சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அவனை வரச்சொல்லடி! - சிறுகதை

அவனை வரச்சொல்லடி! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
அவனை வரச்சொல்லடி! - சிறுகதை

04.02.2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

“எங்க பேசுனாலும் இது தீராது”

பஞ்சாயத்துக்கு எத்தனை பேரை அனுப்புவது – யார்யார் என்பதான ஆலோசனையின் போக்கினை மிகச் சுலபமாகக் கடத்திவிட்டாள் யசோதை.
அவனை வரச்சொல்லடி! - சிறுகதை
அவனை வரச்சொல்லடி! - சிறுகதை

பரசுவுக்கு மனைவி யசோதையின் பேச்சினை மறுத்துப் பேசிட இயலாது என்பது ஊரறிந்தது. ஆனாலும், மகன், தர்ஷனது எதிர்காலமும் உலக எதார்த்தத்தையும் கலந்து யோசிக்கவேண்டும் என்பதை யசோதையின் காதில் மென்மையாகப் போட்டுவிட்டு யசோதையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சங்கரனை முன்னுக்கு வைத்தே பஞ்சாயத்துக்கான ஆட்களையும் ஏற்பாடு செய்தார்.

“குடும்பத்தாளுக யாரும் வேணாம். பொதுவான ஆளுக மூணு பேர் போனாப் போதும்’’ சங்கரன் புள்ளி வைத்ததுபோல தனது ஆலோசனையைச் சொன்னார்.

``குடும்பத்தாளுக இல்லாட்டி, எப்பிடி நம்ப தரப்பு நாயத்தச் சொல்லமுடியும்?” பரசுவின் கேள்விக்கு, தேங்காய் உடைப்பதுபோல “அதேன் சங்கரன் போறான்ல” என மூவரில் முதல் நபரை, தானே முன்மொழிந்தாள் யசோதை.

சங்கரனாலும் மறுக்க முடியவில்லை. “ஈ.பி. ராமரையும் கூப்புட்டுக்க சங்கரா, ரெண்டு குடும்பத்தையும் அறிஞ்ச மனுசெ” என்ற யசோதை, மூன்றாவது நபரையும் அவளே முன்மொழிவு செய்தாள். “நமக்கு ஆகாதுன்னாலும் ஊருக்கான ஆளு. அதனால நம்ப நாட்டாமையையும் கூப்புட்டுக்கங்க.”

“நல்லகாரியத்துக்கு மூணாளு போகக்கூடாதுன்னு உனக்குத்தெரியாதா” என சங்கரனைக் கடிந்துகொண்ட நாட்டாமை, தனக்குத் தோதாக கொத்தனார் கோயிந்தசாமியை நாலாவதாக அழைத்துக்கொண்டார்.

“சரி என்னா பேசணும்?” ஈ.பி. ராமர் யசோதையிடம் கேட்டார்.

வழக்கம்போல ரெண்டு கைகளையும் அண்டரண்டப் பட்சியாய் விரித்த யசோதை. “நா எதும் சொல்ற மாதிரி இல்லப்பா. என்னயப் பழிகாரி ஆக்கவேணாம். அவெம்பாடு அவெம் பொண்டாட்டி பாடு” மகனைக் கைகாட்டி விட்டுப் பதுங்கினாள்.

அவனை வரச்சொல்லடி! - சிறுகதை
அவனை வரச்சொல்லடி! - சிறுகதை

அம்மாவின் கண்ஜாடையில், “இப்பத்தக்கி என்னால தனியா வரதுக்கு வசதிப்படாது. அம்மாப்பா கூடத்தான் இருக்க முடியும்’’ எனப் பேசிய தர்ஷன் ’’இஷ்டம்னா வரட்டும். இல்ல அப்பெ வீடுதான் வசதின்னா அங்கயே இருந்துக்கட்டும்” விட்டத்தைப் பார்த்தபடி தன் தரப்பு வாதத்தினை மனப்பாடச் செய்யுள் போல ஒப்பித்தான்.

``ஆனா, ஒரு விசயம். போறவங்க குறிச்சிக்கங்க. அவகப்பெ, அதேன் எஞ் சம்பந்தகாரர் பெரிய மந்தரவாதி, நீங்க என்னாதேம் முக்கித்தக்கிப் பேசுனாலும் கடேசில அந்தாள் பேச்சத்தே நிறுத்துவாப்ல, மெம்மாந்து வந்திடப்படாது’’ எச்சரிக்கைபோல தீர்ப்பினையும் சூசகமாகச் சொல்லிவைத்தாள்.

“இவெங்கலெல்லா எதுக்குயா கலியாணம் முடிக்கிறாங்கெ? பேசாம ஆத்தாளயே கட்டிப்பிடிச்சுப் படுத்துக்கற வேண்டியதான!” ஆட்டோவில் பயணிக்கும்போது நாட்டாமை ஆற்றாமை பொங்கக் கொப்பளித்தார்.

“அம்ம ஊரு பரவால்ல நாட்டாம. எதுன்னாலும் கூப்ட்டு சபைல வச்சுப் பேசி முடிச்சு விட்டுறம். டவுன்லயெல்லா படு மோசம். ‘பேசக்’ கூப்புட்டேன் வரல’ இவனோட இன்னிமே வாழ வகையில்ல, டைவர்ஸ் வாங்கிக் குடுங்கன்னு கும்பல் கும்பலா வந்து கோர்ட்ல நிக்கிதுக” தீர்ப்பு சொன்ன நீதிபதியே தான்தான் என்பதுபோலப் பேசினார் ஈ.பி. ராமர்.

தர்ஷனது மனக்கண்ணில் அவந்திகா பகவதியம்மன் கோயில்திடலில் குத்தி நிற்கும் சூலாயுதம்போல நிமிர்ந்து நின்றாள். முன்னெல்லாம் அவள் இப்படியில்லை. காலேஜில் சந்திக்கிறபோதெல்லாம் எத்தனை லகுவாய்க் குழைந்தாள். தர்ஷனின் ஒவ்வொரு சீண்டலையும் ரசித்து பாகற்கொடியாய்த் தன்மேல் படர்ந்துகொள்வாள். யார்விட்ட சாபமோ, இல்லை, அம்மா சொல்வதுபோல அவர்கள் வீட்டில் எதும் மருந்து மாத்திரை கொடுத்து, மந்தரவாதியை வைத்து செய்வினை ஏதும் செய்து மனசை மாற்றிவிட்டார்களா? ஒருகணம் அவளைப் பர்க்கவேணும்போலவும் அவளது அந்தக் கோணல் மூக்கினை நிமிண்டிக் கிள்ளவேணும் போலவுமிருந்தது.

ஆட்டோவிற்கு சங்கரன் வழி சொல்லிக்கொண்டு வந்தார்.

அவனை வரச்சொல்லடி! - சிறுகதை
அவனை வரச்சொல்லடி! - சிறுகதை

ஒரு ஹைவே காப்பி ஹோட்டலில் பலகாரம் சாப்பிட ஆட்டோவை நிறுத்தியபோது, நாட்டாமையும் கொத்தனாரும் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டார்கள்.

“திரும்புகால் நேரஞ் சொல்ல முடியாதுப்பா, பசி தாங்கற வயசா நமக்கு!”

அவந்திகாவின் வீட்டிற்குப் போய்ச்சேர மட்டமத்தியானம் ஆகிப்போனது.

பண்ணைவீட்டைப்போல நீள அகலமாய் இருந்தது வீடு. சுற்றுச் சுவருக்கும் உள்ளிருக்கும் வீட்டுக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி ரெம்பவும் தள்ளி அமைந்திருந்தது குடியிருப்பு.

ஆட்டோவில் வந்து இறங்கிய அரவமே அவர்கள் காதுகளில் விழுந்திருக்காது. சுற்றுச்சுவரின் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அக்கம்பக்கத்தில் ஆள் நடமாட்டமும் இல்லை. ஆட்டோவை அனுப்பிவிட்டு ஆளுக்கொரு பக்கமாய் வீட்டை நோட்டம் விட்டார்கள். `வள்’ளெனக் குரைக்க ஒரு நாய்க்குட்டியைக்கூடக் காணோம்..

பஞ்சாயத்து என்றால் முதல்நாளே வீட்டில் வந்து உத்தரவு கேட்டு, தோளில் வைத்துச் சுமந்து கொண்டு போகாத குறையாய் அழைத்து வந்து, விரும்புகிற அத்தனையையும் சவரட்டணையாய்ச் செய்து தரையில் கால்பாவாமல் வீட்டில் வந்து இறக்கிவிட்டுப் போகும் காலத்தில், அத்துவானக் காட்டில் - மொட்டை வெயிலில் – வீட்டுவாசலில் இப்படிப் பிச்சைக்காரனாய் நிக்க வச்சிட்டானுகளே! தனது பரம்பரை பூராவும் வந்து எச்சக்காறி துப்பியது மாதிரி இருந்தது நாட்டாமைக்கு.

கொத்தனார் இரும்புக்கதவு அருகில் போய் எதையோ தேடியவர், “காலிங்பெல் இருக்கு. கூப்புடட்டுமா?’’ என்றபடி ஒன்றுக்கு இரண்டுமுறை அழுத்தியிருப்பார் போலும்.

“வாங்க, எல்லாரும் வாங்க. இந்தா வந்திட்டேன்” என்று ஒரு ஆண்குரல் ஒலித்தது. குரலைத் தேடி நால்வரும் தலையைச் சுழற்றினர். கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

உள்ளிருந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு அவந்திகாவின் அப்பா கனகராஜன் லொங்கோட்டம் போட்டு வந்தார். வரும் வழியிலேயே சட்டைப்பொத்தானையும் பூட்டிக்கொண்டார். கதவைத் திறந்ததும் எல்லோரையும் வரவேற்கும் முகமாய் கைகூப்பினார். “வாங்க. பெரியாள்களா வந்திருக்கீங்க.” கதவைப் பூட்டிவிட்டு உள்ளே அவர்களை நடத்திச் சென்றார். “போன் போட்டிருந்தா வெயில்ல நிக்கவேண்டி இருந்திருக்காது” முன்கூட்டியே வீட்டுக்குவரும் தகவலைச் சொல்லாததைக் குற்றமாகச் சொல்வது போலிருந்தது.

யசோதை தடுத்ததைச் சொல்ல முடியாது. “இன்னேரம் எல்லாரும் வீட்டுக்குத் திங்க வந்திருப்பாங்கெ. மொத்தமா ஒக்காந்துதே கும்மியடிப்பாங்கெ, சொல்லாமப் போனா ஒண்ணும் கொறஞ்சு போகாது.”

“போன் போட்டேன் சார், ரீச் ஆகல. போன் ப்ராப்ளமா, டவரான்னு தெரியல” முகம் வெளிறிபடி தனது போனை எடுத்து அதனைக் குற்றவாளியாக்கினார் சங்கரன்.

அவனை வரச்சொல்லடி! - சிறுகதை
அவனை வரச்சொல்லடி! - சிறுகதை

நடைபாதையில் பதித்திருந்த அறுகோணக் கற்கள் புல்தரைபோல் மெத்தென்றிருந்தன. நேர்பாதையாய் இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் வடிவமாய் இருந்தது. இருபுறமும் ஆங்காங்கே செடிகள் கொத்துக் கொத்தாய் வளர்ந்திருந்தன. பெரிய மரங்களில்லை. வீட்டின் முகப்பு நல்ல அகலமாய் வெப்பம் தாக்காமல் வளைவு தகரக்கூரை இறக்கி தரையில் மூங்கில் தப்பைகள் நிறுத்தி வர்ணம்பூசி வரவேற்பரை போல் வண்ணமாய் அமைத்திருந்தனர். உட்காருவதற்கு பிரம்பால் ஆன சோபாக்களும் நாற்காலிகளும் போட்டிருந்தனர்.

“உட்காருங்க.”

டீப்பாயில் தண்ணீர்க் குவளையும் நாலைந்து டம்ளர்களும் இருந்தன.

``மதிய நேரத்தில் கதவை அடைத்துவிடுவது வழக்கம்’’ என்றவர். ``எல்லோரும் சாப்பிடலாமா’’ எனவும் கேட்டார்.

“நாங்க சாப்பிட்டுத்தான் வந்தோம். நீங்க போய்ச் சாப்பிடுங்க. சாப்பாட்டு நேரத்தில நாங்கதான் தொந்தரவு கொடுத்திட்டோம்.” ஈ.பி.ராமர் உண்மையான வருத்தத்தில் பேசினார்.

கதவைத்திறந்து வீட்டுக்குள் நுழைந்த கனகராஜன், மனைவியோடு திரும்பி வந்தார். கையில் பழச்சாறு நிரம்பிய பாட்டில். திறந்த கதவின் வழியே நெய்ச் சாம்பாரின் வாசனை மிதந்து வந்தது.

டீப்பாயிலிருந்த தம்ளர்களில் பழச்சாறு நிரம்பிய நேரத்தில், அவந்திகாவின் இன்னொரு வடிவமாய் ஒரு பெண் உள்ளிருந்து வந்து கனகராஜனோடு அமர்ந்தாள். நாட்டாமை அப்பெண்ணை அவந்திகா என்றே கணக்கிட்டார்.

எல்லோரது வயிறும் குளிர்ந்த சமயம் கனகராஜன் பேச்சைத் துவக்கினார். ``அவந்திகா விசயமா வந்திருக்கீங்க, அப்படித்தான.’’

‘’பெரிய மனுசன்றதக் காமிச்சிட்டார் பாருங்க” கைகொட்டாத குறையாய் பாராட்டிப் பேசிய கொத்தனார், கட்டுமான வேலைக்கான அஸ்திவாரத்தினையும் போட்டார்.

``பெருசுக ரெண்டும் (யசோதையும் – பரசுவும்) பேத்தியா மேல ரெம்ப உசுரா இருக்காக. புள்ளயக் காணாம் உள்ள தூங்குதா?” வழக்கம்போல நாட்டாமை நூல்விட்டார்.

“அப்படியா... வந்து பாத்துட்டுப் போகலாமே. அவக பிள்ளதான. வரச்சொல்லுங்க.’’

‘`இல்லங்யா, வீட்ட விட்டு வந்து ஆறுமாசம் ஆச்சில்ல. பிள்ளையும் கைமீறி வளந்துருக்கும். அங்க வந்து இருக்கலாம்லன்னு அபிப்ராயப்படுறாங்க.”

``அதும் யசோத அக்கா ரெம்பவே தவதாயப்படுது” ராமர் ஒரு பிட்டைச் சேர்த்துப் போட்டார்.

‘`அதான் டாடி சொல்லிட்டார்ல, வந்து அழச்சிட்டுப் போகட்டும். ஐ நோ. என்னா டாடி?”

‘`என்னம்மா, படிச்ச பிள்ள... நீயே இப்பிடிப் பேசற. பேறுகாலத்துக்கு வந்த பிள்ளிய நீங்கதானம்மா சவரட்டணையோட வந்து விட்டுட்டு வரணும். அதான உங்களுக்குப் பெருமை” நாட்டாமை அவந்திகா என்றே பேசினார்.

``மொறப்படி நாங்க அழச்சிட்டு வந்திருந்தா நாங்களே விடலாம். ஆனா புள்ளத்தாச்சிப் பொண்ணுன்னு பாக்காம சண்டபோட்டு அழவச்சி - அனுப்பிச்சி விட்டாகல்ல. அப்ப அவகதான கூட்டிப்போகணும்?” இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல அவந்திகாவின் அம்மா சடாரெனப் பேசியது எல்லோரையும் ஒருகணம் துணுக்குறச் செய்தது.

தர்ஷனும், அவந்திகாவும் காதல் திருமணம் முடித்தவர்கள். ஒரே கல்லூரி, ஒரே ஊர் என்பதால் வீட்டார் பேசி சம்மதத்தோடு நடந்த திருமணம். திருமணத்திற்குப் பிறகு அவந்திகாவின் அப்பா நடத்தும் கார்மென்ட் கம்பெனியில் தர்ஷனுக்கு வேலை போட்டுக் கொடுத்தார். மாமியார் - மருமகள் – நாத்தனார் இன்னபிற பிரச்னைகளில் தர்ஷன் கம்பெனியை விட்டு விலகிட, அவந்திகா கர்ப்பிணிக் கோலத்தில் தாய்வீடு வந்துவிட்டாள். இப்போது பெண்குழந்தை பிறந்த நிலையில் பஞ்சாயத்து.

“சொன்னாங்க தாயி. எனக்கே ரெம்பச் சங்கட்டமாத்தே இருந்திச்சி. இத்தன பெரிய குடும்பத்தில இதெல்லாம் நடந்திருக்கக்கூடாது. விடுங்க, தின்ன சோத்துக்கு வெஞ்சனம் தேடக்கூடாது! பெரிய மனசு பண்ணி அனுப்பி வைங்க” கொத்தனார் பவ்யமாய் வேண்டினார்.

‘`பெரிய மனசு இருந்ததனாலதே எங்கப்பா அந்தக் குடும்பத்தோட சம்பந்தம் வச்சாரு. பெரியமனசு இருந்ததனாலதே தர்ஷனுக்கு நல்ல வேல போட்டுக்குடுத்தாரு. பெரிய மனசு இருக்கதாலதே, மகாராணியா வாழ்ந்த பிள்ளைய ரெண்டு வருசமா மாட்டுக் கொட்டடில போட்டு வதம் பண்ணுன மாதிரி அந்தக் குடும்பத்துக்குள்ள வச்சு சித்திரவதை பண்ணுனாலும் வந்து கூப்பிட்டுப் போங்கன்னு இப்பவும் உங்ககிட்ட மரியாதையா பேசறார்.” அவந்திகாவின் அக்கா மூச்சுவிடாமல் பேசியதிலிருந்து, ஏற்கெனவே குடும்ப சகிதமாய் உட்கார்ந்து, பேசவேண்டியதை முடிவு செய்திருக்கிறார்கள் என்பது சங்கரனுக்குத் தெளிவாகியது.

மரியாதையா பேசறார் என்கிற வார்த்தை நால்வரையும் நெளியச் செய்தது. ராமருக்குத் தாங்கவில்லை, ‘`மரியாதை இல்லாமக்கூடப் பேசச்சொல்லும்மா. நாங்க ஒங்ககிட்ட கடன் கேட்டு வந்தமாதிரி பேசற” வேகமாய்ப் பேசிய ராமரின் தோளைத் தட்டிய கனகராஜன், ‘`ஸாரி, அந்தப்பிள்ள அந்த அர்த்தத்தில பேசல. தங்கச்சி பாசம் அப்பிடி பதற்றப்பட வச்சிடுச்சு. நா மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார்.

``பட், இதுபூராம் எங்க கருத்துதான். அவந்திகா என்ன சொல்றான்னு தெரியாது” அக்கா மறுபடியும் பேசிவிட்டுத்தான் அமைதியானாள்.

`என்னய்யா வீட்டுக்காரெம் பேர இப்பிடி பப்ளிக்காப் பேசுது இந்தப்பிள்ள!’ என்று ராமரின் காதைக் கடித்தபோது அது அவந்திகா இல்லை என்பதைப் புரியவைத்தார். அப்படியா என மிரள மிரள அவளைப் பார்த்தார். அது அவர் ஏதோ தன்னிடம் சொல்லத் தயங்குகிறார் என்பதாகப் புரிந்துகொண்ட அந்தப்பெண், “சொல்லுங்க. நீங்களும் பெரியமனுசங்கதான” என்றாள்.

‘`இல்லம்மா தங்கச்சி. நீ பேசறதெல்லா கரெட்டுதான், தப்பில்ல. ஆனா ஒரு காரியத்துக்கு வந்தம்னா அது முடியணும்னு பேசணும்” எனத் தயங்கித் தயங்கிப் பேசினார்.

‘`ஓ! அப்படின்னா, நாம பேசக்கூடாது. அவங்க ரெண்டுபேரையும்தான் பேசவிடணும்.”

‘`இல்ல, சித்ரவதை அது இதுன்னு பெரியவார்த்தை பேசவேணாம். தர்ஷனும் படிச்சவெ. அதனாலதா அவனுக்கு நீங்க பொண்ணு குடுத்திருக்கீங்க. அவெ இந்தக்காலத்துப் பய. மாமனார் கம்பெனில வேலபாக்க கூச்சப்பட்டிருக்கலாம்” என விசயத்தை மெள்ளத் துவக்கிய சங்கரனை இடை மறித்தார் நாட்டாமை.

``ஒடச்சுப் பேசீரு சங்கரா, அந்தப்பிள்ள எப்பிடிப் பேசிச்சு’’ என்றவர், ``அய்யா, நீங்க ஒங்க கம்பெனில அந்தப்பெய வேல பாத்தப்ப மருமகென்னுகூடப் பாக்காம ரெம்ப அசிங்கமா அவன வஞ்சீங்களாம்” என்ற நாட்டாமைக்குப் பதில் சொல்ல அவந்திகாவின் அக்கா முன் வந்தபோது, கனகராஜன் அவளைத் தடுத்தார்.

‘`அதச் சொல்லவேணாம்னு இருந்தேன். அப்பிடி இருக்கப்ப இப்பத்தான் தனியா தனக்குன்னு சின்ன அளவில ஒரு பிசினஸ் தொடங்கியிருக்கான். இந்த நெலமையில உடனே தனியா வீடு பாத்துப் போகணும்ங்கறது சாத்தியப்படுமா? அதும் இப்ப புள்ளத்தாச்சி. ஆள் அம்பு வேணும். அதனால கொஞ்ச நாள் போகட்டும் நாங்களே ஏற்பாடு பண்ணலாம்’’ சங்கரன் நைச்சியமாகப் பேச்சை வைத்தார்.

“இல்ல சங்கரு, இதுல ஆருன்னாலும் நாயந்தா பேசணும். வேலைன்னு வந்திட்டா ஈவுசோவு பாக்கக்கூடாது. வஞ்சா என்னா? அம்ம வீட்ல வைய மாட்டாகளா! சாரு அத்தன சீக்கிரமா யாரையும் அனாவசியமா பேசமாட்டார். வேறயச் சொல்லுங்க. வீட்டு விசயம் சரித்தே. கொஞ்சநாள் போய் இருங்க. அப்பறம் தனி வீடு பாக்கலாம்” கொத்தனார் தன்மையாய்ப் பேசினார்.

``வொர்க் ப்ளேஸ்ல நடக்கிறதெல்லா வீட்ல வந்து ஒப்பிக்கறது சில்லித்தனம் இல்லியா? நாமதான் அத மானேஜ் பண்ணிக்கணும். பொதுவா கம்பெனில யார் சரியில்லன்னாலும் அப்பா கொஞ்சம் ஹார்ஷாத்தான் நடந்துக்குவார். அது நாங்களே இருந்தாலும் அப்படித்தான் நடப்பார். அப்பறம் தனிவீடு சம்பந்தமா நாம பேசறதும் சரியில்லன்னு நெனைக்கிறேன். ஒரு வைஃப் தனக்கு பிரைவஸி வேணும்னு கேக்கறது தப்பா?” அவந்திகாவின் அக்கா சொல்லிமுடித்ததும்,

‘`நா ஒண்ணும் பெரிய பங்களா கேக்கல. சின்னதா ஒரு பெட்ரூம், ஒரு கிச்சன், டாய்லெட். அவ்வளவுதான். நாலாயிரம் வாடகை வருமா, ஐயாயிரம். . ! உங்க நெலம புரியிது. நானேகூட ஒரு ஜாப்புக்குப் போறேன்னுதான சொல்றேன். இத கன்சிடர் பண்ணக்கூட முடில” வரவேற்பறையின் மேல் பகுதியிலிருந்த ஸ்பீக்கரில் அவந்திகா பேசினாள்.

சிசிடிவி கேமராவும், ஸ்பீக்கரும் வாசலின் இரும்புக்கதவு வரை பொருத்தியிருப்பதாகச் சொன்னார்கள். “நாம பேசறது பூராம் அவந்திகா கேட்டுக்கிட்டுதான் இருக்கா.”

அந்தச்செய்தி பஞ்சாயத்தார்களுக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. கண்காணிப்பில் இருக்கிறோம் எனும் எண்ணம் நால்வருக்கும் உருவாக, சுதாரிப்பாக உட்கார்ந்தனர்.

``பாப்பாவும் கூடவந்து உக்காந்து பேசினா நல்லாருக்கும்’’ ஈ.பி. ராமர்

“கைப்பிள்ளைய வச்சுக்கிட்டு அவளால வரமுடியாது.” அவந்திகாவின் அம்மா.

‘`நாம மாப்பிள்ளையக் கூட்டி வந்திருக்கமா? மாப்ள வந்தா பொண்ணு வரும்” என்ற நாட்டாமை கனகராஜனைப் பார்த்தார். “நீங்க எதும் பேசலீங்யா’’ என்றார்.

“என்னா பேசணும்?” என்ற கனகராஜன், ``தர்ஷன் நல்ல பையன்தான். அதனாலதான பொண்ணக் கொடுத்தேன். என்ன, சொந்தபுத்தில வேல செய்யணும். செய்வான். வரச்சொல்லுங்க, அனுப்பி வைக்கிறோம்.’’

கைகூப்பி விடை கொடுத்தார்.

``அதுக்கு முன்னாடி நல்ல ஒரு வீட்டப்பாத்து வக்கெச் சொல்லுங்க’’ அவந்திகாவின் அம்மா துணைக்குரல் விடுத்தார்.

‘`சின்னப் பொண்ணுதானங்க, அவளுக்கும் சின்னசின்ன ஆசை அபிலாசைகள் இருக்கும்ல. அதயேன் இவெம் புரிஞ்சிக்க மாட்டேங்கறான். இத்தனைக்கும் லவ்வர்ஸ்’’ அறுகோணக் கற்களின் வழியே நடந்துவந்து இரும்புக் கதவிலிருந்த கேமராவையும் ஸ்பீக்கரையும் காண்பித்த அவந்திகாவின் அக்கா, கம்பெனி ஆட்டோவை வரவழைத்தாள்.

‘`ஒரு நிமிசம், ஒங்கிட்ட தனியாப் பேசலாமாம்மா” என்று சங்கரன் அனுமதி வாங்கி ஒரு குட்டையான மரத்தின்கீழ் நின்று பேச்சைத் துவக்கினார்.

“ஒன்னப்பாத்தா அறிவான பொண்ணாத் தெரியறே. தர்ஷன் நல்ல பையன்மா. அவந்திகா மேல எந்தக் குத்தமும் அவெ இன்னவரைக்கும் சொல்லல. பாசமாத்தே இருக்கான்; ஆனா ஏன் வந்து கூப்பிட மாட்டேங்கிறான்னும் புரியல. ஒருவேள அம்மா பாசமாக்கூட இருக்கலாம். நாட்பட நாட்பட ரெண்டு குடும்பத்துக்குமான இடைவெளி அதிகமாகும்மா. ஆளுக்கொரு பேச்சு, கூடக்குறைய வரும். இப்பவே ஒங்க அம்மா தர்ஷன் குடும்பத்த தரக்குறைவா பேசறதா மூணாம் நாலாம் மனுசங்க பேசறாங்க. அது சரியில்லல்ல.”

“ஏன், அவங்க எங்க ஃபேமிலிய என்னென்ன பேசியிருக்காங்கன்னு நான் சொல்லவா? நீங்க கிளம்பும்போது, ‘கனகராஜ் பெரிய மந்தரவாதி உங்க எல்லாரையும் பேச்சில மயக்கிடுவாரு எச்சரிக்கையா பேசுங்க;ன்னு சொல்லியிருப்பாங்களே!’’ அவந்திகாவின் அக்கா உடனுக்குடன் பதில் உரைத்தாள்.

சங்கரனுக்குப் பேச்சு வரவில்லை. அவந்திகாவை அவளது அக்காவைக் கொண்டு பேசி பிரச்னைக்கு வழிகண்டுவிடலாம் எனக் கணக்கிட்டுத்தான் தனியே அழைத்தார்.

அவந்திகாவின் அக்காவே தொடர்ந்தாள். “இது சகஜம்தான் சார். நானும் இது கூடாதுன்னுதான் சொல்லவரேன். தர்ஷனும் அவந்திகாவும் லவ்வர்ஸ்தான. அதனால சான்ஸ் இருக்கு. இன்னிக்கு அவளும் அவன விட்டுக் குடுக்காமத்தா பேசறா. ரெண்டுபேர் கிட்டயும் சின்னச்சின்ன மிஸ்டேக்ஸ் இருக்கும். இதும்கூட அதர் பர்சன்ஸால ஏற்படுறது. நிச்சயமா இந்த பீரியட்ல அத அனலைஸ் பண்ணியிருப்பாங்க. அதனால அவங்கள நாம இழுத்துச் சேத்துவைக்க வேணாம். அவன மட்டும் வரச் சொல்லுங்க. நீங்களே பர்சனலா கேர் எடுத்துச் செய்யணும். அவங்க வீட்டுக்குத் தெரியாம தனியா சந்திச்சுப் பேசுங்க. உடனே வராட்டியும் சில நாள்ல வருவான். இங்க நான் இவளப் பாத்துக்கறேன். ஒருவாட்டி ரெண்டுவாட்டி பேசப்பேச ஈகோ கரஞ்சிரும். தானாகவே ரெண்டுபேரும் மூட்டையக் கட்டிக்கிட்டு கிளம்பீடுவாங்க” என்றவள், சங்கரனின் மௌனம் கண்டு, “பெத்த பிள்ளைகளே ஆனாலும், அவங்க வாழ்க்கையை நாம முடிவு செய்யக்கூடாது சார்.’’

கூட்டுக்குடும்பத்தின் மேல் அவந்திகாவுக்கு வெறுப்பிருந்தாலும் தர்ஷன்மீதான அவளது காதலை தினந்தோறும் அவளால் அக்காவிடம் பகிராமல் இருக்க முடிவதில்லை. குழந்தையைக் கொஞ்சும் வார்த்தைகளில் தர்ஷனை அவள் திட்டுவதையும் திடீரென அப்பாவிடம் சொல்லிவிடுவதாய் குழந்தையை எச்சரிக்கும் பாவனையையும் வேறு எப்படி எடுத்துக் கொள்வதாம்!

``அவன வரச் சொல்லுங்க!”

``சரிம்மா’’ எனச் சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினார் சங்கரன்.

- ம.காமுத்துரை

(04.02.2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)