிட்டு ஒரு சிறுபிள்ளை மழை பெய்யத் துவங்கியது. நீர் படாமல் வண்டியின் உள்ளே தள்ளி அமர்ந்தான். அப்போதுதான் பார்த்தான், வில் வளைத்த பிரம்பு கம்புகளின் இடை இடையே இரண்டு கனத்த கத்திகள் தோல் உறைக்குள் செருகப்பட்டு, பிடி மட்டும் வெளியே தெரியும்படி இருந்தன.
வண்டிக்குள் இருந்தவன் ஓட்டுபவரை நோக்கி ``இப்படிப் போனா எப்படி அவரப் பிடிக்குறது, வேகமாக போ’’ என்றான்.
ஓட்டுபவன் தாக்கயிற்றை வேகமாக அசைத்து ஹவ்...ஹவ் என்று மாட்டை விரட்டிப் பத்தினான்.
‘நீங்கள் யார்?’ எனக் கேட்கலாமாவென நினைத்தான். ஆனால் வாய் வரவில்லை.வார்த்தைகள் ஒட்டிக்கொண்டன.
‘`பயணத்தில் மட்டும்தான் உன்னை நீயே எதிரில் சந்திப்பாய்’’
-பராரிகள்
மகன் வழி (1977 - மழைக்காலம்)
யானை காளியை ஏற்றிக்கொண்டு நெல்லையப்பர் கோயில் நோக்கி லாரியைக் கிளப்பினார்கள். மாவுத்தனின் உதவியாளன் லாரி சரக்கு ஏற்றும் தொட்டியில் யானையின் அருகே நின்றுகொண்டான். யானைக்குக் கொஞ்சம் தென்னைமட்டைகள் வெட்டிப் போட்டிருந்தார்கள். ஓட்டுநர் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த மாவுத்தன் சிறிய மஞ்சள் வெளிச்சத்தின் ஊடே சூரவேலின் முகத்தை அடிக்கொருதரம் பார்த்தபடியே வந்தான். எங்கயோ பார்த்துப் பழக்கப்பட்ட முகம். தொண்டை வரைக்கும் ஏதோ ஒரு பெயர் வந்து வந்து வெளிவராமல் இடுக்கிக்கொண்டு நிற்கிறது... மனதிற்குள் வாழ்நாளெல்லாம் கண்ட அத்தனை ஆயிரம் முகங்களையும் மீண்டும் மீண்டும் வெளிக்கொணர்ந்து நினைவுபடுத்திப் பார்த்தார். சிக்கவில்லை. அவனிடமே கேட்டுவிடலாமா என்றுகூட நினைத்தார். அவர் பார்ப்பதால் சூரவேலும் அவரைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவனுக்கு கே.சி.மர டிப்போகாரருக்குத் தொடர்புடை யவர்களாக இருக்குமோ என்று பயம். ஒரு கட்டத்தில் அவனிடமே கேட்டுவிட்டார்.
``நீ...’’
``நான் சூரவேல்... செங்கல் சூளைல எதாவது வேல கிடைக்குமான்னு தேடிப் போறேன்.’’
அவன் உடலெல்லாம் பல ஆண்டுகள் ஓட்டுக் கம்பேனியில் வேலை பார்த்த செந்நிறம் விரவிக் கிடப்பதால் நம்பினார்கள். மாவுத்தனுக்கு இன்னும் அரை மனதாய் இருந்தது. அதிகாலை நான்கு மணியை நெருக்கியிருக்கும். லாரி திருநெல்வேலி அருகே வந்துவிட்டது. தூரத்தில் நிற நிறமான மின்விளக்கு வெளிச்சத்தில் நெல்லையப்பர் கோயில் மினுங்கியது. கொஞ்சம் தள்ளி வாகனத்தை ஒரு மேட்டின் கீழ் நிறுத்தி யானையை இறக்கினார்கள்.

``ரெம்ப நன்றி. நான் கிளம்பட்டுமா?’’ என சூரவேல் கேட்டான். ``கொஞ்ச நேரம் இரு விடிந்ததும் போகலாம்.’’ அப்போதுதான் மாவுத்தன் கவனித்தார். அவன் உடலின் குறுக்கிடையாக கொக்கரை தொங்கிக்கொண்டிருந்தது. ``இது ஒரு வாத்தியம்தான’’ அதைத் தொட்டுப் பார்த்தபடி கேட்டார்.
``ம்...’’
நீர் படாமல் வண்டியின் உள்ளே தள்ளி அமர்ந்தான். அப்போதுதான் பார்த்தான், வில் வளைத்த பிரம்பு கம்புகளின் இடை இடையே இரண்டு கனத்த கத்திகள் தோல் உறைக்குள் செருகப்பட்டு, பிடி மட்டும் வெளியே தெரியும்படி இருந்தன.
யானையைக் குளியூட்ட தாமிரபரணி ஆற்றின் கரைக்கு அழைத்துப் போனார்கள். மாவுத்தனும், அவன் உதவியாளனும் யானையை, வைக்கோலை மடித்து வைத்துத் தேய்த்துக் கழுவினார்கள். அவ்வளவு பெரிய யானை மாவுத்தன் சொல் கேட்டு நடந்துகொள்வது சூரனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. நீரில் ஒருக்களித்துப் படுத்தபடி தன் உடலைத் தேய்க்கக் கொடுக்கும் யானையைப் பார்த்தபடி நின்றான். மாவுத்தன் சூரவேலின் கையிலும் கொஞ்சம் வைக்கோலை மடித்து நீருக்குள் முக்கி ஈரமாக்கிக் கொடுத்து “நீயும் போய் தேய்த்துவிடு” என்றார். அவனுக்குக் கைநடுக்கமாய் இருந்தது. மாவுத்தனின் உதவியாளன் ``அழுத்தித் தேச்சிட்டா ஆனை கரைஞ்சிடும் பாத்துக்கோ’’ என்று சொல்லிவிட்டு அவனே சிரித்துக்கொண்டான். சூரவேல் தேய்க்க அருகே வரும்போது யானை முதுகை உந்தி எழுந்து நின்றது. இப்போது சூரவேல் யானையின் பின்னங்காலின் அருகே நின்றுகொண்டிருந்தான். அவனும் ஆற்றில் முங்கிக் குளித்து முடித்து, தன் அழுக்கு உடைகளை அலசி அதையே மீண்டும் கட்டிக்கொண்டான்.
விடியத் துவங்கியது. யானைக்கு முகபடாம், அதன் முதுகில் புதிய விரிப்புத் துணி, உடலில் அங்கங்கே திருநீற்றால் கோடுகள். மேலும் பொலிவாக்கினார்கள். சூரவேல் அவர்கள் கேட்கும் பொருள்களை எடுத்துத் தர சிறிய சிறிய உதவிகள் செய்தான். பொழுது நன்கு விடியத் துவங்கியது. யானையை அழைத்துக்கொண்டு கோயில் வாசல் நோக்கிப் போனார்கள். லாரி ஓட்டுநரும் அவர் உதவியாளரும் ``விசேஷம் முடிச்சிட்டுக் கூப்பிடு’’ என்று சொல்லி விட்டு தம் லாரியை நோக்கிச் சென்றார்கள். சூரவேல் யானையோடு உடன் போனான்.
கோயில் வாசலில் ஆயிரக்கணக்கில் மனிதர்கள் நன்றாக உடுத்தி ஆண்களும் பெண்களுமாய் நின்றுகொண்டி ருந்தார்கள் யானை வரவும் மங்கள வாத்தியம் இசைத்து அதை வரவேற்றார்கள். சிறு குழந்தைகள் யானையை ஆச்சர்யம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோயில் நிர்வாகத்தார் யானைக்கு மூன்று தார் பழுத்த வாழைப் பழங்களை ஊட்டச் சொல்லித் தந்துவிட்டுப் போனார்கள். மாவுத்தனிடம் ஏதோ சொல்ல அவன் மூன்று பேர் என்று சொன்னான். நிர்வாகி யாருக்கோ மூன்று விரலை உயர்த்திக் காட்டியதும் ஒரு தட்டில் வைத்து மூன்று வெள்ளை வேஷ்டியும், துண்டும் வைத்து எடுத்து வந்தார்கள். மாவுத்தன் அவர்களிடம் கும்பிட்டு வாங்கிக் கொண்டான்.
``இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி புறப்பாடு ஆரம்பிச்சிடும். அதுக்குள்ள சாப்பிட்டுப் புதுசு மாத்திட்டு வந்திடுங்க.’’
மாவுத்தன் தன் உதவி யாளனை யானைக்கு நிறுத்திவிட்டு சூரனை சாப்பிட அழைத்துக் கொண்டு போனான். நேற்றுக் காலையில் சாப்பிட்டது. சூரனுக்குப் பேய்ப் பசி பசித்தது. அவர்கள் போடப்போட தடுக்காமல் வாங்கி சாப்பிட்டான். ``எங்கிட்டே வேலைக்கி வந்திடுறியா’’ சூரவேல் சம்மதம் என்று செல்வது போல் தலையை ஆட்டினான்.
சாப்பிட்டு முடிந்ததும் மாவுத்தன் புது வேஷ்டியையும் துண்டையையும் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொன்னான். அதன்படியே அகன்ற மரத்தின் மறைவுக்குப் போய்க் கட்டிக்கொண்டு வந்தான். குறுக்கிடையாக கொக்கரையும் தொங்கியது. இருவரும் கிளம்பி, கோயில் வாசலுக்குப் போனார்கள்.

மாவுத்தன் உதவியாளனை சாப்பிட அனுப்பினான். மாவுத்தன் யானையைத் தடவிக் கொடுத்தபடியே ஏதோ கட்டளையிட்டான். அது முன்னங்காலை மடக்கி, தன்மேல் ஏற வழி சொன்னது. மாவுத்தன் சூரனை யானையின் மேல் ஏறி அமரச் சொன்னான். சூரன் சந்தோஷத்தோடும் மெல்லிய பதற்றத்தோடும் யானையின் மேல் ஏறி அமர்ந்தான். சிறிது நேரத்தில் பதற்றம் விலகி சந்தோஷம் மட்டுமே இருந்தது. மனிதர்கள் சூழ அந்தப் பெருங்கூட்டத்தில் ஒரு இளவரசனைப் போல் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. உணர்ச்சிப் பெருக்கில் தன்னையறியாமல் தன் கொக்கரையை எடுத்து ஊதத் துவங்கினான். `பாங்ங்ங்ங்ங்ங்...’ மொத்தக் கூட்டமும் திரும்பி யானையின் மேல் பார்த்தது. எங்கிருந்தோ மங்கள வாத்தியம் இசைப்பவர்கள் எதிர்க்குரல் கொடுப்பதுபோல் இசைக்கத் துவங்கினார்கள். யானைக்குப் பெரிய மாலையைக் கொண்டு வந்து அணிவிக்கச் செய்தார்கள். யானையைக் கோயில் பிராகாரத்திற்குள் சாமியை சுமக்க அழைத்தார்கள். மாவுத்தன் இப்போது அவனைக் கீழே இறங்கச் சொல்லி, தான் மேலே ஏறி அமர்ந்து செலுத்தினான். மங்கள வாத்தியங்கள் இசைக்க அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவுருவத்தை யானையின் மேல் ஏற்றி வைத்தார்கள். யானையின் மேல் அமர்ந்தவாறு மாவுத்தன் மொத்தக் கூட்டத்தையும் பார்த்தான். தூரத்தில் சூரன் தனியே தூரமாய்ப் போய், பரவசத்தோடு கண்கள் மூடி மொத்தக் கோயிலையும் கரங்களைக் கூப்பிக் கும்பிட்டுக்கொண்டிருந்தான். ஒரு புதிய வாழ்வு ஆரம்பிப்பது மிக நன்றாக அவனுக்குத் தெரிந்தது. அவனருகில் பெரிய மாகாளை சிலை இருந்தது. யாரோ ஒருவர் தள்ள, தடுமாறி முழங்கால் போட்டு கல் தரையில் உட்கார்ந்தான். அந்த நிமிடம் மாவுத்தனுக்கு சட்டெனக் கைகள் கட்டப்பட்டு சித்திரை ராமனின் துப்பாக்கி முன் முழங்காலிட்டபடி நிற்கும் கரியனின் முகம் வந்து சென்றது.
அதே முகம்.
மாவுத்தன் கத்தினான். ``ஏ... கரியா...’’
- ஓடும்