Published:Updated:

சிறுகதை: ஊற்று

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

சபிதா இப்ராஹிம்

குணசேகரன் சிகரெட்டைப் புகைத்தவாறே போர் தோண்டும் வேலையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். அவரின் தந்தை அவருக்காக உயில் எழுதியிருந்த, மேலமங்களத்தில் இருக்கும் பத்து ஏக்கர் நிலத்தை, தந்தையின் மறைவிற்குப் பிறகுதான் முதன் முறையாகப் பார்க்க வந்தார். இந்தப் பண்ணையை நிர்மாணிக்க முடிவு செய்ததும், நிலத்தைச் சமன்படுத்தி, வேலியை அமைத்து, துரிதமாக வேலைகளையும் தொடங்கிவிட்டார். அதுவும்கூட சூழலின் நெருக்கடியினால் தான். இந்தச் சொத்தும் தன் கை நழுவிப் போகுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்தது. அதற்கு வலுவான காரணமும் உண்டு.

ஆட்கள் வேலை செய்வதை கையைக் கட்டிக்கொண்டு நோட்ட மிட்டார். அடுத்த சிகரெட்டுக்கான கால அவகாசத்தை அவர் சிறிது ஒத்திப் போட வேண்டும். எதுவும் செய்யாமல் சும்மா வேடிக்கை பார்ப்பது என்பது அவருக்குப் பழக்கமில்லாத ஒன்று. லாரியின் கீழே காதைப் பிளக்கும் சப்தத்தைத் தாலாட்டுபோலக் கருதி டிரைவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.பொன்னி பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாள். கன்றின் சப்தம் காதில் விழாவிட்டாலும், அது மடிதேடிக் கத்துவது தெரிந்தது.

சிறுகதை: ஊற்று
சிறுகதை: ஊற்று

நேற்று சில மணி நேரத்திலேயே வேலை முடிந்துவிடும் என்றவர் கணக்குப் போட்டிருந்தார். கரம்பை மண் என்ற போதிலும் சித்திரை மாதமென்பதால் தண்ணீரைக் கண்டெடுப்பதில் தாமதமாவதாகச் சொன்னார்கள். ஆனால், இன்றும் நீரோட்டத்திற்கான தடயமே இல்லை. முன்பெல்லாம் சில அடிகள் தோண்டினாலே நிலம் பஞ்சுப் பொதிபோல நெகிழ்ந்து கொடுத்துவிடும். நீர், நான் இங்கே இருக்கிறேன் என்று தானாக வந்து தலையைக் காட்டும். இப்பொழுது இருநூறு முந்நூறு அடி தோண்டினாலும் தண்ணீரின் சுவடு தெரிவதில்லை. ஆயிரம் அடிக்குமேல் தன் வீட்டிற்குத் தோண்டியதாக வெள்ள கோவிலில் சமீபத்தில் வீடு கட்டி கிரஹப் பிரவேசம் செய்த அவரது ஒன்றுவிட்ட அக்கா அங்கலாய்த்தாள்.

பூமியின் ரத்தமாகிய நீரை, உறிஞ்சி உறிஞ்சி எடுக்க பூமி சோகை பீடித்துப் போனது. பூமியைக் கீறும் கூரிய நகங்கள் கொண்ட மோட்டார் மிருகங்களிடமிருந்து தப்பித்து எங்கோ ஆழத்தில், பாறைகளின் அடியில் மருண்ட முயலைப்போலப் பதுங்கியிருக்கிறது.

போர் வேலை செய்பவனில் இளையவனாக இருப்பவன்தான் நீரோட்டம் பார்க்க தன் பெரியப்பா என்று ஒருவனை அழைத்து வந்திருந்தான். குணா எதிர்பார்த்ததைப்போல வந்தவன் கையில் டிவைனரோ, மெர்க்கரோ, வேறு கருவிகளோ இல்லை. தேங்காய், எலுமிச்சை, பச்சைக்குச்சி போன்ற பொருள்களோடு வந்தவனை கோமாளிபோலப் பார்த்தார். வந்தவன் முதலில் எலுமிச்சையைச் சுழற்றி விட்டான். பின் விறைப்பாக நீட்டிய உள்ளங்கைகளில் தேங்காயை நீட்டியபடி அங்கும் இங்கும் அலைந்தான். அவன் அசையாமல் ஓரிடத்தில் சிலைபோல நின்றதும் சூடு வைத்தது போல தேங்காய் எதிர் திசையில் கரணம் போட்டது. அதற்கு பின் ஒரு பெண்டுலத்தினால் வலமும் இடமும் சுற்றச் செய்து நீரோட்டத்தை உறுதி செய்தான்.அவருக்கு எல்லாம் வேடிக்கையாக இருந்தது.

“இங்க தண்ணி இல்லன்னா?”

“நான் சின்னப் புள்ளையில இருந்து இந்தத் தொழில்தான் செய்றேன். இந்தத் தொழிலுக்காகவே பீடி, சரக்குன்னு ஒரு பழக்கமும் வச்சுக்கல நானு. அந்த அனுபவத்துல சொல்றேன் இந்த இடத்துல கல்கண்டு மாதிரி இனிக்கிற சுனை இருந்தே ஆகணும். உங்க முப்பாட்டன் செஞ்ச புண்ணியம் இந்த நீரோட்டம்.”

அவரது சிரிப்பில் இருந்த எள்ளலைக் கண்டதும்,

“தம்பி, இன்னொன்னு சொன்னா நம்ப மாட்டீங்க. எங்க காலத்துல பசுமாட்டை ராத்திரியில நிலத்துல மேய விட்டுருவோம், மேய்ஞ்சு தீர்ந்து மாடு, நீரோட்டம் இருக்குற இடத்துலதான் ஓய்வா உக்காரும். அந்த இடத்துல கையால தோண்டுனாகூட தண்ணி குபுக்குன்னு வெளிய வந்துடும்.தண்ணி சாமி தம்பி.”

“கண்ணால பாக்குறீங்களா? ஏம்மா பொண்ணு, அந்த மாட்ட இங்கன கொண்டுவா...”

“வேணாம் வேணாம்... இங்க போர் போட்டுப் பாத்து நான் தகவல் சொல்லி அனுப்புறேன்.”

“உங்களுக்கு இதெல்லாம் நம்பத்தான் முடியாது. மனுஷன் அறிவை நம்புற அளவுக்கு அனுபவத்தை நம்புறது இல்ல...”

அந்த ஆள் சென்றதும் குணசேகரனும் தன் கையில் தேங்காயை வைத்து நடந்து பார்த்தார், இரண்டடி நகர்ந்ததும் தேங்காய் கை நழுவித் தரையில் விழுந்து உருண்டது. வந்தவன் இந்த வித்தையை எத்தனை வருடங்களாக பழகியிருப்பானோ என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்.

அவருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும்போல இருந்தது. இந்தத் திறந்த வெளியில் ஏதேனும் ஒதுக்குப் புறமான மரத்தையோ, புதரையோ தேடிச் செல்ல வேண்டும். மாலையில்தான் அவர் லாட்ஜுக்குப் போவார். பண்ணைக்கு என்று அவருடைய நிலத்தை ஒட்டிய ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் பழனியும் அவன் மனைவி பொன்னியையும் நியமித்திருந்தார். அவர்கள் தற்காலிகமாக அங்கொரு குடிலை அமைத்திருந்தனர். பழனி போர் போடுபவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தான். அவனது உடல் களிமண்ணில் செய்த சிற்பம்போல இருந்தது. உழைப்பு அவனின் உடலைக் கச்சிதமாகச் செதுக்கியிருந்தது. உழவு மாட்டினைப்போல கேள்வி எதுவுமில்லாமல் சொற்ப வருமானத்திற்கு உழைத்துத் தேயும் கூட்டம் நம் தேசமெங்கும் உண்டு. தான் ஒரு கம்யூனிஸ்ட்போல சிந்திப்பது அவருக்குக் கிளர்ச்சியைத் தந்தது.பொன்னி அவசரத்திற்கு எங்கு போவாள் என்று அவருக்குச் சந்தேகம் வந்தது. அவர்களுக்கு இந்த அசெளகரியங்களெல்லாம் பழகிப் போயிருக்கும். வசதிகள் எல்லாம் நாமாக வலிந்து உருவாக்கிக் கொள்வதுதானே.

தனக்குப் பாத்தியமான பூர்வீக வீடு அங்கிருந்து சில மைல் தொலைவில் இருந்த போதிலும், தான் இப்படி ஒரு மர நிழலில் ஒதுங்கியும், வியர்வையில் நனைந்தும், சிறுநீர் கழிக்க இடம் தேடியும் அலையும் நிலையை எண்ணி வருந்தினார்.

சிறுகதை: ஊற்று
சிறுகதை: ஊற்று

அந்த ஊரில் இருந்த, எளிதில் அடையாளம் காணக்கூடிய பெரிய வீடுகளில் அவருடைய பூர்வீக வீடும் ஒன்று. அந்த வீடு மட்டுமே அந்த ஊரோடு, அவரின் குடும்பத்தோடு அவருக்கிருந்த பிணைப்பின் ஒரே மிச்சம். அவரது பால்யம், வேலை, கல்யாணம் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஆசீர்வதித்து ஆனந்தப்பட்ட குடும்பத்தின் முதிய கிழவிபோன்றது அவ்வீடு. அப்பாவின் கழுகுக் கண்காணிப்பிலிருந்துகூட தப்பித்துவிடும் அவரது ரகசியங்களை அறிந்த வீடு. ஒரு திருமண விழாவையே நடத்தி முடித்துவிடக்கூடிய அளவிற்கு விசாலமானது . நிலைக்கதவு, ஜன்னல் எல்லாம் விலையுயர்ந்த பர்மா தேக்கினால் அமைந்தது. அதனால்தான் இவர் வீட்டைப் புதுப்பித்தபோதும், கதவுகளையும் ஜன்னலையும் அப்படி அப்படியே விட்டுவைக்கச் சொல்லி வலியுறுத்தினார்.

அந்த நிலைக்கதவு வீட்டின் ஆகிருதியைத் தூக்கி நிறுத்துவது போல கம்பீரமாக இருக்கும். இளைஞனாக இருந்தபோது இருப்பதிலேயே பெரிய அறையை குணசேகரன் தனதாக்கிக்கொண்டார். பெரும்பாலும் பொலிகாளைபோல தெருவைச் சுற்றிக்கொண்டிருக்கும் தம்பி சுந்தரம், வீட்டில் ஓய்வெடுக்கும் பொழுதுகளில், அந்த அறையை உபயோகிப்பதுண்டு. அறையை ஒட்டி வேப்ப மரமோ கிணற்றடியோ இருப்பதால் அந்த அறை எப்போதும் குளுமையாக இருக்கும். அறையில் வந்து கண்களை மூடினால், எங்கிருந்தாலும் நித்திரா தேவி வந்து அவரை அணைத்துக்கொள்வாள். காற்றும் வெளிச்சமும் வந்து விளையாடும். அந்த வீட்டைப் போன்றதொரு அமைப்பைப் பெரும் செல்வந்தர்களால் மட்டுமே இன்று உருவாக்க இயலும். அந்த வீடு இனி அவருக்குச் சொந்தமில்லை. ஒரு விருந்தினனாகக்கூட அங்கே இனி அவர் நுழைய முடியாது. அவருக்கு ரத்தம் பாயும் இடமெல்லாம் துக்கம் படர்ந்தது.

அவர் தன் சகோதரனிடம் தோற்றுப் போனார். தன் பெற்றோரின் பாசத்தை வென்றவன், இவரைவிடவும் அழகன், உயரமானவன், நண்பர்களை சம்பாதிக்கத் தெரிந்தவன், அவரைத் தனியனாக உணரச் செய்தவன், மறுபடியும் மறுபடியும் அவரை வெல்கிறான். வேடிக்கை என்னவென்றால், அவன் உயிருடன் இல்லாதபோதும்கூட அரூபமாக அவனால் அதைச் செய்ய முடிகிறது. தன் மனைவியின் மூலமாக இவரை வீழ்த்த முடிகிறது.

அலைபேசி ஒலிக்கவும் பத்மாவின் பெயரைப் பார்த்து எடுத்துப் பேசினார்.

“தண்ணி வந்துச்சா?”

“எங்கம்மா... இன்னும் நூறடி போகணும் போல?”

“ப்ச்... அது ஒண்ணும் வறண்ட பூமி இல்லையில்ல... தண்ணி வரத்து இருக்குற இடந்தானே.”

“குளம் குட்டையில தண்ணி இருந்தாத் தானே, மண்ணுக்கு அடியிலயும் இருக்கும். நாம உழவு மழைக்கு அப்புறம் தோண்ட ஆரம்பிச்சிருக்கணும். வெய்யக்காலத்துல செய்யக்கூடாதாம். லோகு பேச்சக் கேட்டது தப்பாப்போச்சு.’’

“சும்மா என் தம்பிய வம்புக்கு இழுக்காதீங்க.”

“மாத்திரை போட்டுக்கிட்டியா.’’

“ம்ம்... அப்புறம், கெளரி கூப்பிட்டுச்சு.”

அந்தப் பெயரைக் கேட்டதும் அவருக்கும் முகமெல்லாம் சிவந்து வெடுக்கென்று “என்னவாம்’’ என்றார்.

“புவனாவுக்குக் கல்யாணம் பேசியிருக்காங்களாம், நான் வேணுமின்னா மாமாகிட்ட காட்டுக்குப் போய் விவரம் சொல்லட்டுமான்னு கேட்டுச்சு.”

அவர் மௌனமாக இருந்தார்.

“போனதெல்லாம் போகட்டும்... இத்தோடு இந்தப் பிரச்னைய முடிச்சு விடுங்க... சும்மா வம்ப வளர்க்காதீங்க.’’

“சரி, அப்புறம் பேசுறேன்” என்று போனை வைத்தவரின் கைகள் ஆத்திரத்தில் நடுங்கியது. மற்றுமொரு சிகரெட்டை எடுத்துத் தன் வன்மத்தையெல்லாம் ஆவியாக வெளியேற்றுபவர்போல வேக வேகமாகப் புகைத்தார்.

அந்தப் பெயரைக் கேட்டதும் அவருக்கும் முகமெல்லாம் சிவந்து வெடுக்கென்று “என்னவாம்’’ என்றார்.

கெளரி சுந்தரத்தின் மனைவி.சுந்தரம் இவரைவிடவும் இரண்டு வயது இளையவன். சகோதர பந்தத்தில் இயல்பாகவே ஊடாடும் பகை அவர்களுக்குள் இன்னும் அடர்த்தி யாக இருந்தது. இருவரும் உருவத்திலும் குணத்திலும் எதிரெதிர் துருவமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பம், அண்ணன் தங்கை, மாமன், மச்சான் உறவெல்லாம் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டதுதானே. ஆதியில் ஆண், பெண் மட்டும்தானே. உடமையாக்கிக் கொள்ள வேண்டிய வளாகப் பெண். அதனை அபகரிப்ப வனாகவோ, காப்பவனாகவோ இருப்பவன் ஆண். அந்நிய ஆண் ஒவ்வொருவனும் பகைக்குப் பாத்திரமானவன். இதனால்தான் தாயாக ஆனாலும், தமக்கையாக இருந்தாலும் காதலியாக இருந்தாலும் தனது என்கிற உரிமை இயல்பாக எழுகிறது. பிற ஆணின் ஊடுருவல், அவன் உடன்பிறந்தவனாகவே இருந்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தன் அம்மா அவருக்கு மட்டுமேயான பாசத்தைத் தன் தம்பிக்கும் பாலூட்டிப் பங்கிட்டுத் தரத் துவங்கிய பால்யத்தில் உண்டானது சகோதரனுடனான பிணக்கு. அது இன்றுவரை அவன் இறந்த பின்னும் எள்ளளவும் குறையவில்லை. வெளிப் படையாக வாளைச் சுழற்றி, நேருக்கு நேராக மோதிக்கொள்ளாவிட்டாலும் வெறுப்பின் பொறி உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது. அந்தத் தகிப்புடனே அவர்கள் தங்கள் சகோதர அன்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. வெயிலின் சூடு அதிகமாகிக்கொண்டே போனது.இதுபோல, தான் சூரியனை, நிலவை, வெளியை நேருக்கு நேராகப் பார்த்துப் பல வருடங்களாகிவிட்டதாக அவருக்கு நினைவு வந்தது. கூண்டுக்குள் வளரும் சிறகு வெட்டப்பட்ட பறவையின் வாழ்க்கை. வீடு என்னும் கூண்டிலிருந்து அலுவலகம் என்னும் கூண்டு. அயல்நாட்டில் இன்னும் வசதியாக ஒரு கூண்டு. இதுநாள் வரையில் அவர் வாழ்வல்லாத வாழ்வில் ஆழ்ந்துபோயிருந்தார். அவர் நிமிர்ந்து பார்ப்பதற்குள் காலம் அவர் உடலிலும், வாழ்விலும் பல மாற்றங்களைச் செய்துவிட்டது. குணாவிற்குத் தன் மொத்த வாழ்க்கையும் ஒரு படம்போல மனதிற்குள் ஓடியது. நம் மனம் எனும் கால இயந்திரம் ஒவ்வொரு முறை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும்போதும், நினைவுகளின் அதே வலியை, மகிழ்ச்சியை. ஏமாற்றத்தை இம்மி பிசகாமல் தருகிறது.

குணா வெளிச்சம் என்றால் சுந்தரம் இருள். ஆனாலும் தன்னைவிடவும் தன் தம்பி வாழ்வில் மகிழ்ச்சியாகவும், மன நிறைவோடும் வாழ்ந்து மறைந்தது போன்ற மனக்குறை அவருக்கு.

இன்றுவரை அவருக்குப் புரியாத புதிராக இருப்பது, எல்லோரும் குணாவைவிட சுந்தரத்தை ஏன் நேசித்தார்கள் என்பதுதான். அம்மாவிற்கு, அத்தைக்கு, அவரின் ஒன்று விட்ட சகோதரி களுக்கு, ஏன், சுந்தரத்தை அடிப் பதற்காகவென்றே பிரம்பு வைத்திருக்கும் அப்பாவிற்கும்கூட சுந்தரம் என்றால் பிரியம் என்று அவருக்குத் தெரியும். எல்லோரும் குணா எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அப்படியே அவர் வளர்ந்தார். எல்லோரும் தான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று அந்தரங்கமாக ஆசை கொண்டிருந்தார்களோ அப்படி சுந்தரம் இருந்தார். குணா நன்றாகப் படித்து முடித்து சென்னையில் வேலை பார்த்தார். வீட்டிற்கு மாதா மாதம் குறைவில்லாமல் பணம் அனுப்பினார். பின் வீட்டில் கைகாட்டிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு மகனைப் படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி, செல்வச்செழிப்போடு வாழ்ந்தார்.

சுந்தரம் கல்லூரிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்டான். கெளரியின் வீட்டின் கடும் எதிர்ப்பையும் தாண்டிக் காதல் திருமணம் செய்தான். உரக்கடை, அரிசிமண்டி என்று புதிது புதிதாகத் தொழில் தொடங்கி அப்பாவின் சேமிப்பையும் கரைத்து அவர் கொடுத்த நிலத்தையும் விற்றான். பின் குடித்துக் குடித்து ஒரு நாள் செத்தே போனான்.குணா வெளிச்சம் என்றால் சுந்தரம் இருள். ஆனாலும் தன்னைவிடவும் தன் தம்பி வாழ்வில் மகிழ்ச்சியாகவும், மன நிறைவோடும் வாழ்ந்து மறைந்தது போன்ற மனக்குறை அவருக்கு. மகனோடு சில காலம் வெளிநாட்டில் தங்கிவிட்டவருக்கு ஒரு ஆசை இருந்தது. அப்பா தனக்கென உயில் எழுதியிருந்த நிலத்தில் ஒரு பண்ணை வீட்டை அமைப்பதுதான் அது. தன் ஓய்வுக்காலத்தில், வாழை, கரும்பு, காய்கறித் தோட்டம் பயிரிட்டு இயற்கைக்கு நெருக்கமாக மிச்ச நாள்களைக் கழிக்க வேண்டுமென்பது அவரது கனவு. அப்பா வீட்டை இரு மகன்களுக்கும் பொதுவாக உயில் எழுதியிருந்தார். குணாவின் பணத்தில்தான் வீடு புதுப்பிக்கப்பட்டி ருந்தது. நியாயமாகப் பார்த்தால், அவர் சுந்தரத்தின் சார்பாக அவன் மனைவிக்கென்று பங்கு தர வேண்டிய தில்லை. வீட்டை விற்றுப் பிரித்துக் கொள்வதைவிடவும் கெளரிக்கென்று ஒரு சொற்பத் தொகையைத் தந்து அவளை வெளியேற்றிவிட்டு, வீட்டைத் தனதாக்கிக்கொள்ளலாம். அவளுக்கு மாதந்தோறும் ஒரு தொகையைத் தந்தும்கூட உதவலாம் என்று திட்டம் கொண்டிருந்தார் குணா. அங்கே வசிக்கும் சுந்தரத்தின் மனைவியிடம் இதைச் சொல்லிக் கலந்து பேச வந்தவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கெளரி, வீட்டைத் தனக்கே தருமாறு உரிமை கோருகிறாள். அது ஒன்றே தனக்கு ஆதாரம் என்கிறாள். தன் மகளின் எதிர்காலம் அந்த வீட்டை நம்பித்தான் என்கிறாள். என்ன ஒரு துணிச்சல்; திமிர். யார் வீட்டை யார் சொந்தம் கொண்டாடுவது?

“அப்பா குடுத்த நிலத்த வித்துத் தின்னாச்சு, இப்ப இந்த வீட்டையும் முழுங்கத் திட்டமா? பொம்பளைன்னா கொஞ்சமாச்சும் சாமர்த்தியம் வேணும். உன்னாலதான் அவன் குடிச்சுக் குடிச்சுச் செத்துப் போனானோ என்னவோ. நியாயமா பாத்தா இந்த வீட்டுல ஒரு செங்கல்கூட உனக்குத் தரக் கூடாது. ஒவ்வொரு மாசமும் என் அப்பா அம்மாவுக்கு அனுப்புற காசுலதான் என் தம்பியும், ஏன், நீயும்கூட உக்காந்து தின்னுருப்பீங்க. இந்த வீட்டோட மொத்த மராமத்துச் செலவு, மளிகைச் சாமான் செலவு, மருந்துச் செலவுன்னு அத்தனைக்கும் நான் வாரித் தரணுமாம். கடைசியில எல்லாருமா சேர்ந்து என்னைய ஏமாளி ஆக்கிட்டீங்கில்ல. உன்னைய சும்மா விடமாட்டேன்...”

அவரது இருதயத்தின் இருண்ட அறைகளில் மறைந்திருந்த கரிய பூதங்கள் அவரைத் தூண்டின. இந்த வீட்டை முழுவதும் தன் வசமாக்கி சுந்தரத்தின் குடும்பத்திற்கு சல்லிக் காசுகூடத் தராமல் அவர்களைத் தெருவில் நிறுத்த வேண்டும் என்று சபதம் பூண்டார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். குணாவின் அப்பா பொதுச்சொத்தாக உயில் எழுதியிருந்தபோதும், அனாதரவாக இருக்கும் மருமகளுக்குத் தனது இறுதி நாள்களில் செட்டில்மென்ட் கையெழுத்து போட்டுப் பதிவு செய்து தந்துவிட்டாராம். அந்த நம்பிக்கைதான் கெளரிக்கு. இதுவும் அவரது வெள்ளகோவில் அக்கா சொல்லித்தான் அவருக்குத் தெரியும்.

“விடுடா குணா. ஆண்டவன் உனக்கு என்ன குறை வெச்சான். அந்த வீட்டை நம்பியா நீ இருக்க. ஒத்தப் பொம்பளை அவ. விட்டுக்குடுத்தவன் என்னைக்கும் கெட்டுப்போனதில்ல.”

சமூகத்தின் பார்வையில் குணா வாழ்வில் வென்றவன்; சுந்தரம் நலிந்தவன். அவன் அப்படியானதற்கு அவரா காரணம்?

சுந்தரத்தைப் போலவே கெளரியும் அவரைப் பதற்றமாக்குகிறாள். அவள், இவர் காதலுக்குப் பாத்திரமானவர் அல்ல என்று நினைவுபடுத்துகிறாள். ஒரு குடிகாரனை, பொறுப்பற்றவனை நேசிக்கத் துணிந்தவளாய் இருந்திருக்கிறாள். குணாவின் வறண்ட வாழ்வினைச் சுட்டிக்காட்டுபவளாய் இருக்கிறாள்.

கோர்ட்டில் வழக்கு கெளரிக்கு சாதகமாகத் தீர்ப்பானது. குணாவினால் இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அவள் ஒழுக்கத்தை, தன் தம்பியின் கையாலாகாத்தனத்தை, அவர்களின் பொருளாதார நிலையை என்று அகவியலைத் தாக்கினார். தன் தம்பியின் மீது தேக்கி வைத்திருந்த கசப்பை, முழுவதுமாக கெளரியின் மீது உமிழ்ந்தார்.

அவருக்கு அது போதுமானதாக இல்லை. தன் தம்பியின் அலட்சியப் போக்கினால், அவர் அப்பாவின் ஓரவஞ்சனையினால் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்குப் பதில் சொல்ல வேண்டியவள் இப்பொழுது கெளரி மட்டுமே. மொத்த வீட்டையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கும் அளவிற்கு அவருக்கு ஆத்திரம் தலைக்கேறியிருந்தது. அவர் அதைச் செய்துவிட முடியாது. உலகம் அறியாவிட்டால் எந்தக் குற்றத்தையும் செய்யும் இயல்புள்ளவன்தான் மனிதன்.இப்பொழுது அவரால் இயன்ற தண்டனை ஒன்றை அவளுக்குத் தந்தே ஆக வேண்டும். அவரது துணிச்சலை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஏதேனும் ஒரு வகையில் அவளைப் பழிதீர்க்க வேண்டும். கௌரி மெளனமாக வேடிக்கை பார்க்க ஆட்களைக் கொண்டு அந்த நிலைக் கதவைப் பெயர்த்தெடுத்துத் தன்னுடன் எடுத்துப் போனார். பிறருக்கு அது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாக இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனின் ஆடையை உருவி அவனை மானபங்கம் செய்துவிட்டதைப்போன்ற திருப்தி அவருக்குக் கிடைத்தது. நிலைக் கதவில்லாத வீட்டில் நாயும் நரியும் நுழைந்து பிழைப்பு நடத்தும் என்று அவளைச் சாடினார். கதவற்ற இந்த வாசல், வாழ்நாளெல்லாம் உன் துரோகத்தை நினைவுபடுத்தி உன்னைத் துன்புறுத்தும் என்று சபித்தார். கெளரியின் கண்கள் கசிந்ததைப் பார்த்ததும் அவரது அகங்காரம் மெல்லச் சமாதானம் அடைந்தது. தன் தம்பியிடம் நிரந்தரமாகக் குடி கொண்டிருந்த பறிக்க முடியாத புன்னகையை இன்று கையகப்படுத்தியதுபோன்ற ஒரு பேரானந்தம் படர்ந்தது.

அந்தக் கதவை அவரது பண்ணை நிலத்தில் போட்டிருந்தார். பல மாதங்களாக மழையிலும், வெயிலிலும் அது அங்குதான் ஏழைக்குழந்தை போலக் கிடந்தது. வாழை மரங்களும், வயலும் சூழ இங்கே ஒரு வீடு அமைத்து ஓய்வுக்காலத்தில் தங்கிவிட வேண்டும்.அந்த வீடு எப்படி வடிவமைக்கப்பட்டி ருந்தாலும் சரி.தான் கவர்ந்துவந்த கதவைத்தான் பொருத்த வேண்டும் என்றொரு பிடிவாதம் அவருக்கு. தன் கற்பனையில் அவர் வடிவமைத்த வீட்டிற்கு இந்தக் கதவினைப் பொருத்திப்பார்த்தார். காகத்தின் தலையில் சேவலின் கொண்டையைப் பொருத்தியதுபோல இருந்தது அது.

அந்தக் கதவை அவரது பண்ணை நிலத்தில் போட்டிருந்தார். பல மாதங்களாக மழையிலும், வெயிலிலும் அது அங்குதான் ஏழைக்குழந்தை போலக் கிடந்தது.

போர் துளையிலிருந்து புகை கசிந்ததைப் பார்த்ததும் குணாவிற்கு நம்பிக்கை அற்றுப்போனது. இன்றும் தண்ணீர் வரப்போவதில்லை. களைப்பாக அவர் மரத்தினடியில் ஓலையை விரித்து அமர்ந்தார். அடர்ந்த தொடர் மேகங்கள் சூரியனை மறைக்க, மிக மெல்லிய காற்று அவரை ஆற்றுப்படுத்துவதுபோல வீசவும், தன்னை மறந்து உறங்கிப்போனார்.செம்போத்தின் அகவலில், அவர் கண்விழித்தபோது, எதிரே மலை பிரமாண்டமாக இருந்தது. அவர் பார்வை முழுவதையும் அந்த மலை வியாபித்திருந்தது. அவருக்கு மிக அருகில், மலை நகர்ந்து வந்து அவர் எதிரில் நின்றதுபோல ஒரு மனமயக்கம். இத்தனை நாள்களில் அந்த மலையை அவர் ஒருமுறைகூடக் கூர்ந்து கவனிக்கவில்லை.

சிறுகதை: ஊற்று

மலையைவிடவும் குவிந்திருக்கும் மனத்தின் எண்ணங்கள் கண்முன்னே காணும் காட்சிகளைத் திரையிட்டு மறைக்கின்றன. அந்த மலையின் முன்னால் தன்னை ஒரு சிறுவனாக உணர்ந்தார். இது முதல் முறையல்ல. பேராழியின் முன்னால், கரிய யானையின் அருகில் தோன்றிய அதே உணர்வு. கடற்கரையில் திடீரென எழும்பிய பேரலையில் குணா நிலைதடுமாறியபோது அவரது தலைமயிரை இழுத்துக் கரையில் போட்ட சுந்தரம், அவர்கள் தெருவில் ஆடி அசைந்து வந்த யானையை இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தொட்டுத் தடவிய தருணம் என்று, அவரது வாழ்நாளெல்லாம் அவரை வருடிக் கடந்து, காற்றில் பறந்த தூசிபோல மறைவதை உணர்ந்தார். அந்த மலைதான் அவர்.பள்ளத்தாக்கு சுந்தரம். உயரங்களைத் தனக்கு அனுமதித்தவனாக எப்பொழுதும் சுந்தரம் இருந்திருக்கிறான். மேடு என்று ஒன்று இருந்தால் பள்ளமும் உண்டுதானே. இல்லை, இரண்டும் வெவ்வேறு இல்லை.உயரமும் பள்ளமும் ஒன்றேதான் என்று அவருக்குத் தோன்றியதும் அவருக்கு இதுவரை தான் அனுபவித்திராத பேரமைதி தோன்றியது.

அலைபேசி அழைத்தது.

“நான் கெளரி பேசறேன் மாமா.”

அது வேறொரு உலகில் இருந்து ஒலிக்கும் குரலாக இருந்தது.

அவர் பதில் ஏதும் சொல்லாததால் மறுபடியும், ‘`நான் பல தடவ கூப்பிட்டேன், நீங்க எடுக்கல. வீட்டுக்குக் காபி சாப்பிட வாங்க.’’

“வேலை இன்னைக்கு முடிஞ்சிடுச்சுன்னா வரேன்மா.’’

கெளரி விசும்பியதைப்போல இருந்தது.உறங்குவதற்குமுன் அவருக்கு இருந்த மனநிலைக்கு முற்றிலும் வேறாக இருந்தது அவரது இப்போதைய மனநிலை. பழனியின் மனைவி சூடான கறுப்புத் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தாள். பால் சர்க்கரை இல்லாமல், வெறும் வெந்நீரில், இலைகளைப் போட்டு, வெல்லத்தைப் பொடித்துச் சேர்த்துத் தயாரித்த பானம். ஆனால், அந்தக் கணம் இதுவரை அருந்திய தேநீரிலேயே அதுதான் சுவையானதுபோன்று அவருக்குத் தோன்றியது.

எல்லா சாதகங்களும் ஒரே புள்ளியில் இணைந்தால் நம்ப முடியாததும் நிகழும். மனித மனம் ஓர் இரும்புக் கதவுதான். உடைத்தால்கூடத் திறக்க முடியாத அது, ஒரு மென்காற்றுக்குத் தானாகத் திறந்து வழிவிடும். பழனியின் வியர்வை, ஆழ்ந்து உறங்கும் நிச்சலனமற்ற டிரைவரின் முகம், பொன்னியின் கறுப்புத் தேநீர், மலையின் பிரமாண்டம், வெயில் தந்த களைப்பு, கன்றின் பசியாற்றும் பசுவின் நிறைவு, காற்று அல்லது செம்போத்தின் பாடல்... ஏதோ ஒன்று அவரை நெகிழச் செய்ய அவரது பார்வை பர்மா தேக்குக் கதவை நோக்கித் தானாகத் திரும்பியது.

“பொன்னி, பழனிகிட்ட சொல்லி வண்டி கொண்டு வரச் சொல்லுமா, நம்ம வீட்டுக்குக் கொண்டு போகணும்’’ என்றார். பழனி போர் போடும் இடத்திலிருந்து அவரை அழைத்து உற்சாகமாகக் கையசைத்தான். மண், தாய்ப் பசுவின் மூக்கின் ஈரத்தைப்போலக் கசிந்து கொண்டி ருந்தது. நீர் தாகங்கொண்டவனைத் தேடி ஓடி வந்தது.