மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 6

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`பயணம் என்பது பாதையில் நடப்பதல்ல; பாதையாய் மாறுவது.

கடலில் நீலமாகவும் மலையில் பச்சையாகவும் மரத்தில் இலையாகவும் மாறுங்கள்.’’

- பராரிகள்

கொம்பையா தூரமாய் நூற்றுக்கணக்கான எருதுகளின் நடுவே சுருட்டு புகைத்தபடி போய்க் கொண்டிருந்தார். உப்புத்தூரார் தன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெறி ஏறியவரைப்போல் கத்தியபடியே குத்தீட்டியோடு கண்மாய் நீருக்குள் இறங்கி ஓடினார். கரியன் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றான். வண்டிக்குள்ளிருந்த உப்புத்தூராரின் மச்சான் வண்டியின் ஓரத்தில் பிரம்புக் கம்புகளுக்கு இடையே செருகியிருந்த பெரிய கத்தியை உறையிலிருந்து விலக்கி எடுத்துக் கொண்டு கண்மாய்க்குள் இறங்கி உப்புத்தூராருக்குப் பின்னால் ஓட ஆயத்தமானான். கண்மாய்ப் பள்ளத்துக்குள் இறங்கியதுமே செருப்பணியாத அவன் பாதங்களில் காய்ந்த நெருஞ்சி முட்கள் குத்தின. அவன் ஒரு காலைத் தூக்கி நெருஞ்சியை உருவிப் போட்டுவிட்டு இரண்டு எட்டு வைப்பதற்குள் உடைசாளி மரத்தின் காக்கா முள்ளொன்று காலில் ஏறியது.

வண்டிக்காரனிடம் கேட்டான். ``லேய், உன் செருப்ப கழத்தி இங்குன வீசு.’’

``என்கிட்டே ஏது செருப்பு. நான் என்ன உப்புத்தூராரா செருப்பு போட்டுக்க?’’

அவன் மேற்கொண்டு தயங்கி நீருக்குள் இறங்க வேறு வழி பார்த்துக்கொண்டிருந்தான். உப்புத்தூரார் தூரமாய்த் தெரியும் கொம்பையாவை இலக்கு வைத்து கண்மாய் நீருக்குள் தன்னை இழுத்தபடி வேகவேகமாய் நடக்கத் துவங்கினார். அவர் முன்னோக்கி நடக்க நடக்க நீர் இரண்டாய் பக்கவாட்டில் தெறித்து, பிளந்து பிளந்து மூடியது. இடுப்பளவு நீருக்குள் வரும்போது அவர் கையிலிருந்த குத்தீட்டி நீருக்குள் மூழ்கி வெளியே தெரியாமல் அவரோடு நகர்ந்தது. அவர் ஆழத்திற்குள் சென்றுவிடாமல் கண்மாய் நீருக்குள் கவனமாக நடந்து போனார்.சில வண்டிக்காரர்கள் ``அது உப்புத்தூரார் தானே?’’ என்று பக்கத்து வண்டிக்காரர்களிடம் கேட்டபடி ``அவர் ஏன் தண்ணிக்குள்ள இறங்கிப் போறார்’’ என்ற குழப்பத்தோடு கண்மாய் திசையைப் பார்த்தபடி நகர்ந்தார்கள்.

தன்னால் உப்புத்தூராரின் பின்னால் போகத் தாமதமாவதால் வண்டிக்காரனைப் பார்த்துக் கத்தினான்.

``லேய், இங்குன முள்ளாக் கிடக்கு. நீ வேகமா அந்தப் பக்கமா வந்து விரட்டி மடக்கு. மச்சான் தனியாப் போறாரு.’’

உப்புத்தூரார் மச்சான் கத்தியபடியே கண்மாய்ப் பள்ளத்துக்குள்ளிருந்து மேலேற நடந்தான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு நெருஞ்சி குத்தியது. காலை பரதமாடும் நடராஜர்போல் வைத்து எரிச்சலாய் முள்ளை எடுத்துப் போட்டுக்கொண்டே மேடேற முயன்றான். வண்டிக்காரன் அவசர அவசரமாய் செருகியிருந்த மற்றொரு கத்தியைத் தேடினான். செருகியிருந்த இடத்தில் இல்லை. வண்டிக்குள் பரப்பிக் கிடந்த வைக்கோல்போரை விலக்கித் துழாவிப் பார்த்தான். அங்கேயும் இல்லை. வண்டியை வேகமாய் ஓட்டிக்கொண்டு வரும்போது எங்கேயாவது விழுந்திருக்கலாம். வில் வண்டியிலிருந்து கீழே இறங்கி மாடுகள் தானாய் இழுத்தபடி போய்க்கொண்டிருக்கும் உப்புத்தூராரின் ரேக்ளா வண்டிக்குத் தாவி ஏறி அவரின் சாட்டைக் கம்பைத் தேடி எடுத்து அதைச் சரிபாதியாய்த் திருகினான். இரு பாதியாய்ப் பிரிந்த சாட்டைக்கம்பின் ஒரு பாதியில் கூர்மையான கத்தி இருந்தது. எடுத்துக்கொண்டு கொம்பையாவை நோக்கி ஓட முயல்கையில் குறுகலான மண்பாதையில் எந்தப் பக்கமும் வழி தராமல் நெடுந்தூரத்திற்கு வரிசையாய் வண்டிகளும், மனிதர்களும் மாடுகளும் போய்க்கொண்டிருந்தார்கள். ரேக்ளா வண்டியின் மேலேறி நடந்தபடி இரண்டு புறமும் மாடுகள் பூட்டப்பட்ட நுகத்தடியின் நடு தாங்குக்கட்டைக்கு வந்தான். முன்னால் வேறு பார வண்டிகள் போய்க்கொண்டிருந்தன. ரேக்ளா வண்டியிலிருந்து பார வண்டிக்குக் கால் வைத்துத் தாவி பார வண்டியின் தாங்கு கட்டைக்கு வந்து அடுத்த வண்டிக்குத் தாவி எட்டு வைத்து நடந்தான். எல்லோரும் சுதாரித்துக் கத்துவதற்குள் ஒவ்வொரு வண்டியின் தாங்கு கட்டையிலிருந்தும் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோலத் தாவித் தாவி மின்னல் வேகத்தில் வண்டியின் மேலேறி முன்னேறினான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 6

கரியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எல்லோரும் கொம்பையாவின் உடலைக் குறி வைத்தே நகர்கிறார்கள் என்பது மட்டும் அவனுக்கு விளங்கியது. தான் என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் மருகிக்கொண்டிருந்தான். கண்மாய்ச் சரிவிலிருந்து மேலேறும் உப்புத்தூராரின் மச்சான் மீது அங்கு கிடக்கும் கற்களைப் பொறுக்கி வீசி எறிந்தான். யாருக்கும் என்ன நடக்கிறது என்பது சரிவர விளங்கவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த வண்டிக்காரர்கள் கரியனை அதட்டினர். அவன் அதைச் சட்டைசெய்யாமல் தொடர்ந்து கற்களை எறிந்துகொண்டிருந்தான். கற்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உப்புத்தூராரின் மச்சான் கைகளை முகத்திற்கு நேராய் மறைத்தபடி நெருஞ்சி முட்களுக்குள் கெந்தி கெந்தி ஓடினான். கோபமாய் கரியனைக் கெட்ட வார்த்தைகளால் ஏசினான்.

``ஏலேய், மேல வந்தேன் கொன்னே புடுவேன். ஓடிரு.’’

உப்புத்தூரார் கிட்டத்தட்ட அரைக் கண்மாயை நெருங்கிப் போய் க்கொண்டிருந்தார். வண்டிக்காரன் கையில் சாட்டைக் கத்தியோடு வண்டி வண்டியாய்த் தாவிப் போய் பெரிய காளைக் கூட்டத்தின் பின் நின்றான். நூற்றைத் தாண்டி காளைகள் இருந்தன. நன்கு பழக்கமானவன்போல் ஒவ்வொரு மாட்டின் முதுகிலும் லாகவமாய்க் கால் வைத்துத் தாவினான். சட்டெனத் தன் முதுகில் பாரம் ஏறுவதால் திகைத்து மாடுகள் கலைந்தன. சில மாடுகள் கண்மாய்க்குள் இறங்கி ஓடின. அந்த இடமே புழுதிமூட்டமாய் ஆனது. மாட்டை ஓட்டிக்கொண்டு வருபவர்கள் அவனை ஏசினார்கள். வண்டிக்காரன் நகர்ந்து போய்க் கொண்டேயிருந்தான்.

தூரத்தில் கொம்பையா திரும்பிப் பார்க்காமல் நடந்து போனார். கரியன் அவரை எப்படி அழைக்கவெனத் தெரியாமல் குழம்பினான்.

``ஏங்க... பெரியாம்பள… இந்தா’’ குரல் கொடுத்தான்.

கொம்பையா அவனுக்குக் கொடுத்த துண்டை எடுத்துத் தலைக்குமேல் அவர் இருக்கும் திசைக்கு வேக வேகமாக ஆட்டினான். அவர் திரும்பிப் பார்ப்பதாக இல்லை.

``எய்யா... எய்யாவ் ய்யாவ்’’ முதன்முதலாக கொம்பையாவை தன் தகப்பனைக் கூப்பிடுவதைப் போல் உரக்கக் கத்தி அழைத்தான்.

இப்போது உப்புத்தூராரின் மச்சான் சரிவிலிருந்து பெரிய பெரிய கற்களைக் கைநிறைய எடுத்து வைத்துக்கொண்டு நிறுத்தாமல் வரிசையாக மூர்க்கத்துடன் கரியனை நோக்கி எறிந்தான். கரியன் துண்டால் தன் முகத்தை மூடியபடி ஆளில்லாமல் போய்க்கொண்டிருக்கும் வண்டியின் பின்னால் பதுங்கினான். கற்களை வீசியபடியே ஒரே வீச்சில் விறுவிறுவெனக் கண்மாய்ச் சரிவிலிருந்து மேடேறினான். அவன் கையில் கற்கள் தீர்ந்து வண்டிப்பாதையில் கிடக்கும் சிறு கற்களை எடுத்து எறிந்தபடி முன்னோக்கி வந்தான். இன்னும் பத்தடிக்குள் எப்படியும் தன்னை நெருங்கிவிடுவான். கரியன் சாலையில் கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்துத் தூக்கியபடி உப்புத்தூராரின் மச்சானை விரட்டியபடி ஆவேசமாய் ஓடினான். அவன் தலைதெறிக்க இரண்டு பனைமர தூரத்திற்கு ஓடினான்.

கரியன் வேகமாகத் திரும்பி ஓடிவந்து வண்டியின் நுகத்திலிருந்து மாட்டை அவிழ்த்து விட்டான். மாடுகள் மிரண்டு கண்மாய்க்கரைச் சரிவில் இறங்கி ஓடி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நீருக்குள் போய் தடுமாறி விழுந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 6

தன் இடுப்பு வேஷ்டி மடிப்பில் கை வைத்துப் பார்த்தான். கொம்பையாவின் சுருட்டும் தீப்பெட்டியுமிருந்தன. வேஷ்டி மடிப்பைப் பிரித்துத் தீக்குச்சியை எடுத்து உரசி வில் வண்டியின் வைக்கோல்போருக்குள் போட்டான். மெல்ல ஒவ்வொரு வைக்கோலாய்ப் பற்றி பின் மொசுமொசுவெனப் பிடித்து எரியத் துவங்கியது.

``லேய்… லே... நாயே’’

உப்புத்தூராரின் மச்சான் கத்தியபடியே வண்டியை நோக்கி ஓடிவந்தான். மண்சாலையின் ஓரத்தில் காய்ந்த நாட்டுக் கருவேல மரக் கிளையொன்று பெரிய பெரிய முட்களோடு கிடந்தது. துண்டைக் கையில் சுற்றிக்கொண்டு அதைக் கையில் எடுத்து வீசி வீசி அவனை விரட்டினான். அப்படியும் முன்னேறி வந்தவனுக்கு முகத்தில் முட்கீறல்கள் விழுந்து ரத்தம் கசிந்தது.

எப்படிப் பார்த்தாலும் உப்புத்தூரார் இன்னும் அரை பர்லாங்கு தூரத்தில் கொம்பையாவை எட்டிவிடுவார். இப்போது வண்டி பெரிய பெரிய தீநாக்குகளோடு மொதுமொதுவென எரியத்துவங்கியது. கரியன் தன் கையிலிருக்கும் துண்டால் கொம்பையாவை நோக்கி அசைத்துக் காட்டியபடியே கண்மாய்க்குள் முட்களைப் பொருட்படுத்தாமல் ஓடினான். வண்டிக்காரர்கள் கூச்சல்களோடு கத்தத் துவங்கி வண்டி வரிசை அப்படி அப்படியே நின்றது. சிலர் வில் வண்டியை நோக்கி தீயை அணைக்க ஓடிவந்தார்கள். கொம்பையாவும் மலையரசனும் தீ எறியும் வண்டியை நோக்கிக் கூர்ந்து பார்க்கத் துவங்கினார்கள்.

துண்டை அசைத்தபடியே கரியன் நீருக்குள் சளப் சளப்பெனக் கொம்பையாவை நோக்கி ஓடினான். கொம்பையா இப்போது கண்கள் விரிய கரியனைப் பார்த்துவிட்டார். அதே நேரம் கண்மாய்க்குள் தன்னை நெருங்கி வந்து கொண்டிருக்கும் உப்புத்தூராரையும் குழப்பத்தோடு பார்த்தார். அவருக்கு உத்தேசமாய்ப் புரிந்துவிட்டது. கண்மாய்ச் சரிவில் இறங்கி உப்புத்தூராரை நோக்கி நீருக்குள் வரத் துவங்கினார். மலையரசனுக்கும் ஏதோ விபரீதம் நிகழப்போகிறதெனப் புரிந்துவிட்டது. விறுவிறுவென நீரை நோக்கி ஓடி வந்தான். பின்னாலேயே வளர்ப்பு நாய் மல்லியும் ஓடி வந்தது. இருவரும் கரையில் நின்றார்கள்.

கொம்பையாவை இன்னும் ஐந்தடி தூரத்திற்குள் நெருங்கிவிட முடியும் என்ற நிலையில் ஓரடி கையைப் பின்வாங்கி குத்தீட்டியால் குத்த ஏதுவாயிருக்கும் எனக் கணக்கிட்டபடியே உப்புத்தூரார் நீருக்குள்ளிருந்து கையை எடுத்தார். நீர் வடிந்தபடியே ஆவேசமாய்க் குத்தீட்டியொன்று வெளியே வந்து நொடிக்குள் பின்னிழுத்து கொம்பையா நெஞ்சில் இறங்க முன்சென்றது.

கொம்பையா நொடிக்குள் சுதாரித்துத் தன் உடலைப் பின்சாய்த்து நீரின்மேல் அவர் முதுகு தொட்டுவிட்டு மீண்டும் நிமிர்ந்தார். தன் கையிலிருக்கும் கம்பால் குத்தீட்டியைத் தடுக்க முயற்சி செய்தார். பின்னோக்கி இழுத்து அவர் உடலை நோக்கி மீண்டும் மீண்டும் குத்தீட்டி முன்பாய்ந்தது.

குத்தீட்டியைத் தடுத்தபடியே உப்புத்தூராரிடம் சொன்னார்.

``இங்க பாரு உப்புத்தூரா, எத்தனையோ தடவ சொல்லிட்டேன், பக வேண்டாமுன்னு. போன உசுரெல்லாம் போகட்டும். இனி ஒத்த உசுருகூடப் போகக் கூடாதுன்னு நினைக்கேன். போய்டு. என்ன என் வழிக்குப் போக விடு.''

``எனக்கு நீரு சாகணும்வே’’ இன்னும் மூர்க்கமாய் குத்தீட்டி கொல்ல முன்பாய்ந்தது.

கொம்பையா இப்போது ஆனது ஆகட்டும் என்று முடிவெடுத்து ஓரடி முன்னாடி போய் குத்தீட்டியைப் பற்றியிருந்த உப்புத்தூராரின் கரங்களில் கம்பால் ஓங்கி அடித்தார். விண்ணென்ற வலிதாங்காமல் குத்தீட்டியை நீருக்குள் தவற விட்டார். தன் கை மணிக்கட்டை உதறியபடியே நீருக்குள் விழுந்த குத்தீட்டியை எடுக்கக் குனிந்து கைகளால் துழாவினார்.

உப்புத்தூராரின் தலையை நீருக்குள்ளிருந்து வெளியயேற முடியாமல் கொம்பையா நீருக்குள் அழுத்திப் பிடித்தார். மேற்கொண்டு மூச்சு விட முடியாமல் உப்புத்தூரார் தடுமாறினார். தன் தலையைப் பிடித்து அழுத்தும் அவர் கையிலிருந்து தன் தலையை விடுவிக்கப் போராடினார். அதற்குள் நிறைய வண்டியிலிருந்து யாவாரிகளும் மாடு ஓட்டிச் செல்பவர்களும் இவர்களைத் தடுக்க கண்மாய்க்குள் இறங்கி சப்தம் கொடுத்தபடியே ஓடி வந்தார்கள். அதில் முன்னாடி ஓடி வந்தது வில் வண்டிக்காரன்தான். கரியன் கத்தினான், ``ய்யா, அவன் கையில கத்தி இருக்கு.’’ கொம்பையாவிற்குக் கரியன் சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. ``என்னலே சொல்ற’’ என்பதுபோல் கழுத்தை மேலும் கீழும் ஆட்டிக் கேட்டார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 6

வண்டிக்காரன் நீருக்குள் இறங்கி வேகமாக ஓடிவந்தான்.

கரியன் மலையரசனைப் பார்த்துக் கத்தினான். ``ண்ணே, அவன் கைல கத்திய மறச்சி வெச்சிருக்கான்.’’

மலையரசன் வண்டிக்காரன் கையைப் பார்த்தான். சாட்டைக் குச்சியின் நுனியில் செருகியிருந்த கத்தியைத் தன் கையின் உட்புறமாய்த் திருப்பிப் பிடித்திருந்தான். மலையரசன் சுதாரித்து ஓடுவதற்குள் வண்டிக்காரன் நீருக்குள் துள்ளி எழுந்து கொம்பையாவின் வலது தோளில் கத்தியை இறக்கினான். ரத்தம் நீரூற்றுபோல் பீய்ச்சி அடித்தது.

``ஒரு பயணியைக் காதலிக்கத் தேர்ந்தெடுத்தவளுக்கு தினம் புதிய வானம், புதிய சூரியன், புதிய நிலவு; அவர்கள் தினமும் புதியவர்கள்.’’

- பராரிகள்

மகன் வழி (1977 - மழைக்காலம்)

சூரவேல் எழுந்து ஓடத்துவங்கினான். கே.சி. மர டிப்போகாரரின் ஆள்கள் கூட்டமாய் அவனை விரட்டி விரட்டி அடிக்கத் துவங்கினார்கள். கம்பால் அடித்தார்கள். கல் கொண்டு எறிந்தார்கள். மாவுத்தன் லாரி ஓட்டுநரிடம் அவனை விடச் சொல்லிக் கெஞ்சியபடி பின்னாலேயே ஓடினார்.

லாரி ஓட்டுநர் ``இதுல நீ தலையிடாத. இது எங்க முதலாளி வீட்டு விவகாரம்’’ என்று சொல்லிவிட்டு சூரனின் முதுகில் பெரிய செங்கல்லை எடுத்து எறிந்தான். சூரன் சுளீரென்று முதுகில் பட்ட அடியை ``எம்மா’’ என்ற வலி கூடிய குரலோடு முதுகை நெளிந்தபடி பொறுத்துக் கொண்டு ஓடினான்.

``டேய் சொல்றா, அவங்க எங்க போனாங்க…சொல்லு’’ கேட்டபடியே அவனைத் துரத்தினார்கள்.

கோயிலுக்கு வந்த கூட்டம் வேடிக்கை பார்த்தது. நெல்லையப்பர் கோயிலுக்குள் ஓடி வந்து விசேஷம் நடக்கும் இடத்தின் ஜனத் திரளுக்குள் வந்து சூரன் புகுந்துகொண்டான். கோயில் விசேஷம் நடத்தும் பெரிய மனிதர்களின் கூட்டத்தில் வந்து ``அண்ணாச்சி, என்னத் துரத்துறாங்க. காப்பாத்துங்க’’ என்று முறையிட்டான். சில பெரிய மனிதர்கள் அவர்களை விரட்டினார்கள். ``சாமி காரியம் நடக்குது. கோயிலுக்குள்ளே வந்து சண்ட அடிச்சிக்கிட்டு இருக்கீங்க. உங்க சண்டையெல்லாம் அங்கிட்டு கோயிலுக்கு வெளிய போயி வெச்சிக்கோங்க.’’ ஒருவர் ``அங்குன நிக்கிற போலீஸ்காரங்கள கூப்பிடு’’ எனக் குரல் கொடுத்தார். எல்லோரும் வெளியேறிப் போய் வாசலில் அங்கங்கு மறைந்து நின்றுகொண்டார்கள்.

அவர்கள் இரவு வரை கோயில் வாசலிலிருந்து நகரவேயில்லை. மாவுத்தன்தான் கோயில் டிரஸ்ட்டி ஒருவரிடம் உதவி கேட்டு, கோயிலின் வெளியிலிருக்கும் மின்சாரத்தை ஐந்து நிமிடத்திற்கு அணைக்கச் சொல்லிவிட்டு சாமி கும்பிட வந்த அவர்கள் குடும்பத்து ஆட்களோடு கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து தப்பிக்க வைத்தார்.

சூரன் மறுநாள் அதிகாலைக்கே தாமிரபரணியில் குளித்து முடித்து, பொழுது விடிவதற்குள் பாலமடை செங்கல் சூளைக்கு வந்து சேர்ந்தான். செம்மண்ணும் ஆற்றுமணலும் அங்கங்கே சிறு மலைபோல் குவித்துக் கிடந்தது. விடியற்காலை நேரத்திலும் நிறைய பேர் மண்குழைத்துக்கொண்டும், மர அச்சுக்கு நடுவில் செங்கல் வடிவத்திற்கு மண்ணைத் திணித்து அச்சு எடுத்துக்கொண்டுமிருந்தார்கள். கங்கையன் இன்னும் எழுந்திரிக்கவில்லை என்று யாரோ சொல்லிவிட்டுப் போனார்கள். ஏற்கெனவே நான்கைந்து பேர் அவரைப் பார்க்க கொடுக்காய்ப்புளி மரத்தடியில் காத்திருந்தார்கள். அவர்களோடு போய் நின்றுகொண்டான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 6

சூரியன் மெல்ல எழும்பி உதயத்திற்கு வரும் நேரத்தில் 17 வயதிருக்கும்படியான ஒரு பெண் சூளைக்கு வந்தாள். அவள் குளித்து, வாரி, தலைக்கு, பெயர் தெரியாத ஏதோ காட்டுப் பூக்கள் சூடி, நல்ல வட்டமாய் களையான முகத்தோடு இருந்தாள். ஒரு வாரத்திற்கு முன் சூளை அடுப்பில் வேக வைத்த கல்லை சாமி கும்பிட்டு அடுப்பைத் திறக்கும் சடங்கு நடக்கத் துவங்கியது. அந்தப் பெண்தான் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு அடுப்பைத் தொட்டு விரல்களை முத்திட்டாள். பின் கண்மூடி கரம் கூப்பி, அடுப்பின் முன் ஒரு நிமிடம் கும்பிட்டபடி நின்றுகொண்டிருந்தாள். பின் வயதில் மூப்பிலிருந்தவரிடம் அடுப்பைத் திறந்து முதல் ஏழு கற்களை எடுத்துக் கொடுக்கச் சொன்னாள். ஏழு செங்கல்லில் ஒன்றுகூட ஒச்சமில்லை. முகமெல்லாம் பூரிப்பாயிருந்தாள். இந்த ஏழு செங்கல்லையும் ஏழு கன்னிமாராய் பாவித்து அடுத்த அடுப்பு மூட்டும் வரை அப்படியே வைத்திருப்பாள். சாமி கும்பிட யாராவது வந்து செங்கல் கேட்டால் பணம் வாங்காமல் கொடுத்து விடுவாள். எல்லாச் சூளைகளிலும் ஒவ்வொரு ஐதிகம் கடைப்பிடிக்கப்படும். இங்கே இந்த மாதிரி இருக்கிறதுபோல என்று நினைத்துக் கொண்டான். பெரியவர் அந்தப் பெண்ணை வேம்பு என்று அழைத்தார்.

கொடுக்காப்புளி மரத்தடியில் நின்று கொண்டிருந்த இரண்டு மூன்று பேர் செங்கல்லுக்குக் காசு கொடுக்கவும், புது வீடு கட்டுவதற்கு செங்கல் அடிக்கத் தாக்கல் சொல்லவும் வந்திருந்தார்கள். மரத்தடியில் இவனும் இன்னொரு நடுத்தர வயதுக்காரரும் மட்டுமிருந்தார்கள். கொடுக்காப்புளி மரத்தில் நிறைய கிளிகள் சப்தமிட்டுக்கொண்டிருந்தன. அவன் நிற்கும் இடத்திற்கு அருகில் ஒரு கொடுக்காப்புளி சுருள் கீழே விழுந்தது. கிளிகள் கடித்துப் போட்டிருக்கும். சுருளில் ஏழெட்டு முத்துக்கள் இருந்தன. பிரித்து அவருக்கு வேண்டுமா என நீட்டினான். அவர் வாங்க மறுத்து வேண்டாமென்று தலையாட்டினார்.

இப்போது வேம்பு அவர்களை நோக்கி மரத்தடிக்கு வந்து என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். நடுத்தர வயதுக்காரர் ``இருளி விஷயமா...’’ என்று சொல்லி நிறுத்தினார். ``நீங்க’’ என்று சூரனைப் பார்த்துக் கேட்டாள். ``சூள வேலக்கி... மாவுத்தன் பழனி சொல்லி விட்டாரு.’’

``ஆளு ஏற்கெனவே நிறைய இருக்கு. செத்த நேரம் இருங்க. சித்தப்பா எந்திரிக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

சூரனுக்கு அவர் சொன்ன ``இருளி’’ என்ற பெயர் வித்தியாசமாய்த் தோன்றி அவரிடம் கேட்கத் தூண்டியது. ``ஏண்ணே, இருளின்னு சொன்னீங்கில்ல, அப்படின்னா என்னண்ணே?''

அவர் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறிய குரலில் சொன்னார்.

``இருளின்னா பன்னிலே... பன்னிக்குட்டி. கங்கையனுக்கு அதுதான் பெரிய தொழிலு. சூளையெல்லாம் சும்மா. இருளிலதான் நல்ல வரும்படி. மாசத்துக்கு ஒரு உருப்படிய காலி பண்ணுனா போதும். நல்ல சம்பாத்தியம்.’’

``என்ன சொல்றீங்க, ஒரு பன்னிக்குட்டிய அறுத்து வித்தா அவ்வளவு கிடைக்குமா?''

ஏழு கடல்... ஏழு மலை... - 6

``அறுத்து எதுக்குலே விக்கணும்?''

``கங்கையன் தொழிலே வேறலே. மதுரைக்கு இங்கிட்டு தெக்க முழுக்க எல்லா ஊர்லயும் பன்னில அடிபட்ட பிளசர் காரு, லாரியெல்லாம் வாங்கி விக்கிற ஆளு கங்கையன் மட்டும்தான்.''

``சில நேரம் நல்ல புது வண்டிய பாத்து ஆட்கள வெச்சி அவரே வண்டி வர நேரம் ரோட்டுக்குப் பத்தி விட்ருவாரு. வண்டில அடிபட்டுடுச்சின்னா அவ்வளவுதான். அடுத்த நாளே வண்டிய கிடைச்ச விலைக்கி வித்துருவாங்க. குடும்பத்துக்கு ஆகாதுல. மீறியும் வச்சிருந்தா அடுத்த பயணத்துலயே உயிர் பலி கேக்கும்னு ஐதிகம்.’’

``இதெல்லாம் உண்மையாண்ணே?’’

``இந்தப் பக்கமே நாலைஞ்சி சம்பவம் அப்படி நடந்திருக்குல. மோட்டார்னா எல்லாருக்கும் ஒரு பயம் இருக்குல்லய்யா, என்ன சொல்ற?’’

``இப்போங்கூட சிவகாசில ஒரு பயர் ஆபிஸ் மொதலாளி. புத்தம் புதுசா ஒரு பிளசர் காரு வாங்கிருக்காரு. வெளிநாட்டு வண்டி. ஆறு லச்சம் தாண்டி விலையிருக்கும்னு சொல்றாங்க. அவரோட பங்காளி ஒருத்தரு விருதுநகர்ல பருப்பு மில்லு மொதலாளி. பழைய பணக்காரரு. சிவகாசிகாரருக்கு புதுசா பவுசு வந்துருச்சின்னு கொஞ்சம் தட்டிவிடச் சொன்னாரு. நேத்து நான் தான் திருத்தங்கல்கிட்ட இருளிய விரட்டி விட்டேன். மோதுன நொடிக்கி அங்குனயே செத்துப் போச்சில. வண்டிக்குள்ள அவர் மொத்தக் குடும்பமும் உக்காந்திருக்கு. அப்படியே வண்டிய நிறுத்திப் போட்டுட்டு பஸ் பிடிச்சி வீட்டுக்குப் போய்ட்டாரு. மனுஷன் இந்தா இன்னிக்கி விக்கிறதுக்கு வந்துருக்குல.''

தூரத்திலிருந்து யாரோ அவர்களைக் கைகாட்டி அழைப்பது போலிருந்தது. ``அந்தா கங்கையன் கூப்பிடுதாரு பாரு.''

அவர் காட்டிய திசைக்குப் பார்த்தான். அங்கு கங்கையன் கருகருவெனப் பனைமரம்போல் நின்றுகொண்டிருந்தான்.

- ஓடும்