மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 9

ஏழு கடல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`பயணி எதையும் கனவு காண்பதில்லை; எதையும் அங்கே சென்று காண்பான்.

சூரியன், நிலவு மற்றும் பயணிகள் எப்போதும் மூப்படைவதில்லை.’’

- பராரிகள்

தந்தை வழி (1951 -முன்பனிக்காலம் )

``கரியா... ஏ... கரியா எந்திரி...'' உறங்கிக்கொண்டிருந்தவனை மலையரசன் உசுப்பினான். கரியன் முழங்காலை வயிற்றின் அருகில் வைத்துக்கொண்டு மார்கழிக் குளிரில் குன்னியபடி படுத்துக்கிடந்தான். மலையரசன் மீண்டும் மீண்டும் அவனை உசுப்பினான். ``ஏ...கரியா...'' தலை வரை மூடியிருக்கும் துணியை விலக்கி கரியன் மெல்ல தலையை உயர்த்தி, கண்களைத் திறக்க மாட்டாமல் திறந்து மலையரசனைப் பார்த்தான்.

``எந்திரி இன்னும் கொஞ்ச நேரத்துல சந்த ஆரம்பிச்சுரும்.ஆத்துப்பக்கம் போயிட்டு அப்படியே குளிச்சிட்டு வந்துரலாம் வா.'' சுற்றிலும் பார்த்தான். பொழுது இன்னும் கருமை பூத்து மையிருட்டாய்த்தானிருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். பிரகாசமாய் விடிவெள்ளி தெரிந்தது. நேரம் எப்படியும் நான்கைத் தாண்டியிருக்கும். கரியனுக்கு இன்னும் உறக்க சடவு இருந்தது, இரு கைகளையும் பின்தலைக்குக் கொண்டு வந்து உடலை நெளித்தபடி சடவு முறித்தான். அப்போதுதான் தன்மேல் போர்த்திக்கிடந்த இரண்டு துண்டுகளைப் பார்த்தான்.அதில் கொம்பையாவினுடையது ஒன்று. மற்றொன்று மலையரசனுடையது.

``பனில சுருண்டுகிட்டுப் படுத்துகிடக்கன்னு நான்தான் போத்திவிட்டேன்''. மலையரசன் தன் துண்டை எடுத்துக்கொண்டான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 9

கரியனின் அருகில் மாடொன்று நின்றவாறு மூத்திரம் கழிந்து அவன் மேல் பட்டுத் தெறித்தது. கரியன் துணிகளைச் சுருட்டிக்கொண்டு விருட்டென்று எழுந்துகொண்டான். தன் கழுத்தைச் சுற்றி சந்தையைப் பார்த்தான். அவனை ஒட்டியே நூற்றுக்கும் மேல் மாடுகள் நின்றுகொண்டிருந்தன. இரவு அவன் படுத்துறங்கப் போனபோதுகூட கால்வாசி சந்தை நிறையவில்லை. இப்போது சந்தை நெடுந்தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் மாடுகளால் நிரம்பிக்கிடந்தது. அங்கங்கே பந்தங்களும் அரிக்கேன் விளக்குகளும் ஏற்றியிருந்தார்கள். பார்க்கவே சிறு திருவிழாக் கூட்டம்போலிருந்தது. மாட்டுக் கூட்டங்களின் ஊடே மனிதர்களும் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். தன் அருகில் படுத்துக்கிடந்த கொம்பையாவைக் காணாமல் தேடினான்.

``அவர் அப்போவே எந்திருச்சு சந்தைக்குள்ள போயிட்டாரு'' சொல்லியபடியே மலையரசன் நின்றுகொண்டிருக்கும் மாடுகளின் இடைவெளியில் நடக்கத் துவங்கினான். கரியன் இன்னும் உறக்கச்சொக்கு கலையாமல் தடுமாறியபடி நடந்து பின்னாலேயே போனான்.

தூரத்தில் ஓரிடத்திலிருந்து தீக்கங்கு சிறு சிறு குச்சிகளாய்ப் பறந்து பறந்து அணைந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி நிறைய ஆட்கள் குழுமியிருந்தார்கள். மலையரசனும் அந்த இடத்தை நோக்கித்தான் நடந்தான். அந்த இடத்திற்கு வந்தபோது கொம்பையா அங்கு நடுநாயகமாக அமர்ந்து சுருட்டு குடித்துக்கொண்டிருந்தார். நடுவே காத்தான் பெரிய சுத்தியால் ஒரு வண்டிச் சக்கரத்தின் இரும்புச் சட்டத்தை நெருப்பில் காய்ச்சி ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டிருந்தார். நேற்று தளர்ந்து வயதானவராகத் தெரிந்த அதே மனிதர் தானா என்று கரியனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. அருகிருந்த பையன் கரியைப் போட்டு துருத்தியை வேகமாகச் சுற்றினான். தீக்கங்குப் பொறிகள் மீண்டும் பறந்தன. அடுப்பைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் பழுத்து மஞ்சளும் சிகப்புமாய்த் தெரிந்தன. கரியனுக்குக் கதகதப்பாயிருந்தது.

``என்னடா நல்லா தூங்குனியா?'' கரியன் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான். கொம்பையாவின் துண்டை அவரிடம் கொடுத்தான்.

``எங்கடா போறீங்க?’’

``ஆத்துக்கு’’

காத்தான் சிரித்தபடியே ``நீங்க முன்னால போங்கடே, இத அடிச்சிக் குடுத்துட்டு நானும் பின்னாலேயே குளிக்க வாறேன்'' என்றார்.

``இங்குன இவ்வளவு வேல கிடக்குல. வேலையப் பாரும்’’ என்றார் கொம்பையா.

``இல்லடா கொம்பையா, மார்கழில ஆத்துல இறங்கி விடிகாலைல குளிக்கிற சுகமே தனி. எப்பவுமே நெருப்புகிட்ட நிக்கிறவனுக்குத்தான் அந்த சுகம் தெரியும். மனசும் உடம்பும் குளுர குளுர தாமிரவருணில இன்னிக்கி குளிக்கணும்''

``ம்.''

மலையரசனும் கரியனும் கிளம்பினார்கள்.

அகன்ற வண்டிப் பாதை. நிறைந்த நிலா வெளிச்சம். அங்கங்கே மரங்கள் கருப்பாய் தலை விரித்து நின்றுகொண்டிருந்தது.அதனூடே கூர்ந்து பார்த்தால் பெரிய யானைக் கூட்டம் போல் தூரமாய் மலைத்தொடர்ச்சி தெரிந்தது. பாதையின் ஓரங்களிலிருக்கும் செடிகளில் மார்கழிப் பனியின் ஈரமிருந்தது. அதிகாலை பூச்சிகளின் சப்தமும் வண்டுகளின் மொய்மொய் சப்தமும், சிறு பறவைகள் துயில் எழுந்த சப்தமும் ஒலித்தது. தூரத்தில் எங்கோ நீரோடும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கொளுத்தப்பட்ட ஊதுவத்திப் புகைபோல் காற்றில் பனி எங்கோ நகர்ந்து போய்க் கொண்டிருந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 9

இருவரும் நடந்தார்கள்.

கொஞ்ச தூரத்தில் வண்டிப் பாதையிலிருந்து ஒரு ஒற்றையடிப் பாதை தனியே பிரிந்து நடந்தது. அதன்மேல் நடந்து செல்கையில் நீரின் குளுமையும், வாசனையும் நீர் ஓடும் சப்தமும் தெரிந்தது. ஆற்றை நெருங்குகையில் அடர்ந்த செடிகளின் நடுவே எதோ சிறு அசைவு தெரிந்தது. இருவரும் சில அடிகள் முன்னமே அதைப் பார்த்துவிட்டார்கள். மலையரசன் இடுப்பில் குறுங்கத்தி ஒன்றைச் செருகி வைத்திருந்தான். அதை கவனமாய் கையில் எடுத்துக்கொண்டான். செடிகளின் சிறிய அசைவு இப்போது பெரிய அசைவாய்த் தெரிந்தது. கலங் கலங்கென்று சப்தம் வேறு. மலையரசன் கரியனை நோக்கி தன் ஆட்காட்டி விரலை தன் வாய்மேல் வைத்து அமைதியாய் இரு என்பது போல் சைகை செய்துவிட்டு அவனை அங்கேயே நிற்கச் சொன்னான். மலையரசன் கவனமாய் செடிகளை நோக்கி நகர்ந்தான். அவன் முங்குமளவு செடிகள் வளர்ந்திருந்தன. பத்தடி தூரத்திற்குள்ளிருக்கும் செடிகளை நெருங்குவதற்குள் அதற்குள் என்ன இருக்குமென நூறு யோசனைகள் ஓடின. அவன் மனது நிச்சயம் ஏதோ ஒரு கொடு விலங்குதான் என்று நம்பியது.

அவன் செடியின் அருகில் நெருங்குவதற்குள் அசைவு நின்றுவிட்டது. சிறிது நேரம் மலையரசனும் அப்படியே நின்றான். செடிகள் நடுவிலிருந்து மல்லிகைப் பூவின் வாசம் பெரிதாய் எழுந்தது. அவன் பயந்துபோனான். சட்டென எதிர்பார்க்காத நேரத்தில் இரண்டு பெண் உருவங்கள் செடியின் நடுவில் எழுந்து நின்று முத்தமிட்டுக்கொண்டன. பின் இரண்டு பெண் உருவமும் ஆற்றை நோக்கி நடந்து சென்றது. பயத்தில் சிலை போல் உறைந்து நின்றுவிட்டான்.

பின்னால் திரும்பி, கரியனைப் பார்த்தான். கரியனும் திகைப்பிலிருந்தான். நிலவின் வெளிச்சத்தில் இடதுபுறம் செல்லும் பெண்ணின் ஜரிகைப் புடவை மினுங்கியது. சட்டென ஏதோ யோசனை வந்தவனாய் ``கண்ணப்பா’’ என்று கூவி அழைத்தான். இரண்டில் ஒரு பெண் உருவம் நின்று நிதானமாய்த் திரும்பிப் பார்த்து நின்றது. வேறொன்று வேறொரு பாதைக்கு விலகி ஓட்டமும் துள்ளலுமாய் அருகில் ஊருக்குள் செல்லும் பாதையில் சென்றது.

``யாரு?’’ என்று பெண் உருவத்திடமிருந்து ஆண்குரலில் கேள்வி வந்தது.

``நாந்தான். சந்த கொம்பையா ஆளு.மலையரசன். நாலஞ்சி வருஷம் மும்பு தோவாள கூத்துல பந்தல்காரர் கணேசன் கூட வந்திருந்தேன். நீரு அப்போம் அர்ஜுனன் வேஷம் கட்டியிருந்தீரு'' பேசியபடியே பெண் உருவத்தை நெருங்கிச் சென்றான்.

``ஆமா ஆமா..''

கரியனும் அருகில் சென்றான்.

``இங்க எங்க?’’

``ஆத்துல குளிக்கலாம்னு வந்தோம். செடிக்குள்ள என்னடா சத்தம் கேக்குதேன்னு பாத்தா... இங்க இந்தக் கொடும.''

``வீட்ல ரெண்டு பொட்டப் பிள்ளைங்க வயசுக்கு வந்து நிக்கிறாங்க. அப்பனும் சீக்காளியா கிடக்காரு. மார்கழிப்பனில எல்லாரும் அந்தச் சின்ன வீட்டுக்குள்ளதான் முடங்கிக் கிடக்குறாங்க.வயித்துக்கு இல்லாட்டியும் உடம்புக்கும் மனசுக்கும் ஏதோ பசிக்கிது. என்ன பண்ண. இப்போதான் கூத்து முடிச்சி வந்தேன். இன்னிக்கி ஸ்திரீ பாட் வேஷம். ஆத்துல குளிச்சிட்டுதான் எல்லாம் பண்ணணும்னு நினச்சேன்.ஆனா அதுக்குள்ள பொழுது விடிஞ்சி மனுஷ நடமாட்டம் வந்துரும். அதான் ஸ்திரீ பாட்டாவே வேசத்த கலைக்காம அவளோட கலந்துட்டேன்.''

ஏழு கடல்... ஏழு மலை... - 9

``ம்''

``எத்தனையோ நாள் ராஜபாட், அர்ஜுனன், பத்துதல இராவணன், பபூன் வேஷமெல்லாம் போட்டு அரிதாரம் கலைக்காம அவகூட கலந்துருக்கேன் தெரியுமா? அவளுக்கும் அது பிடிக்கும். இன்னிக்கி ஸ்திரீபாட்.’’

மூவரும் ஆற்றை நோக்கி நடந்தார்கள்.

``நீ ஏதும் பாத்துரலயே...''

``ஐயோ... சத்தியமா இல்ல...''

``ம்''

``இன்னிக்கி நீரு பொழச்சது தெய்வ சித்தம் தான்''

``ஏன்?''

``என்னமோ ஏதோன்னு நினைச்சி கையில கத்தியெல்லாம் எடுத்துட்டேன்.''

``ஐயோ அம்மே...''

மூவரும் ஆற்றை அடைந்தார்கள். தளும்ப தளும்ப நீர் ஓடியது. அதிகமாய் குளிர் எடுத்தது. மலையரசனும் கரியனும் தயங்கிக் கரையிலேயே நின்றுகொண்டிருந்தார்கள்.

``நகரு. அவ எதாவது பயந்திருக்கப் போறா.நான் ரெண்டு முங்கு முங்கிட்டு வெரசா கிளம்புறேன்’’ பொத்தென்று நீருக்குள் பெண்ணாய்க் குதித்து ஆணாய் எழுந்து போனார்.

அவர்களும் குளித்து முடித்துக் கரையில் வந்து துண்டால் உடலைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும் போலிருந்தது. தூரத்தில் ஊருக்குள் கோழி கூவியது. அவர்கள் கிளம்பத் துவங்கும்போது வாயில் கருவேலங்குச்சியால் பல்சுத்தம் செய்தபடி காத்தான் வந்து சேர்ந்தார்,

``என்னங்கடா கிளம்பிட்டீங்களா...''

``ம்''

``மலையரசா நீன்னா கிளம்பு. பேச்சுத் துணைக்கு ஆள் வேணும். அவன் இருக்கட்டும்.’’

``செரி. நீ பெரியவர் குளிச்சி முடிச்சதும் அவர் கூட வந்திரு'' கரியனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

காத்தான் நீருக்குள் இறங்கி முதல் முங்கு நெடுநேரம் ஆளைக் காணவில்லை. கரியன் பயந்துவிட்டான். சிறிது நேரத்தில் நீர் சொட்டும் தலையை வெளியே எடுத்தார். ``என்னடா பயந்துட்டியா?''

கரியன் ஏதும் பேசவில்லை.

``கொம்பையான்னா ஆறேழு நிமிஷம் கூட முங்கியிருப்பான் தெரியுமா. அப்பமெல்லாம் வெள்ளைக்காரன் காலத்துல முதல் மகா யுத்தம் முடிஞ்ச பிறகு ரெம்ப வருசத்துக்கு படைக்கி ஆள் சேத்தாங்க. எங்கயாவது நல்ல வளத்தியா, நல்ல உடம்போட இளவட்டம் கிடச்சா உடனே பிடிச்சி போட்ருவாங்க. கொம்பையால்லாம் அப்படி யாராவது வந்தா ஆத்துக்குள்ளேயோ, கிணத்துக்குள்ளேயோ ஆழமா எங்கெல்லாம் தண்ணி கிடக்கோ அங்கபோயி முங்கிக்குவான்.அவன் மட்டும் இல்ல அப்போ எல்லா இளவட்டங்களும் அப்படித்தான் தப்பிச்சி ஓடுனாங்க. வெள்ளைக்காரங்க அப்படி தண்ணிக்குள்ள கிடக்குறவங்கள பிடிக்கவே நல்லா நீந்தத் தெரிஞ்ச பத்து பதினஞ்சி ஆட்கள வச்சிருந்தாங்க. ஆனா எத்தன வருஷம் ஆனாலும் இவன மட்டும் பிடிக்க முடியல. தண்ணிக்குள்ள தேர மாதிரி எங்கயாவது போயி ஒட்டிப்பானோ என்னமோ’’

கொம்பையாவைப் பற்றிப் பேசத் துவங்கியதும் கரியன் ஆர்வமாய் கேட்கத் துவங்கினான்.

``கத போட்டா `ம்' கொட்டணும் செரியா... அப்போதாம் கத போட ரசனையா இருக்கும்.’’

``ம்... மேக்கொண்டு சொல்லுங்க.''

``கொம்பையாவ நான் முத முத பாக்குறப்போ அவனுக்கு இருபது வயசிருக்கும். தச்சன்விளைல என் பட்டறைக்கு செல்லம்பிள்ளைகூட வண்டிக்கி சக்கரம் போட வந்தான். அவன் எங்கயோ போனப்போ தனியா நிக்கிற செல்லம்பிள்ளைகிட்ட அவன விசாரிச்சேன். அவருக்கும் அவன் வந்த திக்கு திச தெரியல. எந்த ஊரு.என்ன ஆட்க. குலம், குலதெய்வம் எதுவும் தெரியல. அவர்கிட்ட வேலைக்கி விட்ட மனுசனுக்கும் தெரியாதாம். யாருக்கும் அவன்கிட்ட கேக்கவும் ஒப்பல. நல்லா வண்டி ஓட்டுவான்.ஆடு மாடுன்னு இல்ல, எல்லாப் பிராணிகளும் அவங்கிட்ட பிரியம். பழக்கம் இல்லாட்டியும் அவன மட்டும் தொட விடுது. அவன் கூளம் அள்ளிப் போட்டா மட்டும் சாப்பிடுதுங்க. அவனுக்கு மட்டும் கறக்க விடுதுங்க. பிள்ளை அவன் உடம்புல மனுஷன் வாடையே கிடையாது, பிராணி வாடைதான் வீசுதும்பாரு. மிருக சீரிஷத்துக்காரன்.''

``ம்... உங்களுக்குமா அவர் எந்த ஊருன்னு தெரியாது?’’

``அவன் ஊரு என்னன்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும். ஒவ்வொரு தடவ நான் கேக்குறப்பவும் அவன் ஒவ்வொரு திசைக்குக் கைய காட்டுவான். சிவனுக்கும் சித்தனுக்கும் ஆதியும் அந்தியும் பாக்கக் கூடாதும்பாங்க. இவனுக்கும்தான்.''

மனுசங்க உடல்வாக வச்சே அவங்க கடல் பக்கமிருந்து வந்தவங்களா, காட்டுக்குள்ளேயிருந்து வந்தவங்களா, மலையேறி இறங்கி வந்த உடம்பா, மரமேறி இறங்கி வந்த உடம்பான்னு நாஞ் சரியா கண்டுபிடிச்சிருவேன். என்னால இவன மட்டும் எப்பவும் கணிக்க முடியாது.

``ம்''

``அவரு கல்யாணஞ் செஞ்சுக்கலயா..?’’

``செஞ்சான். ஆனா... வேண்டாம் விடு.நல்லாருப்ப. அத மட்டும் கேக்காத சாமி.என்னால ரெண்டு நாளைக்கி சோறுதண்ணி உண்க முடியாது.''

``ஏன்?''

``சொல்றேன்ல... விடு’’

``சொல்லுங்க''

``ம்...நீ விட மாட்ட போலயே...'' அவருக்கும் அவனிடம் சொல்லவேண்டுமென்ற ஆர்வமிருந்தது.

``அவர் பொஞ்சாதி பேரு பேச்சியம்மா. அங்குன மதுர பக்கம் கடம்பங்குளத்துப் பிள்ள.''

``ம்''

``இதெல்லாம் நடந்தது சுதந்தரம் வாங்குறதுக்கு பல வருஷம் முன்னாடி... செரியா’’

``ம்''

காத்தான் இதுவரை யாரும் அறியாத கொம்பையாவின் கதையைச் சொல்லத் துவங்கினார்.

``கொம்பையாக்கு அப்போ நல்ல இளம்பிராயம். ஒரு நா காடேறி கம்மா பாதைக்குக் குறுக்குவழியா நடந்து போறாரு. எதுத்தாக்குல ரெண்டு மூணு வயசாளிங்க சத்தமா பழக்கம் பேசிக்கிட்டே வாறாங்க. கொம்பையாவ பாத்ததும் அதுல ஒருத்தர்,

``ஏன்யா அங்க நிக்கிறது உன் மாடுங்களா?'' என்று கேட்டார்.

``இல்லைங்க. நான் மேல மலைக்குப் போறேன்.’’

``ஓ... செரி செரி. மேச்சலுக்கு வந்த ஆளோன்னு நினச்சிட்டேன்.''

``ரெண்டு நாளா இந்தப் பாதைக்குதான் வாறோம். அங்க உட மர காட்டுக்குள்ள முப்பது நாப்பது மாடுங்க ரெண்டு நாளா அதே இடத்துல நின்னது நின்னபடிக்கி கிடக்கு. பாத தவறி வந்திருக்கப் போகுது. இங்கிட்டு திருட்டுவேற அதிகம். நல்லா வளப்புள்ள மாடுங்க. அத தேடித்தான் போறியோன்னு நெனச்சி கேட்டுட்டேன்.''

``ஏய்... சும்மா வர மாட்டியா. யார் மாடு எப்படிப் போனா உனக்கென்ன'' கூட வந்த வேறொரு வயசாளி அவரை அதட்டினார்.

``அப்போஞ்சரி'' என்று அவர்கள் கிளம்பினார்கள்.

கொம்பையா ஏதோ யோசனையோடு அந்தப் பாதைக்குச் சென்றார். பாதையிலிருந்து விலகி தூரத்தில் அவர்கள் சொன்னதுபோலவே அடர்ந்த மரங்களுக்கு இடையே மாடுகள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தன. மரங்கள் அடர்ந்து இருப்பதால் பாதையிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். கொம்பையா விறுவிறுவென செடிகளுக்குள் இறங்கி மாடுகள் நிற்கும் இடத்திற்கு நடந்தார்.

அருகில் செல்லச் செல்லத்தான் கவனித்தார்.

அங்கு ஏதோ இறந்த உடலின் துர்நாற்றம் வீசியது. செடிகளை விலக்கியபடி அவர் தொடர்ந்து நடந்து போனார். சிறு மான் குட்டிகள் குதிப்பதுபோல் பத்தடிக்கு மேல் ஏதோ சிறு விலங்குகள் மல்லாந்து பறந்து பறந்து கீழே விழுந்துகொண்டிருந்தது. இன்னும் அருகில் செல்லும் போதுதான் மேலே பறப்பது நரிகள் என்பது தெரிந்தது. மாட்டுக் கூட்டத்தை நெருங்கிய போது நாற்றம் கடுமையாய் வீசியது. மாடுகளின் ஊடே நடந்து போனபோது அவர் கண்ட காட்சி ஆச்சர்யமாயிருந்தது.

நடுவே ஒரு ஆண் பிணம் கிடந்தது. அதைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேல் நரிகள் அந்த உடலை உண்ணக் காத்திருந்தன. ஒரே ஒரு ஆண்காளையொன்று உடலை நெருங்கும் எல்லா நரிகளையும் ஆக்ரோஷமாய் தன் கொம்பால் முட்டி முட்டி அந்தரத்தில் வீசிக்கொண்டிருந்தது. அப்படியும் ஓரிரு நரிகள் அந்த உடலைக் கடித்திருந்தன. கொம்பையா பெரிய சப்தம் கொடுத்தவாறே தன் கையிலிருந்த தடியை வேகமாகச் சுற்றி சுற்றி நரிகளின் கூட்டத்தை விரட்டினார். சொத் சொத்தென்று நிறைய நரிகள் அடிபட்டு கீழே விழுந்து ஊளையிட்டவாறே ஓடின. காளை மிகவும் தளர்ந்திருந்தது. இரண்டு நாள்களாய் தன் மேய்ப்பன் உடலைக் காக்கக் காவலுக்கு நின்றிருந்திருக்கும்.

கொம்பையா அந்த உடலின் அருகில் சென்றார். பெரிய பெரிய ஈக்கள் கூட்டமாய் அவன் முகத்தை மூடியிருந்தன. தன் மேல்துண்டையெடுத்து ஈக்களை விரட்டினார். ஈக்கள் ங்ங்ய்ய்ங் என்ற சப்தத்தோடு பறந்து அங்கேயே சுற்றி சுற்றி வந்தன. கொம்பையா இறந்தவனின் முகத்தைப் பார்த்தார். தன்னிலும் இரண்டு மூன்று வயது மூப்பாயிருக்கலாம். காளை கொம்பையாவின் அருகில் வந்து அவரின் மேல் தன் மூக்கால் உரசியது. அவர் அதன் நெற்றியையும் தாவங்கட்டையையும் தடவிக்கொடுத்தார். அதன் கண்ணில் நீர் ஓடிய தடமிருந்தது.கொம்பையா துண்டால் தன் மூக்கை மூடியபடி இறந்த உடலைத் தூக்க முயற்சி செய்தார். கொழகொழவென்றிருந்தது. உடலெல்லாம் ரத்த விளாறுகள். யாரோ அடித்துக் கொன்றிருக்க வேண்டும். இறந்தவன் கையில் பெரிய பித்தளை மணி இருந்தது. ஏதோ கோயிலின் மணிபோலிருந்தது. நான்கு கிலோவுக்கு மேல் எடை இருக்கும். மணியைக் கட்டித் தொங்கவிடும் கயிற்றைத் தன் கரங்களுக்குள் சுற்றி இறுக்கிப் பிடித்திருந்தான். கொம்பையா அதை வெளியெடுக்க முயன்றார். முடியவில்லை. வெடுக்கென இழுத்தபோது மணியைப் பிடித்திருந்த அவன் கரம் தனியே பிய்ந்து வந்தது. கொம்பையா அந்தக் கரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு இறந்த உடலைத் தன் தோளில் தொங்கப் போட்டுவிட்டு நடந்தார். காளை அவருக்கு வழி காட்ட முன்னால் நடந்தது. மற்ற மாடுகள் கொம்பையாவைத் தொடர்ந்தன. அவர் நடக்க நடக்க காடெல்லாம் பித்தளை மணியின் சப்தம் க்ணங்... க்ணங்கென்று...

‘`நிற்கும்போது அல்ல, நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான்

நாம் எவ்வளவு பொருத்தமென அறிய முடியும்; வா பயணிக்கலாம்.’’

- பராரிகள்

மகன் வழி (1977 - மழைக்காலம்)

ழையில் கங்கையன் வேம்புவைக் கத்தி அழைத்துக்கொண்டிருந்தார். வேம்பு சூரவேலை தன்னிலை மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். மழை அவர்கள் மேல் பட்டும் சுரத்தில்லாமல் இருந்தார்கள். தலைக்கு மேல் பனையோலை யொன்றைப் பிடித்தபடி ஒரு பெண் ஓடி வந்து வேம்புவின் தோளை உசுப்பினாள். ``உன் சித்தப்பா கூப்பிடுறது கேக்கலையா’’. வேம்பு சுதாரித்து ``மழைல ஒண்ணும் கேக்கல’’ என்று சொல்லியபடி கங்கையன் நிற்கும் திசை நோக்கி அந்தப் பெண்ணோடு பனையோலைக்குள் தன் தலையையும் இணுக்கிக்கொண்டு நடந்தாள். அந்தப் பெண் தாழ்ந்த குரலில் சொன்னாள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 9

``அதான் நல்லா நனஞ்சிட்டில பின்ன ஏன் ஓலைக்குள்ள வாற?’’

அவள் தன்னை கேலி செய்கிறாள் என்பதை உணர்ந்து ``ஏய்...’’ என்று செல்ல அதட்டு அதட்டினாள்.

கங்கையனிடம் ``என்னப்பா’’ என்று கேட்டு நின்றாள்.

``இருளி எங்கயோ கழத்திக்கிட்டு போயிடுச்சி போல...’’

``அப்படியா?’’

``ம்’’ அவள் பன்றிக்குட்டி கட்டிக் கிடக்கும் மரத்தடிக்கு ஓடினாள். அங்கு பன்றி கட்டிக்கிடந்த கயிறு அறுந்து கிடந்தது.

கையில் ஒரு நீண்ட கம்பை எடுத்துக்கொண்டு டயர் செருப்பை அணிந்து ஓடைக்குள் இறங்கத் தயாரானாள். ஓடும்போது சேலை தடுக்காமல் இருக்க கொஞ்சத்தை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள். பின்னாலேயே ஓரிரண்டு ஆண்கள் வந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 9

``வேண்டாம். அது ஓடக்கரைக்கி கிழங்கு முண்டதான் போயிருக்கும். நான் போயி இந்தப் பக்கமா விரட்டி விடுறேன். மறிச்சிக்கோங்க. மேக்கால வயகாட்டுல இறங்கிடாம பாத்துக்கோங்க. அப்புறம் எதையாவது ஒளப்பிவச்சிரும். அவனுககூட நம்மால சண்டகட்ட முடியாது’’ கட்டளையிட்டாள்.

``சரி பாப்பா’’ அவர்கள் வெவ்வேறு திசைக்கு ஓடினார்கள்.

சூரனுக்கு சட்டென அவளின் தோற்றம் விஸ்வரூபமெடுத்தது. சற்று முன்பு வரை தன் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த அதே பெண்தானா இவள் என்று சந்தேகமாயிருந்தது.

விறுவிறுவென செடிசெத்தைகளுக்குள் இறங்கிக் கம்போடு ஓடினாள். சிறிது நேரம் யாரிடமிருந்தும் எந்த சப்தமும் இல்லை. ஓடையை நோக்கிப் போன வேம்பிடமிருந்தும் எந்த சப்தமும் இல்லை. மொத்தச் சூழலும் நிசப்தமாயிருந்தது.

பன்றி எந்தத் திசைக்கு ஓடி வருமோ என்று அங்கிருந்த பெண்களும்கூட கவனமாய் நூறு திசைக்கும் கண்களைச் சுழற்றியபடி கவனமாயிருந்தார்கள்.

இவ்வளவு பெரிய ஆள் ஒரு பொம்பளப் பிள்ளைய பன்றி விரட்ட விடுறானே என்ன மனுசனோ என்று கங்கையன்மீது சூரனுக்கு எரிச்சலாய் வந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 9

மேற்கொண்டு ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் எங்கிருந்தோ வேம்பின் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கூடவே பன்றியின் உறுமல் சப்தமும் கேட்டது. அவன் எதார்த்தமாய் திரும்பி நின்று பார்க்கையில் நல்ல கரிய பெரிய பன்றி அவன் எதிரில் நின்று கொண்டிருந்தது... மழையில் நனைந்திருந்த அதன் உடலில் முடிகள் சிலிர்த்து நின்றன.

ஒடுக்கமான அந்தப் பாதையில் பன்றி அவனைத் தாண்டிச் செல்ல சமயம் பார்த்தபடி நின்றது. பின்னாலேயே விரட்டி வந்த வேம்பு பன்றியை நோக்கி எறிந்த கல்லொன்று தவறி நங்கென்று சூரனின் நெற்றியில் பட்டு ரத்தம் பீறிட்டு வந்தது. அடுத்த ஒரு நிமிடம் அவனுக்கு இருட்டிக்கொண்டு வந்தது. அதே நேரம் இதுதான் சமயமென்று பன்றி அவனைத் தாண்டி ஓடியது. சூரன் சுதாரித்துத் தாவி, பன்றியின் பின்னங்கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அது சப்த மிட்டபடியே அவனிடமிருந்து தப்பிக்க முண்டி ஓடியது. அவன் மழை பெய்து சகதியாயிருக்கும் தரையில் படுத்தபடி அதன் கால்களை இழுத்துப் பிடித்தான். அது கடித்துவிட்டு அவனிடமிருந்து தப்பித்து ஓட நினைத்து வாயை அவன் கை நோக்கிக் கொண்டு வந்தது. சூரன் அதற்குள் எழுந்து பன்றியின் மீதேறி அணைத்தபடி விழுந்தான். பன்றி சூரனிடமிருந்து தன் உடலை விடுவிக்கப் போராடியது. அதற்குள் வேம்பு அந்த இடத்திற்கு வந்துவிட்டாள். அவள் செருப்பெல்லாம் சகதி. ஏற்றிச் செருகிய சேலையின் வழியே அவள் காலின் அரும்பு முடிகள் தெரிந்தன. நிமிர்ந்து வேம்புவைப் பார்த்தான். விட்றாத. நல்லாப் பிடிச்சுக்கோ.. பன்றி திமிறியது. அவளும் குனிந்து பன்றியை அமுக்கிப் பிடிக்கக் குனிந்தாள். அப்போது அவள் மேலாடைக்குள்ளிருந்து வெளி வந்து ஒரு மஞ்சள் தாலிச் சரடு வேம்பின் கழுத்தில் ஆடிக்கொண்டிருந்தது. சூரனுக்கு உலகம் மேலும் இருளத் துவங்கி பன்றியின் பிடியை மெல்ல கைநழுவ விட்டான்.

- ஓடும்