
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`பயணத்தில் உன் தகப்பனின் பழைய காலடியைக் கண்டால் அதிலிருந்து விலகி நட.
முடிந்தால் சுவடுகள் இல்லாமல் நடக்கப் பழகு. நீருக்குள் நடப்பதுபோல.’’ - பராரிகள்
தந்தை வழி (1951 - முன்பனிக்காலம் )
வில்வண்டியில் செருகியிருந்த இரண்டு கத்திகளைப் பார்த்ததும் கரியன் அவர்கள் யாரெனக் கேட்கலாமாவென வாயெடுத்து, பின் கேட்க வேண்டாமென அமைதியானான். முரட்டு உருவமும் அவர்கள் கண்களில் தெரியும் ஆவேசமும் அவர்களைப் பார்க்கையில் கொம்பையாவுக்கு ஏதும் கேடு விளைவிப்பவர்கள் போலவே தோன்றிக்கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் நிச்சயம் கேட்டுவிட வேண்டுமெனத் தீர்மானித்து,
``நீங்க ஏன் கொம்பையாவத் தேடுறிங்க...'' அவன் மெலிந்த வார்த்தை தொண்டையைத் தாண்டிச் செல்லவில்லை. கொஞ்சம் செறுமியபடி ``நீங்க...''
அதற்குள் வண்டிக்குள்ளிருந்தவன்,
``ஏ... அங்குன நிக்கிறது உப்புத்தூரார்தான?'' குனிந்து பார்த்தபடி கேட்டான்.
``ஆமா அவராட்டம்தான் தெரியுது.''
இரண்டு பர்லாங் தூரத்தில் நின்று கொண்டிருந்தவர் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து நான்தான் என்பதுபோல அசைத்துக் காட்டினார்.

வண்டிக்காரன் அவர் அருகில் போய் ஓவ்...ஓவ்... ஓவ்வென்று குரல் கொடுத்தபடியே தாக்கயிற்றை இழுத்து நிறுத்தி அவரைக் கும்பிட்டான்.
உப்புத்தூராருக்கு நாற்பது வயதிருக்கும். மெலிந்து இறுக்கமான உடல். கால்களிலும் கைகளிலும் நரம்புகள், இலைகள் உதிர்ந்த வெற்றிலைக்கொடிபோல முறுக்கி முறுக்கி ஓடின. இரண்டு புறமும் எலுமிச்சை குத்தி வைக்கலாம் என்பதுபோல திருகிவிடப்பட்ட கூர்மீசை. கரங்களில் வைத்து ஆட்டிய அதே நீண்ட மேல் துண்டை தோளில் ஒரு பக்கமாகப் போட்டிருந்தார். அதில் பாதி மறைந்து கழுத்தில் கனத்த பொன்சங்கிலி தொப்புள்் குழிவரை தொங்கிக்கொண்டிருந்தது.
அவரின் ரேக்ளா வண்டி கொஞ்சம் பாதையிலிருந்து உள்ளடங்கி நின்றுகொண்டிருந்தது. மேல்கூரையில்லாத ஒரு மனிதர் மட்டும் அமரும்படியான பந்தய வண்டி அது. அவரைப்போலவே மெலிந்து உறுதியாய் இருந்தது. அதில் ஒரு ஓரத்தில் சாட்டைக் கம்பைச் செருகி வைத்திருந்தார். சாட்டைக் கம்பில் மஞ்சள் பச்சை சிகப்பென நிறநிறமாய் கனத்த நூல் சுற்றப்பட்டு மூன்று குஞ்சமும் இருந்தது. நுனியில் சாட்டை வழிந்து தொங்கிக்கொண்டிருந்தது.
இரண்டுமே நல்ல ஓட்டங்காளைகள். நெஞ்சுப் பகுதி அகன்று முகக்களையுடன் இருந்தது. தீவனமும் தண்ணீரும் தாட்டியமாய்க் காட்டி வளர்த்திருக்க வேண்டும். காளைகள் ஒரு பொழுதுக்கும் சும்மா இல்லாமல் பறப்போமா, குதிப்போமாவென்று இருந்தது.
எடுத்த எடுப்பிலேயே அவர்களைக் கடிந்து கொண்டார்.
``ஏம்பிலே, எவ்வளவு நேரம் காத்துக் கிடக்க. ஆளப் பத்தி ஏதும் தாக்கல் கிடச்சதா?''
வண்டிக்குள்ளிருந்தவன் இறங்கிப் போய் ``மச்சான் நீரு சொன்னது சரிதான். அந்தாளு மேலப்பாளையம் சந்தைக்குத்தான் கிளம்பிருக்காரு. தாமசிக்காமப் போனா பிடிச்சிரலாம்.’’
கரியன் அப்போதுதான் பார்த்தான். ரேக்ளா வண்டியின் உட்காரும் பலகையையும், நுகத்தையும் இணைக்கும் நீளமான கட்டையில் குத்தீட்டி ஒன்றைச் செருகி வைத்திருந்தார். பிடித்துப் பிடித்து கறுத்துப் பளபளவென எண்ணெய் தடவியதுபோலிருக்கும் நீண்ட கம்பின் நுனியில் நல்ல வெண்ணிரும்பில் கூர்மையாய்ப் பதம்பிடிக்கப்பட்டு யாரைக் கொல்வோமென இருந்தது அந்தக் குத்தீட்டி.
கரியன் வண்டிக்குள் அமர்ந்திருப்பதை அவர் பார்க்கவில்லை.

ஒரு துள்ளலுடன் ரேக்ளா வண்டியில் குதித்து ஏறி உட்கார்ந்தார். இரண்டு வண்டிகளும் அந்த மண்சாலையில் புழுதி பறக்க வேகம் எடுத்தன. உப்புத்தூராரின் மாடுகள் தரையில் கால் பதித்து ஓடுவதுபோலவே இல்லை. கிட்டத்தட்ட பறந்தன. வில்வண்டியும் அதற்கு ஈடுகொடுத்து, பத்திருபது அடி இடைவெளியில் தொடர்ந்தது. கரியன் வில்வண்டியின் கட்டைகளை இறுக்கப் பிடித்துக்கொண்டான்.
வண்டிகள் பணக்குடியை நெருங்கும் வரை பத்து மைலுக்கும் மேல் உன்னை முந்தவா, என்னை முந்தவா என்று விரட்டி வந்தன. பின் வில் வண்டி மாடுகள் தவங்கிப் பின்தங்க ஆரம்பித்தன. உப்புத்தூரார் வண்டி தூரமாய் ஒரு புள்ளியாய்ச் சென்று மறைந்தது. அவர் எப்படியும் பணக்குடியைத் தாண்டி வண்டிப்பேட்டையில்தான் நிற்பார்.வண்டிப்பேட்டையில் எப்படியும் முப்பது நாற்பது வண்டிக்கும் மேல் நிற்க இடம் உண்டு. மாட்டுக்குத் தீவனமும் பருத்திக்கொட்டையும் நல்ல தண்ணீரும்கூடக் கிடைக்கும். வண்டிக்காரர்கள், யாவாரிகள், கட்டுச்சோறு உண்ணவும் அங்கு நிறுத்துவார்கள். நினைத்தது போலவே உப்புத்தூராரின் வண்டி அங்குதான் நின்றுகொண்டிருந்தது. மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தார். வெற்றிலைச் சக்கையைத் துப்பிவிட்டு சிவந்த வாயை அதே நீரில் கொப்புளித்துக் கழுவினார். கையில் நீரள்ளிக் கழுத்தாம்பட்டையையும் முகத்தையும் கழுவினார்.
வில் வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள். கரியன் சிறுநீர் கழிக்க மறைவுக்குச் சென்றான். மாட்டுக்கு நீர் காட்ட வண்டிக்காரன் அழைத்துப் போனான். எதிர்ப்பட்ட வண்டிக்காரனிடம்,
``என்னலே மாடு பத்துத, வேகம் இல்ல... சீக்கிரம் தண்ணிகாட்டிட்டு வா. உடனைக்கே கிளம்பணும்.’'
``ம்...'' வண்டிக்காரன் அவ்வளவுதான் பேசினான். பந்தய வண்டிக்கும், வில்லு வண்டிக்கும் தோதுபோடுறாரே மனுஷன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
வண்டிக்குள் உட்கார்ந்தி ருந்தவன் அங்கு யாரிடமோ பேசிக் கொண்டி ருந்தான். உப்புத்தூரார் அவனைக் கையசைத்து அழைத்தார். ``என்ன மாப்ள விசாரிச்சியா?''
``ஆமா மச்சான். தீவனக்கடைல விசாரிச்சேன். இப்போம் கொஞ்சம் முன்னாடிதான் இங்குன இருந்திட்டுப் போயிருக்கார். ஒரு மணி நேரத்துக்குள்ளதான் இருக்கும். கருங்குளத்துல இருந்து ஆறேழு வண்டிக்காரங்க வந்திருக்காங்க. அவங்ககூட பழக்கம் பேசிக்கிட்டு அவங்க பிரிச்ச கட்டுச்சோத்துல ரெண்டு வாய் சேந்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காரு.''
``கடைசிச் சோறு கருங்குளத்துக்காரங்ககிட்ட வாங்கிச் சாப்பிடணும்னு இருந்திருக்கு. சாவு அவருக்குப் பக்கத்துல வந்துருச்சிலே. வெரசாக் கிளம்பணும்.’’
``நீ வண்டியக் கட்டு. நான் ஒரு எட்டுப் போய் தோப்பு கருப்பர கும்பிட்டுட்டு வந்திடுறேன்.''
வண்டியிலிருந்து தன் குத்தீட்டியை உருவிக்கொண்டு ஒரு எட்டை நாலெட்டாய்ப் போட்டு நடந்தார்.
``வண்டியக் கட்டு. மச்சான்கூட நானும் கோயிலுக்குப் போயிட்டு வந்திடுறேன். ரெண்டு நிமிச நடதான். வேகமா வந்துடுறோம்'' வண்டிக்காரனிடம் கட்டளையிட்டுவிட்டு அவர் போன திசைக்குப் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய்ப் போனான்.
கரியன் சிறுநீர் கழித்துவிட்டு வந்து வண்டிக்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் கல் தொட்டியின் அருகில் மாடும், வண்டிக்காரனும் நின்றுகொண்டி ருந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் கொம்பையாவை விசாரித்தான். அவர்கள் ஏற்கெனவே அவனிடம் சொன்னது போலவே கரியனுக்கும் சொன்னார்கள். ``இப்போதான் கிளம்பிப் போறாரு. ஏதும் காரியமா. உப்பத்தூரார் மச்சானும் விசாரிச்சார் '' கரியனுக்கு இப்போது எப்படியும் கொம்பையாவிடம் சேர்ந்து விடுவோமென நிம்மதியாயிருந்தது. இவர்கள் ஏன் இவ்வளவு தீவிரமாய் கொம்பையாவைத் தேடுகிறார்கள். அவர்கள் தீவிரத்தைப் பார்க்கையில் கரியனுக்கு அச்சமாயிருந்தது. கரியன் சந்தேகத்தோடு அங்கிருந்து கிளம்பி கல்தொட்டிக்குப் போய் நீர் குடித்தான்.
தோப்பு கருப்பர் கோயில் வாழைத் தோப்பிற்குள் நடுவே இருந்தது. கருப்பு அருவாளை உயர்த்திப் பிடித்தபடி நாக்கைத் துருத்திக் கொண்டு நின்றுகொண்டிருந்தார். வலதும் இடதுமாய் ஒரு வேட்டை நாயும், வெள்ளைக் குதிரையும் சிலை எடுத்து நின்றன. உப்புத்தூரார் குத்தீட்டியைக் கருப்பர் முன் கிடத்திக் கும்பிட்டுவிட்டு, மண் எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு குத்தீட்டிக்கும் பூசி விட்டார்.
வழியில் சொன்னார், ``மாப்ள எனக்குக் குடிக்கணும்லே.’’
``கள்ளுக்கு பனங்காட்டுக்கு விடவா?’’
``வேண்டாம். வடலி காட்டுக்குள்ள கருப்பூர்காரன் புதுசா ஊறல் போட்ருக்கானாம். அங்குன போகலாம்.''
``ம்''
அவர்கள் வரும்போது வண்டிக்காரன் இரண்டு வண்டியையும் தயாராய் நிறுத்தியிருந்தான்.
உப்புத்தூரார் குத்தீட்டியை வண்டிக் கட்டையில் செருகிவிட்டு சாட்டையைக் கையில் எடுத்துக்கொண்டார்.
வண்டியில் ஏறும்போதுதான் உப்புத்தூரார் மச்சான் கவனித்தான். கரியனைப் பார்த்து “உச்...நீ இருக்கில்ல, மறந்துட்டேன். நீ இங்குன இறங்கிக்கோ. நாங்க வேற திசைக்குப் போறோம். வேற வண்டிக்காரங்க வருவாங்க. அவங்ககூட போயி இறங்கிக்கோ.''
கரியன் ``நீங்க கொம்பையாவத் தேடித்தான் போறீங்க, எனக்குத் தெரியும். நானும் வரேன்.’’
``ஏ...'' உப்புத்தூரார் மச்சான் எரிச்சலானான். இன்னும் நகராத வண்டியைப் பார்த்து உப்புத்தூரார் கத்தினார்.
``என்னலே?''
``இந்தா கிளம்பியாச்சு மச்சான்.''
கரியனைப் பார்த்து ``வண்டிய விட்டுக் கீழ இறங்கிறாத சொல்லிட்டேன்'' என்று எச்சரித்தபடி முறைத்தான்.
வண்டி மீண்டும் புழுதிபறக்கக் கிளம்பியது.ராஜலிங்கபுரம் தாண்டி அகன்ற செம்மண் சாலை துவங்கியது. அகன்ற சாலையிலிருந்து கிளை பிரிந்து பாம்பின் நாக்கைப்போல் இரண்டு பாதைகள். ஒன்று ஊருக்குள்ளும், மற்றொன்று ஓடைப்பாதைக்கும் சென்றது. நீரில்லாத ஓடைக்குள் இறங்கி எருக்கஞ்செடிகள் சூழ்ந்த ஓரிடத்தில் ஆறேழு வண்டிகள் சாராயம் குடிக்க நின்று கொண்டிருந்தன. உப்புத்தூராரைக் கண்டதும் நிறைய பேர் கும்பிட்டு மரியாதை செய்தார்கள். அவருக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. குடித்துவிட்டு விரைந்து போய் கொம்பையாவைக் குத்தீட்டியால் குத்திக் கொல்ல வேண்டும்.
கருப்பூர்காரன் பித்தளை லோட்டாவில் கொண்டு வந்து சாராயத்தைக் கொடுத்தான். ஒரே மூச்சில் குடித்துவிட்டு கண்களை இறுக்கமாய் மூடிவிட்டு முகத்தைச் சுளித்தபடி தலையைக் குலுக்கினார். ஓரிரு நிமிடத்தில் நான்கு லோட்டா குடித்துவிட்டார். உப்புத்தூரார் மச்சானும், வண்டிக்காரனும் இரண்டாவது லோட்டாவைக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
சிகரெட் டப்பாவை எடுத்து ஒன்றைப் பற்ற வைத்தார். இரண்டு உறிஞ்சலுக்குப் பின் திடீரெனத் தலையை உலுப்பி, ``இன்னிக்கி கொம்பையா என் கையால சாகுறாண்டா.சாகுறான்... சாகுறான்'' வெறிபிடித்தவர்போல் கத்தினார்.
கொஞ்சம் தூரமாய்க் குடித்துக்கொண்டிருந்த கிழவர், உப்புத்தூரார் அருகில் வந்தார். ``நானும் வேணும்னா உங்ககூட வரட்டா. எனக்கும் அந்த ஆளுகிட்ட பக உண்டு. என்ன தரகு பாக்க எந்தச் சந்தைக்குள்ளயும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டான் அந்த நாரப் பய. யேவாரம்னாலே பொய் சொல்றதுதான... நானும் வரேன்.என்கிட்டயும் ஒரு சூரிக்கத்தி இருக்கு. கூட வரவா?''
உப்புத்தூரார் அவனை சீக்குப்பிடித்த நாயைப் போலப் பார்த்தார்.
``அவரப் பாத்திருக்கீகளா. ஆளு நல்ல காட்டுவெள்ளாம மாதிரி. நல்ல ஓங்குதாங்கு. உடம்புல கத்திகூட இறங்காது.''
``இந்தா என் கத்தி. துருப்பிடிச்சிப் போச்சி. இடுப்பிலிருந்து கத்தி கீழே விழுந்தது. அந்தாள நீங்க கொல்லுங்க. நான் உங்களுக்கு ஒரு லோட்டா சாராயம் வாங்கித் தரவா?''
உப்புத்தூரார் கிழவரை எட்டி உதைக்க, தடுமாறிக் கீழே விழுந்தார்.
``கிழட்டுக்குடிகாரப்பயலே, நாங்கென்ன கூலிக்கு ஆளு வெட்றவனாலே?''
``ஏலே மாப்ள, ஏழு மனுஷன் ஒரே உடம்புக்குள்ள ஏறி உக்காந்துகிட்ட மாதிரி இருக்கு. ஏழு மனுஷனின் மூர்க்கமும்தான். நான் கிளம்பி முன்ன போறேன். நான் மட்டுமே போய் அந்தாள முடிக்கப் போறேன்.''
``இரும், நானும் வாறேன்.’’
கரியன் இது எல்லாவற்றையும் வண்டியின் அருகில் நின்று பார்த்தபடியிருந்தான்.
உப்புத்தூரார் இப்போதுதான் கரியனைக் கூர்ந்து கவனிக்கிறார். ``யார்வே இது?''
உப்புத்தூரார் மச்சான் எழுந்து வந்தான். ``இவனும் கொம்பையாவத் தேடித்தான் வந்தான்.’’
``ஏன் இவனுக்கும் அந்தாளு பகையா?’’
‘`அந்தாளு எனக்கு அப்பனப்போல...’’ கரியன் முதன்முதலாக உப்புத்தூராரிடம் பேசினான்.
உப்புத்தூரார் சிறிது நேரத்திற்குப் பின் தொண்டையைக் கனைத்துக்கொண்டு இரண்டு விரல்களில் மீசையைத் தடவிக்கொண்டே ``அவர் இன்னிக்கி செத்துடுவார். நீ இங்கயிருந்து கிளம்பிப் போடே...’’ விரட்டினார்.
உப்புத்தூரார் வண்டியிலிருந்து குத்தீட்டியை உருவிக் கையிலெடுத்தார். ``இதாலதான் செருகிக் குடல எடுக்கப் போறேன். நீ உன் வீட்டுக்குப் போ.''
அவன் தோளைப் பிடித்துத் தள்ளினார். கரியன் நகரவேயில்லை.
``அவருக்கு நீதின்னு தெரியுறது அடுத்தவனுக்கு அநீதியா தெரியுதுல... புரியுதா?''
``நான் இல்லாட்டியும் அவர வேற எவனாவது கொல்லுவான். அவருக்கு எட்டுத்திசைக்கும் பகையிருக்கு.''
``போ... எங்கயாவது ஓடு... அவர்கூட இருந்தா நீயும் வீணா சாவ.''
அவன் நகராமல் நின்றான்.
``எங்கிருந்தலே வாறீக. சாகுறதுக்கு, அருவாளுக்கும் குத்தீட்டிக்கும் ரெத்தம் குடுக்குறேன்னு...''
``போ... எங்கயாவது போயி பொழச்சிக்கோ'' கரியன் பிடிவாதமாய் நின்றான்.
``வா... அந்தாளு சாகுறத பாக்கணும் அதான. ஏலே இவன வண்டில ஏத்து’’ உப்புத்தூரார் கோபமாய்க் கத்தினார். கரியனையும் ஏற்றிக் கொண்டு இரண்டு வண்டிகளும் கிளம்பியது.
உப்புத்தூரார் ஒரு கையில் குத்தீட்டியையும் மறு கையில் பிடிகயிற்றையும் பிடித்தவாறு வண்டியை விரட்டினார்.
வழியெல்லாம் அங்கங்கே ஒவ்வொரு சிறுசிறு ஊர்களிலிருந்தும் சந்தைக்குச் செல்லும் யாவாரிகளும், மாட்டு மந்தைகளும் வந்து சாலைகளில் இணைந்தார்கள். இரண்டு வண்டிகளும் ஓரம் போகச் சொல்லிக் கத்தியபடியே எல்லா வண்டிகளையும் கடந்து முன் சென்றார்கள். நாங்குநேரி பெரிய கண்மாய்க் கரைக்கு வருகையில் அவருக்கு முன் நிறைய வண்டிகளும், மாட்டு மந்தைகளும் சென்றன. கண்மாய்ப் பாதை முழுக்க எந்த வண்டியும் ஒரு வண்டியைத் தாண்டிச் செல்ல முடியாமல் ஒற்றை வண்டிப் பாதையாய்ச் சுருங்கிக் கிடந்தது. வேறு பாதையும் இல்லை. கண்மாய்க் கரையெல்லாம் வரிசையாய்ப் பனை நின்றது. உப்புத்தூராருக்கு எரிச்சலாய் இருந்தது. பள்ளத்துக்குள் இறங்கிப் போகலாமாவெனப் பார்த்தார். கண்மாயின் இடது பள்ளம் முழுக்க நீரும் வலது பள்ளம் முழுக்கக் கள்ளியும் கருவேலமும் அடர்ந்து வளர்ந்து கிடந்தன.திரும்பி வில் வண்டி வருகிறதாவெனப் பார்த்தார். அவருக்கு இரண்டு வண்டிகளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தது. முன்செல்லும் வண்டிக்காரரிடம் கேட்டார். ``சந்த கொம்பையாவ பாத்தீரா?''
``அந்தா முன்னால போறாரு பாருங்க.’’
வண்டியின் மேல் எழுந்து நின்று பார்த்தார்.
பெரிய வட்டமான கண்மாயைச் சுற்றி வண்டிகள் அரைவட்டமாய்ச் சென்று கொண்டிருந்தன. எல்லா வண்டிகளுக்கும் முன்னால் நூற்றுக்கணக்கில் கறுத்த எருதுகள் கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்தன. எருதுகளை வழிநடத்திச் செல்லும் தலைவனைப்போல் அந்த ஆகிருதியான கறுத்த உருவம் யாழ்ப்பாணச் சுருட்டைப் புகைத்தபடி சிவனைப்போல் நடந்து போய்க்கொண்டிருந்தது.
உப்புத்தூரார் வெறிகொண்டு கத்தினார். ‘`ஏய், கொம்பையா...’’
கரியன் வண்டியின் வெளியே குதித்தான். உப்புத்தூரார் குத்தீட்டியை ஓங்கியபடி வண்டியிலிருந்து குதித்துக் கண்மாய் நீருக்குள் இறங்கிக் குறுக்கு வழியில் ஓடினார்.
மகன் வழி (1977 - மழைக்காலம்)

‘`பயணத்தில் நீ தனியாக நட.
உன் நிழலையும்கூட உடன் அழைத்துப் போகாதே.’’
– பராரிகள்
யானையில் அமர்ந்தவாறு தன் தகப்பனின் பெயரை உச்சரித்து அழைத்த மாவுத்தனை சூரவேல் ஆச்சரியம் பொங்கப் பார்த்தான். சுவாமியின் திருவுருவத்தை வாங்கிக்கொண்டு ஊர்வலம் சென்ற மாவுத்தனை அவன் பின்தொடர்ந்தான். மாவுத்தனும் யானையில் அமர்ந்தவாறு அடிக்கொரு முறை திரும்பி சூரன் தொடர்ந்து வருகிறானாவெனப் பார்த்தான். சூரவேல் மெல்ல நகர்ந்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய் யானையின் காலடிகூடவே வரத் துவங்கினான். மாவுத்தன் யானையின்மேல் அமர்ந்தவாறு குனிந்து சூரனைப் பார்த்தபடி அப்படியே அவன் அப்பனைப்போல முகமும் தேகமும் என்று நினைத்துக் கொண்டான்.
ஊர்வலம் முடிந்து சுவாமி திருவுருவத்தைக் இறக்கி வைத்துவிட்டு மாவுத்தன் யானையிலிருந்து கீழே இறங்கினான். உதவியாளனிடம் யானையைப் பார்த்திருக்கச் சொல்லிவிட்டு சூரவேலின் கரங்களைப் பிடித்துக்கொண்டு போய் மண்டபத்திற்குப் போய் அமர்ந்தான்.
``கரியன் மகனா நீ?’’
``ஆமா. என் அப்பாவத் தெரியுமா உங்களுக்கு?''
``வண்டில வாறப்போ உன் அப்பா கதயத்தான சொல்லிக்கிட்டு வந்தேன். கவனிக்கலயா?''
இல்லை என்பதுபோல் தலையாட்டினான்.
``உன் அப்பன பாத்தப்போ இருந்த அதே உருவம். அதே உடம்பு, அதே வயசு. நீ மறிச்சி ஏறுனப்பதிலிருந்து இந்தப் பயல எங்கயோ பாத்திருக்கோம்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன் சரியாத்தான் போச்சி. கரியன் இப்போ என்ன பண்ணுதான்?''
``ஆளு இப்போ உசுரோட இல்ல'' அவன் அப்பன் கதையை விரித்துச் சொல்லச் சொல்ல நெற்றி சுருங்க கேட்டுக்கொண்டே வந்தார்.
``இத்தன வருஷம் ஆச்சி. இன்னும் சித்திரை ராமனுக்கு உன் அப்பாமேல கோபமும் ஆத்திரமும் தீரல. அவருக்குப் பழசெல்லாம் ஞாபகம் இல்லாம நினைவு அழிஞ்சிபோச்சி. ஆனா எப்பவாது தொழுவத்த பாக்குறப்போ ஞாபகம் வந்து உறுமுவாறு. துப்பாக்கிய கையில எடுத்துக்கிட்டு இப்போவே அவன தீக்கணும்னு சொல்லி உறுமுவாறு. அவரு மனசுல அடிபட்டவரு. அப்படித்தான் இருக்கும்.
இந்த ஆனை அவரோடதுதான். நீ என்கிட்டே வேலைக்கி சேர்றது சரியா வராது. என்னைக்கி இருந்தாலும் உன் உருவத்த பாக்கையில அவருக்குத் தோணிரும்.
இன்னொரு விஷயம், நீ இங்க இருக்குறதுகூட நல்லதில்ல. நீ நிறுத்தி ஏறுனீயே அதுகூட கே.சி.மர டிப்போக்காரர் வண்டிதான். அந்த டிரைவருக்கு முதலாளி பொண்ணு விஷயம் இன்னும் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சா உன்னத் தொலைச்சிடுவான். இங்க இருந்து கிளம்பிப் போய்டு.’’

சூரனுக்கு மாவுத்தன் சொல்வது சரியெனப்பட்டது. ``செரி நான் கிளம்புறேன்.''
பேசிக்கொண்டிருக்கும்போதே மாவுத்தனின் உதவியாளன் மதிய உணவுக்கு சாப்பிட அழைக்கிறார்கள் என்று சொன்னான். ``நீ போயி ஆனைகிட்ட நில்லு. அத தனியா விட்டுட்டு வராதன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்’’ விரட்டினார். அவன் திரும்பி ஆனைக்கு ஓடினான்.
``இரு, சாப்பிட்டுப் போ''
``வேண்டாம்''
``ச்... வா சாப்பிட்டுட்டு அப்புறம் போகலாம்.'' இருவரும் சாப்பிடும் கூடத்திற்கு நடந்தார்கள்.
``வேற என்ன வேல தெரியும்?''
``நாலஞ்சி வருசமா ரெட்டை யானை ஓட்டு கம்பெனிலதான் வேல பாக்குறேன். செங்கல் சூள வேலையும் தெரியும்.''
``ம்''
``எனக்குத் தெரிஞ்ச சூளைல சேர்த்து விடவா?''
``வேணாம். இங்குன பக்கத்துல இருந்தா பிரச்சனதான். நான் தனியா ரெம்ப தூரமா போகப்போறேன்.''
தன் சட்டைப் பையிலிருந்து பதினைந்து ரூபாய் எடுத்து அவன் சட்டைப் பைக்குள் திணித்தார்.
``வேணாம்'' தடுத்தான்.
``வெச்சிக்கோ.''
வரிசையாய் இலை போட, சாப்பிட உட்கார்ந்தார்கள்.
இருவரும் நாலு வாய் எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். மீண்டும் மாவுத்தன் உதவியாளன் வந்து நின்றான். ``இங்க ஏன்டா வந்த'' எரிச்சலாய்க் கத்த,
``இந்தப் பயலத் தேடிக்கிட்டு நம்ம டிரைவரும் வேற கொஞ்சம் ஆட்களும் வந்திருக்காங்க.''
ஒரு நிமிடம் அமைதியானார். சூரன் சாப்பாட்டிலிருந்து கைகளை உதறினான்.
``எங்க நிக்கிறாங்க?''
உதவியாளன் பின்னால் திரும்பிப் பார்த்தான். அவனை நகர்த்திவிட்டு பத்துப் பேருக்கும் மேல் அங்கு நின்றார்கள். அவர்களில் ஓரிருவரை சூரனுக்கு அடையாளம் தெரிந்தது. முந்தைய நாள் இரவில் தன்னைத் துரத்தி வந்தவர்கள்.
சூரன் தப்பி ஓட எங்காவது வழி இருக்குமாவெனச் சுற்றிலும் பார்த்தான். திறந்து கிடக்கும் அந்த ஒற்றைக் கதவைத் தவிர அங்கு வேறு வழியில்லை. முழுக்க சுவர் வைத்து மூடப்பட்ட கட்டடம். இனி தப்ப முடியாது.
ஒருவன் உள்ளே வந்து அவன் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்துத் தரதரவென இழுத்து வெளியே போட்டான்.
- ஓடும்