
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலை...
இரவு பத்து மணி இருக்கும்போது டெலிபோன் அடித்தது. அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது. கைவிரலால் சுழற்றிப் பேசும் தொலைபேசிதான். ஆப்பிரிக்காவில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் இரவு பத்து மணிக்கு அழைக்கும் நண்பர்கள் யாரும் உண்டாகவில்லை. டெலிபோனை எடுத்து ‘ஹலோ’ என்றேன். ஒருமுறை இப்படித்தான் நடு இரவில் ஓர் அழைப்பு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்தது. என்னை இரவு விருந்துக்கு அழைக்கவில்லை. ஓர் எச்சரிக்கை தருவதற்காக வந்த அழைப்பு. ஆகவே கை லேசாக நடுங்கத் தொடங்கியது.
இந்த அழைப்பு அப்படி அச்சுறுத்தும் செய்தியைக் கொண்டுவரவில்லை. அதிலும் மோசமானது. அழைத்தவருடையது ஆணை கொடுத்துப் பழகிய குரல். தன் பெயர் சாயித் என்றார். உடனேயே புரிந்துவிட்டது. எனக்குப் பரிச்சயமான லெபனிஸ் தொழிலதிபர். என்ன விசயமாக அழைத்தார் என்று கேட்டேன். `ஓர் இளம்பெண் வீதியிலே அலைந்து கொண்டிருக்கிறார். அவர் பேசிய மொழி புரியவில்லை. பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. ’ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா’ என்று பிதற்றுகிறார் என்று சொல்லிவிட்டு டெலிபோனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண் அழுவதும் ஒரு வார்த்தை பேசுவதும் பின்னர் அழுவதுமாக இருந்தார். எனக்கு அழுகை புரிந்தது; வார்த்தை புரியவில்லை. ஏனென்றால் அது சிங்களம், ஆகவே மனைவியிடம் பேசச் சொல்லிக் கொடுத்து விட்டு மனைவியின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தேன். அது கலவரமாக மாறியது. லெபனிஸ்காரரிடம் முகவரியைப் பெற்றுக்கொண்டு உடனேயே அங்கே புறப்பட்டோம்.
காரிலே போனபோது மனைவி கதையைச் சொன்னார். அந்தப் பெண்ணுக்கு வயது 15, பெயர் சீலாவதி. இங்கே வேலைக்காரப் பெண்ணாக ஒரு வருடமாக வேலைபார்க்கிறார். வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு அதிகாலையே கிளம்பிவிட்டார். நாள் முழுக்க 40 மைல் தூரத்தைக் கடந்திருக்கிறார். காலையிலிருந்து சாப்பிடவில்லை. யாரிடம் போவது, எங்கே தங்குவது ஒன்றுமே தெரியாமல் கலங்கிநின்ற போதுதான் தற்செயலாக இந்த லெபனிஸ்காரர் அந்தப் பெண்ணைக் கண்டிருக்கிறார்.

நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது இரவு 11 மணியாகிவிட்டது. சாயித் வாருங்கள் என்றார். சந்தையில் இரைச்சல் அடங்கிவிட்டாலும் வேர்க்கடலை வறுத்த மணம் போகவில்லை. சகாரா பாலைவனத்திலிருந்து வீசும் ஹமட்டான் காற்றுக் குளிர், குதியில் ஆரம்பித்து எலும்புகளுக்குள் புகுந்து உபத்திரவம் செய்தது. முழங்காலுடன் கால் முடிந்த பிச்சைக்காரன் கீழே அமர்ந்திருக்க, இந்தப் பெண் நடுங்கிக்கொண்டு நின்றார். `எங்கே வேலை பார்க்கிறார்?’ என்று மனைவி கேட்டபோது அவர் `உடுகம்போல சகோதரர்கள்’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தச் சகோதரர்கள் ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான். மரம் ஏற்றுமதி செய்யும் இத்தாலிய கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார்கள். மூத்தவர் இன்ஜினீயர், இளையவர் கணக்காளர். இரண்டு சகோதரர் களும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசித்தனர். கிறிஸ்துமஸ் சமயம் பெரிய விருந்துகள் வைத்து ஆட்டமும் பாட்டும் விடியவிடிய நடக்கும். ஒருமுறை இந்தக் கொண்டாட்டத்திற்குப் போன சமயம் கம்பெனி அதிபர் அலெசாண்ட்ரோவைப் பார்த்திருக்கிறேன். ஆறடி உயரமாக இருப்பார். கைவிரல்களில் பச்சை, மஞ்சள், நீலம் எனப் பல நிறங்களில் மோதிரங்கள். சிவப்பு முகத்தில் வாழைப்பழத்தில் இருப்பதுபோலக் காணப்பட்ட கறுப்புப் புள்ளிகள் அவர் கம்பீரத்தைக் கூட்டின.
அந்த நாட்டிலே ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அதிகாரம் கொண்டவர் இந்த அலெசாண்ட்ரோ தான். சில மந்திரிகள் ஜனாதிபதியிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை அலெசாண்ட்ரோவிடம் முடித்துத் தரச்சொல்லிக் கேட்பார்கள். அலெசாண்ட்ரோ முதலில் மந்திரியைத் திட்டுவார். ‘உன்னுடைய மூளையில் தண்ணீர் கலந்துவிட்டது. இனிமேல் உனக்கு இந்தப் பதவி சரிவராது’ என்று வைதுவிட்டு அவர் கேட்ட உதவியைச் செய்து கொடுப்பாராம்.
காரிலே திரும்பியபோது பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் இந்தப் பெண் எப்படி அங்கே வந்து மாட்டிக்கொண்டார் என்று மனைவி கேட்டார். ஒரு சொந்தக்காரர் அவரைப் பிடித்து இங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார். மூத்தவருடைய பிள்ளைகளைப் பார்க்க என்றுதான் அவரைக் கூட்டிவந்தார்கள். ஆனால் வந்த பின்னர் சமையல், வீட்டுவேலை, துணி துவைப்பது என்று எல்லாமே அவர் தலையில்தான். அதுமட்டுமில்லை. மூத்தவர் வீட்டில் வேலை முடிந்தால் இளையவர் வீட்டிலும் செய்யவேண்டும். காலை 5 மணிக்கே எழும்பி இரவு 11 மணிக்குப் படுக்கப் போகும் வரைக்கும் ஒரே வேலைதான்.
சீலாவதியை வீட்டு வெளிச்சத்தில் பார்த்த நான் திடுக்கிட்டுவிட்டேன். முயலினுடையது போன்ற பழுப்பு நிறக்கண்களால், ஒரு நிலையில் நிற்காமல் பயத்தில் இங்கும் அங்குமாகப் பார்த்தார். உடம்பில் ஏறிய சிறு நடுக்கம் இன்னும் ஓயவில்லை. பூப்போட்ட சீத்தைத் துணியில் மேல்சட்டை. ஒரு வாரம் முன்னர் தோய்த்திருக்கக்கூடிய பச்சைநிற கட்டைப் பாவாடை. பேப்பர்போலத் தேய்ந்துபோன பாட்டா செருப்பு. அடர்த்தியான தலைமுடியை வாரி அலட்சியமாக முடிந்திருந்தார். இவ்வளவு மலிவு உடையிலும் அவர் அழகு ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடியதுதான்.
சீலாவதி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாததால் பசியோடிருந்தார். மனைவி அவசர அவசரமாகச் சமைத்து பரிமாற, கூச்சத்துடன் சாப்பிட்டார். அவரிடம் ஒரு பைகூடக் கிடையாது. அப்படியே வெறும் கையுடன் ஓட்டமும் நடையுமாகப் புறப்பட்டிருக்கிறார். மனைவி தன்னுடைய இரவு ஆடையை அணியக் கொடுத்து, தூங்கச் சொன்னார். `இது மோசமான ஊர். அந்த லெபனிஸ்காரர் கண்ணில் நீ பட்டபடியால் தப்பிவிட்டாய். அவர் நல்லவர். எல்லோரும் அவர் மாதிரி நடக்கமாட்டார்கள். இந்த நாட்டு போலீசிடம் மாட்டியிருந்தால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். பிரச்னைகளைப் பேசித் தீர்க்கலாம், வீட்டை விட்டு ஓடுவது என்பது ஓர் அந்நிய நாட்டில் மிகவும் ஆபத்தானது. நாளை காலை உன் எசமானர்களிடம் பேசி இதற்கு முடிவுகட்டுவோம்’ இப்படியெல்லாம் மனைவி ஆலோசனை வழங்கினார்.
அந்தப் பெண் தூங்குவதாகத் தெரியவில்லை. அவர் மூளைக்குள் பலவிதமான சிந்தனைகள் ஓடியிருக்கும். எதையோ நினைத்து பயந்து நடுங்கினார். எதிர்பாராத விதமாக ‘அம்மா, கேப்சியரா ஹோட்டல் எந்தப் பக்கம் இருக்கிறது?’ என்றார். கேப்சியரா என்பது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வந்து தங்கும் உயர்தர ஹோட்டல். வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு பெண், அடுத்த நாள் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாதவர் கேட்கும் கேள்வியா இது? மனைவிக்கு யோசனையாக இருந்தது. எனினும் ஹோட்டல் இருக்கும் திசையைக் காட்டிவிட்டு விளக்கை அணைத்தார்.
அவர் எதற்காக வீட்டை விட்டு ஓடினார், ஏதாவது குற்றம் செய்தாரா என்று மனைவி விசாரித்தார். இரண்டு நாள் முன்னர் நடந்ததை அந்தப் பெண் விவரித்தார்.
`நாங்கள் என்ன செய்யமுடியும்? உன்னிடம் பாஸ்போர்ட்கூடக் கிடையாது. எப்படி உன்னைத் திருப்பி அனுப்புவது? அவர்களோ அலெசாண்ட்ரோவின் ஆட்கள். அவர்களைப் பகைக்கமுடியாது. போலீசில் உன் எசமானர்கள் புகார் கொடுத்திருந்தால் உன் பிரச்னை மேலும் பெரிதாகிவிடும். போலீசார் எங்களையும் விசாரிப்பார்கள். எதற்கும் பயப்படவேண்டாம். நான் அவர்களுடன் பேசி உன்னை விடுவித்து உன் அம்மாவிடம் அனுப்பிவைப்பேன்.’ மனைவி இதை மொழிபெயர்த்தார்.
அடுத்த நாள் காலை சனிக்கிழமை மனைவி வழக்கத்திலும் பார்க்க சீக்கிரமாகவே தேநீர் தயாரிக்க எழுந்தார். முதல் வேலையாக சீலாவதியைக் கொண்டுபோய் சகோதரர்களிடம் விடவேண்டும். அவர்கள் இரவிரவாக எங்கேயெல்லாம் தேடியலைந்தார்களோ? ஒருவேளை போலீசுக்கு முறைப்பாடு கொடுத்திருக்கலாம். திடீரென்று மனைவி கத்திக்கொண்டு ஓடி வந்தார். சீலாவதியைக் காணவில்லை. படுக்கையில் தலையணையில் பள்ளம் இருந்தது, அவர் இல்லை. மனைவியின் ஆடையைக் கழற்றிச் சுருட்டி வைத்துவிட்டு, தன் உடுப்பை அணிந்துகொண்டு கிளம்பியிருக்கிறார்.
ஓர் இரவு முடிவதற்குள் இந்தப் பெண் எங்களை இந்தப்பாடு படுத்துகிறாரே. அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நடந்தால் இப்போது நாங்கள்தான் முழுப்பொறுப்பு. லெபனிஸ்காரர் பெண்ணை எங்களிடம்தான் ஒப்படைத்தார். போலீஸ்காரர் விசாரணையிலும் நாங்கள்தான் மாட்டுப்படுவோம். உடுகம்போல சகோதரர்கள் எங்கள் மீதுதான் பழிபோடுவார்கள். அலெசாண்ட்ரோவுக்கு விசயம் தெரிந்தால் எங்கள் நிலைமை படுமோசமாகிவிடும்.
கேப்சியரா ஹோட்டல் பக்கமாகக் காரைச் செலுத்தினேன். என் ஊகம் சரிதான். சீலாவதி வேகமாகக் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். நான் காரை மெதுவாகக் கொண்டுபோய் பக்கத்தில் நிறுத்தினேன். அவர் திடுக்கிட்டு விட்டார். ஒன்றுமே பேசாமல் மறுபடியும் காரிலே ஏறினார். சீலாவதி ஒன்றும் ஹோட்டல் உல்லாசத்தை அனுபவிக்கப் போகவில்லை. அவருக்கு தன் எசமானர்களிடம் திரும்ப விருப்பமே இல்லை. கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதற்காக வீட்டைவிட்டுக் கிளம்பியதாகப் பின்னர் அவர் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.
அவர் எதற்காக வீட்டை விட்டு ஓடினார், ஏதாவது குற்றம் செய்தாரா என்று மனைவி விசாரித்தார். இரண்டு நாள் முன்னர் நடந்ததை அந்தப் பெண் விவரித்தார். கணவரும் மனைவியும் முன்னெப்போதும் இல்லாத மாதிரி அவரைப்போட்டு அடித்தார்கள். வழக்கமாகச் செய்வதுபோல நாயை வெளித் தூணிலே சங்கிலியால் கட்டிவிட்டு அதற்கு சாப்பாடு வைத்தார். பின்னர் கதவைப் பூட்டிப் படுக்கப்போய்விட்டார். நாய் தூணைச் சுற்றி ஓடியபோது சறுக்கிக் கீழே தரையில் விழுந்துவிட்டது. திண்ணை தரையிலிருந்து மூன்று அடி உயரம். நாய் சங்கிலியில் தொங்கியபடியே மூச்சடைத்து இறந்துவிட்டது. இதற்காகத்தான் அடித்தார்கள்.

அதுவரை குனிந்து கேட்டால்தான் புரியும் வகையில் மெல்லிய குரலில் பேசியவர் திடீரென்று வீறிட்டு அழுதபடி பேசத் தொடங்கினார். `என் அம்மா சாவு வீடுகளில் காசுக்கு ஒப்பாரி வைப்பவர். வறுமையான குடும்பம். இவர்களை நம்பி என்னை அனுப்ப இப்படிச் சித்திரவதை செய்கிறார்கள். எனக்கு ஒருவரும் இல்லை. என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள். மன்றாடிக் கேட்கிறேன். என் அம்மா வீட்டிலே ஒப்பாரி வைத்து அழக்கூடாது.’
என் நண்பர் ஒருவருக்கு உடுகம்போல சகோதர்களை ஏற்கெனவே தெரியும். ஒருமுறை நண்பரை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. உடுகம்போல சகோதரர்களுடன் அலெசாண்ட்ரோவைப் போய்ப் பார்த்தார். அவர் ஒரு டெலிபோன் அழைப்பில் உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வைத்துவிட்டார். ஜனாதிபதிக்கும் அலெசாண்ட்ரோவுக்கும் இடையில் இருந்த ஆழமான நட்பைக்காட்ட நண்பர் ஒரு கதை சொல்வார். ஜனாதிபதிக்கு மூன்று மனைவிகள். கடைசி மனைவியின் அண்ணன் அலெசாண்ட்ரோவின் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்தார். ஒருநாள் குடிவெறியில் மேனேஜர் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகக் கட்டி வைத்திருந்த மரப்பலகைத் பொதியில் ஏறிப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அலெசாண்ட்ரோ அங்கே போயிருக்கிறார். அந்த நிமிடமே மேனேஜருக்கு வேலைபோனது. அடுத்த நாள் வேறு ஒரு விசயமாக ஜனாதிபதியைப் பார்க்க அலெசாண்ட்ரோ போனார். மேனேஜர் வேலை நீக்கப்பட்ட காரணத்தை ஜனாதிபதி கேட்டார். அதற்கு அலெசாண்ட்ரோ சொன்ன பதில் பின்னர் நாடு முழுவதும் பிரசித்தமானது. ’மணிக்கூடு முடிந்துவிட்டது.’ ஜனாதிபதி விழுந்து விழுந்து சிரித்தாராம்.
என் நண்பரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டோம். மனைவி ஓயாமல் அழும் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருமணிநேரம் கழித்து கம்பெனி வளாகத்துக்குள் கார் நுழைந்தது. குடியிருப்புகள் தனித்தனியாக அமைந்திருந்தன. எல்லாம் ஒரே வித வடிவம் கொண்ட வீடுகள். வீடுகளைத்தாண்டி மைதானத்தில் டென்னிஸ் கோர்ட்டும், பாட்மின்டன் கோர்ட்டும் இருந்தன. வீட்டுத் தோட்டங்கள் கம்பெனியால் பராமரிக்கப் பட்டு ஒரு பூங்காவனத்துக்குள் நுழைவதுபோன்ற உணர்வைக் கொடுத்தன.
பல இத்தாலியர்கள் தங்கள் நாய்களுடன் வீதியில் உலாவினர். தூரத்தில் சகோதரர்கள் இறகுப்பந்து விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்குப் பக்கமாகச் சென்று காரை நிறுத்தினேன். ஒரு பக்கத்தில் மூத்தவரும் அவர் மனைவியும், எதிர்ப் பக்கத்தில் இளைய வரும் மனைவியுமாக விளையாடினர். இரண்டு மனைவியரும் விளையாட்டுக்குச் சற்றும் பொருத்தமே இல்லாத நீண்ட உடை அணிந்திருந்தனர். பிள்ளைகள் ஓடியோடி வெளியே பறக்கும் இறகுப்பந்துகளைப் பொறுக்கிப்போட்டனர்.
நாங்கள் நாலு பேரும் காரைவிட்டு இறங்கி, தயக்கத்துடன் காத்திருந்தோம். அவர்கள் எங்களைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எங்கே போவது என்றும் முடிவெடுக்க முடியவில்லை. அவர்கள் வீட்டுக்குப் போவதா அல்லது இறகுப்பந்து மைதானத்திலே நிற்பதா? சகோதரர்கள் விளையாட்டை நிறுத்தாமல் எண்ணிக்கையை உரத்துச் சொல்லியபடி ஆடினார்கள். ஆட்டத்தைப் பாதியில் நிறுத்த முடியவில்லை என்று தெரிந்தது. நாங்கள் காத்திருந்தோம்.

விளையாட்டு முடிந்து அப்போதுதான் பார்ப்பதுபோல மூத்தவர் கையிலே இருந்த ராக்கெட்டை மேலே தூக்கி அசைத்தார். எங்களுடன் வந்த நண்பர் கையைக் காட்டினார்.
இறகுப்பந்து விளையாட்டு என்பது இழுவல் பிடித்தது. சீக்கிரத்தில் முடிவுக்கு வராது. டென்னிஸ் என்றால் 15, 30, 40 பின்னர் ஒரு புள்ளியோடு விளையாட்டு முடிவை அடைந்துவிடும். இறகுப்பந்தில் எண்ணிக்கை ஒன்றில் ஆரம்பித்து 20 மட்டும் போகும். அதில் இருவருக்கும் சமம் என்றால் 29 கடந்து முதலில் யாருக்கு 30 கிடைக்கிறதோ அவரே வெற்றியாளர் ஆவார். 10 நிமிடம் கழிந்தும் விளையாட்டு முடிவடையவில்லை. நாங்கள் நின்றோம்.
எங்களுடன் காத்து நின்ற சீலாவதி திடீரென்று இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் குனிந்தபடி அவர்கள் வீட்டுக்குள் ஓடிமறைந்தாள். எங்களுக்குக் கிடைத்த உன்னதமான வரவேற்பைப் பார்த்து அவளாகவே ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவர்களுடைய வேலைக்காரி நேற்று அதிகாலை 5 மணிக்குக் காணாமல் போயிருக்கிறாள். ஒரு முழுப் பகலும் இரவும் அவள் திரும்பவில்லை. அவள் ஏன் வீட்டை விட்டு ஓடினாள் என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் ஆசை விளையாட்டுக்காரர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவள் போலீசில் பிடிபட்டிருந்தாலோ இறந்துபோயிருந்தாலோ எத்தனை பெரிய சங்கடத்தில் மாட்டியிருப்பார்கள்.
விளையாட்டு முடிந்து அப்போதுதான் பார்ப்பதுபோல மூத்தவர் கையிலே இருந்த ராக்கெட்டை மேலே தூக்கி அசைத்தார். எங்களுடன் வந்த நண்பர் கையைக் காட்டினார். எனக்கும் மனைவிக்கும் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எங்களுக்குக் கிட்ட ஓர் அரசர் நடப்பதுபோல அசைந்து அசைந்து வந்த மூத்த சகோதரர் `வீட்டுக்கு வாருங்கள்’ என அழைப்பார் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. கையை நீட்டினார். நான் கொடுத்தேன். திறப்பைத் துளையில் இட்டுத் திருகுவதுபோல ஒரு திருப்பு திருப்பினார். பின்னர் `உள்ளே வரப்போகிறீர்களா?’ என்றார். இவர் என்ன, விருந்துக்குக் கூப்பிட்டு வந்தோமா? தொலைந்துபோன அவருடைய வேலைக்காரியை மீட்டு 40 மைல் தூரம் அழைத்து வந்திருக்கிறோம். நண்பர் பக்கம் அவர் பார்வை திரும்பவே இல்லை. என்னுடைய திடுக்கிடலை மறைத்துக்கொண்டு `இல்லை’என்றேன். `எப்போது வேலைக்காரியைப் பிடித்தீர்கள்? எங்கே தங்கினாள்?’ போன்ற கேள்விகள் அவருக்கு எழவே இல்லை. பேப்பர் போடும் பையன் மூன்று மாதக் கடன் காசைக் கேட்க வந்ததுபோல என்னை அருவருப்பாகப் பார்த்தார். முக்கியமாக அவருடைய மேன்மையான உதட்டிலிருந்து நன்றி என்ற வார்த்தை வெளியே வரவே இல்லை.
ஒருவேளை அவனுடைய குற்றம் எங்கள் மூலம் பரவி வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்றுகூட நினைத்திருப்பான்.
வீடு திரும்பிய பின்னர் மனைவி இன்னொரு விசயத்தையும் சொன்னார். சீலாவதியை மூத்தவர் பல தடவை கெடுத்திருக்கிறார். `சீலாவதி பாவம், இந்தச் சின்ன வயதில் அவளுக்கு எவ்வளவு பெரிய சோதனை. அவள் யாரிடம் போவாள்?’ என்றார் மனைவி. `ஏன், எனக்கு இதை முதலிலேயே சொல்லவில்லை’ என்று நான் கேட்டேன். `சொன்னால் என்ன செய்திருப்பீர்கள்? இவ்வளவு மோசமாக அவர்கள் நடந்தும் உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிரச்னையைத் தீர்ப்பதாகச் சொல்லி சீலாவதியைக் கூட்டிக்கொண்டு போனீர்களே. அந்தப் பெண்ணும் உங்களை நம்பிவந்தது. உடுகம்போல உங்களை வீட்டினுள்ளே அழைக்கக்கூட இல்லை. என்ன பேசிக் கிழித்திருப்பீர்கள்?’
என் மனைவி மணமுடித்த 20 வருடங்களில் என்னிடம் அப்படிப் பேசியதே கிடையாது. அவர் முகம் கோபத்தில் விகாரமாக மாறியிருந்தது. எனக்கு என் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமதிப்புகளின் எண்ணிக்கை ஒன்று கூடியது. இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என்று என் மனது திட்டம் போட்டது. ஓர் அந்நிய நாட்டில் வந்திருந்து உடுகம்போல சகோதரர்கள் இத்தனை அட்டகாசம் போட அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா?
அந்தப் பெண்ணுக்கு நான்தான் பொறுப்பு. அவளை அழைத்துப்போன சமயம் அவர்கள் என்னை வெளிப்படையாக உதாசீனம் செய்தபோது நான் அதைப் பொருட்படுத்தாமல் சீலாவதிக்கு ஒரு தீர்வு கண்டிருக்கவேண்டும். அந்தக் கடமையில் தவறிவிட்டேன். உடுகம்போலவுடைய அதிகார மமதைக்கு எல்லையே இல்லை. ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டு ஏதோ நாங்கள்தான் குற்றம் இழைத்ததுபோல அத்தனை அசட்டையாக எங்களை நடத்தினான். ஒருவேளை அவனுடைய குற்றம் எங்கள் மூலம் பரவி வெளியுலகிற்குத் தெரியக்கூடாது என்றுகூட நினைத்திருப்பான். எல்லாம் அலெசாண்ட்ரோ அவர்கள் பக்கம் இருக்கும் துணிச்சல்தான்.
இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இந்தச் சிந்தனையுடன் நான் தூங்கப் போனேன். சீலாவதிக்கான தீர்வு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது எனக்குத் தெரியாது.
அதிகாலை டெலிபோன் அடித்து, பதற்றமாக எழுந்தேன். ஜெனிவாவில் இருந்து மேலதிகாரி அழைத்து `மாற்றல் உத்தரவு’ என்றார். `எங்கே?’ `சோமாலியா.’ `எப்போது?’ `இன்றைக்கே. உங்கள் பயண டிக்கெட் இன்று கையில் கிடைக்கும்.’ `என்னுடைய திட்டப்பணி பாதியில் நிற்கிறதே?’ ‘ பரவாயில்லை. மாற்று ஏற்பாடு செய்தாகிவிட்டது.’
என் மனைவியின் முகம் சிறுத்து வாடிப்போயிருந்தது. விமான நிலையத்தில் எங்கள் பறப்புக்காகக் காத்திருந்தோம். ‘என்ன துக்கம் உமக்கு?’ ‘இன்னும் ஒரேயொரு நாள் கழித்துப் புறப்பட்டிருக்கலாம். நாளை ஆப்பிரிக்க வயலெட் பூக்கிறது.’ ‘எங்கே பூக்கிறது?’ ‘எங்கள் வீட்டில்தான். இரண்டு வருடமாக இலையில் தண்ணீர் படாமல் ஊற்றி வளர்க்கிறேன். அபூர்வமான பூ. திடீரென்று பூக்கும். திடீரென்று நிறுத்திவிடும்.’ ‘வீட்டில் எங்கே இருக்கிறது?’ ‘உங்கள் படிப்பு மேசையில்தான்.’ `அப்படியா? நான் கவனிக்கவில்லையே. அவ்வளவு விசேடமானதா?’ ‘இனி என்ன பிரயோசனம். 200 வருடங்களுக்கு முன்னர் இந்தச் செடியை ஒரு ஜெர்மன் அதிகாரி தான்சேனியா காட்டிலே கண்டுபிடித்தார். இப்ப உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அது பூக்கும்போது மிக அழகாக இருக்கும். ஓர் இரவு தங்க ஏலாதா? நாளை காலை பூத்துவிடும்’ அந்தச் சமயத்தில்கூட எனக்குச் சிரிப்பு வந்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலை.
`அது சரி. எதற்காக உங்களை திடீரென்று மாற்றினார்கள். உங்கள் ஒப்பந்தப்படி இன்னும் ஆறுமாதம் இருக்கிறதே.’
`உண்மையான பதில் வேணுமா?’
`ஓமோம்.’
‘மணிக்கூடு முடிந்துவிட்டது.’