
சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து பிரிந்து உள்ளே சென்ற சாலையில் பைக்கைத் திருப்பினேன்.
தூரத்திலிருந்து கடல் அலைகளின் சத்தம் மெதுவாகக் கேட்டது. உள்ளே செல்லச் செல்ல… அலைச் சத்தம் அதிகமானது. மாலை வானம் வேகமாக இருட்ட ஆரம்பித்திருந்தது. கடைசியாக இருந்த அந்தப் பண்ணை வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினேன்.
கேட் லேசாகத் திறந்திருந்தது. வாட்ச்மேன் இல்லையோ? உள்ளே போர்ட்டிகோவில், நடிகர் வினோத்குமாரின் கார் இருந்தது. பங்களாவின் மாடியில் ஓர் அறையிலும், கீழே ஹாலிலும் மட்டும் லைட் வெளிச்சம் தெரிந்தது. கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன். வீட்டுக்கு முன்புறமிருந்த தென்னந்தோப்பி லிருந்து, காற்றில் தென்னங்கீற்றுகள் சலசலக்கும் சத்தம் கேட்டது.
படிகளில் ஏறினேன். லேசாகத் திறந்திருந்த கதவிடுக்கு வழியாக வெளிச்சம் ஒரு கோடாக வெளியில் தெரிந்தது. மெதுவாக கதவைத் தள்ளிப் பார்த்தேன். உள்ளே டி.வி-யில், 90களில் வினோத்தின் சூப்பர்ஹிட் படமான `காதல் காற்று’ ஓடிக்கொண்டிருந்தது. க்ளைமாக்ஸ் காட்சி. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கதாநாயகியை, வினோத் ஆற்று நீரில் குதித்துத் தேடுகிறான். வினோத் சோபாவில் அமர்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். எதிரேயிருந்த டீப்பாயில், மார்ஃபெஸ் ஃபுல் பிராந்தி பாட்டில் பாதி குறைந்திருந்தது.
“சார்…” என்றேன். “யாரு?” என்று திரும்பிய வினோத்தின் முகத்தில் அடர்த்தியான தாடி. டை அடிக்காமல் தலைமுடியும் தாடியும் நன்கு நரைத்துப்போய்த் தெரிந்தன. வினோத்தை நான் கடைசியாகப் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலிருக்கும். டை அடிக்காமல், இந்த வெள்ளைக் கோலத்தில் இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.
என்னைப் பார்த்தவுடன் வினோத் உற்சாகமாக, “ரைட்டர் சார்… வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்’’ என்று எழுந்து வந்து என்னை அணைத்துக்கொண்டான். “கம்… கம் ரவீந்தர்” என்று என் இடுப்பை அணைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தான். “ஒன் மினிட்… படம் முடியப் போவுது” என்று டி.வி-யைப் பார்த்த வினோத்தை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.
அவன் அப்போதுதான் முதன்முதலாக அந்தப் படத்தைப் பார்ப்பதுபோல் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். டிவிடியில்தான் பார்க்கிறான். டீப்பாயில் அவன் நடித்த நான்கைந்து பழைய படங்களின் டிவிடிகள். சுவரில் அவன் இளமையாக இருந்த காலத்தில், ஒரு பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் பெரிதாக ஃபிரேம் செய்யப்பட்டு மாட்டியிருந்தது. மர அலமாரியில் வரிசையாக அவன் வாங்கிய விருதுகள். ஃபிலிம்பேரின் ‘தி பிளாக் லேடி’ ட்ராஃபிகளை எண்ணினேன். ஆறு ஃபிலிம்பேர் விருது வாங்கியிருக்கிறானா... சுவரில் ‘காதல் காற்று’ படத்துக்காக, ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவிடம் சிறந்த நடிகருக்கான விருது வாங்கியபோது எடுத்த புகைப்படம். அருகில் அவன் மனைவி பவித்ராவுடனும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகனுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

“மேடம் இல்லையா சார்?”
‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டியபடி சீரியசாக டி.வி-யைப் பார்த்துக்கொண்டிருந்த வினோத்தை உற்றுப் பார்த்தேன்.
கமல்-ரஜினி உச்சத்தைத் தொட்ட பிறகு, விஜய்-அஜித் மேலேழுந்து வருவதற்கு இடைப்பட்ட காலத்தில், 1990களில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் ஹீரோவாக இருந்தவன். சினிமா பின்புலம் ஏதுமின்றி, வறுமையான பின்னணியிலிருந்து நடிக்க வந்து, முதல் படம், `காதல் காற்று’ தாறுமாறாக ஓட, 20 வருடங்களில் 80க்கும் மேற்பட்ட படங்கள் என்று கோடம்பாக்கத்தில் வினோத்தின் கொடி வெற்றிகரமாகப் பறந்தது. மெள்ள மெள்ள அடுத்த தலைமுறை வந்தபோது, பத்துப் படங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஃபெயிலியராகி வீட்டில் உட்கார்ந்துவிட்டான். அண்ணன், வில்லன் கேரக்டர்களில், கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்கவைக்கத் தயாராக இருந்தனர். ஆனால், `நடித்தால் ஹீரோதான்’ என்று பிடிவாதமாக திரையுலகிலிருந்து ஒதுங்கினான். இரண்டாண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, அவன் ஹீரோவாக நடிக்க… தொடர்ந்து நான்கு சொந்தப் படங்கள் எடுத்தான். நான்கும் அட்டர் ஃப்ளாப்பாகி, சென்னை, தி.நகரிலிருந்த இரண்டு பங்களாக்கள், ராயப்பேட்டையிலிருந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், திருமண மண்டபம், தியேட்டர் என அனைத்தையும் இழந்தான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தனது கோத்தகிரி டீ எஸ்டேட்டை விற்று, சொந்தப் படம் எடுத்தபோது என்னை அழைத்தான்.
நான் அப்போது ஒரு பிரபல இயக்குநரிடம் அசோசியேட்டாக இருந்துவிட்டு, 32 வயதில் தனியாகப் படம் இயக்குவதற்காக அலைந்துகொண்டிருந்தேன். நடுவில் பல படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனத்தில் பங்களித்துக்கொண்டிருந்தேன். இவையில்லாமல் பிரபல வார இதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதுவேன். பெரும்பாலும் காதல் கதைகள். எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் படித்துவிட்டு வினோத் கூப்பிட்டனுப்பினான். நான் சொன்ன நடுத்தர வயதுக் காதலைச் சொல்லும், `தீராக்காதல்’ கதை பிடித்துப் போக… அவன் மனைவியின் எதிர்ப்பை மீறி, மீண்டும் சொந்தப் படம் எடுக்க இறங்கினான். ஷூட்டிங்வரை பணத்துக்குப் பிரச்னையில்லாமல் இருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷனை முடிப்பதற்குள் திணறி, ஃபைனான்சியர்கள் அவனது முந்தைய படத் தோல்விகளால் பணம் தர மறுக்க… குடியிருக்கும் இந்த ஈசிஆர் பண்ணை வீட்டையும் அடமானம்வைத்துப் பணம் திரட்டி, போஸ்ட் புரொடக்ஷனை முடித்தான். ஆனால், திரையிடுவதற்கு யாரும் முன்வராததால், மூன்று வருடங்களாக அப்படியே கிடக்கிறது.
``அன்னைக்கி நல்லா குடிச்சிருந்தேன். அந்த புரொட்யூசரை வாசல்வரைக்கும் துரத்தித் துரத்தி அடிச்சேன். அன்னைலேருந்துதான் என் வொயிஃப்கூட சண்டை ஆரம்பிச்சுது.''
வினோத் எனக்குப் பேசிய சம்பளத்தில், ஒரு லட்சம் ரூபாய் பாக்கியிருக்கிறது. எனது கடைசித் தம்பிக்கு, பொறியியல் கவுன்சலிங் முடிந்து, ஒரு நல்ல கல்லூரியில் ட்ரிபிள் ஈ கிடைத்திருக்கிறது. ஹாஸ்டல் ஃபீஸோடு சேர்த்து இரண்டு லட்சம் கட்ட வேண்டும். கையில் சுத்தமாகப் பணம் இல்லை. நான் பணியாற்றிய பழைய திரைப்படங்களில் பாக்கி வைத்திருப்பவர்களை இன்று துரத்தி, துரத்தி, கெஞ்சிக் கூத்தாடியதில் ஒரு லட்சம்தான் தேற்ற முடிந்தது. வினோத் ஒரு லட்சம் தர வேண்டியது ஞாபகத்துக்கு வர… வினோத்தின் அலுவலகத்துக்குப் போனேன். வினோத்தின் அலுவலகம் மூடப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகிவிட்டன என்றார்கள். வீட்டை விசாரித்து வந்து சேர்வதற்குள் இருட்டிவிட்டது.
குடித்தபடி படம் பார்த்துக்கொண்டிருந்த வினோத்தின் முகம், மிகவும் உணர்ச்சிகரமாக மாறிவிட்டிருந்தது. க்ளைமாக்ஸில் அவனுடைய அற்புதமான நடிப்பைப் பார்க்கப் பார்க்க… வினோத்தின் முகம் ஒளிமயமாக மாறிவிட்டது. உண்மையில் வினோத் அப்போது படத்தைப் பார்க்க
வில்லை. அவன் வெற்றியில் மிதந்த, அந்த இறந்தகாலத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தான். இறந்தகால நிழல்கள் எப்போதுமே குளிர்ச்சி மிகுந்தவை.
இறந்துவிட்ட காதலியை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்த வினோத்தின் முகம் க்ளோஸ் அப்பில் காண்பிக்கப்பட… படம் முடிந்தது. பாஸ் செய்து, படத்தை நிறுத்திய வினோத் எழுந்தான். மெள்ள நடந்து டி.வியை நோக்கிச் சென்றான். திரையில் தெரிந்த அவன் முகத்துக்கு முத்தம் கொடுத்தான். “நடிகன்டா நீ…” என்ற வினோத்தின் குரலில் நிறைபோதை ததும்பி வழிந்தது. தன்னைத் தானே பாராட்டிக்கொண்டிருந்த வினோத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
தோற்றுப்போன ஒரு கலைஞனின் வாழ்க்கை மிகவும் சாபகரமானது. அவர்கள், தாங்கள் வெளிச்சத்தில் வாழ்ந்த நாள்களிலிருந்து வெளியே வருவதே இல்லை. நிகழ்கால உலகம் அந்த வெளிச்சத்தைத் தர மறுக்கும்போது, அவர்கள் கடந்தகாலத்தின் வெளிச்சத்துக்குள் பதுங்கிக்கொள்கிறார்கள்.
திரும்பி என்னைப் பார்த்த வினோத், “விக்டர் இதுக்குப் பிறகு இந்த மாதிரி படம் பண்ணவே இல்லைல்ல?” என்றான். வினோத் ‘காதல் காற்று’ படத்தின் டைரக்டரைச் சொல்கிறான். இந்தப் படத்துக்காக விக்டருக்கு, `சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது’ கிடைத்தது.
“ஆமாம் சார்… ஒரு கலைஞனுக்கு, ஒரே ஒரு மாஸ்டர்பீஸ்தான் இருக்க முடியும். மகேந்திரன், ‘உதிரிப்பூக்கள்’ல தொட்ட உச்சத்தை மறுபடியும் அவரால தொடவே முடியலை. தி.ஜானகிராமன் ‘மோகமுள்’ளுல தொட்ட உச்சத்தை மறுபடியும் தொடவே இல்லை. கியுசெப்பேக்கு (Giuseppe) ‘சினிமா பாரடைஸோ’தான் பெஸ்ட். பாரதிராஜாவுக்கு ஒரு `முதல் மரியாதை’தான். மணிரத்னத்துக்கு ஒரு `நாயகன்’தான்...”
“அஃப்கோர்ஸ்… அஃப்கோர்ஸ்… `காதல் காற்று’ எடுத்தப்போ… விக்டர் கண்ணுல ஒரு தீபம் எரிஞ்சுகிட்டேயிருக்கும். அதுக்குப் பிறகு விக்டர்கூட ஆறு படம் பண்ணினேன். ஆனா, அந்த வெளிச்சத்தை அவன் கண்ணுல மறுபடியும் பார்க்கவேயில்லை... நேத்துகூட விக்டர்கூட பேசிக்கிட்டிருந்தப்ப இதைச் சொன்னேன்.”
``விக்டர் இப்போ எங்க சார் இருக்காரு?”
``இப்போ பையன்கூட சியாட்டில்ல இருக்கான். அங்கே யாருக்கும் விக்டரைத் தெரியாதுல்ல... மகா கலைஞன்யா அவன். ஆனா, அவன் எல்லாத் தாத்தாக்களையும் மாதிரி பேரப்பிள்ளைக்கு பீத்துணி மாத்திகிட்டு, சூப்பர் மார்க்கெட்ல சாமான் வாங்கிட்டு இருக்கானாம். இதைச் சொன்னப்ப எனக்குக் கண்ணு கலங்கிடுச்சு. எவ்ளோ பெரிய கலைஞன் அவன். கடைசியில பீத்துணி மாத்திகிட்டிருக்கான்…நம்ம தமிழ் சினிமா அவன்கிட்ட இன்னும் கொஞ்சம் கருணையா நடந்திருக்கலாம் ரவீந்தர்.”
“ஆமாம் சார்…”
“என்கிட்டகூட கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம் ரவீந்தர்” என்ற வினோத்தின் தொண்டை அடைத்தது. எனக்கு இந்த உரையாடல் முடிவதுபோல் தெரியவில்லை. வினோத் மிதமிஞ்சிய குடியில், கழிவிரக்கத்தின் உச்சியில் இருந்தான்.
``சாரி… நீ எதுக்கு வந்தேன்னுகூட கேக்காமப் பேசிட்டிருக்கேன். நான் உனக்கு ஏதாச்சும் பணம் தர வேண்டியிருக்கா?” என்று நேரிடையாகக் கேட்டவுடன் நான் தடுமாறிவிட்டேன். தொடர்ந்து வினோத், “ஏன்னா… இப்போ சினிமாக்காரங்கெல்லாம் யாரும் பாக்க வர்றதில்லை. அப்படியே யாராச்சும் வந்தாலும், ஏதாச்சும் பழைய பாக்கி இருக்கும். அதான் கேட்டேன்” என்ற பிறகு எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நானும் பணத்துக்காகத்தான் வந்தேன் என்று சொன்னால், வெறுத்துப் போய்விடுவான். சிறிது நேரம் போகட்டும் கேட்கலாம் என்று, ``இல்லை சார்… இந்தப் பக்கம் கொட்டிவாக்கம் வரைக்கும் வந்தேன். உங்க ஞாபகம் வந்துச்சு. வந்தேன்” என்றேன்.
“தேங்க் யூ ரவீந்தர்… தேங்க் யூ… நீயாவது இன்னும் என்னை ஞாபகம்வெச்சிருக்கியே…” என்று சிகரெட்டைப் பற்றவைத்த வினோத் என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டினான். நான் வாங்கிப் பற்றவைத்துக்கொண்டேன். கிளாஸில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றிய வினோத், “நீ சாப்பிடுறியா?” என்றான்.
“வேண்டாம் சார்…”
“நிறுத்திட்டியா?”
“இல்லை சார்… ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை அடிக்கிறதுதான். இப்போ... வண்டி ஓட்டிகிட்டு சாலிகிராமம்வரைக்கும் போகணும்.”
“சும்மா ரெண்டு லார்ஜ் மட்டும் அடி…” என்று இன்னொரு கிளாஸை எடுத்து பிராந்தியை ஊற்றி, தண்ணீர் கலந்து கொடுத்தான். நான் ``சியர்ஸ்...’’ சொல்லிவிட்டுக் குடிக்க… பிராந்தி கசப்பாகத் தொண்டையில் இறங்கி, வயிற்றுக்குச் சென்றவுடன் லேசாக எரிந்தது.

தனது கிளாஸை எடுத்துக்கொண்ட வினோத் நடந்தபடி, “ஸ்காட்ச்செல்லாம் இப்போ எனக்கு ரொம்ப காஸ்ட்லி. இப்போல்லாம் `மார்ஃபெஸ் புளூ’தான். கடவுள் நம்மைக் கடைசியில `மானிட்டர்’ல கொண்டுவந்து விடாம இருக்கணும். சினிமா சான்ஸ் தேடிட்டிருந்தப்போ கையில காசில்லாம, மானிட்டர்தான் குடிப்போம். மானிட்டரெல்லாம் இப்ப வருதா?” என்றான்.
``ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் பிஆர்ஓகிட்ட பேசினேன். `எட்டு ஏரியாலருந்தும் 40 டிஸ்ட்ரிபியூட்டர்ஸை அழைச்சுட்டு வரேன்'னு சொல்றாரு.''
“தெரியல சார்…” என்றபோது வினோத் தனது குடும்பப் புகைப்படத்துக்கு அருகே நின்றிருந்தான். புகைப்படத்தைப் பார்த்த வினோத் திடீரென்று பவித்ராவின் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு, “... முண்டை… நான் ஓவராக் குடிக்கிறனாம். சண்டை போட்டுட்டு, நாப்பத்தஞ்சு வயசுல அம்மா வீட்டுக்குப் போயிட்டா…” என்றான். நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“நன்றிகெட்ட நாய்ங்க. ஊர்ல… இவ பொறந்த வீட்டை 25 வருஷத்துக்கு முன்னாடி நீ பார்த்திருக்கணும் ரவீந்தர்… குடிசை வீடு. பத்துக்குப் பத்தடிகூட இருக்காது. நான் சினிமாவுல சான்ஸ் கிடைக்காம அலைஞ்சுட்டிருந்தப்போ நடந்த கல்யாணம். கல்யாணமான புதுசுல அவங்க வீட்டுக்குப் போனேன். எனக்காக, கோழிக்கால் குழம்புன்னு சொல்லிட்டிருந்தாங்க. அந்தக் குழம்பை என் தட்டுல ஊத்துறவரைக்கும், நான் லெக் பீஸ் குழம்புன்னுதான் நினைச்சுட்டிருந்தேன். ஆனா வந்து விழுந்தது… கோழிக் கால் விரல் குழம்பு ரவீந்தர். நொந்தே போயிட்டேன். நான் அவங்க வறுமையைக் குத்தம் சொல்லலை. அப்படி இருந்த வீட்டுலேருந்து அவளை எங்கே கொண்டு போய் வச்சேன்... நாப்பது நாட்டுக்கு அவளை அழைச்சுட்டுப் போயிருக்கேன். ஃபுல் யூரோப்பும் பாத்திருக்கா. நான் வளர வளர எங்க வீட்டு ஆளுங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கட் பண்ணிட்டா. நான் சம்பாதிச்சதுல முக்காவாசிக் காசு, அவங்க வீட்டு ஆளுங்களுக்குத்தான் போச்சு. அவ கனவுலகூட நினைச்சுப் பார்க்க முடியாத வாழ்க்கையை அவளுக்குத் தந்தேன். ஆனா இன்னைக்கி…” என்ற வினோத் கிளாஸில் மிச்சமிருந்த பிராந்தியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, “ஆம்பளைங்க கடைசிவரைக்கும் சம்பாதிச்சுகிட்டேயிருக்கணும் ரவீந்தர். அப்பதான் பொண்டாட்டிங்ககூட மதிப்பாங்க” என்றபோது டீப்பாயிலிருந்த வினோத்தின் மொபைல்போன் அடித்தது.
மொபைலை ஆன் செய்த வினோத், “ம்… சொல்லுங்க… வினோத்குமார்தான்…” என்றான்.
``...’’
``இல்லைங்க. நான் சீரியலெல்லாம் நடிக்கிறதில்லங்க…”
``...’’
“இல்லைங்க… சம்பளம்லாம் பிரச்னை இல்லை. நான் ஒரு பாலிஸியா சீரியல்ல எல்லாம் நடிக்கிறதில்லை… நீங்க வேற யாரையாச்சும் கேளுங்க…” என்று வினோத் கூறியபோது, எதிர்முனையிலிருந்தவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. வினோத் பயங்கரக் கோபத்துடன் முகமெல்லாம் சிவக்க, “அறிவு கெட்ட முட்டாள்… நான் சொல்றது புரியலை உனக்கு... நீ யாரை சீரியல்ல நடிக்கக் கூப்பிடுறேன்னு தெரியுதா... ஃபார்மர் பிரைம் மினிஸ்டர் பதவியில இல்லைன்னு, வார்டு கவுன்சிலர் தேர்தல்ல நிக்கக் கூப்பிடுவியா நீ... கட் தி போன்… கட் தி போன்… கட் தி போன் மேன்…” என்று வினோத் வேகமாக போனை கட் செய்தான்.
“பாஸ்டர்டு… என்னைப் போயி சீரியல்ல நடிக்கக் கூப்புடுறான். அவனுங்க தினம் தர்ற பத்தாயிரம் ரூபாக் காசுக்கு, நாலு பொண்ணுங்களுக்கு அண்ணனா நடிக்கணுமாம். பிளடி பிட்ச்… போன வாரம் இப்படித்தான் ஒரு புரொட்யூசர் வந்து, `அனுஷ்காவுக்கு அப்பாவா நடிக்கணும்’னு கூப்பிட்டான். அனுஷ்காவுக்கு இப்போ
38 வயசாவுது. எனக்கும் அனுஷ்காவுக்கும் பதினஞ்சு வயசுதான் வித்தியாசம். நான் அப்பாவா வந்து, செட் பிராப்பர்ட்டி மாதிரி நின்னுட்டிருக்கணும். அன்னைக்கி நல்லா குடிச்சிருந்தேன். அந்த புரொட்யூசரை வாசல்வரைக்கும் துரத்தித் துரத்தி அடிச்சேன். அன்னைலேருந்துதான் என் வொயிஃப்கூட சண்டை ஆரம்பிச்சுது. நான் யாரு ரவீந்தர்?”
“நைன்ட்டீஸோட ரொமான்ட்டிக் ஹீரோ…”
“என்னைப் போயி கிழவனா… அப்பாவா…” என்ற வினோத் குரல் அடைக்க… “அதுக்கு நான் செத்துடுவேன் ரவீந்தர்” என்றான்.
“இல்லை சார்… சும்மா இருக்கிறதுக்கு… சத்யராஜ், பிரபுல்லாம்கூட நடிக்கிறாங்க..”
“நான் சத்யராஜ், பிரபு இல்லை ரவீந்தர். வினோத்குமார்…” என்ற வினோத்தின் முகம் இறுக்கமாக மாறியது. நான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது. “சாரி சார்…” என்றேன். வினோத், “இட்ஸ் ஓகே… இப்ப நீ உடனே போகணுமா?” என்றான்.
“இல்ல சார்…”
“பீச்சுக்குப் போலாமா?”
“போலாம் சார்…”
வினோத் இன்னொரு மார்ஃபெஸ் பிராந்தி பாட்டிலை எடுத்து, இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில் ஊற்றி, தண்ணீரைக் கலக்கினான்.
கதவைப் பூட்டும்போது, “வீட்டுல வேலைக்காரங்க எல்லாம் யாரும் இல்லையா சார்?” என்றேன். “ம்ஹ்ம்…” என்று சிரித்த வினோத்குமார், பின்பக்கம் நோக்கி நடந்தபடி, “15 பேர் வேலைக்கிருந்த வீடு. இப்போ ஒருத்தர்கூட இல்லை. சம்பளம் கொடுக்கக் காசில்லை. டிரைவர் மட்டும் ரெண்டு வருஷம் சம்பளம் வாங்காமலேயே வந்தான். அப்புறம் அவனும் போயிட்டான். அதெல்லாம் ஒரு காலம் ரவீந்தர்… நான் பீக்ல இருந்தப்போ வீடு, `ஜே ஜே’ன்னு இருக்கும். வரிசையா எட்டு கார் நிக்கும். புரொட்யூசருங்க… டைரக்டருங்க… பிரஸ்னு ஆளுங்க வந்து போய்கிட்டேயிருப்பாங்க…இப்போ…” என்ற வினோத் நின்று தனது வீட்டைப் பார்த்தான். தொடர்ந்து வினோத், “வாழ்ந்து கெட்ட வீடுன்னு பார்த்தாலே தெரியுதுல்ல?” என்று கூறியதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பின்பக்க கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தவுடன், எதிரே பெளர்ணமி நிலா வெளிச்சத்தில் கடற்கரை பிரகாசமாகத் தெரிந்தது. அலைகள் பெரும் சத்தத்துடன் ஆவேசமாக அடித்துக்கொண்டிருந்தன. டீஷர்ட்டைத் தூக்கி பாட்டிலை இடுப்பில் செருகிக்கொண்ட வினோத், என் தோள்மீது கைபோட்டபடி நடக்க… நான் நெகிழ்ந்துபோனேன். ஒரு காலத்தில் சிவாஜி, கமலுக்குப் பிறகு, `மிகச் சிறந்த நடிகன்’ என்று விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட மகா கலைஞன், ஒரு நண்பன்போல் என் தோள்மீது கைபோட்டுக்கொண்டு வந்தான்.
நாங்கள் சாலையைக் கடந்தபோது, ஒரு ஜோடி எங்களை பைக்கில் தாண்டிச் சென்ற பிறகு திடீரென்று நின்றது. பைக் பெண், “ஏய்… அது ஆக்டர் வினோத்குமார்தானே?” என்று சொன்னது காதில் விழ… வினோத் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். திரும்பிப் பார்த்த அந்த இளைஞன், “ஆமாம்…” என்று பைக்கை ஓரமாக நிறுத்தினான். நான் தொடர்ந்து நடக்க… ``இரு ரவீந்தர்… அவங்க வரட்டும்” என்று வினோத் நின்றான். “பத்து வருஷத்துக்கு முன்னாடிவரைக்கும், எந்த ரசிகரும் பார்த்துடக் கூடாதுன்னு மாறுவேஷத்துல சுத்தி வருவேன். இப்போ…” என்றபோது அந்த ஜோடி எங்கள் அருகில் வந்திருந்தது. புதிதாகத் திருமணமான ஜோடிபோல. அந்த இளம்பெண்ணின் கழுத்தில் புதுத்தாலியும், கண்களில் புது வெளிச்சமும், முகத்தில் புதுக்கலவியின் சந்தோஷமும் மின்னின.
பரபரப்பாக எங்களருகில் வந்த இளைஞன், “இட்ஸ் எ கிரேட் சர்ப்ரைஸ் சார்…” என்று வேகமாக வினோத்தின் கையைப் பிடித்துக் குலுக்கியவன், “ஐ யம் தினேஷ். இது என் வொய்ஃப் வினோதினி. ஐடி கம்பெனில ஒர்க் பண்றோம். பக்கத்துல வெட்டுவாங்கேணிலதான் வீடு. வினோதினியோட அப்பா உங்களோட பெரிய ஃபேன். உங்கமேல உள்ள கிரேஸ்லதான் `வினோதினி’ன்னு பேர் வெச்சேன்னு சொல்வாரு. நாங்களும் உங்க பழைய படம்லாம் பார்த்திருக்கோம் சார்… ரொம்ப அற்புதமா நடிப்பீங்க. எஸ்பெஷலி… லவ் ஸ்டோரீஸ்… உங்களை அடிச்சுக்க சான்ஸே இல்லை சார்…” என்று பத்து நிமிடங்கள் பேசிவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்டு சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றார்கள்.
“பைபிள்ல… ‘கண்ணீருடன் விதைக்கிறவர்கள் கம்பீரமாக அறுப்பார்கள்’னு சொல்லியிருக்கும். ஆனா நான் தினம் தினம் கண்ணீரைத்தான் விதைச்சேன். தினம் தினம் கண்ணீரைத்தான் அறுவடை பண்ணினேன்...”
நாங்கள் சாலையிலிருந்து கடல் மணலில் இறங்கி, அலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினோம். காற்றில் ஆடைகளும் தலைமுடியும் படபடவென்று பறக்க… வினோத் பாட்டிலைத் திறந்து ஒரு மடக்கு அருந்திவிட்டு, “சினிமால கிடைக்கிற பணம், புகழ்… இதையெல்லாம் தாண்டிப் பெரிய சந்தோஷம் இதுதான் ரவீந்தர். நாம கொஞ்சம்கூட எதிர்பார்க்காத சமயத்துல, எங்கேயிருந்தோ யாரோ ஒருத்தன் வந்து பாராட்டுவான் பாரு… அது கொடுக்கிற சுகம்... போதை… சான்ஸே இல்லை. ஆறு மாசத்துக்கு முன்னாடி டி.வில, நைன்ட்டீஸ் சினிமாவைப் பத்தி ஒரு டாக் ஷோ. அதுல புவனான்னு ஒரு நாப்பத்தஞ்சு வயசு லேடி, ‘நான் அப்போ மானசீகமா நடிகர் வினோத்குமாரைக் காதலிச்சுட்டிருந்தேன். 98-ல அவருக்கு லவ் லெட்டர்லாம் எழுதியிருக்கேன்’னு சொன்னாங்க. லெட்டர்ல எழுதின பல வாக்கியங்களை ஞாபகமா சொன்னாங்க. அன்னைக்கி ராத்திரி, 98-ல எனக்கு வந்த லெட்டர்ஸ்ல விடிய விடியத் தேடி அந்த லெட்டரைக் கண்டுபிடிச்சேன். ஒரு பதினெட்டு வயசுப் பையன், தனக்கு வந்த முதல் லவ் லெட்டரைப் படிக்கிற மாதிரி பரவசத்தோட படிச்சேன். விடியறவரைக்கும் எத்தனை தடவை படிச்சேன்னு எனக்கே தெரியலை. அன்னைலேருந்து, நான் பீக்ல இருந்தப்போ எனக்கு வந்த கடிதங்களைப் படிக்கிறதுதான் தினம் என் வேலை. பவித்ரா எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா. அப்பல்லாம் அது சாதாரண லெட்டர்ஸ். சும்மா புரட்டிக்கூடப் பார்த்ததில்லை. இப்போ… ஒவ்வொரு லெட்டரும் காவியம்” என்று நீளமாகப் பேசி முடித்த வினோத், பாட்டிலை எடுத்துக் குடிக்கத் தொடங்கினான். என்னிடம் பாட்டிலை நீட்டினான். நான் பாட்டிலை உயர்த்திப் பிடித்துக் குடித்தேன்.
“சும்மா வாய்வெச்சே குடி. ஸ்லோ பாய்சனை எச்சில் படாம குடிக்கணுமா என்ன?” என்று வினோத் கூறியதை ரசித்தபடி வாய்வைத்துக் குடித்தேன். அலையருகில் வந்ததும் வினோத் மண்ணில் உட்கார்ந்து
கொள்ள, நானும் அருகில் அமர்ந்து
கொண்டேன்; இருவரும் சிகரெட்டுகளைப் பற்றவைத்துக்கொண்டோம். புகையை இழுத்துவிட்டபடி, “சாரி… என்னைப் பத்தியே பேசிட்டிருக்கேன். நீ இன்னும் படம் பண்ணலையா... ஏதோ அக்ரிமென்ட் ஆச்சுன்னு சொன்னே…” என்றான்.
“அக்ரிமென்ட் ஆச்சு. அம்பதாயிரம் ரூபா அட்வான்ஸ்லாம் கொடுத்தாங்க. அப்படியே நிக்குது. அப்புறம் விசாரிச்சா, அந்த புரொட்யூசர் இந்த மாதிரி ஒரு இருபது பேருக்கு அட்வான்ஸ் கொடுத்து உக்கார வெச்சிருக்காராம். இப்போ சம்பந்தமேயில்லாம ஒரு ஹிந்தி ரீமேக் படத்தை, ஒரு தெலுங்கு டைரக்டரைவெச்சு, கன்னடத்துல பண்ணிக்கிட்டிருக்காரு. நானும் வாரா வாரம் வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போற மாதிரி புரொட்யூசரைப் பார்த்துட்டு வர்றேன். `அடுத்த மாசம் ஆரம்பிச்சிடலாம்’பாரு. மூணு வருஷமாச்சு. இன்னும் அந்த அடுத்த மாசம் வரவேயில்லை… ஆனாலும் சினிமாவை விட்டுப் போக முடியலை சார். போன மாசம் அண்ணன் வந்திருந்தப்போகூட சொன்னாரு. `இதெல்லாத்தையும் தலைமுழுகிட்டு ஊருக்கு வாடா. நிலத்தை வித்துக் கடை வெச்சுத் தர்றேன்… ஊர்லயே ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வெக்கிறேன்’னாரு. `முடியாது’ன்னுட்டேன்.”
“ஏன்?”
“எப்படி சார்... 15 வருஷத்துக்கு முன்னாடி டைரக்டராகணும்னு ஊரை விட்டு வந்தேன். கடைசியில தோத்துப் போய் திரும்பி, அதே ஊருல உக்காந்துகிட்டு, நாலு பேரு முகத்தைப் பார்த்து எப்படி சார் வியாபாரம் பண்ண முடியும்... அதுவுமில்லாம, `என்னைக்காச்சும் ஒருநாள் ஜெயிச்சிடுவோம்’னு ஒரு நம்பிக்கை.”
“ `செங்கோல்’ மலையாளப் படம் பார்த்துருக்கியா? சிபிமலயில் டைரக்ஷன். `கிரீட’த்தோட பார்ட் டூ.”
“பார்த்திருக்கேன் சார்.”
“அதுல ஒரு அற்புதமான டயலாக் வரும். லோஹிததாஸ் எழுதினது. ‘பெரிய ஆத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு, மூச்சுத் திணற நீந்திப் போறப்போ, அந்தப் பக்கம் எங்கேயோ ஒரு கரை இருக்குன்னு நினைக்கிறப்ப ஆறுதலா இருக்கும்’னு. அந்த மாதிரி நாம ரெண்டு பேரும் ஒரே ஆத்துலதான் நீந்திகிட்டிருக்கோம். என்ன வித்தியாசம்ன்னா, நீ எதிர்க்கரையை நோக்கி நீந்திகிட்டிருக்க. நான் ஏற்கெனவே இருந்த கரையை நோக்கி நீந்திகிட்டிருக்கேன். ஒரே ஒரு சக்சஸ் எல்லாத்தையும் மாத்திடும். அதுக்குத்தான் எப்படியாச்சும் `தீராக்காத’லை ரிலீஸ் பண்ணிடணும்னு பார்க்குறேன். முடியலை.”
“என்னதான் சார் ஆச்சு?”
“இதுவரைக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்கு இருபது தடவை காட்டிட்டேன். ஒருத்தனும் வாங்க மாட்டேங்கிறான். கேட்டா, `உங்களுக்கு இப்போ ஓப்பனிங் இல்லை… அது இது’ங்கிறாங்க. நானே ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா, அதுக்குத் தனியா செலவு செய்யணும். ஏற்கெனவே ஒரு வருஷமா, காரெல்லாம் வித்துதான் குடும்பம் ஓடிகிட்டிருக்கு. யூகேல படிக்கிற பையனுக்கு பணம் அனுப்பக்கூட முடியாம, அவன் அங்கே ஏதோ பார்ட் டைம் வேலை பார்த்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான். இப்போ மிச்சமிருக்கிறது இந்த வீடு மட்டும்தான். அதுவும் அடமானத்துல இருக்கு. சரி… வீட்ட வித்துப் படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு பார்த்தா, அப்புறம் சென்னையில குடியிருக்க வீடு கிடையாது.”
“சார்… என்ன சார் இது... இருக்கிற வீட்டையும் வித்துட்டு... சொந்தமா ரிலீஸ் பண்ற ஐடியாவ விடுங்க. நீங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்குக் காட்டுங்க.”
``அதான் பண்ணணும். ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் பிஆர்ஓகிட்ட பேசினேன். `எட்டு ஏரியால இருந்தும்
40 டிஸ்ட்ரிபியூட்டர்ஸை அழைச்சுட்டு வரேன்’னு சொல்றாரு. அடுத்த வாரம் படத்தைப் போட்டுக் காமிக்கணும். ப்ரிவியூ தியேட்டருக்குப் பதினஞ்சாயிரம் ரூபாய் கேக்குறான். அப்புறம் ஒரு ஸ்டார் ஹோட்டல்ல பிரஸ் மீட்வெச்சு, படத்தைப் பத்தி டாக் வர வைக்கணும். ஆனா, அதுக்குப் பணம்... இப்போ வர வர தினசரிச் செலவுக்கே கஷ்டமா இருக்கு. இப்போ குடிக்கிறதுகூட தென்னந்தோப்புல இருக்கிற தேங்காயையெல்லாம் ஒருத்தன் வாங்கிட்டு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தான். அதுலதான் போய்க்கிட்டிருக்கு.”
“நீங்க சொந்தப் படம் எடுத்திருக்கக் கூடாது சார்…”
“தெரியுது. ஆனா இருபது வருஷம் கோடம்பாக்கத்துல கொடிகட்டிப் பறந்துட்டு, சும்மா வீட்டுல உக்காந்திருக்கிற கொடுமை உனக்குப் புரியாது ரவீந்தர். எந்த ஒரு நடிகனும் சாவுறவரைக்கும் நடிச்சுக்கிட்டே இருக்கணும்னுதான் நினைப்பான். அதனாலதான் சொந்தப் படம் எடுத்து, இருக்கிற காசையெல்லாம் விட்டு, அடுத்த படத்துல பிடிச்சுடலாம், அடுத்த படத்துல பிடிச்சுடலாம்னு எல்லாக் காசையும் விட்டுட்டேன்.”
“சினிமாவே ஒரு சூதாட்டம்தான் சார்.”
“ஆமாம். யாருக்கு எப்போ தாயம் விழும்...எப்போ வெட்டுவாங்கன்னு சொல்லவே முடியாது. இந்தப் படம் மட்டும் ரிலீஸாச்சுன்னா போதும். எல்லாம் மாறிடும்” என்ற வினோத் இரண்டு மடக்கு பிராந்தியைக் குடித்தான்.
“முடியலை ரவீந்தர். ராத்திரி குடிச்சுட்டுப் படுத்தாக்கூட, ரெண்டு மணி நேரத்துல முழிப்பு வந்துடுது. அப்புறம் விடிய விடியத் தூக்கமே வர்றதில்லை. எப்படியாவது அந்தப் பொற்காலத்துக்குப் போயிட முடியாதான்னு மனசு ஏங்குது. ஒரு காலத்துல நான் எந்த புரொட்யூசருக்கு போன் பண்ணி, எத்தனை லட்சம் வேணும்னு கேட்டாலும் ஏன் எதுக்குன்னு கேக்காம ஓடி வந்து கொடுப்பாங்க. இன்னைக்கிக் காசுக்காக, எத்தனை பேருக்குத் தெரியுமா போன் பண்ணினேன்... பாதிப் பேரு போன எடுக்கவேயில்லை. மீதிப் பேரு மத்தியானம் சோறாக்கவே காசில்லைன்னு பஞ்சப்பாட்டு பாடுறானுங்க. ஒரு பழைய புரொட்யூசர்… என்னைவெச்சு மூணு படம் ஹிட் கொடுத்தவரு. நேர்ல போய்ப் பணம் கேட்டா மறுக்க முடியாம கொடுத்துடுவார்னு வீட்டுக்கே போனேன். அவரு என்னை நேர்ல பார்க்கவேயில்லை. கீழிருந்து போன்லயே விஷயத்தைக் கேட்டுட்டு `இல்லை’னு சொல்லிட்டாரு. அன்னைக்கித் திரும்பி வர்றப்போ ரொம்ப நாள் கழிச்சு அழுதேன்.”
நான், “சினிமால ஜெயிக்கிறவரைக்கும்தான் சார் மரியாதை” என்றவுடன், வினோத் சட்டென்று அடிபட்டாற்போல் என்னைப் பார்த்தான். என் அருகில் நெருங்கிய வினோத், “அப்போ நான் தோத்துட்டங்கிறியா?” என்று கேட்டவுடன், எனக்கு மனசு கஷ்டமாகிவிட்டது. வினோத் மேற்கோண்டு ஒன்றும் பேசாமல், ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு புகையை விட்டபடி, “ஆமாம்… நான் தோத்துதான் போயிட்டேன். வியாபாரத்துல நான் தோத்திருக்கலாம் ரவீந்தர். ஆனா நடிப்புல என்னைத் தோக்கடிக்கவே முடியாது. ‘தொலைந்த காலம்’ பட இன்டர்வெல் பிளாக்ல, விசாகப்பட்டினம் கடற்கரையில நடிச்சிருப்பேன். ஞாபகமிருக்கா?” என்றான்.
“எப்படி சார் மறக்க முடியும்... அதெல்லாம் தமிழ் சினிமாவுல எபிக் சீன் சார்.”
“அது ஒரே ஷாட்ல எடுத்தது. ட்ராலி ஷாட். ரெண்டு நிமிஷம் மெதுவா நடந்துகிட்டே பேசணும். ட்வெல் ஃபீட் ட்ராக் போட்டு எடுத்தாங்க. நான் வசனம் பேசி முடிச்சுட்டு அழுதுகிட்டேயிருக்கேன். டைரக்டர், `கட்’ சொல்ல மறந்து பாத்துகிட்டேயிருக்காரு. நான், `சார்...’னு சொன்ன பிறகுதான், கண்ணத் துடைச்சுகிட்டே `கட்’ சொன்னாரு” என்ற வினோத் சில விநாடிகள் ஒன்றும் பேசாமல், சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று என் பக்கம் திரும்பி, “இப்பகூட அதை என்னால நடிக்க முடியும். பார்க்குறியா?” என்றான்.
“இருக்கட்டும் சார்…”
“போதைல சொல்றேன்னு பார்க்குறியா... இதையெல்லாம்விட சினிமா பெரிய போதை ரவீந்தர். இப்பப் பாரு…” என்ற வினோத் எழுந்தான். கடல் மணலில் ஓரிடத்தில் காலால் கோடு போட்டு, “இதுதான் ஃபர்ஸ்ட் பொசிஷன் பாயின்ட்…” என்றான். பின்னர் கால் அடியை எடுத்துவைத்து, “ஒன், டூ, த்ரீ…” என்று எண்ணியபடி பன்னிரண்டாவது அடி முடிந்த இடத்தில் காலால் கோடு கிழித்து, “இது ஃபைனல் பொசிஷன் பாயின்ட்” என்றான். ஃபர்ஸ்ட் பொசிஷனில் வந்து நின்றுகொண்டு, “இப்போ ஆரம்பிக்கிறேன்” என்றவுடன், சுற்றிலும் பார்த்தேன். எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நிலா வெளிச்சத்தில் கடல் அலைகள் ஆவேசமாகச் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன.

ஓடிப்போன தன் மனைவி குறித்து, ஹீரோ தன் நண்பன் மூர்த்தியிடம் உணர்ச்சிகரமாகப் பேசும் வசனம் அது. வினோத் பேச ஆரம்பித்தான்: “பத்து வருஷம் அவகூட வாழ்ந்திருக்கேன் மூர்த்தி. அவளைப் பத்தி நினைச்சுப் பார்க்குறதுக்கு, ஒரே ஒரு சந்தோஷமான நினைவுகூட கிடையாது. நல்ல சூடான இரும்புக் கம்பியை ஒருத்தன் பத்து வருஷம் தொடர்ந்து கையில பிடிச்சுட்டிருந்தா எப்படி இருக்கும்... அப்படித்தான் பத்து வருஷம் அவகூட வாழ்ந்தேன். `நல்லாப் படிச்சு, வேலை கிடைச்சு, கல்யாணமாயிடுச்சுன்னா லைஃப் செட்டில்டு’னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா அதுக்குப் பிறகு நாலு நரகத்துல வாழ வேண்டியிருக்கும்னு நான் நினைக்கவே இல்லை” என்ற வினோத்தின் கண்கள் கலங்கி, கண்ணோரம் கடகடவென்று நீர் வடிய, மெதுவாக நடந்துகொண்டே, தொடர்ந்து அந்த வசனத்தைப் பேசினான். நான் அசந்துபோய் பார்த்துக் கொண்டேயிருந்தேன். வினோத் அந்தக் கடற்கரை, ரவீந்தர், பவித்ரா, `தீராக்காதல்’ என எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஒரு தியானம்போல தனது நடிப்பில் ஆழ்ந்து, அற்புதமாக பேசிக்கொண்டே, கொஞ்சமும் பிசிறின்றி ஃபைனல் பொசிஷனை நோக்கி மெதுவாக நடந்தான்.
வினோத், “பைபிள்ல… ‘கண்ணீருடன் விதைக்கிறவர்கள் கம்பீரமாக அறுப்பார்கள்’னு சொல்லியிருக்கும். ஆனா நான் தினம் தினம் கண்ணீரைத்தான் விதைச்சேன். தினம் தினம் கண்ணீரைத்தான் அறுவடை பண்ணினேன்” என்றபடி ஃபைனல் பொசிஷனுக்கு வந்தான். பிறகு அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, இறுதி வசனத்தைப் பேச வேண்டும். மறக்காமல் வினோத் அவ்வாறே முழங்காலிட்டு அமர்ந்தான்.
இறுதியாக வினோத், “இப்போ உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் மூர்த்தி. நான் அப்பான்னு கையெழுத்துப் போட்டு, ஸ்கூல்ல சேர்த்த என் பொண்ணுகூட எனக்குப் பிறக்கலை மூர்த்தி. எனக்குப் பிறக்கலை...” என்ற வினோத் மெதுவாக அழ ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அழுகை அதிகரித்து, இறுதியில் நெஞ்சிலடித்துக் கொண்டு கதறிக் கதறி அழுதபோது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வினோத் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தான்.
வேகமாக வினோத்தின் அருகில் சென்று, குனிந்து அவன் தோளில் தட்டி, “ஃபென்ட்டாஸ்டிக் சார். எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலை. இந்த மாதிரி நடிக்க இன்னொருத்தன் பிறந்து வரணும் சார்…” என்றேன். அப்போதும் தொடர்ந்து அழுதபடி எழுந்த வினோத் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “இப்பவும் என்னால நடிக்க முடியும் ரவீந்தர். என்னால நடிக்க முடியும்” என்றபோதுதான், இப்போது வினோத் நிஜமாகவே அழுது கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. இரண்டு தேசிய விருதுகள் பெற்ற, ஆறு ஃபிலிம்ஃபேர் விருதுகள் பெற்ற ஒரு கலைஞன், லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடிக் கொண்டாடிய ஒரு மகா கலைஞன், இன்னும் ஜெயிக்காத ஒரு அசோசியேட் டைரக்டர் முன்னர் கண்ணீர்விட்டு அழுகிறான்.
நான் வினோத்தின் தோளை ஆறுதலாகத் தடவியபடி, “என்ன சார் இது... யாரு சார் உங்களுக்கு நடிக்கத் தெரியாதுன்னா…” என்றேன். நிமிர்ந்து தன் கண்களைத் துடைத்துக்கொண்ட வினோத், என் கையிலிருந்த பாட்டிலை வாங்கி, மிச்சமிருந்த பிராந்தியை மடமடவென்று குடித்துவிட்டு பாட்டிலைத் தூக்கி எறிந்தான். பின்னர் என் தோள்களில் தனது கையை வைத்துக் கண்கள் கலங்க, “நாலடி உயரத்திலேருந்து விழுந்தா, லேசான காயத்தோட தப்பிச்சிடலாம் ரவீந்தர். நான் ஆயிரம் அடி உயரத்திலேருந்து விழுந்துருக்கேன். வலி தாங்க முடியலை. வலி தாங்க முடியலை’’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டான்.
“ஆனா நான் மறுபடியும் ஜெயிப்பேன் ரவீந்தர். ‘தீராக்காதல்’ படம் மட்டும் வரட்டும். மறுபடியும் கோடம்பாக்கமே என்னைத் திரும்பிப் பார்க்கும்” என்றான்.
வினோத்தின் நடிப்பிலும், பின்னர் அவனுடைய நிஜமான அழுகையாலும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நான், “அதுல சந்தேகமே வேண்டாம் சார். கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க சார்” என்ற விநாடியில் சட்டென்று அந்த முடிவை எடுத்து, “நீங்க தப்பா நினைக்கலைன்னா, என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு” என்று பாக்கெட்டிலிருந்து ஒரு லட்ச ரூபாயை எடுத்தேன்.
“ப்ரீவியூ ஷோ, பிரஸ் மீட் செலவுக்கெல்லாம் வச்சுக்குங்க சார்.”
“ஐயோ ரவீந்தர்... நான் பணத்தை எதிர்பார்த்து இதையெல்லாம் சொல்லலை. நீ ரைட்டர். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்குவேன்னு நினைச்சுதான் சொன்னேன்.”
“தெரியும் சார். நீங்க ஜெயிச்ச பிறகு தாங்க சார்” என்று வினோத்தின் டீஷர்ட் பாக் கெட்டில் அந்தப் பணத்தைத் திணித்தேன். “வேண்டாம் ரவீந்தர்...” என்ற வினோத்தின் கையைப் பிடித்து, “நாலு வருஷத்துக்கு முன்னாடி, கதை வசனத்துக்காக எனக்கு ரெண்டு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தீங்க. அதுல திருப்பிக் கொடுக்கிறதா நினைச்சுக்குங்க. வேண்டாம்ன்னு சொல்லாதீங்க சார்…” என்ற என்னை வினோத் நன்றியுடன் பார்த்தான். “வாங்க சார்” என்று வினோத்தை அழைத்துக்கொண்டு சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
தம்பிக்கு ஃபீஸ் கட்ட என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் மனதில் நிம்மதியான ஓர் உணர்வு.