
``இன்னும் யாரெல்லாம் வரணும்?” வண்டியின் பின்புறம் `கோவை சிவாலயா திரைப்பட நடன நாட்டிய கலைச்சங்கம்’ என்று எழுதப்பட்டிருந்த ஜிகினாத்துணியைக் கட்டியபடியே `ரஜினி’ சரவணன் கேட்டான்.
மதியம் மணி இரண்டரை. நிகழ்ச்சிக்குக் கிளம்புகிற அவசரம். பலகுரல் பேசும் சுரேஷும், ஆட்டக்காரி ராணியும் மட்டும்தான் பாக்கி. எனக்குத் தெரியும். ஆனாலும் நான் அமைதியாக இருந்தேன். நான் ஒன்று சொல்ல, அவன் வேறொன்றைப் பேசுவான். வீணாக வாக்குவாதம் ஆகும். குழுவுக்கு அவன்தான் ’பொறுப்பு விளக்கெண்ணெய்’ என்றால் அவன் திமிரை அவனோடு வைத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் காட்டக் கூடாது. ``என்னங்க, சவரம் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல?” என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கிறான். சவரம் செய்துகொண்டு வருகிற எல்லோருக்கும் வடிவேலு மாதிரி ஆட வந்துவிடுகிறதா? ஆட்டம் இருக்கட்டும், பேச்சு? எவனாவது என்னைப்போல் ஆட்டமும் ஆடி, பேசவும் செய்வானா? ஒரு மணிக்கு என்னை வரச்சொல்லிவிட்டான். சாப்பிடாமல் கொள்ளாமல் பனிரெண்டரைக்கே வந்துவிட்டேன். மணி ரெண்டே முக்காலாகப் போகிறது. இன்னும் வண்டியை எடுத்த பாடில்லை. மயிரானுக்கு அதிலெல்லாம் கவனம் போகாது. ஆட்டக்காரிகள் எவளாவது வந்தால், அவளுக்கு என்ன வேண்டும், டீயா, பாலா, காபியா, ஜூஸா... அவனிடம் கண்ணைக் காட்டினால் போதும். தலைவலிக்கு மாத்திரையா, தைலமா? இரண்டும் தேவையில்லை, டாக்டரையே பையில் போட்டுக் கொண்டுவந்துவிடுவான். இவ்வளவு சகாயமும் பெண்களுக்கு மட்டும்தான்.
மூன்று மணிக்குப் பலகுரல் சுரேஷ் வந்து சேர, மூன்று பத்துக்கு ராணியும், ஸ்ரீஜாவும் மூணுசக்கரத்தேரில் வந்தார்கள். ஏறக்குறைய ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம் ராணியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆஹா! ஆஹா! இன்றைக்கு மன்னர் வேடத்தில் இரண்டு பேரோடும் ஆடுவது உறுதி. ஒற்றை மீசைக்கு இரண்டு பூக்கள்! ஸ்ரீஜா வேண்டுமென்றே குதித்து இறங்கினாள். ராணியும் அவளுமாகச் சேர்ந்து அந்த வண்டியிலிருந்து பெரிய தோல்பையை இறக்கி, பெரிய வண்டிக்கு மாற்றினார்கள். ரதீஷின் பை. அதற்குள் மலைப்பாம்பு, நல்ல பாம்பு, சாரை என்று பத்துப்பதினைந்து உருப்படிகள் இருக்கும். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு வழுவழுவெனக் கருமம்! குமட்டலான நாற்றமும் வரும்.
``என்ன சரவணா… இன்னைக்குப் பாம்பாட்டியும் வர்றானா?”
அவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து,
``ம்… அப்படியா?” என்றான்.

``இல்ல… ராணி இப்ப அவங்கூடத்தானே?”
``உனக்கெதுக்குய்யா இதெல்லாம்? வந்தியா… ஆடுனியா… போயிட்டே இருக்கணும்” என்றான் அதிகாரமாக. இன்றைக்கு இம்சை அரசன் பாட்டு போட்டால் இவனைத்தான் மங்குனி அமைச்சரே என்று கூப்பிட்டு, கூடுதலாகக் கொஞ்சம் பேசிக் கிழித்து விட வேண்டும். சந்தேகத்தைக் கேட்டால் எகத்தாளமாகப் பதில் பேசுகிறான். இந்தத் திமிருக்குத்தான் சௌந்தர் சரியான ஆப்பு வைத்தான்.
தெப்பக்குள மைதானத்தில் சௌந்தர் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான். நானெல்லாம் அப்போது, மற்றும் பலரில் ஒருவனாக ஆடிக் கொண்டி ருந்தேன். சௌந்தருக்கு இரட்டை வேட யோசனை வந்தது. `ரஜினி’ சரவணனையும், `ரஜினி’ ராஜாவையும் பேசி வைத்தி ருந்தான். `மீனம்மா மீனம்மா’ பாடலுக்கு மேடையில் ராஜா, இணையோடு ஆட, இடை யிசையில் மேடை விளக்குகள் அணைந்து பக்கத்தில் ஒரு மொட்டை மாடிக்கு வெளிச்சம் பாயும். அங்கே சரவணன் இன்னொருத்தியோடு ஆடவேண்டும். மேடைக்கு வெளிச்சம் வரும்போது ராஜாவின் உடை மாறியிருக்கும்! இப்படி மாறி மாறி எரியும் விளக்குகள் ஒரு சமயத்தில் இரண்டு பக்கமும் சேர்ந்தாற்போல் எரிய இரண்டு ரஜினிகளையும் மக்கள் திரும்பித் திரும்பிப் பார்த்து, குரல் எழுப்புவார்கள். விசில் பறக்கும். ராஜா சிரித்தால், பேசினால், நின்றால், திரும்பினால் அப்படியே ரஜினி! சரவணன் முகம் அப்படியல்ல. பாவம். காதலியோடு ஆடும்போதும்கூட தாயைக் கொன்று தங்கையை வன்கொடுமை செய்தவர்களைப் பழிவாங்க ஆவேசமாகக் கிளம்புவதுபோல் மூக்கை விடைத்துக்கொண்டு இருந்தால்தான் அவனுக்கு ரஜினி சாயலே வரும். `பொதுவாக எம்மனசு’க்கும், `வந்தேண்டா பால்கார’னுக்கும் கூட கறுப்புக்கண்ணாடி அவசியம் அவனுக்கு! எனக்குத் தெரிந்து `ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ சோகப்பாடலுக்குக்கூட கறுப்புக்கண்ணாடி போட்டுக் கொண்டு மேடை ஏறியவன் இவன் மட்டும்தான். சரவணனுக்கு அமைந்தி ருந்த ஒரே நல்ல விஷயம் அவனது கோரைமுடி. ஆடும்போது அழகாக எழுந்து எழுந்து அமரும். அது மட்டும்தான் அவனுக்கு பலம். தெப்பக்குள மைதானத்தில் கடைசி நேரத்தில் சௌந்தரின் கழுத்தை அறுத்தான் சரவணன்;
முதலில் சாரை, வேடிக்கை விளையாட்டுக்குப் பச்சைப்பாம்பு, பின்பு மலைப்பாம்பு, அப்புறம் கருநாகம் என்பது அவன் வரிசை. சாரையை இடுப்புக்குள் திணித்து நுழைத்துவிட்டுக் கடித்து விட்டதாக நடிப்பான். இளசுகள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தபடி குறுகுறுக்கும். பாடலும் இசையும் பெருத்த சப்தமும் ஆட்களை மயக்கும்.
ஆடினால் மேடையில்தான் ஆடுவேன் என்று அடம்பிடித்தான். சௌந்தர் தவிக்க, ராஜா புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்தான். மொட்டை மாடிக்குப் போய் ஆடினான். நிகழ்ச்சி முடிந்ததும் சௌந்தர் செலவு செய்ததைப் பார்க்க வேண்டுமே. ராஜாவுக்கும் சரவணனுக்கும் முழுக்குப்பிகளைக் கொடுத்தான். ராஜா வாங்கிப் பையில் வைத்துக்கொள்ள, சரவணன் மட்டையானான். சௌந்தர் சரவணனை மடியில் போட்டுத் தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் காட்சி வரைக்கும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் நான்தான் சரவணனை எழுப்பினேன். கண்றாவியைப் பார்க்க முடியவில்லை. உச்சந்தலையில் மட்டும் கொஞ்சமாய் விட்டுவைத்து மீதத் தலை மொத்தத்தையும் கறண்டி விட்டிருந்தார்கள். சரவணன் அடையாளமே மாறியிருந்தான். கண்ணாடியில் பார்த்துப்பார்த்து ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தான் பாவம். ஆள் முள்ளங்கித்தலையோடு இருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அன்றிலிருந்து என்மேல் காழ்ப்பும் ஆங்காரமும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது அவனுக்கு. நிறை போதையில் நானேதான் இப்படிச் செய்துவிட்டேனோ என்று எனக்கேகூட என்மேல் சந்தேகம் உண்டு. சரவணனால் இப்போது மொட்டைத்தலையோடு ஆட முடியாது. விக் வைத்து ஆடி மேடையில் கழன்று விழுந்து தொலைத்தால் அது இதைவிடவும் கேவலம். அதனால் இப்படி மேல்வேலை பார்க்கிறான்.
தோற்பையின் ஒரு காதை ராணியும் இன்னொரு காதை ஸ்ரீஜாவும் பிடித்துத் தூக்கி வந்து வேனில் ஏற்றி வைக்க, வண்டி காந்திபுரத்திலிருந்து புறப்பட்டது. லட்சுமி மில்லில் குரூப் டான்ஸ் பையன்கள் ஏறிக்கொண்டார்கள். வாங்கி ஆடுகிற பையன்கள்! நான்கு பேரில் அதிகாரமாகப் பேசுகிற ஒருத்தன்தான் உண்மையில் நடனக்காரன். அவன் பாட்டுக்குத் தகுந்தாற்போல ஆட, மேடையில் அவனை அப்படியே உள்வாங்கி மற்றவர்கள் அதே மாதிரி ஆடுவார்கள். பெரும்பாலான பையன்கள் வேடிக்கை பார்க்கிறவர்கள்கூடக் கண்டுபிடித்துவிடுகிற மாதிரி பார்த்துப் பார்த்து ஆடுவார்கள். சில பேரைக் கண்டுபிடிக்கவே முடியாது. முன்னால் ஆடுகிறவனைக் கண்ணால் பார்க்காமலே பிரதியெடுத்து ஆடுவார்கள். இப்படி கூட்டத்தில் ஒரு ஆளாய் இருந்து திடீரென்று பற்றிக் கொண்டு தீயாக வளர்ந்து வருவான் ஒருத்தன். அடுத்த அதிகாரம் அவனுக்குத்தான். அவன் கேட்காமலே பாக்கு வரும், சரக்கு வரும், பார்வை வரும், தனித்தவொரு வெளிச்சம் வரும். கடைசியாக இருளும் மடிகளும் சேர்ந்து வரும்.

ரதீஷும் இப்படி மற்றும் பலரில் ஒருத்தனாக இருந்தவன்தான். இப்போது அவன் நூற்றில் ஒருத்தன். ஒருத்தனே மூன்று நான்கு பேரின் இடத்தை நிரப்புவான். மைக்கேல் ஜாக்ஸனின் ஆவி குறைந்த பட்சம் லட்சம் உடல்களுக்குள்ளாகவேணும் புகுந்திருக்கும். அவற்றில் ஒன்று ரதீஷினுடையது. அலங்காரத்தில், உடலசைப்பில், மின்னற்திரும்புதல்களில், நிலா நடையில், இல்லாத கண்ணாடியை இருப்பதாகக் காட்டுவதில், எந்திர இயக்கங்களில், ஜாக்ஸனின் ஆன்மாவைத் தொட்டுத்
தொட்டுத் திரும்பும் உடலது. மேடைக்கு வரும்போதே இறுகிய முகத்தில் வேறொரு தன்மை வந்திருக்கும். அந்த முகத்தோடு அவன் வைக்கும் காலடிகள் கண்களில் ஒற்றிக் கொள்ளப்பட வேண்டியவை. சாமியாடியின் வேறொரு வடிவம்தான் அவனெல்லாம். ஜாக்ஸன் தரிசனம் முடிந்த பின் பாம்புகள்! முதலில் சாரை, வேடிக்கை விளையாட்டுக்குப் பச்சைப்பாம்பு, பின்பு மலைப்பாம்பு, அப்புறம் கருநாகம் என்பது அவன் வரிசை. சாரையை இடுப்புக்குள் திணித்து நுழைத்துவிட்டுக் கடித்துவிட்டதாக நடிப்பான். இளசுகள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தபடி குறுகுறுக்கும். பாடலும் இசையும் பெருத்த சப்தமும் ஆட்களை மயக்கும்.
கும்பாலேயா ஆகும்பலேயா…….
கும்பாலேயா ஆகும்பலேயா
கும்பாலேயா ஆகும்பலேயா…….
கும்பாலேயா ஆகும்பலேயா
ஆ…குவைக் குவைக் கு…வ்…வை……. குவை
கும்பாலேயா ஆகும்பலேயா…….
கும்பாலேயா ஆகும்பலேயா
கும்பாலேயா ஆகும்பலேயா…….
கும்பாலேயா ஆகும்பலேயா
ஆ….குவைக் குவைக் கு…வ்…வை….. குவை
சீறும் நாகத்தின் உச்சந்தலையில் முத்தமிடும்போது ஜனம் உணர்வெழுச்சியில் கைகளைத்தட்டும். எவனாவது ஒருத்தன் ரூபாய் நோட்டுகளைக் கோத்து மாலை செய்வான். அதற்குப் பிறகு தீயாட்டம்! சட்டையைக் கழற்றிவிட்டு மண்ணெண்ணெயில் நனைத்த துணிப்பந்துகளில் தீயைப்பற்ற வைத்துக் கோலி விளையாடி, அவற்றுக்கு முத்தமிட்டு `காலேத்’தின் `தீத்தீ’ பாடல் முழங்கப் பந்தங்களின் பிழம்புகளைத் தழுவி, கட்டுடல் முழுக்கத் தீயைத் தடவி ஆடுவான்.
திருவிழாக் கூட்டம் மொத்தமும் ஆப்பிரிக்க, அரேபியத் தொல்குடிகளாக மயங்கும். ராணி அவனிடம் மயங்கியிருக்க எல்லா நியாயங்களும் உண்டு. ராணியும் லேசுப்பட்டவள் இல்லை. இங்கிருக்க வேண்டியவளே இல்லை என்று சொல்வார்கள் இல்லையா? அப்படி ஒருத்தி. நல்ல ஆட்டக்காரி. அதீத கவர்ச்சி, அதீத திறமை, அதீத கோபம், அதீத வைராக்கியமும்தான். தான் பார்த்துக் கட்டிவைத்த தங்கையின் புருஷன் தன் மேலேயே கைவைக்கப் பார்த்தான் என்பதற்காக அவனை அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தாளாம். பதறிய தங்கையை ஆற்றுப்படுத்தி அவள் கைநிறைத்துப் பணத்தையும் வெட்டிய விரல் துண்டை ஐஸ்கட்டிகளோடு மழைக்காகி தத்தில் சுருட்டிக் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து செலவையும் பார்த்துக்கொண்டாள் என்று கேள்வி. மனதளவில் ராணி இருளும் வெளிச்சமுமானவள். வீட்டில் இருக்கும்போது பார்த்தால் இவள்தான் மேடையில் அப்படி இடுப்பை வெட்டி வெட்டி ஆடினாளா என்று சந்தேகம் வரும். முகத்துக்கு மஞ்சள் பூசி, சாமிபடங்களுக்கு மாலையிட்டு, வாசலுக்குக் கோலமிட்டு, பார்வைக்கு மங்கல மாயிருப்பாள். என் சொல் கேட்கிற ஒருத்தி கிடைத்தால் நான் இவளைக்காட்டி இதுபோல் இரு என்பேன். அவள்மீது அப்படியொரு மோகம் எனக்கு. ஆனால் இந்த தோல்பையை ராணியும் ஸ்ரீஜாவும் மாறி மாறி மடியில் வைத்துக்கொண்டு தொட்டுத் தொட்டுப் பார்த்தபடி தங்களுக்குள்ளாக மர்மமாகப் புன்னகைத்துக் கொள்கி றாள்களே? இப்படி ரதீஷின் பையை மெனக்கெட்டு ராணி சுமக்கிறாள் என்றால்? அதுவேதான்! அவனையும் சுமக்கிறதாகத்தான் அர்த்தம்! வேறென்ன? எப்பவும் என்னிடம் சிரித்துப்பேசுகிறவள் ஏனோ முகத்தைக் கோபமாக வைத்திருக்கிறாள். இது எவனும் பேச்சுக்கொடுக்காமலிருக்க பெண்கள் தேர்ந்தெடுக்கும் யுக்திகளில் ஒன்று.
நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று. அரை வயிற்றுக்குச் சாப்பிட்டால்தான் ஆடமுடியும். காலி வயிறும் ஆகாது, முழுவதுமாகப் போட்டு ரொப்பவும் கூடாது. மேடைக்குப் பின்புறம் நெஞ்சில் பெருக்கல்குறி பூமாலையோடு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த சேகருடன் பேச்சுக்கொடுத்தபடியே, பெண்கள் உடை மாற்ற வேண்டிக் கட்டியிருந்த ஓலைத் தடுக்கை ஏக்கமாகப் பார்த்தேன். `மாரியம்மா மாரியம்மா’ பாடலுக்கு மேடை தயாராவது தெரிந்தவுடன் சேகர் சிகரெட்டை அவசர இழுப்புடன் அணைத்துவிட்டு மேடைக்கு ஓடினான். நான் ஓலைத்தடுக்கை அடைந்து மெல்ல நோட்டம் விட்டேன். பசியை மறந்து இரண்டு விரல்களை நுழைத்து ஓசைப்படாமல் விரிக்கையில் யாரோ தோளைத் தொட்டார்கள். வியர்த்துத் திரும்பினேன். அந்த ஊர்க்காரன் எவனோ, பல்லிளித்த வாக்கில்…
``கோயமுத்தூருங்களா?”
``ஆமாமா… இந்தப் பக்கமெல்லாம் வரக்கூடாது… முன்னாடி போங்க தொடங்கப் போறாங்க.”
அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தினேன். கொஞ்ச நேரத்தில் சேகர் பெருக்கல்குறி பூமாலைகளோடு திரும்பி வந்தான். வரும்போதே சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். தோளில் கை போட்டுக்கொண்டேன்.
``என்றா ராமராஜா... எப்புடி இருக்கற?”
``வடிண்ணா… ஒங்க புன்னியொ நல்ல இருக்கேண்ணா!”
``பாம்பாட்டி வர்றானாடா?”
இவனை மாதிரி அள்ளைகளிடம்தான் அத்தனையும் கொட்டிக் கிடக்கும்.
``எங்கீங்”
``இங்கதான்’’
``நீங்க ஏனுங்ணா”
``அட என்ன விசியம் சொல்லு”
``அவனெங்கண்ணா? இந்தப்புள்ளகோட கொஞ்ச நாளு இருந்தா... அப்புறம் நாகமாணிக்கத்த தேடறேன்னுட்டு கிறுக்கனாட்டம் காடுகாடா அலையறா. கஞ்சா வேற… இப்ப எங்க இருக்கான்னே தெரில... ப்ச்” காறித்துப்பினான்.
இவன்களுக்கு எங்கிருந்துதான் இத்தனை எச்சில் வருமோ?
ராணியை மெல்லத் தொட்டு உசுப்பினேன். பாவமாகப் பார்த்தாள். ``ஏதாவது வேணுமாம்மா... டீ குடிக்கிறியா... வாங்கீட்டு வரட்டுமா?” என்றேன். தயங்கி பின்பு மெல்லத் தலையாட்டினாள்.
``நாகமாணிக்கமா?”
``ஆமாண்ணா… நானுஞ் சின்ன வயசுலேருந்து இந்தக் கதய கேக்கறென்... அப்புடியொண்ணு இருக்கற மாறியே தெரீல... எல்லாருக்குமே ஒரே நாள்ள கோடீசுவரங்களாயிரோணும்னு ஆச… ஏண்ணா?” திரும்பவும் துப்பினான். மூன்று அல்லது நான்கு பாடல்கள் கழிந்ததும் என் முறை வரவும், ராணி என்னோடு ஆட நான் இழைந்து கிறங்கினேன். மினுங்கும் வியர்வையும் அலங்காரமாக இருந்தவளைப் பார்த்ததும் ஏதோ ஒரு ஈர்ப்பு உடல் முழுவதும் பரவ,
``வாடி பொட்டப் புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே...”
எவ்வளவோ முயற்சி செய்து உள்ளுக்குள் இருந்த ஏக்கத்தை முகத்துக்குக் கொண்டுவந்து காட்டினாலும் கீழே வேடிக்கை பார்ப்பவர்களோடு இவளும் சேர்ந்துகொண்டு சிரிக்க, நெஞ்சுக்குள் சின்னதாய், ஆனால் ஆழமாய் ஒரு வலி எழுந்தது. சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். பாட்டு முடிந்ததும் இறங்கி வந்தேன். கூட்டம் முழுவதும் அடுத்து முழங்கிய விஜய் பாடலுக்குக் கூச்சலிட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, மூத்திரம் பெய்ய ஒதுங்குவதான பாவனையில் நடந்து ஓலைத்தடுக்கை அடைந்து சரக்கென விரல்களைச் செருகி விரித்துப் பார்த்தேன். ஸ்ரீஜா உள்பாடிக்கு மேல் துண்டைப் போர்த்தியபடி ஜொலிக்கும் ரவிக்கையை உதறிக் கொண்டிருந்தாள். நகர்ந்து கொஞ்ச தூரம் போய் நிஜமாகவே மூத்திரம் பெய்தேன். திரும்பும்போது பாடல் முடிந்தது. அடுத்த பாடல் எம்.ஜி.ஆர் பாடல் என்று அறிவித்தார்கள். நிதானமானேன். அரைக் கால்சட்டைப் பையிலிருந்து புகையிலைப் பொட்டலத்தை எடுத்து உள்ளங்கையிலிட்டு கட்டைவிரலால் கசக்கி சுருட்டிச் சேர்த்து கீழுதட்டை இழுத்து பல்லுக்கும் உதட்டுக்கும் இடையில் பூசினமாதிரி வைத்து அழுத்திவிட்டு உதட்டை விடுவித்தேன். பல் நரம்பிலிருந்து சுருசுருவென தலைக்கேறியது சிறுமின்சாரம். மஞ்சுளா வேடத்திலிருந்த ராணி மேடை யிலிருந்து உயரக்கொண்டையும் ஒருபக்கப் பூவுமாக ஒயிலாக இறங்கி ஓலைத்தடுக்குக்குள் நுழையும் கணத்தில் பார்த்தேன். மேடையின் முன்பக்கம் ஒரே ஆரவாரம்! அஜித் ஏறியிருப்பார். தடுக்கை நோக்கி நடந்தேன். வழக்கமான இடத்தில் கை விரல்களை நுழைத்து, ஓலையை விரித்துப் பார்க்க ராணி தரையில் உட்கார்ந்திருந்தாள். ஸ்ரீஜா ராணியின் முகத்தைத் துண்டால் ஒற்றிக் கொண்டிருந்தாள். யாரோ அந்த அறைக்குள்ளிருந்து வெளியேறி மேடைக்குப் போனார்கள். உடனே ராணி பரபரப்பாகி ஸ்ரீஜாவை உசுப்பவும், நான் கூர்ந்து கவனித்தேன். `என்னவோ திருட்டுத்தனம் இருக்கு இவளுகளுக்குள்ளே!’

ராணி ரவிக்கை ஊக்குகளைக் கழற்றுவதைப் பார்த்துக் கிறங்கி அங்கேயே நிலைத்தேன். ஸ்ரீஜா ரதீஷின் தோல் பைக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துத் துழாவுகிறாள். துணிமணிகள்தானா... பாம்பு இல்லையா? ப்ச்… ராணியை மறைத்துக் கொண்டு நிற்கிறாள். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஏய்… ஸ்ரீஜா! தள்ளி நில்லேன் எருமை. அட, கேட்டுவிட்டதா என்ன, தள்ளிப்போகிறாளே! பின்னால் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டு பொங்கிய வியர்வையைக் கையால் துடைத்தபடியே கவனித்தேன். ராணி ரவிக்கையிலிருந்து ஒரு பக்க மார்பை முழுவதுமாக வெளியே இழுத்து மடியிலிருந்த குழந்தையின் வாயில் திணித்தாள். அடிப்பாவிகளா! குழந்தையையா வைத்திருந்தீர்கள் இவ்வளவு நேரமும்?
``பாதிதான் குடிச்சிருக்கா முட்டக்கண்ணி! அப்படியே இருக்கு பாரு மீதி?” என்றாள் ஸ்ரீஜா. அவள் கையில் பால்புட்டி. நான் மூச்சுக்காட்டாமல் நகர்ந்தேன். குறுகுறுப்பு, தாழ்வுணர்ச்சி, திகில் என்று கலவையாக மனம் படபடத்தது.
நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வண்டியை வழியில் நிறுத்தச் சொல்லி, தேநீர் குடிக்க இறங்கினான் சரவணன். நான் யோசனைகளுக்குப் பிறகு, உறங்கிக்கொண்டிருந்த ராணியை மெல்லத் தொட்டு உசுப்பினேன். பாவமாகப் பார்த்தாள். ``ஏதாவது வேணுமாம்மா... டீ குடிக்கிறியா... வாங்கீட்டு வரட்டுமா?” என்றேன். தயங்கி பின்பு மெல்லத் தலையாட்டினாள். வண்டியைத் திரும்ப எடுத்த போது சரவணனிடம் ``முன்னாடி ஒக்காந்துட்டு வரட்டுமா சரவணா?” என்றவுடன் ``ஏறிக்க” என்றவன், பின்னால் போய் என் இருக்கையில் அமர்ந்தவுடன் கண்களை மூடிச் சாய்ந்தான்.

வண்டியை எடுத்ததும் தானாகப் பாடல் ஒலித்தது.
``ஊரைத்தெரிஞ்சுகிட்டேன்
ஒலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி ஏங் கண்மணி”
சரவணன் சட்டென்று விழித்துக்கொண்டு,
``யோவ் பாட்ட மாத்துய்யா” என்று சொல்ல, நான் ``கறுப்புக் கண்ணாடி வேணுமா சரவணா?” என்றதும் சிரித்துக்கொண்டான். மெலிதாய் பெருமூச்சு விட்டான். திரும்பவும் சரிந்து கொண்டான்.
``பச்சே கொழந்தையின்னு பாலூட்டி வளத்தேன்...
பாலக் குடிச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடி”
அரைகுறையாகத் தூங்க முயன்று கொண்டிருந்த ஸ்ரீஜா, பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்தாள். ராணி அவள் முதுகில் செல்லமாக அடித்தாள். சரவணன் அவனைத்தான் கிண்டலடிக்கிறாள்கள் போல என்று நினைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். விஷயம் மற்றவர்களுக்குக் கசிந்துவிடாமல் குழந்தையும் ராணியும் வீடுபோய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். அந்த வரி வரும்போதெல்லாம் ராணியும் ஸ்ரீஜாவும் சிரித்தபடியே இருந்தார்கள். குளிர்ந்த காற்று மெதுவாய்த் தலைகோத, தூங்கிப்போனார்கள். சரவணன் குறட்டை விட்டான். நான் ஓட்டுநரிடம் என்னிடமிருந்த பாடல்களைக் கொடுத்தேன். முதல் பாடல் ஒலித்தது,
``சந்தன மல்லிகையில் தூளி கட்டிப் போட்டேன்...
தாயி நீ கண்ணுறங்கு தாலேலல்லேலோ”
திரும்பி தோற்பையைப் பார்த்தேன். இரண்டு மடிகளில் ஜம்பமாய் அமர்ந்திருந்தது. சாலை விளக்கு வெளிச்சம் வண்டிக்குள் வந்து வந்து போனது. தாளம் போட்டபடியே அலுங்காமல் குலுங்காமல் ஓட்டினார் வண்டிக்காரர்.