Published:Updated:

சிறுகதை: பட்டாம்பூச்சி

short story
பிரீமியம் ஸ்டோரி
News
short story

தனக்கு வந்திருப்பது காதலா பைத்தியமா என்று தாராவுக்கு ஐயமாக இருந்தது.

தில் எந்தக் கிண்டலும் இல்லை. நிஜமாகவே அவளுக்குக் காதல் என்ற உணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால்தான், இப்போது செய்வது, தனக்குத் தோன்றுவது எல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று உணர்ந்தாள். ஆனால், அதை யாரிடம் எப்படி உறுதிப்படுத்துவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

இப்போது 23 வயதைத் தொட்டிருக்கும் தாரா இரண்டாவது படித்துக்கொண்டிருந்தபோது நடந்தது இது. பிறந்ததிலிருந்தே இந்த ஊர்- உடுமலைப்பேட்டை - தான். பள்ளிவிட்டு வீட்டுக்கு வரும்போது, அவர்கள் வீடு இருந்த காம்பவுண்டில் ஒரு ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டு ஓடிப்போய்விட, அந்த அங்கிளும் ஆன்ட்டியும் அழுதபடி வீட்டுமுன் அமர்ந்திருந்தனர். சிறு கூட்டம் வேறு இருந்தது. “லவ்மேரேஜ் பண்ணி ஓடிப்போய்ட்டாங்க” என்று அம்மா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு லவ் என்றால் ஆகாது என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள். ஆனால், தாராவைப் பொறுத்தவரை, காதல் ஓகேயான விஷயம். லவ்தான் ஆகாது என நினைத்துக்கொண்டி ருந்தாள். `காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி...” என்றெல்லாம் சிவபக்தரான தன் அப்பா பாடக்கேட்டிருக்கிறாள். அதன்பின் ஏழாவது படிக்கும்போது வகுப்புத் தோழி அருணா, தன் காதலைப்பற்றி தாராவிடம் பகிர்ந்துகொண்டாள். அதுவரை சினிமாப் பாடல்கள், சில செய்யுள்கள் மூலம்தான் அந்தச் சொல் தாராவுக்குப் பழக்கம்.

சிறுகதை: பட்டாம்பூச்சி

அருணாவும் தாராவும் இந்தி டியூஷன் போய்க்கொண்டிருந்தனர். அங்கே வந்து கொண்டிருந்த ஒரு பையனை வர்ணித்துவிட்டு, “அவன் மேல லவ் வருதுடி” என்று சொன்னாள் அருணா. “ச்சே... காதல் வரைக்கும் ஓகேடி. லவ்வெல்லாம் பண்ணினா பெரிய பிரச்னை ஆகும்டி” என்றாள் தாரா. அப்போது அருணா சிரித்தது இன்னும் தாராவுக்கு நினைவிருக்கிறது. “லூசு லூசு... ரெண்டும் ஒண்ணுதாண்டி லூசு” என்றாள் அருணா. ‘இல்லவே இல்லை, காதல் வேறு லவ் வேறு’ என்று கொஞ்சநேரம் வாதிட்டாள் தாரா.

சிறுகதை: பட்டாம்பூச்சி
மயக்கம் வரவில்லை என்றாலும் கண்களைத் திறக்க பயமாய் இருந்தது தாராவுக்கு. சுற்றிலும் குரல்கள்.

கடைசியில் அருணா, தன் வீட்டில் வைத்திருந்த நீலவண்ணத்தில் பைண்ட் செய்யப்பட்டிருந்த கிரேட் லிஃப்கோ டிக்‌ஷ்னரியைக் கொண்டு வந்து காட்டினாள். அதில் Love = அன்பு, காதல், ஆசை, விருப்பம் என்றெல்லாம் போட்டிருக்க, இவ்வளோ பெரிய பைண்ட் செய்த புத்தகத்தில் இருப்பது தப்பாக இருக்காது என்ற முடிவுக்கு வந்து ஒப்புக்கொண்டாள். ஆனாலும் அருணாவுக்கு வந்த ஃபீல் எப்படி இருக்கிறது என்று இவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“அது லவ்வுன்னு எப்படிச் சொல்ற?” எனக் கேட்டாள் தாரா.

“அது ஒரு மாதிரி ஃபீல்-டி. சொன்னாப் புரியாது. உனக்கு வந்தாத்தான் புரியும்” என்றாள் அருணா. போடி என விட்டுவிட்டாலும் அந்த ஃபீல் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் லேசாக இருந்தது.

தாராவுக்கு ஒரு அண்ணன், தருண். தாராவைவிட 7 வருடம் மூத்தவன். அந்த வயது வித்தியாசத்தினாலேயே தருண் மேல் தாராவுக்குக் கொஞ்சம் பயம். அவனும் கொஞ்சம் முரடன். சச்சின், ஏ.ஆர். ரஹ்மான் என்று அவன் உலகம் வேறாக இருந்தது. தாராவுக்கு சினிமா, பாட்டு, விளையாட்டு இதிலெல்லாம் பெரிய நாட்டம் இருக்கவில்லை. எப்போதும் படித்துக் கொண்டிருப்பாள். தருண் எப்போதும் ஒருவித முறைப்புடனேயேதான் வீட்டில் உலவுவான். தருண் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருக்கும்போது அவனின் உற்ற நண்பன் ஒருத்தன் லவ் செய்ய ஆரம்பித்துவிட்டான் என்று அவனை வீட்டுக்குள்ளேயே விடவில்லை தருண். “ப்ளஸ் ஒன்னுல என்ன லவ் வேண்டிக்கெடக்கு? அவங்க வீட்டுக்குப் போனா அவங்கப்பா என்னைத் தப்பா நினைக்க மாட்டாங்களா? அதனால அவன் ஃபிரெண்ட்ஷிப்பே வேணாம்னுட்டேன்மா” என்று ஒரு நாள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்ததை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் தாரா. அப்போது அம்மாவே “ரொம்பப் பண்ணிக்கறடா நீ” என்று திட்டினாள்.

எப்போதும் படிப்பு படிப்பு என்றிருந்தாள் என்பதால், தாரா ஸ்கூல் ஃபர்ஸ்ட், ஸ்டேட் ஃபர்ஸ்ட் ரகமெல்லாம் இல்லை; ஆவரேஜ் மாணவிதான். அதற்கே முக்கி முக்கிப் படிக்க வேண்டியதாக இருக்கிறதே என்பதால்தான் வேறு எதிலும் அவளுக்கு நாட்டமிருக்கவில்லை. தாரா பத்தாவது படிக்கும்போது, அவளின் பள்ளி வழியாக தினமும் வரும் ஒரு பையன் பள்ளிவிடும்போது குறுக்கும் நெடுக்குமாய் நடப்பான். ஒருநாள் அவன், கையில் ஒரு கார்டை எடுத்துக்கொண்டு வந்தான். அவன் அருகில் வரவர இவளுக்கு அடிவயிறெல்லாம் கலங்கியது. அவசர அவசரமாக ரோட்டை க்ராஸ் செய்தாள். வேகவேகமாய்ப் போய்க்கொண்டிருந்த பைக்குகள். கார்களுக்கிடையே இவள் நடை தடுமாற ஒரு டூவீலர்க்காரன் இடித்து விழுந்து வாரிக்கொண்டாள்.

மயக்கம் வரவில்லை என்றாலும் கண்களைத் திறக்க பயமாய் இருந்தது தாராவுக்கு. சுற்றிலும் குரல்கள். கொஞ்சநேரத்தில் நடைபாதையோரம் அமரவைக்கப்பட்டாள். கண்களை முழுதும் திறந்ததும் அவனைத் தேடினாள். காணவில்லை. சிராய்ப்புக் காயங்கள். அந்த டூவீலர் ஓட்டி வந்தவனுக்குத்தான் அடி என்றார்கள். அவனை ஆம்புலன்ஸில் அழைத்துப்போனார்கள். “என்னா ஸ்பீடா வரானுக” என்று அவனைத் திட்ட வேறு செய்தார்கள். டூ வீலர்க்காரன் பாவம், அவன்மேல தப்பில்லையே என்று தாராவுக்குத் தோன்றியது. அப்பாதான் வந்து அழைத்துப் போனார்.

சிறுகதை: பட்டாம்பூச்சி

இரண்டுநாள் கழித்துப் பள்ளிக்குப்போனாள். ஒருவாரம் கழித்து அந்த கார்டு கொண்டு வந்த பையன், இவளுடன் படிக்கும் இன்னொரு பெண்ணோடு நடப்பதைப் பார்த்தாள். இருவருடைய தோள்களும், கைகளும் உரசிக்கொண்டபடி நடந்துகொண்டிருந்தனர். அவளைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான்போல என்று நினைத்துக்கொண்டாள். “இவர்களுக்குள் இருப்பது லவ்வா?” என்று கேட்டுக்கொண்டாள். அப்போது மீண்டும் அவளுக்கு லவ்வென்றால் என்ன ஃபீல் என்ற கேள்வி எழுந்தது. அன்றைக்கு அவன் தன்னை நோக்கி வந்தபோது, தனக்கு அடிவயிற்றில் ஒரு மாற்றம் வந்ததே அதுதான் லவ்வா? ச்சேச்சே... அது பயம். கொஞ்சநாளுக்கு முன் வீட்டுக்கு அருகில் பாம்பு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோதும் அடிவயிற்றில் அப்படித்தானே இருந்தது. அதே ஃபீல்தான். அதை லவ் என்று சொல்ல முடியாது என்று எண்ணிக்கொண்டாள். ஒருவேளை லவ்வும் பயமும் ஒன்றுதானா. இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. ஆனால், அடுத்தநாள் எழுதவேண்டிய கெமிஸ்ட்ரி டெஸ்ட் அந்தச் சிந்தனையைத் தூக்கித் தூரப்போட்டது.

அதன்பிறகு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ. `படி படி... படிப்புதான் நமக்குப் பாதுகாப்பு... பொட்டப்புள்ள படிச்சாதான் பொழைக்க முடியும்...’ அறிவுரைகள்... தேர்வுகள். அதன்பிறகு கல்லூரி. கல்லூரி இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு ஒன்றிரண்டு தோழிகளின் காதல் சமாசாரங்கள் இவள் காதுக்கு வந்து, அதைப் பற்றி அவர்கள் பேசக் கேட்டிருக்கிறாள். ஆனால் அதுவே, அவர்கள் ``ஏய்... இன்னைக்கு அவன்கூட பைக்ல போறப்ப அப்ப்ப்ப்ப்ப்டி இருந்துச்சுடி. தியேட்டர்ல அவன் கையப் பிடிச்சுட்டுப் படம் பாக்கற ஃபீல் இருக்கே...” என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று தாராவால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவள் கேட்டாலும் “ப்ச்... அதெல்லாம் சொன்னாப் புரியாதுடி. ஃபீல் பண்ணணும்” என்ற பதில்தான் வரும். அதே சமயம், ஒரு ஜோடிக்கு பிரேக் அப் ஆனபோது இவளால், அந்தத் தோழிக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. அப்போது அவளின் மனச் சஞ்சலத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்தக் காதல் என்கிற ஃபீல்தான்...

கல்லூரிப் படிப்பு முடிந்து

“கணேஷும் நீயும் என்னடி பேசிப்பீங்க அப்படி?”.

ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை கிடைத்தது. அது கிச்சன் பொருள்கள் எல்லாம் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம். ஃபேக்டரி கோவையில் இருந்தது. அதன் அலுவலகம், உடுமலைப்பேட்டையில் இருந்தது. வழக்கமாகவே இந்தக் கணக்குப் பிரிவில் இருப்பவர்கள் இன்னும் இருபது நிமிடத்தில் இந்த உலகம் அழிந்துவிடும் என்பதைத் தங்கள் முகத்தில் காட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். தாராவின் அதிகாரியாக இருப்பவர் “குட்மார்னிங்” என்பதையும் “வெளியபோடா ராஸ்கல்” என்பதையும் ஒரே மாடுலேஷனில் சொல்கிற ஆசாமி.

மொத்தம் பதினான்கு பேர் அவளது பிரிவில் இருந்தார்கள். மூன்று மாடிகள் கொண்ட அந்த நிறுவனத்தில் இவர்கள்போக நூற்றுச் சொச்சம் பேர் பணிபுரிகிறார்கள். ஆனால் யாரும் இவர்களது பிரிவுக்குள் வரமுடியாத அளவுக்கு இதொரு அகழி இல்லாத அரண்மனையாகத்தான் இருந்தது.

உடன் பணிபுரிபவர்களில் அர்ச்சனாதான் இவளோடு சடுதியில் நெருக்கமானாள். ஆறுமாதங்களில் அர்ச்சனா வோடுதான் தினமும் லஞ்ச். அக்கவுன்ட்ஸ் பிரிவில் வவுச்சர் வாங்கிக் கொடுக்கும் ஒரு பெண் வேலையிலிருந்து நின்றுவிட, இவளை அந்த டேபிளுக்கு மாற்றினார்கள். ஒரு குட்டிப் பதவி உயர்வு போலத்தான். அதுவரை அலுவலகம் வந்ததும் லேப்டாப்பைத் திறந்து, ஆறுமணிவரை அதன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனிதர்களோடு பேசவேண்டிய வாய்ப்பு. வெவ்வேறு பிரிவுகளிலிருந்து தினமும் ஒருவராவது வந்து வவுச்சரை இவளிடம் நீட்டுவார்கள். இவள் அதைச் சரிபார்த்து என்ட்ரி போட்டு மேனேஜரிடம் அனுப்புவாள்.

சிறுகதை: பட்டாம்பூச்சி

அப்படி வருபவர்களில் ப்ராசஸிங் பிரிவிலிருந்து வாரத்துக்கு மூன்று முறையாவது சூர்யாவும், கணேஷும் வருவார்கள். ஒருத்தனுக்கு வேலை என்றாலும் இருவராக வந்து விடுவார்கள். அவர்களில் கணேஷ், அர்ச்சனா டேபிளில் போய் நிற்பான். சூர்யா வவுச்சரை தாராவிடம் நீட்டிவிட்டு அவள் என்ட்ரி போட்டு முடியும் வரை அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான்.

“கணேஷும் நீயும் என்னடி பேசிப்பீங்க அப்படி?” - தாராதான் கேட்டாள்.

“ப்ச். அவனுக்கு எம்மேல லைட்டா க்ரஷ் இருக்கு. ஆனா எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. அதுனால நான் கண்டுக்கறதில்ல. பேசினா பேசுவேன். அவ்ளோதான்... அதேமாதிரி சூர்யாவுக்கு உன் மேல க்ரஷ் இருக்குடீ.’’

இந்த க்ரஷ் என்ற வார்த்தையும் தாராவுக்குப் புரியாது. அர்ச்சனாவிடம் சொல்லியேவிட்டாள். “இந்த க்ரஷ், லவ்வெல்லாம் என்ன மாதிரி ஃபீல்னே எனக்குப் புரிய மாட்டீங்குது.’’

``சும்மா நடிக்காத. க்ரஷ்னா தெரியலையாம்ல. ஸ்கூல்ல எந்த மாஸ்டர் பிடிக்கும் உனக்கு?”

“ஒரு கணக்கு மாஸ்டர் ரொம்பப் பிடிக்கும். மத்த பொண்ணுக அப்ப க்ரஷ், லவ்னு பேசிப்பாங்க. ஆனா அவர் மேல எனக்கு பெரிய மரியாதை உண்டு. அப்டிலாம் நினைக்கத் தோணல. அதென்னமோ தெரியல. க்ரஷ், லவ்க்கு என்ன அர்த்தம்னெல்லாம் தெரியும்டி. ஆனா அந்த ஃபீல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதுன்னு சொல்ல வந்தேன்.”

“என்னடி கதையளக்கற?”

“இப்போ உனக்கு அன்னைக்கு டேபிள் கால்ல இடிச்சப்ப நான் கத்தினேன்ல, ஏன்? எனக்கு அந்த மாதிரி ஒருக்கா கெண்டைக்கால்ல அடிபட்டிருக்கு. உயிர்போற மாதிரி வலிக்கும். உனக்கு அன்னைக்கு வயித்து வலின்னப்ப என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஏன்னா எனக்கும் வயிறு வலிச்சிருக்கு. ஆனா லவ் லவ்ங்கறீங்க அது எப்படி என்ன ஃபீல் தரும்னு எனக்குத் தெரியாது. ஒரு வேளை வந்தாலும் அதுதான் லவ்வான்னு தெரியாது.”

அர்ச்சனா, தாராவையே பார்த்துக்கொண்டிருந்தாள். “நீ வந்து இவ்ளோ நாள்ல இவ்ளோ நீளமா பேசினது இன்னைக்குத்தான். இப்ப உனக்கு என்ன தெரியணும்?”

``ஒண்ணுமில்ல விடு” என்றாள். வழக்கமாக தாரா இவ்வளவெல்லாம் பேசுபவளே அல்ல.

சிறுகதை: பட்டாம்பூச்சி

இந்தக் காலகட்டத்தில்தான் தாராவின் அண்ணன் தருணின் காதல் விவகாரம் வீட்டில் எழுந்தது. தருண் கல்லூரி முடிந்ததுமே சென்னையில் வேலை கிடைத்துப் போய்விட்டான். உடுமலையில் இருக்கும்போது ஒரே ஒரு ஜீன்ஸை எப்போதாவது அணிபவன், சென்னைக்குப் போய்விட்டு வந்ததுமே ஆளே மாறி வேறாகியிருந்தான். அவன் கொண்டு வந்த பையில் இருப்பதெல்லாம் ஜீன்ஸும் டிஷர்ட்டும்தான். ஐடி பார்க்கில் வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணோடு அவனுக்குக் காதல். அதை வீட்டில் சொல்லிவிட்டான். தாராவின் வீட்டில் அதற்கெல்லாம் அதிர்ச்சி காட்டுகிறவர்கள் அல்ல. பொண்ணு யாரு என்று மட்டும் கேட்டார்கள். தருணும் அவன் காதலித்தவளும் இன்னும் ஆறுமாதத்தில் ஆன்சைட் போகவேண்டியிருப்பதால் சீக்கிரம் கல்யாணம் நடத்த வேண்டும் என்று பேச்சு. பெண் வீட்டிலும் சாதி குறித்த பெரிய அதிர்ச்சிகளோ, சண்டைகளோ இல்லையென்றாலும் அந்தஸ்தைக் காரணம் காட்டிக் கொஞ்சம் இழுத்தடித்தார்கள். “தங்கச்சி இருக்கறப்ப இவன் கல்யாணம் கட்டிக்கறான் பாரு” என்று சொந்தக்காரர்களின் பேச்சு வந்தது. தாராவின் அப்பா அதற்குத்தான் கோபப்பட்டார். “தாராவுக்குக் கல்யாணம் பண்றது எங்க பொறுப்பு. அதுக்கும் அண்ணன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டு சீக்கிரமே கல்யாணத்தை ஏற்பாடு செய்து நடத்தி முடித்தார்.

“நீ வந்து இவ்ளோ நாள்ல இவ்ளோ நீளமா பேசினது இன்னைக்குத்தான்!”

அந்த ஆறுமாதத்தில் வீட்டில் இருந்த லேசான இறுக்கச் சூழல், தாராவை மீண்டும் காதலைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்து தள்ளிவைத்தது. தருண் கல்யாணமெல்லாம் முடிந்து மனது ஒரு சமநிலைக்கு வந்துவிட்டிருந்தது. வீட்டில் இவளுக்கும் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேச்சு எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஒருநாள் சூர்யா மட்டும் தனியாக இவள் இருக்கும் டேபிளுக்கு வந்தான். எப்போதும் வேலையாக வருபவன், அன்றைக்குக் கையில் எந்தப் பேப்பருமில்லாமல் வருவதைப் பார்த்ததும் ‘இவன் எதுக்கு வரான்?’ என்று தோன்றியது. பள்ளிக்கூட நாள்களில் வந்த அந்தப் பையன் நினைவில் வந்தான். ஆனால் அப்போது இருந்தமாதிரி பயமெல்லாம் வரவில்லை.

தலையை உயர்த்திச் சிரித்தாள். சூர்யாவும் சிரித்தான்.

``ரெண்டு வாரமா லீவுங்ளா?”

``ஒருவாரம்தானே..? அண்ணன் கல்யாணம்...”

“ஆங்... அர்ச்சனா சொன்னாங்க...”

அதற்குமேல் அந்த உரையாடல் தொடரவில்லை. ஒன்றிரண்டு நிமிடங்கள் மௌனம் வழிந்த அந்தச் சமயத்தில் “சூர்யாஆஆ’’ என்று அந்த ஃப்ளோருக்கே கேட்கும் வண்ணம் அக்கவுன்ட்ஸ் மேனேஜரின் குரல் கேட்டது. அவரது டேபிளிலிருந்து வந்துகொண்டிருந்தவர் சூர்யாவைப் பார்த்து “பதினாறாயிரம் ரூவா உன் பேர்ல சஸ்பென்ஸ் காட்டுது. இன்னும் க்ளியர் பண்லியா நீ? சீக்கிரம் க்ளியர் பண்ணுய்யா...” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கடந்து சென்றுவிட்டார்.

சூர்யாவின் முகம் சுருங்கியிருந்தது. எதையோ பேசவந்தவன்போல இருந்த அவன் உடல்மொழி மாறி, அங்கிருந்து செல்லும் நிலைக்குத் தயாரானது. தாராவைத் தயக்கத்தோடு பார்த்துவிட்டு, திரும்பிச்சென்று விட்டான். அன்றைக்கு இரவு சூர்யாவின் முகம் இவள் மனதில் வந்து வந்து போனது. அடுத்தநாள் சூர்யா தன் டேபிளுக்கு வருவானா என்று எதிர்பார்த்தாள். அவன் ஏற்கெனவே கொடுத்த வவுச்சர்களை எடுத்து அவன் கையெழுத்து எப்படி இருக்கும் என்று பார்த்தாள். அப்போதுதான் இந்தக் கதையின் முதல் வரியில் சொல்லப்பட்ட ஐயம் அவளுக்கு வந்தது. இது காதலா, பைத்தியமா? ஏனென்றால், அன்று காலை வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டிவியில், ஒரு காட்சியில் சந்தானம், சிம்புவிடம் “இதெல்லாம் லவ்வுன்னு சொல்லிடாத. இது பைத்தியக்காரத்தனம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதுவும் பைத்தியக்காரத்தனம்தானோ?

ஒருநாள் சூர்யா மட்டும் தனியாக இவள் இருக்கும் டேபிளுக்கு வந்தான்.

அதன்பிறகு சிலநாள்கள் சூர்யா, இவள் செக்‌ஷன் பக்கவே வரவில்லை. இவளுக்கும் அந்த எண்ணமெல்லாம் வடிந்திருந்தது. ஒருநாள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டு வந்திருப்பதாக அப்பா சொன்னார். பையன் பெயர் வினோத்குமார். பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி ஒன்றில் லைப்ரேரியன் என்று சொல்லி, புகைப்படத்தைக் காட்டினார். தாராவுக்கு அவனைப் பிடித்திருந்தது. ``நீ யாரையாவது லவ் பண்றியா?” என்று சிரித்துக்கொண்டே அப்பா கேட்க, அம்மாவோ “அவ லவ்வுன்னா செவப்பா கறுப்பான்னு கேப்பா. அவகிட்ட கேட்டீங்க பாருங்க” என்று தாராவின் தலையில் குட்டிவிட்டுப் போனாள்.

எல்லாம் பரபரவென நடந்தது. கோயில் ஒன்றில் வைத்து தாரா, வினோத்குமாரைப் பார்த்தாள். ஸ்லிம்மாக, கோயிலுக்குக் கறுப்பு

டி ஷர்ட்டில் வந்திருந்தான் வினோத். பையன் வீட்டில் ரொம்ப சிம்பிளா நடத்தினா போதும் என்றார்கள். ஜாதகத்தைக் காரணம் காட்டி, அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் என்றார்கள். தருணும், அண்ணியும் அமெரிக்கா போவதால் அப்பாவும் அதற்கு ஒப்புக்கொண்டார். தாராவிடம் போன் நம்பரை வாங்கிக்கொண்ட வினோத்குமார், இரண்டொரு முறை அழைத்தான். ஆனால், இருவருக்குமே இருந்த ஒரு தயக்கம் உரையாடலை மேற்கொண்டு செலுத்தவில்லை. பத்து நாள்களில் திருமணம் முடிந்தது. தாராவின் அலுவலகத்திலிருந்து அவள் செக்‌ஷனில் எல்லாரும் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். அவள் செக்‌ஷன் தாண்டி, கணேஷும், சூர்யாவும் வந்திருந்தார்கள். சூர்யா வாழ்த்திவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டு கை கொடுத்தான். அர்ச்சனா இவள் காதில் “இனி நீ தப்பிக்க முடியாது. லவ் பண்ணித்தான் ஆகணும்” என்றாள். `பண்றேன். ஆனா அது எப்படி இருக்கும்?’ என்று தோன்றிய கேள்வியை அடக்கிக்கொண்டு சிரித்துவைத்தாள்.

ஸ்லிம்மாக, கோயிலுக்குக் கறுப்பு டி ஷர்ட்டில் வந்திருந்தான் வினோத்.

அன்றைக்கு முதலிரவு இவள் வீட்டில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ரைவசிக்காக எல்லாரும் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். சினிமா மாதிரியெல்லாம் இல்லாமல், தாராவும் வினோத்தும் ஹாலிலேயே அமர்ந்து கொஞ்சநேரம் நார்மலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். படிப்பு, வேலை எல்லாவற்றைப் பற்றியும் பேசியதும் வினோத் சோஃபாவில், தாராவுக்கு அருகே வந்து அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

சிறுகதை: பட்டாம்பூச்சி

“நீ யாரையாவது லவ் பண்ணீருக்கியா தாரா?”

தாரா மென்மையாகப் புன்னகைத்தாள். என்ன பதில் சொல்வது... அந்த ஸ்கூல் பையன், கல்லூரி படிக்கும்போது ஒருவன், இப்போது பணிபுரியும் இடத்தில் சூர்யா என்று இவர்கள்மேல் வந்த உணர்வை என்னவென்று சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. அவையெல்லாம் லவ்வா என்றே தெரியாமல் என்ன சொல்வது என்று யோசித்தாள்.

தாராவுக்கு அடிவயிற்றில் என்னவோ செய்தது. அது அடிவயிற்றில் அல்ல...

“இல்லைங்க. பெரிசா யாரையும் லவ்லாம் பண்ணினதில்ல. சிலரைப் பிடிச்சிருக்கும். ஆனா...”

“அதக்கேட்கல. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பண்ணினதுண்டா?’’

“இல்லைங்க...”

“சரி...” வினோத் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தான். ``உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.” தாரா வினோத்தின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். அவை என்னமோ சொல்லியது.

“நான் ஒரு லவ் பண்ணீருக்கேன். கிட்டத்தட்ட ஆறு வருஷ லவ். எங்க வீட்ல பிரச்னை இல்லை. பொண்ணு வீட்ல ரெண்டு வருஷமா போராடினோம். ஒத்துக்கல. ஆறு மாசம் முன்னாடி அவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. நான் ரொம்ப உடைஞ்சுபோய்ட்டேன். ஆனா எனக்கு, என் ஃபேமலி எல்லாச் சமயத்துலயும் ஆதரவா இருந்திருக்காங்க. அதனால அவங்க கேட்டுக்கிட்டபடி இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இதை மறைச்சு, ஜாதகம் அது இதுன்னு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. ஆனா உன்கிட்ட சொல்லணும்னு எனக்குத் தோணிட்டே இருந்தது. ரெண்டொருக்கா டிரை பண்ணினேன். பேச முடியல. இப்ப எங்களுக்குள்ள கான்டாக்ட் இல்ல. ஆனா நான் அவளை லவ் பண்ணினது நெஜம்...”

தாராவுக்கு அடிவயிற்றில் என்னவோ செய்தது. அது அடிவயிற்றில் அல்ல... கொஞ்சம் மேலே இதயத்தில். பட்டாம்பூச்சி சிறகடிப்பதுபோல இதயத்தின் துடிப்பை உணர்ந்தாள். வினோத்தின் கைகளுக்குள் இருந்த, தன் கைகளை விடுவித்து, அவன் கைகளை இவள் இப்போது இறுகப்பற்றித் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள்... கேட்டாள்: “ஹேய்... சொல்லுங்கப்பா. லவ் பண்ணினேன்னீங்களே... அந்த ஃபீல் எப்படி இருந்தது?”