Published:Updated:

சிறுகதை: உதை பந்து

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

இந்துமதி

``கோல்...’’ என்ற பெரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தாள் அலமு ஆயா. ஒரு விநாடி ஒன்றும் புரியவில்லை. இரவா பகலா என்பது தெரியவில்லை. திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்தில் மாலை எனப் புரிந்துகொண்டாள். சாப்பிட்டோமா என்று யோசித்தாள். சாப்பிட மாதிரியும் இருந்தது. இல்லாத மாதிரியும் தெரிந்தது. லேசாகப் பசிப்பதாகப் பட்டது. தண்ணீர் குடிக்கலாம் என்று படுத்திருந்த நிலையிலிருந்து எழுந்து கட்டிலிலேயே உட்கார்ந்தாள். பக்கத்து ஸ்டூலில் வைக்கப்பட்டிருந்த செம்பிலிருந்து டம்ளரில் நீர் ஊற்றிக் குடித்தாள். உடனே சிறுநீர் வந்தது.

``திலகா... திலகா...’’ என்று கூப்பிட்டாள். பக்கத்துத் திடலில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களின் சத்தத்தை மீறியதாகக் குரல் எழுப்ப வேண்டியிருந்தது. தான் கூப்பிட்டது மகளின் காதில் விழுந்ததோ இல்லையோ என்ற ஐயத்தில் மீண்டும் உரத்துக் குரல் எழுப்பினாள்.

``திலகா... திலகா...’’

கதவருகில் வந்து நின்ற திலகா சிடுசிடுத்தாள்.

``எதுக்காக இப்படிக் கத்தற...’’

``பக்கத்துல விளையாடுறாங்கல்ல... அந்தச் சத்தத்துல என் குரல் உனக்குக் கேக்குதோ இல்லையோன்னு..?’’

``உனக்குத்தான் பெரிய குரலாச்சே... எப்படிக் கேக்காமப் போகும்..? ஆமா, எதுக்குக் கூப்ட்ட..?’’

``ஒண்ணுக்கு வருது...’’

``தூங்கறதுக்கு முன்னாலதான போன...?’’

``தூங்கி எந்திரிச்சதும் திரும்ப வருதே...’’

``சரி சரி, வா...’’ என்று வேண்டா வெறுப்பாகத் தாயை நெருங்கினாள் அவள். வாக்கரைப் பிடித்துக்கொள்ள வசதியாக நகர்த்தி, தாயைத் தூக்கி நிறுத்தினாள்.

``வாக்கர கெட்டியாகப் பிடிச்சுக்க...’’

வாக்கரைப் பற்றித் தூக்கித் தூக்கி வைத்த அலமு ஆயா மெல்ல நடக்க முயன்றாள். அதற்குள் அவளையும் மீறி சிறுநீர் கால்களில் வழிந்து தரையை நனைத்துக்கொண்டே போயிற்று. அதைப் பார்த்த திலகாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

சிறுகதை: உதை பந்து

``ஏன் இப்படி உசுர வாங்கற? கொஞ்சம் முன்னால எந்திரிச்சு வந்தா என்ன...?’’

``எந்திரிச்சதும்தான் உன்னைக் கூப்பிட்டேன்.’’

``நீ குரல் கொடுத்ததும் ஓடிவரதுக்கு நான் என்ன வேலையில்லாம ஒக்காந்துகிட்டா இருக்கேன்? அடுப்புல வச்ச பாலைப் பார்ப்பனா, உங்கிட்ட ஓடிவருவனா..?’’

அதற்குள் வழி முழுவதும் ஈரமாக்கி குளியல் அறைக்குள் நுழைந்தாள் அலமு ஆயா... அவளை உட்கார வைத்துவிட்டு ``முடிச்சதும் கூப்புடு...’’ என்று வெளியில் வந்தாள் திலகா. பின்புறம் போய் ஒரு கையில் டெட்டால் ஊற்றிய தண்ணீர்க் குவளையும் மறு கையில் பழைய கந்தல் துணியும் கொண்டு வந்தாள். அலமு ஆயா ஈரப்படுத்திய தரையை டெட்டால் தண்ணீர் தெளித்துத் துடைத்தவாறு கோபத்தோடு பேசினாள்.

``வேணும்னே செய்யுது கிழவி. இன்னும் எத்தினி நாளுக்கு இதுங்கூட மாரடிக்கணுமோ...?’’

துடைத்த துணியையும் குவளையையும் பின்பக்கம் போட்டுவிட்டு, கை கழுவிக்கொண்டு வந்தாள். அதற்குள் அலமு ஆயா எழுந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

``நான்தான் கூப்பிடச் சொன்னேனில்ல... அதுக்குள்ள ஏன் எழுந்து நிக்கற..? விழுந்து தொலைக்கிறதுக்கா..?’’

``உனக்குக் கஷ்டம் குடுக்க வேணாமின்னு...’’

``ஆமா... இனிமே புதுசா என்ன கஷ்டம் குடுக்கப் போற..?’’ என்றவாறு தாயின் கால்களைக் கழுவினாள்.

``நைட்டி மொத்தத்தையும் மூத்திரத்துல நனைச்சுக்கிட்ட... இரு வேறு கொண்டாறேன்.’’

வேறு நைட்டி மாற்றிக்கொண்டே சொன்னாள்.

``இதோட இன்னிக்கு நாலாவது நைட்டி மாத்தறேன்...’’

``நான் என்னடீ பண்ணுவேன்? வயசாயிடுச்சு.கட்டுப்படுத்திக்க முடியல...’’

`` உனக்கு மட்டும்தான் வயசாகுதா... எங்களுக்கு ஆவாதா..? இந்த ஜனவரி வந்தா எனக்கு அம்பத்தி ஆறு.’’

அலமு ஆயா பேசாமல் இருந்தாள். வாக்கரின் உதவியோடு கட்டிலில் வந்து உட்கார்ந்தாள். திலகா நிறுத்தாமல் பேசினாள்.

``என்னால மட்டும் முடியுதா என்ன... வீட்டு வேலை, பொண்ணுக்குக் காலேஜுன்னு ஓடி ஓடித்தான் செய்துகிட்டிருக்கேன். இதும் நடுவுல உன்னைக் குளிச்சு விடணும். தலைசீவி விடணும். சாப்பாடு குடுக்கணும். வேளாவேளைக்கு மருந்து, இதோ இந்த மாதிரி ஏழெட்டு தரம் ஓடியாறேன். என்னால முடியுதுன்னா நினைக்கிற?’’

அலமுவினால் தாங்க முடியவில்லை. மனதில் பாரமாக அழுத்திக்கொண்டிருந்ததை வார்த்தைகளாகக் கொட்டினாள்.

``படுக்கைல விழுந்த இந்த ஒரு வருஷம் தவிர பாக்கி அம்பத்து நாலு வருஷம் நான் உனக்கு செய்யில? அஞ்சு வயசுல உடம்பாப் படுத்த நீ இப்பத்தானே எந்திரிச்சு தனியா நிக்குற? உடம்புக்கு வந்து ஒரு வாரம் பத்து நாள்னு படுக்கைல கிடப்பியே... அப்பல்லாம் யாரு உன்னை கவனிச்சுக்கிட்டது? யாராச்சும் ஒருத்தர் கிட்ட வந்திருப்பாங்களா..? பீ வாரிக் கொட்டி மூத்திரம் வாரிக் கொட்டி உன்னை நான் பார்த்துக்கிடல..?’’

``அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? நீயும் அப்பனும் போட்ட சண்டைதான் என் உடம்புக்குக் காரணம்னு டாக்டர் சொல்லல...?’’

``நானாடி உங்கப்பன்கூட சண்டை போட்டேன்? நின்னா குத்தம், நடந்தாக் குத்தம் உங்கப்பனுக்கு... அந்தப் பாழாப்போன சுகன்யா டீச்சரை ரெண்டாந்தாரமாக் கட்டிக்க வுடலைன்னு என் மேல ஆத்திரம் உங்கப்பனுக்கு...கடைசி வரை வஞ்சம் வச்சு என் கழுத்தறுத்துட்டுப் போயிட்டான். எனக்குன்னு ஒண்ணு செய்யில...ஒரு நயா பைசா காசு வைக்கல.’’

``நீ அவர அனுசரிச்சுப் போயிருந்தா அவுரு ஏன் சுகன்யா டீச்சரைத் தேடிப் போகப் போறாரு..?’’

``அது சரி. பேசமாட்டியா பின்ன... நீ உன் வீட்டுக்காரனை அனுசரிச்சுப் போறதுதானே..? ஒரே வருஷத்துல கைக்குழந்தையான உம் பொண்ணத் தூக்கிக்கிட்டு எங்கிட்ட ஏன் ஓடியாந்த..? அன்னிலேருந்து உனக்கும் உம் பொண்ணுக்கும் செஞ்சவடி நானு.’’

``யாரு இல்லேன்னது, அத எத்தினி தரம் சொல்லிக் காடுட்டுவ? நானா குழந்தையைத் தூக்கிக்கிட்டு ஓடி வந்தேன்? எனக்கு உடம்பு சரியில்லைன்றதை மறைச்சு ஏன் கல்யாணம் பண்ணினீங்க? உண்மை தெரிஞ்சதும் அவங்க கொண்டாந்து வுட்டுட்டுப் போயிட்டாங்க... அது யார் தப்பு?’’

``அதுவும் உங்கப்பன் செஞ்ச வேலைதான்.’’

``அது சரி. எல்லாத்தையும் எங்கப்பன் தலைல போடு. நீ வாயே தொறக்காம கம்முனு கெடந்த பாரு...’’

`` நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவடி. என் பேர்ல இருந்த இந்த வீட்டை உங்கப்பன் கிட்ட சண்டை போட்டு உன் பேருக்கு மாத்தி ரிஜிஸ்டர் பண்ணினேன் இல்லையா... அதுக்கா இத்தனை பேசற..?’’ கரகரவென்று கண்ணீர் வடித்தாள் அலமு ஆயா.

சிறுகதை: உதை பந்து

``வீடு, நகை, பணம்னு எல்லாத்தையும் உனக்கும் உன் பொண்ணுக்கும்தானே குடுத்தேன்?’’

``எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துடறேன். நீ அண்ணன் வீட்டுக்குப் போயிடு. உன்னைக் கொண்டுபோய் விட்டுடறேன். என்னால உன்னை வச்சுக்கிட்டுப் பட முடியல. உனக்குச் செய்ய முடியல...’’

ஓவென்று அழ ஆரம்பித்தாள் அலமு ஆயா.

``இன்னிக்கு வந்து இப்படிச் சொல்றியேடி... கடைசிக் காலத்துல எனக்குச் செய்வேன்னு நம்பித்தானே எல்லாத்தையும் குடுத்தேன்...?’’

``அதான் எல்லாத்தையும் திருப்பித் தரேன்னு சொல்றேனில்ல..?’’

``நான் உழைச்ச உழைப்பை எப்படித் திருப்பிக் குடும்ப...? ஒண்ணில்ல ரெண்டில்ல... நாப்பத்தஞ்சு அம்பது வருஷண்டி...’’

``அதுக்காக என்னால உனக்குச் செய்ய முடியாது. இப்பதான் ஹோமியோபதி மருந்துல என் உடம்பு கொஞ்சம் குணமாகி தேறிக்கிட்டு வருது. ராப்பகல் இந்த மாதிரி உனக்குச் செஞ்சேன்னு வச்சிக்க... திரும்ப படுத்துடுவேன்.’’

திட்டவட்டமாகச் சொல்லி விட்டு திலகா அறையை விட்டுப் போக, அலமு ஆயா வாய்விட்டு அழுதாள். காதில் விழுந்தும் திலகா கண்டுகொள்ளவே இல்லை. தான் போர்த்திப் போர்த்தி வளர்த்த பேத்தி கல்லூரியிலிருந்து வந்ததும் கூப்பிட்டுச் சொன்னாள் அலமு ஆயா.

``உங்கம்மா என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்றாடி. மாமன் வீட்ல கொண்டுபோய் வுடறேன்றா...’’

``மாமா வீடு என்ன தூரத்துலயா இருக்குது? அடுத்த வீடுதானே ஆயா.’’

``உங்கம்மாவே செய்ய மாட்டேன்னு சொல்லுது. மாமன் எப்படிச் செய்வான்? அவனும் மாட்டேன்னுதானே சொல்லுவான்..?’’

``கேட்டுப் பார்க்கலாம் ஆயா... அம்மாவால் முடியல. இப்பதான் அம்மா கொஞ்சம் நல்லாயிட்டு வராங்க. இதேமாதிரி உனக்குச் செஞ்சாங்கன்னு வச்சிக்க, திரும்ப படுத்துடுவாங்க...’’

கைக்குழந்தையாக வந்த பேத்தி. தான் பார்த்துப் பார்த்துச் செய்த பேத்தி. ஆசை ஆசையாக வளர்த்த பேத்தி. இப்படிச் சொல்வாள் என் அலமு ஆயா எதிர்பார்க்க வில்லை. `நீ ஏன் ஆயா கவலைப் படற? நான் அம்மா கிட்ட பேசறேன். நீ எங்கேயும் போகக் கூடாது. இங்கேதான் இருக்கணும்' என்றுதான் சொல்வாள் என்று எதிர்பார்த்தாள். மாறாக இப்படிச் சொன்னதும் அலமு ஆயாவின் மனது மிகவும் சங்கடப்பட்டது. மனிதர்களின் சுயநலம் அவள் நெஞ்சை அழுத்தியது. இனி எது பேசினாலும் எடுபடாது என்பதால் பேசாமல் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தாள்.

மறுநாளைக்கு மறுநாள் திலகா அண்ணனை வரவழைத்தாள். அவன் தனியாக வராமல் மனைவியோடு வந்திருந்தான். திலகா தன் இயலாமையைத் தெரியப்படுத்தினாள்.

`` அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்ற..?’’ என்று கேட்டான் அவன்.

``நீ கொண்டு போய் வச்சிக்க...’’

``நல்ல கதையாக இருக்குதே... வீடு, வாசல், நகை, பணம்னு எல்லாத்தையும் நீ வாங்கிக் கிட்ட. உடம்பாலயும் செய்துக்கிட்ட... நீதானே வச்சிக்கிடணும்...?’’

``மூத்த பையன் நீ. உன்கிட்டதான் அம்மா இருக்கணும். நியாயமாப் பார்த்தா நீதான் அம்மாவுக்கு எல்லாம் செய்யணும்! அது உன் கடமை!’’

``செய்துக்கிட்டவ நீ செய்யுறவன் நானா...? என்னை என்ன முட்டாள்னு நினைச்சுக் கிட்டியா...?’’

இப்போது அலமு ஆயா இடையில் புகுந்தாள்.

``டேய் சிங்காரம், அவ முடியாதுன்றாடா. நீ கூட்டிக் கிட்டுப் போடா...’’

`` எதுக்காக நான் கூட்டிக்கிட்டுப் போவணும்? நீ எனக்கு என்ன செய்த? வேலை தேடி நான் மலேஷியாவுக்குப் போனபோது டிக்கெட் எடுக்க, ஏஜெண்டுக்குக் குடுக்கப் பணம் தேவைப்படும்னு கேட்டேனில்ல...?’’

சிறுகதை: உதை பந்து

``அப்ப என் கிட்ட ஏதுடா பணம்?’’

``பணமில்ல சரி. கைல வளையல் போட்டுக்கிட்டிருந்தல்ல... அதையாச்சும் குடுன்னுதானே கேட்டேன். குடுத்தியா...?’’

``குடுத்திருந்தா உங்கப்பன் என்னைக் கொன்னே போட்டிருப்பாண்டா...’’

``அந்தக் கதையெல்லாம் வுடாத. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். பொண்ணையும், பேத்தியையும் தூக்கித் தலை மேல வச்சுக்கிட்ட...கட்டுனவன்கூட வாழமாட்டேன்னு ஓடி வந்தவளுக்கு அத்தனையும் செய்த. இப்பப் படு!’’

``நான் ஒண்ணும் வாழமாட்டேன்னு ஓடி வரல. எனக்கு நோய் இருக்குறத மறைச்சுக் கட்டிக் குடுத்தது யார் தப்பு?’’ குறுக்கிட்டுப் பாய்ந்தாள் திலகா.

``அதை ஏன் என் கிட்ட கேக்குற? கட்டிக் குடுத்தவங்களைக் கேளு.’’

``நீ பேசினதால உன்கிட்டதான் கேப்பேன்.’’

``என்கிட்ட நீ கேக்க வேண்டிய அவசியமில்ல.’’

``என்னைப் பத்தி நீயும் பேச வேண்டிய அவசியமில்ல.’’

`` அவகிட்ட சண்டை போடாதடா சிங்காரம்.எனக்குத் தொண்ணூறு வயசாயிடுச்சுடா...இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போறேன்? கடைசிக் காலத்துல வந்து உன் கிட்டயே போயிடறேண்டா...’’

``நீ விருப்பப்பட்டா என்கிட்ட வர்ற? உன் ஆசைப் பொண்ணு உன்னை வச்சுக்க மாட்டேன்றா... அதனா இப்போ இந்த மகன் கண்ணுக்குத் தெரியறான்.’’

``என்னை இப்படிப் பந்தாடாதீங்கடா...ஆளாளுக்குக் காலால உதைச்சுத் தள்ளாதீங்க.கலா, நீயாச்சும் அவனுக்கு எடுத்துச் சொல்லும்மா...’’

``இதப் பாருங்கத்த... என்னை இதுல இழுக்காதீங்க. நான் உங்க வீட்டுக்கு வந்து எத்தனை வருஷமாச்சு... ஒரு நாள்கூட நீங்க என்னை மருமகளாகவும் நடத்தல, மகளாகவும் பாவிக்கல... அன்பா, பிரியமா ஒரு வார்த்தை பேசினதில்ல... இப்ப மட்டும் ஏன் என்னைக் கூப்புட்றீங்க...? நீங்களாச்சு, உங்க மகனாச்சு...’’

`` சரி வா கலா போகலாம்’’ என்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் வெளியேறிய போது,

``சிங்காரம் போகாதடா... என்னைக் கூட்டிக்கிட்டுப் போடா’’ என்று கெஞ்சினாள் கிழவி.

காதில் போட்டுக் கொள்ளாமல் சென்று விட்டான் அவன்.

``அவனும் வச்சுக்க மாட்டேனிட்டான். என்னாலயும் முடியாது. ஒரு நல்ல ஓல்ட் ஏஜ் ஹோமாப் பார்த்து உன்னைக் கொண்டு போய் விட்டுடறேன்’’ என்ற திலகா, கூகுளில் தேடி, சென்னைப் புறநகர்ப் பகுதியில் இருந்த முதியோர் இல்லத்தைத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்ததும் பெருங்குரல் எடுத்து அலமு ஆயா அழ ஆரம்பித்தபோது பக்கத்து விளையாட்டுத் திடலிலிருந்து வந்த ``கோல்’’ சத்தத்தைவிட அவளது அழுகைக்குரல் பெரிதாக ஒலிக்க ஆரம்பித்தது.