கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: தம்பியுடையான்

சிறுகதை: தம்பியுடையான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: தம்பியுடையான்

16.04.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

வாழ்நாளில் முதன்முதலாக இவ்வளவு பேர் வரிசையாக மைக்கில் என்னைப் பாராட்டிப் பேசுவதைக் கேட்க கூச்சமாக இருந்தது. இப்போது ஜாயின்ட் கமிஷனர் என்னைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். 34 ஆண்டுகள் நான் பெரும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்த காவல் துறையிலிருந்து இன்று ஓய்வுபெறுகிறேன்.

ஜாயின்ட் கமிஷனர், “சிறு வயதிலேயே எஸ்ஐயாகப் பணியில் சேர்ந்து இன்று டிஸியாக நல்ல முறையில் பணி ஓய்வுபெறும் திரு.மணிவண்ணன் தனது பணி ஓய்வுக் காலத்தில் மன நிம்மதியுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ கடவுளைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். அடுத்து டிஸி மணிவண்ணன் அவர்கள் ஏற்புரை வழங்குவார்” என்று கூறியவுடன் எழுந்தேன்.

மைக்கைக் கையில் வாங்கியவுடன் தொண்டையைக் கனைத்துக்கொண்டே சுற்றிலும் பார்த்தேன். சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு, “நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…. எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. இப்பதான் மாதவரம் ஸ்டேசன்ல எஸ்ஐயா சேந்த மாதிரி இருக்கு. 34 வருஷம் ஓடிப்போயிடுச்சு. உண்மையச் சொல்லணும்னா… நான் காலேஜ்ல படிச்சிட்டிருந்தப்ப, பிற்காலத்துல பெரிய ரௌடியா ஆவணும்ன்னு தான் நினைச்சேன்” என்றவுடன் லேசாகச் சிரிப்புச் சத்தம். தொடர்ந்து, “நான் சும்மா சொல்லல. நிஜமாவே அப்படித்தான் நினைச்சேன். ஆனா அப்படி நினைச்சதாலதான் பின்னாடி போலீஸ் ஆனேன்” என்றவுடன் என் பேச்சில் குறுக்கிட்ட ஜேஸி, “ஏன் ரௌடி ஆவணும்ன்னு நினைச்சீங்க?” என்றார்.

“அது பெரிய கதை. கேக்குறதுக்கு எல்லாருக்கும் பொறுமை இருக்குமான்னு தெரியல” என்றேன். “பரவால்ல… சொல்லுங்க…” என்று டிஸி(அட்மின்) கூற… சிறிது யோசனைக்குப் பிறகு பேச ஆரம்பித்தேன்.

“அப்பாவுக்கு கவர்ன்மென்ட் வேலை. திருச்சிலதான் பொறந்தேன். நான் அஞ்சு வயசா இருக்கும்போதே எங்கம்மா இறந்துட்டாங்க. என் தம்பிக்கு அப்ப நாலு வயசு. ரெண்டு வருஷம் கழிச்சு அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அப்பாவுக்கு திடீர்னு மெட்ராஸுக்கு டிரான்ஸ்ஃபராச்சு. மயிலாப்பூர்ல குடியேறினோம். பொதுவா மயிலாப்பூர்னா, அங்க வசிக்கிறவங்க எல்லாருமே பிராமணர்ங்கதான்னு பலரும் நினைக்கிறாங்க. ஆனா அங்கயே கச்சேரி ரோட்டுக்கு வடக்க இன்னொரு மயிலாப்பூர் இருக்கு. அந்த மயிலாப்பூரோட முகம் வேற. முண்டகக்கண்ணியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், ஸ்லேட்டர்புரம்… தர்மாபுரி… கீரத்தோட்டம்னு குப்பங்கள், கள்ளச்சாராய வியாபார ரௌடிகள், முஸ்லிம்கள், பிராமணர்கள்னு கலவையா மக்கள் வசிக்கிற பகுதி. அந்த மயிலாப்பூர்லதான் நாங்க வளந்தோம். திருச்சில இருந்த வரைக்கும் நானும், என் தம்பியும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். தாயில்லாம வளர்ற அண்ணன் தம்பிங்களுக்கு நடுவுல, மத்த அண்ணன் தம்பிங்களவிடக் கூடுதலா ஒரு பாசம் இருக்கும். அந்தப் பாசம் எங்களுக்குள்ளயும் இருந்துச்சு. மெட்ராஸ் வந்தவுடன எங்களுக்கு ஒரே ஸ்கூல்ல இடம் கிடைக்கல. அப்ப நான் ஸ்லேட்டர்புரம் பி.எஸ்.நார்த் ஸ்கூல்ல அஞ்சாவது சேர்ந்தேன். என் தம்பி சாந்தோம் ஸ்கூல். என் ஸ்கூல்லேருந்து அவன் ஸ்கூலு கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். லஞ்ச் அவர்ல நான் அவசர அவசரமா சாப்பிட்டுட்டு, அங்கிருந்து என் தம்பி ஸ்கூலுக்கு ஓடிப்போயி அவனப் பாத்து, “சாப்டுட்டியான்னு” கேப்பேன். அவன் சிரிச்சுக்கிட்டே தலையாட்டுவான். அவ்ளோதான். வேற எதுவும் பேசாம வந்துருவேன். சும்மா தம்பி சாப்பிட்டானான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவ்வளவு தூரம் ஓடுவேன்” என்று நான் சொல்ல… அனைவரும் ஆர்வத்துடன் நிமிர்ந்து அமர்ந்தனர்.

சிறுகதை: தம்பியுடையான்
சிறுகதை: தம்பியுடையான்

தொடர்ந்து நான், “எங்க வீட்டுல… இன்டர்வெல்ல வாங்கித் திங்கிறதுக்கெல்லாம் காசு தரமாட்டாங்க. ஆனாலும் ஸ்கூல்ல வசதியான வீட்டுப் பசங்க நெல்லிக்காய்… கம்மர்கட்டுன்னு எதாச்சும் வாங்கித் தருவாங்க. அதை நான் சாப்பிடாம, ரெண்டு கிலோமீட்டர் சாந்தோம் ஸ்கூலுக்கு ஓடி வந்து என் தம்பிக்குக் கொடுத்துட்டுப் போவேன்” என்ற எனக்கு சட்டென்று தொண்டை அடைத்து, கண்கலங்கியது. பேச்சை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு, தொடர்ந்து பேசினேன்.

“அப்படியே வளர்ந்து நான் காலேஜ்ல பியூசி சேர்ந்தேன். அப்ப என் தம்பி எஸ்எஸ்எல்சி படிச்சிட்டிருந்தான். நான் சொல்லப்போறதெல்லாம் செவன்ட்டீஸ்ல… 1977, 78 வாக்குல நடந்தது. சினிமாவுல இளையராஜாவும், அரசியல்ல எம்ஜியாரும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பிச்ச காலம். அப்ப சென்னைல பப்ளிக் பாக்ஸிங் போட்டிங்க ரொம்ப ஃபேமஸ். சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரைன்னு பல குரூப் இருந்துச்சு. இந்தப் பரம்பரை ஆளுங்களுக்கு நடுவுல அடிக்கடி குத்துச்சண்டைப் போட்டி நடக்கும். இப்ப இருக்கிற நேரு ஸ்டேடியம், அப்ப வெறும் மைதானம். அங்க, அப்புறம் தண்டையார்பேட்டை டேப்லெட் கிரௌண்ட், சூளை கண்ணப்பர் திடல்ல எல்லாம் குத்துச்சண்டைப் போட்டி ரெகுலரா நடக்கும். ஒரு மேட்ச பாக்க, பத்தாயிரம், இருபதாயிரம்னு ஜனங்க கூடும். அப்ப குத்துச்சண்டை வீரர்கள் எல்லாம் சென்னைல சினிமா ஸ்டார் மாதிரி. லெப்ட் மணி, ஆறுமுகம், டில்லிபாபு, எல்லப்பன், கண்ணையான்னு ஏகப்பட்ட ஸ்டார் பாக்ஸர்ஸ் இருந்தாங்க. எனக்கு பாக்ஸிங்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். நான் முனூர்தீனோட தீவிர ரசிகன். ஏன்னா அப்ப பாக்ஸிங் ஸ்டார்னா எல்லாரும் நார்த் மெட்ராஸ்தான். பெசன்ட்நகர் வண்ணாந்துறை முனூர்தீன்தான் சௌத் மெட்ராஸ்ல ஃபேமஸ் பாக்ஸர். நான் காலேஜ் படிக்கிறப்ப தண்டையார் பேட்டைல முனூர்தீன்- ஆறுமுகம் மோதுற போட்டி நடந்துச்சு. நானும் என் தம்பியும், என் ஃபிரெண்டு பலராமனும் போயிருந்தோம். அங்கதான் என் வாழ்க்கை திசை மாறுச்சு…” என்ற என் கண் முன்பாக அந்தக் குத்துச்சண்டைக் காட்சிகள் விரிந்தன.

மைதானத்தில் இரைச்சலாக ரசிகர்களின் சத்தம். முதலில் பிரபலமல்லாத பல குத்துச் சண்டை வீரர்கள் மோதி முடிந்தவுடன், கடைசியாக முனூர்தீனும், ஆறுமுகமும் மோதினார்கள். பத்தாவது ரவுண்டின் முடிவில் இருவரும் சம அளவு புள்ளிகளைப் பெற்றதால், போட்டி டிராவில் முடிந்ததாகத் தலைமை ரெஃப்ரி அறிவிக்க… ரசிகர்கள் அதிருப்தியாக சத்தம் எழுப்பிக்கொண்டு கலைய ஆரம்பித்தனர்.

நாங்கள் எங்கள் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அப்போது எங்கள் முன்னால் ஒரு சைக்கிள் குறுக்காக நிற்க… அதில் சின்னா அமர்ந்திருந்தான். சின்னா, எங்கள் ஏரியாவின் பிரபலமான கள்ளச்சாராய வியாபாரி கம் ரௌடி. இவனும் போட்டியைப் பார்க்க வந்திருக்கிறானா? இவன் ஏன் எங்களை மறிக்கிறான்? சின்னா எங்களைக் காண்பித்து பலராமனிடம். “இன்னா பல்ராமு… உன் தோஸ்தா இவுனுங்க?” என்றான். “ஆமாம்ண்ணன்…” என்று சைக்கிளை விட்டு இறங்கிய பலராமன் மரியாதையாகக் கூற…நாங்களும் சைக்கிளிலிருந்து இறங்கிக்கொண்டோம்.

என் தம்பி பாஸ்கரை முறைத்தபடி என்னிடம் சின்னா, “இவன் யாரு, உன் தம்பியா?” என்றான். நான், “ஆமாம்ண்ணன்” என்றவுடன் சட்டென்று என் தம்பியின் சட்டைக் காலரை இறுகப் பிடித்த சின்னா, “தொளுக்ல ஒண்ணு போட்டன்னக்கா சுருண்டு விழுந்துடுவ” என்ற கூற… பாஸ்கர் மிரண்டுவிட்டான். சின்னாவின் கையைப் பிடித்து விலக்கிய பலராமன், “என்னண்ணன் பிரச்னை?” என்றான்.

“இவன் என் ஆள டாவடிக்கிறான்” என்று சின்னா சொல்ல…நான் திரும்பி பாஸ்கரைப் பார்த்தேன். பாஸ்கர், “நந்தனாவச் சொல்றாருண்ணன்” என்றான் மெதுவாக. நந்தனா, பாஸ்கருடன் மேத்ஸ் ட்யூஷன் படிக்கும் பெண்.

“என்ன?” என்றேன்.

“என்கூட மேத்ஸ் ட்யூஷன்ல நந்தனான்னு ஒரு மலையாளப் பொண்ணு படிக்குது. அப்பப்ப அது என்னை ஹெவியா பாக்கும்” என்றான். நான், “நீ?” என்றேன்.

“நான் லைட்டா பாப்பேன். அது நேத்து சாயங்காலம் திடீர்னு என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருச்சு. நான் எங்கண்ணன்ட்ட கேட்டுட்டு வந்து சொல்றேன்னு சொல்லிட்டேன்” என்ற பாஸ்கரைப் பார்க்க எனக்குப் பெருமையாக இருந்தது.

“உனக்கு அவளப் பிடிச்சிருக்காடா?”

“நல்லா சிவப்பா இருப்பாண்ணன்.”

“டேய்… உனக்கு அவளப் பிடிக்குமான்னு சொல்லு.”

சில நாள்களுக்கு முன்பு, நானும் பாஸ்கரும் மவுன்ட்ரோடு தேவிபாரடைஸ் தியேட்டரில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் பார்த்துவிட்டு நடந்தே வந்தபோது பாஸ்கர், “அண்ணன்… உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்றான்.

“சிரிக்கிறப்ப ரொம்ப அழகாயிடுவாண்ணன்” என்று அவன் சொன்னதிலிருந்தே எனக்குப் புரிந்துவிட்டது.

“டேய், ஓப்பனா சொல்லு. உனக்கு அவளப் பிடிக்குமா, பிடிக்காதா?”

“பிடிக்கும்ண்ணன். ஆனா நீ சரின்னாதான் நான் அவள லவ் பண்ணுவேன்” என்றான். நான் விளையாட் டுக்காக, “அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுரா. அப்பாவுக்குத் தெரிஞ்சு துன்னா கொன்னு எடுத்துடுவாரு” என்றவுடன் பாஸ்கரின் முகம் கொஞ்சம்கூட மாறாமல், “சரிண்ணன்… நாளைக்கி அதுகிட்ட எங்கண்ணனுக்குப் பிடிக்கல… வேண்டாம்னு சொல்லிடுறேன். இந்தப் படத்துல கமல் பயங்கர ஸ்டைலா இருக்காருல்ல?” என்று அடுத்த பேச்சுக்குத் தாவியவனை நான் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன். அவன் தோளை அணைத்தபடி, “சும்மா சொன்னன்டா… நாளைக்கி போயி நீயும் உன் லவ்வ சொல்லிரு” என்றேன்.

அந்த நந்தனாவைத்தான் சின்னா சொல்கிறான் என்று புரிய… “இப்ப அதுக்கு என்ன?” என்றேன்.

“நான் நந்தனாவ 10 வருஷமா லவ் பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொன்ன சின்னாவுக்கு இப்போது 20 வயதுதான் இருக்கும்.

“அந்தப் பொண்ணு உன்ன லவ் பண்ணுதா?” என்றேன்.

சிறுகதை: தம்பியுடையான்
சிறுகதை: தம்பியுடையான்

“இல்ல… ஆனா நான் அவள லவ் பண்றேன்.”

“நிலாவ ஆயிரம் பேரு பாக்கலாம். ஆனா நிலா நம்பள பாக்கணும்” என்ற பாஸ்கரை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். காதல் வந்துவிட்டால் இந்தப் பசங்கள் கவிதைபோல் பேசிவிடுகிறார்கள்.

“நானும் அதுகூட படிச்சிருந்தன்னா, என்ன லவ் பண்ணியிருக்கும். ட்யூஷன் விட்டு வரச்சொல்ல தெனம் ரெண்டு பேரும் இளிச்சு இளிச்சுப் பேசிகினு வர்றீங்களாமே… இன்னொரு தபா நீ அதாண்ட பேசுறத பாத்தேன்... டார் டாராயிடுவ” என்று சின்னா கூற… எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. சின்னாவை நெருங்கிய நான், “என் தம்பி பேசுவான். நீ என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ…” என்று கூற… அவன் சுற்றிலும் பார்த்தான். நிறைய ஜனங்கள் சலசலப்புடன் கடந்துகொண்டிருக்க… “மயிலாப்பூராண்ட உங்கள வச்சுக்குறேன்” என்ற சின்னா எங்களை முறைத்தபடி சைக்கிளில் ஏறிச் சென்றான்.

பலராமன், “டேய்… உஷாரா இருந்துக்கோங்கடா… அவனுக்கு பாக்ஸிங்ல்லாம் கொஞ்சம் தெரியும்” என்று சொல்ல… நான் தூரத்தில் சென்ற சின்னாவை சற்று திகிலுடன் பார்த்தேன்.

மறுநாள் இரவு வீட்டுக்கு வந்த பலராமன், “டேய்… உன் தம்பி விஎஸ்வி கோயில் தெருலதான ட்யூஷன் போறான்?” என்றான்.

“ஆமாம்…”

“இன்னைக்கி மதியானம் நாட்டு வீராச்சித் தெருல இருக்கிற, தெரு லைட்டு ஒயர எல்லாம் சின்னா புடுங்கி விட்ருக்கான்” என்றவுடன் எனக்கு சொரேலென்றது.

அப்போது சென்னையில் தெரு லைட் ஒயரை ரௌடிகள் யாராவது அறுக்கிறார்கள் என்றால், அந்தத் தெருவில் வைத்து யாரையோ அடிக்கப்போகிறார்கள் என்று அர்த்தம். பாஸ்கர் விஎஸ்வி கோயில் தெருவிலிருந்து, நாட்டு வீராச்சி தெரு வழியாகத்தான் வீட்டுக்கு வருவான். மணியைப் பார்த்தேன். இரவு எட்டு. ட்யூஷன் முடியும் நேரம். நான் “நீ வர்றியா?” என்று பலராமனிடம் கேட்க… பலராமன், “இல்ல… ராபர்ட்சன் பேட்டைல ஒரு வேலை இருக்கு” என்று நழுவினான்.

நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேக வேகமாக விஎஸ்வி கோயில் தெருவிற்குச் சென்றபோது கரெக்ட்டாக ட்யூஷன் முடிந்து பாஸ்கரும், நந்தனாவும் மட்டும் சிரித்துப் பேசியபடி வந்துகொண்டி ருந்தனர். மலையாளப் பெண்கள் அணிவது போல் நீண்ட ரோஸ் நிற சட்டையும், வெள்ளைப் பாவாடையும் அணிந்திருந்த நந்தனாவின் நெற்றியில் சந்தனம். கன்னத்தில் வெட்கம். முகமெல்லாம் பிரகாசம் பொங்கி வழிந்தது. காதலன்களுடன் பேசும்போது காதலிகளுக்கு ஒரு தனி முகம் வந்துவிடுகிறது.

என்னை திடீரென்று பார்த்தவுடன் பாஸ்கர், “என்னண்ணன்?” என்றான். நந்தனா ஒரு மாதிரி சங்கடமாக என்னைப் பார்த்தாள்.

“சொல்றேன். நீங்க பாட்டுக்கும் பேசாம முன்னாடி போங்க. நான் பின்னாடி வரேன்…”

“என்னண்ணன்?”

“சொல்றன்டா. நீ போ…” என்று அவர்களை முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் சைக்கிளில் தொடர்ந்தேன். வீரபத்ர கோயில் முனையிலிருந்து நாட்டு வீராச்சி தெருவைப் பார்த்தேன். கல்லுக்காரன் தெரு, நாட்டு வீராச்சி தெருவுடன் இணையும் இடத்தில்தான் லைட் எரியவில்லை. அப்படியென்றால் கல்லுக் காரன் தெருவிலிருந்துதான் வரப்போகிறார்கள். எனக்கு இடப்பக்கமாக அவர்களை நடக்கச் சொல்லிவிட்டு, நான் வலப்பக்கம் சைக்கிளைத் தள்ளியபடி நடந்தேன். உள்ளுக்குள் எனக்கு திக்திக்கென்றிருக்க, ஒரு வீட்டிலிருந்து ரேடியோவில், “உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…” பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

கல்லுக்காரன் தெரு முனையிலிருந்து சட்டென்று தோன்றிய சின்னாவுடன், அவனைவிடக் கரடுமுரடாக இரண்டு பேர். வேகமாக எங்களை நெருங்கிய சின்னா எனது சைக்கிளை ஓங்கி உதைக்க… நானும், என் தம்பியும் தெருவில் விழுந்தோம். எழுந்து பார்த்த நான் அதிர்ந்தேன். சின்னாவின் கையில் திருக்கை வால். திருக்கை வாலால் அடித்தால் உடல் செதில் செதிலாகப் பேந்துவிடும். அவனுடைய ஆட்களின் கையில் சைக்கிள் செயின். மிரண்டுபோன நந்தனா ஓரமாக ஒதுங்கி திகிலுடன் பார்த்தாள். அவர்கள் மூவரும் பாஸ்கரை நோக்கி, “… எச்சக்கல நாயே…” என்றபடி ஓடி வந்தனர்.

நான் அவர்களைத் தடுக்க முயன்றேன். என் முகத்தில் சுள்ளென்று சைக்கிள் செயின் விழ… நான் அலறியபடி கீழே விழுந்தேன். நான் எழுந்து நிற்க, சின்னாவுடன் வந்தவர்கள் என்னை இறுக்கிப் பிடித்து நிறுத்தினர். பாஸ்கரை நெருங்கிய சின்னா திருக்கைவாலால் பாஸ்கரை வெளுவெளுவென்று வெளுத்தான். என் தம்பி கத்த… தெருவில் யாரும் வராத ஒரு நிமிடம். நான், “பாஸ்கர்… பாஸ்கர்...” என்று கத்த மட்டுமே முடிந்தது. சத்தம் கேட்டு கல்லுக்காரன் தெருவிலிருந்து நான்கைந்து பேர் ஓடி வர… சின்னா குழுவினர் வேகமாக ஓடி மறைந்தனர்.

பாஸ்கரை இஸபெல்லா ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று, சைக்கிளிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகச் சொல்லிக் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். அன்றிரவு, அடிபட்ட பாஸ்கர் உடனே தூங்கிவிட்டான். ஆனால் எனக்குத் தூக்கமே வரவில்லை. நான் பார்த்துப் பார்த்து பாசத்துடன் வளர்த்த தம்பி. என் கண் முன்னால் அடிபட்டால்கூடப் பரவாயில்லை. அவன் காதலி முன்பாக தெருநாய்போல் அடிபட்டதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. விடிய விடிய தூங்காமல் சின்னாவை எப்படிப் பழிவாங்குவது என்ற யோசனையிலேயே இருந்தேன்.

மறுநாள் நான் பலராமனிடம், “இன்னைக்கி நான் சின்னாவ அடிக்கப்போறன்டா…” என்றேன்.

“டேய், அவன் ரௌடிடா. அவ்ளோ ஈஸியா அடிக்கமுடியாதுடா. ஒரே நிமிஷத்துல உன்ன அவன் காலி பண்ணிடுவான். அவன அடிக்க நீ என்ன பெரிய ரௌடியா?” என்றான்.

“நானும் ரௌடியா மாறி அடிக்கறன்டா…” என்று வாய் சொன்னாலும், பலராமன் கூறியதில் இருந்த உண்மை உறைத்தது. சும்மா ரோஷத்துக்காகச் சென்று அடிபட்டு வருவதில் பிரயோஜனமில்லை. நீண்ட நேரம் யோசித்துவிட்டு, “நீ சொல்றதும் சரிதான். நான் பாக்ஸிங் கத்துட்டு வந்து அடிக்கப்போறேன்” என்றேன்.

“ரௌடியாவுறதுக்கெல்லாம் பாக்ஸிங் சொல்லித் தரமாட்டாங்க”

“தெரியும்டா. ஆனா பாக்ஸிங் கத்துக்கிட்டா ரௌடி ஆகலாம்ல? ரௌடி ஆனாதான்டா இன்னொரு ரௌடிய அடிக்கமுடியும்” என்ற என்னை பலராமன் ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

மறு வாரமே பலராமன் என்னை பாக்ஸிங் கற்றுக்கொடுக்கும் நடராஜன் வாத்தியாரிடம் அழைத்துச் சென்றான். அப்போது பாக்ஸிங் வாத்தியார்கள் வியாழக்கிழமைதோறும் பூஜை செய்வார்கள். அந்த வியாழக்கிழமை மாலை நாங்கள் பெசன்ட்நகர், வண்ணாந்துறையில், நடராஜன் வாத்தியார் பாக்ஸிங் வகுப்புகள் எடுக்கும் சிறிய கிரௌண்டுக்குச் சென்றபோது பூஜை நடந்துகொண்டிருந்தது. பூஜையை முடித்த வாத்தியார் அனைவருக்கும் வெல்லம் கொடுத்தபோது பலராமனைப் பார்த்துச் சிரித்தார். பலராமன் என்னைக் காண்பித்து, “இவன் என் ஃபிரெண்டு மணிவண்ணன். ரூமுக்கு வர்றன்ங்கிறான்” என்றான். ரூமுக்கு வருதல் என்றால் பாக்ஸிங் பயிற்சிக்காக வருகிறான் என்று அர்த்தம்.

வாத்தியார், “பாக்ஸிங் அவ்ளோ ஈஸியா கத்துக்க முடியாது. முதல்ல அதுக்கு ஸ்டெமினா வேணும். நாளைக்குக் காலைல லைட் ஹவுஸுக்கு வா. அங்கிருந்து இரும்பு வாராவதி(நேப்பியர் பாலம்) வரைக்கும் தெனம் பீச்சு மண்ணுல வெறுங்காலோட ஓடிப் போய்ட்டுத் திரும்பி வரணும். அப்பதான் ஸ்டெமினா கிடைக்கும்” என்று சொல்ல… நான் தலையை ஆட்டினேன்.

மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் லைட் ஹவுஸில் இருந்தேன். நடராஜன் வாத்தியார் மேலும் நான்கைந்து பசங்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். வெறுங்காலுடன் பீச் மண்ணில் ஓடும்போதுதான் அதன் கஷ்டம் தெரிந்தது. முதல் நாள் விவேகானந்தர் இல்லம் வரைதான் ஓட முடிந்தது. ஆனால் மூன்றாம் நாளே இரும்பு வாராவதி வரைக்கும் ஓடிவிட்டேன். மாலை வேளைகளில், சாந்தோம் சர்ச்சிற்குப் பின்புறமிருந்த கார்ப்பரேஷன் ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்தேன். வாத்தியார் அறிவுரைப்படி தினமும் காலையில், ஊற வைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டேன். வாரத்திற்கு இரண்டு நாள்கள் பீஃப் சாப்பிட்டேன். இரண்டு வார காலத்திற்குள் அதிக சிரமமின்றி நான் தினமும் ஓட... மறு வியாழக்கிழமை முதல் வாத்தியார் ரூமுக்கு வரச்சொல்லிவிட்டார்.

அந்த வியாழக்கிழமை மாலை ஏழு மணி. நான் சென்றபோது, பூஜை முடிந்து பயிற்சிகள் ஆரம்பமாகியிருந்தன. ஓரிடத்தில் நான்கைந்து பேர் ஸ்கிப்பிங் செய்துகொண்டிருந்தனர். கயிறு கட்டி உருவாக்கப்பட்டிருந்த ரிங்கிற்குள் இரண்டு பேர் குத்துச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். வாத்தியார், “டேய் அசோக்கு… கார்டு இறங்குது பாரு…” என்று ஒருவனிடம் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பேன்ட்டைக் கழற்றிவிட்டு, பையில் கொண்டு வந்திருந்த ஜெர்ஸி டிராயரை அணிந்துகொண்டு, முண்டா பனியனுடன் வாத்தியாரின் காலைத் தொட்டுக் கும்பிட்டேன்.

தொங்கிக்கொண்டிருந்த பேகிற்கு அருகில் என்னை அழைத்துச் சென்ற வாத்தியார் என் இரண்டு கையின் விரல்களிலும் வெள்ளை பேண்டேஜைச் சுற்றிவிட்டார். பின்னர் கிளவுஸை மாட்டிவிட்டார். வாத்தியார் தனது இடது கையால் மூட்டையை ஓங்கிக் குத்த… மூட்டை வேகமாக மேலே சென்றது. வாத்தியார், “இதான் ஃபர்ஸ்ட் லெஷன்” என்றவர் திரும்பி வந்த மூட்டையைச் சட்டென்று நிறுத்திவிட்டு தனது கையில் ஆக்‌ஷன் செய்தபடி, “வலது கைய இந்த மாதிரி, மூட்டை உடம்புல படாத மாதிரி கார்டு பண்ணிக்கணும். லெஃப்ட் கையால “ஒன்”னு சொல்லிக்கிட்டு பேக பன்ச் பண்ணணும். மூட்டை திரும்பி வந்தவுடனேயே மறுபடியும் “ஒன்”னு சொல்லிக்கிட்டுக் குத்தணும். இன்னைக்கி இதான் லெசன்” என்றார். நான், “ஒன்” என்று சின்னாவின் முகத்தை நினைத்தபடி பேகில் ஓங்கிக் குத்தினேன்.

வேகமாக மேலே சென்ற பேக்போல நாள்கள் விரைவாக ஓடின. சின்னாவின் மேல் இருந்த ஆத்திரத்தில் அடுத்தடுத்து லெசன்களில் விரைவாகத் தேர்ந்தேன். ஒன் டூ லெசன், ஒன் டூ ஒன் லெசன், ரைட் கிராஸ், அப்பர்கட், ரைட் ஹூக், லெஃப்ட் ஹூக் என்று அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் நான் கற்றுக்கொண்ட வேகத்தைப் பார்த்து வாத்தியார் அசந்துவிட்டார். இத்தனைக்கும் வாரத்துக்கு மூன்று நாள்கள்தான் க்ளாஸ். இதற்கிடையில் பாஸ்கரும் நந்தனாவும் சின்னா கண்ணில் படாதவாறு ரகசியமாகக் காதலித்துக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த இரண்டு மாதத்திற்குள் ஸ்பேர் ரிங், ஷேடோ பாக்ஸிங்கையும் நான் சிறப்பாகச் செய்ய… வாத்தியார், “நாளைக்கி ரமேஷ்கூட ரிங்ல இறங்கற…” என்றவுடன் எனக்கு சந்தோஷத்தில் நெஞ்சு தளும்பியது. இதுவரையிலும் நான் செய்தது எல்லாம் பயிற்சிதான். இனிமேல்தான் நிஜமான சண்டை.

முதல் நாள் சண்டையில் ஒரு நிமிஷத்திலேயே ரமேஷ் என்னை நாக் அவுட் செய்ய… அன்றிரவு தூக்கமே வரவில்லை.

முகத்தில் ரமேஷ் அடித்த அடியில் நல்ல வலி. முகத்தில் ஐஸ் கட்டியைத் தடவியபடி படுத்திருந்த என்னை அனுதாபத்துடன் பார்த்த பாஸ்கர், “உனக்கு எதுக்குண்ணன் இதெல்லாம்? சின்னாவ எல்லாம் நம்மால அடிக்கமுடியுமா? அவன்லாம் பெரிய ரௌடிண்ணன்…” என்று ஐஸ்கட்டியை வாங்கி என் கன்னத்தில் தடவிவிட்டான்.

“அவன் ரௌடின்னா நானும் ரௌடியாவறன்டா. மறந்துட்டியாடா? உன் லவ்வர் முன்னாடி உன்ன அந்த அடி அடிச்சான்டா…சாவுற வரைக்கும் மறக்கமாட்டேன். முத நாளே ஜெயிச்சுட முடியுமா? நான் பாத்துக்குறேன். நீ படு” என்றேன்.

மறுநாள் நான் நிதானமாக ஆட்டத்தைத் துவக்கினேன். இரண்டாவது ரவுண்டில் நான் கொடுத்த ரைட் க்ராஸ் பன்ச்சில் ரமேஷ் தடுமாற… சட்டென்று முழு சக்தியையும் திரட்டி நான் கொடுத்த லெஃப்ட் ஹூக்கில் மவுத் பீஸ் எல்லாம் வெளியே வர… ரமேஷ் ரிங்கிற்கு வெளியே சென்று விழ… வாத்தியார் கை தட்டினார். அப்போதும் நான் ஆவேசம் அடங்காமல் ரிங்கிற்கு வெளியே விழுந்திருந்த ரமேஷைப் பார்த்து, “இன்னைக்கி நான் கரெக்டா அடிச்சனா?” என்றேன்.

அடுத்து வந்த இரண்டு மாதத்தில் ரிங்கில் நான் ஏகப்பட்ட பேரை வீழ்த்த…சின்னாவை அடித்துவிடலாம் என்ற தைரியம் பிறந்தது. சின்னாவை அடிப்பதற்கு நாள் பார்த்தேன். சின்னா தினமும் மாலை ஆறு மணி போல், பஜார் ரோட்டில் காசியிடமிருந்து கள்ளச்சாராயம் வாங்கிக் கொண்டு வருவான். அப்போது அருண்டேல் தெரு, அரசமரத்தடி நால்ரோடு சந்திப்பில், கச்சேரியை வைத்துக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

நான் பாஸ்கரிடம், “டேய்… வர்ற வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு உன் ஆள அருண்டேல் தெரு, அரசமரத்தடி பிள்ளையார் கோயில் வரச் சொல்லிடு. நீயும் வந்துடு… ஒரு பெரிய சினிமா இருக்கு” என்றேன்.

வியாழக்கிழமை மாலை. ஆறு மணிக்கு முன்பே நான் அருண்டேல் தெரு அரசமரத் தடியில் நின்றேன். அடிப்பதற்கு வசதியாக ஜெர்ஸியும், டீசர்ட்டும் அணிந்துகொண்டு வந்திருந்தேன். பாஸ்கரும், பலராமனும் சாத்தூர் காபிக்கடை வாசலில் நின்றுகொண்டிருந்தனர். நந்தனா கோயில் வாசலில் தன் தோழியுடன் பேசியபடி நின்றுகொண்டிருந்தாள்.

பஜார் ரோட்டிலிருந்து சைக்கிள் கேரியரில் சரக்கு கேனுடன் வந்துகொண்டிருந்த சின்னாவைப் பார்த்தவுடன் என் மயிர்க்கால்கள் சில்லிட்டன.

பாஸ்கரை ஒரு முறை பார்த்துவிட்டு முன்னால் நகர்ந்தேன். சின்னா அரசமரத்தடியை நெருங்க… நான் அவன் சைக்கிளை மறித்தாற்போல் நின்றேன். அவன் கேனிலிருந்து சிதறியிருந்த சரக்கிலிருந்து சாராய நாற்றம் அடித்தது. சின்னாவின் சைக்கிள் ஹேண்டில் பாரில் கை வைத்து நிறுத்திய நான், “இறங்குடா…” என்றேன்.

சிறுகதை: தம்பியுடையான்
சிறுகதை: தம்பியுடையான்

“டேய், இன்னா… விளையாடுறியா? சரக்கு எடுத்துகினு போய்க்கினுருக்கேன்” என்று அவன் கூறி முடிப்பதற்குள், “பெரிய மயிரு சரக்கு?” என்ற நான், சட்டென்று கேரியரிலிருந்த சரக்கு கேனை வலது காலைத் தூக்கி வேகமாக உதைத்தேன். சின்னா அப்படியே சைக்கிளோடு கீழே சாய்ந்தான். கேன் மூடி திறந்துகொண்டு, சரக்கு வெளியே கொட்டித் தரையெல்லாம் பரவ… குப்பென்று சாராய நாத்தம் ஆளைத் தூக்கியது. தெருவில் சென்றுகொண்டிருந்தவர்கள் அதிர்ந்துபோய், “ஏதோ கலாட்டா…” என்று வேகமாக ஒதுங்கினர்.

கீழே கொட்டிக் கிடந்த சாராயத்தைப் பார்த்து ஆத்திரமான சின்னா, “டேய்...” என்று ஆவேசத்துடன் பாய்ந்து வந்து என் நெஞ்சில் தாக்க முயன்றான். நான் சட்டென்று நகர்ந்துகொள்ள… கீழே விழப்பார்த்த சின்னா சமாளித்துக்கொண்டு நின்று என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான். இது ஆறு மாதங்களுக்கு முந்தைய மணி இல்லை என்று அவனுக்குப் புரிந்தது. சின்னா மீண்டும் என் முகத்தில் குத்தக் கையை நீட்டினான். நான் தலையைப் பின்னுக்கு இழுத்து, இடப்பக்கம் நகர்ந்து அலட்சியமாக அவன் தாடையில் ஒரு ரைட் ஹூக் பன்ச் கொடுக்க… சின்னா கீழே விழுந்துவிட்டான். இப்போது என்னை திகிலுடன் பார்த்தபடி எழுந்த சின்னா, பீதியை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுற்றிலும் பார்த்தான். ஜனங்கள் அவன் அடிவாங் குவதை சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்னை யோசனையுடன் பார்த்தபடி, ஓரிடத்தில் நிற்காமல் மூவ் செய்ய ஆரம்பித்தான். இப்போது சின்னா அஃபென்ஸிலிருந்து டிஃபென்ஸிற்கு மாறுவது தெரிந்தது. அவன் அருகில் நெருங்கிய நான் முகத்தில் ரெண்டு ஸ்ட்ரெய்ட் பஞ்ச் கொடுக்க முயல… அவன் சாமர்த்தியமாக நகர்ந்துகொண்டு சிரித்தான். அவனும் சிறிது காலம் பாக்ஸிங் கற்றவனல்லவா? சிறிது போக்குக் காட்டிதான் அடிக்கவேண்டும். என் கையைவிட அவன் கை ரீச் அதிகம். நல்ல ஃபுட் ஒர்க் மூலமாகத்தான் இவனை வீழ்த்தவேண்டும்.

அப்போது சின்னாவால் பாதிக்கப்பட்டிருந்த ஏரியா இளைஞர்கள் என்னை ஊக்குவிப்பது போல், “மணி… விடாத… சின்னா டௌன் டௌன்… சின்னா டௌன் டௌன்…” என்று சத்தம் எழுப்பினர். சின்னாவை என்னை நெருங்கச் செய்வதற்காக நெஞ்சை ஓப்பன் கார்டாக விரித்துக் காண்பித்தபடி, “அடிரா பாக்கலாம். ஆம்பளையா இருந்தா அடிரா…” என்று அருகில் சென்று உசுப்பேத்தினேன். எனது உத்தி வேலை செய்தது. சட்டென்று அவன் என் நெஞ்சில் குத்த வர… வேகமாக நகர்ந்தேன். இவ்வாறு நான்கைந்து முறை அவன் குத்த வரும்போதெல்லாம் இடதும் வலதுமாக சரியான ஃபுட்ஒர்க்கில் நகர்ந்து அடிபடாமல் தப்ப… கும்பல் சந்தோஷமாக ஆர்ப்பரித்தது.

சின்னாவின் முகத்தில் சோர்வு தெரிந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவனது விலாப்புறத்தில் ஓங்கி ஒரு முறை குத்தினேன். வலியில் அவன் முகத்திற்கு முன்பு கார்டாக வைத்திருந்த வலது கையை அனிச்சைச் செயலாக விலக்கினான். இதை எதிர்பார்த்திருந்த நான், ஒரு அழகிய பெண் கண் இமைக்கும் நேரத்திற்குள் சின்னாவின் தாடையில் வலுவாக ஒரு லெஃப்ட் ஹூக் கொடுக்க… அவன் வாயிலிருந்து ரத்தம் கசிய… இளைஞர்கள் சத்தம் பன்மடங்கானது. தொடர்ந்து நான் ரைட் கிராஸ், அப்பர் கட், ரைட் ஹுக் என்று கற்றுக்கொண்ட அத்தனை வித்தையையும் அவன் முகத்தில் இறக்கினேன். ஒரு கட்டத்திற்கு மேல் அடி தாங்கமுடியாமல் சின்னா நாச்சியப்பன் தெருவில் திரும்பி ஓடினான். நான் துரத்திச் சென்று இழுத்து அவனைத் தரையில் வீழ்த்தினேன். அவன் இடுப்பில் ஏறி அமர்ந்த நான் ஆக்ரோஷத்துடன் அவன் முகத்தில் மாறி மாறிக் குத்திக்கொண்டேயிருந்தேன். கிட்டத்தட்ட அவன் மயக்கமாகும் வரை குத்திக்கொண்டேயிருந்தபோது அங்கு போலீஸ் ஜீப் வந்தது.

ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் எங்களை அடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார். நான் காலேஜில் படிப்பதாகக் கூறியவுடன் அவர் அசந்துபோனார். அப்பா பற்றிய விவரமெல்லாம் விசாரித்துவிட்டு, “நீ எப்படிப்பா சின்னாவ இப்படி அடிச்ச?” என்றார்.

“இதுக்காகத்தான் நான் பாக்ஸிங்கே கத்துக்கிட்டேன்”

“ஏன் பாக்ஸிங் கத்துக்கிட்ட?”

“ரௌடி ஆவறதுக்காகத்தான் நான் பாக்ஸிங் கத்துக்கிட்டேன்.”

“ஏன் ரௌடி ஆவணும்?”

“அப்பதானே சின்னா மாதிரி ரௌடிய அடிக்கமுடியும்.”

“பாக்ஸிங்கிறது ரௌடி ஆவறுதுக்காகக் கத்துக்கிறதில்ல. அது ஒரு கலை. நீ ரௌடி ஆனாதான் ரௌடிய அடிக்கமுடியும்னு இல்ல. போலீஸானாலும் ரௌடிய அடிக்கலாம்” என்றார் இன்ஸ்பெக்டர்.

என் முன்பு அமர்ந்திருந்தவர்கள் ஒரு சினிமா பார்ப்பதுபோல் நான் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர், “அவர் அட்வைஸ் படி, பப்ளிக் பாக்ஸிங்ல இறங்காம, அமெச்சூர் பாக்ஸரானேன். ஸ்டேட் லெவல்ல சாம்பியன் பட்டம் வாங்கினேன். ஸ்போர்ட்ஸ் கோட்டால சப் இன்ஸ்பெக்டரானேன். இந்த பிப்ரவரி மாசத்தோட என் போலீஸ் லைஃப் முடியுது. இப்ப டிஸியா ரிட்டயராவுறத நினைச்சா சந்தோஷமாதான். இருக்கு. ஆனா உள்ளுக்குள்ள ஒரு வலி இருக்கு” என்ற நான் பேச்சை நிறுத்தினேன். அனைவரும் ஆர்வத்துடன் என் முகத்தைப் பார்த்தனர்.

“பாக்ஸிங்ல எத்தனையோ பேருக்கு நான் ஹூக் கொடுத்து சாய்ச்சிருக்கேன். ஆனா என் தம்பிக்கு நந்தனாவோட கல்யாணமானவுடனே, அவன் எனக்குக் கொடுத்தான் பாருங்க ஒரு ஹூக். அதுல நான் சுத்தமா நாக் அவுட் ஆயிட்டேன். எந்தத் தம்பிக்காக நான் பாக்ஸிங் கத்துக்கிட்டனோ, அந்தத் தம்பிய நேர்ல பாத்து இருபது வருஷம் ஆவுது” என்று கூற... அந்த இடத்தில் கனத்த அமைதி நிலவியது.

தொடர்ந்து நான், “திருமணத்திற்குப் பிறகு நம் வாழ்க்கையில் வரும் உறவுகள், திருமணத்திற்கு முன்பு நமக்கு இருந்த உறவுகளை ஒரு கன்ட்ரோல் எக்ஸ் கொடுத்து டெலிட் செய்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால நிறைய பிரச்னைங்க... ஒரு கட்டத்துல சுத்தமா பிரிஞ்சுட்டோம். அதனால பாஸ்கர் மேல வருத்தம்லாம் ஒண்ணுமில்ல. நான் ஒருத்தர்கிட்ட நல்லா பழகிட்டு, அப்புறம் அவரோடு மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிஞ்சுட்டன்னா அவரை வெறுக்கமாட்டேன். அவரால முன்னாடி நான் என்ன பலனடைஞ்சேன்னு யோசிப்பேன். இது வரைக்கும் நானிருந்த வேலை என் தம்பி பாசத்தாலதான் கிடைச்சது. அதனால் இப்பவும் என் தம்பிய நான் அதே பிரியத்தோடு நேசிக்கிறேன்” என்று சற்று இடைவெளி விட்ட நான், “சம்பந்தா சம்பந்தமில்லாம ஏதேதோ பேசிட்டேன். இந்தப் பணி நிறைவு விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அமர்ந்தேன். சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு அனைவரும் எழுப்பிய கைத்தட்டல் சத்தம் அடங்க இரண்டு நிமிடங்களானது.

கைத்தட்டல் சத்தம் அடங்கியவுடன் ஒரு இளம்பெண் எழுந்து, “உங்க தம்பி விஷயத்துல உண்மையாவே உங்க மனசுல எந்த வருத்தமும் இல்லையா?” என்றாள்.

“ம்…” என்று சில விநாடிகள் தீவிரமாக யோசித்த நான், “ஒரே ஒரு வருத்தம் இருக்கு. சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கிறப்ப ஃபிரெண்ட்ஸ்ங்க தின்பண்டம் வாங்கிக்கொடுத்தா, என் தம்பி ஸ்கூலுக்கு ஓடிப்போய் அவனுக்குக் கொடுத்துட்டு வருவன்னு சொன்னன்ல?அந்த மாதிரி ஒரு தடவை ஒரு ஃபிரெண்டு குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்தான். அதை காலி டிபன் பாக்ஸில் போட்டுகிட்டு வேகமா அவன் ஸ்கூலுக்கு ஓடினேன். விளையாடிட்டிருந்த அவனைத் தேடிப் பிடிச்சு டிபன்பாக்ஸைத் திறந்தேன். தூக்கிவாரிப் போட்டுடுச்சு. அந்த ஐஸ் கரைஞ்சுபோய் வெறும் தண்ணிதான் இருந்துச்சு. ஐஸ் சாப்பிடலாம்னு ஆசையா பாத்த என் தம்பியோட முகம் வாடிப்போயிடுச்சு. அதை என்னால தாங்கிக்கவே முடியல. என் தம்பியோட அந்த வாட்டமான முகம் இன்னும் என் மனசுல இருக்கு. அன்னைக்கி அந்த ஐஸ் கரையறதுக்குள்ள வேகமா ஓடிப்போய்க் கொடுத்திருக்கலாமேன்னு இப்பவும் நினைச்சு வருத்தப்படுவேன்” என்று நான் கூற… அதன் பிறகு யாரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக என்னைப் பார்த்துக்கொண்டேயிருந்தனர்.

- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

(16.04.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)