Published:Updated:

சிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

எம்.ஜி.கன்னியப்பன்

மையலறையில் இயல்புக்கு மீறின பாத்திரங்கள் உருளும் சத்தம் வருகிறதெனில் சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் என ஏதோ ஒன்று தீர்ந்துவிட்டது என்பதையும், `அதைக்கூட கவனிக்காம வீட்ல இருந்து அப்படி என்ன வெட்டி முறிக்கிறீங்க?’ என்பதற்கான அறிகுறியே அந்தப் பாத்திரப்போர்.

``இந்த வீட்டுல எல்லாத்தையும் நானேதான் கவனிக்கணுமா..?’' என்ற மிகப்பெரிய கேள்விக் கணையோடு ஆவேசமாய் நெருங்கும் மனைவியிடம் ``என்னடி ஆச்சி செல்லம்...” என்ற சமாளிப்புக் கொஞ்சல்கள் எப்போதாவதுதான் பலனளிக்கும்.

“என்னம்மா வேணும், சொல்லு வாங்கிட்டு வர்றேன்” என்ற எனது நியாயமான கேள்விக்கு முறைப்பு ஒன்றையே பதிலாகத் தந்ததால், நானே ஆராய்வது என முடிவுடன் சமைய லறைக்குச் சென்றேன். ஒவ்வொரு டப்பாவையும் திறந்து பார்த்தேன். கிட்டத்தட்ட எல்லாம் இருந்தது போலத்தான் தெரிந்தது. புளி மேல்தான் ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதையும் திறந்து பார்த்தேன். பத்து பதினைந்து வவ்வாள்கள் கட்டிப்பிடித்துக் கிடப்பதுபோல் நிறையவே இருந்தது. சமையல் எண்ணெய் காலியாக வாய்ப்பில்லை; நேற்றுதான் ஒரு லிட்டர் வாங்கி வந்தேன். மற்றபடி எல்லாம் இருந்த திருப்தியுடன் வெளியே வந்தேன்.

கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!
கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

“எல்லாம்தான் இருக்கே மஞ்சு?”

``ம்… ஸ்டவ் எரியுதான்னு பாத்திங்களா?” என்றபோதுதான் அதைக் கவனிக்காமல் விட்டது நினைவுக்கு வந்தது. சற்றுக் குனிந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். குனிய ஏற்பட்ட சோம்பேறித்தனத்தால் அதைமட்டும் கவனிக்கவில்லை. முக்கியமான விஷயத்தை எப்படி மறந்தேன். மாசம் 15-ம் தேதிகளில் மறக்காமல் `ரீபிள் புக் செய்ய எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற கம்ப்யூட்டர் பெண்ணின் ஆணைக்கிணங்க எண் ஒன்றை அழுத்திக் கொண்டுதானே இருந்தேன். ஐயகோ… இந்தக் கோரச்சம்பவம் எப்படி நிகழ்ந்தது?

விடுற அளவுக்கு கிருஷ்ணாயில் விற்பது மோசமா என்ன..? கஞ்சாவா போலீஸ் புடிக்கிறதுக்கு.

“ 5 நிமிஷத்துல கிருஷ்ணாயில் வாங்கிட்டு வந்துடுறேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் மண்ணெண்ணை ஸ்டவை யூஸ் பண்ணு மஞ்சு” என்றுவிட்டு 2 லிட்டர் `கூல் ட்ரிங்க்’ஸ் பாட்டில்லொன்றை எடுத்துக் கொண்டு கிளம்பிய சமயத்தில்…

“பரண்ல இருக்கிற ஸ்டவ்வை யாரு உன் அண்ணன் தம்பி எடுத்துத் தருவாங்களா இல்ல, சித்தப்பன் பெரியப்பன் வருவாங்களா?” என்றாள் கைகட்டிக் கொண்டு… 360 மீட்டர் தூரத்தில் இருக்கும் சொந்தங்களை வம்புக்கிழுத்தாள். அதற்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தால் வீண் நேர விரயம் என்பதைத் தாண்டி, எப்படியும் இறுதியில் விட்டுக் கொடுத்தலே எனக்குப் பழகிய ஒன்று என்பதால் பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். இப்போதே இரவு 8.00 மணியாகியிருந்தது.

ஒன்று மனைவிக்கும், மற்றொன்றை என் மறதிக்குமாக அழுத்தமான இரண்டு உதைக்கு பைக் உயிர்த்தது.

பல ஆண்டுகளாய் மளிகைப் பொருள்கள் வாங்கும் குமார் கடைக்குச் சென்றேன். இரவு என்பதால் அவ்வளவு கூட்டமில்லை. உளுந்து எடை போட்டுக்கொண்டிருந்த குமாரிடம் பாட்டிலைப் பையோடு நீட்டி “குமாரு, ரெண்டு லிட்டர் கிருஷ்ணாயில் ஊத்து என்றேன்” உளுந்தின் எடை சரிபார்த்துக் கொண்டிருந்த பெண் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் 25% ஏளனம் இருந்தது.

எடைத் தட்டிலிருந்து லாகவமாய் பேப்பரை இழுத்துப் பொட்டலம் கட்டிக்கொண்டே ”அண்ணே என்ன கேட்டிங்க, கிருஷ்ணாயிலா? எந்தக் காலத்துலண்ணே இருக்கிங்க. நம்ம கடையில மண்ணெண்ணெய் வித்து அஞ்சு வருஷத்துக்கு மேலாவுது” என்றான். உளுந்துக்குப் போக பாக்கி சில்லறை கொடுத்துக்கொண்டே.

”விடுற அளவுக்கு கிருஷ்ணாயில் விற்பது மோசமா என்ன..? கஞ்சாவா போலீஸ் புடிக்கிறதுக்கு..?”

”அதில்லண்ணே... நீங்களே பாருங்க எத்தன வருஷம் கழிச்சி வந்து கிருஷ்ணாயில் கேக்குறிங்க” என்றான்.

அவன் கேள்வியிலும் நியாயம் இருந்தது. ``வேற எங்க கெடைக்கும் குமாரு?”

”வேற கடையில கேட்டுப்பாருங்க. எனக்கு சரியா தெரியலை” என்றான். மீண்டும் பையை பைக் சைடு கொக்கியில் மாட்டிக்கொண்டு, தெருமுனையில் இருந்த இன்னொரு மளிகைக் கடைக்குச் சென்றேன். கடையில் முதியவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார்.

”ஐயா நம்ம கடையில மண்ணெண்ணெய் இருக்கா..?’

”இல்லையே தம்பி. அதான் வீட்டுக்கு வீடு கேஸ் ஸ்டவ், எலக்ட்ரிகல் அடுப்பு வந்துடுச்சே. கிருஷ்ணாயில் ஸ்டவ்வெல்லாம் யாரும் சென்னைல யூஸ் பண்றதில்லை. அப்படி யூஸ் பண்ணினாலும் வாடகைக்கு வீடு விடமாட்டாங்க...”

”சமைக்கும்போது திடீர்னு கேஸ் தீர்ந்துடுச்சி. ஆரம்பத்துலேயே தெரிஞ்சிருந்தா ஹோட்டல்லயாவது சாப்பிட்டிருப்போம். சமைச்சது எல்லாம் வீணாயிடும் அதான் பாக்குறேன்…” என்றதும் அனுதாபத்தோடு சில நொடிகள் பார்த்தார். ஒரு வேளை வீட்டில் எதற்காவது வைத்திருந்து, `இருப்பா வர்றேன்’ என்று ஒரு லிட்டரோ, அரையோ கொண்டு வந்து கொடுப்பார் என்று எதிர் பார்த்தேன். ம்கூம். டேபிள்மீதிருந்த செல்போனை எடுத்துக்கொண்டு பருப்பு, சோப்பு, மைதா என ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்.

கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!
கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

அதற்குமேல் நிற்பது தன்மானதிற்கு அவமானம் என்பதால் அங்கிருந்து மீண்டும் கிளம்பினேன். சாலிகிராமத்தில் கிடைக்கா விட்டால் என்ன, கே.கே. நகரில் இல்லாமலா போய்விடும். இப்போது பைக்கை கே.கே. நகர் நோக்கி விரட்டினேன்.

கே.கே நகர் கடைகளிலும் 5 இல்லை, 4 ஏளனப் பார்வை, 3 முகச்சுளிப்புகளோடு அங்கிருந்து வளசரவாக்கம் போகலாமென்று முடிவு செய்தேன்.

கிருஷ்ணாயில் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் ஒருபுறம் இருக்க, `என்னதான் ஆச்சி இந்த கிருஷ்ணாயிலுக்கு?’ என்கிற ஆர்வம் தலை தூக்கி, பாம்புபோல் படமெடுக்க, எங்கு தேடியாவது இன்று ஒரு சொட்டு கிருஷ்ணாயிலோடுதான் வீட்டுக்குள் நுழையவேண்டும் என்று வைராக்கியத்தை வலிய ஏற்றிக் கொண்டதோடு, என்னைப்போல இன்னொரு குடும்பஸ்தன் கிருஷ்ணாயிலுக்கு `லோல்’படும்போது இங்கே கிடைக்கும் என்ற தகவலைச் சில கடைகளுக்குப் பதிவு செய்யவேண்டும் என்கிற பொது நோக்கத்தோடும், சிந்தனையோடும் சற்றும் அயராத சிந்துபாத்தாய்க் கிளம்பினேன்.

ஒரு காலத்தில் உடம்பில் ரத்தம் எப்படியோ அப்படித்தானே ஒவ்வொரு குடும்பத்துக்கும் மண்ணெண்ணெய் முக்கியமாக இருந்தது. ரேஷன் கடைகளில் மணிக்கணக்கில் நீண்ட `க்யூ’வில் நின்று 5 லிட்டர் சீமெண்ணெய் கேனோடு வீடு போய்ச் சேருவதென்பது, எம்.ஜி.ஆர் படத்துக்கு முதல் நாள், முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்குவதுபோல் அத்தனை சிரமமானது. அப்படிப்பட்ட கிருஷ்ணாயிலுக்கு இன்று வந்த நிலையைப் பார்த்து கண்ணில் கிருஷ்ணாயிலே வடிந்தது.

சிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

நண்பர்கள் யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாமே என்று சட்டெனத் தோன்றிய ஐடியாவைச் செயல்படுத்த, நண்பர் போரூர் ஆனந்தனுக்கு போன் போட்டேன். ”அப்டியா… என் வீட்டுல ரெண்டு சிலிண்டர் இருக்கிறதால கிருஷ்ணாயில பத்தி நெனைக்கிறதே இல்ல. அடுத்த மாசம் ரேஷன் கடையில ஊத்துனா வாங்கி வைக்கிறேன்” என்றார். இரண்டு சிலிண்டர் உள்ளவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் இல்லை என்கிற தகவல் அவருக்குத் தெரிந்திருந்தாலும் ஆறுதலுக்காகச் சொல்கிறார் என்று புரிந்து கொண்டேன். இன்னொன்று, அடுத்த மாதம் வரை அவகாசம் இருந்தால் மூலிகை கிருஷ்ணாயிலே தயாரித்துவிடலாம்.

அடுத்து, முருகேசுக்கு போன் போட்டேன். ”ஸாரி நண்பா… கிருஷ்ணாயில் கேட்கிறதுக்கு வேற ஆளே கெடைக்கலையா? பேச்சிலர் ரூம்ல சமைக்கிறதே அபூர்வம். இதுல கிருஷ்ணாயில் எங்க வெச்சிக்கிறது, அது என்ன கலர்ல இருக்குங்கிறதே மறந்து போச்சி.சரக்கு வேணா இருக்கு. வந்து ஒரு `கட்டிங்’ போடறதுன்னா வா” என்றான் `ஆல்கஹால்’ கலந்த தமிழில். இரவு 9 மணிக்கு மேல் பேச்சிலர் பையனுக்கு போன் போட்டது எவ்வளவு பெரிய `இடியட்’தனம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

உங்களுக்கு வேணா ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வரட்டான்னு கேக்கத்தான் கால் பண்ணினேன் என்று வெந்த புண்ணில் வெங்காயத்தை தேய்த்தார்.

சட்டென… இப்படிச் செய்தால் என்ன என்று எனக்குள் கொழுந்து விட்டு பிரவாகித்ததை ஒரு மின்விளக்குக் கம்பம் அடியில், வாட்டர் கேனுடன் நின்று ஒரு செல்ஃபி எடுத்து `உடனடியாக இரண்டு லிட்டர் கிருஷ்ணாயில் தேவை’ சாலிகிராமம், வடபழனி, வளசரவாகம் நண்பர்கள் மட்டும் பதிலிடவும் என்று முகநூலில் உலாவ விட்டேன்.

சிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

பதிவிட்ட 9 வது நிமிடத்தில் 13 நண்பர்கள், நான் மண்ணெண்ணெய்க்கு அலைந்து கொண்டிருப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். நண்பர் பாரதி, `வீட்டில் சிலிண்டர் காலியாகிவிட்டதா? என்று கமென்டினார். `சும்மா பொழுது போகலேன்னு தேடிட்டு இருக்கேன்’ என்று பதிலிடும் ஆவலில், விரல் வரை வந்துவிட்ட எழுத்துகளைத் தடுத்து மீண்டும் மூளைக்கே அனுப்பிவிட்டேன். அப்படி பதிலிட்டால் அதற்கும் பதிலிடுவார். இப்படி நான், அவர், நான், அவர் என்று கமென்டுகள் கடுப்பேற்றி கபாலம் வரை சூடேற்றும் என்பதால் பதிலிடவில்லை.

அடுத்து நண்பர் சிவா செல்லுக்குள் வந்தார்.

“சொல்லுங்க சிவா…?”

“இப்பதான் உங்க பதிவ பேஸ்புக்குல பாத்தேன்.”

“உங்க வீட்டுல கிருஷ்ணாயில் இருக்கா..?”

“அதில்ல பாஸ். வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு இருக்கேன். உங்களுக்கு வேணா ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வரட்டான்னு கேக்கத்தான் கால் பண்ணினேன்” என்று வெந்த புண்ணில் வெங்காயத்தை தேய்த்… ஸாரி, வெங்காயம் விலை உயர்ந்த சரக்கு என்பதால் வழக்கம்போல வெண்ணீரை ஊற்றினார்.

சிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

“நல்லது நண்பா, தீக்குளிக்கும்போது சொல்றேன். வாங்கிட்டு வந்து கொடுங்க தேங்க்ஸ்” என்றுவிட்டு காலைத் துண்டித்தேன்.

அடுத்து நண்பர் வைரம், தற்சமயம் ஊரில் இருக்கிறேன். உடனடியாக உதவ முடியாததற்கு மன்னிக்கவும் என்று பதிவிட்டிருந்தார்.

ஆக, கிருஷ்ணாயிலைத் தவிர அனைவரின் வருத்தத்தையும், கிண்டலையும் தூக்கிக் கொண்டு மீண்டும் எங்கே போவது என்று யோசித்தபோதுதான். எதிரே வந்த பரமானந்தம் என்னைப் பார்த்துவிட்டு… நின்றார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. நின்ற இடத்திலேயே ஐடியாக்களை அள்ளி வழங்குவார். யார் யாரெல்லாம் கிருஷ்ணாயில் பயன்படுத்து வார்கள், எதற்கெல்லாம் பயன்படும், கிருஷ்ணாயிலின் மூலப்பொருள் என்ன.. எதனால் இன்று வழக்கொழிந்துவிட்டது என்பதுவரை சிரிக்க சிரிக்க விளக்கிவிட்டு, உனக்கு கிருஷ்ணாயில் வாங்கிக் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்பதுபோல் உறுதியாக நிற்பார். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது.

“என்ன கிரஷ்ணா இந்தப் பக்கம்..?” என்றார். என் பெயரை எப்போதும் அப்படித்தான் கிருஷ்ணாவில் உள்ள `ஷ்’ ஷை அழுத்தி உச்சரிப்பார்.

“கேஸ் தீர்ந்துடுச்சி சார். கிருஷ்ணாயில் வேணும். எங்க தேடியும் கெடைக்கல” என்றேன்.

அவர் முகம் சட்டென மாறிவிட்டது. `அஞ்சு லட்சத்த பறிகொடுத்துட்டு நிக்கிறேன்’ என்று சொன்னால் மற்றவர்கள் முகத்தில் என்ன FEEL வருமோ அதை கிருஷ்ணாயில் தேடிக் கிடைக்காததற்கே காட்டுவார்.

“இப்ப உனக்கு மண்ணெண்ணெய் வேணும் அதானே..?” என்றுவிட்டு தனது செல்லில் பல நண்பர்களுக்கு பரபரப்புடன் போன் செய்ய ஆரம்பித்தார். “அப்டியா... எங்க கிடைக்கும்? தெரிஞ்ச பிரெண்டுங் களுக்குப் பண்ணி கேட்டுப்பாரு... உடனே வேணும்” என்று சற்று நேரத்தில் நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சங்கிலித் தொடரையே உண்டாக்கியிருந்தார். கிருஷ்ணாயில் கிடைக்காது என்று படர்ந்திருந்த அவநம்பிக்கைப் பனி மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. கண்டிப்பாக எங்கிருந்தாவது பெற்றுத்தந்துவிடுவார் என்று எனக்கும் தெரியும்.

அஞ்சு லட்சத்த பறிகொடுத்துட்டு நிக்கிறேன்’ என்று சொன்னால் மற்றவர்கள் முகத்தில் என்ன FEEL வருமோ அதை கிருஷ்ணாயில் தேடிக் கிடைக்காததற்கே காட்டுவார்

ஒரு முறை ஏதேதோ ஜயந்திகளால் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை. அந்த மூன்று நாள்களின் வியாபார இழப்பை ஈடுசெய்ய, கலால்துறைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துவிட்டு, மதுக்கடைகளை மூட அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

குடிமகன்கள் அந்த மூன்று நாள்கள் பினாயில் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பேயாய் அலைந்தார்கள். எவர் முகமும் பிரகாசிக்கவில்லை. பறிகொடுத்த சவக்களையோடு திரிந்தார்கள். அந்த நேரத்தில்தான் பரமானந்தனிடம் `ஒரு ஆஃப் கெடைச்சா ஆளுக்கொரு `க்வாட்டர்’ அடிக்கலாம்’ என்ற விருப்பத்தைச் சொன்னேன். சொன்ன அடுத்த நொடி யிலிருந்து வெறிகொண்ட வேங்கையாய், செல் சூடாகிச் சுருங்கும் வரை போன் போட்டு விசாரித்து, கடைசியாகப் பூந்தமல்லியில் பிளாக்கில் கிடைப்பதும், ஆஃப் சிரமம் `க்வாட்டர்’ வாய்ப்புண்டு என்றும் தகவல் வர, அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின் மதுபான புட்டி வந்தும் சேர்ந்தது.

சிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

அதனால் அவர் தொடங்கிய காரியத்தை முடிக்காமல் விடமாட்டார் என்று பொறுமையாகக் காத்திருந்தேன். சில நிமிடங்களில் கிடைக்காது என்று அவருக்குத் தெரிந்ததை என்னிடம் மறைத்து, “கிரஷ், ஒரு விஷயத்தை மறந்தே போயிட்டேன் பாரு. அயர்ன் பண்ற பெட்டிக்குக் கரி பத்த வைக்க மண்ணெண்ணெய் `யூஸ்’ பண்ணுவாங்க பாத்திருக்கியா…?” என்றார். எனக்கும் பார்த்ததாக நினைவு.

“பாத்திருக்கேன்…”

“இங்கேர்ந்து நாலாவது தெரு ரைட்ல திரும்பி ரெண்டாவது லெஃப்ட்டு முனையில ஒரு கடை இருக்கு. அங்க ஒருத்தன் சந்திரபாபு மாதிரியே இருப்பான் தெரிஞ்ச பயதான் அவன்கிட்ட கேளு. கண்டிப்பா இருக்கும். காசு கொஞ்சம் கூட கேட்டாலும் கொடுத்துட்டு வாங்கிக்க…”

“நீங்களும் கூட வந்தா பரவாயில்ல..”

“இல்ல கிரஷ்… அவனுக்கும் எனக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். ஒரு துணிக்கு 10 ரூபா வாங்குறான், உள்ள பேப்பர் வெச்சி மடிடான்னா கேட்கல, இனிமே உங்கிட்ட வந்தா பொட்டிய எடுத்து என் மூஞ்சில தேய்டான்னு திட்டிட்டு வந்துட்டேன். அந்தப் பக்கம் துணியோட போற வரப்பெல்லாம் என்னை முறைச்சிப் பாத்து பொட்டிய ஜாடை காட்டுறான். அதனால நீ மட்டும் போ செல்லக்குட்டி” என்று என் முகத் தாடையை லாகவமாகத் தடவிவிட்டுச் சென்றுவிட்டார்.

அவர் சொன்னதுபோலவே நான்காவது தெருவில் நுழைந்து தேடினால்… இடது பக்கம் தெருக்களே இல்லை. `டெட் எண்டாக’ இருந்தது. பின், நான்கிலிருந்து வெளியே வந்து ஐந்தில் நுழைந்து சற்று தூரத்திலேயே இருந்தது பரமானந்தம் சொன்ன இரண்டாவது `லெஃப்ட்’.

முனைக்கு வந்து பார்த்தால் கடை இருட்டாக இருந்தது. காம்பவுண்ட் சுவரை ஒட்டிய தாழ்வாரம் போல் கூரை சாய்க்கப்பட்டு, தள்ளு வண்டி இருந்தது. கூடவே பெட்டிக்கடைபோல் ஒரு தகரத்தாலான `பங்க்.’ கடையை ஒட்டி இரண்டு பக்கங்களிலும் மரங்கள் இருந்ததால் மிகவும் பாதுகாப்பாக இருந்தது அந்தக் கடை. மீண்டும் பரமானந்தத்திற்கு போன் போட்டேன்.

இனிமே உங்கிட்ட வந்தா பொட்டிய எடுத்து என் மூஞ்சில தேய்டான்னு திட்டிட்டு வந்துட்டேன். அந்தப் பக்கம் துணியோட போற வரப்பெல்லாம் என்னை முறைச்சிப் பாத்து பொட்டிய ஜாடை காட்டுறான்.

“சார் கடை சாத்தியிருக்கு, யாருமில்ல” என்றேன்.

“10 மணிக்கு மேலதான சாத்துவான். வெளியில குண்டு பல்பு எரியுதா?”

“இல்லை, இருட்டா இருக்கு.”

“சரி பங்குக்குக் கீழ கைய விட்டுத் தேடிப் பாரு. இன்ஜின் ஆயில் கேன் இருக்கும். எடுத்துக்கிட்டு நைசா வந்துடு.”

“திருடறது தப்பில்லையா சார்…”

“மனசாட்சி உறுத்தினா எடுத்த இடத்துல 100 ரூபாயில பறக்காம கல்லு வெச்சிட்டு வா. தட்ஸ் ஆல்” என்றார். அதுவும் எனக்கு சரியாகப்பட்டது.

அவர் சொன்னபடியே பாக்கெட்டில் கத்திரிப்பூ கலர் 100 ரூபாய் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். இருந்தது. பரமானந்தம் சொன்னதுபோல் `பங்க்’ கீழே கையை விட்டுத் துழாவிப் பார்த்தேன். ஏதோ வழுவழுப்பாகக் கையில் தட்டுப்பட, நெஞ்சில் `சுரீர்’ என மின்னல் தாக்கியது. பாம்பாக இருக்குமோ… என்றபோது கூடவே `நை நை...’ என்று சத்தம். பாம்புக்கு `நை.. நை…’ என்றெல்லாம் சீறத் தெரியுமா என்ன? அப்போது காலுக்கடியில் ஏதோ ஊர்வது போல் தெரிய, செல் டார்ச்சை உயிர்ப்பித்துப் பார்த்தேன்…

நாலைந்து நாய்க் குட்டிகள். கோதுமைக் களி உருண்டை போல அங்கும் இங்குமாக ஊர்ந்து கொண்டிருந்தன. இரண்டு நாள்களுக்கு முன்தான் `டெலிவரி’யாகியிருக்க வேண்டும். `குட்டிகளைப் பெத்துப் போட்டுட்டு இந்தத் தாய்க்காரி எங்கே போய்விட்டாள்?’ என்ற கேள்வி எழ, பின்னால் `உர்’ என்ற சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தேன். மடி தொங்கிய அம்மா நாய்தான் சீறிக்கொண்டு ஆக்ரோஷமாய் நின்றது. அதன் தோற்றத்தைக் கண்டதும், உள்ளே `கூட்ஸ்’ ரெயிலின் பய அதிர்வுகள்.

மற்ற நேரங்களைக் காட்டிலும் குட்டிபோட்ட சமயங்களில், சோறு போட்டவனா இருந்தாலும், கடித்துக் குதறிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பிள்ளைகளைத் தூக்க வந்துவிட்டேன் என்று தப்பாக நினைத்த அதன் எண்ணத்தை உடனே மாற்றியாக வேண்டும். `நான் தேடி வந்தது கிருஷ்ணாயில்தான் உன் பிள்ளைகள் இல்லை’ என்று அதற்குப் புரிய வைக்க வேண்டும்.

சிக்னல் கிடைக்கவில்லை என்பதுபோல் அவருக்கு உணர்த்திவிட்டு, காலை `கட்’ செய்து, செல்லை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

சீறிக்கொண்டு மேலும் ஒரு `ஸ்டெப்’ என்னை நோக்கி எடுத்து வைக்க, `நார்மல் டெலிவரி’தானே ஒண்ணும் சிரமமில்லையே?” என்று நலம் விசாரித்து, சமாதானமாகப் போக நினைத்த மறுநொடியே என்னை நோக்கிப் பாய்ந்தது.

அருகே இருந்த பைக்கை எடுக்க, உதைத்து `ஸ்டார்ட்’ பண்ண அவகாசம் ஏதும் கொடுக்காததால், இருட்டில் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் குத்துமதிப்பாக, சந்து சந்தாக ஓட ஆரம்பித்தேன்.

நாயும் என்னைத் தேடித் தேடி விரட்டிக் கொண்டு வந்தது. குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது பத்து நாள்களாவது `பெட் ரெஸ்டில்’ இருப்பார்களே… இந்த நாய்க்காரி இரண்டாவது நாளில், அதுவும் நான்கு குட்டிகளை முக்கித் தள்ளிவிட்டு, எப்படி இவ்வளவு வேகமாக விரட்டி வருகிறது என்று வியந்தபடியே ஓடிக்கொண்டிருந்தேன்.

அப்போது, பரமானந்தம் போன் செய்தார்

“என்ன கிரஷ்… கிருஷ்ணாயில் கிடைச்சதா?”

“அத ஏன் சார் கேட்கறிங்க...’' என்று ஓடிக்கொண்டே நடந்ததைச் சொன்னேன்.

“அடடா… அப்படியா…!” அமைதி யாக இருந்தார் யோசிக்கிறார் போல.

“சரி, நான் சொல்றத செய்… கிரஷ், அந்த நாய் செம்மண் கலரா? இல்ல பளுப்பும், `ஒய்ட்’டும் கலந்த நிறமா? இல்ல `லைட்டா’ `ஸ்ப்ரே’ அடிச்ச மாதிரி…” என்று முடிக்கும் முன்,

“ஏன் சார், உயிருக்கு பயந்து ஓடிட்டு இருக்கேன், இவ்வளவு `டீட்டெய்ல்’ கேட்டு, தெரிஞ்ச நாயா இருந்தா செல்லை அதுகிட்ட கொடுக்கச் சொல்லி பேசப் போறிங்களா?” என்றேன் மூச்சு வாங்க.

“அதுக்கில்ல கிரஷ். கறுப்பா இருந்தா கறுப்பி, கிரே கலர்ல இருந்தா ஜூலி, லேசா… `ஒயிட்’ல அங்கங்க திட்டுத் திட்டா இருந்தா ஷார்மி. இப்படி பேர் சொல்லிக் கூப்புட்டா பழகிடும்” என்றார் மிகவும் சீரியஸாக.

`நண்பர்கள் யாருக்கேனும் கார்ப்பரேஷனில் நாய் பிடிக்கும் ஊழியர்கள் நண்பர்களாக இருந்தால், உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளவும்

செல்லைக் காதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப் பிடித்துக்கொண்டு ”ஹலோ… ஹலோ...” என்றேன். சிக்னல் கிடைக்க வில்லை என்பதுபோல் அவருக்கு உணர்த்திவிட்டு, காலை `கட்’ செய்து, செல்லை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

ஆனாலும், என் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவே இல்லை. இன்னொரு தெரு சற்று நீளமாக இருந்தது. ஓட வசதியாக இருக்குமே என்று நுழைந்து ஓடினால், அந்தத் தெருவில் தாய் நாயோடு, அப்பன் நாய்கள் சிலவும் கூடியிருந்தன. அதற்குள் தகவல் பகிரப் பட்டிருக்கிறது. திரும்ப வேறு திசையில் ஓட்டமெடுத்தேன். நாய் கடித்துச் செத்தவர்களின் செய்திகள் நினைவுக்கு வந்தன.

சிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!

மேலும் பதுங்கி, மெல்ல ஓடி... பின் பதுங்கி நகைக்கடைக் கொள்ளையர்கள்கூட என் அளவுக்குப் பதுங்கியிருப்பார்களா தெரியவில்லை! சட்டென்று அத்தனை நாய்களுக்கும் ஆட்டம் காட்டிவிட்டு, தெருமுனையில் இருந்த கழிவறைக் கூண்டுக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டேன்.

`அதோ அங்கே போறான்’ என்று சினிமா அடியாட்களில் ஒருவன் ஹீரோவைக் காட்டிக்கொடுப்பதுபோல், ஏதோ ஒரு நாய் என்னைக் கண்டுபிடித்து ஓடி வர, அதன் பின்னால் அத்தனை நாய்களும் கூட்டமாய் ஓடிவந்து, கழிவறைக் கூண்டை ரவுண்டு கட்டி நின்றது.

அந்த நேரத்தில் தப்பித்தது சற்று ஆறுதலாக இருந்தாலும், நாய்களோடு என்னையும் சேர்த்து செல்ஃபி எடுத்து, `நண்பர்கள் யாருக்கேனும் கார்ப்பரேஷனில் நாய் பிடிக்கும் ஊழியர்கள் நண்பர்களாக இருந்தால், உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளவும் என்று என் போன் நம்பருடன், Facebook, Whatsapp, Instagram மூன்றிலும் பதிவிட்ட வேளையில்…

மீண்டும் உள்ளுக்குள் பகீரென்றது. இந்த நாய்களைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், ‘இவ்வளவு நேரம் எங்கடா போயி ஊர் மேய்ஞ்சிட்டு, கிருஷ்ணாயிலும் இல்லாம வர்ற?’ என்று உலுக்கும் மனைவியை எப்படி சமாளிப்பது என்று கலங்கிப்போன நிலையில், இருக்கவே இருக்கார் `ஐடியா கிங்’ பரமானந்தம். எத்தனை முறை, என்னவெல்லாம் சொல்லி அவர் மனைவியை சமாளித்திருப்பார் என்ற தைரியத்தோடு, அந்த மூத்திர நாத்தத்தில் கமென்ட்டுகளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.