Published:Updated:

சிறுகதை: மறதி

சிறுகதை: மறதி
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: மறதி

12.12.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

சோட்டூ இன்று அசாத்திய பரபரப்பில் இருந்தான். இரவு சீக்கிரம் படுங்க. நாளைக்கு ஏழு மணிக்கு ஸ்கூலில் இருக்க வேண்டும் என்று மாஸ்டர் சொல்லியிருந்தார். ஆனால் அவனுடைய வேலை இப்போதைக்கு முடியாது போலிருந்தது. இப்போதெல்லாம் சீக்கிரம் இருட்டிவிடுகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. பத்து நாள் முன்புகூட கிட்டத்தட்ட இரவு ஏழு மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும். ஆனால் அடுப்படியில் உட்கார்ந்ததுபோல செம சூடு ஆளைக் கவ்வும். சந்தன் காக்கா கடைக்குக் காய் வாங்க வந்தவர்கள் இன்னும் சூடு குறையவில்லை பார் என்பார்கள், கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்தபடி. சந்தன் காக்கா எல்லாருக்கும் சிரித்தபடி பதில் சொல்லிக்கொண்டு தராசில் காயை கவனமாகப் போடுவார். கூடவே அவருடைய கைப்பேசியில் வரும் ஆர்டரைக் கேட்டு நோட்டுப்புத்தகத்தை சோட்டூவிடம் வீசுவார்.

‘ஆலூ[உருளைக்கிழங்கு] ஏக் கிலோ… பிண்டி[வெண்டைக்காய்] ஆதா கிலோ...’ என்று அவர் செவியில் விழும் ஆர்டரை திரும்பச் சொல்லச் சொல்ல சோட்டூ அதை எழுதுவான். இத்தனை சின்னப் பையனுக்கு எழுத வருதா என்று யாராவது கேட்டால் சந்தன் காக்கா சிரிப்பார் தலையாட்டியபடி. காக்கா சமயம் கிடைக்கும்போது அவற்றை எடை போட்டு ஒவ்வொன்றையும் பையில் வைத்து விலைச்சீட்டில் முகவரி எழுதி அவனிடம் கொடுப்பார். அவன் பையைச் சுமந்துகொண்டு அங்கு போய்ச் சேர்க்க வேண்டும். சில நாள்கள் ஒன்பது மணிவரை ஆர்டர்கள் வரும். குளிர்காலத்தில் குளிரில் நடுங்கிக்கொண்டு தெருவில் நடக்கும்போது எப்போது வீட்டிற்குப்போய்ப் படுப்போம் என்றிருக்கும். சாப்பாட்டைவிடத் தூக்கம் முக்கியமாக வேண்டியிருக்கும். காய்கறிக்குப் பணம் கொடுப்பவர்கள் சில சமயம் இரண்டோ ஐந்தோ ரூபாய் நாணயத்தை அவன் கையில் வைப்பார்கள். அவனுள் சிறிய வெப்பம் படர்வதுபோல இதமாக இருக்கும்.

சிறுகதை: மறதி
சிறுகதை: மறதி

இன்று யாரும் கூப்பிடாமல் இருந்தால் தேவலை என்று அவன் நினைத்தான். சந்தன் காக்காவிடம் இன்னிக்கு சீக்கிரம் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பலாம். காக்கா நல்லவர்தான். ஒருநாளும் அவனைக் கோபித்து அடித்ததில்லை. தினமும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்குச் சென்று பையை வைத்துவிட்டு இங்கு வந்ததும் காக்கா சாயாவும் சமோசாவும் கொடுப்பார். அதைச் சாப்பிட்ட பிறகுதான் அவனுக்குத் தெம்பே வரும். இரவு அவன் செய்யும் வேலைக்காகத் தினமும் ஐம்பது ரூபாய் கொடுப்பார். அதுவே பெரிய உதவிதான். அவன் ஒரு பைசாவும் செலவழிக்காமல் அதை அம்மியிடம் கொடுப்பான்.

இன்றைக்கு ரொம்ப அசதியாக இருந்தது. காலையிலிருந்து வெயிலில் நின்று நாளைக்கு நடக்கப்போகும் காந்தி ஜயந்தி விழாவில் பாடவேண்டிய பாட்டு, நாடகம் எல்லாவற்றின் ஒத்திகையும் நடந்தன. அவனுக்குக் காந்தி வேடம். கச்சை கட்டின வேட்டி, திறந்த மார்பில் ஒரு சிறிய துண்டு, கையில் ஒரு கைத்தடி, மூக்குக்கண்ணாடி… ஒத்திகையின்போது இந்த உடுப்பை அவனுக்கு அணிவித்தார்கள். மாஸ்டர் அவனைப் பார்த்துச் சிரித்து முதுகைத் தட்டினார்.

தினமும் ஸ்கூலிலிருந்துவீட்டுக்குச் சென்று பையை வைத்துவிட்டு இங்கு வந்ததும் காக்கா சாயாவும் சமோசாவும் கொடுப்பார். அதைச் சாப்பிட்ட பிறகுதான் அவனுக்குத் தெம்பே வரும். இரவு அவன் செய்யும் வேலைக்காகத் தினமும் ஐம்பது ரூபாய் கொடுப்பார்.

‘இம்ரான், உனக்கு காந்தி வேசம் நல்லாப் பொருந்துது’ என்றார். அவனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. எல்லோருக்கும் அவன் சோட்டூ - சின்னப்பையன் - மாஸ்டர் மட்டும் அவன் பெயரைச் சொல்லித்தான் கூப்பிடுவார்.

நாளைக்கு அவன் மேடையில் நடுநாயகமாக அமர்வான், ராட்டையைச் சுழற்றியபடி. காந்தி அதில் நூல் நூற்பாராம். ரொம்பக் கஷ்டமான வேலை அது என்றான் அவன் வீட்டுக்கு வந்து தாத்தாவிடம். தாத்தா நிறைய கதைகள் சொல்வார். தில்லிக்கு வருவதற்கு முன் லக்னோ மீனா பஜாரில் சுர்மா [கண் மை] விற்ற கதையைச் சொல்வார். சுர்மா வாங்க நிறைய பெண்கள் வருவார்கள். அவர்களை எப்படியோ வாங்க வைத்துவிடுவாராம் கதையளந்தபடி. சுர்மா விக்கிறது எங்க குடும்பத்திலே காலங்காலமா செஞ்ச தொழில் என்பார். ‘என் பாட்டன், முப்பாட்டன் அந்த மீனா பஜாரிலே உட்கார்ந்த எடத்திலேதான் நானும் உட்காருவேன்.’ அந்த இடமே குழிவிழுந்துபோச்சு என்பார் கையால் வரைந்து காட்டி. கதை சொல்வது அவருக்கு இயல்பாக வரும். காந்தியைப்பற்றிக்கூட. சின்ன வயசில் காந்தியைப் பார்த்திருக்கேன் என்பார். அவனுக்கு அதை நம்ப முடியவில்லை. ஸ்கூல் மாஸ்டர் பேசும்போது காந்தி ஒரு கடவுள் மாதிரி தோன்றும். அவர்தான் வெள்ளைக்காரனைத் துரத்தினார். துப்பாக்கிச் சண்டை போடாம, அடிமை இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்…

சாதாரண மனுஷனுக்கு இது சாத்தியமா?

பாவம் தாத்தா கொஞ்ச நாளாக ஏதோ பிரமை புடிச்ச மாதிரி இருக்கார். சாப்பிட்டமா தூங்கினமான்னுகூட மறந்துபோறார். அவருக்கு வயசாகிப்போச்சு சோட்டூ என்கிறாள் அம்மி. அதோடு பாவம் ரொம்பக் கவலை என்றாள். என்ன கவலை என்று அவனுக்குச் சொல்ல வில்லை. அதிகம் கேட்டால் அதெல்லாம் பெரியவங்க சமாசாரம் என்பாள். நாளைக்குத் தாத்தாவை ஸ்கூலுக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்று சோட்டூ நினைத்துக் கொண்டான்.

சந்தன் காக்காவின் மொபைல் அழைத்தது. அவன் நிமிர்ந்தான். ஆர்டர் வந்திடுச்சா?

`‘அச்சா, அச்சா, அனுப்பறேன், சொல்லுங்க’’ காக்கா `எழுது’ என்று சைகை காண்பிக்க, அவன் எழுத ஆரம்பித்தான். ‘`பீன்ஸ் அரைக் கிலோ, காரட் கால் கிலோ...’’

மூட்டை கனமாக இருந்தது. அவன் அதைத் தோள்மேல் வைத்துக்கொண்டு அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் பத்தாம் மாடிக்குச் சென்று மணி அடிப்பதற்குள் தோள் கழன்றுவிடும்போல் இருந்தது.

கதவைத் திறந்த இளைஞன் அவனைப் பார்த்துப் புன்னகைத்து, பையை வாங்கிக்கொண்டு, ‘`இந்த பாரத்தையா தூக்கிட்டு வந்தே?’’ என்றான் கனிவுடன். காயின் விலையுடன் அவன் கையில் பத்து ரூபாய் நோட்டை வைத்தான். ‘`இது உனக்கு.’’

அவனுக்குக் குபீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. “நன்றி அண்ணா” என்றான்.

‘`படிக்கிறியா?’’

‘`ஆமாம் அண்ணா’’

‘நாளைக்கு மகாத்மா காந்தி வேசம் போடப்போறேன் ஸ்கூல்லெ’ எனச் சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அந்த இளைஞன் கதவைச் சாத்திவிட்டான்.

சந்தன் காக்காவிடம் காய்கறிக்கான காசைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடக்கும்போது மனசு இன்று உற்சாகமாக இருந்தது. அந்த அண்ணன் எவ்வளவு நல்லவன்!

அம்மி அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் அன்று கிடைத்த ஐம்பது ரூபாயை அவளிடம் கொடுத்துவிட்டு, தனியாக அந்தப் பத்து ரூபாயை நீட்டினான். ‘`இது ஏது?’’ என்றாள் அம்மி சந்தேகத்துடன். ‘`காய் டெலிவரி செய்யப்போன வீட்டிலே ஒரு அண்ணன் கொடுத்தது’’ என்றான்.

அம்மாவின் முகத்தில் மெலிதாக மலர்ச்சி ஏற்பட்டது. ‘`நீயே வெச்சுக்க சோட்டூ. ஏதாவது வாங்கிக்க’’ என்றாள்.

தாத்தா படுக்கையில் தூங்காமல் படுத்திருந்தார். அவன் அவர் அருகில் போய் அமர்ந்துகொண்டான்.

‘`நேரமாச்சு, போய்ப் படு சோட்டூ’’ என்றார் தாத்தா.

‘`படுக்கறேன். நீங்க நாளைக்கு எங்க ஸ்கூலுக்கு வர்றீங்களா தாத்தா? நாடகம் போடறாங்க. நான்தான் மகாத்மா காந்தி!’’

தாத்தா புன்னகைத்தார். ‘`அட உங்க ஸ்கூல் அதெல்லாம் செய்யுதா?!’’ என்றார் வியந்தவர் போல.

அவன் சிரித்தான். “நாளைக்கு காந்தி ஜயந்தின்னு மறந்துபோச்சா? எல்லாருக்கும் லீவு தாத்தா. மார்க்கெட் கூட லீவுன்னு சந்தன் காக்கா சொன்னாங்க.’’

தாத்தா கண்ணை மூடிக்கொண்டார். ‘`அது சரி. ஒரு நாள் லீவு கிடைக்குதில்லே?’’

‘`ஆமாம். நா பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன். வர்ரீங்களா தாத்தா?’’

தாத்தா கண்களைத் திறந்தார். ‘`எங்கே?’’

‘`என்ன தாத்தா, சொன்னேனே, எங்க ஸ்கூலுக்கு. நா டிராமாவிலே இருக்கேன்.’’

‘`இல்லெ கண்ணு. நா ஒருத்தரைப் போய்ப் பார்க்கணும். தினமும் அலையறதாவே போச்சு எனக்கு. நாளைக்கு நல்லாப் பண்ணு. காந்தி டிரெஸ்ஸிலேயே வீட்டுக்கு வா. நா பாக்கறேன்.’’

‘`எனக்கும் காந்தி மாதிரி இரண்டு பல் இல்லே!” என்று சிரித்துக் காண்பித்தான். “தாத்தா நீங்க நிசம்மாவே காந்தியைப் பாத்திருக்கீங்களா?’’

‘`ஆமாம் கண்ணு. உன் வயசு எனக்கு அப்ப. ஒரு சமயம் லக்னோ வந்தாங்க. அவரைப் பார்க்கக் கூட்டம் வரும் பாரு, நீ நம்பமாட்டே. என் அப்பா அவங்க கழுத்திலே என்னை உக்காத்தி வெச்சுக் காண்பிச்சாங்க.’’

சிறுகதை: மறதி
சிறுகதை: மறதி

‘`என் ஸ்கூல்லெ யாரும் நம்பமாட்டேங்கிறாங்க.’’

‘`எதை?’’

‘`நீங்க காந்தியைப் பார்த்திருக்கீங்கன்னா.’’

தாத்தா விருக்கென்று எழுந்து அமர்ந்தார்.

‘`நம்பமாட்டாங்க’’ என்றார் திடீர்க் கோபத்துடன். ‘`எப்படி நம்புவாங்க? நீ வெளியாளு, நீ யாருங்கறதுக்கு ப்ரூஃப் காமிங்கறாங்க. அவங்க புத்தகத்திலே எம் பேர் இல்லையாம். திருப்பித் திருப்பிக்கேப்பாங்க. பேர் என்ன? பேர் என்ன? எம் பேர் உமர் அப்துல்லா பாபுஜீ. என்ன சொன்னே? உமர் அப்துல்லா!

இங்க உம்பேர் இல்ல அப்துல்லாங்கறாங்க. அது ஏதோ தப்பு சாமி. நா இங்கதான் பொறந்தேன். வளர்ந்தேன். லக்னோ மீனா பஜாரிலே போய்க் கேளுங்கன்னு சொன்னா. எப்பய்யா வித்தே சுர்மா? பத்துவருஷம் முந்தி வரை. போ போ, நீ பொய் சொல்றேங்கறாங்க. நா காந்தியைப் பார்த்திருக்கேன்னா சிரிப்பாங்க. யாரு காந்தின்னு கேட்டாலும் கேப்பாங்க.”

சோட்டூவுக்கு தாத்தாவின் கோபம் பயத்தை அளித்தது.

‘`ப்ரூஃப் வேணுமாம் ப்ரூஃப்! எம் பாட்டனை எவனும் கேக்கல்லே. எம் முப்பாட்டனை எவனும் கேக்கல்லே. அந்த வெள்ளைக்காரன் கூட.”

அம்மி அவசரமாக வந்தார்.

‘`அப்பா, அவன்கிட்டபோய் ஏம்பா இதையெல்லாம் பேசறீங்க. அவனுக்கு என்ன புரியும்? நீ போய் படு சோட்டூ.’’

தாத்தா சட்டென்று மௌனமாகிப்போனார். படுத்து போர்வையால் முகத்தை மூடிக்கொண்டார்.

சோட்டூ குழப்பத்துடன் படுத்துக்கொண்டான். தாத்தாவின் கோபம் புரியவில்லை. இரண்டு வருஷங்களுக்குமுன் அப்பா விபத்தில் இறந்தபிறகு லக்னோவில் தனியாக இருந்த தாத்தா அவர்களுக்குத் துணையாக இருக்க தில்லி வந்துசேர்ந்தார். இதுவரை அவர் கோபப்பட்டு அவன் பார்த்ததில்லை. ப்ரூஃப் என்பது என்ன என்று தெரியவில்லை. காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று படுத்தான்.

லக்னோ மீனா பஜாரிலே போய்க் கேளுங்கன்னு சொன்னா. எப்பய்யா வித்தே சுர்மா? பத்துவருஷம் முந்தி வரை. போ போ, நீ பொய் சொல்றேங்கறாங்க. நா காந்தியைப் பார்த்திருக்கேன்னா சிரிப்பாங்க. யாரு காந்தின்னு கேட்டாலும் கேப்பாங்க.

காலையில் கண்விழித்தபோது தாத்தா எங்கேயோ கிளம்பிப் போயிருந்தார்.

அவன் நாஷ்டா செய்ய நேரம் இல்லாமல் சாயா குடித்த கையுடன் கிளம்பினான்.

‘`ப்ரூஃப்னா என்னம்மா?’’

``அது என்ன இழவோ போ.’’

‘`சொல்லும்மா.”

‘`நாம யாருன்னு சொல்ற அடையாள அட்டை, ஆதார் மாதிரி.’’

‘`தாத்தாகிட்ட இல்லெ?’’

‘`இல்ல. அவர் ஓட்டு போட்ட சீட்டு இருந்துச்சாம். பெரிய மழை வந்தபோது தொலைஞ்சுபோச்சு.’’

‘`இன்னொண்ணு பண்ண முடியாது?’’

அம்மி பதில் சொல்லவில்லை. ‘`உஷ் கிளம்பு’’ என்றாள்.

ஸ்கூலில் எல்லாருக்கும் அல்வாவுடன் நாஷ்டா கிடைத்தது. கோலாகலமாக காந்தி ஜயந்தி நடந்தது. அவன் காந்தியைப்போல வேடமணிந்து நடுநாயகமாக மேடையில் அமர்ந்து ராட்டை சுற்றுகையில் ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடப்பட்டது. ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்.’

திரை இறங்கியபோது கரகோஷம் காதைப் பிளந்தது. தாத்தாவும் அம்மியும் வராதது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

தாத்தாவுக்குக் காண்பிக்க வேண்டும் என்று அவன் தன் உடுப்பைக் கழற்றாமல் வீட்டை நோக்கி நடந்தான். இடையில் இருந்த பூங்காவைக் கடந்து அவன் செல்ல வேண்டியிருந்தது. பூங்கா வாயிலில் ஒரு சிறுவன் சில படங்களை விற்றுக்கொண்டிருந்தான்.

‘`காந்தி படம் இருக்கா?’’ என்றான் சோட்டூ.

``இருக்கு, கண்ணாடிச் சட்டம் போட்டு. பத்துரூபா.’’

சோட்டு அந்தப்பொக்கைவாய்ச் சிரிப்புத் தாத்தாவை ஆசையுடன் பார்த்தான். சட்டென்று தன் பையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்து அதை வாங்கிக்கொண்டான்.

மிகப்பெரிய பொக்கிஷத்தை வைத்திருப்பதுபோல பெருமையாக இருந்தது.

பூங்காவில் வண்ண வண்ணத் தோரணங்கள் தெரிந்தன. மத்தள சத்தமும் பாட்டொலியும் கேட்டது. ஓ, இங்கேயும் காந்தி ஜயந்தி கொண்டாடறாங்க என்று அவன் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். ஒரு துள்ளலுடன் வேகமாக நடந்தான்.

பூங்காவின் ஒரு பகுதியில் ஒரு கும்பல் நின்றிருந்தது. விவேகானந்தர் படம் மட்டுமே அவனுக்குப் பரிச்சயமானதாக இருந்தது. யாரோ மூவர் படங்கள் ஒரு சிறிய மேஜையில் வைக்கப்பட்டிருந்தன.

காந்தி படம் இல்லை. அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் சற்று நேரம் அந்தக் கும்பலைப் பார்த்தபடி நின்றான். யாரோ மைக்கில் பேசினார்கள். கையை வீசி வீசி. என்ன சொல்கிறார்கள் என்று அவனுக்கு விளங்கவில்லை. சட்டென்று சந்தோஷம் ஏற்பட்டது. நேற்று அவனுக்குப் பத்து ரூபாய் கொடுத்த அண்ணன் நின்றிருந்தார். அவன் கிடுகிடுவென்று அவனருகில் சென்றான். ‘`அண்ணா, அண்ணா’’ என்றான் மெல்லிய குரலில். இளைஞன் திரும்பிப் பார்த்தான். சோட்டூவின் உடையைக் கண்டு புருவத்தை நெரித்து. ‘`யாரு நீ?’’

‘`நினைவில்லை? நேத்து உங்கவீட்டுக்குக் காய் கொண்டுவந்து கொடுத்தேனே, நீங்ககூட பத்து ரூபாய் கொடுத்தீங்க.’’

கும்பலில் நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

இளைஞன் குனிந்து, ‘`அதுக்கென்ன இப்ப?’’ என்றான்.

‘`அதுக்கு காந்தி படம் வாங்கினேன். இதை அந்த மேஜையிலே வையுங்க, காந்தி ஜயந்தி இன்னிக்கு, மறந்துட்டீங்களா?’’

‘`உஷ் உஷ்’’ என்று முணுமுணுப்புகள் துல்லியமாகக் கேட்டன.

இளைஞன் மறுபடி குனிந்து, ‘`கிளம்பு, காந்தி வேஷம் போட்டியா அதுக்காக?’’

சோட்டு லேசான பெருமையுடன் சொன்னான். ‘`ஆமாம் ஸ்கூல்லெ நாடகம் போட்டோம்.’’

‘`போ போ போயிடு, மத்தவங்க விரட்டறதுக்குள்ளே. இங்க அந்தப் படத்துக்கு இடமில்லே’’ என்றான் எரிச்சலுடன்.

சோட்டூவுக்கு ஏமாற்றமாக இருந்தது. நேற்று பார்த்த அண்ணன் இது இல்லை என்று தோன்றிற்று.

சிறுகதை: மறதி
சிறுகதை: மறதி

காலையில் இருந்த சந்தோஷம் அமுங்கிப்போனது.

அவனைக் கண்டதும் அம்மி அவனை அணைத்து முத்தமிட்டாள். அவன் காந்தியின் படத்தை அவளிடம் காண்பித்தான். ‘`ஒரு அண்ணன் நேத்து பத்து ரூபாய் கொடுத்தார்னு சொன்னேனே, அந்தக் காசிலே வாங்கினேன்.’’

‘`நல்ல பிள்ளை’’ என்றாள் அம்மி. ‘`பத்திரமா வெச்சுக்க.’’

‘`அம்மி, அந்த அண்ணனைப் பூங்காவிலே பார்த்தேன். அவங்க வேற யாரோட படத்தையோ வெச்சிருந்தாங்க. காந்திபடம் வேண்டாமாம்.’’

‘`நமக்கென்ன அதப்பத்தி?’’ என்றாள் அம்மி.

வீட்டு முற்றத்தில் தாத்தா உட்கார்ந்திருந்தார். அவன் ‘`தாத்தா, இதப்பாருங்க யார் வந்திருக்கிறது’’ என்று படத்தில் காந்தி நிற்பது போல நின்றான்.

தாத்தாவின் முகத்தில் மெல்லிய மலர்ச்சி படர்ந்தது. ‘`வா வா, காந்தி வேசம் போட்டியா?’’

அவன் விரைந்து அவருடைய கழுத்தை வளைத்து, கன்னத்தில் முத்தமிட்டான்.

‘`இப்படி இருந்தாரா காந்தி?’’ என்று பெருமையுடன் கையிலிருந்த படத்தைக் காண்பித்தான்.

தாத்தா மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தார்.

மெல்லப் புன்னகைத்தபடி சொன்னார், ‘`ஆமாம் ஆமாம், இப்படித்தான் இருந்தார். நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா என்னை யாரும் நம்பமாட்டாங்க.’’

‘`ஏன் தாத்தா?’’

தாத்தா எங்கேயோ பார்த்தபடி சொன்னார்.

‘`என் பேரே அவங்க புத்தகத்திலே இல்லாதபோது என்ன யார் நம்புவாங்க?’’

‘`உங்க பேர் ஏன் இல்லே?’’

‘`யாருக்குத் தெரியும்? காந்தி அதை அழிச்சிருப்பார், போற போக்கிலே.’’

அவனுக்கு அழுகை வந்தது. தாத்தாவின் மேல் கோபம் வந்தது. ‘`பொய், காந்தி ஏன் அப்படிச் செய்யணும்?’’

‘`எனக்கும் புரியல்லே கண்ணு.’’

தாத்தாவை எப்படி குஷிப்படுத்துவது என்று அவன் யோசித்தான்.

‘`காந்தி கதை சொல்லுங்க தாத்தா.’’

தாத்தா லேசாகப் பெருமூச்சு விட்டார்.

‘`சொல்றேன். எனக்கே மறந்துடும்போல இருக்கு. உக்காரு’’ என்றார்.

- வாஸந்தி

(12.12.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)