சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

யார் யாரோவெல்லாம் திரண்டு நிற்கும் அந்தக் கூட்டத்தில் அவளின் தாய் தந்தையரை அவளால் பார்க்க முடியவில்லை.

தியத்தில் ஆரம்பித்த சூடு இன்னமும் தணியாமல் இருந்தது மணப்பெண் ஸ்ரீதேவிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அலங்காரத்தை எல்லாம் முடித்துவிட்டு கோயிலிலும் கும்பிட்டுவிட்டு ரதத்தின் மீதே ஏறியாயிற்று. அருகில் மணமகன் முத்தையன் நின்றிருந்தான். அவனது முகத்தில் சிவப்புப்பொடி கொஞ்சம் தூக்கலாகவே மினுங்கிக்கொண்டிருந்தது. ஸ்ரீதேவி கையில் பூச்செண்டுடன் முத்தையனை ஒருமுறை தலையுயர்த்திப் பார்த்தாள். அவனுக்கு வெட்கமாக இருந்தது. கூச்சத்தில் அவளது முகத்தை நேர்கொண்டு பார்க்க இயலாமல் பார்வையை ஒருமுறை தனது கால்களின் மீது ஒற்றிப் பதித்துவிட்டு ரதத்திற்கு முன்னாலும் பின்னாலும் நிரம்பியிருந்த ஜனக்கூட்டத்தின் மீது மேயவிட்டான்.

வழி நெடுக மனிதத் தலைகளாக, அந்த வீதி முழுக்கத் திருவிழாக் கோலத்தில் தகதகவென்று ஒளிர்ந்துகொண்டிருந்தது. சீரியல் பல்புகளும் அந்த வீதியின் இருபுறமும் படர விடப்பட்டிருந்தது. ரதத்துக்கு முன்னால் சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருவர் வெடி போட்டபடியே நடந்தார். வானத்தில் பாய்ந்து ஒளித் துகள்களாக வெடித்து வர்ணக்கோலத்தைப் போட்டுவிட்டு அவை புகையாகக் கரைந்துபோயின. தெருவின் முனையில் செண்டி மேளத்தின் வீச்சு உறுமியது. அதனை இசைத்துக்கொண்டிருந்த நபர்கள் திருமணம், வரவேற்பு என்பதையும் கடந்து சுய கிளர்ச்சியுடன் வீச்சு வீச்சு என்று மேளத்தை இழுத்தார்கள். கூட்டத்தில் பாதிக்கு மேல் செண்டி மேளத்தின் அருகில்தான் நின்றிருந்தது.

சிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா

ஸ்ரீதேவி தன் வாழ்நாளில் இதுபோன்ற தருணங்களைத் திருவிழா நாள்களில்தான் பார்த்திருக்கிறாள். அதிலும் பிரசித்திபெற்ற வேலுடையான்பட்டு கோயில் விழாக் காலங்களின்போது இப்படித்தான் மொத்தக் கூட்டமும் வீட்டிலிருந்து வெளியேறி, தெருவில் பிதுங்கி நிற்கும். தெய்வத்தை அமர்த்திக்கொண்டு வரும் தேர் உடலின் சிறு பாகத்தையாவது தொட்டுவிட வேண்டுமென அத்தனை பேரின் கரங்களும் நீண்டுகொண்டே இருக்கும். இன்றைக்கு ஸ்ரீதேவியும் இதேபோன்றதொரு நிலையில்தான் வீதியில் உலா வருகிறாள். அங்கு திரண்டிருக்கும் மொத்தக் கூட்டமும் அக்காட்சியைக் கண்கொட்டாமல் பார்க்கிறது. அந்தத் திருமண நிகழ்வோடு துளி சம்பந்தமும் இல்லாதவர்கள்கூட தங்கள் வீட்டின் வாசலில் நின்று அவர்களது திருமணக்கோல வீதி உலாவைப் பார்க்கிறார்கள். இருப்பினும், அந்தக் கனவுநிலைக் காட்சி மயக்கத்தின் பூரிப்புக்கு இடையில் அவளது மனதில் ஒரு அழுத்தமும் மதியத்திலிருந்தே கனத்துக்கொண்டுதான் இருக்கிறது.

யார் யாரோவெல்லாம் திரண்டு நிற்கும் அந்தக் கூட்டத்தில் அவளின் தாய் தந்தையரை அவளால் பார்க்க முடியவில்லை. ஊரில் இருந்து பெண் அழைப்புக்கு முன்பாக அவர்களது பாதத்தில் விழுந்து வணங்கியபோது பார்த்ததுதான். அவர்கள் வந்துவிட்ட செய்தியும், மதியத்தில் மண்டபத்தில் இருவீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது என்பதும் அவளுக்குத் தெரியும். இருப்பினும், இந்நேரம் அந்த மனச்சுணக்கம் சரியாகியிருக்கும் என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள்.

இதோ இந்த இருளில் மிதக்கும் மனிதத் தலைகளில் ஏதோவொரு இடத்தில் அவர்களது இருப்பும் இருக்கிறது என்பதை உணர முடிந்த அவளால் இன்னும் தன் கண்கொண்டு அவர்களின் முகங்களைப் பார்க்க முடியாமலிருந்தது. அதிலும், இந்த ரத உலாக் கோலத்தில் தன்னைப் பார்த்தால் அவர்களின் ஒட்டுமொத்த வருத்தங்களும் அந்நொடியிலேயே காணாமல்போய்விடும் என்று அவள் உறுதியாகவே கருதினாள்.

‘சாமி சாமி’ என்றுதானே ஸ்ரீதேவியின் தந்தை எப்போதும் அவளை வாஞ்சையுடன் அழைப்பார். சிறுவயதிலிருந்தே அவளைப் பெயர் சொல்லி அழைத்ததைவிடவும் `சாமி’ என்கிற சொல்தான் அவரது மனதிலிருந்து உதட்டின் வழியே உச்சரிப்புகொள்ளும். ஸ்ரீதேவி தன்னை ஒரு அபூர்வ உயிர் என்றே அத்தருணங்களில் கருதி மகிழ்வாள். ஆனால், இன்று ஊரெல்லாம் நின்று ஆரத்தி எடுக்கிறது. சாலையெங்கும் ஜனங்கள் தலை உயர்த்தி ஒரு அரிய உயிரைப்போல அவளைப் பார்க்கிறார்கள். தங்களுக்கும் மேலென ஏதோ காரணத்தால் விலகியும் நழுவியும் உடலைக் குறுக்கியும் பாவனை காட்டுகிறார்கள். இந்தக் காட்சியை முன்னால் நின்று பார்த்திருக்க வேண்டியவர்கள் தாய் தந்தையர்தான் இல்லையா!

‘ரதத்திலேயே ஒன்ன ஒருநாள் உக்கார வச்சு ஊர்முழுக்க தூக்கிட்டுப் போவேன்’ என்று தெய்வத்தின் வீதி உலா ஒன்றைப் பார்த்துவிட்டுக் கண்கள் விரிய அதன் மேல் ஏறும் விருப்பம் தெரிவித்த அவளைத் தாயும் தந்தையும் ஆற்றுப்படுத்தவில்லையா? இப்போது நிஜம் அவர்கள் கண்ட காட்சியைக் கைப்பற்றியிருக்கும் சூழலில், ஒரு பொய்த்தோற்றமாகக்கூட அவர்கள் அங்கு இல்லாதது அந்த சந்தோஷ தருணத்தின் அடியில் இருந்தும் ஒரு பிசாசின் இருப்பைப்போல தன்னை வெளிக்காண்பித்துக்கொண்டே இருந்தது.

சிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா

ஸ்ரீதேவி கசந்த மனதுடன்தான் ரதத்தில் அமர்ந்திருந்தாள். முத்தையனுக்கும் அவளது முக வாட்டம் புரிந்திருந்தது. மதியம் அப்படி ஒரு வாக்குவாதம் இருவருடைய பெற்றோர்களிடமும் ஏற்படும் என்று அவனும் நினைக்கவில்லை. காலையில் பெண் அழைப்பு நிகழ்ந்த போதெல்லாம் எல்லோரும் கலகலவென்றுதான் இருந்தார்கள். ஸ்ரீதேவி தாய் தந்தையருக்கு முத்தையனின் தாய் தந்தையர் பண்டம் பாத்திரங்களை ஏற்றுவதில் உதவி செய்தார்கள். உறவினர்களுக்கான உணவு உபசரிப்பிலும் உடன் இருந்து முடிந்த அளவில் பரிமாறினார்கள். பெண் அழைப்பு நிறைவாகத்தான் சென்றது. வீட்டிலிருந்து அழைத்து ஸ்ரீதேவியை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பும் வரையில் எந்தவொரு சச்சரவும் இல்லை.

ஸ்ரீதேவி கிளம்பும் முன்னால் இத்தனை வருடமும் தன்னை வளர்த்து ஆளாக்கி விட்டதற்காக முழு உடலையும் தரையில் சாய்த்து சாஷ்டாங்கமாக தாய் தந்தையரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். ஸ்ரீதேவியின் கண்கள் கலங்கியிருந்ததைப்போல, அவளின் தாய் தந்தையின் கண்களிலும் கண்ணீர் பெருகி எழுந்தது. கடந்த சில மாதங்களாக திருமண வைபவத்தை ஒரு சராசரி நிகழ்வைப்போலக் கருதி திடகாத்திரமாக வேலைகளில் பிணைத்துக் கொண்டிருந்தவர்கள் அந்நொடியில் பெற்றோர் பெண் எனும் உறவில் விழுகின்ற விரிசலின் ரணம் தாளாது தேம்பி அழுதார்கள்.

உறுதிகுலையாத நிலையிலேயே தனது அனைத்துப் பருவங்களிலும் பார்த்துப் பழகியிருந்த தந்தை, முதல்முறையாக இறுக்கம் கலைந்து உடைந்து அழும் ஒரு சிறுபிள்ளையாக அந்நொடிகளில்தான் காட்சியானார். அழுகையும் பிரிவேக்கமும், வெறுமை உணர்வும் சில கணங்களுக்கு நீண்டபடியே இருந்தது.

எனினும், ஸ்ரீதேவி காரில் பயணப்படத் துவங்கிய சில நிமிடங்களில் மீண்டும் இயல்புநிலை திரும்பியது. முத்தையனின் சகோதரிகள் இருவர் அவனைப் பற்றிய வேடிக்கைக் கதைகளைச் சொல்லிச்சொல்லி அவளைச் சிரிக்க வைக்க முயன்றார்கள். அவளும் ஜன்னலுக்கு வெளியில் பின்னகர்ந்து செல்லும் நிலக்காட்சிகளூடான தனது தாய் நிலமும் தன்னிலிருந்து விலகுகிறது எனும் நினைப்பிலிருந்து மெல்ல மெல்ல மண உணர்வால் முகம் மலர்ந்தாள். முத்தையனை அவளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஒரு அலுவலகத் தோழனாகத்தான் தெரியும். திருமண யோசனையைக்கூட அவன்தான் அவளிடத்தில் தெரிவித்தான் என்பதால், பணிக் காலத்திலோ அதற்குப் பிறகோகூட அவனுடைய முன்கதைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை. இப்போது அவன் சகோதரிகளின் மூலமாக, முத்தையனின் காலம் அவள் மனதில் விரியத் துவங்கியது.

பெற்றோரும்கூட அதிக நேரம் துயரத்தில் தோய்ந்திருக்கவில்லை. “நம்ம புள்ளதான எங்க போயிரும். கண்கலங்காம ஆகுற காரியத்தப் பாருங்க” என்று சொல்லியபடி துண்டினால் தன் கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டே பெண் வீட்டு உறவினர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பேருந்தை நோக்கி நடந்தார் ஸ்ரீதேவியின் தந்தை. அங்கு ஆறுமுகம் அவருக்காக பிராந்தி பாட்டிலை வைத்துக்கொண்டு தயாராய் இருந்தான். இருவரும் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்தபடியே அழுதுகொண்டும், துடைத்துக் கொண்டும், ஆறுதல் சொல்லிக்கொண்டும் முழு பாட்டிலையும் மிச்ச மீதியின்றிக் குடித்து முடித்தார்கள்.

வீட்டில் ஸ்ரீதேவியின் தாயும் பிற உறவினர்களும் பொருள்களை எல்லாம் ஏற்றிவிட்டு, புதுத் துணிமணிகளையும் நகைகளையும் அணிந்தபடியே தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்கள். நல்ல நேரம் பார்த்துப் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சூழல் சற்றே இலகுவாக மாறியது. ஸ்ரீதேவியின் தந்தை பின்னிருக்கையில் போதையில் படுத்திருக்க, உறவினர்களின் பேச்சுக் குரல்களும், சிரிப்பொலிகளும் பேருந்தில் முழுவதுமாக நிறைந்திருந்தது. ஓட்டுநர் துள்ளலிசைப் பாடல்களை ஒலிக்க விட்டார். திருமண சந்தோஷம் இயல்பாக எல்லோரிடத்திலும் பற்றிக்கொண்டு விட்டது. “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” பாடல் ஒலிக்கையில் பேருந்தில் ஓரிருவர் நடனமாடக் கூடச் செய்தார்கள். இந்தப் பாடல் ஒலித்தபோது ஸ்ரீதேவியின் தாய், மகள் மருமகனின் மணக்கோலத்தை மனதில் கற்பனை செய்துகொண்டாள்.

ஆனால், மண்டபத்தில் போய் இறங்கியதும் சூழல் அப்படியே தலைக்கீழாய் மாறிப்போனது. பேருந்திலிருந்து ஸ்ரீதேவியின் தாயும் தந்தையும் முன்னால் இறங்க, உற்றாரும் உறவினர்களும் பின்னாலேயே இறங்கி அவர்களைப் பின்தொடர்ந்து மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். வாசலில் முத்தையனின் பெற்றோர் இருவரும் தம் உறவினர்களை வரவேற்றபடி நின்றிருந்தார்கள். வரவேற்பு வைபவத்திற்கு இன்னமும் நேரம் இருந்ததால், கூட்டம் பெரிதாகக் கூடியிருக்கவில்லை. இதனால், முத்தையனின் பெற்றோருக்கு அதிக பளு இல்லையாயினும், பேருந்திலிருந்து இறங்கி தம்மை நோக்கி வருகின்ற பெண்வீட்டாரின் மீது உண்டாகியிருந்த ஏதோவொரு மனக்குறைவினால் முன்னதாகவே பேசி வைத்துக் கொண்டவர்களைப் போல ஒரேபோல இருவரும் தங்களது முகத்தை வேறு வேறு திசைகளில் திருப்பிக்கொண்டு, அந்த நிகழ்வுக்கும் பெண் வீட்டாருக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போல நடந்துகொண்டார்கள்.

சிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா

ஸ்ரீதேவியின் தந்தைக்கு முதலில் இது விசித்திரமாக இருந்தது. காலையில்கூட சிரித்த முகமாகப் பேசியவர்கள், இடையில் எந்தவொரு மனச்சங்கட மேற்படுத்தும் நிகழ்வும் நடந்திருக்காதபோது ஏன் வந்தவர்களை வரவேற்கவில்லை என்பது அவருக்கு முதலில் திகைப்பையே உருவாக்கியது. எனினும், திருமண வேலையால் தங்களைக் கவனிக்க முடியாமல் ஆகியிருக்கலாம் என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டு உறவினர்களை மண்டபத்தின் உள்ளே போகச் சொல்லிச் செய்கை காண்பித்தார். அவர்களும் தம்முடன் எடுத்துவந்திருந்த பொருள்களுடன் முணுமுணுத்தவாறே உள்ளே நகர்ந்தார்கள். ஸ்ரீதேவியின் தந்தை தாமாகவே முத்தையனின் பெற்றோரிடம் பேச்சைத் தொடங்கிவிடலாம் என்று நினைத்து அவர்களை நெருங்கிச் சென்றபோது, இம்முறையும் விருட்டென விலகி ஆளுக்கொரு பக்கமாக நகர்ந்து விட்டார்கள்.

ஸ்ரீதேவியின் தந்தையால் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இச்செயல் அவருக்குக் கோபத்தையே கிளர்த்திவிட்டது. ஒரு அந்நிய உயிர்போலவே அந்த நொடியில் அவர் தன்னை உணர்ந்தார். மகள் எங்கு இருக்கிறாள் எனும் நினைப்பும் உள்ளுக்குள் புரளாமல் இல்லை.

முத்தையனின் பெற்றோர் தன்னை வேண்டுமென்றே அவனமானப் படுத்தியதை யாரேனும் பார்த்து விட்டார்களா என்று தலையைப் பின்னால் திருப்பிப் பார்த்தார். அங்கு முழு உறவினருமே அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு மண்டபப் படிகளின் அருகில் நின்றிருந்தது. இதனால் ஸ்ரீதேவியின் தந்தை திடுக்கிட்டுப் போனார். மேலும், அவரின் மனைவியும் அக்கூட்டத்தின் நடுவே அவரது முகத்தைப் பார்த்தபடியே தகிக்கும் விழிகளுடன் நின்றிருந்தாள்.

ஸ்ரீதேவியின் தந்தைக்கு ஒருகணம் என்ன செய்வது எனப் புரியவில்லை. போதையின் காரணமாகவும் அவர் திடமாக நிற்கவில்லை. மண்டபத்தில் கலைந்து கிடந்த நாற்காலியில் ஒன்றில் அப்படியே உடலைக் கிடத்தி அமர்ந்தார். ஆறுமுகமும் அவருக்குப் பின்னாலேயே வந்து மற்றுமொரு நாற்காலியில் அமர்ந்தான்.

“என்னடா உம் சம்மந்தி கண்டும் காணாமப் போவுறாரு. காலையில நல்லாதான இருந்த மாதிரி இருந்துச்சு.”

ஸ்ரீதேவியின் தந்தையால் ஆறுமுகத்தின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவமானம் உள்ளுக்குள் முள்ளாகக் குத்த, முகத்தில் அதனைக் காண்பித்துவிடக்கூடாது என்று முயன்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் இருந்து அவர் மனைவியின் குரல் அதீத கோபத்துடன் ஒலித்தது.

“அவங்களுக்குப் பொண்ணுதான வேணும்... நாமளாம் வேணாம். அதான் பொண்ணக் கூட்டிட்டு வர வரைக்கும் நல்லவங்க மாதிரி இருந்துட்டு இங்க வந்ததும் புத்திய காட்ட ஆரம்பிச் சிட்டாங்க...”

ஸ்ரீதேவியின் தந்தை தலையைப் பின்னால் திருப்பிப் பார்த்தால், அங்கு அவரின் மனைவியுடன் மற்ற உறவுப் பெண்களும்கூட நின்றிருந்தார்கள்.

“ஏ... இன்னும் ஏன் இங்க உக்கார்ந்திருக்க... அவங்களாச்சு, அவங்க கல்யாணமாச்சு. வா போகலாம்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள்.

”ஏய் இருடீ... ஏன் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டு இருக்க.”

“யாரு நானா எடுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டு இருக்கன். வந்ததுல இருந்து ஒரு வா வாங்க சொல்லல... இங்க என்ன அசிங்கப்பட்டுட்டு நிக்கச் சொல்றியா..?”

``யாரும் நம்மள மதிச்சா என்ன மதிக்காட்டி என்னா... நாம என்னா மரியாதைய எதிர்பாத்தா இங்க வந்து உக்கார்ந்திருக்கோம். அவங்க ஏதாவது வேலையில கூட நம்மள கவனிக்காம இருந்திருக்கங்களாம்..”

“ஆமாமா... கூட்டம் அப்படியே முட்டி மோதிக்கிட்டு இருக்கு... இதுல பொண்ணப் பெத்தவங்க மூஞ்சிகூட அவங்களுக்குத் தெரியாமப்போச்சு... அந்த ஆளும் பொம்பளையும் வேணும்னேதான் நம்மள கண்டுக்காம நிக்குறாங்க. பொண்ணுதான் இப்போ அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள போயிருச்சுல்ல... இனிமே நம்மால என்ன பண்ணிட முடியும்னு நினைக்குறாங்கபோல...”

``ஏய்... வாய மூடுடீ. பேசி பிரச்னைய பெருசு பண்ணிடாத. அவங்க ஊருல்ல... அதான் புத்திய காமிக்கிறாங்க. நாம நம்ம பொண்ணுக்காக இங்க இருக்கோம். அவ்ளோதான். அதோட வாய மூடு” என்றார் ஆற்றாமையோடு.

ஸ்ரீதேவியின் தாய்க்கு ஏனோ அக்கணத்தில் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. முந்தானையால் கண்களைக் கசக்கியபடியே, “அதான் பொண்ணு நம்ம கால்ல உழுந்து போயிட்டு வரன்னு சொல்லிட்டு அவங்கக்கூட வந்துருச்சல... அப்புறம் என்ன நம்ம பொண்ணு. இனி நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.. அது யாரோ நாம யாரோ... நாம வளத்த காலமெல்லாம் காத்தோட போயிருச்சு. வா... என்னால் இப்படி அவமானத்தோட இந்த ஊருல நிக்க முடியாது.”

“அட ஸ்ரீதேவி அம்மா என்ன பேசுற... மொதல்ல வாய மூடு” கூட்டத்தில் இருந்த உறவுக்காரப் பெண் ஒருவர் அதட்டலாகவே சொன்னார்.

இதற்குள் பெண் வீட்டார் கூட்டம் கூடி சத்தமெழுப்பு வதைத் தெரிந்துகொண்டு அங்கு வந்துவிட்ட முத்தையனின் தாயும் தந்தையும், “என்னம்மா கல்யாண ஊட்ல நின்னுட்டு ஒப்பாரி வச்சுட்டு நிக்குறீங்க. வாய மூடும்மா... இல்லன்னா வெளியில போய் அழுவு” என்றனர். அவர்களுக்குப் பின்னால் மாப்பிள்ளை வீட்டார் சிலரும் திரண்டிருந்தார்கள்.

தன் மனைவியை அப்படிக் கட்டளையிடும் விதமாகப் பேசியதை ஸ்ரீதேவியின் தந்தையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு நேரமும் மனதை ஏதேதோ சமாதானம் சொல்லி அடக்கிக்கொண்டிருந்தவர் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

“நீ யாருய்யா எங்கள வெளியில போகச் சொல்ல... இது எங்க பொண்ணோட கல்யாணம். எங்கள வெளியில போன்னு சொல்ல உனக்கு உரிமையும் இல்ல... அருகதையும் இல்ல.”

``ஓஹோ... சாரு கூட பேச கலெக்டருதான் வரணுமோ... சரிங்க ஐயா எங்களுக்கு அருகதை இல்லதான். ஆனா என் பையன் கல்யாணத்துக்கு எந்தக் குடிகாரப் பயலும் மண்டபத்துக்குள்ள காலடி எடுத்து வைக்க வேண்டியதில்லை. உங்க புலம்பல எல்லாம் பக்கத்துல இருக்குற ஒயின்ஷாப்ல போய் வச்சுக்கங்க.”

``ஏய்... நீ யாருடா என்னக் குடிகாரன்னு சொல்ல... மரியாதையா பேசு... இல்ல பொண்ணு கல்யாணம்னுகூட பாக்க மாட்டன்...” வார்த்தை தடித்துதான் விட்டது. ஆனாலும், அவர் அதனை உணரும் நிலையில் இல்லை. தொடர்ந்து ஒரே அமளிதுமளிகளால் அவ்விடமே பரபரப்பாகக் காணப்பட்டது. இரு பக்கத்து உறவினர்களும் சண்டையை நிறுத்தச் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில், பெண் வீட்டார் அவ்விடத்தில் இருக்கவே விருப்பமில்லாமல் மண்டபத்துக்கு வெளியில் இறங்கி நின்றுவிட்டார்கள். சிலர் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டார்கள். சிறிது நேரத்துக்கு முன்னால் இசையும் நடனமும் கொண்டாட்டமு மாகத் தோற்றமளித்த பேருந்து இப்போது மயான அமைதியில் உறைந்திருந்தது.

சண்டையின்போதே மண்டபத்தின் உள்ளறை ஒன்றில் ஒப்பனை செய்துகொண்டிருந்த ஸ்ரீதேவி சத்தம் கேட்டு அருகில் இருந்த முத்தையனின் சகோதரியிடம் ``என்ன” என்று கேட்க, ``அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, கல்யாண வீடுன்னா அப்படித்தான் கசமுசன்னு இருக்கும்” என்று அமைதிப்படுத்திவிட்டாள். ஸ்ரீதேவிக்கு இந்த வாக்குவாதம் முழு உருவத்துடன் அப்போது சொல்லப்படவில்லை.

முத்தையனின் சகோதரி, “உங்க அம்மாதாம்மா ஏதோ பிரச்சன பண்ணிட்டு இருந்தாங்க” என்று சொன்னாள். அம்மாவின் குணம் ஸ்ரீதேவி அறியாதது அல்ல. ஆனால், தனது திருமண தினத்திலுமா இப்படியொரு ரகளை நிகழ வேண்டும் என்பதுதான் அவளுக்கு வருத்தத்தை உண்டாக்கியது. ஏதேனும் சில்லறை சண்டையாக இருக்கும் என்பதுதான் அப்போது அவளுக்குத் தோன்றியது. அதற்குள் முத்தையனின் சகோதரியும், முக அலங்காரப் பெண்ணும் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசத் துவங்கி அவளது கவனத்தை பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதத்தில் இருந்து விலக்கிவிட்டார்கள்.

விஷயம் அறிந்து முத்தையன் மண்டபத்துக்கு வந்தபோது பெண்வீட்டார் அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார்கள். விடிந்ததும் ஸ்ரீதேவியின் கழுத்தில் தாலி ஏறும் தருணத்தை மட்டும் பார்த்துவிட்டு உடனடியாக ஊர் திரும்பிவதே அவர்களது திட்டமாக இருந்தது. முத்தையன் பேருந்தின் உள்ளே ஏறி நடந்த நிகழ்வுகளுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகச் சொன்னான். ஆண்களுக்கான முக அலங்கார நிலையத்துக்குச் சென்றிருந்ததால் அவ்விடத்தில் தன்னால் இருக்க முடியவில்லை, இருந்திருந்தால் இப்படியொரு நிகழ்வே நடந்திருக்காது என்றும் சமாதானம் கூறினான். ஆனால், விஷயம் எப்போதோ மலையேறிவிட்டது. இனி அதனை இறக்குவது கடினம் என்பது சில நிமிடக் கெஞ்சலுக்குப் பிறகே அவனுக்கு உறைத்தது. தன்னால் இயன்ற அனைத்து வகையிலும் மன்றாடிப் பார்த்துவிட்டு அங்கிருந்து விலகி நடந்தவன் நேரே மண்டபத்துக்குள் நுழைந்தான்.

சிறுகதை: ஸ்ரீதேவி வீதி உலா

ஸ்ரீதேவியின் தந்தையும் தாயும் எதிர்ப்பார்த்தபடி உள்ளிருந்து ஸ்ரீதேவி அதன்பிறகும் வரவில்லை. ஒரே மகள் அல்லவா, இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இருக்கத்தானே செய்யும். ஒரு கணத்தில் ஸ்ரீதேவி `இந்தக் கல்யாணமே வேண்டாம்பா, வாங்க நம்ம ஊருக்கே போயிடலாம்’ என்று சொல்வதாக அவளது குரலும்கூட அவர்களது காதில் ஒலித்தபடியே இருந்தது. ஆனால், நேரம்தான் கரைந்துகொண்டே போனதே தவிர, மகளும் வரவில்லை, அதன்பிறகு மருமகனும் வரவில்லை, சம்பந்தி பெருமக்களும் வரவில்லை.

பேருந்திலேயே உடலைச் சாய்த்து உறவினர் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீதேவியின் தாய்க்கு கண்களில் இருந்து நீர் வெளிவந்துகொண்டே இருந்தது. கண்ணீர் பெருகப் பெருக நினைவுகள் காட்சிகளாகி மனத்திரையில் அசைய ஆரம்பித்தன. ஸ்ரீதேவி எப்போதும் அவளை, “அடியே” என்றுதான் அழைப்பது வழக்கம். வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் அவள் ``அடியே, அடியே, அடியே” என்று குரல் கொடுத்தபடியே இருக்கிறாள். ஸ்ரீதேவியின் தாய்க்கு ஆத்திரம் பெருகுகிறது. “நம்ம பொண்ணு கல்யாணம்டீ” என்று அதட்டிய கணவனின் மீதும் கோபம் பொங்கியது. நம் பெண் இந்நேரம் வெளியில் கதறி அலறிக்கொண்டு வந்திருக்க மாட்டாளா, இவ்வளவு நேரமாகியும் பெற்றோரைக் காணுமே என்று கலங்கியிருக்க மாட்டாளா என்றெல்லாம் கேள்விகள் விரிந்துகொண்டே போயின.

ஸ்ரீதேவியின் மனம் கலங்கித்தான் போயிருந்தது என்றாலும், அதனை அவள் வெளியில் காண்பிக்கவில்லை. அவளுக்கு அந்தச் சண்டை சிறிதளவில் மட்டும் முத்தையன் மற்றும் அவனது சகோதரியால் சொல்லப்பட்டிருந்தது. அதனால், அவர்கள் இங்குதான் கூட்டத்தில் எங்கோ மறைந்திருக் கிறார்கள், வெளிவர வேண்டிய சமயத்தில் தங்களை வெளிக் காண்பிப்பார்கள் என்கிற நினைப்பிலேயே இருந்தாள். கோவிலில் சாமி கும்பிட்டபோதும், ரதத்தின் மீது ஏறியமர்ந்தபோதும் அதேதான் அவளது நினைவாய் இருந்தது. எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும், தனக்காகவாவது தன் பெற்றோர் அதனையெல்லாம் பொறுத்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அவளிடத்தில் இருந்தது. அந்த நம்பிக்கையுடனேயே ரதத்தின் மீது ஏறி அமர்ந்தாள். ரதமும் கோயிலிலிருந்து புறப்பட்டு வீதி உலா சென்றுகொண்டிருந்தது.

செண்டி மேளத்தின் அதிர்வு காதுகளைக் கிழிப்பதாக இருந்தது. ஊர்க் கண்கள் முழுக்க ரதத்தின் மீதும் மணமகன் மற்றும் மணமகளின் மீதுமே பதிந்திருந்தன. வழியெங்கும் பேனர்களும் அதில் கையெடுத்துக் கும்பிடு போட்ட நிலையில் தாயும் தந்தையும் நிலைத்திருந்தார்கள். ஸ்ரீதேவியின் கண்கள் ஒவ்வொரு சிறு நகர்வின் போதும் அந்த பேனரில் ஒருமுறை கண்களைப் பதித்துத் திருப்பாமலில்லை. கூட்டத்தின் நடுவில் இருந்து தனக்கு பரிச்சயமாக ஒரே ஒரு குரல் “ஸ்ரீதேவி” என்று அழைத்துவிடாதா என்று எதிர்பார்த்தே அந்த ரதத்தில் அவள் அமர்ந்திருந்தாள்.

மண்டபம் நெருங்க நெருங்க இவ்வெண்ணம் அதிகரித்தபடியே இருந்தது. உடலுக்குள் ஏதோவொரு இனம்புரியாத நடுக்கம். தனக்கென இவ்வுலகில் எவருமே இல்லையோ என்கிற நினைப்பு, தனது கடந்த காலம் என்பது முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டுவிட்டதா என்கிற அச்சம் என யாவும் ஒன்றுகலந்து அவளது கலக்கத்தை அதிகரித்தபடியே இருந்தன. கடந்த சில தினங்களில் பெற்றோருக்கும் அவளுக்கும் இடையில் நிகழ்ந்த சில உணர்வுபூர்வமான தருணங்கள் நினைவுகளில் பெருகி எழுந்தன. நிகழ்கண மயக்கச் சூழலும், முந்தைய சில தினங்களின் உணர்வுப் பெருக்கமும் மனதில் ஒருசேர பாரத்தை உண்டாக்கின.

ரதம் அப்போதுதான் மண்டபத்தின் வாசலை நெருங்கியது. இன்னும் ஒரு சில நொடிகளில் அவள் ரதத்தில் இருந்து கீழிறங்க வேண்டும்.

“ரதத்துல ஏறி இந்த ஊரே வேடிக்கை பார்க்குற மாதிரி ஒரு நாள் உன்ன ஊர்வலமா கூட்டுட்டுப் போவன்” அப்பா எப்போதோ சொன்ன வார்த்தைகள் அவளது காதில் துல்லியமாக விழுந்தன.

இப்போது ஊர்வலம் எல்லாம் முடிந்தாயிற்று. இறங்கும் தருணமும் நெருங்கி வந்துவிட்டது. அப்போதுதான் மண்டபத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பெரிய பேனர் ஒன்றின் பின்னால் அவள் தந்தையின் உருவம் அசைவதை அவளால் பார்க்க முடிந்தது. அவர் நிதானமில்லாமல் உடலை லேசாக அசைத்தபடியே மறைந்து நின்றிருந்தார்.

ரதம் அருகில் வர வர அத்தனை சிடுக்கு களையும் மீறி ஆனந்தக்கண்ணீர் அவரது கண்களில் பொங்கி எழுந்தது. தன் மகள் ரதத்தில் அமர்ந்த நிலையில் தன்னை நோக்கி வருவதை அவர் பார்த்துவிட்டார். கனவில் இதுபோன்றதொரு காட்சியை அவர் பலமுறை கண்டிருக்கிறார். இப்போது அத்தருணம் நிஜமாகியிருக்கிறது.

`சாமி சாமி சாமி’ என்று மனதுக்குள் உச்சரித்தபடியே நிலைகொள்ளாத் தவிப்புடன் அவரது மனம் அலைமோதிக்கொண்டிருக்க, இறங்க வேண்டிய தருணம் வந்தும், தன் தந்தை தான் ரதத்தின் மேலிருப்பதை மனம் குளிரக் காண வேண்டும் என்கின்ற ஆசையுடன் ஸ்ரீதேவி சில நொடிகள் அப்படியே அமர்ந்த கோலத்தில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். முத்தையன்கூட கீழே இறங்கிவிட்டான். புகைப்பட வெளிச்சம் அங்கு தோன்றித் தோன்றி மறைந்தபடியே இருந்தது. மண்டபத்துக்குள் இப்போது கூட்டம் பெருகியிருந்தது. எல்லோரும் மணமக்களை உள்ளே அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால், ஸ்ரீதேவி மட்டும் இன்னமும் ரதத்திலிருந்து கீழிறங்கவில்லை.

அவள் நிகழ்தருணத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு தன் தந்தையின் கனவு ரதத்தில் ஏறி அமர்ந்திருந்தாள். அங்கு கூட்டமில்லை, கூப்பாடுகளும் இல்லை. ஆரவாரமும் அதிர்வேட்டுகளும் இல்லை. அது தானாக நகர்ந்து செல்லும் ரதம். ஒரு இருபத்தைந்து வருட ஞாபங்களே அதனை ஓட்டிச்செல்கின்றன. தொலைவில் சிறு புள்ளிகளென தாயும் தந்தையும் சந்தோஷம் பெருக நின்றிருக்கிறார்கள். அவள் தந்தை ஒரு சிறுபிள்ளைபோல ‘சாமி சாமி’ என்று குதிக்கத் துவங்குகிறார். ஸ்ரீதேவியின் ரத உலாவை அவர்கள் பார்த்துவிட்டதைப்போலவே, ரதத்தின் மீதிருக்கும் தன்னை அவர்களும் பார்க்கும் காட்சியையும் அவள் கண்டுவிட்டாள். இனி அவள் வாழ்வில் ஒருபோதும் ரதத்தின் மீது ஏறப்போவதும் இல்லை. அவளின் தாய் தந்தையர் அக்காட்சியைக் காணப்போவதுமில்லை.