Published:Updated:

சிறுகதை: திசை

சிறுகதை: திசை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: திசை

முத்துராசா குமார்

ரை உலர நேரம் கொடுக்காத அளவிற்குக் கார்த்திகைத் தூறல் நிற்காமல் விழுந்தது. செம்பட்டை வண்ண வெள்ளாடு நிறை சினை. எந்த நேரத்தில் ஈனும் என்று தெரியாததால், விமலாவுக்கு ராத்திரி தூக்கம் இல்லை. கண்பட்டைகள் ரொங்கிக் கிடந்தன. தானாகக் குட்டிகளை ஈன்று கிடந்தால் குட்டிகளையும், இளங்கொடியையும் தெருநாய்கள் தின்றுவிடும் என்பதால் இரண்டு நாள்களாக நூறுநாள் வேலைக்கும், அத்தக்கூலி வேலைகளுக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தாள். சினை ஆட்டோடு சேர்த்தால் எப்படியும் பத்து ஆடுகளுக்கு மேல் இருக்கும். எங்கே வேலைக்குப் போனாலும் ஆடுகளுக்குப் பச்சை இல்லாமல் வர மாட்டாள். வேலைகள் இல்லாத நாள்களில் ஆடுகளைக் கண்மாய்கரைப் பக்கம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வாள். அவ்வப்போது ஆடுகளையும், புழுக்கைகளையும் கைமாற்றிவிட்டுதான் பணம் கொடுக்கல் வாங்கலைக் கொஞ்சம் சமாளிப்பாள். மழைத்தண்ணீர் தேங்கி இத்துப்போன ஆட்டுக்கொட்டகை பேனர், கனம் தாங்காமல் உட்புறமாகத் தொங்கியது. அதை அவிழ்த்துவிட்டு வேறு பேனரையெடுத்து இறுக்கிக் கட்டினாள்.

ஊருக்குள் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அடிக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்களை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் பாதிக்குப் பாதி விலைகொடுத்து வாங்கி எப்போதும் கைவசம் வைத்திருப்பாள். ஆட்டுக் கொட்டகைக்கும், விரிசல் ஓடுகளுக்கு மேல் விரிக்கவும், புழுக்கைக் குவியலை மூடவும் பேனர்களைப் பயன்படுத்துவாள். பேனர்கள் அனைத்திலும் சாதித் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் சிரித்தபடி பெரிதாக இருப்பார்கள். சின்னப் பிள்ளையில் இருந்து இளவட்டங்கள், பெருசுகள் வரை அனைவரும் அவர்களுக்குக் கீழே வரிசையாக போஸ் கொடுத்தபடி இருப்பார்கள். அந்தத் தலைவர்களின் முகங்களையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டாள். அவர்கள் யாரென்றுகூட அவளுக்குத் தெரியாது.

ஆடுகளுக்குப் பச்சையை எடுத்துப் போட்டுவிட்டு சினை ஆட்டுக்குப் பக்கத்தில் புது பேனரைப் பரப்பி, கருப்பனை வேண்டிக்கொண்டு தயாராக உட்கார்ந்தாள். தெறித்த டச் ஸ்க்ரீன் போனை விதவிதமான வண்ண ரப்பர் பேண்டுகளால் சுத்தியிருப்பாள். அது எப்போதும் சார்ஜரிலேயேதான் இருக்கும். எழுந்து போய் போனில் மணி பார்த்தாள். மதியம் 12.05 மணி ஆனது. பக்கத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மூன்றாவது படிக்கிறாள் மகள் மாரி.

அம்மா வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கையில் மட்டும் ஒரு மணி போல மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாள். பள்ளியில் வாங்கும் சத்துணவை வீட்டுக்கு எடுத்து வந்து அம்மாவுடன்தான் சாப்பிடுவாள். கஞ்சியைக் குடித்தபடியே மாரியிடம் கதை பேசுவது விமலாவுக்கும் ரொம்பப் பிடிக்கும். காலையிலேயே அரைகுறையாகவும், அவக்காச்சியாகவும் சாப்பிட்டுப்போன மாரியிடம் `பள்ளிக்கொடத்துல சோறு வாங்கிராத. மத்தியானத்துக்குச் சோறு வடிச்சு, வெள்ளப் பூண்டு, அடை மாங்கா, நெய்க்கருவாடு போட்டுக் கொழம்பு வைக்கிறேன். வந்துருத்தா' என்று சொல்லி அனுப்பியது விமலாவுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. சிட்டாக சமைக்கத் தொடங்கினாள்.

சிறுகதை: திசை

சுடுசோற்றின் ஆவி முகத்தில் அடிக்க, வடிதண்ணீர் சீராக ஒழுகியது. சட்டியை நிமிர்த்துகையில் போன் வந்தது. பிடிதுணியில் கையைத் துடைத்துவிட்டு மெதுவாக போனை எடுத்துப் பார்த்தாள். தருமனின் நம்பர். சிரித்தபடியே, போனை வியர்வைக் காதில் வைத்தாள்.

விமலாவின் கணவர் தருமன் சவுதி அரேபியாவுக்குப் போய் இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. எப்படியாவது குடும்பத்தையும், பிள்ளைகுட்டிகளையும் கரையேத்திவிடத் துடிக்கும் ஆட்கள் கடைசியாகப் போய் சரணடைவது பக்கத்து ஊர் சந்திரனிடம்தான். சந்திரனிடம் இரண்டு தவணைகளில் பணத்தையும், சான்றிதழ்களையும் கொடுத்துவிட்டால் போதும், யாரை எந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும், அனுப்புவதில் உள்ள சிக்கல்களைச் சீக்கிரமாக சமாளிப்பது என்று மேற்படி வேலைகள் அனைத்தையும் அவனே பார்த்துக்கொள்வான். அவ்வப்போது பல நாடுகளுக்கும் போய் வருவான். பெரிய பெரிய ஆட்களுக்கு மட்டும்தான் பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் தருவான். கொஞ்சம் சேர்த்து வைத்திருந்த பணத்தோடு வார வட்டிக்கு வாங்கிய பணத்தையும் போட்டு தருமனும், விமலாவும் சந்திரனிடம் கொடுத்தார்கள். சவுதி அரேபியாவில் நரியாஹ் தமம் பகுதியில் பிரமாண்ட ஆட்டுப் பண்ணையில் தருமனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தான். சந்திரனின் நெருங்கிய உறவுக்காரன் மருதனின் பொறுப்பில்தான் அந்தப் பண்ணை இருந்தது.

மாரி இப்போது படிக்கும் தொடக்கப் பள்ளியில்தான் தருமனும், விமலாவும் ஒன்றாகப் படித்தார்கள். இருவரும் சேர்ந்துதான் பள்ளிக்குப் போவார்கள். விளையாடுவார்கள். விமலாவை மூன்றாம் வகுப்பு பாதியிலேயே பள்ளிக்குப் போவதை நிறுத்திய அவள் வீட்டார்கள், பக்கத்திலிருக்கும் குமரன் ஐஸ் பேக்டரிக்கு வேலைக்கு அனுப்பினார்கள். அதன்பிறகு தனியாகவே பள்ளிக்குப் போய்வந்த தருமன், கிடைக்கும் நேரமெல்லாம் பேக்டரிக்குப் போய் விமலாவிடம் சேமியா ஐஸ் வாங்கித் தின்பான். யாருக்கும் தெரியாமல் விமலாவும் பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று கொத்தாக அள்ளி தருமனின் டவுசர் பாக்கெட்டில் திணித்துவிடுவாள். குளிர் தாங்காமல் தவ்வட்டாம் போட்டு நெளியும் தருமனைப் பார்த்துக் கைதட்டிச் சிரிப்பாள் விமலா. தருமன் பத்தாவது தேர்ச்சியாகி பதினொன்றாம் வகுப்பில் அக்ரி குரூப் எடுத்தான். சடங்காகிக் கொஞ்சநாள்கள் வீட்டிலிருந்த விமலாவை, சமயநல்லூர் பஞ்சு மில்லுக்கு வேலைக்கு அனுப்பினார்கள். வீட்டில் எவ்வளவோ சொல்லியும் தருமன் யார் பேச்சையும் கேட்கவில்லை. படிப்பைக் கைவிட்டு விமலா வேலைபார்க்கும் மில்லுக்கே அவனும் வேலைக்குப் போனான். காலப்போக்கில் இருவருக்குள்ளும் வளர்ந்த பேச்சுவார்த்தைகள் இருவீட்டாருக்கும் தெரிந்து கண்டித்தார்கள். ஒவ்வொரு கண்டிப்புக்கும் அதட்டலுக்கும், அடிக்கும் பின்னால், இருவருக்கும் இடையிலான காதல் மிக பலமாகவும், ஆத்மார்த்தமாகவும், பால்யத்தின் அதே ஐஸ் குளிர் குறையாமலும் உருவேறியது. வேறு மாப்பிளை பார்க்கையிலும், வேறு பெண் பார்க்கையிலும் அரளிவிதைகளாலும், தூக்குக் கயிற்றாலும், ஊதுகுழல் சூடுகளாலும் இருவரும் தங்களைச் சுற்றிப் பல வருடங்களாகப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்தனர். பெற்றோர்களே இருவருக்கும் சமாதி கட்டத் துணிந்தபோதுதான், சித்திரைத் திருவிழாவின் பின்னிரவில் தருமனும் விமலாவும் வீட்டை விட்டு வெளியேறினர்.

சமயநல்லூர் மில்லில் வேலை பார்த்த எழுவன்தான் அவன் அண்ணனின் நம்பரைக் கொடுத்துத் திருப்பூருக்கு அனுப்பி வைத்தான். எழுவனின் அண்ணன் வேலை பார்த்த பனியன் கம்பெனியிலேயே இருவரும் துணிகளுக்குப் பிசிர் வெட்டுதல், கை மடித்தல் என்று எல்லா வேலைகளையும் பார்த்தனர். ஒருமாதம் கழித்துத் திருமணம் முடித்துக்கொண்டு கையகல வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார்கள். திருப்பூர் வாழ்க்கையை நெஞ்சுக்கு நெஞ்சு நின்று எதிர்கொண்டார்கள். அந்த வாழ்வு தருமனையும், விமலாவையும் சொந்த மண்ணில் நன்றாக வாழ்ந்து காட்டச் சொல்லி ஊக்கப்படுத்தியது. அதற்கு முன்பே தருமனும் விமலாவும் எங்கே இருக்கிறார்கள் என்று இரு தரப்பு வீட்டாருக்கும் தெரியும். ஆனால், தேடி வரவோ, புகார் செய்யவோ இல்லை.

போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் இருவரது வீட்டிலும் முற்றிலும் தொடர்புகளை அறுத்துக்கொண்டனர். சொந்தக்காரர்கள், வீட்டு விசேஷப் பத்திரிகைகளில் பெயர்களைப் போடுவதை நிறுத்தினர்.

கணவன் மனைவியாக இருவரும் ஊருக்குள் வந்தார்கள். நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். வீட்டார்கள், சொந்தங்கள் எல்லோரும் ஸ்டேஷனில் நிறைந்தார்கள். எதிர்பார்த்த எந்த ரத்தக் கலவரங்களும் நடக்கவில்லை. `இனிமேலு எங்க புள்ளைகளுக்கும் எங்களுக்கும் எந்த ஒறவும் கெடையாது. நாங்க செத்தாக்கூட கொள்ளிக்குடம் ஒடைக்கக் கூடாது. ஒப்பாரிகூட வைக்கக் கூடாது. இத்தோட அறுத்துக் கழுவிட்டோம். நிச்சயமா ரெண்டும் பொசுங்கி பொட்டக் கரையா போயிரும்' என்று எஸ்.ஐ முன்னிலையில் சாபம்விட்டு விடுதலைப் பத்திரத்தில் இரு வீட்டாரும் எழுதிக் கொடுத்தனர். அவர்களிடம் எதுவும் கேட்டு உரிமை கொண்டாடாமல் நீண்ட கண்ணீர் அமைதிக்குப் பிறகு தருமனும் விமலாவும் கையெழுத்து போட்டனர். சண்டை சச்சரவுகள் நடக்காதது எஸ்.ஐ கோதண்டத்திற்குப் பெரிய நிம்மதியானது. `இது ஒண்ணுதான் இருந்துச்சு. பெத்த கடமைக்குத் தரணும்ல' என்று தருமனுக்கு மட்டும் கால் சென்ட் காலி இடத்தை அவனின் அப்பா எழுதிக் கொடுத்தார். வாங்க மறுத்தான் தருமன். `பொண்டாட்டி வந்துருச்சு, புள்ளகுட்டிலாம் பார்க்க வேணாமா. வெட்டி வீராப்ப விட்டுட்டு ஒழுங்கா வாங்குடா மயிரு' என்று எஸ்.ஐதான் பேசிப் புரியவைத்து, தருமனை இடத்தை வாங்க வைத்தார். தருமனும் விமலாவும் ஒரே சாதி. உட்பிரிவுக்குத்தான் இத்தனை பஞ்சாயத்துகள்.

போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் இருவரது வீட்டிலும் முற்றிலும் தொடர்புகளை அறுத்துக்கொண்டனர். சொந்தக்காரர்கள், வீட்டு விசேஷப் பத்திரிகைகளில் பெயர்களைப் போடுவதை நிறுத்தினர். எங்கும் எதற்கும் அழைப்புகள் இல்லை. பில்லர் குழிகள் தோண்டுதல், கட்டட வேலைகள், வயக்காட்டு வேலைகள் என்று கிடைத்த வேலைகளுக்குப் போய் காலி இடத்தில் செம்மண் வீட்டை எழுப்பி ஓட்டுத் தாழ்வாரத்தை இறக்கினான் தருமன். வெளியுலகம் அறியாத விமலா கொஞ்சம் ஆடுகளை வாங்கி தருமனுக்கு ஒத்தாசையாக இருந்தாள். ஊருக்குள் இருந்தாலும் பெற்றவர்கள் ஒதுக்கி வைத்த பெரும் தனிமைக்குள் இருவரும் ஆழ்ந்தார்கள். உலகத்தின் உக்கிர தண்டனையை அனுபவிப்பதைப் போன்ற உணர்வு. `இப்படி சாபம் விட்டு, நம்மள ஒதுக்கிவச்சு வதைக்கிறதுக்கு பதிலா, ஒரே அடியா கொன்னு போட்டுருக்கலாம். அப்பயாவது கொஞ்ச நேரந்தான் வலிச்சிருக்கும்' என்று வாழ்க்கையை வெறுத்து அவள் அழுகையில், `நான் இருக்கேன்ல. உன்ன நான் விட்ருவேனா. நாம நல்லா வருவோம் பாரு' என்று தருமன்தான் அவளை நெஞ்சில் தாங்கி தைரியம் கொடுப்பான். ஒருபோதும் எந்தக் கஷ்டத்தையும் விமலாவிடம் வெளிக்காட்டவே மாட்டான். மாரி பிறந்து வளர வளர தருமனுக்குப் பெரும் பயம் உள்ளுக்குள் தொற்றியது. `மாரிய நல்லாப் படிக்க வைக்கணும். வீடு கட்டணும். எல்லாரு கண்ணும் நாம சீரழிஞ்சிபோறதப் பார்க்கத் துடிக்குது. எவன் காலையும் அண்டி வாழ்ந்துறக் கூடாது விமலா. வாழ்ந்து காட்டுறதுதான் எல்லாத்துக்கும், எல்லாருக்கும் பெரிய பதிலா இருக்கும். வெளிநாட்டுப்பக்கம் போயிட்டு கையில கொஞ்சம் காசு பணம் சேர்த்துட்டு வாரலாம்னு இருக்கேன்' என்றான்.

`எதுக்கு எங்கயோ போறேன்னு சொல்ற நீயி. அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம். ரெண்டு பேரும் சேர்ந்து இங்கயே வங்காச்சியா ஒழைச்சு புள்ளைய ஆளாக்குவோம். ஆயிரம் நொம்பலம் இருந்தாலும் நீ என் கண்ணு முன்னாடி இருந்தாலே போதும். தனியா விட்டு எங்கயும் போகாத' என்று பதற்றமானாள் விமலா. `எல்லாம் கொஞ்சகாலம்தான் விமலா, கஷ்டத்தப் பார்த்தா பொழைக்க முடியாதும்மா' என்று அவளை ஒருவாறு சம்மதிக்க வைத்தான்.

ரெண்டு நாளைக்கு ஒருமுறை பேசும் தருமன், சவுதியில் அந்த ஆட்டுப்பண்ணையில் தான் நடத்தப்படும் விதத்தையும், அனுபவிக்கும் வலிகளையும் ஒருநாளும் விமலாவிடம் சொன்னதே கிடையாது. மகளிடமும் மனைவியிடமும் பேசுவது மட்டுந்தான் அவனுக்குச் சிறந்த வலி நிவாரணி. ஊரில் சந்திரன் சொல்லி அனுப்பியது ஒன்றாக இருந்தது, அங்கு நடப்பது வேறொன்றாக இருந்தது. பத்தாயிரத்துக்கும் குறைவான வருமானம்தான் கிடைத்தது. மீதியை ஊருக்குப் போகும்போது தருகிறோம் என்று எடுத்து வைத்துக்கொண்டார்கள். ஊருக்குக் கிளம்பினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடுமென நினைத்து, கிடைக்கிற காசுகளை மிச்சம் வைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பான்.

சிறுகதை: திசை

இத்தனை வருடத்தில் ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து சென்றான். அப்போது விமலாவுக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக்சொல்லிக் கொடுத்தான். அவன் போகும்போது காலண்டர் பேப்பரில் எழுதிக் கொடுத்த ஏ.டி.எம் பாஸ்வேர்டை இன்னும் அப்படியே வைத்திருக்கிறாள். அனுப்பிய பணத்தில் வட்டி போக, அசலிலும் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்தது. அவளது வருமானத்திலும் மிச்சம் பிடித்து மாரிக்கும் தனியாகப் பணம் சேர்த்தபடி வந்தாள். `அதான் புருஷங்காரன் வெளிநாட்டுல ஒழைச்சு பணம் அனுப்புறான். இவளும் பம்பரமா வேலை பார்த்துக் காசு பாக்குறா பாரு' என்று ஜாடை பேசுவார்கள். வெளியிலிருந்து பார்த்தால் புருஷன் நினைப்பு இல்லாமல் இருக்கிறாள் என்பது போன்றுதான் இருக்கும். தனியாக ஆடு மேய்க்கையிலும், வேலைகளுக்கு நடுவிலும் தருமனை நினைத்து வரும் கண்ணீர் துடைக்கத் துடைக்கத் தானாகப் பொங்கியபடி இருக்கும்.

`ஹலோ, என்னங்க...?' என்று பிரியத்துடன் விமலா பேசத் தொடங்கும்போதே எதிர்முனையில் கூட்டத்தின் சத்தம் கேட்டது. `என்னங்க... என்னங்க' என்று விமலா ஓங்கிக் கேட்டாள். பலரின் குரல்களைத் தாண்டி இறுதியாக ஒருவரின் கையில் சேர்ந்தது தருமனின் போன். `இங்க, முகமது சுல்தான் ரோட்ல தருமனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு, உயிர் பிரிஞ்சுருச்சு...' என்று அவர் விவரங்களைச் சொல்லும்போதே விமலாவுக்கு நாக்குக் குளறி பேச்சு நின்றது. உயிருடன் இருக்கும்போதே மரணமும், பைத்தியமும் உடல் முழுக்க அசுர வேகத்தில் பரவுவதை உணர்ந்தாள். கண்கள் நிலைக்குத்திக் கீழே விழுந்தாள். போன் தரையில் விழுந்தது.

எல்லோரும் வீட்டுக்குள் வந்தவுடனேயே பதறிப்போய் விமலாவைத் தூக்கி வெளியே கொண்டுவந்து நைலான் கயிற்றுக் கட்டிலில் படுக்கவைத்தார்கள். மூச்சு இருந்தது. இளந்தாரி ஒருவன் போனை எடுத்து சரிபார்த்து ஆன் செய்தான்.

வீட்டுக்கு வந்தாள் மாரி. தருமனைப் போன்ற சுத்தக் கறுப்பு நிறத்தில் நான்கு குட்டிகளை வெளியே முக்கித் தள்ளிவிட்டு காலி வயிற்றோடு முனகியது தாய் ஆடு. பிசுபிசுப்புடன் தரையில் விழுகவும், நிற்கவுமாக இருந்தன குட்டிகள். சந்தோசத்தில் `யம்மா... அம்மோவ்...' என்று வீட்டுக்குள் வந்து பார்த்தாள். மயங்கி மல்லாந்து கிடந்த அம்மாவைப் பார்த்து, மேலே விழுந்து உசுப்பினாள். அசைவே இல்லை. கத்திக் கதறி வெளியே வந்தாள். எல்லோரும் வேலைக்குப் போய்விட்டதால் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. பஞ்சாயத்து போர்டு எலெக்‌ஷன் இம்மாதக் கடைசியில் நடக்கப்போவதாக திடீர் அறிவிப்பு வந்ததால் டீக்கடையில் பெரியவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மாரி ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே டீக்கடை நோக்கி ஓடிவருவதைப் பார்த்த பெரியவர்கள், என்னவென்று விசாரித்தார்கள். அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. வீட்டை நோக்கிக் கையால் சைகை காட்டினாள்.

எல்லோரும் வீட்டுக்குள் வந்தவுடனேயே பதறிப்போய் விமலாவைத் தூக்கி வெளியே கொண்டுவந்து நைலான் கயிற்றுக்கட்டிலில் படுக்கவைத்தார்கள். மூச்சு இருந்தது. இளந்தாரி ஒருவன் போனை எடுத்து சரிபார்த்து ஆன் செய்தான். விமலாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். சவமாய்க் கிடந்தாள். கரண்டியில் பட்டமிளகாய்கள், கடுகுகள், பெரிய உப்புக்கற்களைப் போட்டு எரித்து காரநெடிப் புகையை விமலாவை சுவாசிக்க வைத்தார்கள். கொஞ்சநேரம் கழித்து இருமியபடியே கண்விழித்தாள்.

மாரியைக் கட்டிபிடித்தபடி ஓவென ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள் விமலா. `என் சாமி என்ன விட்டுப் போயிருச்சே. எம் புள்ள அப்பன் இல்லாத புள்ளையா ஆயிருச்சே. எங்களுக்குன்னு இனி யாரு இருக்கா? எங்கள காப்பாத்த ஏழு கடலு, ஏழு மலை தாண்டிப் போனியே சாமி. இப்ப எந்த தெசையில காணாப்பொணமா மடிஞ்சு கெடக்கையோ தரும ராசா? வாடி மகளே இப்பயே நாம மாண்டுருவோம்...' என்று சுவாசிக்க முடியாதபடி நெஞ்சில் அடித்து அடித்து, மாரியின் மடியில் விழுந்து அழுது மருகினாள். மாரியின் அழுகையும் விமலாவின் அழுகையும் ஊரையே அதிர வைத்தது.

`என்ன நடந்துச்சுன்னு, வெவரமா சொல்லுத்தா' என்று பெரியவர்கள் அனைவரும் அதட்டுகையில் சவுதியிலிருந்து போன் வந்தது. கூட்டத்தில் ஒருவர் நிதானமாக எடுத்துப் பேசினார். சாலையில் ஓரமாக நடந்துபோன தருமன்மீது அதிக வேகத்தில் வந்த வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே தருமன் இறந்த விஷயத்தைச் சொன்னார்கள். மற்ற தகவல்களைக் கொஞ்சநேரத்தில் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர். தருமனின் இறப்பு உறுதியானதும் தரையில் முட்டி முட்டி ஆங்காரம் எடுத்தாள் விமலா. கண்டந்துண்டமாக வெட்டப்படும் விலங்குபோலத் துடிதுடித்தாள். நாலாபுறமும் தருமனைத் தேடித் தேடிக் கூப்பிட்டுப் பாய்ந்தாள். சித்தம் கலங்கியதுபோல `பா... பா' என அனத்திச் சுருண்டாள் மாரி.

சவுதி அரேபியாவில் தருமன் இறந்த விஷயம் ஊருக்குள் பரவியதால் அனைவரும் தருமன் வீட்டு முன்பு கூடத் தொடங்கினர். அடுத்து என்ன செய்யலாம் என்று சந்திரனைப் பார்க்க சிலர் போனார்கள். `நீங்க முன்னாடி போங்க, நான் வாரேன்' என்று அவர்களை அனுப்பிவிட்டு, சவுதியில் இருக்கும் பண்ணையில் விசாரித்துவிட்டு, தூதரக அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் பேசினான். பிறகு, மருதனிடம் பார்மாலிட்டிஸை உடனடியாக முடிக்கச் சொல்லி, சவுதி அரசு தரும் இரண்டு லட்சம் இழப்பீட்டுத் தொகையை வாங்கிவிட்டு, சடலத்தைப் பண்ணை இடத்திலேயே பத்திரப்படுத்தச் சொன்னான்.

`அதுகள யாரோ எவரோன்னு ஆக்கி விட்டாச்சு. நாங்க எதுக்கு வரணும். கண்ட ஓடுகாலி நாயிக செத்துப்போச்சுனா எங்க வீட்டுல ஒண்ணும் கேதம் இல்ல. போயி ஒங்க சோலியப் பாருங்க' என்று, சமரசம் பேசப் போனவர்களைத் தூற்றிவிட்டு தருமனின் வீட்டாரும், விமலாவின் வீட்டாரும் அவரவரின் பூட்டிய கதவுகளைத் திறக்காமல் உள்ளுக்குள்ளேயே இருந்தனர்.

இரவானது. கிழவிகளும், பெண்களும் விமலாவைச் சூழ்ந்து ஒப்பாரி வைத்தனர். பக்கத்துவீட்டு ராக்காயி கிழவி மாரிக்கு இட்லிகளை ஊட்ட முயன்றாள். செத்தை சருகாய்க் கிடந்தாள் மாரி. சடலத்தைத் தமிழ்நாடு கொண்டு செல்ல ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகம் கொடுத்த தடையில்லாச் சான்றிதழ் விஷயம், அந்த அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகை, சடலத்தை வாங்கிவிட்ட விஷயம் என்று எதையும் யாரிடமும் சொல்லாமல் மறைத்தான் சந்திரன். `ரெண்டு லட்சம் கொடுத்தா, தருமனோட பாடிய உடனே கொண்டு வர ரெடி பண்ணலாம்' என்றான். புதிதாய்ப் பணிக்கு வந்த சரக எஸ்.ஐயும் அவனுடன் வந்திருந்தார். அவன் பேசிய எதுவும் விமலாவின் காதில் விழவே இல்லை.

`இப்படிப் பாதியிலேயே செத்துப்போகத்தான் தன் கணவன் அங்கே போனானா?அகாலமாய் சாகும்போது என்ன நினைத்தானோ? எப்படித் துடித்தானோ? உயிரற்ற அவனது காய உடல் எப்படிக் கிடக்கிறதோ? ஏதோவொரு தேசத்தில் பிணமான அவனை இப்போதே எப்படி தொட்டு அழுவது? அவனை இப்போதே எப்படி குளிப்பாட்டி ராசாவாக அலங்கரித்து மாலைகள் இடுவது?' என்று தருமனுக்குள் போய் அவனையே குடைந்து, அவனது நினைவுகளையும், வாசனையையும், துணிமணிகளையும் நாற்காலியில் சடலமாய் வைத்துப் புலம்பி சிதையத் தொடங்கினாள். அவளைத் தேற்ற முடியாமல் அனைவரும் பின்வாங்கினர்.

கணவன் தருமன் இல்லாத விடியலை விமலாவும், அப்பா தருமன் இல்லாத விடியலை மாரியும் சுயநினைவற்று எதிர்கொண்டனர். `கைம்பொண்டாட்டியா நிக்கிற அந்தப்புள்ள, இப்ப இவ்ளோ பணத்துக்கு என்னப்பா பண்ணும். ஏதாவது பார்த்துப் பண்ணுப்பா' என்று சந்திரனிடம் பெரியவர்கள் கேட்டனர். `பணத்த கொடுத்தா கொண்டு வந்துரலாம்னு சொல்லிட்டேன். இதுல நானா என்ன பண்ண முடியும் சொல்லுங்க' என்றான். `வெவரம் தெரியாத அந்தப் புள்ளைக்கு இருந்த ஒரே தொணை தருமன் மட்டுந்தான். இப்ப அவனும் இல்லாமப்போயிட்டான். பொட்டப்புள்ளையோட அது என்ன பண்ணும் சொல்லு. தருமனோட மூஞ்சியவாவது பார்த்து அழுதாதான் அந்தப்புள்ள கொஞ்சமாவது தெளிச்சியாகும்பா' என்று பெரியவர்கள் சந்திரனிடம் தாழ்ந்து பேசினார்கள்.

`நாமதான் பவர்ல வரப்போறோம். நம்ம சனத்துக்கு நான் நல்லது பண்ணலைன்னா வேற யாரு பண்ண முடியும். எப்படியும் தருமன நான் கொண்டுவந்து சேக்குறேன்மா’ என்று சொல்லி மனுவில் கையெழுத்து வாங்கினர்.

`சரி, பெருசுங்க இவ்ளோ கேட்டுக்கிறதனால ஒண்ணு செய்றேன். ரெண்டு லட்சத்த விமலா பேருல வட்டிக்கு எழுதிக்கிறேன். எல்லாம் முடிஞ்ச உடனே அசலைக் கொடுக்கச் சொல்லுங்க. இல்லைன்னா மாச வட்டியக் கொடுக்கச் சொல்லுங்க. இப்பயே எழுதித் தாரேன். ரெண்டு மூணு ஆளுக சாட்சிக் கையெழுத்து போடுங்க' என்றான் சந்திரன். 'பீக்குள்ள கெடக்குற காசக் கூட கழுவித் திங்குற பய, எழவு வீட்டுல கொஞ்சமாவது எரக்க மனசா பேசுறனான்னு பாரு. இவனெல்லாம் புழுத்துப் போய்த்தான் சாவான்' என்று சந்திரனை மனதுக்குள் பொருமியபடியே, அவனது பேச்சுக்குப் பெரியவர்கள் கட்டுப்பட்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு மெம்பர் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் ஒருவர் பின் ஒருவராக அவர்களது ஆதரவாளர்களோடும், மீடியாக்காரர்களோடும் இழவு வீட்டிற்கு வரத் தொடங்கினர். அதற்கு முன்பு, அனைவரும் சந்திரனை மறைமுகமாகப் போய்ப் பார்த்து, பணமாகவும், பொருளாகவும் அவனைத் தனித்தனியாக கவனித்துவிட்டனர். `தருமனோட பாடிய எலெக்‌ஷன் முடிஞ்சு கொண்டு வந்தாப் போதும்' என்று அவர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு, சந்திரன் சரி என்று உறுதி சொல்லியதற்குத்தான் இவ்வளவு கவனிப்புகளும். திட்டமிட்ட கணக்கைவிட இப்படி எக்குத்தப்பாகப் பணம் குவிவதை அவனே எதிர்பார்க்கவில்லை.

தருமனின் படத்தோடு அவர்களது பெயர்களையும் போட்டு, ஊரில் பெரும்பான்மைச் சாதியாக இருக்கும் தருமன், விமலா வீட்டுத் தெருக்களிலும், ஊர் முச்சந்திகளிலும் பேனர் வைக்க ஆரம்பித்தனர்.

`அனுப்புநர்:

த.விமலா

w/o தருமன்

1/177 கீத்தெரு

பராக்கிரம பாண்டியபுரம்

வாடிப்பட்டி ஒன்றியம்

மதுரை மாவட்டம்.

பெறுநர்:

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்

மதுரை

மதுரை மாவட்டம்.

பொருள்:

வெளிநாட்டிலிருந்து சடலத்தைத் தமிழ்நாட்டுக்கு எடுத்து வர வேண்டிய தொடர்பாக...

அய்யா,

நான் மேற்கண்ட விலாசத்தில் என் குழந்தையுடன் வசித்துவருகிறேன். என் கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவந்தார். எதிர்பாராத விதமாக 2.12.2019 அன்று மதியம் வாகன விபத்தில் அங்கு இறந்துவிட்டார். அவரின் சடலத்திற்கு எங்கள் குலவழக்கப்படி ஈமச்சடங்குகள் செய்துமுடிக்க வேண்டும். என் கணவரின் உடலை எங்கள் இல்லத்திற்கு எடுத்துவர முடியாமல் என் குழந்தையுடன் தவித்துவருகிறேன். எனவே கனம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு என் கணவரின் உடலை எனது இல்லத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாள் : 03.12.2019

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை

இப்படிக்கு

------------------' என்று

இந்த மனுவும், Embassy of India, Riyadh என்று முத்திரை பொறிக்கப்பட்டு ஆங்கிலமும், அரேபிய மொழியிலும் இருக்கும் சில பிரின்ட் அவுட்களும், நகல்களும் வந்திருந்த அனைவரது கைகளிலும் இருந்தன. `நாமதான் பவர்ல வரப்போறோம். நம்ம சனத்துக்கு நான் நல்லது பண்ணலைன்னா வேற யாரு பண்ண முடியும். எப்படியும் தருமன நான் கொண்டுவந்து சேக்குறேன்மா' என்று சொல்லி மனுவில் கையெழுத்து வாங்கினர். கைகள் நடுங்க ஒவ்வொரு எழுத்துக்கும் அதிக இடைவெளி விட்டு கோணலாகப் போடும் `வி ம லா' என்ற கையெழுத்துகள், அவளது விரல்களைப் பிடித்து தருமன் சொல்லிக்கொடுத்தது. சிதிலமாகக் கிடக்கும் விமலா, மாரியுடன் போட்டோ எடுத்துக்கொண்டு அவற்றை வாட்ஸப்புகளில் பரவவிட்டனர். தருமனின் சாவை வைத்தே ஓட்டு கேட்டனர். எரிந்த பொம்மைகளாகக் கிடக்கும் விமலாவையும், மாரியையும் போட்டி போட்டுக்கொண்டு தெருத்தெருவாகக் கூடவே கூடிச்சென்றனர்.

சிறுகதை: திசை

25 நாள்களுக்குமேல் ஓடிவிட்டன.

தேர்தலும் முடிந்துவிட்டது. ஊர்ச் சுவர்களில் வரைந்த சின்னங்கள் மழைக்குக் கரைவதைப் போல, செய்திகளாகவே செத்துப்போன தருமனும் எல்லோரது நினைவுகளிலிருந்தும் மங்கத் தொடங்கினான். அக்கம் பக்கத்தினர் வீட்டில் வைத்துவிட்டுப் போகும் சாப்பாட்டைக் கொஞ்சமாகச் சாப்பிடத் தொடங்கினாள் விமலா. அதுவும் மாரிக்காக. மகளுக்கும் கொஞ்சம் ஊட்டி விட்டாள். விமலா பக்கத்தில் ஆறுதலாக இருந்த பெண்களும் நாள்கள் ஓட அன்றாடப் பிழைப்புகளுக்குக் கிளம்பினர். தருமன் படுத்திருக்கும் திசையை நோக்கி மாரியுடன் நடந்தால் எத்தனை நாள்களில் அவனைப் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணம் மட்டும்தான் உயிர் இருந்தும் பிரேதமாகக் கிடக்கும் விமலாவின் மண்டைக்குள் ஓடியது.

விமலா, மாரியின் கண்ணீர் ஊற்றுகள் சுண்ணாம்பு வைத்துப் பொசுக்கியது போலானது. மட்ட மத்தியானத்தில், வீட்டின் முன்பு போடப்பட்ட மொட்டக் கொட்டகைக்குள் மெதுவாக வந்து நின்றது ஆம்புலன்ஸ். ஆம்புலன்ஸ் வருவதைப் பார்த்து டீக்கடையில் இருந்தவர்கள் பின்னாலேயே வந்தனர். வண்டிக்குள் இருந்து சந்திரனும் வேறு சிலரும் இறங்கினர். ஐஸ் பெட்டியைத் தூக்கி வீட்டுக்குள் நுழைக்க முடியாமல் ஒருபக்கமாகச் சாய்த்தவாறு நுழைத்தனர். பெட்டியைப் பார்த்த மாரி மிச்சமிருந்த சத்தைத் திரட்டி `பா...' என ஒரேயொரு சத்தம் மட்டும்தான் கொடுத்தாள். அவளைக் கால்களோடு கட்டிக்கொண்டனர். தள்ளாடி எழுந்த விமலா கண்ணாடிப் பெட்டியை உடைத்து உள்ளே போக முயன்றாள். கண்ணாடியைத் திறந்தார்கள், அவன் மேலே படுக்க உள்ளே விழுந்தவளைத் தடுத்து இழுத்தார்கள். ஒரு பேச்சற்றவளைப்போல கூர் மழுங்கிய சத்தங்களை எழுப்பிக்கொண்டே மனிதத் தடுப்புகளை உடைத்தெறியச் சுழன்றாள்.

கரன்ட் இல்லாததால் பெட்டிக்குள் வைக்க ஐஸ் கட்டிகளை வாங்கிவரச் சொல்லி வண்டியில் ஆள் அனுப்பினர். அனைவரையும் சரித்துவிட்டு வெளியே வேகமாக ஓடிய விமலா, அவிழ்ந்த சீலை ரோட்டில் இழுபட நேராக ஐஸ் பேக்டரிக்குள் நுழைந்து, கைகள் தளும்ப சேமியா ஐஸ், பால் ஐஸ்களை அள்ளிக்கொண்டு தருமனிடம் ஓடி வந்தாள்.