Published:Updated:

சிறுகதை: தீபாவளி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

அரிசங்கர்

மறுநாள் தீபாவளி. வெடிச்சத்தம் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டுக்கொண்டிருந்தன. முன்புபோல் வெடி போடுவதில்லை என்ற குரல்களும் அவ்வப்போது கேட்டவாறே இருந்தன.

பெயின்ட் உதிர்ந்து துருவேறிய சின்ன யானை ஒன்று, அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி நேராக வீட்டுக்குள் நுழைந்தான் செல்வம். வரவேற்பறையில் யாரும் இல்லாததைக் கண்டு, “அம்மா… அம்மா...” என்று குரல் கொடுத்தான்.

சமையலறையிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் எட்டிப் பார்த்து, “செல்வம்… அப்பிடி உக்காரு… அவரு குளிச்சிட்டிருக்காரு” என்று சொல்லிவிட்டு சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.

செல்வம் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளேயிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தமும், குக்கர் சத்தமும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன.

குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் வந்த ராமமூர்த்தி, செல்வத்தைக் கடந்து சென்று சுவரில் மாட்டப்பட்டிருந்த சாமி படங்களின் முன் கும்பிட்டபடி கண்களை மூடி சிறிது நேரம் நின்றிருந்தார்.

ராமமூர்த்தி உயரமாக திடகாத்திரமாக கறுப்பாகப் பெரிய மீசையுடன் இருந்தார். வயது ஐம்பதைக் கடந்துவிட்டதால் தோளில் சுருக்கங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தது. தலையில் ஆங்காங்கே கறுப்பு முடி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. மற்றபடி தலை, மார்பு, மீசை என அனைத்தும் வெள்ளைப் பஞ்சாக இருந்தன.

சிறுகதை: தீபாவளி
சிறுகதை: தீபாவளி

ராமமூர்த்தி, தலைக்கு வலிக்காமல் சில உத்திகளையும், முட்டிக்கு வலிக்காமல் சில தோப்புக்கரணங்களையும் போட்டுவிட்டுக் கண்களைத் திறந்தார். எதிரில் இருந்த மாடத்திலிருந்து கைநிறையத் திருநீற்றை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டே, “எப்ப வந்தப்பா” என்றார்.

“இப்பதான்ப்பா…”

அவர் பதிலேதும் பேசாமல் உள்ளே சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து, சாப்பிட உட்கார்ந்தார். உள்ளே இருந்து அவர் மனைவி இட்லிகளையும் குழம்பையும் எடுத்துக்கொண்டு வந்து வைத்துவிட்டு மீண்டும் உள்ளே போகும் போது, “செல்வம் வா… வந்து உக்காரு” என்றார். செல்வம் பதிலேதும் பேசாமல் வந்து அவர் அருகில் உட்கார்ந்தான். அவர் மனைவி உள்ளேயிருந்து இரண்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு வந்து இருவர் முன்னும் வைத்துப் பரிமாறினாள்.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அவர் மனைவி மெல்ல பேச்சைத் தொடங்கினாள்.

“ஒடம்பு சரியில்லதானே… இப்ப இன்னாத்துக்குக் கடையப் போடணும்னு ஓடறீங்க…”

அவர் இட்லியை மென்றவாறே, “பின்ன ஊட்லயே உக்காந்து இன்னா பண்ணச்சொல்ற…”

அவர் மனைவி அமைதியாக இருந்தாள். செல்வத்துக்கு தர்மசங்கடமாக இருந்தது. செல்வத்துக்குத் தெரியும், அவருக்குக் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்று. செல்வம்தான் வழக்கமாக அவருக்குச் சரக்கை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தான். மேலும் அவன், அவர் மகனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். அதனாலோ என்னவோ செல்வத்தை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பேசினார்.

“பாண்டிச்சேரியில சண்டே மார்க்கெட்ல கடை போடறதுன்னா இன்னா லேசுப்பட்ட காரியமா… ஒருவாரம் கடை போடாமா விட்டாலும் அவ்ளோதான். இத்தினி வருஷமா அதக் காப்பாத்த நான் இன்னா பாடுபட்டிருப் பேன், எவ்ளோ துட்டு செலவு செஞ்சிருப்பேன்…”

“அதுக்கு… முடிலனாலும் போவியா… அங்க போயி எதுனா ஆச்சினா இன்னா பன்றது. யாரு கூட இருக்கா? இந்தப் பையனையும் சரக்க எறக்கினதும் அனுப்பிவுட்டுற…”

“ஏன், அவனுக்கு இன்னா தலையெழுத்தா எங்கூடாவே நாளெல்லாம் நின்னுக்கின்னு இருக்க… அவன் வண்டி எடுத்துக்கினு போனா நாலு காசு பாக்கப்போறான்…”

“ஏம்பா செல்வம், இன்னிக்கு ஒருநாளு அவரு கூடவே இரேன்பா…”

செல்வம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்தான். அவர் கோபமாக, “ஏன் அவன் உயிர எடுக்கற… நான் ஒண்ணும் செத்துட மாட்டேன், கம்முனு கெட…”

“கம்முனுதான் கிடக்கறன்…” என்று விசும்பத் தொடங் கினாள்.

அவர் எழுந்துசென்று கையைக் கழுவிக்கொண்டு வந்தார். அவர் பின்னாலேயே செல்வமும் கையைக் கழுவிக்கொண்டு வந்தான். அவர் மனைவி எழுந்திருக்காமல் அங்கே கண்களைக் கசக்கிக்கொண்டு உட்கார்ந்திரு ந்தாள்.

மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவர் பின் மெல்ல, “நாளைக்கே ஓடிப்போன உன் புள்ள வந்து எனக்கு இன்னா சேத்துவெச்சிருக்கேன்னு கேட்டா நான் எங்கடி போவன்…” என்றார்.

அதற்குப் பிறகு அவள் எதுவும் பேசவில்லை.

செல்வமும் அவரும் சேர்ந்து சரக்கையெல்லாம் வண்டிக்குள் ஏற்றினர். தெருவில் சில சிறுவர்கள் ஊசிப்பாட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அவர் அச்சிறுவர்களிடம் பேச்சுக்கொடுத்தார்.

“ஏண்டா… இத்தப்போயி வெடிச்சிக்கினு இருக்கீங்க…”

சிறுவனில் ஒருவன், “எங்காயா இதான் வாங்கி யாந்துச்சு…”

அவர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்று வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு வந்து அச்சிறுவர் களிடம் கொடுத்தார். அவர்கள் அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினர். அவர் மனைவி அவரை முறைத்துக் கொண்டிருந்தாள். அதை அவர் பார்க்காததுபோல செல்வத்திடம் “எல்லாம் ஏத்தியாச்சா?” என்றார்.

“ஏத்தியாச்சிப்பா…”

அவர் தன் மனைவியிடம் தலையாட்டிவிட்டு செல்வத்தின் அருகில் அமர்ந்துகொண்டார். வண்டி புறப்பட்டுச் சென்று தெருமுனையில் நின்றது. அவர் மட்டும் இறங்கிவந்து அங்கிருந்த சிறு பிள்ளையார் கோயிலில் ஒரு கற்பூரத்தை ஏற்றிவிட்டு, மீண்டும் வண்டியில் ஏறிப் புறப்பட்டார். வண்டி கண்ணிலிருந்து மறையும் வரை அவர் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறுகதை: தீபாவளி
சிறுகதை: தீபாவளி

பிறகு உள்ளே சென்று சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினாள்.

மணி, நின்றுகொண்டிருந்த தன் அப்பாவின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்திருந்தான். கையில் ஒரு மெதுவடையை வைத்துக்கொண்டு தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்த தன் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கமாக ஹோட்டல் கேஷியரிடம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இந்நேரத்துக்கெல்லாம் அவர் புறப்பட்டிருப்பார். ஆனால், இப்போது மணி எட்டாகியும் அவர் புறப்படாமல் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் யாருமே புறப்படாமல் இருந்தனர். மதியம் மூன்று மணிக்கே சென்றுவிட்ட பிரியாணி மாஸ்டர்கூட அப்போது மீண்டும் வந்திருந்தார். அனைவரும் முதலாளிக்காகக் காத்தி ருந்தனர். அவர் வந்து அனைவருக்கும் தீபாவளிக்குப் பணம் தருவார்.

மணிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் நண்பர்கள் அனைவரும் ஒரு வாரம் முன்பாகவே தீபாவளிக்குப் புதுத் துணிகளையும், பைநிறையப் பட்டாசுகளையும் வாங்கிவிட்டனர். அதுவும் அவன் நண்பன் குணா சென்ற சனிக்கிழமையே அவன் அப்பாவுடன் அரியாங்குப்பத்துக்குச் சென்று வெடி செய்யும் இடத்திலேயே அரியாங்குப்ப வெடியும், யானை வெடியும் அதிகமாக வாங்கிவந்திருந்தான். அரியாங்குப்பத்து வெடிக்குச் சுற்றுவட்டாரத்தில் ஒரு மவுசு இருந்தது.

நாளை எப்படியும் அப்பா வீட்டில்தான் இருப்பார். அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு அரியாங்குப்பம் சென்று வெடி வாங்கிவிட வேண்டும் என்று மணி மனக்கணக்குகளைப் போட்டுக்கொண்டிருந்தான்.

அவனுக்குச் சென்ற ஆண்டு தனக்கு நடந்த அவமானகரமான விஷயம் நினைவுக்கு வந்தது. எப்போதும் தீபாவளிக்கு மறுநாள் அவனும் அவன் நண்பர்களும் கும்பலாகச் சென்று யார் வீட்டு வாசலில் அதிக வெடி வெடித்த குப்பை இருக்கிறது என்று பார்ப்பது வருஷா வருஷம் வாடிக்கையான விஷயம். சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு இவன் வீட்டு வாசலில் மட்டும்தான் குப்பையே இல்லாமல் இருந்ததைக் கண்டு அவன் நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்திருந்தனர். அதனால், சென்ற ஆண்டு தீபாவளி அன்று இரவு வெகு நேரம் கழித்து அக்கம்பக்கத்தில் வெடித்த காகிதங்களை அள்ளிக்கொண்டு வந்து அவன் வீட்டு வாசலில் தூவிக்கொண்டிருந்தான். இதை அவன் நண்பர்களில் ஒருவன் பார்த்துவிட்டதால், மறுநாள் மணிக்குப் பெரிய அவமானமாகப் போய்விட்டது. அதனால், இந்த ஆண்டு வெடி வாங்கியே ஆகவேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.

கையிலிருந்த வடையைச் சாப்பிடவே மணிக்குப் பிடிக்கவில்லை. ரொம்ப நேரமாகக் காத்திருப்பதால் மணிக்கு எரிச்சலாக இருந்தது. அவன் அப்பா பார்க்கிறாரா என்று பார்த்துவிட்டு, அந்த வடையைத் தூக்கி எறிந்தான். அவனுக்கு எப்போதும் அவன் அப்பா கடை வடை பிடிப்பதே இல்லை. அதை ஒருமுறைகூட சூடாக அவர் அவனுக்குக் கொடுத்ததேயில்லை. அவ்வப்போது ஹோட்டலில் மீந்த சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்துவருவார். இடையில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்னை காரணமாக யாரும் எதையும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று முதலாளி சொல்லிவிட்டார்.

மணி எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இவ்வாறு கனவு கண்டுகொண்டிருந்ததில் தன் அப்பா கடை முதலாளி வந்ததையே கவனிக்கவில்லை. அவன் அப்பா சம்பளத்தையும், தீபாவளிப் பணத்தை ஒரு மொய்க் கவரிலும் பெற்றுக்கொண்டு இவனிடம் வந்தார். அவர் வருவதைக்கூட கவனிக்காமல் மணி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.

“டேய்… போலாமா?” என்ற குரலைக் கேட்டுதான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.

“இன்னாப்பா… போலாமா?”

“போலாம் வா…” என்று அவனைக் சைக்கிளின் முன் கம்பியில் அமரவைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். அவர் மீதிருந்து சாம்பார் வாசனை வந்துகொண்டிருந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்தச் சாம்பார் வாசனைதான் அவன் அப்பாவின் வாசனையாக அவன் மனதில் பதிவாகியிருந்தது. கடை கண்ணிலிருந்து மறையும் தூரத்துக்குச் சென்றுவிட்டதும், சைக்கிளை ஒரு தெருவிளக்கின் கீழ் நிறுத்திவிட்டு, தன் சட்டைப்பையில் இருந்த கவரை எடுத்து உள்ளே எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தார். மொத்தம் தெரிந்ததும் அவர் முகம் வாடியது. பிறகு கோபமானது. பணத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, அந்தக் கவரைக் கசக்கி, கோபமாகத் தூக்கி எறிந்தார். சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். மிதித்துக்கொண்டே கோபமாக அவர் முதலாளியைத் திட்டிக்கொண்டும் தன் நிலையை நினைத்துப் புலம்பிக்கொண்டும் வந்தார். பேசிக்கொண்டே சைக்கிள் மிதித்ததால் அதிகமாக மூச்சிரைத்தது.

மணியும் அவன் தந்தையும் காலையிலேயே திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தனர். மணியை ஏழு மணிவாக்கில்தான் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வரச்சொன்னார். பிறகு, இருவரும் சேர்ந்து புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நான்கு மாடித் துணிக் கடைக்குப் போகலாம் என்று முடிவு செய்தனர். அந்தக் கடைக்குச் சென்று ஒரு முறையாவது துணி எடுத்துவிட வேண்டும் என்று அவ்வப்போது வீட்டில் பேச்சு இருந்துகொண்டே இருந்தது. அக்கம்பக்கம் வீடுகளிலெல்லாம் அந்தக் கடைக்குக் குடும்பம் குடும்பமாகச் சென்றுவருவதைக் கண்டு, வீட்டில் எல்லோருக்கும் ஒரு வருத்தம் ஏற்படத்தொடங்கியது.

ஆனால், இப்போது இருக்கும் பணத்தில் அங்கெல்லாம் போகமுடியாது. அதனால், சண்டே மார்க்கெட் சென்று சாதாரணமாக முடித்துக்கொள்ளலாம் என்று மணியின் அப்பா முடிவெடுத்தார்.

தன் மனைவிக்குக் கடைசியாக எப்போது துணி எடுத்துக்கொடுத்தோம் என்று யோசித்தார். சரியாகத் தெரியவில்லை. இந்த வருஷம் ஒரு புடவையாவது எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.

எதுவும் இல்லாமல் போய்விட்டதை நினைத்துத் தன்னை நொந்துகொண்டார். கடன் வாங்கினால் தீபாவளியை நன்றாகக் கொண்டாடலாம்தான். ஆனால், அப்படி ஒன்றும் தேவையில்லை என்பது அவர் நிலைப்பாடு.

அவர் சைக்கிள் நான்கு மாடித் துணிக் கடைக்குப் போகவில்லை என்பதை மணி உணர்ந்தான்.

“அப்பா… எங்கப்பா போற?”

“சண்டே மார்க்கெட்டுக்கு…”

“அப்போ அந்தக் கடைக்குப் போவலயா?”

“இல்லடா… காசு பத்தாது…”

“இன்னிக்குப் புதங்கிழமைதானே… சண்டே மார்க்கெட் எப்படி இருக்கும்?”

“தீபாவளிக்குன்னா மொத நாளு சண்டே மார்க்கெட் இருக்கும்… அதுவும் நைட்டு புல்லா இருக்கும்.”

சிறுகதை: தீபாவளி
சிறுகதை: தீபாவளி

அதற்குமேல் மணி எதுவும் பேசவில்லை. அவன் வருத்தத்தில் இருந்தான். அவன் காலையிலிருந்து பார்க்கும் அனைவரிடமும் பெரிய துணிக்கடைக்குப் போகப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். “அது முழுக்க ஜில்லுன்னு இருக்கும். நான் மட்டும்தான் போவப்போறன். நீ இல்ல… நீ வீட்லயே கெட…” என்று தன் தங்கையை அழவைத்தான். அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவன் அம்மா இவன் முதுகில் ஒன்று போட, அவள் அமைதியானாள். பிறகு, அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக, “உனக்கு இன்னா டிரஸ் வேணும்னு சொல்லு… நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கியாறன்…” என்றான். அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. மஞ்சக் கலரு டிரஸ் என்றாள். அவன் சரி என்றான். அதன்பிறகே இருவரும் சமாதான மானார்கள்.

ஆனால், வீட்டுக்குச் சென்று தங்கையிடம் என்ன சொல்வது என்று யோசித்தான். எப்படியும் அவள் அப்பாவிடம்தான் சண்டை பிடிப்பாள் என்பதால், தனக்கு நிகழ்ந்த சோகத்தை நினைத்து மீண்டும் சோகமானான்.

காந்தி ரோடு, புஸ்ஸி ரோடு சந்திப்பில் பாதுகாப்பாக ஓர் இடம் பார்த்து சைக்கிளை நிறுத்திவிட்டு, இருவரும் காந்தி ரோட்டில் நுழைந்தனர்.

நகரமுடியாத அளவுக்குக் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டிருந்தது. சண்டே மார்க்கெட்டுக்கு சிலர் வாங்க வருபவர்கள் என்றால், பலர் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். முக்கியமாக, இளைஞர்களுக்கு அது ஒரு நல்ல பொழுதுபோக்கு இடம். இதுபோன்ற நாள்களில் துணிக்கடைகளிலும், பெண்களுக்கான பொருள்கள் விற்கும் கடைகளிலும்தான் வியாபாரம் அதிகமாக இருக்கும். முக்கியமாக தினக்கூலி, வாரக் கூலியாட்கள் தங்கள் குடும்பங்களுக்குத் துணிமணிகள் வாங்க ஏற்ற இடமாக சண்டே மார்க்கெட் பல ஆண்டுகளாக இருந்துகொண்டிருந்தது. அசைக்க முடியாத இந்த வியாபாரத் தளத்தை, ஒரு பெரிய கடை அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

மணி ஏற்கெனவே சிலமுறை தன் அப்பாவுடன் சண்டே மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறான். தன் அப்பாவுடனும் எதிர்வீட்டு அண்ணனுடனும்.

எத்தனை முறை வந்தாலும் திரும்ப திரும்ப பிரமித்துப் பார்க்க, அதிசயிக்க, ஆச்சர்யப்பட அங்கு ஏதாவது இருந்துகொண்டேதான் இருந்தன.

என்ன இல்லை என்று கேட்கத் தூண்டும் அளவுக்கு நீண்ட வரிசையில் இருபுறமும் கடைகள் அடுத்தடுத்து இருந்தன. எல்லோராலும் முழு நீளத்தையும் நடந்து வேடிக்கை பார்ப்பது சற்றுக் கடினமான காரியம்தான்.

மணியும் அவன் அப்பாவும் ஒவ்வொரு துணிக் கடையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தனர். எல்லாக் கடைகளிலும் கூட்டம் இருப்பதுபோலவே தோன்றியது. துணிக் கடைகளில் அதிகம் பெண்களுக்கும் குழந்தைகளுக் கானதாகவுமே இருந்தன.

மணியின் அப்பாவுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. மணி இந்த ஆண்டு ஏழாவதிலிருந்து எட்டாவது போன பிறகு அவனுக்குச் சீருடையே எடுத்துத் தரவில்லை. அவன் பழைய சீருடையையே தொடர்ந்து பள்ளிக்கு அணிந்துகொண்டு போகிறான். அவனும் கேட்டு கேட்டுப் பார்த்து விட்டுவிட்டான். அதனால், அவனுக்கு ஒரு வெள்ளைச் சட்டை எடுத்துவிடலாம் என்று முடிவெடுத்துக் கடையைத் தேட ஆரம்பித்தார்.

சிறுகதை: தீபாவளி

தேடிக்கொண்டிருந்தவருக்கு ஒரு கடை கண்ணில்பட்டது. சிறுவர்களுக்கான சட்டைகள் விற்கும் கடை. அதில், வெள்ளைச் சட்டையும் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் மணியை இழுத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்றார். மணி எடுத்த உடனேயே, “அந்த நீலச் சட்டைய எடுங்க” என்றான். அவன் அப்பா அவனை அதட்டினார்.

வேறு ஒரு வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இவர்களிடம் திரும்பினார் ராமமூர்த்தி.

“சொல்லுங்க சார்…”

“பையனுக்குச் சட்டை வேணும்…”

“பாருங்க சார்… இந்தப் பக்கம் தொங்கறதெல்லாம் பையனுக்குச் சரியா இருக்கும்.”

மீண்டும் மணி நீலக் கலர் சட்டையைக் குறி வைத்தான்.

அவன் அப்பா அவனைப் பேசவிட வில்லை. “வெள்ளக் கலர் காட்டன் சட்டை இருந்தா காமிங்க…” என்றார்.

மணி அவன் அப்பாவை எரிச்சலாகப் பார்த்தான். “எதுக்கு இப்ப வெள்ளச் சட்ட…”

“வெள்ளச் சட்டனா ஸ்கூலுக்கும் போட்டுக்கலாம்ல…”

“நீ ஸ்கூலுக்கு வேற எடுத்துக் குடு. எனக்கு இப்போ நீலச் சட்டைதான் வேணும்.”

“டேய்… பத்துச் சட்டைலாம் எடுத்துக் குடுக்க முடியாது. வேணும்னா வெள்ளச் சட்ட எடுத்துக்க… இல்லன்னா வா… உன் தங்கச்சிக்கு எடுத்துக்கினு போவோம்.”

அவன் அமைதியாக நின்றிருந்தான். கண்கள் கலங்கத் தொடங்கின.

“காலைல இருந்து உழைச்சிட்டு எப்படா போய்ப் படுப்போம்னு இருக்கேன். என்னக் கடுப்பேத்தாத…”

அவன் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தான். கண்கள் கீழ்நோக்கியிருந்தது. வெளிவந்துகொண்டிருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டிருந்தான். அவன் அப்பா ராமமூர்த்தியிடம், “அவன் சைஸுக்கு ஒரு வெள்ளச் சட்டை எடுங்க…” என்றார்.

ராமமூர்த்திக்கு அந்தப் பையனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தயக்கத்துடனே வெள்ளைச் சட்டையை எடுத்து, அவன் முதுகுப்புறம் வைத்து அளவு பார்த்தார். சரியாக இருந்தது.

அவன் அப்பா “எவ்ளோ?” என்றார்.

ராமமூர்த்தி “நூத்தம்பது” என்றார்.

பேரம் தொடங்கியது. பாதியில் அவன் “நான் கேட்ட சட்டதான் வாங்கலல்ல… எனக்குப் பட்டாசு வாங்கக் காசு குடு…” என்றான்.

அவன் அப்பாவுக்கு ஆத்திரமாக வந்தது.

“உனுக்கு சட்டையே கிடையாது வா…” என்று நகர்ந்தார்.

அவன் அப்படியே நின்றிருந்தான். கண்களில் கண்ணீர் கொட்டியது. ராமமூர்த்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர், அவன் அப்பாவிடம், “கொடுக்கறதக் கொடுங்க சார்…” என்றார்.

ஆனால், அவர் அதைக் காதில் வாங்கியதைப் போலவே தெரியவில்லை. அவர் அவனையே முறைத்துக்கொண்டிருந்தார். அவன் கீழே பார்த்துக்கொண்டே சொன்னான், “நீ மட்டும் எனக்குப் பட்டாசுக்குக் காசு தரலனா பாரேன்…”

சிறுகதை: தீபாவளி

அந்த வார்த்தையில் ராமமூர்த்தி அதிர்ந்தார். அந்த வார்த்தை அவரை ஏதோ செய்தது. அவர் மகன் ஓடிப்போவதற்கு முதல் நாள் ஏதோ கேட்டு இவர் மறுத்ததால் இதே வார்த்தையைத்தான் அவனும் சொன்னான். ஆத்திரமடைந்த ராமமூர்த்தி தன் மகன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதுதான் அவர் தன் மகனைக் கடைசியாகப் பார்த்தது. அதன்பிறகு அவருக்கும் அவர் மனைவிக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுமையை வார்த்தையில் சொல்லி மாளாது. ஒரு கணம் மணி அவர் கண்களுக்குத் தன் மகனைப்போலவே தெரிந்தான். அவர் நடுங்க ஆரம்பித்தார். அவர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். தான் செய்த தவற்றைத்தான் இவரும் செய்யப்போகிறாரோ என்ற அச்சத்தில் அவருக்கு வேர்த்துக் கொட்டத் தொடங்கியது.

சிறிது நேரம் முறைத்து க்கொண்டிருந்த அவன் அப்பா, பிறகு ஒரு பெருமூச்சை விட்டு, “சரி, காலையில உன் சட்டையில் பட்டாசுக்குக் காசு இருக்கும், போதுமா…” என்று அவனைச் சமாதானப்படுத்தினார்.

அவரின் வார்த்தைகள் ராமமூர்த்தியை இலகுவாக்கின. இதேபோன்ற ஒரு சமாதான வார்த்தையைத் தேடாமல் போனதால், தன் மகனை இழந்துவிட்டுத் தானும் தன் மனைவியும் தவிப்பதை நினைத்து வேதனை அடைந்தார். அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார். வேறு எந்த வாடிக்கையாளர்மீதும் அவர் கவனம் போகவில்லை.

அவன் அப்பா பணத்தை எடுத்து ராமமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு, “சட்டையை மடிச்சிக் கொடுங்க…” என்றார். தன் மகனை இழுத்து அணைத்துக்கொண்டு, “இதுக்குலாமா அழுவ சின்னப் பையன் மாதிரி… உன் தங்கச்சி பாத்தா சிரிப்பா… இரு இரு அவகிட்ட சொல்றேன்” என்று சமாதானப்படுத்தி அவன் மனதைத் திசை திருப்பினார்.

அவர்கள் பார்க்காதவாறு ராமமூர்த்தி வெள்ளைச் சட்டையுடன் மணி ஆசைப்பட்ட நீலச் சட்டையையும் எடுத்து, அந்தச் சட்டைப்பையில் அவன் அப்பா கொடுத்த பணத்தையும் வைத்து செய்தித்தாளில் சுற்றி, ஒரு பையில் போட்டுக் கொடுத்தார். அதை மணி வாங்கிக்கொண்டான். அழுகையை நிறுத்திவிட்டு, அவன் அப்பாவுடன் தங்கைக்குத் துணி எடுக்க வேறு கடைக்கு நடந்தான். மணி போவதையே பார்த்துக்கொண்டிருந்தார் ராமமூர்த்தி. மணி அவன் அப்பாவிடம் சொல்வது அவர் காதில் விழுந்தது.

“அப்பா… தங்கச்சிக்கு மஞ்சக் கலர்ல டிரஸ் வேணும்னு சொல்லிச்சி.”