கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை : அன்றாடம்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

அழகிய பெரியவன்

பார்த்திபனுக்கு நெருக்கடி இல்லாத மிகவும் இலகுவான மனநிலை இருந்தது. உபரியாக நேரம் இருப்பதால் மெதுவாக வேடிக்கை பார்த்தபடியே வீட்டுக்குப் போய்ச் சேரலாம் என்று நினைத்தான். வீட்டில் இருக்கும்போது இப்படித் தோன்றினால், ஸ்கூட்டரையோ மிதிவண்டியையோ எடுத்துக்கொண்டு மனிதர்கள் இல்லாத காட்டுப் பகுதிக்கு அவன் செல்வதுண்டு. வெளியூரில் இருந்தால் பொறுமையாய் பயணம் செய்வதற்கு ஏற்றமாதிரி ஒரு பேருந்தைப் பிடிப்பது அவன் வழக்கம்.

பார்த்திபனுக்குப் பொதுவாக ரயில் பயணங்களே அதிகம் பிடிக்கும். ஆனால் முன்பதிவு செய்யாமல் மேற்கொள்ளும் ரயில் பயணங்கள் துன்பமானவை என்பதை அவன் பல நேரங்களில் உணர்ந்திருந்தான். மக்கள் கூட்டத்திற்கு இடையில் தன்னைச் செருகிக்கொண்டு சேலம் வரைக்கும் போன ஒரு மூன்று மணிநேரப் பயணம் அந்த வகையில் அவனுக்கு மறக்க முடியாதது. அன்றைக்குப் பார்த்து பொதுப் பெட்டியில் கூட்டம் பிதுங்கியது. இப்படி அப்படி நகர முடியவில்லை. சேலம் வருவதற்குள் அவனுடைய கால்கள் வீங்கிவிட்டன.காலையில் தேனாம் பேட்டை யிலிருந்து நண்பரின் அறையை விட்டுக் கிளம்பிய போது, இன்றைக்குப் பேருந்துப் பயணம்தான் என்று அவன் மனம் சொல்லிக்கொண்டது. கோயம்பேட்டுப் பேருந்து நிலையத்துக்குள் ஆட்டோ நுழைந்து பயணிகளை இறக்கிவிடும் இடத்தில் நின்றதும் பலவிதமான குரல்கள் அவனை ஓடிவந்து சூழ்ந்துகொண்டு, மக்கள் திரளுக்குள் புகுந்துவிட்ட எண்ணத்தை உருவாக்கின. ஆட்டோவை விட்டு இறங்கிக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, பேருந்து நிலைய வரவேற்பு வாசல் நடைமேடைப் படியில் ஏறிய பார்த்திபன், மெதுவாக நடந்து டிடெக்டர் பொருத்தப் பட்டிருக்கும் அலுமினிய வாசற்படிக்குள் நுழைந்தான். அந்த நிலையம் தொடங்கப்பட்ட சமயத்தில் அந்த டிடெக்டர்கள் உண்மையாகவே வேலை செய்தன என்பது அவனுக்குத் தெரியும். மறுபக்கமாகத் தாண்டிச் சென்ற பிறகு வாசல் கதவுக்கு மேலே இருக்கும் சிவப்பு நிற டிஜிட்டல் விளக்கு எரிகிறதா என்று அனிச்சையாக அண்ணாந்து பார்த்தான். நின்றிருந்த அகன்ற கூடம் பார்த்திபனுக்குள்ளே ஒருவகையான அச்சத்தை உருவாக்கியது. காத்திருக்கும் பயணிகள், நடமாடுவோர், கடைகளின் முன்னால் நிற்கும் நபர்கள் எல்லாருமாகச் சேர்ந்து போடுகின்ற சப்தம் மேலே எழும்பி, கான்கிரீட் கூரையில் மோதி எண்ணற்ற ஒலி நகல்களாய்ச் சிதறி அவன்மீது கொட்டின. வேலூருக்குப் போகின்ற பேருந்துகள் நிற்கும் இடத்தில் வண்டிகள் எதுவும் இல்லை. தண்ணீர் பாட்டிலையும், பத்திரிகைகளையும் வாங்கிக்கொள்ளலாம் என்று அங்கிருக்கும் கடைகளின் பக்கமாக நடந்தான். எங்கு பார்த்தாலும் மனிதர்கள். பயணிகள் உட்காருவதற்கென்று போடப்பட்டிருக்கும் சொற்ப இருக்கைகள் நிறைந்து இருந்தன. ஓர் அங்குல இடம்கூடக் காலியாக இல்லை. நடக்கும் வழியில் கடைப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. நாளேடுகளும், புத்தகங்களும் தொங்கவிடப்பட்டிருக்கும் கடைகளில் கண்ணாடிக் கூண்டுக்குள் பிஸ்கட்டுகள், காரவகைகள், இனிப்புகள், குளிர்பானங்கள் தெரிந்தன. ஒரு பக்கம் சிற்றுண்டிக் கடைகளையும் காண முடிந்தது. நேரப் பராமரிப்பாளர்களைச் சுற்றி நின்று நீலச்சீருடை அணிந்த நடத்துநர்களும், ஓட்டுநர்களும் பேசிக்கொண்டிருந்தனர். நிலையம் முழுவதும் அங்கங்கே நின்று நடத்துநர்கள் உரக்கக் கத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்ப்பெயர்கள் வலிந்து வந்து அவன் மனதில் இறங்கின. சில ஊர்களின் பெயர்களைக் கேட்டபோது இது எந்தப் பக்கம் இருக்கும் என்று மனதுக்குள்ளாகவே கேட்டுக்கொண்டான். தண்ணீர் பாட்டில் ஒன்றையும், ஆங்கிலத்தில் ஒன்று, தமிழில் ஒன்று என இரண்டு தினசரிகளையும் வாங்கிக்கொண்ட பார்த்திபன், பிஸ்கட்டுகள் எதையாவது வாங்கலாம் என்று விரும்பினான். ஆனால் அவை வெளியில் இருப்பதைவிடவும் அரைமடங்கு அதிகமான விலையில் இருந்தன. பார்த்திபனால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.“இது பகல் கொள்ளையில்லையா?”“கார்ப்பரேஷன்ல ஏலமெடுத்துதான் சார் கடையப் போட்டிருக்கோம். நாங்களும் நாலு காசு பாக்கணுமில்ல?”

சிறுகதை : அன்றாடம்

“என்னா அநியாயம் பாருங்க இது?” என்று சுற்றி நிற்பவர்களைப் பார்த்து அவன் சொன்னதும், கடைக்காரன் பார்த்திபனிடம் சீறினான்.

“உனுக்குத் தேவைன்னா கேட்டு வாங்கிணு போ சார், சும்மா ஆள் சேக்காத!”

பிஸ்கெட் எதையும் வாங்கிக் கொள்ளாமல் அவன் திரும்பியபோது இடைநில்லாப் பேருந்து ஒன்று வேலூருக்குச் செல்லக் காத்திருந்தது. இடை நிற்காது என்று எழுதியிருந்தாலும் பேருந்து சற்று தடிமனாக இருப்பதாகவே அவனுக்குப் பட்டது! அது புதிய பேருந்து. உள்ளே நாசியை நிமிண்டும் பிளாஸ்டிக் வாசனை சூழ்ந்திருந்தது. இருக்கைகளைச் சுற்றியிருந்த பாலிதீன் உறைகள்கூடப் பிரிக்கப்படவில்லை. பார்த்திபன் முன்படிக்கு அருகில் இருநபர் உட்காரும் இருக்கையாகப் பார்த்து சன்னலோரத்தில் உட்கார்ந்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பேருந்தின் முன்னால் வந்து நின்ற நடத்துநர், ‘வேலூர்… வேலூர்’ என்று அழைக்கத் தொடங்கியதும் அதற்காகவே காத்திருந்ததைப்போல சிலர் வந்து ஏறினார்கள். காவேரிப்பாக்கம், ஆற்காடு என்று கேட்டவர்களிடம், வண்டி கிளம்பும்போது ஏறிக்கொள்ளும்படி பதில் சொல்லிக்கொண்டே இன்னும் உரக்க அழைத்தார் நடத்துநர். மூக்கை வதைக்கும் பிளாஸ்டிக் நாற்றத்தை சகியாத பார்த்திபன் சன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பியதும், டீசல் புகை கலந்த கனத்த காற்று ஓடி வந்து அவன் முகத்தில் அறைந்தது. வண்டியை எப்போது எடுப்பார்களோ என்று இருந்தது. அவன் இப்படியும் அப்படியும் பார்த்தான். பேருந்துகள் இலகுவாகத் திரும்பிச் செல்வதற்கு ஏற்றாற்போன்ற சூழ்நிலை அங்கு இல்லை. அவை நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்தன. எப்படி வெளியில் போவோம் என்று அவனுக்கு மலைப்பாக இருந்தது.

மெல்ல மெல்ல பேருந்து முக்கால் பாகம் நிரம்பிவிட்டது. அவனுக்குப் பக்கத்தில் இன்னும் ஒருவரும் வந்து உட்காரவில்லை. அங்கு யாராவது ஓர் இளம்பெண் வந்து அமர்ந்தால் இதமாக இருக்கும் என பார்த்திபன் நினைத்தான். அந்த நினைப்பு தோன்றியதும் அவன் திரும்பிப் பேருந்து முழுவதும் எத்தனை பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஒருமுறை பார்த்தான். ஒரு சிலர் மட்டும் அங்கங்கே குடும்பத்துடனோ, தனியாகவோ உட்கார்ந்திருந்தனர்.

அவனுக்கு நேராக இருக்கும் மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் நடுவயதுப் பெண் ஒருவர் ஒரு சிறுமியுடன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எல்லாருமே தங்களின் கைப்பேசியில் மூழ்கியிருந்தனர். நேரிருக்கை சிறுமியும்கூட தன் அம்மாவிடமிருந்து கைப்பேசியைப் பறித்துப் பறித்து ஆடிக்கொண்டிருந்தாள்.

கீழே நின்றிருந்த நடத்துநர் வண்டிக்குள் ஒருமுறை ஏறிப் பார்த்துவிட்டு இறங்கி விசில் அடித்ததும் எங்கிருந்தோ வந்த ஓட்டுநர் தன் இருக்கைக்குப் பக்கத்திலிருந்த கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்தார்.

வண்டி மெதுவாகப் பின்னால் நகர்ந்து நகர்ந்து திரும்பி வெளியேறும் திசையை நோக்கி நின்று உறுமியது. நடத்துநர் கடைசி முறையாக அழைப்பதைப் போல முகம் தெரியாத பயணிகளை மேலும் சத்தமாக அழைக்கத் தொடங்கினார். இன்னும் சிறிது நேரத்தில் வண்டி கிளம்பிவிடும் என்று தெரிந்ததும் சிறிது உற்சாகமடைந்த பார்த்திபன் வெளியே கவனிப்பதை நிறுத்தி விட்டு, வாங்கி வந்திருக்கும் தினசரிகளில் ஒன்றை எடுத்து அது காற்றில் அலையாதபடி இரண்டாக மடித்து வைத்துப் படிக்கத் தொடங்கினான்.பேருந்து சிறிது நகர்ந்தபோது சிலர் ஓடிவந்து ஏறினார்கள். முன்படி பக்கமாகக் கைப்பேசியில் சிறிது சத்தமாகப் பேசிக்கொண்டே ஏறிய ஒருவர் பார்த்திபனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். வாசிப்பின் இடையில் தன் பக்கத்தில் வந்து அமரும் மனிதரை அவன் ஒருமுறை தற்செயலாகப் பார்த்துவிட்டு மீண்டும் செய்தித் தாளிலேயே புதைந்து கொண்டான். நடு வயதைக் கடந்திருந்த அவர் சற்று தடியான உடல் வாகுடன் சஃபாரி அணிந்திருப்பதாகவும், கையில் ஒரு ரெக்சின் பணப்பையை வைத்திருப்பதாகவும் வாசித்துக் கொண்டிருக்கும் செய்தியோடு பார்த்திபனுக்குத் தோன்றியது.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து கோயம்பேட்டுக் காய்க்கறிச் சந்தை சாலைக்குள் நுழைந்து பூவிருந்தவல்லி சாலையில் கலந்தது பேருந்து. அங்கங்கே கைகாட்டும் ஆட்கள் யாரையும் நடத்துநர் ஏற்றிக்கொள்ளவில்லை. பேருந்து முழுவதுமாக நிறைந்திருக்கும் என்று பார்த்திபன் எண்ணினான். பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்துக்கு முன்பாக சாலையில் சிறிது நேரம் பேருந்து நின்றது. அதற்குள் வண்டி யிலிருக்கின்ற எல்லாரிடமும் கட்டணத்தை வாங்கிக்கொண்டு சீட்டைக் கொடுத்த நடத்துநர், பின்வாசல் அருகிலிருக்கும் தனது இருக்கையில் போய் உட்கார்ந்திருந்தார். சிலர் பின்படி வழியாகப் பேருந்துள் ஏறினர். கமலாப்பழம் விற்கும் ஒருவர் அவர்களோடு ஏறி பயணிகள் எல்லாருக்கும் கையில் அடுக்கியிருந்த பழங்களைக் காட்டிக்கொண்டே முன்படி வழியாகக் கீழிறங்கிப் போனார். அவர் பழத்தின் பெயரையும் விலையையும் சொல்லியபடியே பார்த்துவிட்டு இறங்கியபோதுதான் தன் அருகிலிருக்கும் மனிதர் தொடர்ந்து கைப்பேசியில் பதற்றத்துடன் பேசிக்கொண்டு வருவது பார்த்திபனுக்கு உறுத்தியது. பேருந்து நகர்ந்ததும் அந்த மனிதர் என்ன பேசுகிறார் என்று கவனமாகக் கேட்டான் பார்த்திபன்.

``அந்தப் பையந்தாண்டா! அவங்க தங்கறதுக்கு வீடு பாத்துத் தந்திருக்கான். அவன விடக்கூடாது” அந்த மனிதர் யாருக்கோ உத்தரவு பிறப்பித்தார். அவர் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாகப் புரிந்துகொண்ட பார்த்திபன், அவரை நன்றாகப் பார்க்கலாம் எனத் திரும்பினான். குண்டாக இருந்த அவர் அவனை நெருக்கியபடி உட்கார்ந்திருந்ததால் அவனால் எளிதாகத் திரும்புவதற்கு முடியவில்லை.

சிறுகதை : அன்றாடம்

பதற்றத்தால் அவர் உடல் இலேசாக நடுங்குவதை அவன் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவரிடமிருந்து வீசிய வியர்வை நாற்றத்தைத் தவிர்ப்பதற்காக, தன் முயற்சியைக் கைவிட்ட பார்த்திபன், வெளிப்பக்கமாகப் பார்க்கத் தொடங்கினான். அவர் தனது இடது கையால் அவனை இடித்துக்கொண்டே பேசியபடி வந்தார். ஆர்வமிகுதியால் அவர் என்ன பேசுகிறார் என்பதை அவர் முகத்தைப் பார்க்காமலேயே அவ்வப்போது கூர்ந்து கேட்பதற்கு மட்டும் பார்த்திபன் முயற்சி செய்தான். பரங்கிமலை சாலையில் பேருந்து சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தபோது அவர் பேசுவதைக் காற்று தெளிவில்லாத ஓசையாக மாற்றியது. இப்போது வண்டியில் இருக்கிறவர்களின் பேச்சொலிகளும்கூடத் தெளிவாகக் கேட்கவில்லை. காற்று உள்ளே நுழைந்து சீறும் சத்தம் மட்டும் கேட்டது.

காற்றின் வீச்சுக்கு முகம் தாழ்த்திய பார்த்திபன் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினான்.ஆட்களின் சலசலப்பு கொஞ்சம் அதிகமாகக் கேட்டதும் பார்த்திபன் விழித்துக்கொண்டான். எந்த ஊராய் இருக்கும் என்று வெளியே பார்த்தான். தோட்டத்துக்கு நடுவே உயரமானதொரு கல்தூண் கண்ணில் பட்டதும் திருப்பெரும் புதூரைப் பேருந்து கடப்பது புரிந்தது. அவன் நன்றாகக் கண்களைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது குடித்துவிட்டு தன்னை இயல்பாக்கிக்கொண்டான். அருகிலிருக்கும் மனிதர் இன்னும் பேசியவாறே இருந்தார். குழப்பம் மேலிட்ட பார்த்திபன் அவருடைய பேச்சை கவனிக்க முற்பட்டபோது திடீரென்று எழுந்த பதற்றத்துடன் கிட்டத்தட்ட கத்துவதைப் போல அவர் பேசினார்.

``அந்த ஏரியாவ உட்டு அவங்க போயிடப் போறாங்க. பாத்துக்கங்க. இந்த பஸ் கொஞ்சம் ஸ்லோவா போகுது. ஆனாலும் கரெக்டா மூணு மணிக்கு ஸ்பாட்ல இருப்பேன்”காவேரிப்பாக்கத்துக்கு முன்னால் வந்த சாலையோர உணவகம் ஒன்றின் முன்னால் பேருந்து நின்றது. நடத்துநர் பயணிகளைப் பார்த்து சாப்பிடச் சொல்லிவிட்டு, கீழே இறங்கிப் போனார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற ஒருவர் விசாரிப்பதற்கு நடத்துநர் சொல்லிச் செல்லும் பதில் தேய்ந்து தேய்ந்து கேட்டது. “ஆமா சார். நார்மலா இங்கெல்லாம் நிக்கிறதில்லதான். என்ன செய்யறது, சாப்பாட்டு டைம். போயி எதானா சாப்புடுங்க. இதோ போயிடலாம்.”

சிறுகதை : அன்றாடம்

அருகிலிருந்த மனிதர் வேகமாகக் கீழே இறங்கியதும் பார்த்திபனும் இறங்கினான். அந்த மனிதர் ஆட்கள் இல்லாத இடமாகப் பார்த்து, பேசுவதற்குப் போனார். அவரைச் சில நொடிகள் பார்த்துவிட்டு எதையாவது கொஞ்சம் சாப்பிடலாமென உணவகத்துக்குள் நுழைந்தான். இரண்டு வாய்க்குப் பிறகு பார்த்திபன் கேட்டு வாங்கிய பரோட்டா ருசிக்கவில்லை. அதன் மேல் ஊற்றியிருந்த குருமாவில் இலேசாக பழைய வாடை அடிப்பதை உணரமுடிந்தது. அதை வைத்துவிடலாமா என்று நினைத்தபோது காசை வீணாக்கிட மனம் இடம் தரவில்லை. பார்த்திபன் மேசை கவனிப்பவரை அழைத்துக் கேட்டான்.“குருமாவுல பழைய வாட அடிக்குது?”“என்ன சார் இப்பிடி சொல்ட்டிங்க? நம்மகிட்ட பெசலே அதான் சார். கொஞ்சம் ரொம்பமா ஊத்திணு சாப்புடு சார். ஒண்ணுமில்ல. எல்லாம் புது ஐட்டம்தான்.” உணவகத்திலிருந்து வெளியே வந்து அந்தப் பகுதி முழுவதும் காய்ந்துகிடக்கும் சிறுநீர்த் தாரைகளை நோட்டம் விட்டபடி நெடுஞ்சாலை ஓரமாக ஒதுங்கிவிட்டு வண்டிக்கு அவன் வந்தபோது அந்த மனிதர் ஏற்கெனவே வந்து உட்கார்ந்து கைப்பேசியில் பேசியபடியிருந்தார்.

பார்த்திபன் அவருடைய கனத்த முட்டிகளை இடித்தபடியே சன்னலோரமாகப் போய் உட்கார்ந்த நேரத்தில் அவர் கனத்த குரலில் கைப்பேசியில் சொல்வது கேட்டது.

``எக்காரணத்தக் கொண்டும் அவங்க போலீஸ் டேசனுக்குப் போயிடக் கூடாதுடா. கூட்டி வெச்சி செஞ்சிருவானுங்க. அப்பறம் அந்தப் ப....க்கு அலையறவ அவங்கூடவே போறதா சொல்லிடுவா” அந்த மனிதருக்குக் குரல் நடுங்கியது. பார்த்திபனுக்கும் இலேசானதொரு நடுக்கம் தொற்றுவதுபோல இருந்தது. அந்த மனிதரின் பக்கம் திரும்புவதற்கு அவன் பயந்தான். அதன் பிறகு அவர் பேசுவதைக் கூர்ந்து கேட்பதற்கும் அச்சம் உருவானது. அவன் மீண்டும் ஒரு தினசரியை எடுத்து நான்காக மடித்து வைத்துப் படிக்கத் தொடங்கினான். ஆற்காட்டுப் புறச்சாலையில் பேருந்து போய்க்கொண்டிருந்த போது நேர் இருக்கையில் தாயுடன் இருக்கும் சிறுமி அழுகின்ற குரல் கேட்டதும் பார்த்திபன் திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த மனிதரும் பேசுவதை நிறுத்திவிட்டு அந்தச் சிறுமியை கவனித்துக் கொண்டிருப்பது அப்போது அவனுக்குத் தெரிந்தது. அடம் பிடித்து அழுகின்ற சிறுமியை அவளின் அம்மா செல்லமாய் அடித்தாள். ``தொந்தரவு செய்யறேன்னு போன்ல அப்பா கிட்ட சொல்லட்டுமா?!’’ ``ம்... வேணாமா?” “அமைதியா வந்தா, அப்பா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி வைக்கிறதா சொல்லி யிருக்காரு” அந்தப் பெண் தன் மகளிடம் சொல்லிக்கொண்டே மூர்க்கமாகக் கொஞ்சி முத்தம் கொடுத்தாள். பிறகு குட்டி மகளின் முகத்தைத் துடைத்து, காற்று கலைத்திடும் முடியைப் பின்னினாள். அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கைப்பேசியை சஃபாரியின் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டவராக வெளியே பார்த்தார். அவர் முகம் சற்றே நெகிழ்ந்தி ருப்பதுபோலத் தெரிந்தது. அவர் முதன்முதலாக சன்னலின் வழியே தன்னைக் கடந்து ஓடும் பூமியைப் பார்ப்பதாக நினைத்தான் பார்த்திபன். அவனும் அவருடன் சேர்ந்து வெளியே பார்க்கத் தொடங்கினான். பேருந்து சத்துவாச்சாரியைத் தாண்டுகிற போது அந்த மனிதருக்குக் கைப்பேசியில் ஓர் அழைப்பு வந்தது. அவர் சற்றே பரபரப்பு குறைந்தவராக எடுத்துப் பேசினார்.

``என்ன... என்னாடா சொல்ற? அப்பிடியா? முடிஞ்சிருச்சா? சரி விட்றா…” பேசிய பின்னர் கைப்பேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டுக்கொண்ட அந்த மனிதர் ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். வேலூர் வந்துவிட்டது. கிரீன் சர்க்கிளைத் தாண்டி சரவணபவனுக்கு எதிர்ப்பக்கமாக நின்ற பேருந்திலிருந்து இறங்குவதற்காக பார்த்திபன் எழுந்தபோது அவனுக்கு முன்னால் அந்த மனிதரும் இறங்கினார். கீழே இறங்கியதும் அந்த மனிதரின் முகத்தை ஒருமுறை தெளிவாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்த பார்த்திபன் அவரைத் தேடினான். அதுவரை மனதில் பதிந்திருந்த அவரின் பக்கவாட்டு முகம் மறந்துபோய் குழப்பம் ஏற்பட்டதனால், அங்கிருந்த மனிதர்களுக்கிடையில் அவரைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை.