கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சிறுகதை: குதிரைக்காரன்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

எம்.எம்.தீன்

முன்பெல்லாம் நான் வருவதற்கு முன்பே வந்து காத்திருப்பவள்; இப்போது என்னை வரச் சொல்லிவிட்டு, அவள் சொல்கிற நேரத்திற்கு வருவதே இல்லை. நேற்றும் மாலை முழுவதும் கடற்கரையிலேயே கழித்துவிட்டுத் திரும்பிப் போகச் சொல்லிவிட்டாள். அதற்கு ஒரு சப்பையான காரணம் வேறு. ‘தாத்தாவுக்கு மருந்து மாத்திரை வாங்கப் போனேன், இரவு சாப்பாட்டுக்கு சாமான் வாங்கப் போறேன்’ என்று.

தீ விரிக்கும் மதிய வெயில் நேரத்தில் வந்து விடு, நான் கண்டிப்பாக வந்துவிடுவேன் என்று எதற்கு உறுதி சொல்ல வேண்டும். இன்று அதே நேரத்திற்கு `வந்துவிடு என்னை ஏமாற்றிவிடாதே’ என்று மெனக்கெட்டுச் சொல்லியதால் மெரீனா கடற்கரையில் இப்படிக் காத்திருக்க வேண்டி திருக்கிறது.

கரையை மேய்ந்துவிட்டுப் போவதுபோல வந்து வந்து போகும் கடலலைகளை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது.

அவள் எப்போதும் மலம்பூவரசு மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் சாய்வு சிமென்ட் பெஞ்சில் காத்திருக்கச் சொல்வாள். மலம்பூவரசின் பூக்கள் தனித்தனியாய் மரமெங்கும் பூத்திருந்தன. அதன் கருநிழல் பெஞ்சைப் போர்த்தியிருந்தது. இன்னும் மெரீனா சுறுசுறுப்பாகாமல் சவலைப்பிள்ளை போல வெயிலில் படுத்திருந்தது.

சிறுகதை: குதிரைக்காரன்
சிறுகதை: குதிரைக்காரன்

தூரத்தில் குதிரைக்காரன் தனது வெள்ளைக் குதிரையில் ஏறி வெயிலின் அந்தரத்தில் மிதந்துகொண்டே சரியாக இதே நேரத்தில் வந்துவிடுகிறான். இந்த வெயிலில் குதிரையைக் கூட்டிக் கொண்டு இங்கு வர என்ன இருக்கிறது? நேற்று அணிந்திருந்த அதே தொப்பி வேறு.

குதிரையின் குதித்துக் குதித்து வரும் பின்னங்கால்கள் மணலைக் கெல்லி வீசிப் படர விடுவதும் அழகாய்த்தான் இருக்கிறது. அதன் நிழல் மணலில் படர்கிறது. குதிரையைவிட அதன் நிழல் இன்னும் அழகானதுதான்.

குதிரைக்காரனுக்கும் வேறுஇடம் கிடைக்கவில்லையோ என்னவோ, இவன் இருக்கும் இடத்தருகே குதிரையை நிறுத்தினான். மணல் முடிந்து தரையை ஒட்டியிருக்கும் திண்டில் நின்றுகொண்டு குதிரைச் சவாரி செய்பவர்கள் ஏற இந்த இடம் வசதியாயிருக்கிறது.

குதிரையில் வந்தே பழகியவன் என்பதால் நிழலைத் தட்டிக்கொடுத்துவிட்டு குதிரைக்காரன் அமர்ந்தான். அவன் தேர்ந்தெடுக்கும் நிழலுக்குக் கனைப்பும் பிடரி மயிரும்கூட இருந்திருக்கலாம். நிழல் ஒரு கடிவாளம் அற்ற குதிரை என்பதுகூட அவனுக்குப் பிடித்தமானது. குணசாலியான அவனது வெள்ளைக் குதிரை அசையாது நின்றது. அதன் லகான் கயிற்றை அதன் முதுகு வாரில் செருகி விட்டு, தொப்பியால் முகத்தை மூடிக் குந்தியபடியே தூங்க ஆரம்பித்தான்.

கடலுக்கும் குதிரைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. குதித்துக் குதித்து ஓடிவரும் அலைகளும் குதிரையின் ஓட்டமும் ஒரே சாயல். குதிரையின் முதுகின் மேல் கடலின் மாயச் சவாரி எப்போதும் இருந்தது. ஒரே தாவில் கடலைத் தாவப்போவதுபோல் குதிரை முன் கால்களைத் தூக்கி அப்படியே நின்றது.

ஒய்யாரமாகப் புதிய புதிய உடையோடும் மனதோடும் எப்போதும் வரும் ரட்சிகா இன்னும் வந்தபாடில்லை. மலம்பூவரசு இலை `பீப்பீ’ செய்ய உதவாது. அவன் இருக்கையை விட்டு எழுந்து ஒரு மலம்பூவரசுக் காயைப் பறித்தான்.

எப்போது குதிரைக்காரன் விழித்தான் என்று தெரியவில்லை. குதிரையில் துள்ளி ஏறி, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். இவனை உற்றுப் பார்த்துவிட்டு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான். `யாருக்காக இந்தக் கொதிக்கிற வெயில்ல வந்து காத்துக் கிடக்கிறானோ’ என்று அந்தப் பார்வையில் பகடி இருந்தது. குதிரை தரையை இரண்டு உதறு உதறி விட்டுக் கிளம்பியது. அந்தச் சமயத்தில் குத்துச்செடிகள்போல மணல் முளைவிட்டு இலைவிட்டு உடனே மாயமாகியது.

இனி குதிரை கலங்கரை விளக்கம் வரை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரும். அதற்குள் குதிரையேற்றத்திற்கெனக் குழந்தைகளும் பெரியவர்களும் வந்துவிடுவார்கள்.

அலைபேசியை எடுத்து அவள் எங்கு வந்துகொண்டிருக்கிறாள் என்று கேட்டான். ``வீட்டில் வேலை முடியவில்லை, இன்னும் ஒரு மணி நேரமாகலாம்’’ என்றாள். “இல்ல, தாத்தாவுக்கு ராத்திரிக்கு சாப்பாடு பண்ணி வைத்துவிட்டு வருகிறேன்” என்றாள். ``இதை முதலிலேயே சொல்லித் தொலைக்கப்படாதா’’ என்ற கேள்விக்கு முன்னால் அலைபேசியை அணைத்து விட்டாள்.

தூரக் கடலில் நான்கு கப்பல்கள் நின்றன. உறைந்து பனிக்கட்டியான கடலில் அவை செருகிவைக்கப்பட்டது போன்ற ஒரு அசைவின்மை. எப்பவாவது கப்பலில் ஏறிப் பயணம் செய்ய வேண்டும். ரட்சிதாவும் அவனும் மட்டுமே இருக்கிற கப்பல். ஏழு மலை, ஏழு கடல் தாண்டி அது போய்க்கொண்டே இருக்கும். ஓங்கில்களின் பாடலை அப்போது அவர்கள் கேட்பார்கள்.

குதிரைக்காரன் திரும்பி வந்து கொண்டிருந்தான். அவன் தொப்பி தலையை விட்டு துள்ளித் துள்ளி அடங்கியது. வேகமாக வந்த குதிரையை இவன் அமர்ந்திருந்த மரத்தில் நிழலில் நிறுத்தினான். குதிரை இவனையே பார்த்து நின்றது. இப்படி வெயிலில் காத்துக் கிடப்பவனின் மேல் படியும் உப்பு வாடையை அது நுகர்வதாக நாசியை விரித்தது.

குதிரைக்காரன் அவனைப் பார்த்து, “தம்பி, ராத்திரி நல்ல கொள்ளோடு கருவாடும் இடிச்சிக் கொடுத்திருக்கேன். சவாரி தெரியும்னா ஒரு ரவுண்டு போய்ட்டு வாருங்களேன்” என்றார். இதற்கு முன் அவன் குதிரையில் ஏறிச் சின்ன சவாரி போயிருக்கிறான். இப்படி கண்ணகி சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை பாய்ந்தோடிச் சவாரி செய்ய முடியும் என்று அவன் நம்பவில்லை. “பயமாயிருக்கு தாத்தா” என்றான் அவன்.

சிறுகதை: குதிரைக்காரன்

தனது கன்னத்துக் கிருதா மீசையைத் தடவியபடியே ‘`ஆமா, தாத்தாதான். வயசாகிப் போச்சில்லே. உன் வயசுல நான் ரேஸ் ஜாக்கியா இருந்தேன். எத்தனை குதிரைகளில் ஓடி ஜெயிச்சிருக்கேன். கேலப்... கேலப்... கேலப்... இப்ப தாத்தாவாகிப் போனேன்.’’ மீண்டும் மீசையை மேல்நோக்கித் தடவிவிட்டுக் கொண்டார். அப்படி ‘கேலப்... கேலப்...’ என்று சொல்கையில் அவர் முகம் அவ்வளவு பிரகாசமாகியிருந்தது.

‘`இந்த வெள்ளைக் குதிரை புடிச்சிருக்கா தம்பி. நானா வளர்த்தது. என்ன சொன்னாலும் கேக்கும். நீ சும்மா பயப்படாம ஒரு சவாரி போய்ட்டு வா” என்றான். குதிரை மீசைக்காரரைப் பார்த்து ‘இன்னொரு ரவுண்டு போகலாமே’ என்பதுபோல நின்றது.

“தம்பி, குதிர என்ன சொல்லுது தெரியுமா?’’ என்றவர் ``யாராவது ஒரு ரெண்டு ரவுண்டுக்கு வாங்களேன்” என்கிறது என்றார். ‘`ஓடுகிற குதிரைக்கு அது ஒரு போதை மாதிரியாக்கும். ஒரு ரவுண்டுக்குள்ளே இருந்து அடுத்த ரவுண்டுக்கு ஸ்ப்ரிங் ஸ்ப்ரிங்கா அது மனசுக்குள்ளே தாவிக்கிட்டே இருக்கும்.’’

“தம்பி, யானைக்கும் குதிரைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?’’ என்றவர், அவன் பதிலை எதிர்பாராது, ‘`யானைக்குப் பாகன் வீட்டைக் காட்டக் கூடாது. ஆனா குதிரைகளை வீட்டிலேயே வளர்க்கணும். யானைக்கு வீட்டக் காட்டினா அம்புட்டுதான். கோபம் வந்திச்சின்னா வீட்டுக்குப் போயி பாகனை தும்பிக்கையால தூக்கித் தரையில் அடித்துவிடும். குதிரை அப்படியில்லை. எசமானுக்கு எந்த ஆபத்தென்றாலும் கூடவே நிக்கும். நம்மை விட்டுப்போட்டு இங்கே அங்கே அசையாது. அப்படி ஒரு ஜென்மமாக்கும் அது. என்னத்தையெல்லாமோ சொல்லிக்கிட்டு இருக்கேன். அது சரி, தம்பி பேரென்ன?”

தன் குதிரையின் பெருமைக்காக யானையைப் பற்றி அவர் ஏன் இவ்வளவு அதிகமாகச் சொல்லவேண்டும்? அவனுக்கு அவரிடம் பெயரைச் சொல்வது அவசியமா என்று தோன்றியது. பெயரைக் கேட்டுவிட்டு எதிரே யாரோ வருவதைப் பார்க்க நெற்றிக்கு மேலே வலதுகையை வைத்து அவர் கண்ணைச் சுருக்கிப் பார்த்தார். நீண்ட காலம் குதிரையோடு வாழ்ந்ததால் அப்படிக் கண்ணைச் சுருக்கும் போது ஒரு குதிரையின் சாயல் அவருக்கு வந்துவிட்டிருந்தது.

எதிரே ஒரு காக்கை பறந்து போனதைத் தவிர யாரும் வரவில்லை. அவனைத் திரும்பிப் பார்த்து அவன் பதிலுக்குக் காத்திருப்பதைப்போல நேராக நின்றார். அவர் தொப்பியில் இருந்த நேர்த்தி நிமிர்ந்து தோரணையாக நிற்பதிலும் இருந்தது. அவனுக்குள் ஏதோ நிகழ்ந்து சொல் என உத்தரவு இட்டது. “அசோக்” என்று வாய் குழறச் சொன்னான்.

``ஓ, அசோக். அஷோகா தி கிரேட்’’ அவர் ஆங்கிலத்தில் அவனுடைய பெயரைக் கம்பீரமாக உச்சரித்தார். அவருடைய தோளுக்குப் பின்னால் இருந்து பாய்ந்த வெயில் அவரை இன்னும் உயரமாகக் காட்டியது.

“பயப்படாம குதிரையில் ஏறுங்க” அவன் கையைப் பிடித்துக் குதிரையில் ஏற்றி லகானைக் கையில் கொடுத்தார். குதிரையிடம் குனிந்து தாடைக்குக் கீழ் தட்டிக்கொடுத்து, “மெதுவா போயி பத்திரமா கூட்டிட்டு வா” என்று சொன்னார். குதிரை அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு ஒரு கனைப்புக் கனைத்தது. அவனுக்குக் கொஞ்சம் பயம் இப்போது பயம் வந்து பயம் கலைகிற அந்தச் சிறிய பொழுதில், லகானைப் பத்திரமாகப் பிடித்து அமர்ந்து கொண்டான்.

சிறுகதை: குதிரைக்காரன்
சிறுகதை: குதிரைக்காரன்

குதிரை மெதுவாக ஓட ஆரம்பித்தது. கடல் அலைகளைக் கையாள்வதுபோல குதிரையின் அசைவுக்கு ஏற்ப அசைந்தும் அசையாமலும் அவன் உட்கார்ந்து செல்வதைக் குதிரைக்காரன் பார்த்துக்கொண்டே இருந்தார். குதிரைக்கும் அது பிடிபட்டிருந்தது. அவன் பயமில்லாமல் சரியாக அமர்ந்திருப்பதைக் கண்டுகொண்ட குதிரை முன்னிலும் வேகம் எடுத்து ஓடத் துவங்கியது.

குதிரைச்சவாரி செய்வதில் அசோக்கிற்கு எந்த பயமும் ஏற்படவில்லை. குதிரையின் உயரம், அதன் உடம்பின் பக்கவாட்டு இறுக்கம் பிடித்திருந்தது. இடுப்புக்குக் கீழே ஒரு வெள்ளைக் குதிரையாகவும், சேணத்திற்கு மேல் அசோக் ஆகவும் இருப்பதாகத் தோன்றியது. அப்படி அவன் குதிரைச் சவாரியில் இருக்கும்போது ரட்சிதா வந்திருக்கவேண்டும். அப்படியே பக்கவாட்டில் சரிந்து அவளையும் ராஜகுமாரியைப்போல அள்ளியெடுத்துக் கொண்டு போயிருப்பான்.

ஓடி வந்து குதிரை நின்றவுடன் சிரித்துக் கொண்டே கைபிடித்து இறக்கி விட்டார். ‘`குதிரையில் உட்காரத் தெரியணும். உனக்கு உட்காரத் தெரியுது.

சரியா உட்கார்ந்துட்டா அப்புறம் அது சிம்மாசனம்’’ –அவனைத் தட்டிக் கொடுத்தார்.

“இனி இங்கே வரும்போதெல்லாம் குதிரைல சவாரி செய்யலாம்தானே” என்றவர், தன் கதையைத் தொடர்ந்தார்.

``எங்க அப்பா கிராமத்திலிருந்து நகரத்திற்குப் பிழைக்க வந்தபோது, என்னை பொப்பிலி ராஜா வைத்திருந்த குதிரைக் கொட்டடியில் வேலைக்கு அனுப்பினார். கொட்டடி வேலை என்பது நாத்தம் பிடிச்ச வேலை. ரெண்டு மூணு தடவை வேலை பார்க்காமல் ஓடிப்போயிருக்கேன். போகப்போகக் குதிரைகளைப் பிடிச்சுப்போச்சு.’’

அவர் இப்போது ஒருவித ஆங்கிலத்துக்கு மாறினார். ‘`குதிரைகள் என்னை ஏற்றுக் கொண்டன, என் நண்பர்களாகி, அவற்றோடு வாழத்துவங்கின என் நாள்களில் ஒரே புல் வாசனை. அப்படியே ஜாக்கியும் ஆகிவிட்டேன். குதிரை ரேசில் எனக்கு அவ்வளவு பெயர். அவ்வளவு பணம். வயதான ஜாக்கி ஒருத்தர் ஆசைப்பட்டு அவர் மகளை எனக்குக் கட்டி வைத்தார். எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். கொடுத்து வைக்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு அம்மாவும் மகளும் ஒரே மாதிரி நோய் வந்து போய்விட்டார்கள். என் மகளுக்கு ஒரே மகள், அவளுக்காகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் முடியவில்லை பந்தயம்...’’ இப்போது குதிரைக்காரன் வலது கைக்குள் இருந்து மணலை உதிர விட்டபடி இருந்தார்.

அவர் கதையைச் சொல்ல ஆரம்பித்தவுடன் சோகமாகிவிட்டது குதிரை. முகத்தை உயர்த்தித் தலையைக் குலுக்கியது. முன்கால்களில் சிறு குத்தாக மணலை வாரியது.

“டேய், ராக்கி, ஆர் யூ சேட்” என்று குதிரையிடம் கேட்டபடி எழுந்து நின்று தட்டிக்கொடுத்தார். “தம்பி, என் குதிரைக்கு என் கதை தெரியும். நான் அதைச் சொல்றன்னு தெரிஞ்சா சோகமாகிடும். அதனால அது இருக்கும்போது யார் கிட்டேயும் சொல்லமாட்டேன்” என்றார். குதிரை இப்போது கழுத்தைத் தொங்க விட்டவாறு வெள்ளைச் சிலையாக நின்றது.

‘`நீங்க யாரையோ தேடிக்கிட்டு இருந்தீங்களே, அவுங்க வந்துட்டாங்களான்னு பாருங்க” - அவர் குதிரை ஏற வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். அசோக் அவரை விட்டு நகர்ந்து அவள் வருகிறாளா என்று தேடிப் பார்த்தான். அவள் வருகிற மாதிரி எந்த அசைவும் இல்லை.

மர நிழல்களில் கோன் ஐஸ் விற்கிறவர்கள் தங்கள் மரப் பெட்டிகளின் மூடியை அடித்து விற்பனைச் சத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். குதிரைச் சவாரியின் போது கூடமாட ஓடிச் சென்று ஏறுகிறவர்களைப் பத்திரமாக அழைத்து வரும் பையனும் வந்துவிட்டான். இனிமேல் அவன் எல்லாம் பார்த்துக்கொள்வான். குதிரைக்காரருக்கு வேலை இல்லை.

அவனைப் பார்த்துத் திரும்பியவாறு கேட்டார். “இந்தக் குதிரையைப் புடிச்சிருக்கா தம்பி?” அசோக்கிற்கு என்ன பதில் சொல்வது என்று விளங்கவில்லை. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குதிரையைப் பார்த்தான். அது அசைவின்றி நிற்க, அதன் வெண்மையான பிடரி மயிர் கடற்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. சுழற்றலின் வீச்சில் குதிரையின் பின் உடம்புக்கு வெளியே வந்து போகும் வாலின் மயிர்க்கற்றை இவர்கள் இரண்டு பேரின் பேச்சின் மீது படியும் கடற்கரைப் பிசுபிசுப்பைத் துடைத்தது.

“என்ன, பதில் சொல்லாம இருக்கிற தம்பி, அப்போ குதிரை வேண்டாமா. இதைத் தவுட்டு ரேட்டுக்கு வித்தாலும் ஒரு லட்சத்துக்குப் போகும் தம்பி. என்ன சொல்ற?” என்றபடி தொப்பியைக் கழற்றிவிட்டுப் பின் தலையைச் சொறிந்து கொண்டார். பழைய கௌ பாய் படங்களில் பார்த்த வயதான ஒரு பாத்திரம் செய்வதுபோல இருந்தது அசோக்கிற்கு அது.

“வேணாம் தாத்தா” என்றான் அசோக்.

“ஆமா. எனக்கும் வயசாயிட்டே வருது... தாத்தாதான். ரெண்டு தடவை பேசுகிறதுக்குள்ளே நீ மூணு தடவை தாத்தான்னு சொல்லிட்டே. உனக்கு நான் தாத்தா. இந்தக் குதிரை எனக்குப் பிள்ளை மாதிரி. இன்னும் கொஞ்சம் வயசாயிட்டுதுன்னு வையி. அதை இனிமே என்னால வச்சுப் பராமரிக்க முடியாது.வச்சுக்கிறதுன்னா, புல்லு போடுறது, கொள்ளு வைக்கிறது இல்ல. பெத்த புள்ளையப் போல பாத்துக்கணும். அதனால ராக்கிய ஒரு நல்லவன்ட்ட ஒப்படைக்கணும்னு பார்க்கிறேன். அதான்...’’ என்றார்.

“தாத்தா, எனக்கும் குதிரைன்னா ரொம்பப் புடிக்கும்தான். ஆனா குதிரையப் பத்தி ஒண்ணும் தெரியாது. இல்லாட்டி படிச்சிட்டு சும்மா இருக்கிறதுக்கு உங்களுக்கு ஒத்தாசையாகவாவது இருந்து பாத்துக்குவேன் தாத்தா. எனக்கு ஏதாச்சும் தருவீங்கதானே” என்றபடி அவரைப் பார்த்தான். குதிரைக்காரர் தன் கிருதா மீசையை இரு கைகளாலும் வழித்து விட்டவாறு அவனைப் பார்த்துச் சிரித்தார். அவனுக்கு எதற்கு அந்தப் பதிலைச் சொன்னோம் என்று இருந்தது.

``நல்ல குதிரையை வைத்திருப்பவன் எப்போதும் கம்பீரமாகவே இருப்பான். சவாரி செய்யும்போது அவன் அரசனாகிவிடுவான். என் குதிரை அப்படிப்பட்டது.

இந்த ராக்கி வந்த பிறகு என் கவலையெல்லாம் பறந்தோடி விட்டது’’ - அவர் மிகத் தொலைவில் பார்த்தபடி பேசினார். இப்போதும் குதிரைக்காரர் அதை ஆங்கிலத்தில் பேசுவதாகவே நினைத்துக்கொண்டான். அவருடைய சொற்களும் தொனியும் வேறொரு பாஷையின் உச்சத்திலிருந்தது. சின்ன வயதில் அவர் வேலை பார்த்ததாகச் சொன்ன பொப்பிலி ராஜா அரண்மனையாகக்கூட அது இருக்கலாம்.

குதிரைக்காரர் இன்னும் எங்கோதான் பேச்சில் சென்றிருந்தார். கையில் குறி சொல்லும் கோலுடன் முதுகில் கிடந்த முந்தானையை எடுத்து இடுப்பில் செருகியபடி குறிசொல்பவள் வந்தாள்.

“அப்பா, இதை வூட்டுக்குப் போயி, பிள்ளை கிட்டே கொடு” என்றபடி இரண்டு பாப்கார்ன் பார்சல்களைக் கொடுத்துவிட்டு நின்றாள். குதிரைக்காரர் முகம் வேறொன்றாகியிருந்தது. வேப்பமரத்தடியில் நார்க்கட்டில் போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவர் களை வந்திருந்தது. ``இப்பதான் வாரியா? போயி இன்னைய வருமானத்தைப் பாரு, போ’’ என்றவர் இருந்த இடத்திலேயே உடம்பை நகர்த்தினார். சிரித்தபடியே கைக்கு எட்டின வாக்கில் அவர் மீசையை இழுத்துவிட்டு, அவள் கைக்கோலை வீசியபடி பீச் மணலுக்குள் போனாள்.

சிறுகதை: குதிரைக்காரன்

‘`என்ன பார்க்கே தம்பி. அவ அப்பாங்கிறா. பிள்ளைங்கிறா. நான் மகள்ங்கிறேன்னு யோசிக்கியா? இந்த மெரீனா பீச்சில பொழைக்கிறதுன்னு வந்த பிறகு, குறி சொல்கிறவ, சுண்டல் விக்கிறவன், பலூன் சுடுகிறவன், மக்காச் சோளம் விக்கிறவன் எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் தாய்தான், பிள்ளைதான்; அப்பன்தான், மகள்தான்; பொண்டாட்டிதான்; வப்பாட்டிதான். எல்லாம்தான்’’ அவர் யாரோ எதிரில் இருப்பதுபோல் கையை அகலமாக விரித்துத் தழுவப்போவது போன்ற பாவனையில் இருந்தார். அவர் வலது கையில் குறி சொல்கிறவள் கொடுத்துவிட்டுப்போன பாப்கார்ன் பொட்டலங்கள் ஆடின.

``அது சரி. உனக்கு பாப்கார்ன் போடத்தெரியுமா. இங்கே நல்லா விக்கும்.”

“தாத்தா நான் சமையலப் பத்திதான் படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கேன். பாப்கார்ன் போடுறது ஒண்ணும் பெருசில்லே. பிரியாணியில எத்தன வகையிருக்கோ அத்தனையும் செய்யத் தெரியும்” அவனுடைய பதிலுக்கு, குதிரைக்காரர் ``அடேயப்பா’’ என்று ஒற்றைச் சொல்லாகச் சொல்லிவிட்டு, திரும்பி சவாரிக்கு வந்த ஆட்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

அவன் மனதில் ‘ரட்சிகா ஏன் இதுவரை வரவில்லை. ஒருவேளை அவளுக்கு வரவர அவனைப் பிடிக்கவில்லையோ, இரண்டு நாள்களாக வாரேன்னு சொல்லிட்டு வராமல் இருந்தால் என்ன அர்த்தம்?’ பலவாறாக அடித்துக் கொண்டது. அவர்கள் வழக்கமாக அமரும் இடத்தை, வேறு யாரும் உட்கார விடாமல் இந்தக் கடற்கரையே பாதுகாத்துக் கொடுத்திருப்பது போல இருந்தது.

கடற்கரையும் மணலும் மனிதர்கள் வருவதற்கு என்று ஒரு நேரத்தையும், அந்த நேரத்திற்கென ஒரு ரம்மியத்தையும் வைத்திருக்கும்போல. அசோக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் வரும்போது இருந்த வெயிலையே இப்போது கடல் வேறு மாதிரி உடுத்திக்கொண்டு மினுங்குவது எப்படி?

சவாரிக்கு ஆட்கள் வந்து நின்றார்கள். அவர் குதிரையில் பயத்தோடு அழுத குழந்தையை ஏற்றி வைத்தார். குதிரை மெதுவாக ஒவ்வொரு காலாகத் தூக்கி வைத்து நடந்தது. திடீரென நின்றபடியே கால்களைத் தூக்கிக்கொண்டு நடனமாடியது. அழுத குழந்தைக்குச் சிரிப்பு பொங்க குதிரையை விட்டு இறங்க மறுத்தது.

குழந்தையின் அப்பா ஆச்சர்யத்துடன் பார்க்க, ``சார், எங்க குதிரைக்கு நூறு கமாண்டுக்கு மேல தெரியும் சார். அதுக்கு எதுவும் சொல்ல வேணாம். குழந்தையிலேர்ந்து வயசானவங்க வரை எப்படி அழைச்சிட்டுப் போவணும்னு தெரியும் சார்” என்றார். இந்த மாதிரிச் சமயங்களில், அந்த உதவிக்கு நிற்கும் பையன் எதுவுமே பேச மாட்டான். குதிரைக்காரர் அப்படிப் பேசுவது அவனுக்குப் பிடிக்கும்.

அவர்களை அனுப்பிவிட்டு அசோக்கைப் பார்த்து, “என்ன தம்பி படிச்சிருக்கேன்னு சொன்னீங்க. கேட்டரிங் டெக்னாலஜியில டிப்ளோமா படிச்சிருக்கீங்களா. எம் பேத்தியும் அதுதான் படிச்சிருக்கா. படிச்சிட்டு வந்து எதையாவது செஞ்சு என்ன சாப்பிடச் சொல்றா. பேருதான் புதுசு புதுசா சொல்கிறா, ஆனா ருசியாதானிருக்கு. ருசியில என்ன புதுசு இருக்கு, நான் செஞ்சா ரெண்டு உப்பு குறையப் போடுவேன். நீ செஞ்சா ஒரு உருண்டைப் புளி கூடுதலா போடுவே. எம் பேத்தி செஞ்சா, உப்பு, புளி மட்டும் எல்லாம் அந்தக் காலம்னு மேற்கொண்டு ஒரு சிட்டிகை இனிப்பைச் சேர்ப்பா. மற்றது எல்லாம் சாப்பிடுகிறவன் நாக்கு, அந்த எச்சில் பண்ணுகிற காரியம்’’

அவர் பேசப் பேச, அசோக்கிற்கு அவர் மேல் ஒரு சுவாரசியம் வந்திருந்தது.

‘`அதுசரி. வேலையில்லேன்னு சொன்னீங்கல்ல. பாப்கார்ன் மெஷின் ஒண்ணு வாங்கி, கடையைப் போடுஙக. சாய்ந்திரம் அஞ்சு டு ஒம்பது வரை வித்தாலே போதும். குடும்பத்த ஓட்டிடலாம்.”

அவனுக்குள் புதிதாக ஏதோ ஒன்று மூளையில் உதித்தது. இத்தனை நாள் இந்தக் கடற்கரைக்கு வந்தது இந்த ஒரு யோசனையின் திறப்புக்காகத்தான் என்று நினைத்தான். ஒவ்வொரு மணல்துகளும் ஒரு கதவை வைத்திருக்கும் போல. ஒவ்வொரு அலையும் ஏதோ ஒன்றை அழித்து ஏதோ ஒன்றை எழுத இடம் விட்டுப்போகும்போல. இனிமேல் சென்னையில் ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம் என தைரியம் வந்தது.

அவள் இனிமேல் வருவாள் என்று தோன்றவில்லை. அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான். “சாரி அசி, இப்பதான் சமையல் வேல முடிஞ்சுது. நீ சொன்ன கேரட் ரைத்தாவும் கோதுமைச் சப்பாத்தியும்’’ எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள். இனிப்பான சிரிப்பிற்குள் அவள் வராதது குறித்த கோபம் மங்கியது. அப்படியே தனியாகப் போய் அரை மணிநேரம் பேசிவிட்ட பின்பு, கிளம்ப முடிவு செய்தான். ``உலகம் பாப்கார்ன் வாசனையால் நிரம்பியது’’ என்று ஒரே ஒரு வரி மட்டும் சொல்லிவிட்டுப் பேச்சைக் கட் பண்ணிவிட விரும்பினான்.

சிறுகதை: குதிரைக்காரன்
சிறுகதை: குதிரைக்காரன்

குதிரைக்காரரிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. குதிரையை ஏறிட்டுப் பார்த்தான். சாம்பல் இருட்டில் வெள்ளைக் குதிரை மட்டும் தனியாகத் தெரிந்தது. அப்படியே குதிரையில் சவாரி செய்தபடி அறைக்குப் போனால் எப்படி இருக்கும்? குதிரைக்காரருக்கு ஒத்தாசையாக ஏன்தான் இருக்கக்கூடாது?

அவன் குதிரைக்காரர் அருகில் வந்தான். “என்ன தம்பி. இன்னைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா. கருக்கலாச்சு. வயசாயிட்டுல. நானும் நேரத்தோட வூட்டுக்கப் போறேன்.

பேத்தி புதுசா எதையாவது செஞ்சு வச்சுக்கிட்டு தேடிட்டு இருப்பா. நீங்க நாளைக்கு வாங்க. குதிரைச் சவாரி பழகிக்கலாம்.”

குதிரைக்காரர் சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. குதிரைச் சவாரி கத்துக்கிட்டா பீச்சுல பிழைச்சுக்கலாம் என்று எண்ணினான்.

குதிரையைப் பார்த்துக்கொண்ட பையனுக்குப் பணம் கொடுத்துவிட்டு, “நாம போகலாம் தம்பி’’ என்று நடக்க ஆரம்பித்தார். என்ன தோன்றியதோ, அவருடைய தொப்பியைக் கழற்றி அசோக்கின் தலையில் மாட்டினார். அவனைச் சுற்றிவந்து அவனுடைய இரண்டு தோள்களிலும் அழுத்தமாகத் தட்டினார். ‘`சபாஷ்’’ என்றார். இப்போதுகூட அவர் வேறு பாஷையில் பாராட்டுவதுபோலவே இருந்தது.

சிறுகதை: குதிரைக்காரன்

குதிரையின் லகானை அவன் கையில் கொடுத்தார். சும்மா பிடிச்சிக்கிட்டு நடங்க. அதுபாட்டுக்கு நம்மளோடு வரும். எனக்குப் புடிச்ச ஆளுட்டதான் லகானைக் குடுப்பேன்னு அதுக்குத் தெரியும்” என்றார். குதிரை லகானைப் பிடித்திருப்பது அசோக்கிற்குப் பறந்து செல்வது போலத் தோன்றியது. சிறகுகளுடைய பறக்கும் குதிரையொன்று சிவப்பாக அவனுக்கு நினைவு வந்தது.

குதிரைக்காரர் எப்போதும்போல சளசளவென்று பேசிக்கொண்டே வந்தார். திருவல்லிக்கேணி செல்லும் வழியில் அவன் திரும்ப வேண்டியிருந்தது. “தம்பி இங்கதான் உங்க ரூம் இருக்கா, நல்லது தம்பி பார்த்துப் போங்க’’ என்று நின்று அவன் கையில் இருந்த லகானை அவர் வாங்கிக்கொண்டார். குதிரை லேசாகத் தலையை அசைத்து ‘ப்ர்ர்ர்’ என்று முகத்தைத் தூக்கிச் சத்தம் கொடுத்தது. அசோக்கிற்கு அந்தச் சத்தம் பிடித்திருந்தது. அந்த வெள்ளைக் குதிரையின் வியர்வை வாடை இருந்த காற்றை சுவாசித்தபடி அவன் தொப்பியை அவரிடம் கொடுத்தான்.

“தொப்பி அசோக் தம்பிக்கு ரொம்ப நல்லா இருந்ததுன்னு பேத்திகிட்ட சொல்லுதேன்’’ என்று கண்ணைச் சிமிட்டினார். குதிரையின் கன்னத்தில் லேசாகத் தட்டினார்.

அவர் சொல்லிக்கொடுத்திருந்த நூறு கமாண்டில் அது எத்தனையாவது என்று தெரியவில்லை, குதிரை ஒரு சினேகிதனைப் போல அவரோடு ஒட்டி நெருக்கமாக நடக்க ஆரம்பித்திருந்தது.