ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை : ஏழு முதல்வர்களைக் கண்ட ராஜகுமாரன்!

சிறூகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறூகதை

ஜி.ஆர்.சுரேந்திரநாத்

து ஏழு முதல்வரைக் கண்ட ராஜகுமாரனின் கதை. அதென்ன ஏழு முதல்வர்? இந்தக் கதையின் கதாநாய கனான ராஜகுமாரன் 1974-ல் தமிழ்நாட்டில், அறுபதாயிரத்து சொச்சம் மக்கள் வசிக்கும் ஒரு சிற்றூரில் பிறந்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு இன்று எடப்பாடியார் வரை ராஜ குமாரனின் வாழ்நாளில் தமிழ்நாட்டில் ஏழு பேர் முதலமைச்சராக இருந்திருக் கிறார்கள்(மூன்று முறை பொறுப்பு முதலமைச்சராக இருந்த திரு. நெடுஞ்செழியனையும், 23 நாள்கள் முதலமைச்ச ராக இருந்த திருமதி.ஜானகி ராமச்சந் திரனையும் சேர்த்து).

ஒரு நள்ளிரவில் ராஜகுமாரனின் மூளையில் திடீரென்று இந்த விஷயம் ப்ளாஷ் ஆனது. எனவே 2019 நவம்பரில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, “ஏழு முதல்வரைக் கண்ட ராஜகுமாரனே… வாழ்த்த வயதுண்டு. வாழ்த்துகிறோம்” என்று ஏழு முதலமைச்சர்களின் புகைப்படங்களுடன், ராஜகுமாரனின் புகைப்படத்தையும் சேர்த்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கான நிதி மற்றும் வாசகங்களுக்கான உபயம் ராஜகுமாரன்தான் என்பதிலிருந்து நீங்கள் ராஜகுமாரனின் அபாரமான புத்திக்கூர்மையை அறிந்து கொள்ளலாம்.

சிறுகதை : ஏழு முதல்வர்களைக் கண்ட ராஜகுமாரன்!

அந்தப் போஸ்டரை யாரோ போட்டோ பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டனர். அது சமூக ஊடகங்களில் வைரலாகி இரண்டே நாளில் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ராஜகுமாரன், இந்த ஆண்டு நவம்பரில் தனது பிறந்தநாளன்று, ‘12 பிரதமரைக் கண்ட ராஜகுமாரனே’ என்று போஸ்டர் அடிக்கும் உத்தேசத்தில் இருக்கும்போதுதான் இக்கதை ஆரம்பிக்கிறது.

ராஜகுமாரனால் தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற அந்தச் சிற்றூரின் மயானத்தில், வேதாசலம் வாத்தியாரின் உடலை இன்னும் சில நிமிடங்களில் எரிக்க இருந்தனர். மரக்கட்டைகள், ராட்டியெல்லாம் அடுக்கப்பட்டு வேதாசலம் வாத்தியார் எரிவதற்குத் தயாராக இருந்தார். பலரும் அவரது உடலைச்் சுற்றி நின்றிருக்க… கும்பலில் கலக்காமல், சற்றுத் தள்ளி தனது இனோவா காரருகில் ஏழு முதல்வரைக் கண்ட ராஜகுமாரன் நின்றிருந்தான். பக்கத்திலேயே அவனுடைய தம்பி களான சந்திர குமாரும், இந்திரகுமாரும் பணிவாக நின்றிருந்தனர்.

பளீரென்று வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அணிந்தி ருந்த ராஜ குமாரனின் முகத்தில் செல்வச் செழிப்பின் பளபளப்பு. மூக்கிற்குக் கீழ் முறுக்கு மீசை. அரசியல்வாதிகள் தங்கள் சட்டைப்பையில் தங்கள் தலைவரின் போட்டோவை வைத்திருப்பதுபோல், ராஜகுமாரன் தனது சட்டைப்பையில் தன் தம்பிகளுடன் இரண்டாண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்திருந்தான். கைவிரலிலிருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தில் ராஜகுமாரன், சந்திரகுமார், இந்திரகுமார் ஆகிய பெயர்களின் முதல் எழுத்தைக் குறிப்பிடும் விதமாக R C I என்ற எழுத்துகள் தங்கத்தில் ஜொலித்தது.

வெட்டியான் மாணிக்கம், “அங்காளி, பங்காளிங்க யாராச்சும் விழுந்து கும்பிடுறதா இருந்தா கும்பிட்டுக்கலாம்” என்றான். முதலில் கண்ணுசாமி விழுந்து கும்பிட…. வெட்டியான், ‘விழுந்து கும்பிடுறவர ஒறமொறைக்காரங்க (விழுந்து கும்பிடுபவருக்கு மாமன், மச்சான், மாப்பிள்ளை முறை வருபவர்கள்) தூக்கி விடுங்க” என்றான். உடனே கண்ணுசாமியை வீரா தூக்கிவிட முயல… உறவினரில் மூத்தவரான நல்லமுத்து, “டேய் வீரா… நீ கண்ணுசாமிக்கு ஒறமொறை யாடா?” என்றார்.

``இல்ல மாமா… பங்காளிதான் (அண்ணன் தம்பி முறை வருபவர்கள்).”

“விழுந்து கும்பிடுறவங்கள ஒறமொறைதான்டா தூக்கி விடணும். டேய் மனோகரு… நீ கண்ணுசாமி வீட்டுலதான பொண்ணு எடுத்திருக்க… நீ தூக்கி விடு” என்று கூற… மனோகர் கண்ணுசாமியைத் தூக்கிவிட்டான். பின்னர் வரிசையாக விழுந்து கும்பிட்டவர்களை ஒறமொறைகள் தூக்கிவிட… கடைசியாக தன் தம்பிகளுடன் வந்தான் ராஜகுமாரன்.

ராஜகுமாரன் விழுந்து கும்பிடுவதற்காக வேதாசலம் வாத்தியாரின் உடலை நெருங்க, எங்கிருந்தோ அழுதுகொண்டே வந்த ஒருவன் ராஜகுமாரனை மறித்தாற்போல் விழுந்து கும்பிட முயன்றான். சட்டென்று கோபமான சந்திரகுமாரும் இந்திரகுமாரும் அவனைப் பிடித்திழுத்து, “அண்ணன் கும்பிட வர்றாருல்ல?” என்று ஓரமாக நிறுத்தினர். அதைப் பெருமையுடன் பார்த்த ராஜகுமாரன் வேட்டியை இறுக்கிக் கட்டியபடி விழுவதற்காகக் குனிந்தான். அப்போது, “அண்ணன்… ஒரு நிமிஷம்…” என்ற இந்திரகுமாரும் சந்திரகுமாரும், ராஜகுமாரன் விழுமிடத்தில் இருந்த கற்களையும் முட்களையும் தூக்கி ஓரத்தில் போட… நல்லமுத்து கண்ணுசாமியிடம், “எங்க போனாலும் இவனுங்க பாசத்த அடக்கவே முடியாதுடா…” என்றார். அப்போது நல்லமுத்துவின் அருகில் வந்த சந்திரகுமார், “அண்ணன் பாடி ரொம்ப ஸாப்ட்டு சித்தப்பு… அதான்” என்றான்.

“ஆமாமாம்… எங்க பாடில்லாம் இரும்புல செஞ்சது பாரு” என்றார் நல்லமுத்து முணுமுணுப்பாக.

இரண்டு கைகளையும் உயர்த்தி பெரிய கும்பிடாகப் போட்ட ராஜகுமாரன் கீழே விழுந்து கும்பிட்டுவிட்டு, அப்படியே தலையைத் தரையில் வைத்தபடி படுத்திருந்தான். கண்ணுசாமி, ``ராஜகுமாரனோட ஒறமொறைக் காரங்க தூக்கி விடுங்கப்பா…” என்று கூற… நூறு பேர் இருந்த அந்த கும்பலில் ஒருவர்கூட ராஜகுமாரனை நோக்கி நகரவில்லை. அதில் கால்வாசி பேர் ராஜகுமாரனுக்கு ஒறமொறை தான்.

சுற்றிலும் ஒரு முறை பார்த்த நல்லமுத்து, “ஏன்ப்பா சரவணா… நீ ராஜகுமாரனோட தாய்மாமன் மகன்தானே… போய் தூக்கிவிடப்பா…” என்றார். அதற்கு சரவணன், “இருபது வருஷமா இவங்க குடும்பத்தோட சண்டை. பேச்சுவார்த்தையே இல்ல. அப்புறம் என்ன ஒறமொறை வேண்டிக் கிடக்கு?” என்று பின்னால் நழுவிச் சென்றான்.

சிறுகதை : ஏழு முதல்வர்களைக் கண்ட ராஜகுமாரன்!

“என்னடா இது?” என்று நெற்றியைச் சொறிந்த நல்லமுத்து, “செந்திலு… நீ ராஜகுமாரனோட சொந்த அக்கா மகன்… போய் தூக்கிவிடுப்பா…” என்றார்.

“உங்களுக்குத் தெரியாததா மாமா… அவங்க வீட்டுல அன்னந்தண்ணி பொழங்கி பத்து வருஷமாச்சு. அடிதடித் தகராறு வரைக்கும் போயிடுச்சு. நான் எப்படி அந்தாளு மேல கைய வச்சுத் தூக்கிவிடுவேன்?” என்று செந்திலும் ஒதுங்கிக்கொண்டான்.

“அட… நேரம் ஓடுதுல்ல..? வேற யாராச்சும் ஒறமொறை இருந்தா சீக்கிரம் தூக்கி விடுங்கப்பா…” என்று கண்ணுசாமி கூற… மிச்சமிருந்த ஒறமொறைக் காரர்களும் ராஜகுமாரனைத் தூக்கி விட விருப்பமின்றி வேகமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்தனர். தங்கள் அண்ணனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைப் பார்த்து குமார் தம்பிகளின் ரத்தம் கொதித்தது.

அப்போது ராஜகுமாரன், “தம்பிங்களா…” என்று அழைக்க… “அண்ணன்…” என்று இரண்டு தம்பிகளும் அருகில் ஓடி வந்தனர்.

“என்னடா பிரச்னை? ஏன் யாரும் தூக்கி விடமாட் டேங்கிறாங்க?”

“ஒறமொறைதான் தூக்கி விடணும். எல்லா ஒறமொற யோடயும் நமக்கு சண்டை. யாரும் தூக்கி விடமாட்டேங்கிறாங்க.”

“எல்லாரோடயும் சண்டை போட்டுட்டோமாடா?”

“ஆமாம்ண்ணன்…” என்றான் இந்திரகுமார் தலையைக் குனிந்தபடி.

“இப்ப என்னடா பண்ணுறது?” என்று ராஜகுமாரன் தவிப்புடன் கேட்டபோது நாம் ப்ளாஷ்பேக்குக்குச் செல்லவேண்டியிருக்கிறது. குமார் பிரதர்ஸுக்கு ஏன் அத்தனை ஒறமொறை களிடமும் சண்டை?

குமார் பிரதர்ஸின் அப்பா முருகேசன் ஊரில் பெரிய பணக்காரர். சுற்றிலும் வாழைத்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்திருந்த அந்த ஊரில் வாழை, தேங்காய் ஹோல் சேல் பிசினஸில் வெற்றிக்கொடி நாட்டி லட்ச லட்சமாக சம்பாதித்தவர். பின்னர் இரண்டு டிம்பர் டிப்போ, ஒரு அம்பாஸிடர் கார், மூன்று வீடுகள், இரண்டு சின்ன வீடுகள் என்று அமோகமாக வாழ்ந்தவர். அந்தச் சின்ன வீடுகளின் தனித்துவம் என்னவென்றால், உலக வரலாற்றிலேயே ட்வின்ஸாகப் பிறந்த சகோதரிகள் இரண்டு பேரையும் பிக் அப் செய்து, ஒரே தெருவிலேயே தனித்தனி வீட்டில் வைத்துக் குடும்பம் நடத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்.

இரண்டு சின்ன வீடுகளும் சலித்துப்போய், முருகேசன் தனது டிம்பர் டிப்போவில் வேலை செய்த அம்புஜத்தை மூன்றாவது சின்னவீடாக்க அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருந்தபோது, ஒருநாள் தன் மனைவியுடன் காரில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றார். அப்போது 80 கிலோமீட்டர் வேகத்தில் எதிரே வந்த லாரி, அவருடைய கார்மீது மோதி இருவரும் ஸ்பாட்டிலேயே அவுட்.

அப்போது ராஜகுமாரனுக்குப் பத்து வயது. சந்திரகுமாருக்கும் இந்திரகுமாருக்கும் முறையே 9 மற்றும் 8 வயது. ராஜகுமாரனுக்கும் மூத்ததாக ஒரு அக்கா இருந்ததால், அவள் சமைத்துப்போட்டு, வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு தன் தம்பிகள் மூவரையும் தாய்போல் சீராட்டி வளர்த்தாள்.

சிறுவர்கள் மூன்று பேரும் சிறு வயதிலிருந்தே பெற்றோரின்றி வளர்ந்ததால், மிகவும் ஒற்றுமையாக பாசத்துடன் இருப்பார்கள். குமார் பிரதர்ஸின் இந்த அதீத பாசமே மற்றவர்களுடன் பிரச்னை ஏற்படுவதற்கும் காரணம். மூவருக்கும் பள்ளியில் படிப்பு பெரிதாக வரவில்லை. இதில் ராஜகுமாரனின் நிலைமைதான் மிகவும் மோசம். வரலாற்று பரீட்சையில் ராஜகுமாரன், ‘காந்தி’ பெயரை ‘கன்ந்த்தீ” என்ற எழுத… வரலாற்று வாத்தியார் கடுப்பாகி, “காந்திங்கிற மூணு எழுத்து பேருல, அஞ்சு தப்பு பண்ணுன ஒரே ஆளு நீதான்டா” என்று மூங்கில் குச்சியால் அடி பின்னியெடுத்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட ராஜகுமாரனின் தம்பிகள், அன்று மாலை வரலாற்று வாத்தியாரை மாந்தோப்பில் இழுத்துப் போட்டு அடித்ததுதான் அவர்களுடைய பாச வரலாற்றின் முதல் அத்தியாயம். அந்த முதல் அத்தியாயத்தின் பின்விளைவாக மூவரும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

படிப்பில் வீக் என்றாலும் மூவரும் காசு விஷயத்தில் கெட்டி என்பதால், அப்பா விட்ட பிசினஸை தன் தாய்மாமா உதவியுடன் தொடர்ந்து வெற்றிகரமாகவே நடத்திவந்தனர் (டிம்பர் டிப்போக்கள் மட்டும் நஷ்டத்தில் இயங்கியதால், முருகேசன் இறந்தவுடனேயே ராஜகுமாரனின் தாய்மாமன் டிப்போக்களை மூடிவிட்டார்). தாய்மாமா தன் பெண்ணை ராஜகுமாரனுக்குக் கட்டி வைக்கும் உத்தேசத்துடன்தான் விசுவாசமாக இருந்துவந்தார். ஆனால் திருமண வயது வந்தவுடன், வேறு வேறு குடும்பத்தில் பெண் எடுத்தால் சண்டை வரும் என்பதால், சகோதரிகளாக இருக்கும் மூவரைத்தான் கட்டிக்கொள்வோம் என்று குமார் பிரதர்ஸ் பிடிவாதமாக இருந்ததால் தாய்மாமன் உறவு முறிந்தது (தாய்மாமனுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் மட்டும்தான்). சொன்னதுபோலவே எட்டு மாவட்டத்தில் தேடி, உடன்பிறந்த மூன்று பெண்களையே மூன்று பேரும் திருமணம் செய்துகொண்டனர். மூன்று பேரும் சகோதரிகள் என்றாலும், அவர்களும் பெண்கள்தான் என்பதால் வீட்டிற்குள் குடும்ப அரசியலில் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கின்றனர். இருந்தாலும் குமார் பிரதர்ஸின் பாசத்தைத் தகர்க்க முடியாமல், இன்று வரையிலும் கூட்டுக் குடும்பமாகவே இருக்கின்றனர்.

தங்களை நல்லபடியாக வளர்த்த அக்காவிற்கு நியாயமாக எல்லாம் செய்து, சுமுகமான உறவில்தான் இருந்தனர். ஆனால் அக்கா புருஷனின் அப்பா இறந்து, காரியத்தின்போது தலைக்கட்டு கட்ட முதலாவதாக ராஜகுமாரனை அழைக்காமல், தங்கள் சம்பந்தி வீட்டாரை அழைத்துவிட்டனர். இதை ராஜகுமாரனின் தம்பிகள் தன் அண்ணனுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகக் கருதி, காரிய வீட்டிலேயே தண்ணியடித்து விட்டுத் தகராறு பண்ணி, அக்கா புருஷனை அடிக்கப்போக… அத்தோடு அந்த உறவு முறிந்துபோனது.

இதுபோல் திருமணத்தில் அண்ணனுக்கு முதல் வரிசையில் நாற்காலி போடவில்லை… பந்தியில் அண்ணனுக்கு உடைந்த அப்பளம் வைத்துவிட்டார்கள்… அண்ணனுக்கு முன்பாகக் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார்கள் என்று விசேஷத்திற்குச் சென்ற வீடுகளில் எல்லாம் ராஜகுமாரனின் தம்பிகள் தகராறு செய்து, நாளது தேதியில் பெரும்பாலான உறவினர்களுடன் சுத்தமாகப் பேச்சுவார்த்தை கிடையாது. இவர்களிடம் இருக்கும் காசுக்காக ஒன்றிரண்டு பேர்தான் டச்சில் உள்ளனர். அவர்களும் பங்காளி முறை என்பதால், இப்போது தூக்கிவிட ஒறமொறை இல்லாமல், ராஜகுமாரன் சுடுகாட்டில் குப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறான்.

சிறுகதை : ஏழு முதல்வர்களைக் கண்ட ராஜகுமாரன்!

ஐந்து நிமிடமாகப் படுத்துக்கிடப்பதில் நொந்துபோன ராஜகுமாரன், “அண்ணனுக்கு மரியாதை தரல… அண்ணனுக்கு மரியாதை தரலன்னு எல்லாரோடயும் வம்பிழுத்து விட்டுட்டீங்க. இப்ப பாருங்க… இப்படி அசிங்கப்பட்டு நானே எந்திரிக்கணும்” என்று எழுவதற்காகத் தரையில் கையை ஊன்றினான்.

”அண்ணன்…” என்று கத்திய சந்திரகுமார், “அப்படில்லாம் நீ அசிங்கப்பட விட்ருவோமாண்ணன்… ஒறமொறை தூக்கிவிடாம தானே எந்திரிச்சா, ஏழு தலைமுறைக்கு அவமானம்ண்ணன். நீ பொறுண்ணன்… யாருகிட்டயாச்சும் சமாதானமா பேசி தூக்கிவிடச் சொல்றோம்…”

அப்போது சரவணன், “சீக்கிரம் எரிங்கய்யா… வீட்டுக்குப் போகணுமில்ல?” என்று குரல் கொடுத்தான். நீண்ட நேரமாகக் கையில் கொள்ளிக்கட்டையுடன் நின்றுகொண்டிருந்த வேதாசலம் வாத்தியாரின் மகன் சின்னையனும், “நல்லமுத்தண்ணன்… மணி ஆயிக்கிட்டேயிருக்கு” என்றான்.

சில விநாடிகள் யோசித்த நல்லமுத்து, “சரி… கொள்ளி வைக்கிறபடி வைக்கட்டும். அப்புறம் நான் பஞ்சாயத்து பேசி யாரையாச்சும் விட்டு தூக்கிவிடச் சொல்றேன்” என்று கூற… வேறு வழியின்றி குமார் பிரதர்ஸ் தலையை ஆட்டினர்.

சின்னையன் கொள்ளி வைத்தவுடன் வெட்டியான், “எல்லாரும் திரும்பிப் பாக்காம போங்க… பிணம் எரிஞ்சு முடியற வரைக்கும் யாரும் வரக்கூடாது” என்றவன் ராஜகுமாரனைப் பார்த்து, “நீங்களும் பிணத்தப் பாக்கக்கூடாது. தலையக் கவுத்துக்கிட்டு கண்ண மூடிக்குங்க” என்றான்.

“எரிஞ்சு முடிய எவ்ளோ நேரம் ஆவும்?”

“அது… ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும்.”

“ஒரு மணி நேரம் குப்புறப் படுத்தே கிடக்கணுமா?” என்று ராஜகுமாரன் அலற…அனைவரும் நகர ஆரம்பித்தனர்.

“என்னய்யா… பொணம் எரியறப்ப தனியா விட்டுட்டுப் போறீங்க?” என்று கத்தினான் ராஜகுமாரன்.

“இங்கதான் கொஞ்சம் தள்ளி நிக்கிறோம் குமாரு. பிணம் எரிஞ்சவுடனே வர்றோம்…”என்று கூறிவிட்டு நல்லமுத்து சந்திரகுமாரின் காதில் ஏதோ சொன்னார். பிறகு நல்லமுத்து செல்ல, அனைவரும் நல்லமுத்துவின் பின்னால் சென்றனர். அப்போதும் குமார் தம்பிகள் செல்லாமல் பிணத்துக்கு முதுகைக் காட்டிக்கொண்டு ராஜகுமாரனின் காலடியிலேயே நின்றனர்.

பிணம் திகுதிகுவென்று எரிய… சில நிமிடங்களிலேயே பிணத்திலிருந்து சதை பொசுங்கும் வாசனை மூக்கைத் துளைத்தது. பிறகு எலும்புகள் உடையும் சத்தமும் கேட்க… திகிலில் ராஜகுமாரனின் முகம் வேர்த்து விறுவிறுத்துப்போனது.

“தம்பிங்களா… என்னால முடியலடா… பேசாம நானே எந்திரிச்சுக்கறன்டா.”

“அண்ணன்… ஒறமொறை தூக்கிவிடாம நீயே எந்திரிச்சா, அதுக்குப் பிறகு ஒரு பய ஊருல உன்ன மதிப்பானா? நீ கவலைப்படாத. நல்லமுத்து சித்தப்பா இங்கயே சரக்குக்கும் சாப்பாட்டுக்கும் சொல்லிவிடச் சொன்னாரு. சரக்கு வருதுன்னா யாரும் வீட்டுக்குப் போகமாட்டாங்க. அப்ப யாரையாவது சமாதானப்படுத்தித் தூக்க வைக்கிறன்னு சொல்லியிருக்காரு. அதனால நம்ம செலவுலயே சரக்குக்கும் சாப்பாட்டுக்கும் சொல்லி விடுறேன்” என்று சந்திரகுமார் மொபைலை எடுக்க… ராஜகுமாரனுக்கு சற்று நிம்மதியானது.

பிணம் எரிந்து முடியவும், சரக்கு வந்து சேரவும் சரியாக இருக்க…சொந்தக்காரர்கள் மீண்டும் குழுமினர். ஆளுக்கு ஒரு குவார்ட்டர் பாட்டில் கொடுக்கப்பட… அதுவரையிலும் இறுக்கமாக இருந்த ஒறமொறைகளின் முகம் சற்றே தளர்ந்தது. நல்லமுத்து ஒரு கட்டிங் அடித்துவிட்டு குப்புறக் கிடக்கும் ராஜகுமாரனின் அருகில் சென்று, “குமாரு… நீ ஒரு ரவுண்டு அடிக்கிறியா?”

“இப்ப எப்படி சித்தப்பு குடிக்கிறது?”

“அப்படியே குப்புறப் படுத்துகிட்டுக் குடி”

“இருந்தாலும் தம்பிங்க முன்னாடி தண்ணி அடிக்கமாட்டன்ல?”

“நான் அதுக்கு ஏற்பாடு பண்ணுறேன்” என்ற நல்லமுத்து தம்பிகளை நெருங்கி, “என்னடா…சரக்கடிக்கிறீங்களா?”

“அண்ணனுக்கு முன்னாடி அடிக்கமாட்டோம்ல?”

“நீங்க மரத்துக்குப் பின்னாடி போய் அடிச்சுட்டு வாங்கடா… மூணு பெக்காச்சும் அடிச்சாதானே தெளிவா(?) பஞ்சாயத்து பேசமுடியும்.”

“அப்ப சரி…” என்று இரண்டு குவார்ட்டர்களை வாங்கிக்கொண்டு தம்பிகள் மரத்துக்குப் பின்னால் மறைந்தனர்.

ஒரு கட்டிங்கை ஊற்றி எடுத்துக்கொண்டு ராஜகுமாரனின் அருகில் சென்றார் நல்லமுத்து. இப்போது ராஜகுமாரன் நெஞ்சு வரை உடலை நிமிர்த்திக்கொண்டு, இரண்டு முழங்கைகளையும் தரையில் ஊன்றியபடி ஒரு கையால் க்ளாஸை வாங்கினான். மடமடவென்று ஒரே மடக்கில் குடித்துவிட்டு, “தம்பிங்க சாப்டாங்களா?” என்று கேட்பதுபோல், “தம்பிங்க குடிக்கிறாங்களா?” என்றான் பாசத்துடன்.

சிறுகதை : ஏழு முதல்வர்களைக் கண்ட ராஜகுமாரன்!

“மரத்துக்கு அந்தாண்ட குடிக்கிறாங்க.”

“சீக்கிரம் பஞ்சாயத்து பேசி முடிங்க சித்தப்பு…”

“முடிச்சுடலாம். அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி… உங்கப்பாவோட சின்ன வீடுங்களுக்கெல்லாம் பிள்ளைங்க இருந்துச்சே… அதுல கொண்டது, கொடுத்ததுல ஏதாச்சும் ஒறமொறை…”

“பெரிய வீட்டு ஒறமொறையோடவே ஏகப்பட்ட தகராறு…. இதுல சின்ன வீட்டு ஒறமொறையெல்லாம் விட்டு வச்சிருப்போமா?”

“அதுவும் கரெக்ட்தான்….. நீ கவலைப்படாத. நான் பேசி முடிச்சுடுறேன்” என்ற நல்லமுத்து ராஜகுமாரனின் கிளாஸில் இன்னொரு கட்டிங்கை ஊற்றிவிட்டுச் சென்றார். மரத்துக்குப் பின்னாலிருந்து வந்த குமார் தம்பிகள், நல்லமுத்துக்குப் பக்கத்தில் அமர்ந்தவுடன் நல்லமுத்து பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.

“ராஜகுமாரனோட ஒறமொறைல்லாம் முன்னாடி வாங்கப்பா…” என்று நல்லமுத்து கூற… ஏழெட்டுப் பேர் முன்னால் வந்து அமர்ந்தனர். அனைவரும் குடித்திருந்ததால் அந்தப் பஞ்சாயத்து சுமுகமாகவோ அல்லது அடிதடி சண்டையிலோ முடிவதற்கு சம அளவு வாய்ப்புகள் இருந்தன.

“சரவணா… என்ன இருந்தாலும் ராஜகுமாரன் உங்கப்பாவோட தங்கச்சி பையன். நீயும் அவனும் ஒரே வயசு. நீங்க இளவட்டமா இருக்கிறப்ப தண்ணியடிச்சுட்டு ஒண்ணு மண்ணா சுத்தியிருக்கீங்க… அக்கா தங்கச்சிங்களத்தான் கட்டிக்கணும்னு ராஜகுமாரன் உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கல… அதையெல்லாம் இன்னும் மனசுல வச்சுக்கணுமா?”

“என்ன அப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க. பொண்ணக் கட்டிக்குவான்னு நம்பித்தானே எங்க தோப்பு விவசாயத்தைக்கூட பாக்காம அப்பா இவங்க தொழிலே கதின்னு கிடந்தாரு… அந்த நன்றி உணர்ச்சி இல்லாதவன நான் ஏன் தூக்கி விடணும்?” என்றவுடன் மப்பில் இருந்த ராஜகுமாரனுக்கு ஆத்திரம் வந்து, “டேய்...உனக்கு முதல்ல நன்றி இருக்காடா?” என்றான்.

“என்ன நன்றி?”

“அவளோட ராவுகள் மலையாளப்படம் உனக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னு ஏழு தடவை உன்னை அந்தப் படத்துக்கு அழைச்சுட்டுப் போயிருக்கேன். அதையெல்லாம் மறந்துடாதடா…” என்றான் போதையில் தம்பிகள் இருப்பதை மறந்துவிட்டு.

சரவணன், “நீயும் சேந்துதானே பாத்த… என்னமோ நான் மட்டும் பாத்த மாதிரி சொல்ற…” என்றவுடன் குமார் தம்பிகள் அதைக் காதில் வாங்காததுபோல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டனர். தொடர்ந்து ஆத்திரத்துடன் சரவணன், “என்னமோ நீ மட்டும் என்னை அழைச்சுட்டுப்போன மாதிரி பேசுற… அவளோட ராவுகள், சத்திரத்தில் ஒரு ராத்திரின்னு நீ அழைச்சுட்டுப் போன அத்தனை படமும் பிளாக் அண்ட் ஒயிட். நான்தான் முதமுதல்ல உன்னை ‘ரதி நிர்வேதம்” கலர் மலையாளப் படம் பாக்க அழைச்சுட்டுப் போனேன்” என்றவுடன் குமார் தம்பிகள் நெளிந்தனர்.

“ம்க்கும்…” என்று தொண்டையைக் கனைத்த நல்லமுத்து சங்கடத்துடன் அனைவரையும் பார்க்க… பின்னாலிருந்து குமரேசன், “ஏம்ப்பா ரெண்டு பேரும் சேர்ந்து இந்த சகலகலா வல்லவன், முரட்டுக் காளைல்லாம் பாக்கலியா?” என்றான். அதற்கு சரவணன், “அப்படில்லாம் படம் வந்துச்சா? நமக்கு படம்ன்னாலே மலையாளப் படம்தான்…” என்று கூற… கூட்டத்தில் சிரிப்பு சத்தம்.

இப்போது நன்கு போதை ஏறியிருந்த ராஜகுமாரன், “சீமா, ஜெயபாரதி காலத்துலருந்து ஷகிலா, ரேஷ்மா காலம் வரைக்கும் அத்தனை மலையாளப் படத்துக்கும் காசு போட்டு டிக்கெட் வாங்கித் தந்தவன் நானு… இதையெல்லாம் மறந்தீன்னா அந்த ஷகீலாவுக்கே அடுக்காதுடா…” என்றான் கோபத்துடன்.

“சரி விடுங்கப்பா. சரவணா… இப்ப நீ தூக்கிவிடுறியா, இல்லையா?”

“இல்லங்க… ஒரு தடவை தேங்காய் தென்னைமரத்துலருந்து விழுந்துச்சுன்னா விழுந்ததுதான். மறுபடியும் அதைத் தென்னைமரத்துல ஒட்ட வைக்கமுடியாது” என்று சினிமா டயலாக் போல் பேசிவிட்டு சரவணன் பின்னால் சென்று நின்றுகொண்டான்.

உடனே நல்லமுத்து ராஜகுமாரனின் இரண்டு விட்ட ஒறமொறையான குமரேசனை அழைத்து, “டேய் குமரேசா… இங்க வாடா… உனக்கும் குமார் பிரதர்ஸுக்கும் என்ன சண்டை?”

“அதாண்ணன் நானும் ரெண்டு மணி நேரமா யோசிச்சுட்டிருக்கேன். என்ன சண்டைன்னு ஞாபகம் வரமாட்டேங்குது… ஆனா பெரிய சண்டை” என்று கூற… கண்ணுசாமி, “என்ன சண்டைன்னே மறந்து போச்சு… அதுக்கப்புறமும் ஏன்டா தூக்கமாட்டேங்கிற?” என்றார்.

அப்போது இந்திரகுமார் நல்லமுத்திடம், “சித்தப்பு… அண்ணன் இட்லி சாப்பிட்டாரா?” என்றான்.

“இல்ல… ஏன்டா?”

“அண்ணன் குடிச்சுட்டு சாப்பிடலன்னா மறுநாள் வயித்து வலி வந்துடும். அதான்…”

“அய்யோ… உங்க பாசத்துக்கு அளவே இல்லையாடா? இந்தாடா… போய் கொடுங்கடா…” என்று நல்லமுத்து ஒரு இட்லிப் பொட்டலத்தை நீட்டினார். இட்லிப் பொட்டலத்துடன் அண்ணனருகில் சென்ற தம்பிகள் “சாப்பிடுண்ணன்…” என்றனர்.

“வேண்டாம்டா… மனசே சரியில்ல… இவ்ளோ காசு, பணத்த வச்சுகிட்டு சுடுகாட்டுல குப்புறப் படுத்து அசிங்கப்படணும்னு எழுதியிருக்கு…”

“அதெல்லாம் பேசி பைசல் பண்ணிடலாம்ண்ணன். நீ சாப்பிடு” என்று இந்திரகுமார் பொட்டலத்தைப் பிரித்து அண்ணனுக்கு இட்லியை ஊட்டிவிட ஆரம்பிக்க… குமரேசன், “எந்தச் சண்டையா இருந்தா என்ன? தூக்கி விட முடியாது. அவ்வளவு தான்…” என்றான் சத்தமாக. பதிலுக்கு இந்திரகுமார், “என்ன சண்டைன்னே தெரியல. இன்னும் எதுக்கு வெட்டி வீராப்பு?” என்று கூறிவிட்டு மீண்டும் இட்லியை அண்ணனுக்கு ஊட்டிவிட்டான்.

அப்போது குமரேசன், “என்ன சண்டைன்னு ஞாபகமில்லன் னாலும், சண்டை போட்டு இந்தாளு என்னை அவமானப்படுத்தி யிருக்காரு” என்று ராஜகுமாரனைப் பார்த்துக் கையை நீட்டினான். உடனே இந்திரகுமார் கோபத்துடன், “இங்க பாரு… எங்கண்ணன கை நீட்டிப் பேசுற வேலைல்லாம் வச்சுக்காத…” என்றான்.

“ஏன், கை நீட்டிப் பேசினா என்ன பண்ணுவீங்க?” என்று குமார் பிரதர்ஸ் அருகில் வந்த குமரேசன் ராஜகுமாரனின் முகத்தருகில் கையை நீட்டி, “நீ என்ன பெரிய கலெக்டரா, கை நீட்டிப் பேசக்கூடாதா?” என்றான். அதற்கு மேல் பொறுக்கமுடியாத இந்திரகுமார், “டேய்… அண்ணன் மூஞ்சிகிட்டயே கைநீட்டுறியா?” என்று குமரேசனின் முகத்தில் ஒரு குத்து விட… குமரேசன் பதிலுக்குத் திருப்பி அடித்தான். சந்திரகுமாரும் குமரேசனை அடிக்க… குமரேசனுக்கு ஆதரவாக சரவணனும் செந்திலும் களத்தில் இறங்க… அந்த இடமே ஏக களேபரமாகி, நல்லமுத்து அவர்களைப் பிரித்து விட ஐந்து நிமிடமானது. அமைதிப் பேச்சுவார்த்தையை குமார் பிரதர்ஸ் வன்முறையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒறமொறைகள் அனைவரும் மிச்ச குவார்ட்டரை மறக்காமல் எடுத்துக்கொண்டு சுடுகாட்டிலிருந்து வெளியேறினர்.

இதைப் பார்த்துக் கடுப்பான ராஜகுமாரன், “ஏன்டா சமாதானப் பேச்சு வார்த்தையையும் சண்டைல முடிச்சுட்டீங்க. இப்ப எப்படிரா நான் எந்திரிச்சு வீட்டுக்குப் போறது?” என்று கேட்க… பதில் சொல்லமுடியாமல் சந்திரகுமாரும் இந்திரகுமாரும் தலையைக் குனிந்துகொண்டனர். இப்போது மயானத்தில் இவர்களுடன் நல்லமுத்துவும், கண்ணுசாமியும் நான்கைந்து பங்காளிகளும் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.

அப்போது தூரத்தில் ஒரு கார் வந்து நிற்க… காரிலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் இறங்கினர். நடுத்தர வயதிருக்கும். முகம் தெளிவாகத் தெரியவில்லை. காரிலிருந்து இறங்கியவர்கள் இவர்களை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் அருகில் வந்தவுடன் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது. அந்தப் பெண்ணுக்கு ஏறத்தாழ 40 வயதிருக்கும். நெற்றியில் சந்தனத்துடன் முகத்தில் ஒரு மலையாளக் களை. அந்தப் பெண் இன்னும் அருகில் நெருங்க… இந்திரகுமாரும், சந்திரகுமாரும் அதிர்ச்சியுடன் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டனர்.

“என்னடா சத்தத்தையே காணோம்?” என்று திரும்பிய ராஜகுமாரனும் அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஆத்தாடி…” என்று அலறினான். அதிர்ச்சியில் எழப் பார்த்த ராஜகுமாரனை தம்பிகள் அமுக்கி மீண்டும் படுக்க வைத்தனர்.

“இவிடெ ராஜகுமாரன்…” என்று அவள் கேட்க… நல்லமுத்து, “இவர்தான்…” என்று ராஜகுமாரனைக் காண்பித்தார். அவன் ஏன் இப்படி படுத்திருக்கிறான் என்ற யோசனையுடன் ராஜகுமாரனின் அருகில் நெருங்கிய அந்தப் பெண், தமிழும் மலையாளமும் கலந்து ராஜகுமாரனிடம் சொன்னது இதுதான்.

அந்தப் பெண்ணின் பெயர் நந்தினி. கேரளா, வயநாடு மாவட்டத்தில் கல்பேட்டா அருகிலிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். ராஜகுமாரனின் அப்பா முருகேசன் தனது டிம்பர் டிப்போவிற்கு மரம் வாங்குவதற்காக அந்த கிராமத்திற்குப் போக வர இருந்திருக்கிறார். அங்கு நீண்ட நாள்கள் திருமணமாகாமல் இருந்த மலையாளப் பெண்ணான சந்திரிகாவுடன் இரவு நேரத்தில் இளைப்பாறியதில் பிறந்த பெண்தான் நந்தினி. அவள் பிறந்து மூன்று வருடத்திற்குள்ளேயே முருகேசன் இறந்துவிட்டதால், அவள் விவரம் தெரிந்து தன் தந்தையைப் பார்த்ததில்லை.

முருகேசன் சந்திரிகாவுடன் மூன்று வருடங்கள் மட்டுமே இளைப்பாறியிருந்தாலும், அதற்குள் அந்த கிராமத்தில் ஒரு சின்ன வீடு கட்டிக்கொடுத்து, சின்னதாக ஒரு எஸ்டேட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் இறந்திருக்கிறார். இறப்பதற்கு முந்தைய வாரம் வந்தபோது முருகேசன் சந்திரிகாவிடம் பேச்சுவாக்கில், “உனக்கு வேணும்ங்கிற வசதில்லாம் செஞ்சு தரேன். ஆனா எக்காரணத்தைக் கொண்டும் எங்க ஊருக்கு வந்து நம்ம விஷயத்தை வெளிப்படுத்தக்கூடாது” என்று சொல்லியிருக் கிறார். அதனால் முருகேசன் இறந்த தகவல் அவர் மரம் வாங்கும் முதலாளிகள் மூலம் தெரிந்த பிறகும்கூட, சந்திரிகா ராஜகுமாரனின் ஊருக்கு வரவே இல்லை. நந்தினியிடமும் அவளுடைய தந்தை தமிழ்நாடு என்று சொல்லியிருக்கிறாரே தவிர, என்ன ஊர் என்றுகூடச் சொன்னதில்லை.

சென்ற வாரம் சந்திரிகா இறப்பதற்கு முன்புதான் முருகேசனின் ஊரைச் சொல்லிவிட்டு இறந்திருக்கிறாள். நந்தினிக்கு அவர்கள் சொத்தில் பங்கு வாங்கும் உத்தேசம் ஏதும் இல்லை. தனது அப்பாவின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் நந்தினிக்கு.

நந்தினி நீளமாகப் பேசி முடித்தவுடன் அங்கு பலத்த அமைதி நிலவியது. நந்தினி கூறியதில் எந்த சந்தேகமும் படத் தேவையில்லை. ஏனெனில் அவள் அச்சு அசலாக அவர்களுடைய அப்பா முருகேசனின் ஜாடையில் இருந்தாள். முருகேசன் பெண்ணாகப் பிறந்திருந்தால் அப்படித்தான் இருந்திருப்பார். அதனால்தான் ஆரம்பத்தில் அவளைப் பார்த்தவுடன் அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நந்தினி சில புகைப்படங்களைக் காட்டினாள். இளம் வயதில் முருகேசன் சந்திரிகாவுடன் எடுத்த படங்கள் அவை. சந்திரிகா மிகவும் அழகாக இருக்க… நல்லமுத்து கண்ணுசாமியிடம் முணுமுணுப்பாக, “மனுஷன் ஸ்டேட்டு ஸ்டேட்டா வாழ்ந்துருக்கான்யா…” என்றார்.

சொத்தில் எல்லாம் பங்கு கேட்க வரவில்லை என்றவுடன் நிம்மதியான ராஜகுமாரன் நந்தினியின் பக்கத்தில் நின்றிருந்தவனைக் காண்பித்து, “இவரு யாரும்மா?” என்றான்.

“என்ட புருஷன். பேரு விஜயன்” என்றவுடன் ராஜகுமாரனின் முகம் சட்டென்று மலர்ந்து, “நந்தினி எனக்குத் தங்கச்சி முறை. அப்பன்னா தங்கச்சி புருஷன் எனக்கு ஒறமொறைதானே…” என்றவுடன் உற்சாகமான இந்திரகுமாரும், சந்திரகுமாரும் ஒருவரை ஒருவர் சந்தோஷத்துடன் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

“அப்பாடா…” என்று நிம்மதியான நல்லமுத்து, “தம்பி விஜயா… இவர தோளப் பிடிச்சுத் தூக்குப்பா…” என்று கூற… அவன் ஒன்றும் புரியாமல் ராஜகுமாரனைத் தூக்கிவிட்டான். எழுந்தவுடன் ராஜகுமாரன், “தங்கச்சி…” என்று நந்தினியை அன்புடன் அழைத்தான். அவள் “சேட்டா…” என்று அவன் காலில் விழுந்து கும்பிட்டாள். இந்திரகுமாரும் சந்திரகுமாரும் கண்கள் கலங்க ராஜகுமாரனை அணைத்துக் கொண்டனர்.

இதைப் பார்த்த நல்லமுத்து கண்ணுசாமியிடம், “என்ன இருந்தாலும் ராஜகுமாரன் குடும்பத்தோட பாசத்தை யாரும் அடிச்சுக்க முடியாதுய்யா” என்று கூற… கண்ணுசாமி முறைத்தார்.