மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 8

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`நீர் நிறைந்த ஆறு உங்கள் துக்கத்தையும் சேர்த்தே அடித்துச் செல்கிறது. துக்கம் கொண்டவர்களே இறங்கிப் பாருங்கள்.’’

- பராரிகள்

தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )

மேலப்பாளையம் சந்தைக்குள் கரியனும் மலையரசனும் நுழையும்போது இருளத் துவங்கியிருந்தது. அங்கங்கே மாடுகளும் வியாபாரிகளும் குழுமியிருந்தார்கள். தொடர்ந்து விற்பனைக்கு மாடுகளும் வண்டிகளும் வரத்துவங்கி, நாளை அதிகாலை துவங்கி மூன்று நாள் நீடிக்கும் சந்தைக்கு சரியான இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ஏதேனுமொரு மரத்தின் கீழ் இடம்பிடிக்கப் போட்டியிருந்தது. பகல் பொழுதுகளில் நிழலில் மாடுகளும் யாவாரிகளும் சம்சாரிகளும் அமர்ந்துக் கொள்ள அப்படி இடங்கள் தோதாயிருந்தது. அதற்காகத்தான் முந்தைய நாளே தத்தம் ஊர்களிலிருந்து கிளம்பி இரவுக்குள் சந்தைத் திடலுக்குள் வந்துவிடுகிறார்கள். இன்னும் இரவெல்லாம் வெவ்வேறு ஊர்களிலிருந்து மாடுகள் சந்தையை நோக்கி வரத் துவங்கி அதிகாலையில் சந்தை நிரம்பிவிடும். முழு நிலவு நாளாயிருக்க வேண்டும். சந்தை நல்ல வெளிச்சமாய் இருந்தது. குத்தகைக்காரர்கள் மாடுகளை எண்ணி ரசீது போட்டுக் கொண்டிருந்தார்கள். மலையரசன் அதில் ஒருவரிடம் ``கொம்பையாவ பாத்தீரா?’’ என்று கேட்டான்.

``அந்தா வாகை மரத்தடில கூட்டமா இருக்கு பாரு, அங்குனதான் இருக்காரு. யாரோ கொம்பையாவ குத்திட்டாங்கலாம்ல. விஷயம் கேள்விப்பட்டு பீடி கம்பனி முதலாளி பெரிய பாயும் அவுக தம்பியும் பாக்க வந்திருக்காக.’’

``ம்.’’

வாகை மரத்தடியை நோக்கி இருவரும் வேகமாக நடந்தார்கள். செல்லும் வழியிலேயே,

``ஏன்யா மலையரசா, நீயெல்லாம் இருந்துமா இப்படி நடந்துபோச்சி? அந்நேரம் நீ பெரியாம்பள கொம்பையா பக்கத்துல இல்லையா?’’

ஏழு கடல்... ஏழு மலை... - 8

வித விதமான கேள்விகள். பொருட்படுத்தாமல் இருவரும் கூட்டத்தை நோக்கிச் சிறிய ஓட்டத்தோடு நடந்தார்கள். கூட்டத்தை விலக்கிவிட்டு கொம்பையாவின் அருகில் வந்து நின்றார்கள். கொம்பையா அவர்களைக் கண்களால் கண்டுகொண்டார். நாலைந்து பேர் அரிக்கேன் விளக்கைப் பிடித்தபடி நின்றார்கள்.

பீடி கம்பனி பெரிய பாய் தனது வீட்டில் கொஞ்சநாள்கள் தங்கி ஓய்வு எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

``கொடிமரத்து வீட்டுச் சாவி தந்துட்டுப் போறேன். வீடு சும்மாதான் கிடக்கு. உங்க வீட்டப்போல. எத்தன நாள் வேணும்னாலும் தங்கி இருந்துட்டுப் போகணும். என்ன உதவின்னாலும் கேளுங்க. திருநவேலி டவுன்ல இங்கிலிஷ் ஆஸ்பத்திரி வந்துருக்கு. வாங்க, அங்குன கொண்டு போயி காட்டலாமா?’’

``வேண்டாம். சின்னக் காயம்தான். வலி ஏதும் இல்ல. ஐஞ்சாரு நாளுல சரியாயிடும். எனக்கு மேல வானத்தப் பாத்த மேனிக்குப் படுத்தாத்தான் தூக்கம் வரும். நாலு சுவத்துக்குள்ள படுத்தா மூச்சி முட்டும்.’’

``ம்... மூணு நாளக்கி உண்க மட்டுமாவது எதாவது வெக்கச் சொல்லி குடுத்துவிடட்டுமா...’’

மலையரசனை நோக்கிக் கைகாட்டி ``வேணாம் வேணாம்... பாய்மாரே, இவன் பாத்துப்பான் ஏதும் வேணும்னா கேட்டு ஆள் விடுறேன்.’’

``எதுனாலும் கூச்சப்படாமக் கேளுங்க. உங்களுக்குக் கடமபட்ருக்கோம். நல்லது. அப்போ வரட்டுமா...’’ அவர்கள் கும்பிட்டுவிட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் வந்திருந்த வண்டி பெரிய கூண்டு வேய்ந்து மெல்லிய வெண்துணியால் மறைப்புகள் போடப்பட்டு உள்ளே திண்டும், அதன்மேல் சிகப்புப் பட்டு விரிப்பும் விரிக்கப்பட்டிருந்தது. வண்டியின் பிடியைப் பிடித்து ஏறும்போதுதான் கரியன் கவனித்தான், பாய்மார்கள் இருவருமே கையில் குருவி ரத்த நிறத்திலிருக்கும் பெரிய மாணிக்கக்கல் மோதிரம் அணிந்திருந்தார்கள். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அது புது ரத்தம்போல் ஜொலித்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 8

சந்தைக்குள் நுழையும் எல்லாருமே விஷயம் அறிந்து கொம்பையாவைத் தேடி வந்தார்கள். கருவாட்டுப் பேட்டையிலிருந்தும், கருப்பட்டிப் பேட்டையிலிருந்தும் சில ஆட்கள் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க வந்திருந்தார்கள். கூட்டமாய்க் கூடியது. ஒரு மனிதன் எப்படி இவ்வளவு மனிதர்களை சம்பாதித்திருக்க முடியும்! கரியனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

கூட்டத்தையெல்லாம் விலக்கிவிட்டு காத்தான் உள்ளே நுழைந்தார். ``எங்க அவன?’’

காத்தான் கொஞ்சமாய் கூன் விழுந்த மனிதர்; எழுபதைத் தாண்டி வயதிருக்கும். அவரின் தலையிலும் நெஞ்சிலும் இமைகளிலும்கூட முடிகள் வெண்மை பூத்திருந்தது. பழுத்த வயதென்றாலும் உடல் இறுக்கம் குலையாமல் காய்ந்த களிமண் போலிருந்தது. பல வருடமாய் இரும்பிலும் நெருப்பிலும் வேலை செய்தது காரணமாயிருக்கலாம். சுற்றியிருக்கும் ஊர்களில் நன்கு அறியப்பட்ட மனிதர் காத்தான். கொல்லப் பட்டறை வேலைகள் அவருக்கு அத்துப்படி. விவசாயக் கருவிகள், மாட்டு வண்டியின் இரும்புச் சட்டம், உலோகம் சம்பந்தப்பட்ட வேலைகள் திருத்தமாய்ச் செய்வார். முப்பது வருடங்களுக்கு மேலாய் கொம்பையாவை அறிந்த மனிதர் இவராக மட்டும்தான் இருக்கக் கூடும்.

``எங்கடா சண்ட போட்டுட்டு வந்த...’’ சிறுவனை அதட்டும் தந்தைபோலக் கேட்டார். காயத்தை மூடியிருக்கும் நாயுருவிக் கொழுந்தை வழித்து எடுத்து, காயத்தைக் கூர்ந்து பார்த்தார் ``லேய், அந்த விளக்க இங்குன கொண்டா.’’

யாரோ அரிக்கேன் விளக்கை அருகில் கொண்டு வந்தார்கள். தன் ஆட்காட்டி விரலில் முதல் கோட்டைத் தொட்டு அளவிட்டுக் காட்டினார். ``இந்தா இவ்வளவு ஆழம் இறங்கிருக்கு. ரத்தம் நிறய போயிருக்கும் போலயேடா...’’

``இரும்புக் காயத்துக்கு நாயுருவி கேக்கும்தான்.மஞ்சளும் சேத்து வச்சி அரச்சிருந்தா இன்னும் வேகமா ஆறும்.’’ தன்னோடு வந்தவனை விரட்டினார். ``யார்கிட்டயாவது போயி கொஞ்சம் மஞ்சள் வாங்கிட்டு வா. ஆட்கள போகச் சொல்லு. போங்க, அவன் செத்த தூங்கணும். காலைல வந்து பாருங்க. போங்க போங்க’’ விரட்டினார். ஆட்கள் பேசியபடியே கலைந்தனர்.

``எதாவது சாப்பிட்டானாடா?’’ மலையரசனைப் பார்த்துக் கேட்டார்.

``நான் இப்போந்தாம் வந்தேன். அவர் முன்னாடியே கருப்பட்டிப் பேட்டைக்குப் போற வண்டில வந்துட்டாரு.’’

``ம்... இரும்பு ஆயுதம் பட்டதால எப்படியும் ரெண்டு மூணு நாளைக்கி காச்சல் இருக்கும். எப்படிடே இருக்கு?’’ அவர் கழுத்தையும், நெற்றியையும் தொட்டுப் பார்த்தபடி கேட்டார். உடம்பில் கொஞ்சம் உஷ்ணம் தெரிந்தது.

``நல்லாத்தான் இருக்கேன் காத்தான். ஒண்ணும் இல்ல.’’

``என்ன நல்லாருக்க... அதான் உடம்பு இப்படிக் காயுதே.’’

கொம்பையா தன் மடிச் சுருட்டலிலிருந்து யாழ்ப்பாணச் சுருட்டை எடுத்துப் பற்ற வைத்து உறிஞ்சினார்.

காத்தானுக்கும் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அவர் பற்ற வைத்து பெரிய உறிஞ்சலாய் உறிஞ்சி நிறைய புகையை அண்ணாந்து வெளியே விட்டார். இருவரும் வானத்தைப் பார்த்தார்கள். வானில் இன்று நிறைய நட்சத்திரங்கள் தெரிந்தன. இத்தனை வருடங்களில் கொயகொயவென இவ்வளவு நட்சத்திரங்களை இருவரும் பார்த்ததில்லை. முழு நிலா அடிவானிலிருந்து கொஞ்சம் உயரத்திற்கு வந்திருந்தது. இருவரும் பார்த்தபடி சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள்.

``இந்த வாழ்க்கையில இது மாதிரி எத்தனடா...’’ காத்தான் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

``ம்...’’

``இன்னும் வெட்டுக் குத்துன்னு எவ்வளவு நாளைக்கி. இப்படி சந்த சந்தயா சுத்திக்கிட்டு இருக்காம குடும்பம்னு ஒண்ண அமைச்சிக்கிட்டு வாழலாம்ல?’’

``செத்த கம்முன்னு இரும்.’’

கரியனை அடையாளம் காட்டிச் சொன்னார் ``இவ்வளவு வயசுலேருந்து உன்னப் பாத்துக்கிட்டு இருக்கேன்டா. யார் பேச்சயாவது கேப்பியா. பிடிவாதக்காரன்டா நீ.’’

``இந்தா மலையராசா, அவனுக்கு உண்க ஏதாவது சூடா குடுடா.’’

``உளுந்தங்கஞ்சி வச்சிருக்கேன்.’’

``எனக்கும் ஒரு கையி சேத்துப் போடு.’’

``ம்... சேத்துதான் போட்ருக்கேன்.’’

``ம்... அதுல ரெண்டெண்ணம் பூண்டு நசுக்கிப் போடு.’’

``செரி.’’

கரியனுக்கு மலையரசனைப் பார்த்து ஆச்சர்யமாய் இருந்தது. இங்கே பேசிக்கொண்டே இருந்துகொண்டு எப்படி உணவுக்கும் ஏற்பாடு செய்தான்.

காத்தான் கொம்பையாவிடம் கேட்டார். ``இது யாருடே புதுசா. போன சந்தைக்கி பாக்கல. சோலையப்பன மாதிரி இருக்கான்?’’

``ம்... அதான் கூட கூட்டியாந்துட்டான்.’’

``கரியா வர்றியாடா?’’

கரியன் எழுந்து மலையரசனோடு போனான்.

``ஏண்ணே, பெரியவர் யாரு?’’

``நம்ம பெரியாம்பளைய பத்தி இந்த உலகத்துல முழுக்கத் தெரிஞ்ச ஆளு அவர் மட்டும்தான். எப்படியும் இன்னிக்கி ராத்திரிக்குத் தூங்க விடாம கதபோடுவார்னு நினைக்கேன்... யார் கதன்னுதான் தெரியல. அவருக்கு கேக்குறதுக்கு ஒரு காது மட்டும் கிடச்சிட்டா போதும். மனுசன் விடமாட்டாரு.’’

வழியெல்லாம் நிறைய யாவாரிகள் குடித்துக் கொண்டும், ரா உணவு எடுத்துக்கொண்டு மிருந்தார்கள். சிலர் அமர்ந்திருக்கும் ஏதாவதொரு மாட்டின் முதுகில் உடல் சாய்த்தபடி யாரிடமாவது பழக்கம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எதிரில் ஒருவன் ஒரு மண்சட்டியை சூடு பொறுக்க வைக்கோல்பிரியால் பிடித்தபடி வந்தான். ``நீங்களே எடுத்திட்டு வந்துட்டீங்களா.நான் வாங்கிக்கவா?’’ கையை நீட்டினான். ``வேணாம். இந்தாதான, நான் எடுத்திட்டு வரேன்.’’ எல்லோரும் வட்டமாய் அமர்ந்து ஆடாதோடா இலையால் கஞ்சியை அள்ளி உண்டார்கள். தொடுகாய் இல்லாக்குறைக்கு ஆளுக்கொரு பச்சை மிளகாயை உப்புத்தொட்டு கடித்துக்கொண்டார்கள். கரியனுக்கு முழு நிலவு நாளில் நான்கு மனிதர்களோடு சேர்ந்து அமர்ந்தவாறு இப்படி சாப்பிடப் பிடித்திருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 8

உணவு முடிந்ததும் மலையரசன் கொம்பையாவுக்குப் படுக்கை தயாரித்துக் கொடுத்தான். அடியில் மொந்தையாய் வைக்கோல்கள் பரப்பி அதன் மேலே கோணியை விரித்து... வெது வெதுப்பாயிருந்தது. கொம்பையா வலியோடு உறங்க சிரமப்பட்டார். காத்தான் மலையரசனிடம் ‘சாராயம் இருக்கிறது. ஒரு லோட்டாவை எடுத்துப் போய் வாங்கிட்டு வா’ என உத்தரவிட்டார். கொம்பையா அதைக் குடித்த சிறிது நேரத்தில் வலியை மறந்து உறங்கத்துவங்கினார்.

காத்தான் ஒரே நேரத்தில் பாடல் போன்றும், மந்திரம் போன்றும் நினைக்கத் தோன்றுமொன்றை உச்சரிக்க ஆரம்பித்தார்.

``ஆயிரம் மலை சுத்தி கருடா

ஈராயிரம் மலை சுத்தி கருடா

மூவாயிரம் மலை சுத்தி கருடா

நாலாயிரம் மலை சுத்தி கருடா

……

……

பத்தாயிரம் மலை சுத்தி கருடா

பத்தா பலஸ்திரி; நீலி நீலிஸ்திரி; காளி காளிஸ்திரி

கண்ணேறு; நாகேறு இறங்கு இறங்கு...’’

மலையரசனுக்கு விளங்கிவிட்டது. புட்டத்தில் ஒட்டியிருந்த தூசியையும் மண்ணையும் தட்டிவிட்டு ஆடுபுலியாட்டம் ஆடிக் கொண்டிருந்த வேறொரு குழுவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். கரியனுக்கு ஒன்றும் புரியவில்லை. காத்தானிடமே கேட்டான். ``இது பாட்டா, மந்திரமா...’’

``இது கண்ணேறுக்கும், நாகம் தீண்டுனாலும் சொல்ற மந்திரம். இத மூணு தடவ சொல்லிட்டு துத்தி இலைய திங்கக் குடுப்பாங்க. சரியாகிடும்னு ஒரு நம்பிக்க. இந்த மலையரசன் பய இங்க எப்படி வந்தான்னு தெரியுமா?’’ தெரியாது என்பதுபோலத் தலையை ஆட்டினான்.

``சொல்றேன் கேட்டுக்கோ. மலையரசனோட அப்பா வழி தாத்தா பெரிய பண்டுவர். சுத்துப்பட்டுல நல்ல பேர் கொண்ட ஆளு. என்ன நோய்க்கும் சரியா நாடி பாத்து மருந்து குடுத்திடுவாரு. இன்னும் ஒரு நாளுதான். ரெண்டு நாளுதான். வர்ற அம்மாசக்கி தாங்காதுன்னு அவகாசம் குறிச்சிக் குடுத்த எல்லா உயிர்களுக்கும் அவர் மருந்தும் மந்திரமும் சொல்லி ஆயுச நீட்டிக் குடுத்துடுவாரு. நெதம் காலையில அவக வீட்டு முன்னால எங்கெங்கெல்லாமோயிருந்து சனங்களா வண்டி கட்டி வந்து குமிஞ்சி கிடப்பாக. மலையரசனுக்கு அம்மையும் அப்பனும் சின்ன வயசுலயே மரணச்சிப் போய்ட்டாக. அவன தாத்தனும் பெரிய அப்பனும்தான் வளத்தாங்க. பெரிய அப்பனுக்கு ரெண்டு ஆண் வாரிசுக. ஊருக்கெல்லாம் நாடி பாத்து ஆயுசு விருத்தி பண்ணிக்குடுத்த பண்டுவருக்கு தனக்கு சீக்கிரம் ஆயுசு முடியப் போகுது, இன்னும் பதினாலு நாளுக்கு மேல உசுரு தன்கிட்ட தங்காதுன்னு தெரிஞ்சிபோச்சி. அவருக்கு மலையரசனுக்கு பண்டுவத்தையும், மந்திரத்தையும் கை மாத்திக் குடுக்கணும்னு ஆச. யாராவது ஒருத்தருக்குத்தான் இதத் தர முடியும். இல்லாட்டி பலிதம் போயிடும். மூத்த மகனுக்கு நிறைய குடிப்பழக்கமும் பெண் சகவாசமும் உண்டு. அப்படி இருக்குறவங்க மருந்து குடுத்தா நோயாளிங்க மருந்து மேல நம்பிக்க வெக்க மாட்டாங்க.

தன் மூத்த மகனக் கூப்பிட்டு பேரன் மலையரசனுக்குத்தான் மாத்திக் குடுக்கப் போறேன்னு தீர்மானமாச் சொல்றாரு. அவர் வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாரு. எனக்கு இல்லாட்டி என் பிள்ளைகள்ள ஒருத்தனுக்காவது கத்துக் குடுன்னு எப்படியெல்லாமோ கேக்குறாரு. பண்டுவர் மறுத்துட்டு அன்னைக்கே மலையரசன கிழக்க பாத்து உக்கார வச்சி பாடத்த ஆரம்பிச்சிட்டாரு. பதின்மூணு நாளைக்கி வெளி மனுஷங்கள பாக்காம ஒரு வேள மட்டும், உப்பும் தாளிதமும் இல்லாத, அடுப்புலயம் நெருப்புலயும் காட்டாத உணவுதான் பண்டுவருக்கும் மலையரசனுக்கும். வேணும்னா மரத்துலேருந்து பறிக்காம தானே கீழ விழுந்த கனிகள சாப்பிடலாம். நிதம் நான்காம் ஜாமத்துக்குப் போய் ஆத்துல குளிச்சிட்டு சூரிய வெளிச்சம் உடம்புல படுறதுக்குள்ள பாடத்துக்கு வந்திடணும்.

மூணாம் நாளுக்கு ஆத்துக்குப் போனவன பின்தொடர்ந்து அவன் பெரியப்பனும், அவன் பிள்ளைகளும் போயிருக்காங்க. ரெண்டு நாளா அக்கம்பக்க ஊர்கள்ள அடமழ. ஆத்துல புதுவெள்ளம் வருது. எப்பவுமே புது வெள்ளம் வந்தா பக கொண்ட மனுசங்களையும், ஆகாத பெண்களையும் அதுல ஆழ்த்திக் கொன்னு வெள்ளத்து மேல பழிபோடுற வழக்கம் எல்லா இடத்துலயும் இருக்கு. அதான் வருசத்துக்கும் புது வெள்ளத்துக்கு வன்மம் நிறைஞ்ச மனுசங்க காத்துக்கிட்டு இருப்பாங்க. மலையரசன் பெரிய அப்பன் இப்படி எல்லா வருசத்துக்கும் நிறைய பேர ஆழ்த்தி விட்ருக்கானாம். மலையரசனுக்கு நல்லா நீந்தத்தெரியுங்குறதால அவன் காலையும் கையையும் காட்டுக் கொடியால சுத்தி ஆழ்த்தி விட்ருக்காங்க. தண்ணி ரெம்ப வேகம் காட்டிப் போகுது. நான் கரையில நிக்கேன். கொம்பையா வெள்ளத்துல எதுத்து நின்னு குளிச்சிக்கிட்டு நிக்கிறாரு. அடில கொம்பையா கால எதோ உரசிக்கிட்டுப் போனது போல இருந்துருக்கு. ஒரு நொடிதான், அவர் காலு அதுல எதோ உயிர்த்துடிப்பு இருக்குன்னு உணர்ந்திருக்கு. கொம்பையா வெள்ளத்தோட முங்கி ஒரு கிலோமீட்டருக்கும் மேல நீந்திப் போயி மலையரசன் காலப் பிடிச்சிக்கிட்டாரு. அங்குன சுத்திப் பாத்தா ஏழெட்டுப் பிணம் கர ஒதுங்கிக் கிடக்கு. அதுல ஒண்ணு என் மக பிணம்.’’ சொல்லிவிட்டு காத்தான் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார். ``இருபது வருசத்துக்குப் பிறகு அப்பதான் பிள்ள உண்டாகியிருந்தா. அவளப் பாக்கத்தான் நானும் கொம்பையாவும் கிளம்புனோம். அதுக்குள்ள...’’ மேலும் குலுங்கினார்.

``அங்குன சுத்திப் பாத்தா ஏழெட்டுப் பிணம் கர ஒதுங்கிக் கிடக்கு. அதுல ஒண்ணு என் மக பிணம்.’’

‘`இந்த பூமியில் நீ எவ்வளவு தூரமாய் இருந்தாலும் உன் காதலின் வாசனையை உணரலாம்.’’

- பராரிகள்

மகன் வழி (1977 - மழைக்காலம்)

ஏழு கடல்... ஏழு மலை... - 8

வேம்புக்கு சாமி வந்திருப்பதாக எல்லோரும் ஓடி வந்தார்கள். வேம்பு தலையைச் சுற்றிச் சுற்றி ஆடி, தள்ளாடி பொத்தென்று கீழே விழப் போனாள். விழப்போனவளை சூரவேல் வந்து பிடித்துக்கொண்டான். அவன்மேல் சாய்ந்தபடி மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள். வேறொரு பெண் பித்தளை லோட்டாவில் நீர் மொண்டு வந்து தெளித்தாள். முதிய பெண்ணொருவர் சூடம் கொளுத்தி மயிலாத்தா சாமிக்கும் மாமரத்துக்கும் காட்டிவிட்டு வேம்புக்கும் காட்டினாள். வேம்பு கண் திறக்கும்போது சூட நெருப்பின் தீநாக்கில் கண் விழித்தாள். என்ன நினைத்தாளோ, எரிச்சலாய் `அதை அங்கிட்டு எடுத்திட்டுப் போ, போ’வெனக் கத்தினாள். யாரோ கொண்டு வந்து கொடுத்த ஒரு சொம்புத் தண்ணீரையும் துளி சிந்தாமல் வாங்கி அண்ணாந்து குடித்தாள். அவ்வளவு அருகில் அமர்ந்து கழுத்தேறி இறங்கி நீர் குடிக்கும் வேம்பின் வரிவரியாயிருக்கும் சங்குக் கழுத்தைப் பார்த்தபடியிருந்தான். தூரத்தில் வேம்பின் சித்தப்பா கங்கையன் வந்துகொண்டிருந்தார். சூரன் வேம்பின் முதுகைத் தாங்கியிருந்த தன் கையை நீக்கிவிட்டு அவள் முதுகை அருகிலிருந்த பெண்ணின் மேல் சாய்த்துவிட்டு எழுந்து கொண்டான். கங்கையன் வந்து அங்கிருந்தவர்களைத் திட்டிக்கொண்டிருந்தான். ``அவள ஏன் இங்க விட்டிங்க. சாமி கும்பிடுற நேரம் வந்தா போதும். அவளுக்குத்தான் அருள் வரும்னு தெரியும்ல, பின்ன ஏன் தனியா விடுறீங்க?’’ எல்லோரும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள். ``அதான் மழ நின்றுச்சில, போங்க, போயி வேலைய பாருங்க'' சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். எல்லோரும் கலைந்தார்கள். ஒரு சிறு பெண் பித்தளை லோட்டாவில் சுடச்சுட தேத்தண்ணி கொண்டு வந்தாள். வேம்பு அந்தப் பெண்ணிடம் ``இன்னும் கொஞ்சம் இருக்கா. இவருக்கு’’ என்று கேட்டாள். அவள் ``இல்லக்கா'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். ரெண்டு உறிஞ்சு குடித்தபின் பித்தளை லோட்டாவைக் சூரனிடம் நீட்டினாள். ``குடிங்க.’’ அவன் வாங்கத் தயங்கினான்

``இல்ல வேணாம்.''

``எச்சி வச்சிட்டேனா, பரவால்ல. இந்தப் பக்கமா வச்சிக் குடிங்க.''

``அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க’’ வாங்கிக்கொண்டான்.

``உங்களுக்கு எப்பவுமே சாமி வருமா?''

``எப்பவாது வரும். ஏன்?''

``சும்மா கேட்டேன்.''

``ம்... அது என்ன தோளுல மாட்டியிருக்கீங்க, மாட்டுக் கொம்பா?’’

``இது கொக்கர வாத்தியம். என் அப்பாவோடது. அவர் ஞாபகமா வெச்சிருக்கேன்.''

ஏழு கடல்... ஏழு மலை... - 8

கழற்றி வேம்பின் கையில் கொடுத்தான். அவள் அதை எடைகூடிய பொருளைப் பெற்றுக் கொள்வதைப்போல் பெற்றுக்கொண்டாள். வாய் வைத்து ஊதும் பகுதியிலும். மேல் நோக்கி விரிந்த பகுதியிலும் பித்தளைப்பூண் போட்டிருந்தது. அதில் வாய் வைத்து ஊதிப் பார்த்தாள். சப்தம் வரவில்லை. `ப்பு... பு’வென அடுப்புப் புனலிலிருந்து வருவதுபோல் குறுகிய காற்று சப்தம் மட்டும் வந்தது. கரியன் அவளிடமிருந்து வாங்கி, தன் வாயில் வைத்து ஊதினான். மூச்சைப் பிடித்து வயிற்றை எக்கி எக்கி ஊத ஊத, சப்தம் விரிந்துகொண்டே வந்தது. `ம்... ப்ப்ப்பாய்ங்...ங்ங்க்...’ வேம்பு புடைக்கும் அவன் கழுத்து நரம்புகளைப் பார்த்தாள். மயில்கள் இரை எடுப்பதை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் சப்தம் வந்த திசையை அசையாது பார்த்தபடி நின்றன. தூரத்தில் வேலை செய்தவர்களும் அதேபோல் அசையாமல் பார்த்தபடி நின்றார்கள். கொக்கரை ஓசை விரிந்து விரிந்து நகர்ந்து போய் க்கொண்டேயிருந்தது. வேம்பு கண்களை மூடி அந்த சப்தம் தனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளை கவனித்துக்கொண்டிருந்தாள். வேம்பின் உடல் சிலிர்த்தது. எதார்த்தமாய் வேம்பின் கைகளைப் பார்த்தவன், கையின் அரும்பு முடிகள் சிலிர்த்து நிற்பதை ரசிக்கத் துவங்கினான். இப்போது கொக்கரையின் பித்தளைப்பூணில் வேம்பின் எச்சில் வாசனையும் சுவையும் தெரிந்தது. ஏல வாசனையும் காட்டுப் பூவின் சுகந்தமும் கலந்த தெய்விக வாசனை அது.இன்னும் நுணுக்கித் தேடினால் பெயர் அறிய முடியாத வேறு சில வாசனைகளும் தெரிந்தன.அவள் எச்சிலுக்கு இளம் புளிப்பு கொண்ட புளியம்பூவின் சுவை. சில நேரம் ஈரமான துளசி இலையினது போலவும் தெரிந்தது. லயித்துப் போனான். ஊதுவதை நிறுத்தினான். அவன் ஊதுவதை நிறுத்தியபின்னும் காற்றில் இன்னும் அந்த ஓசை மிதந்து கொண்டிருந்தது. கண்களைத் திறக்காமலேயே வேம்பு சொன்னாள் ``நிறுத்தாத...இன்னும் ஊது. இன்னும் இன்னும் இன்னும்... நிறுத்தாம ஊது.’’ அந்த ஓசை மிதந்துகொண்டிருந்தது.

சூரன் அவள் மூடிய கண்களைப் பார்த்தபடி மீண்டும் ஊத ஆரம்பித்தான். இந்த முறை இன்னும் இனிமையும் தெய்விகமும் கூடி வந்தது. வேம்பின் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்துகொண்டேயிருந்தது. சூரன் தன் கண்களை இறுக்க மூடி மேலும் மேலும் ஊதினான். அவனுக்குத் தன் தாயின், தகப்பனின், தன் அண்ணனின் முகங்கள் தோன்றித் தோன்றி மறைந்தன. அவனை அறியாமல் அவனுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. இருவரும் கண்களைத் திறக்காமல் மௌனமாய் அழுதபடி இருந்தார்கள். ஏன் அழுகிறார்களெனத் தெரியவில்லை.

மீண்டும் மழை துவங்கியது. உடல்மேல் நீர்த் துளிகள் பட்டுக் கண்களைத் திறந்தார்கள். எதிர் எதிரில் தெரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அசையாது நின்றார்கள். மழை அவர்களை நனைக்கத் துவங்கியது. மழைச் சப்தத்தில் கங்கையனின் சப்தம் சுத்தமாய்க் கேட்கவில்லை. ``வேம்பு... ஏ... வேம்பு...’’ அவன் பெரிய சப்தத்தால் அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.

- ஓடும்