Published:Updated:

சிறுகதை: கற்பூர பொம்மை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

ரா.செந்தில் குமார்

அம்மா எந்த அறையிலும் இல்லை. எங்கு போனாள்? வெளியிலிருந்து அழைப்பு மணியை விடாது அழுத்தியும், அவள் எழுந்துவரவில்லை. தூங்கியிருப்பாள் என்று நினைத்து, அலுவலகப் பையைத் துழாவி, மாற்றுச் சாவியைத் தேடி எடுத்துத் திறந்தால், அவள் வீட்டில் இல்லை.

பனிக்காலமென்பதால் நான்கு மணிக்கே இங்கு இருட்டிவிடும். மணி இப்போது ஏழரை காட்டுகிறது. எங்குதான் போயிருப்பாள் அம்மா? கீழ்வீட்டிலும் இந்நேரம் பாஸ்கர் வந்திருக்கக்கூடும். லாவண்யாவிடம் பேசிக்கொண்டிருக்கச் சென்றிருந்தாலும், மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவாள். இந்த இரண்டு மாதத்தில், ஒருமுறைகூட இப்படி அவள் போனதில்லை. கீழே செல்வதற்காக லிப்ட்டை அழுத்தினால், அது மேலே சென்றுகொண்டி ருந்தது. படிகளில் இறங்கிக் கொஞ்சம் நடந்தால் பாஸ்கர் வீடு.

அழைப்பு மணியை அழுத்தியபோது, லாவண்யாதான் கதவைத் திறந்தாள்.

``என்ன ராஜா சார்?’’

``அம்மா இங்கே வந்தாங்களா?

``இல்லையே. இன்னைக்கு அவங்க இங்கே வரவே இல்லையே.’’

``சரி, தேங்க்ஸ். ஒருவேளை பார்க்குலே உட்கார்ந்திருப்பாங்கன்னு நினைக்குறேன். அங்கே பாக்குறேன்.’’

எதிரிலிருக்கும் பூங்காவில் எப்போதும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். பகல்பொழுதுகளில் அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது, அம்மாவின் வழக்கம். பாஸ்கர் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுகூட அவரின் மகனைக் கொஞ்சத்தான். குழந்தைகள், மீதான அம்மாவின் பிரியம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். நாற்பது வயதான ஒரே மகன் இப்படித் துணையின்றி வாழ நேர்ந்தது அவளுள் மிகுந்த ஆற்றாமையை ஏற்படுத்தியிருந்தது. நர்மதா நினைவில் வந்தாள். கூடவே வேப்பிலையை மென்றதுபோல் ஒரு கசப்பும் நினைவில் எழுந்தது. ஒருவேளை நர்மதாவுடனான பிரிவைத் தவிர்க்க முடிந்திருந்தால் இந்நேரம் அம்மா தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும்.

பூங்கா காலியாகக் கிடந்தது. ஏழரை மணி இருட்டில் யார் தம்முடைய குழந்தைகளை விளையாட அனுமதிப்பார்கள்? இரு பக்கமும் அமர வசதியாக அமைக்கப்பட்டிருந்த மரபெஞ்சுகள் அனைத்தும் காலியாக இருந்தன. நீர்விழும் பவுன்டனைக்கூட நிறுத்தியிருந்தார்கள். பவுன்டனைச் சுற்றி நடந்தால் மேப்பில் மரங்களைத் தாண்டி மேலும் சில பெஞ்சுகள் உண்டு. அந்த பெஞ்சில் ஒரு வீடிலி அசாஹி பீர் பருகிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காலி டின்கள் மூட்டையாக இருந்தன. இந்தக் குளிரை எப்படித் தாங்குவார்? பிறந்ததிலிருந்தா இவர் வீடிலியாக இருப்பார்? மரத்திலான ஜப்பானிய வீட்டில் சுகமாக இருந்திருப்பார். நல்ல வேலையில் இருந்திருக்கவும்கூடும். NHK சேனலில், ஒருமுறை இதுபோன்ற வீடிலிகளைப் பற்றி டாக்குமென்ட்டரி காண்பித்தார்கள். இப்படி நதியோரம் கூடாரம் போட்டுத் தங்கியிருந்த ஒரு ஜப்பானிய முதியவர், பெரிய கம்பெனியை வைத்து நடத்தியவர். நட்டம் வந்து மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து எல்லாவற்றையும் இழந்து, வீடிலியாக மாறியவர். குடும்பம் என்னவாகியிருக்கும்? கொண்டுவந்தால்தானே மனைவி. ஆனால், என் அம்மா வெறும் கையில் முழம்போட்டவள்.

சிறுகதை
சிறுகதை

அம்மா திருமணத்துக்கு இருபது கார்களில் மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள் என்று அடிக்கடி சொல்வாள். பழைய கதையைப் பேசும்போது அவள் கண்கள் மின்னுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். கார்கள், வரிசையாக வயலோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கறுப்புவெள்ளைப் புகைப்படம் ஒன்றைச் சிறுவயதில் பார்த்திருந்தேன். கால்களின் நுனியில் இறுக்கமாகவும், தொடைகளில் பலூன்போலவும் உள்ள, பேகி பேன்ட் அணிந்து, அப்பா ஜெமினிகணேசன்போல் முன்னால் நிற்பார். திருமணமாகி ஆறு வருடங்கள் கழிந்து நான் பிறந்தேன். அந்த ஓரிரு வருடங்கள் அவள் மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும்.

அடிக்கடி, நினைவில் எழுபவை, நடுராத்திரியில் கண்விழித்து, அருகில் அம்மா இல்லாதது கண்டு, அழுதபடி தேடும் ஞாபகம். அம்மா பூஜை அறையில் அழுதபடி அமர்ந்திருப்பாள்.

அருகில் சென்று கட்டிக்கொள்வேன். எதுவும் பேசாமல் தாரைத் தாரையாகக் கண்ணீர் விட்டபடி அமர்ந்திருப்பாள். மற்றொரு நினைவு... அப்பா வேட்டியும் பனியனும் அணிந்து, தேக்கு மரக் கதவின் பித்தளைக் கைப்பிடியைச் சுத்தியலால் அடித்து உடைத்தெடுக்கும் காட்சி. நான்குகட்டு வீடுதான் என்றாலும் எத்தனை பித்தளைக் கைபிடிகள் தேறும்?

பூங்காவின் மறு எல்லைக்கு, வந்தாகிவிட்டது. இங்கு அம்மா இல்லை. எங்கே போனாள்? டோக்கியோ அழைத்துவந்தபின், அவசரத்திற்குக் காய்கறிகள் வாங்க டிபார்ட்மென்ட் ஸ்டோர் செல்வதற்கு, பணம் செலவழிப்பதற்குக் கற்றுக்கொடுத்திருந்தேன்.

ஆனால் அவள் ஒருபோதும் இரவுகளில் செல்வதில்லை. என்னுடைய வருகைக்காக உணவு சமைத்துவிட்டு அமர்ந்திருப்பாள். இன்று உணவு எதுவும் சமையலறையில் இல்லை என்பது நினைவில் எழுந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. என்னதான் ஆனது? எங்கேயாவது வாக்கிங் சென்று மயக்கம் வந்து விழுந்திருந்தால் என்ன செய்வது? பேசாமல் வீட்டில் உட்காராமல் எதற்கு இவளுக்கு இந்த வேலை. கோபம் வந்தது.

கசாய் ரயில்வே ஸ்டேசன் அருகிலிருக்கும் அங்காடிக்குச் சென்றிருப்பாளா? ஐந்து தளங்கள் கொண்ட அந்த அங்காடியில் ஒவ்வொரு தளமாகத் தேடினேன். அம்மா எங்கும் இல்லை.மணி ஒன்பதரை ஆகிவிட்டது. பயத்தில் வேர்த்திருந்தது. மூன்றாம் தளத்தில் அரவிந்த் தனது குடும்பத்துடன் உணவகம் சென்றுவிட்டு வெளியே வந்தான். என் முகத்தைப் பார்த்தவுடன் ``ஏதாவது பிரச்னையா, ராஜா சார்?’’ என்றான். அலுவலகத்தில் எனக்கு ரிப்போர்ட்டிங் செய்பவன், அரவிந்த். அந்த நேரத்தில் அவனைப் பார்த்தது கொஞ்சம் தைரியமாக இருந்தது

``அம்மாவைக் காணும். தேடுறேன். வீட்டில் இல்லை.’’

``எங்கேயாவது நண்பர்கள் வீட்டுக்குப் போயிருக்கப்போறாங்க.’’

``அம்மாவுக்கு இங்கே அவ்வளவாக யாரும் தெரியாது. பாஸ்கர் வீட்டுக்குத்தான் போவாங்க. அங்கேயும் இல்லை. அதான் குழப்பமா இருக்கு.’’

அரவிந்தே சில நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்தான். ஏதோ தவறாகிவிட்டது என்று பட்டவுடன் முதுகுத்தண்டு சில்லிட்டது.

அப்பா கடைசி வீட்டு நிலை வரை விற்றுத்தீர்த்த பின்பு, சட்டென்று ஒரு நாள் ‘நெஞ்சு வலிக்குது’ என்று அமர்ந்தவர் எழவேயில்லை. பிறகு ஒரு நாள், அம்மாவுடன் தாய்மாமா வீட்டுக்குச் சென்றது நினைவில் இருக்கிறது . வீட்டு வாசலில், தண்ணீர் இறைக்கும் மோட்டாரைக் கழற்றிக்கொண்டிருந்தவர், எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. பாட்டி மட்டும் வந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு, என்னை அழைத்துக் கொண்டுபோய் உக்ராணம் அருகே உட்காரவைத்துச் சோறுபிசைந்து தந்தாள். அம்மா கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை நிறுத்திக்கொண்டாள். விடுமுறை நாள்களில் சித்திகள் தங்கள் குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்கு வருவார்கள். அவர்களின் குழந்தைகளான விக்கி மற்றும் ராமின் பழைய பேன்ட் சட்டைகள் எனக்குச் சரியாக இருக்கும் எனக் கொண்டுவந்து தருவார்கள். அவர்கள் ஊருக்குப் போகும்வரை, அதைப்போட மனசு வராது. அவர்கள் எப்போது விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்வார்கள், அதை அணிந்து பள்ளிக்கூடம் செல்லலாம் என்று இருக்கும்.

சிறுகதை
சிறுகதை

ஒரு கட்டத்தில் வைராக்கியமாகப் படித்து முடித்து, சென்னையிலிருந்த கம்பெனியிலிருந்தே டோக்கியோ அனுப்பப்பட்டு, இங்கு டைரக்டர் அளவுக்கு வளர்ந்த பின், அப்பாவின் சொந்த ஊரில் புதியதாக வீடுகட்டி அங்கு அம்மாவைத் தங்க வைத்தேன். அம்மா திரும்பவும் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது, அப்போதுதான். எனக்குப் பெண் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தாள். எங்கு அழகான பிள்ளைகளைக் கண்டாலும், எங்க ராஜாவுக்குக் குழந்தை பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்பாள். திருமணம் நிகழ்ந்து, விவாகரத்தும் முடிந்தாகிவிட்ட இந்த ஏழு வருடங்களில், திரும்பவும் பூஜை அறையில் அமர்ந்து அழத் தொடங்கியிருக்கக்கூடும், அம்மா.

அரவிந்த் அழைத்த நண்பர்கள், வீட்டுக்கு வந்துசேரும்வரை எல்லாச் சாத்தியங்களையும் யோசித்துக்கொண்டிருந்தோம். மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.

நண்பர்களுடன் வந்த மூர்த்தி வயதில் மூத்தவராகத் தெரிந்தார். அருகிலிருக்கும் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணைத் தேடி, அங்கு அம்மாவின் விவரங்களைச் சொல்லிக்கேட்டார். மறுமுனையில் அப்படி யாருமில்லை என்று ஜப்பானிய மொழியில் சொன்னார்கள்.

``நாம எதுக்கும் போலீஸ்லே ஒரு கம்ப்ளயின்ட் கொடுத்துடுவோம்” என்றார் மூர்த்தி.

கோபானில் உட்கார்ந்திருந்த போலீஸ்காரர், சிறு வயதுக்காரராகத் தெரிந்தார். ஒரு பெரிய கேஸாக இதைப் பாவித்து, தானே அதைப் பதிவு செய்வதில் உற்சாகம் கொண்டவராய் ஏகப்பட்ட விவரங்கள் கேட்டார். முகவரி உள்ளிட்ட விவரங்களை எழுதச் சொன்னார். மறதியில் விட்டுப் போன பர்சுகளைப் பற்றிய புகார்களே வரும் ஸ்டேசனில், ஆட்களைக் காணவில்லை என்பது பெரிய புகார்தானே. கைப்பேசியில் இருந்த அம்மாவின் புகைப்படத்தை எடுத்து பிரின்ட் செய்யும்போது அழுகை வந்தது. எங்கே போனாய் அம்மா?

போலீஸ்காரர், விவரங்களை ஃபேக்ஸில் அனுப்பினார். சற்றுநேரம் கழிந்து, கொஞ்சம் பெரிய ஆபீசர் போலிருந்த நக்கஹாமா ரோந்து முடித்து வந்தார்; முதல் போலீஸ்காரர் கேட்ட அதே விவரங்களைக் கேட்டார். மூன்று மாத விசாவில், இந்தியாவிலிருந்து அம்மா டோக்கியோ வந்ததை, அவருக்குத் தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாததைச் சொன்னபோது குரல் விம்மியது.

``கவலைப்படாதீங்க ராஜா. எப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்க. ஒருவேளை உடம்பு சரியில்லாம ஆம்புலன்ஸ்லே எங்கேயாவது ஹாஸ்பிடலுக்குக் கொண்டு சென்றிருந்தால்கூட இந்நேரம் போலீஸ் விசாரிச்சுட்டிருப்பாங்க” என்றான் அரவிந்த்.

வீட்டுக்குத் திரும்ப மனசில்லாது வாக்கிங் போகும் வழியெல்லாம் தேடிவிட்டு விடியற்காலை மூன்று மணிக்குத் திரும்பினேன். அம்மாவுக்கு சக்கரைநோய் உண்டு. நேரத்திற்கு சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிட்டாளா? தெரியவில்லை. பேசாமல் இந்தியாவில் இருந்திருப்பாள்.

வற்புறுத்தி அவளை இங்கே அழைத்துவந்தது தவறு காலை விடிந்தவுடன், கதவருகில் நின்றிருப்பாள் என்று எப்படியோ எண்ணிக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தேன். விடியற்காலையிலேயே அலுவலகம் செல்லும் பக்கத்து வீட்டு சிமுரா, காலை வணக்கம் சொல்லியபடி லிப்ட் நோக்கிச் சென்றார்.அலுவலகத்திற்கு லீவ் சொல்லிவிட்டு, திரும்பவும் கோபான் செல்லத் தயாரானேன். கோபானில் இந்த ஸ்டேசனுக்கு உட்பட்ட தகவல்கள்தானே தெரியவரும். பேசாமல் மையக் காவல் நிலையத்துக்குச் சென்றால் என்ன என்று தோன்றியது. கைப்பேசியில் முகவரி தேடி, காரில் உள்ளிட்டேன். பாதி வழியில் இருக்கும்போது கைப்பேசி அடித்தது.

``ஹலோ, இது ராஜாவா?’’ என்றது ஒரு குரல்

``ஆமாங்க, ராஜாதான் பேசுறேன்.’’

``நான் தமிழ்ச்சங்கச் செயலாளர் வினோத் பேசுறேன். உங்க அம்மாவைப் பற்றிப் பேசணும்.’’

காரை ஓரமாக நிறுத்தி, “சொல்லுங்க சார்” என்றேன்.

``இல்லை, உங்க அம்மாவை டோக்கியோ காவல் நிலைத்தில் வச்சிருக்காங்க. நீங்க உடனே டோக்கியோ வரமுடியுமா?’’ என்றார்.

டோக்கியோவின் மையக் காவல் நிலையம் மிகப்பெரிய வெள்ளைநிறக் கட்டடமாக இருந்தது. ஏகப்பட்ட போலீஸ் கார்கள் சைரனுடன் வெளியே நின்றிருந்தன. நீல நிற யூனிபார்மில் காவல்துறையினர் குழுமியிருந்தார்கள். கட்டடத்துக்கு வெளியேயே உடல் பருமனான ஒரு தமிழர் கோட்சூட் அணிந்து நின்றிருந்தார். கூடவே கோட்சூட்டில் மத்திய வயது இந்தியப் பெண்மணி ஒருவர் நின்றிருந்தார். கைகுலுக்கி, ``ஐ யம் வினோத். இவங்க, வித்யா. எங்க அட்வைசர் கமிட்டி” என்றார்.

சிறுகதை
சிறுகதை

``நீங்கள் கொஞ்சம் நாங்க சொல்றதை பதற்றப்படாம கேட்கணும்” என்றார் வித்யா.

``சொல்லுங்க மேடம். என்னாச்சு அம்மாவுக்கு?’’

``உங்க அம்மாவை ஷாப் லிப்டிங் குற்றத்திற்காக, டோக்கியோ போலீஸ் அரெஸ்ட் செஞ்சிருக்காங்க.’’

காலடியில் நிலம் நழுவுவதுபோல் இருந்தது. ``அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை” என்றேன் தன்னிச்சையாக.

``நிச்சயம் ராஜா. நீங்க பெரிய பொசிஷன்லே இருக்கீங்க. கண்டிப்பா உங்க அம்மாவுக்கு அங்காடியில் திருடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இங்கே நம்ம ஊர்போல் ஆட்கள் கண்காணிக்கிறது இல்லைங்கிறதால, தெரியாதுன்னு நினைச்சு செஞ்சிருப் பாங்களோன்னு யோசிக்கவேண்டி இருக்கு.”

``இல்லை அப்படி எந்த சபலமும் அம்மாவுக்கு வரவாய்ப்பில்லை.’’

``நீங்க இங்கே பதினஞ்சு வருசமா இருக்கீங்க ராஜா. இங்குள்ள போலீஸ் பொய் சொல்லமாட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியும்” என்றார் வினோத்.

“நிச்சயம் ஏதோ குழப்பம் நடந்திருக்கு. அவங்களுக்கு ஜப்பானிய மொழி தெரியாது.”

“ஆமா, ஆனா இது மொழிப் பிரச்னை இல்லை. அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பத்துப் பொருள்கள் எடுத்துட்டு, ஐந்து பொருள்களுக்கு மட்டும் பில் போட்டுட்டு வெளியே வர முயற்சி செஞ்சிருக்காங்க. பார்கோடு இருக்கிறதால, அலாரம் அடிச்சி, டிபார்ட்மென்ட் ஸ்டோர்லே இருந்து போலீஸுக்குப் புகார் செஞ்சு, வெளியே வச்சு அவங்களை செக் பண்ணி அரெஸ்ட் செஞ்சிருக்காங்க. அவங்க பேசுற மொழி தமிழ்னு தெரிஞ்சு, போலீஸ் எங்களைத் தொடர்பு கொண்டாங்க. இப்போதான், நான் அவங்க கிட்டே பேசி என்ன நடந்துச்சுன்னு கேட்டேன். உங்க அம்மாதான் உங்க பேரைச் சொன்னாங்க. அப்புறம் சில நண்பர்கள் மூலமா உங்களைப் பிடிச்சோம்.”

“ஆதாரத்தோடு பிடிச்சிருக்கிறதால, உங்க அம்மாகிட்டே என்ன நடந்துச்சுன்னு போலீஸ் கேட்ட கேள்விகளை அவங்களுக்கு டிரான்ஸ்லேட் செஞ்சு கேட்டேன். அவங்க, அந்தப் பொருள்களை எடுக்கவே இல்லைன்னு திரும்பத் திரும்ப சொல்லுறாங்க. இது கொஞ்சம் காம்ப்ளிகேட் ஆக்கிடுச்சு. செய்த குற்றத்தை ஒத்துக்கலைங்கிறதை, போலீஸ் தப்பா நினைக்கிறாங்க. லாயர் ஏற்பாடு செஞ்சிருக்கோம். எங்களால் செய்ய முடிஞ்சதைச் செய்றோம். நீங்க நேராப் பார்த்து அவங்களை ஒத்துக்கச் செஞ்சி, மன்னிப்பு கேட்கச் சொன்னா, குறைந்தபட்ச தண்டனையோடு விடுவிக்கலாம். இல்லைன்னா, ரொம்பக் கஷ்டமாயிடும்.”

உள்ளே சென்று, போலீஸ் நீட்டிய தாள்களிலெல்லாம் கையெழுத்திட்ட பின்பு, லாக்கப்புக்குள் அனுமதித்தார்கள். சர்க்கஸ் கூடாரத்துக்குள் மாட்டிக்கொண்ட குழந்தைபோல் எல்லாவற்றையும் வேடிக்கைபார்த்தபடி, சேலைத் தலைப்பைத் தலையில் சுற்றியபடி அமர்ந்திருந்தாள் அம்மா.
சிறுகதை: கற்பூர பொம்மை

என்னைப் பார்த்தவுடன், ``ராஜா’’ என்று எழுந்து வந்து கன்னத்தைத் தடவினாள். மொழிதெரியாத ஊரில் இப்படி மாட்டிக்கொண்டாளே என்று நினைத்தபோது அடக்கமுடியாமல் அழுதேன்.

``ராஜா, நான் வெங்காயம், தக்காளிதாண்டா வாங்கினேன். அந்தப் பொருளெல்லாம் எப்படி வந்துச்சுன்னே தெரியலைடா. போலீஸ்காரன் நம்பமாட்டேங்குறாண்டா” என்றாள்.

ஏதோ தோன்ற, வெளியே வந்து ``அந்தப் பொருள்களைப் பார்க்கமுடியுமா?”என்றேன். போலீஸ்காரர், ஒரு பிளாஸ்டிக் பையிலிருந்து முதலில் காய்கறிகளை எடுத்துப் பரப்பி ``இதற்கெல்லாம் பணம் செலுத்திவிட்டார்கள்” என்றார். வேறு ஒரு பையில் கையை விட்டு விதவிதமான குழந்தைகள் பொம்மைகளை எடுத்து டேபிளில் பரப்பினார். ஸ்கார்ட் அணிந்து, பாப்கட்டிங்க் செய்த பெண் குழந்தையின் பொம்மை, ஜப்பானியக் கன்னங்களும், சிவப்பு நிற உதடுகளுமாய்ச் சிரிக்கும் ஆண் குழந்தையின் பொம்மை என விதவிதமான ஆடைகளுடன் சிரிக்கும் குழந்தைகள் பொம்மைகள். “இவையெல்லாம், அவர் பணம் செலுத்தாமல் எடுத்துச்செல்ல முனைந்தது” என்றார் அந்தப் போலீஸ்காரர்.