மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 7

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`எனது வீடு காலியாயிருக்கிறது; எனது உலகம் நிரம்பியிருக்கிறது.’’ - பராரிகள்

தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கொம்பையாவின் வலது தோளில் வண்டிக்காரன் கத்தியால் குத்தியதும் வலி பொறுக்கமாட்டாமல் தடுமாறினார். உப்புத்தூராரின் தலையைத் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்திருந்த கையை சட்டென எடுத்து, தோள்பட்டையில் ஊன்றியிருந்த கத்தியை வலியோடு உருவிக் கண்மாய் நீருக்குள் தூரமாய் வீசினார். குத்துப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் குமுறி உடலெல்லாம் வழிந்து சொட்டி சொட்டி ஆற்று நீருக்குள் கரைந்தது. கொம்பையா கையை எடுத்ததும் உப்புத்தூரார் நீருக்குள்ளிருந்து தலையை வெளியெடுத்து இளைக்க இளைக்க பெருமூச்செடுத்தார். நீருக்குள்ளிருந்து துழாவி எடுத்து மீண்டும் குத்தீட்டியால் குத்த ஆயத்தமானார். கரியன் அதற்குள் அவரைப் பின்னாலிருந்து வேகமாய்த் தள்ளினான். நிலை தடுமாறி சலேரென நீருக்குள் மீண்டும் விழுந்தார். அதற்குள் யாவாரிகளும் வண்டிக்காரர்களும் ஓடி வந்து இரண்டு தரப்பு ஆட்களையும் மேற்கொண்டு சண்டையிடாமல் பிடித்துக் கொண்டார்கள்.

ஓரிரண்டு பேர் கொம்பையாவைக் குத்திய வண்டிக்காரனைத் தாக்கத் துவங்கினார்கள். கொம்பையா அவர்களிடம் அவனை அடிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். மலையரசன் தன் மேல்துண்டை நீரில் நனைத்து நனைத்து கொம்பையாவின் காயத்தின் மீது வைத்தான். துண்டும் ரத்தம் கலந்த நிறத்திற்கு சட்டென மாறியது. அவரைக் கரைக்கு ஏற்றி ஆலமரத்தின் கீழ் கல்திண்டில் அமர வைத்தார்கள். பருக நீர் கொடுத்தார்கள். மலையரசன் துண்டை நாலைந்தாய் மடக்கி ரத்தம் வராமல் காயம்பட்ட குழியை மூடியபடி அழுத்திப் பிடித்திருந்தான். எந்த வண்டியும் நகராமல் கண்மாய்க் கரை முழுக்க அப்படி அப்படியே நின்றன. கூட்டத்தைப் பார்த்து அக்கம்பக்க வயல் வரப்புகளிலிருந்தும் நிறையபேர் மரத்தடி நோக்கி ஓடி வந்தார்கள். அதற்குள் யாரோ ஒருவர் அங்கங்கு வளர்ந்திருந்த நாயுருவி இலைகளை உருவி, கண்மாய் துவைப்புக் கல்லில் வைத்து நீரிட்டு அரைத்து, பெரிய பந்தாய் உருட்டி எடுத்து வந்தார். எல்லோரும் அவருக்கு வழி விட்டார்கள். கூட்டத்திற்குள் ஓரிருவர் அவரைக் களக்காடு பண்டுவர் என்று அடையாளம் கண்டு சொன்னார்கள். மலையரசனை துண்டை நீக்கச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் ரத்த ஊற்றை அடைப்பதுபோல் நாயுருவி உருண்டையை வைத்துத் துணி வைத்து இறுக்கமாய்க் கட்டினார். வலி கடுத்தது.கொம்பையா `ஸ்ஸ்’ என்று கண்களை மூடி சப்தமிட்டார்.

கூட்டம் கரைச்சலாய்ப் பேசியபடி சுற்றி நின்றது. வளர்ப்பு நாய் மல்லி சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்த்துக் கொஞ்சம் மிரட்சியுடன் வாலாட்டியபடி கொம்பையா முகத்தைப் பார்த்து சப்தமிட்டபடியே இருந்தது. மலையரசன் கூட்டத்தின் வெளியே உப்புத்தூராரோடு கத்திக் கத்திச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பதிலுக்கு. ``ஏ என்னைக்கினாலும் கொம்பையாவுக்கு என் கையாலதான்டா சாவு'' உப்புத்தூராரும் கருவினார். கரியன் கண்களில் நீர் வழிய கொம்பையாவின் அருகில் நின்று கொண்டிருந்தான். கொம்பையா அவன் கரங்களைப் பற்றி ``நீ ஏம்வே அழுகுத. ஒண்ணும் இல்ல... மேலோட்டமாத்தான் இறங்கியிருக்கு. சரியாப்போயிரும்.'' அவன் இன்னும் அழுதபடியே நின்றான். கொம்பையாவிற்கு சுருட்டு புகைக்கலாம்போலிருந்தது. தன் இடுப்புச் சுருட்டலிலிருந்து யாழ்ப்பாணச் சுருட்டைத் தேடினார். காலியாகிவிட்டிருந்தது. கரியன் தன்னிடமிருந்த சுருட்டுக்கட்டையும் தீப்பெட்டியையும் அவரிடம் எடுத்து நீட்டினான். ``அங்குன விட்டுட்டு வந்துட்டேனா... கொண்டா.'' வாங்கிப் பற்ற வைத்தார். ஒரு இழுப்பு இழுத்தபடி கரியனிடம் கேட்டார். ``உன் அம்மைய பாத்தியாலே...''

அதற்குள் நன்றாய் உடுத்தியிருந்த நாலைந்து பெரிய மனிதர்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு கொம்பையாவிடம் வந்தார்கள். சிலர் உப்புத்தூராரையும், அவர் மச்சானையும் கூட்டத்தின் நடுவே அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

``ஏது இன்னும் மயிலாத்தா பிரச்னைதானா... இன்னும் எத்தன வருசத்துக்குத்தான் இப்படி ரெண்டு பேரும் மல்லுக்கட்டிட்டு இருக்கப் போறிங்க.''

``ம்... ரெண்டு பேர்ல ஒருத்தர் சாகுற வரைக்கும்... யோவ் கொம்பையா, நீரு தப்பிச்சிட்டன்னு நினச்சிக்காத. ஒம்ம சாவு தொரத்திக்கிட்டே இருக்கு. ரெம்ப நாளு இல்ல'' உப்புத்தூரார் கத்தினார்.

குடித்துக்கொண்டிருந்த சுருட்டைக் காலடியில் போட்டு மிதித்துவிட்டு விருட்டென கொம்பையா எழுந்தார். அவர் எழுந்த வேகம் மீண்டும் அவர்களுக்குள் சண்டை துவங்கப்போவது போல் எல்லோருக்கும் தோன்றியது.

``வா... கொல்லு... வா'' நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நின்றார்.

``இப்படிங்கிறதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் காடேத்திக் கருமாதி வெச்சிருவேன் பாத்துக்கோ. வீட்டுப் பொம்பளைங்க சாவுக்குப் பயறு அவிக்கிற மாதிரி வெச்சிக்காதிங்க. சொல்லிட்டேன். நீங்க அந்தப் பயல கொன்ன அன்னைக்கே உங்களையெல்லாம் முடிச்சிருக்கணும்... விட்டது தப்பாப்போச்சி. மரியாதையாப் போயிரு'' ஆக்காட்டி விரலை எச்சரிக்கும் விதமாய் ஆட்டியபடி சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்.

``அநியாயமா உங்க வீட்டுப் பொம்பளப் பிள்ளையையும் கொன்னுட்டு சாமியாக்கிட்டீங்களேடா.''

``எல்லாம் உன்னாலதான்யா.''

``ஏ... என்னடா சொன்ன, வகுந்துருவேன் பாத்துக்கோ'' தன் இடுப்பு இடைவாரிலிருந்து கொம்பையா கத்தியொன்றை உருவி உப்புத்தூராரின் நெஞ்சில் நிறுத்தினார்.

உப்புத்தூரார் திகைத்து வாயடைத்து நின்றார்..எல்லோரும் அப்போதுதான் பார்த்தார்கள் அவரிடமும் ஆயுதம் இருப்பதை.

``விடுங்க... விடுங்க’’ கூட்டத்தினர் இருவரையும் அடக்கினார்கள்.

``ஏம்வே உப்புத்தூரா, அடங்கமாட்டீரா. போன பிள்ளைக போயி சேந்துருச்சுக. ரெண்டு பக்கமுமே இழப்பு இருக்குல்ல. இப்போம் இவரக் குத்தி என்ன பண்ணப்போற. நல்ல வேளக்கி குத்தன கத்தி ஆழமா இறங்கல... இல்லாட்டி உசுருக்கு ஆபத்தால முடிஞ்சிருக்கும். ரெண்டு பேருமே நல்ல மனுசங்கதான். சமாதானமா போய்க்கோங்க.''

``பச்ச மண்ணும், சுட்ட மண்ணும் எங்கயாவது ஓட்டுமா? வாங்கலே...’’ தன் கூட்டுக்காரர்களை அழைத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து கிளம்பினார். ஒரு எட்டு முன்னகர்ந்தவர், கரியனைப் பார்த்துத் திரும்பினார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 7

``வில் வண்டிக்கி நெருப்பு வக்கிறிகளோ. ம்... பாத்துக்கலாம்'' கரியனை மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

``மிதிச்சவனக் கடியாத பாம்பு உண்டா? நீ குத்த... திரும்ப அவரு வெட்ட... இனிமே இது ஓயாத அக்கப்போருதான். என்னமும் சாகுங்க’’ சமாதானம் பேச வந்தவர் கோபமாய் ஏசினார். ``போங்கப்பா. கூட்டம் கலையுங்க. வண்டியெல்லாம் நகரட்டும்’’ யாரோ கத்தினார்கள். எல்லா வண்டிகளும் மீண்டும் நகரத் துவங்கின. தூரத்தில் வில் வண்டி பாதிக்கு மேல் எரிந்து கறுத்துக் கிடந்தது. உப்புத்தூரார் அதை நோக்கிப் போனார்.

``நீரூ வாரும் என் வண்டில போகலாம். அங்குன மேலப்பாளையம் சந்தைல இறக்கி விடுறேன்'' எண்ணெய்ச்செக்கு வேலாயுதம் கூப்பிட்டார்.

``நான் இவன கூட்டிட்டுப் பின்னாடி வாறேன். நீங்க எண்ணெக்காரர் வண்டில போங்க'' கொம்பையா கரியனின் அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து அழுத்தி ``நீ மலையரசன் கூட வா. சரியா...'' கரியன் சரி என்பதுபோல் தலையாட்டினான்.

``அவன ஏதாவது சாப்பிட வெச்சி கூட்டியாடா.’’

கொம்பையா வலியோடு வண்டியில் ஏறச் சிரமப்பட்டார். வண்டி நகரத் துவங்கியதும் கரியனைக் கண்ணெடுக்காமல் பார்த்தார். கரியனும் வண்டி தூரம் போகும் வரை அப்படியே பார்த்தான்.

சில வண்டிக்காரர்கள் வண்டியைக் கண்மாய் ஓரத்தில் இறக்கி மரத்தடியில் கட்டுச்சாதம் பிரித்துச் சாப்பிடத் துவங்கினார்கள். தேக்கிலையில் ஒவ்வொரு கை வாங்கி கரியனுக்குச் சாப்பிடக் கொடுத்தான். ``சாப்பிடு. நேத்து சாப்பிட்டதுதான.'' கரியன் வாங்கிக் கொண்டான். மலையரசன் கொஞ்சம் தள்ளி மறைவுக்குப் போய் சாராயம் குடித்துவிட்டு வந்தான். ``பெரியாம்பள என் தகப்பனுக்கும் மேல... அவர முடிக்கணும்னு நினச்சா நான் அவங்கள முடிச்சிருவேன். எங்க அந்த உப்புத்தூராரு, இப்போமே சாகடிக்கிறேன். டேய்...'' கண்மாய் மேட்டிலேறி அவர்கள் தூரத்தில் நிற்கும் திசை நோக்கிக் கத்தினான். ``அநியாயமா சோலையப்பனையும் கொன்னுட்டீங்கல்ல... நாய்களா...'' வெடித்து அழுதான். அங்கிருந்தவர்கள் இழுத்து வந்து சமாதானப்படுத்தினார்கள்.

சிறிது நேரத்தில் எல்லோரும் அங்கிருந்து கிளம்ப வண்டி கட்டினார்கள். ``நீ அந்தக் கருவாட்டு வண்டில ஏறிக்கோடே.''

``வேண்டாண்ணே... உன்கூட நடந்து வரேன்.''

``ம்...''

கரியன் சிறிது தூரம் போனதும் கேட்டான். ``ஏண்ணே, இந்தச் சோலையப்பன், மயிலாத்தாலாம் யாரு?''

பதில் பேசாமல் மலையரசன் அமைதியாக வந்தான்.

``ண்ணே''

``ம்... பெருமூச்சோடு சொல்லத் துவங்கினான்.

``அவன் உன்னப் போலயே நல்ல இளந்தாரிப் பயடா. சாகுறப்போ உன்னோட ஒண்ணுரெண்டு வயசுதான் மூப்பா இருக்கும். அண்ணே அண்ணேன்னு எங்காலச் சுத்திக்கிட்டே கிடப்பான். பத்து பதினஞ்சி வருசமா பெரியாம்பளகூட இருக்கேன். ஆனாலும் கொம்பையாக்கு அவன்னாதான் உசுரு. உன்ன மாதிரியே எங்கயோ இருந்து வந்தான். நாலஞ்சி வருசமா எங்ககூடவே போற இடமெல்லாம் வந்து ஆக்கிப் பொங்கித் தின்னுட்டு சொல்ற வேலையெல்லாம் முகஞ்சுளிக்காம பண்ணிக்கிட்டிருந்தான். எப்பயும் அறக்கப் பறக்கதான் இருப்பான். அவருக்கு அதனாலயே அவன ரெம்ப பிடிக்கும். நொடிக்கும் அவர விட்டு நகர மாட்டான். ஒரு கட்டத்துல அவரு அவனப் பாத்துக்கிட்டாரா. அவன் அவர பாத்துக்கிட்டானான்னு தெரியாது. அப்படி பய. வம்படியா இந்த உப்புத்தூரார் ஆட்க தான் கொன்னுட்டானுங்க.''

ஏழு கடல்... ஏழு மலை... - 7

``கொன்னுட்டானுங்களா?''

``ம்... உப்புத்தூரார் வீட்ல மயிலாத்தான்னு வயசுப் பிள்ள ஒண்ணு இருந்துச்சி. பதினஞ்சி வயசிருக்கும். நல்ல பருவம். செகப்பா களையான பிள்ள. உப்புத்தூரார் மூத்த அண்ணன் பெரிய வீட்டுக்கு நாலு செட்டு மாடுக வாங்க ஆசபட்டாரு. கொம்பையா அவருக்கு ரெம்ப வருஷப் பழக்கம். அவருதான் இனமும் சுழியும் பாத்து வாங்கி, தொழுவத்துக்குக் கொண்டு வந்து சேத்தாரு. மாட்டப் பழக்குறதுக்கு ரெண்டு நாளு பெரிய வீட்ல விருந்தாடியா தங்கியிருந்தாரு. கூட சோலையப்பனும் இருந்தான். அந்த ரெண்டு நாளுக்குள்ள மயிலாத்தாளுக்கும் சோலையப்பனுக்கும் பழக்கமாகிடுச்சி.

அதுக்கப்புறம் சோலையப்பன் ஒரு நிமிஷம் கூட சந்தைக்குள்ளயே இல்ல. கொம்பையா அடிக்கடி அவனத் தேடும்படி ஆகிடுச்சு. சேந்த மாதிரி ரெண்டு நாளுகூட காணாமப்போயிடுவான். ரெண்டு பேரும் காடுகரன்னு சுத்தியிருக்காங்க. அந்தப் பிள்ளக்கி வயித்துல கருப்பிடிச்சி சின்ன உசுரு வளரத் தொடங்கியிருக்கு. சோலையப்பன் வேத்து ஜாதி ஆளு. வீட்டுப் பொம்பள ஆட்களுக்கு விஷயம் தெரிஞ்சி ஆம்பளைகளுக்குத் தெரியாம கருவை அழிச்சிரலாம்னு முயற்சி பண்ணுனாங்க. மயிலாத்தா அதுக்கு ஒத்துழைக்க மாட்டேன்னு சொல்லிட்டா. என்ன ஆனாலும் அவனத்தான் கட்டிப்பேன்னு நின்னா. கொம்பையாக்கு விஷயம் தெரிஞ்சி அவர் உப்புத்தூரார் அண்ணன்கிட்ட பேசப் போனாரு. உப்புத்தூரார் அப்போ பருத்தி யாவாரத்துக்கு அருப்புக்கோட்டைக்குப் போயிருந்தாரு. மயிலாத்தா பிடிவாதமா நிக்கிறத பாத்தும், தான் மக வயித்துல கரு பிடிச்சிருக்கிறத யோசிச்சும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாரு. அவருக்கு மயிலாத்தானா அவ்வளவு பிடிக்கும். அந்தப் பிள்ளைய ஓங்கிகூட பேசல. ஒத்த வெத்தலையும், சுருள் பாக்கும் வச்சி கொம்பையாவும், உப்புத்தூரார் அண்ணனும் நிச்சயம் பண்ணிக்கிட்டாங்க. உருமால் துண்டையும் மாத்திக்கிட்டாங்க. அருப்புக்கோட்டைக்குப் போன தம்பி வந்ததும் அடுத்த ரெண்டு நாளுல கல்யாணத்த முடிச்சிரலாம்னு சொல்லி அனுப்புனாரு.

யாவாரத்துக்குப் போயிட்டு வந்த உப்புத்தூரார் விசயத்த கேட்டுட்டு வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சிருக்காரு. அவருக்கு பிள்ள இல்லாததால மயிலாத்தானா உசுரு. அன்னைக்கி முழுக்க வீடே கண்ணீரும் கம்பலையுமா இருந்திருக்கு. வெளி ஆட்கள் நிறைய வரவும் போகவுமா இருந்திருக்காங்க. சாயந்திரமா மயிலாத்தாளுக்குப் பட்டு உடுத்தி, கழுத்து நிறய பொன்னும், தல நிறய பூவும் வெச்சி எதோ கல்யாண ஐதிகம்னு சொல்லி நல்லா வெளக்குன பித்தளப் பானையில அவங்க பாலமடைத் தோட்டத்துக் கிணத்துல போயி நிறகுடம் தண்ணி எடுத்து வரச் சொல்லியிருக்காங்க. கூடவே உப்புத்தூரார் பொண்டாட்டியும், வேற ரெண்டு பொம்பளைங்களும் போயிருக்காங்க. ‘நீ போயி எடுத்திட்டு வா. நாங்க இங்குன நிக்கிறோம்’னு சொல்லிட்டு அவங்க தூரமாவே நின்னுக்கிட்டாங்க. எதோ உறுத்தலோட திரும்பித் திரும்பிப் பாத்துகிட்டே மயிலாத்தா கிணத்துக்குள்ள இறங்கிருக்கு. கடைசிப் படி வரைக்கும் இறங்கி பானை அடி பாகத்தால மேல் தண்ணிய விலக்கிட்டு பானைய தண்ணிக்குள்ள அமுக்கிட்டு குபுகுபுனு தண்ணி பனைக்குள்ள ஏறுறத பாத்துக்கிட்டு இருக்கா. தண்ணிக்குள்ள யாரோ நிக்கிற நிழல் தெரியுது. வெளிய `ஓ...’ன்னு பெரும் சத்தமெடுத்து பெண்கள் அழுற சப்தம். மயிலாத்தா கிணத்துக்குள்ளயிருந்து அண்ணாந்து மேல பாத்தா இதே வண்டிக்காரன் பெரிய பாறாங்கல்லா தூக்கிட்டு மயிலாத்தா தலைக்கு மேல நிக்கிறான். வண்டிக்காரன ‘அண்ணே’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள கல்லப் போட்டுட்டான்.

அன்னைக்கி ரா முழுக்க சுத்துப்பட்டு ஊர்லயிருந்த சொந்த ஜாதி ஆட்க எல்லாம் வண்டி மாடுகளோட வந்து ஆத்துல மண்ணு சுமந்து சுமந்து கொட்டி காலைக்குள்ள கிணத்த மூடிட்டாங்க. அதுக்கு மேல ஒரு கல்லு நட்டு பொம்பளைங்க விளக்கும் போட்டுட்டாங்க. மயிலாத்தா தின்னு போட்ட மாங்கொட்டவொன்னு கொல்லையில் முள பிடிச்சி நின்னுருக்கு. அத எடுத்து வந்து கிணத்து மேட்டுல ஊனி வெச்சி சாமியாக்கிட்டாங்க. விஷயம் தெரிஞ்சி சோலையப்பனும் கொம்பையாவும் அங்க ஓடுனாங்க. தண்ணி எடுக்கப் போன பிள்ள தவறி விழுந்து செத்துப் போச்சுன்னு சொல்லிட்டாங்க. சோலையப்பனுக்கு சந்தேகமா இருந்துச்சி. மயிலாத்தா நல்ல தாட்டியமான பிள்ள. அவளுக்கு நல்லா நீந்தத் தெரியும். எதோ நடந்திருக்குன்னு மயிலாத்தா பேரச் சொல்லி அழுதமேனிக்கி மூடுன கிணத்துல தல வெச்சிப் படுத்திருக்கான். நாலஞ்சி நாளு குமுறிக் குமுறி நீரோடுற சப்தம். ஊத்து கசிஞ்சி கசிஞ்சி பெருங்கண்ணீர் மாதிரி மூடுன கிணத்துக்கு மேல வருது. மயிலாத்தா உள்ளதான் அழுதுகிட்டு இருக்குறான்னு சொல்லிக்கிட்டு கையால மண்ண வாரிக்கிட்டேயிருந்தான். அடுத்த நா காலையில சோலையப்பன் தல தனியா, முண்டம் தனியா வெட்டுப்பட்டுக் கிடந்தான்.’’

ஏழு கடல்... ஏழு மலை... - 7

``மண்ணின் வெளியே தொடர்பற்றவர்கள்போல் தெரிகிறோம் நாம்.

மண்ணின் அடியில் நம் வேர்கள் எவ்வளவு தூரத்திற்கும் சென்று

ஒன்றோடொன்று எப்படிப் பிணைந்திருக்கிறது பார், நம்மைப்போல்.’’ - பராரிகள்

மகன் வழி (1977 - மழைக்காலம்)

கங்கையன் தூரத்திலிருந்து கைகாட்டி அழைத்ததும் சூரவேல் மரத்தடியிலிருந்து கிளம்பிப் போனான். கூடவே இருளி விஷயம் பேசியவரும் வந்தார். ``நாம பேசுன சமாச்சாரம் நமக்குள்ளேயே இருக்கணும் என்ன. நான் எதாவது சொன்னேன்னு தெரிஞ்சா கங்கையன் என்ன சூளைல வெச்சி எரிச்சிருவான்.''

அருகில் வந்ததும் கும்பிட்டுக்கொண்டார். ``காசுன்னா தேரம் விடியறதுக்கு முன்னமே வந்துரதா?'' கங்கையனுக்கு நல்ல கனத்த குரல்.

``அப்படிலாம் இல்லங்க. திருநவேலில ஒரு சோலி இருந்தது. அப்படியே உங்களயும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.''

``ம்... பையன் யாரு, உம்ம உறவுக்காரனா?''

``ஐயோ, அதெல்லாம் இல்லைங்க. உங்களப் பாக்கத்தான் நிக்கிறதா சொன்னான்.''

கங்கையன் சூரனை யார் என்பதுபோல் பார்த்தார்.

``சூள வேலைக்கி மாவுத்தன் பழனி சொல்லிவிட்டாரு.''

``கொட்டாரம் பழனியா?''

``ம்''

``மழகாலம் முடியட்டும். வந்து சேந்துக்கோ.''

``ம்''

``கிளம்பு''

ஏழு கடல்... ஏழு மலை... - 7

விரட்டாத குறையாக கங்கையன் போகச் சொல்வது சூரனுக்கு என்னவோ போலிருந்தது. இனி எங்கே போவதென யோசிக்க முடியவில்லை. சூளையின் வாசல் நோக்கி நடந்தான். கொஞ்சம் தூரம் போயிருப்பான். யாரோ பின்னாலிருந்து கூப்பிடுவது போலிருந்தது. ``ஏ... தம்பி'' இருளி விஷயம் பேசியவர் கூப்பிட்டபடியே பின்னால் ஓடி வந்தார்.

``கங்கையன் கூப்பிடுறாரு. எதுக்குன்னு தெரியல. ஒரு வேள நான் இருளி விஷயமா ஏதும் சொன்னேனான்னு கேட்டா சத்தியமா இல்லன்னு சொல்லிடு, சரியா...’’

தூரமாய் கங்கையனும், அவன் அருகில் வேம்பும் நின்றுகொண்டிருந்தார்கள். வேம்பு தன் சித்தப்பாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

சூரன் அருகில் போனதும் ``இன்னிக்கி எங்க சின்னமாக்கு சாமி கும்பிடுற நாளு. நல்ல நாளும் அதுவுமா வேல கேட்டு வந்த பயல திருப்பி அனுப்பக்கூடாது. சேந்துக்கோ'' என்றான்.

கங்கையனைப் பார்த்துக் கும்பிட்டான்.

``பேரு என்ன?'’

``சூரவேல்''

``எந்த ஊரு?''

``இந்த நாட்டோட கடேசி ஊர்ல கடேசி வீட்ல கடேசியா பொறந்தவன்.''

வேம்பு அவன் பதிலைக் கேட்டதும் கண்கள் விரிய ஆச்சர்யமும் புன்னகையுமாய்ப் பார்த்தாள்.

``கன்யாகுமரியா?’’

``ம்''

``அப்படிச் சொல்ல வேண்டியதுதான.''

ஆனால் வேம்புக்கு சூரன் சொன்ன பதில் தான் பிடித்திருந்தது.

``ம்... சூளைல வேல பாத்துப் பழக்கம் இருக்கா?''

``ரெட்ட யான ஓட்டு கம்பனில வேல பாத்துருக்கேன். சூளையிலயும் கொஞ்ச நா இருந்திருக்கேன்.''

``ம்... வேம்பு, இந்தப் பயலுக்கு தங்குற இடத்தக் காட்டு.''

``சரி சித்தப்பா.''

அழைத்துப் போனாள். வேம்பு நடந்து கொண்டிருக்கும்போது அடிக்கொரு முறை சிரித்தாள். பின் அடக்க மாட்டாமல் சிரிப்பை அடக்கினாள். பார்க்க அழகாயிருந்தது.

``ஊர் பேர யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்வீங்களா?''

``ஆமா.''

வெடித்துச் சிரித்தாள். சூளையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள். வேம்பு சிரிப்பதை வேடிக்கை பார்த்தபடி கற்களை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். சட்டென சிறிய தூறலாய் துவங்கி விரிந்து விரிந்து பெரிதாய் மழை பெய்யத் துவங்கியது. சூளையில் எல்லோரும் பரபரப்பானார்கள். அடுக்கி வைத்திருந்த கற்களின் மீது எங்கிருந்தோ பனை ஓலைகளை விரைந்து எடுத்து வந்து அடுக்கினார்கள். சூரனும் ஓடி ஓடி ஓலையை எடுத்து வந்து அடுக்கினான். எல்லோரும் மழையில் நனைந்தார்கள். வேம்பு அங்கிருந்த வயதான பெண்ணிடம் சொன்னாள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 7

``நேத்தே சொன்னேனா எங்க மயிலாச்சிக்கி சாமி கும்பிடுற நாளுல மழ பெய்யும்னு.''

``ஆமாடி ஆத்தா. நெசம்தான். பஞ்சாங்கம் தோத்தது போ.''

``மழகாலத்துல சாமி கும்பிட்டா மழதான் பெய்யும். பெருசா வந்துட்டா.'' எல்லோரும் சிரித்தார்கள்.

சூரனுக்கு சிரிக்கணுமா, அமைதியாக முகத்தை வைத்துக்கொள்ளணுமா என்பதில் சந்தேகம் இருந்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றது.

``நான் எங்க தங்கணும்னு...'’

வேம்பு தூரமாய் எங்கயோ பார்த்தபடி நின்றாள். தூரத்தில் மாமரத்தின் அடியில் நான்கைந்து மயில்கள் நின்று தோகையை அகல விரித்து ஆடிக்கொண்டிருந்தன. சூரனின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் வேம்பு நகர்ந்து அங்கு போய்க்கொண்டிருந்தாள். சூரன் பின்னாலேயே சென்றான்.

மாமரத்தின் அடியில் மயில்களைப் பார்த்தபடி கண்களில் நீர்வழிய நின்றாள். சூரன் கொஞ்சம் தள்ளி ஒரு கல்திட்டின் மேல் ஏறி நின்றான். எதார்த்தமாய் திரும்பிப் பார்த்த வேம்பு சூரனைக் கோபமாய்த் திட்டினாள்.

``ஏ... அதுல இருந்து இறங்கு. அங்கிட்டுத் தள்ளிப் போ. சாமி மேல ஏறி நிக்கிற...''

``சாமியா...'' அப்போதுதான் பார்த்தான். அந்தக் கல் வரிசை கிணற்று வரப்புபோல் பெரிய சதுரமாய் சுற்றி நின்றது.

``ஆமா, இது எங்க மயிலாத்தா கோயிலு.''

‘`இறங்கு... இறங்கு... இறங்கு’’ கத்தினாள்.

வேம்பின் முகம் கொஞ்சம் உக்கிரமாய் மாறத் துவங்கியது. கண்களை உருட்டிக்கொண்டு, தன் நாக்கைப் பற்களில் மடக்கிக் கடித்துக்கொண்டு, ``ம்ம்ம்...'' என்று உறுமியபடியே தலையைச் சுற்றியபடி நிலை தடுமாறினாள்.

தூரத்திலிருந்து ``வேம்புக்கு சாமி வந்துருச்சி, வா வா’’ என்று கத்தியபடியே ஓடிவந்தார்கள்.

- ஓடும்