Published:Updated:

சிறுகதை: சாவித்திரி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

ஷான் கருப்பசாமி

“உங்கப்பாவுக்கு என்னைப் பிடிக்கலைதானே?”

சாவித்திரி அந்த ஹோட்டல் அறை பால்கனியின் கைப்பிடியில் சாய்ந்து நின்றிருந்தாள். ஒரு ஆரஞ்சு நிற சால்வையைச் சுற்றியிருந்தாள். தொலைவில் இன்னும் விடியாத இரவில் அரபிக்கடலின் அலைகள் மெல்லிய இரைச்சலுடன் வெண்மையாக அலைந்தன. காற்றில் அலைந்த கூந்தலை அதன்போக்கில் விட்டிருந்தாள். சற்றே மேடிட்டிருந்த அடிவயிற்றை நிமிடத்துக்கொரு முறை மென்மையாகத் தடவிக்கொண்டாள். சதீஷ் கட்டிலில் அமர்ந்து தனது க்ளீட் ஷூக்களை மாட்டிக்கொண்டிருந்தான். சைக்கிளிங் உடை அணிந்திருந்தான். திடீரென்று எழுந்த அந்தக் கேள்வியால் கொஞ்சம் தடுமாறினான்.

“என்ன பேபி உளறிட்டு இருக்கே? உன்னை யாருக்காவது பிடிக்காமப்போகுமா? அவர் சுபாவமே கொஞ்சம் அப்படித்தான்.”

“இல்ல சதீஷ்... ஐ ஆம் சீரியஸ். நீ சுஷ்மிதாவைக் கல்யாணம் பண்ணலைன்னு அவருக்கு இன்னும் வருத்தம். போன வாரம் உன்னோட பர்த்டே பார்ட்டில அவ வந்தப்போ பாத்துட்டு அப்படி ஒரு சிரிப்பு. என்னைப் பாத்து என்னைக்காவது அப்படிச் சிரிச்சிருக்காரா? சிரிக்கக்கூட வேணாம். நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசவாவது செய்யலாம்ல.”

சதீஷ் எழுந்து தலைக்கவசத்தையும் அதற்கான கையுறைகளையும் எடுத்துக்கொண்டான். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தான்.

சிறுகதை: சாவித்திரி
சிறுகதை: சாவித்திரி

“ப்ளீஸ் மேடம்... அடுத்த மாசம் ஹிமாலயாஸ் டூர். அதுக்கு மலையில் ஓட்டிப் பயிற்சி வேணும்னு தான் லீவு போட்டுட்டு கோவா வந்திருக்கோம். இந்த விடியக்காலை நாலு மணிக்கு டாக்டர் மகேஸ்வரன் பத்தி கண்டிப்பா பேசியே ஆகணுமா?”

சாவித்திரியும் அவனைப்போல் ஒரு சைக்கிள் பிரியைதான். நான்கு மாதங்களில் தாயாக இருப்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறாள். இன்று சதீஷ் மட்டும் சைக்கிள் ஓட்ட அவன் பின்னால் காரில் உதவிக்காகச் செல்லவிருந்தாள்.

இருவருமாக அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். சதீஷின் டஸ்டர் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்பகுதியில் இரண்டரை லட்ச ரூபாய் விலையுள்ள கோனண்டேல் கார்பன் ரோடி சைக்கிள் கட்டி இறுக்கப்பட்டிருந்தது. அதைக் கழற்றி இறக்கினான் சதீஷ். சக்கரத்தில் காற்று இறுக்கத்தை சோதித்தான்.

அவளிடம் கார் சாவியைக் கொடுக்கும்போது அவளை இழுத்து முத்தமிட்டு மென்மையாக அணைத்துக்கொண்டான்.

“வயிறு இடிக்குது... பயல் இப்பவே நம்மைப் பிரிக்க ஆரம்பிச்சுட்டான்.”

“பயலா... அப்புறம்? ஆசையப் பாரு... இங்கிட்டு ஒன்லி பொண்ணுதான் தயாரிக்கப்படும்.”

“இன்னும் உதைக்க ஆரம்பிக்கலையா... இந்த நேரத்தில் தொடங்கிடும்னு டாக்டர் சொன்னார்ல?”

அவள் உதட்டைப் பிதுக்கிவிட்டு டஸ்டரில் ஏறினாள். சதீஷ் க்ளீட் காலணியை சைக்கிள் பெடலில் பொருத்தினான். அது காந்தம்போல் ஒட்டிப் பிடித்துக்கொண்டது. சைக்கிளின் முன் பக்க வெண்ணிற விளக்கைப் போட்டுக் கொண்டான். பின்பக்கம் அணைந்து அணைந்து மின்னி எரியும் சிவப்பு விளக்கைப் போட்டான். அது ஏனோ எரிய மறுத்தது. இரண்டு முறை தட்டிப் பார்த்தான். பயனில்லை.

“ஸ்பேர் லைட் இல்லையா?”

“ரூம்ல இருக்கு. பரவால்ல வா. நீதான் பின்னாடி வரப் போறியே.”

ஆறு கிலோவில் காற்றாகக் கனத்த அந்த மிதிவண்டியில் காலைத் தாண்டிப்போட்டு ஏறி மிதித்து அதன் சின்னஞ்சிறிய இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொண்டான். பரபரவென்று கால்களைச் சுழற்றி ஓட்டத் தொடங்கினான். முதல் ஐந்து கிலோமீட்டர்கள் வார்ம் அப். அதன் பிறகு வேகமெடுப்பான். டஸ்டர் மெல்ல அவனைப் பின்தொடரத் தொடங்கியது.

சதீஷ் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் தலைமை விற்பனையாளன். அவன் தந்தை மகேஸ்வரன் பெங்களூரில் பரபரப்பான ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். சதீஷ் ஐந்து வயதில் இருக்கும்போது அவன் அம்மா பிரிந்து சென்றுவிட்டாள். அதற்குப் பிறகு அவன் அப்பாதான் அவனுக்கு எல்லாமே. கொஞ்சம் கண்டிப்பானவர்தான். நிறைய பேச மாட்டார். பெரும்பாலும் வேலைக்காரர்களுக்கு நடுவில்தான் சதீஷ் வளர்ந்தான். அவனை மருத்துவராக்க மகேஸ்வரன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. ஐடி துறையில் வேலைக்குப் போனான்.

அவனுக்குத் தன் நண்பர் அசோக்கின் மகள் சுஷ்மிதாவைத் திருமணம் செய்து வைக்க மகேஸ்வரன் விரும்பினார். அவரிடமும் ஒரு மாதிரி இதுகுறித்துப் பேசியிருந்தார். அவர் சிறிது காலம் போகட்டும் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் அந்தச் சிறிய காலத்தில் ஒரு சைக்கிள் பயணத்தில் சதீஷ் சாவித்திரியைச் சந்தித்திருந்தான். நள்ளிரவில் ஆளரவமற்ற சாலையில் பஞ்சர் ஆகி நின்றுகொண்டிருந்த சதீஷுக்கு சாவித்திரி உதவினாள். சாவித்திரி ஒரு ஹெச்ஆர் மேனேஜர். அப்பா இல்லை. அம்மா மட்டும் மதுரையில். இதெல்லாம் டியூப் மாற்றிக் காற்றடிக்கும் இடைவெளியில் பரிமாறிய தகவல்கள்.

அதன் பிறகு அந்த இரவில் இருவரும் இணைந்தே பயணிக்கத் தொடங்கினார்கள். அது அடுத்த நாள் வாட்ஸப்பிலும் தொடர்ந்தது. தினமும் இரண்டு முறையாவது தொலைபேசிக் கொண்டார்கள். ஒரு டிசம்பர் மாத ஞாயிற்றுக் கிழமையில் தனிமையான ஒரு நூறு கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தின் நடுவே தனது காதலைச் சொல்ல முடிவெடுத்தான் சதீஷ்.

“நல்ல வெதர். நானும் நீயும் மட்டும். நிறைய சிரிப்பு. இதுதான் நம்ம பெஸ்ட் ரைடுல்ல...?”

“ஆமான்டா...”

“இதே மாதிரி வாழ்க்கை முழுக்க என் கூடவே வருவியா?”

சாவித்திரி பயணம் முடியும் வரை பதில் பேசவில்லை.

அவளுடைய வீட்டுக்குப் பிரியும்போது சொன்னாள்.

“சதீஷ், நான் வீட்ல பேசணும்.”

“வீட்டை விடு. மொதல்ல உனக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு சொல்லு”

“மரமண்டை, உன்னைப் பிடிக்காமலா வீட்ல பேசறேன்னு சொல்றேன்?”

சதீஷ் ஆயிரம் வாட்ஸ் பிரகாசமாகிப் போனான்.

“சாவு... நிஜமாத்தான் சொல்றியா?”

“எருமை... என்னை அப்படிக் கூப்பிடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது?”

“அது சுருக்கமா... செல்லமா...”

“நீயும் உன் செல்லமும். நாளைக்கு என்னை உன் வீட்ல கொண்டு போய் நிறுத்தி, அப்பா... சாவு வந்திருக்குன்னு சொல்லுவியா?”

சதீஷ் விழுந்து விழுந்து சிரித்தான். அவளுக்கும் சிரிப்பு வந்தது.

சாவித்திரியின் அம்மா இந்தச் செய்திக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவளும் ஓரளவு கணித்து வைத்திருந்ததுதான்.

“ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. அவங்கவங்க வீட்ல நாம எப்படி வேணா சண்டை போட்டுக்கலாம். சேந்துக்கலாம். ஆனா போற இடத்துல எப்பவுமே நல்ல ரிலேஷன்ஷிப் ரொம்ப முக்கியம். சதீஷோட அப்பாவுக்கு சதீஷ்தான் எல்லாமே. அவரைக் கஷ்டப்படுத்திட்டு எதையும் செய்யாதீங்க” என்று முடித்துக் கொண்டார்.

short story
short story

எதிர்பார்த்ததுபோலவே டாக்டர் மகேஸ்வரன் இதை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் நண்பர் அஷோக்கிடம் ஏற்கெனவே சம்பந்தம் குறித்துப் பேசியிருந்ததால் அவருக்கு தர்ம சங்கடம். சுஷ்மிதாவும் ஒரு மருத்துவர் என்பதால் அவருக்கு அந்த சம்பந்தம் அமைவதில் மிகவும் விருப்பமும்கூட. பத்து நாள்கள் சதீஷை முறைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.

அஷோக் அவரை மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார்.

“மகேஷ்... சதீஷ் நேரா சுஷ்மிதாகிட்ட பேசிட்டான். அவங்க தெளிவா ஒரு முடிவுக்கு வந்துட்டாங்கடா... எனக்கும் உன்னை மாதிரி ஒரு சம்பந்தியை மிஸ் பண்றோமேன்னு வருத்தம்தான். ஆனா இதுல நாம செய்ய எதுவுமே இல்லை.. நீ மனசுல எதுவும் வெச்சுக்காம அடுத்தது ஆக வேண்டியதைப் பாரு.”

திருமணம் விமரிசையாகவே நடந்தது. ஆனால் தனக்கும் தன் மாமனாருக்குமிடையே ஒரு கனமான திரை விழுந்திருப்பதை சாவித்திரி உணர்ந்தாள். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்திலும் மகேஸ்வரன் அவளிடம் பெரிதாக முகம் கொடுக்கவில்லை. உணவு மேசையில் அமைதியாக சாப்பிடுவார். சதீஷ் ஏதாவது பேசி இறுக்கத்தைக் குறைக்க முயற்சி செய்வான். பெரும்பாலும் அது தோல்வியில்தான் முடியும்.

மொபைல் விளக்கொளியில் மெல்ல விரிந்த அந்தக் காட்சியை எப்படி உள்வாங்கிக் கொள்வதென்று அவள் மூளைக்குத் தெரியவில்லை. சைக்கிளிங் உடையில் சாலையை அணைத்தது போல் குப்புறக் கிடந்தான் சதீஷ்.

சாவித்திரி கர்ப்பமாக இருக்கிறாள் என்று சதீஷ் சொன்னபோதுதான் மகேஸ்வரனின் நடவடிக்கைகளில் சிறு மாறுதல் தென்படத் தொடங்கியது. அவளுக்கான சரியான மருத்துவரைத் தேர்வு செய்வது முதல் அவள் உணவைக் கண்காணிப்பது வரை தலையிடத் தொடங்கினார். ஆனால் அப்போதும் சாவித்திரியிடம் அவர் எதுவும் பேசவில்லை.

“பாத்தியா, எல்லாம் மனசுக்குள்ளே இருந்திருக்கு” என்றான் சதீஷ்.

“இதெல்லாம் அவரோட வாரிசுக்காக” என்றாள் சாவித்திரி வெடுக்கென்று. இந்தப் பனிப்போரின் இறுக்கம் தாளாமல்தான் ஒரு வாரம் கோவா செல்ல முடிவு செய்தார்கள்.

“பாத்துடா...” என்று சொல்லி அனுப்பினார் மகேஸ்வரன். அப்போதும் சாவித்திரியிடம் எதுவும் பேசவில்லை. அவள் காரில் வரும்போதே நீண்ட நேரம் இது குறித்துப் புலம்பியபடியே வந்தாள். அதன் தொடர்ச்சிதான் இன்று காலையிலும்.

மலைப்பாதை தொடங்கியிருந்தது. சதீஷ் அவ்வப்போது கண் பார்வையிலிருந்து மறையத் தொடங்கினான். அவளுடைய ஆண்டிராய்டு போனில் மேப் வழிகாட்டிக்கொண்டிருந்ததால் சாவித்திரி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பாட்டு கேட்கவேண்டும் போலிருந்தது. பென் டிரைவில் இருந்து என்னவோ பாடியது. பிடிக்கவில்லை. புளூடூத்துக்கு மாற்றினாள். சாலை வளைந்து வளைந்து இறங்கத் தொடங்கியிருந்தது. சாலையில் ஒரு கண் வைத்தபடியே மடியிலிருந்த போனை எடுத்து அவளுடைய இந்திப் பாடல்கள் பட்டியலைத் தேடினாள். அதைப் போட்டுவிட்டு நிமிர்ந்தபோதுதான் திடீரென்று தோன்றிய வளைவைக் கவனித்தாள். அது சரேலென்று இறங்கி முடிவில்லாமல் திரும்பியது. ஒற்றைக் கையில் ஓட்டிக் கொண்டிருந்த டஸ்டர் சாலைக்கு வெளியே சென்றுவிடும் போலிருந்தது. அப்படியே போனைப் போட்டுவிட்டு இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைத் திருப்பி வாகனத்தை மீண்டும் சாலைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

கார் மீண்டும் சாலைக்கு மீண்டு வந்த அடுத்த நொடியில் பெரிதாக எதன்மீதோ ஏறி இறங்கியது. தட்டென்ற சத்தத்துடன் உலோகம் நெரியும் சத்தமும் கேட்டது. தூக்கிப் போட்டதில் சாவித்திரியின் வயிறு ஸ்டியரிங்கில் இடித்துக் கொண்டது. அவளுக்கு சில நொடிகள் என்ன நடந்ததென்றே புரியவில்லை. அவசரமாக வண்டியை நிறுத்தினாள். அவள் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த நடுக்கத்தில் சீட் பெல்ட்டைக் கழற்ற முடியவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பிறகு கழற்றிவிட்டு இறங்கினாள்.

காரின் பின்பக்கம் இன்னும் இருளாக இருந்தது. ஐம்பதடி தொலைவில் ஏதோ டார்ச் போல சாலையில் கிடந்தது. சாவித்திரி கார்க் கதவைத் திறந்து தனது மொபைலைத் தேடி எடுத்தாள். அதன் டார்ச்சை ஆன் செய்து அந்த விளக்கின் ஒளியில் மேட்டில் ஏறத் தொடங்கினாள். அவளுக்கு வியர்த்து வழிந்தது. இதயம் திக் திக்கென்று காது வரை ஒலித்தது.

மொபைல் விளக்கொளியில் மெல்ல விரிந்த அந்தக் காட்சியை எப்படி உள்வாங்கிக் கொள்வ தென்று அவள் மூளைக்குத் தெரியவில்லை. சைக்கிளிங் உடையில் சாலையை அணைத்தது போல் குப்புறக் கிடந்தான் சதீஷ். ஆங்காங்கே சாலையெங்கும் மின்னும் திரவம் ரத்தம் என்பது சாவித்திரிக்கு அப்போது தெரியவில்லை. அவனுக்கு அருகில் அவனுடைய சைக்கிள் உருக்குலைந்து கிடந்தது. அவளுக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.

சிறுகதை: சாவித்திரி

“ஐயோ...”

ஏதேதோ கத்த வேண்டுமென்று எண்ணினாள். குரல் எழும்பவில்லை. வயிற்றைத் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்க ஓடி அவனைத் தூக்கினாள். காருக்குத் தூக்கி வர நினைத்தாள். அவன் உயரத்துக்கும் கனத்துக்கும் இவளால் அவனை அசைக்க முடியவில்லை. வீறிட்டு அலறினாள். குரல் வந்தது.

“ஐயோ... யாராவது வாங்க... ஹெல்ப்.”

கையிலிருக்கும் மொபைல் போனைப் பயன்படுத்தவேண்டும் என்பதுகூட அவளுக்குத் தோன்றவில்லை. அவனருகே அமர்ந்து உலுக்கினாள்.

“டேய் சதீஷ்... விளையாடதடா... எழுந்திருடா நாயே... டேய்... ப்ளீஸ்டா...”

அடுத்த சில நொடிகளில் அந்த வழியாக எதிரே வந்த கார் இந்தக் காட்சியைக் கண்டு நின்றது. உடனடியாக காவல் துறைக்கும் ஆம்புலன்ஸுக்கும் அழைப்பு பறந்தது.

மறுநாள் காலை அங்கிருந்த அரசு மருத்துவ மனைக்கு டாக்டர் மகேஸ்வரன் வந்து சேர்ந்தபோது, சாவித்திரி தூங்குவதற்காக அவளுக்கு மயக்க ஊசி போட்டிருந்தார்கள்.

ஜார்ஜ் என்ற இன்ஸ்பெக்டர்தான் இதை விசாரித்துக்கொண்டிருந்தார்.

“ஐ ஆம் ஸாரி டாக்டர்... மனசை திடப்படுத் திக்கங்க. உங்க சன் ஸ்பாட்லயே இறந்துட்டாரு. எக்ஸாக்டா என்ன நடந்ததுன்னு தெரியலை. இன்னும் விசாரிச்சுட்டுதான் இருக்கோம்.”

மகேஸ்வரனின் உலகம் நொறுங்கி விழுந்தது. மரணங்கள் அவருக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் வாழ்க்கையிலிருந்த ஒற்றைப் பிடிப்பை இழந்து அடியற்ற பாதாளத்தில் விழுவது வேறு அனுபவம்.

சதீஷ் மற்றும் சாவித்திரியின் நண்பர்கள் குவிந்துவிட்டார்கள். அஷோக் சாவித்திரியின் அம்மாவை அழைத்துக்கொண்டு சுஷ்மிதாவுடன் வந்துவிட்டார். போஸ்ட் மார்ட்டம் முடிய அடுத்த நாள் மதியம் ஆகும் என்றார்கள். அங்கு இருந்த அச்சுதானந்தன் என்ற தலைமை அரசு மருத்துவர் அஷோக்கின் நண்பர். அரசு சம்பிரதாயங்களை முடிப்பதில் தான் உதவுவதாகச் சொன்னார்.

மீடியாக்கள் மோப்பம் பிடித்து வந்துவிட்டன.

`மனைவியே கணவன்மீது கார் ஏற்றிய துயரச் சம்பவம்.’

`கோவாவில் சைக்கிள் வீரர் மரணத்தில் மர்மம். மனைவியே கொன்றாரா? மது போதையா? போலீஸ் விசாரணை.’

`கவனக்குறைவால் கணவனைக் கொன்ற இளம் மனைவி.’

விரலுக்கு வந்ததெல்லாம் செய்தியென்று அவர்கள் தட்டி விட்டார்கள்.

சாவித்திரியை அங்கிருந்து அன்றே டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸில் பெங்களூரு கொண்டு செல்ல முடிவானது. அவள் அம்மாவும் சுஷ்மிதாவும் உடன் சென்றார்கள்.

சாவித்திரியோடு அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. இரண்டு டிவி சேனல்கள் அந்த நேரத்திலும் காத்திருந்தன. ‘`மேடம், ஒரு சின்ன அப்டேட் தர முடியுமா?’’ என்று மைக்கை நீட்டினார்கள். சுஷ்மிதா சீறினாள்.

“மனுச ஜென்மங்களா நீங்க? நிலைமையைப் புரிஞ்சுக்க கொஞ்சம்கூடவா முயற்சி செய்ய மாட்டீங்க?”

“இது எங்க வேலை மேடம்.”

பெருத்த வயிறுடன் இருந்த செய்தியாளன் வாழைப்பழம் தின்றுகொண்டே அலட்சியமாகக் கூறினான்.

மறுநாள் மாலைதான் சதீஷின் உடல் வந்து சேர்ந்தது. சாவித்திரி சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். ஓலமிட்டபடி ஓடி வந்து மகேஸ்வரனின் காலில் விழுந்தாள்.

“மாமா... என்னை மன்னிச்சுடுங்க மாமா... டேய் சதீஷ் சொல்லுடா. எம்மேல தப்பு இல்லைன்னு மாமாகிட்ட சொல்லுடா.”

மகேஸ்வரன் சிலையாக அமர்ந்திருந்தார்.

“மாமா என்னை ஏதாவது சொல்லுங்க... திட்டுங்க... கொலைகாரின்னுகூடத் திட்டுங்க... இப்படி பேசாம இருக்காதீங்க...”

மகேஸ்வரன் கையை உயர்த்தி சுஷ்மிதாவை அழைத்தார்.

“சுஷ்மிதா... சாவித்திரியை உள்ளே கூட்டிட்டுப் போம்மா. எல்லாரும் இருக்கும்போது இப்படி சத்தம் வேண்டாம்.”

சாவித்திரியை துள்ளத்துடிக்க அவள் அறைக்குள் கூட்டிப் போனார்கள்.

இறுதிச்சடங்குகள் வேகமாக நடந்தேறின. மூன்று நாள்களில் உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் கரைந்து சதீஷ் உறைந்த புன்னகையுடன், ஒரு மாலையிட்ட புகைப்படத்தில் அடங்கிப் போயிருந்தான்.

சாவித்திரி சாப்பிட மறுத்தாள். யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதம் பிடித்தாள். அவள் அறைக்குள் ஒரே அமளி. மகேஸ்வரன் வெளியே சோபாவில் சரிந்திருந்தார். அவர் காதில் எல்லாமே விழுந்தது.

மகேஸ்வரன் வேகமாக எழுந்தார். அறைக்குள் சென்றார். பால் டம்ளரை எடுத்தார். சாவித்திரியிடம் நீட்டினார்.

“இப்ப நீ பாலைக் குடிக்கப் போறியா இல்லையா?” என்று அதட்டினார்.

சாவித்திரி ஒரு விநாடி திகைத்தாள். பிறகு எதுவும் பேசாமல் பாலை வாங்கிக் குடித்தாள். மகேஸ்வரன் திரும்பி வெளியே வந்து சோபாவில் அமர்ந்துகொண்டார்.

ஒரு வாரம் சென்ற பிறகு ஒரு நாள் இரவு உணவுக்குப் பிறகு சாவித்திரியின் அம்மா தயங்கித் தயங்கி அவரிடம் வந்தார்.

“நீங்க அனுமதிச்சா சாவித்திரியை கொஞ்ச நாள் மதுரைக்குக் கூட்டிட்டுப் போலாம்னு நினைக்கிறேன். எனக்கும் ஊர்ல வேலை கிடக்கு.”

சற்று நேரம் அவர் பதிலுக்காகக் காத்திருந்துவிட்டு அவள் அம்மா திரும்பிச் சென்றுவிட்டாள். மகேஸ்வரன் மெல்ல எழுந்து சாவித்திரியிடம் வந்தார்.

“உனக்கு இங்கே இருக்க இஷ்டமில்லையாம்மா?” என்றார். அவர் குரல் தழுதழுத்தது.

அவள் அமைதியாக இருந்தாள்.

சிறுகதை
சிறுகதை

“நடந்தது ஒரு விபத்தும்மா. என்னைவிட உனக்குத்தான் இது பெரிய இழப்பு. அவன்மேல ஒரு துரும்பு பட்டாக்கூட நீ துடிச்சுப் போயிடுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவன் விதி. போயிட்டான். நான் வற்புறுத்தலை. ஆனா கொஞ்ச காலம் உன்னை என்கூட வெச்சுக்கிட்டா என் பையன் சந்தோஷப் படுவான்னு நினைக்கிறேன்.”

அவர் அப்படிச் சொன்னதும் சாவித்திரி வெடித்து அழுதாள். அவர் வெளியேறினார்.

சாவித்திரியின் மொபைல் ஒலித்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு எடுத்தாள்.

“நான் கோவால இருந்து டாக்டர் அச்சுதானந்தன் பேசறேன்மா. பேசலாமா?”

“சொல்லுங்க டாக்டர்”

“சதீஷோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கும்மா. அதுல ஒரு டீட்டெயில் முக்கியமா நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்”

“சொல்லுங்க டாக்டர்”

“அவர் மேல கார் ஏறி மல்டிபிள் ஃப்ராக்சர்ஸ், காயங்கள் ஆகியிருந்தாலும், அவர் உயிர் போனதுக்கு அது காரணம் இல்லை. அதுக்கு சில நிமிடங்கள் முன்னாடியே அவருக்கு ஒரு மாசிவ் ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. அதுலதான் அவர் உயிர் போயிருக்குன்னு அஃபீசியல் ரிப்போர்ட் சொல்லுது. அதாவது, ஏற்கெனவே கீழே கிடந்த சைக்கிள் மேலதான் கார் ஏறியிருக்கு. நாளைக்கு இதெல்லாம் மீடியாவுல வரதுக்கு முன்னாடி உனக்குச் சொல்லணும்னு நினைச்சேன்.”

“நடந்தது ஒரு விபத்தும்மா. என்னைவிட உனக்குத்தான் இது பெரிய இழப்பு. அவன்மேல ஒரு துரும்பு பட்டாக்கூட நீ துடிச்சுப் போயிடுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அவன் விதி

சாவித்திரி அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.

“ஹலோ...”

சாவித்திரி கலைந்தாள்.

“ஐ ஆம் சாரி... தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்.”

வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் படுத்திருந்தாள். எழுந்து சென்று சதீஷின் சைக்கிள் ஜெர்சி ஒன்றை எடுத்து வந்தாள். அதை அணைத்துக்கொண்டு படுத்தாள். அழுகை பீறிட்டது. குலுங்கி அழுதாள். எப்போதென்று தெரியாமல் தூங்கிப்போனாள்.

மறுநாள் காலை அனைவருக்கும் முன்பாகவே சாவித்திரி எழுந்துவிட்டிருந்தாள். தனக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள். அவிழ்ந்தே கிடந்த கூந்தலை முதல் முறையாக அள்ளி முடிந்திருந்தாள்.

சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்தாள் அவள் அம்மா. மகேஸ்வரனும் அடுத்த சில நிமிடங்களில் எழுந்து வந்தார். கதவைத் திறந்து செய்தித்தாளை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார்.

“அம்மா நீ மதுரை போயிட்டு உன் வேலையெல்லாம் பாத்துட்டு ஒரு வாரம் கழிச்சு வா. நான் வரலை” என்றாள் சாவித்திரி.

மகேஸ்வரன் முகத்தில் சிறிய மலர்ச்சி.

“என்னடி... யோசிச்சுதான் சொல்றியா?”

“ஆமாம்” என்றபடி வெளியே வந்தவள் மகேஸ்வரன் முன்பாக நின்றாள்.

“மாமா... நீங்களும் ரெடியாகி ஒரு வாக்கிங் போயிட்டு வாங்க. வந்ததுக்கு அப்புறம் மொதல்ல ஷேவ் பண்ணிட்டு கொஞ்ச நேரம் க்ளினிக் போயிட்டு வாங்க. இப்படியே இருக்காதீங்க.”

மகேஸ்வரன் ஒரு குழந்தையைப்போல அவசரமாக ஷூ அணிந்துகொண்டு கிளம்பினார்.

சாவித்திரி ஹார்லிக்ஸ் கோப்பையுடன் பால்கனியில் வந்து நின்றாள். போனை எடுத்து அஷோக்கை அழைத்தாள்.

“அங்கிள். நான் சாவித்திரி பேசறேன்.”

“சொல்லும்மா... ஈஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?”

“ம்ம்ம்... டாக்டர் அச்சுதானந்தன் பேசினார்.”

“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்தானே? எனக்கும் சொன்னான்மா. இதுக்கு சந்தோஷப்படறதா துக்கப்படறதான்னு தெரியலை. சோகத்துலயும் ஒரு சின்ன ஆறுதல்னு சொல்லலாம்.”

“அங்கிள், நான் ஒண்ணு கேக்கலாமா?”

“ஷ்யூர்... ஷ்யூர்...”

“இந்த ரிப்போர்ட்டை யார் இப்படி மாத்தச் சொன்னது?”

மறுமுனையில் கனத்த மௌனம். அஷோக் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தார்.

“எனக்குத் தெரியும் அங்கிள். ஆனா எனக்குத் தெரியும்னு என் மாமாவுக்குத் தெரிய வேண்டாம்.”

சாவித்திரி போனை வைத்துவிட்டு ஹார்லிக்ஸை உறிஞ்சத் தொடங்கினாள். தொட்டியிலிருந்த செடிகளைப் பார்த்தாள். வாடியிருந்தன. நீரூற்ற வேண்டுமென்று மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.

மைக்ரோ பாதமொன்று விளுக்கென்று முதல்முறையாக அவள் வயிற்றுக்குள் உதைத்தது.