
ஆதித்ய கரிகாலன்
“Chalo, let’s go for Tea” என்று சந்தீப் உரிமையாய் அழைத்தபோது ரவியால் மறுக்க முடியவில்லை. மறுக்கும் அளவிற்கு அவன் நெருங்கிய நண்பனும் இல்லை.
எல்லாம் இந்த ஐந்து நாள் பழக்கம்தான். ஒரு புராஜெக்ட் விஷயமாக ரவிக்கு ஹைதராபாத் போக வேண்டிய சூழல். ஹோட்டலில் தங்கும் வசதி, விமான டிக்கெட், ஒரு வார சாப்பாட்டுக்கான செலவு என அனைத்துமே கம்பெனி ஏற்பாடு. ஆனால், ரவியின் மேலாளர், “நீ ஒண்ணும் ஹோட்டல்ல தங்க வேணாம். சந்தீப் அவன் ரூம்லயே உன்ன ஸ்டே பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான்” என்றார்.
ரவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கல்யாணத்திற்குப் பிறகு தனக்கென்று ஒரு அந்தரங்கவெளியே இல்லாத போய்விட்டது என்ற வருத்தம் ரவிக்கு உண்டு. அவனே எதிர்பாராது வந்த இந்தப் பயணத்தை முழுவதும் தனிமையில் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினான். நட்சத்திர விடுதி, பளீர் வெண்விரிப்பு கொண்டு மெத்தை, ஏசி, ரூம் சர்வீஸ், ஜன்னலின் திரையை ஒதுக்கிப் பார்த்தால் கீழே செல்லும் கார்கள், இரவு நேர விளக்குகள்; முக்கியமாக, பொண்டாட்டி, பிள்ளை தொந்தரவு இல்லாமல், கொண்டு சென்ற புத்தகங்களை ஒரு வெறியோடு வாசித்துத் தீர்ப்பது என்று ஏகப்பட்ட கனவுகள் வைத்திருந்தவனுக்கு இந்த எதிர்பாராத திருப்பம். யாரோ பின்மண்டையில் தட்டி நிதர்சனத்திற்குக் கொண்டு வந்ததுபோல் இருந்தது. ரவி விடாப்பிடியாகக் கேட்டால் மேலாளர் ஹோட்டலில் தங்குவதற்கான அப்ரூவலைத் தரத்தான்போகிறார். ஆனால், ரவிக்கு அதில் விருப்பமில்லை. யாரிடமும் மறுத்துப்பேசத் துணிவில்லாதவன். பேருந்தில்கூட நடத்துநரிடம் ஒரு ரூபாய் சில்லறை பாக்கியைக் கேட்க மிகவும் தயங்குவான். எத்தனையோ நாள்கள், அவனுக்கு நினைவிருந்தும் கேட்பதற்கு தைரியமில்லாமல் போய்த் தொலைகிறது என்று மீதிச் சில்லறையை வாங்காமல் விட்டிருக்கிறான். பல நேரங்களில் அவனுக்கு சக மனிதனிடம் பேசுவதே பெரும் அயர்ச்சிதான். அவன் மனைவி, மணிக்கணக்கில் போனில் பேசுவதை ஆச்சர்யத்தோடும் எரிச்சலோடும் பார்ப்பான். ஆச்சர்யம். எப்படி அவளால் சரளமாய்ப் பேச முடிகிறதென்று. எரிச்சல். எத்தனை நேர விரயம்; ஒரு புத்தகத்தையோ சத்யஜித் ரே படத்தையோ பார்த்துத் தொலையலாம். என்ன படிச்சாலும், பொம்பளைங்க இந்த இழவெடுத்த பொறணியப் பேசாம இருக்க முடியாது என்று தனக்குள்ளேயே புலம்பிக்கொள்வான்.
Also Read
வழக்கத்திற்கு மாறாக, அம்முறை மேலாளரிடம் கேட்டுப்பார்த்தான், பழக்கமே இல்லாத ஒருவனோடு போய் எப்படி அறையைப் பகிர்ந்து கொள்வதென்று. மேலாளர், மகளை புருஷன் வீட்டிற்கு முதல் முறையாக அனுப்பும் தகப்பனைப்போலப் பொறுப்புடன் பதில் சொன்னார். “நைட் மட்டுந்தான் ரூமுக்குப் போகப்போற, தூங்கப்போற. இதுல என்ன பிரச்னை? அதோட டெய்லி சந்தீப்பே உன்ன ஆபீஸ்ல டிராப் பண்ணப்போறான். தெரியாத ஊர்ல லோக்கல் பையனோட இருக்கறது உனக்கு வசதிதான. ஏர்போர்ட்ல இறங்கினவுடனே அவனுக்கு கால் பண்ணு, he will guide you.’’
வாசலில், தொப்பி அணிந்த ஒரு சிவப்புச்சட்டை ஆசாமி இவர்களுக்காகக் காத்திருப்பதுபோலவே உட்கார்ந்திருந்தான்.
சொன்னதுபோலவே சந்தீப் நடந்து கொண்டான். ஹைதராபாத்தில் இறங்கி, மொபைல் போனை ஆன் செய்தபோது - hi! h r u, have a safe journey, reached hydbad?, call me once you get down என்று காதலிக்கு அனுப்புவது போல சந்தீப்பிடமிருந்து பல மெசேஜுகள். அவன் இடத்திற்கு வருவதற்கு எளிதாக கூகுள் மேப்பையும் வாட்ஸப்பில் ஷேர் செய்திருந்தான். ரவிக்குதான் கூகுள் மேப்பை எப்படிப் பார்க்கவேண்டுமென்று தெரியாது. இடத்தின் பேரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ஓலா புக் செய்து சந்தீப் இருக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். இறங்கிய சில நிமிடங்களிலேயே, ஒரு வெள்ளைநிற கியர்லெஸ் ஸ்கூட்டர் இவனருகே வந்து, அதில் அரை ட்ரவுசர் போட்ட ஒருவன் இறங்கி, “ரவி?’’ என்றான்.
இவன், ``யெஸ்’’ என்றதும்...
Also Read
“சந்தீப்’’ என்று வலது கையை நீட்டினான். கைக்குலுக்கலுக்குப் பிறகு, “Welcome to Hyderabad’’ என்று சொல்லி, பற்கள் தெரியாத புன்னகையுடன் இவனிடமிருந்த ஒரு பையை வாங்கிக்கொண்டான்.

சற்றே குள்ளமாகத்தான் இருந்தான். ஐந்தடி இருந்தாலே பெரிய விஷயம். 28-30 வயது இருக்கலாம். மாநிறம். வசீகரமான முகம் இல்லையென்றாலும், நாற்பதை நெருங்கும் ரவியின் முகத்தில் இருந்த மாமாத்தனம் சந்தீப்பின் முகத்தில் இல்லை. கல்யாணம் ஆகாத இளமையும், நரைக்காத தலையும் ரவிக்கு ஏக்கத்தைக் கொடுத்தது. இறுக்கமான டீ-ஷர்ட் அவனது தொப்பையைக் கொஞ்சம் முன்னுக்குத் தள்ளியது. ரவிக்கு இதில் ஒரு நிம்மதி. தனக்குத் தொப்பை இல்லையென்று. கலைந்திருந்த கேசத்தைச் சரிப்படுத்திக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். Shall we go என்று கேட்டு, சரியென்ற பின் வண்டியைச் செலுத்தினான். ஸ்கூட்டர், ரவி இறங்கிய நிறுத்தத்தையொட்டிய ஒரு சந்தில் நுழைந்து, இரண்டாவது இடப்புறச் சந்தில் திரும்பி, அந்தச் சிறிய தெருவின் கடைசி வீட்டில் போய் நின்றது.
வாசலில், தொப்பி அணிந்த ஒரு சிவப்புச்சட்டை ஆசாமி இவர்களுக்காகக் காத்திருப்பதுபோலவே உட்கார்ந்திருந்தான். சந்தீப் இவனைக் காட்டி ஏதோ தெலுங்கில் சொன்னான். ரவிக்கு தெலுங்கு ஓரளவிற்கு நன்றாகவே புரியும். ஆனால், பேச வராது. பெங்களூரில் பல வருடங்களாக இருப்பதன் வசதி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என்று பல மொழிகளைக் கேட்டுக் கேட்டு எதிர்த்தரப்பில் இருப்பவர் என்ன சொல்ல வருகிறார் என்று ஊகித்துவிட முடியும். ஆனால், சந்தீப் பேசுவதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. படுவேகமாய்ப் பேசினான். அவனது ரூம் முதல் தளத்தில் இருந்தது. படியேறும்போது அந்தச் சிவப்புச்சட்டை ஆசாமி அப்பார்ட்மென்டின் வாட்ச்மேன் என்றும் சந்தீப் தினமும் அவனுக்கு இருபது ரூபாய் தருவான் என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டான்.
ரூம், ரவி நினைத்ததைவிடக் கேவலமாக இருந்தது. கதவைத் திறந்தவுடன் ஹால், அப்படியே நேராகப் பத்தடி வைத்தால் பாத்ரூம்.
அதையொட்டி ஒரு பெட்ரூம். வெளிச்சம் மருந்திற்குக்கூட உள்ளே வர மறுத்தது. எந்நேரமும் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்போல. ரவிக்கு அவனது திருவல்லிக்கேணி மேன்ஷன் நாள்கள் நினைவிற்கு வந்தன. பெட்ரூமில் இரண்டு மெத்தைகள் தரையோடு இருந்தன. போர்வைகள் மடித்து வைக்கப்படாமல் கிடந்தன. அறையின் ஓரத்தில் இரண்டு மூன்று கறுப்பு வயர் கொடிகள். அதில் ஜட்டி, பேன்ட், சட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த வயர்கள் இன்டர்நெட்டிற்காகப் போடப்பட்டிருந்தன.
பெட்ரூமிற்கு வந்து, ஷெல்ஃபின் ஒரு தளத்தில் உள்ள பொருள்களை எல்லாம் ஓரத்தில் ஒதுக்கி, “you can use this shelf” என்றான்.
வீட்டைப் பெருக்கி ஒரு வாரமாவது இருக்கவேண்டும். தலைமயிர் ஆங்காங்கே உதிர்ந்திருந்தது. தரையில் கால் வைத்தாலே நற நறவென்றிருந்தது. ஹாலுக்கு வந்தான். பாத்ரூம் வாசலில் ஒரு சிறிய வாஷிங் மெஷின். ஹாலின் ஓரத்தில் ஒரு நீண்ட கிரானைட்கல்லால் போடப்பட்ட தளம், அதன் மேல் மின்சார ரைஸ் குக்கர், பக்கத்திலேயே பாத்திரம் கழுவுவதற்கான சிங்க். கிரானைட்கல் தளத்தின் மேல், ஒரு கப்போர்டு. கப்போர்டில் ஒரு பாலித்தீன் பையில் கொஞ்சம் அரிசி, பக்கத்தில் பிளாஸ்டிக் தட்டுகளும், சோற்றை எடுக்கப் பெரிய கரண்டியும் இருந்தன.
“You freshen up and come we will go for breakfast.”
“What about you?” என்று ரவி கேட்க...
அதற்கு அவன் ஆறு மணிக்கே எழும்பி குளித்துவிட்டதாகச் சொன்னான்.
ரவி குளித்து முடித்து ரெடியானபின், இருவரும் காலை உணவிற்காக வெளியே வந்தார்கள். சந்தீப் இருக்கும் இடம் கிருஷ்ணா நகர். பெங்களூரைப்போல நிறைய உயர்தர சைவ உணவகங்கள் இங்கில்லை. நிறைய கையேந்தி பவன்கள். கொஞ்சம் வசதியாய் உட்கார்ந்து சாப்பிட சில டிபன் சென்டர்கள். பெங்களூரில் சிறிய ஹோட்டல்களில் இருக்கும் நேர்த்தியும், அழகும் துளிகூட இல்லை. ஒரு டிபன் சென்டரின் வெளியே, ஒருவன் வெள்ளை வெளேரென இருக்கும் மைதா மாவைப் பிசைந்து, கல்லில் தட்டிக் கொண்டிருந்தான். பக்கத்திலேயே, ஒரு அகலப்பாத்திரத்தில் பொறித்தெடுக்கப் பட்ட பூரிகள். பூரிகள் எல்லாம் சோளா பூரி சைஸில் இருந்தது. நம்மூரில் உளுந்தவடைபோல, இங்கு அத்தனை டிபன் கடைகளிலும் போண்டாக்கள் இருந்தன. அடை தோசையை ஹைதரா பாத்தில் ‘பெசரட்டு’ என்கிறார்கள். இரண்டு பேரும் ஒரு டிபன் சென்டருக்குள் நுழைந்தார்கள். இருவருமே இட்லி வாங்கிக்கொண்டார்கள். நான்காய்த் தந்தார்கள். மெதுவாய்ப் பிய்த்தபோதே இட்லி தூள் தூளாய் உதிர்ந்தது. ரவையை அள்ளிப் போட்டிருந்தார்கள். சாம்பார் இல்லை. வெறும் தேங்காய்ச் சட்னிதான். ரவிக்குத் தொண்டையில் இறங்கவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது.
ரவி சிரமப்பட்டுச் சாப்பிடுவதைப் பார்த்ததாலோ என்னமோ சந்தீப் சொன்னான், “No worries; for lunch, we will keep the rice in cooker and we can buy the curry from outside.”
இவன் தலையாட்டினான். வெறும் பருப்பும் தயிரும் இருந்தால்கூடப் போதும். அசைவம் என்ன வேண்டுமென்று கேட்டபோது, ரவி சைவம் என்றும், முட்டைகூட இதுவரை சாப்பிட்டதில்லை என்றபோது சந்தீப் சிரித்துக்கொண்டான்.
“Are you a Brahmin?’’ என்று வழக்கமாய் எல்லோரும் கேட்கும் கேள்வியை எதிர்பார்த்தான். அவன் கேட்காதது ரவிக்கு சந்தோஷம்.
பெங்களூரைப்போல நிறைய உயர்தர சைவ உணவகங்கள் இங்கில்லை. நிறைய கையேந்தி பவன்கள்.
மதியம் சோற்றை ரைஸ் குக்கரில் வைத்து ஒரு டிபன் பாக்ஸில் ரவிக்குக் கொடுத்தான். சந்தீப் சாப்பாடு ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. இவனும் அதைப் பற்றிக் கேட்கவில்லை. தெருவில் இறங்கி ஆபீஸுக்குப் போகும்போது மெயின் ரோட்டிலிருந்து எப்படி ரூமிற்கு வரவேண்டும், எந்தக் கடையில் டீ நன்றாக இருக்கும், துணிகளை எங்கு காயப் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தான். வாஷிங் மெஷின் முதல் ஹீட்டர் வரை அனைத்தையும் தயக்கமின்றிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டான். ‘Curry Point’ என்ற கடைக்குக் கூட்டிச் சென்றான். ஐஸ்க்ரீம் ஸ்டாலில் வகை வகையான ஐஸ்க்ரீம்கள் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருப்பது போல, பருப்பு, சாம்பார், ரசம், கூட்டு, ஃப்ரை வகைகள் இருந்தன. ரவி பருப்பு, பாகற்காய் ஃப்ரை, தயிர் வாங்கிக் கொண்டான்.
மெட்ரோவில் பயணிக்க ஸ்மார்ட்கார்டு வாங்கிக் கொடுத்தான். எல்லாவற்றிற்கும் சந்தீப்பே காசு கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தான்.
ட்ரெயினுகாகக் காத்திருக்கும் போதுதான் அவளைப் பார்த்தான். சந்தீப்பை நோக்கிக் கையாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வந்தாள். அவளிடம் இரண்டு டப்பர்வேர் சாப்பாட்டுப் பைகள் இருந்தன. மெட்ரோவில் போகும்போது இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள். ஒரு இருக்கை காலியாக, ரவி போய் உட்கார்ந்து கொண்டான். எந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும் எனக் கேட்பதற்குள், சந்தீப்பே வந்து No worries, Last stop என்றான் சிரித்துக்கொண்டே. திரும்பவும் அவள் பக்கத்தில் போய் நின்றுகொண்டான். அவள் பிங்க் வண்ணத்தில் டீ-ஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தாள். மூக்கில் ஒரு ஸ்டட். நல்ல நிறம். பெரிய அழகி என்று சொல்லமுடியாது. அதற்கு மேல் அவளைப் பார்க்க ரவிக்கு என்னவோ போல் இருந்தது. உடம்பையும் கழுத்தையும் திருப்பி, கண்ணாடிக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். ஹைடெக் சிட்டியை நெருங்க நெருங்க ஐ.டி பார்க்குகளும், பெரிய அப்பார்ட்மென்ட்களும் வந்த வண்ணமிருந்தன. பெங்களூரு கட்டடங்களில் தென்படும் பணக்காரத்தனமும் அழகும் பிரமிப்பும் இங்குள்ள கட்டடங்களில் இல்லை என்று ரவிக்குத் தோன்றியது. திரும்பி அவர்களைப் பார்த்தான். சந்தீப் இவனை கவனிக்கவில்லை. சொல்லப்போனால் யாரையுமே! ஒரே கிண்டல், குறும்புமாய் சிரித்துக்கொண்டே வந்தார்கள். ரூமில் பார்த்த சந்தீப்பிற்கும் அவள் வந்த பிறகு இருக்கும் சந்தீப்பிற்கும் எத்தனை மாற்றம். கடைசியாய்த் தன் மனைவியிடம் இப்படிக் குறும்பாய்ப் பேசியது கல்யாணமான புதிதில். சூயிங் கம்மின் இனிப்பு போய், வெறும் சக்கையாய் ஆன பின்பும், ஒரு ரூபாய்க்கு வாங்கியதன் காரணமாய் உடனே துப்ப மனமில்லாமல் தொடர்ந்து மென்றுகொண்டிருப்பவனைப் போல, ரவியும் அவன் மனைவியும் கல்யாண வாழ்க்கையை மென்று கொண்டிருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்து, இதே மெட்ரோவில் சந்தீப்பும் அந்த பிங்க் டீ-ஷர்ட் பெண்ணும், இப்படிப் பேசிக்கொண்டு போவார்களா என்று நினைத்துப் பார்த்தபோது ரவிக்கு, சந்தீப்மேல் ஒரு பரிதாபமான இரக்கம் வந்தது. எல்லா உறவுகளும் ஒரு கட்டத்திற்குமேல் சலித்து விடுகின்றன. எந்த உறவிலும் ஒருவரைப் பற்றி ஒருவர் முழுதாய்த் தெரிந்துகொள்ளாத வரை ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது தெரிந்தபின், சீ... இதுக்குத்தானா இத்தனை பாடு, ஆர்ப்பாட்டம் என்றாகிவிடுகிறது. 30, 40 வருஷம் குடும்பம் நடத்திக் கல்யாண நாளைக் கொண்டாடுபவர்களெல்லாம் உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா, இல்லை ஊரை ஏமாற்றுகிறார்களா என்று ரவி மண்டையைப் பிய்த்துக்கொள்வான்.
டெர்மினஸில் மூவரும் இறங்கி, ஒரு ஷேர் ஆட்டோவைப் பிடித்து ஆபீஸ் பக்கத்தில் இறங்கிக்கொண்டார்கள். அவள் இறங்கவில்லை. அவளது அலுவலகத்திற்கு இன்னும் சிறிதுதூரம் போக வேண்டும் என்றான் சந்தீப்.
ஆபீஸில் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. ரவிக்கு புராஜெக்டைப் பற்றி ட்ரெயினிங் கொடுக்க நியமிக்கப்பட்டவன் ஒரு மணிக்கு மேல்தான் வந்தான். “I will connect from home” என்று சொல்லி ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டான். இடைப்பட்ட நேரத்தில் தான் கட்டிக்கொண்டிருந்த வீட்டை, அங்கு பொருத்திய கேமரா உதவியுடன் போனில் பார்த்துக் கொண்டிருந் தான். ரவி கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உற்சாகமின்றி, கடமையே என்று பதில் சொன்னான். ரவிக்கு புராஜெக்டில் இருந்த கொஞ்ச ஆர்வமும் போய், ஒரு வாரம் முடிந்து பெங்களூரு எப்படா போவோம் என்று ஆகிவிட்டது.
முதல் நாள் மட்டும் ஆபீஸ் முடிந்து போகும்போது, சந்தீப் உடன் வந்தான். அடுத்த நாள் முதல் ரவியிடமே ரூம் சாவி இருந்தது. எட்டு மணிக்கு மேல்தான் சந்தீப் வருவான். இரவும் மதியம்போலவே ரூமில் ரைஸ் வைத்துக்கொள்வார்கள். ஆனால், குழம்பு, கறி வகைகளை வாங்க, கொஞ்சம் தள்ளிப் போய் வேறு ஒரு கடையில் வாங்கினார்கள். சந்தீப்புக்கு அந்தக் கடை ரொம்பப் பிடித்தம் என்று அவன் கடைக்காரனிடம் பேசிய விதத்தில் தெரிந்தது. அடுத்தடுத்த நாள்களில், காலை டிபனுக்கு ரவியை வெவ்வேறு கடைகளுக்குக் கூட்டிச் சென்றான். ஒவ்வொரு கடையும் ஒரு குறிப்பிட்ட உணவுகாகப் பிரபலம். பெசரட்டு உப்புமா, கார தோசை, நெய் மசாலா என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுப்பான். வாஷிங்மெஷினில் போட்ட துணிகளை சந்தீப்பே அலசி, மாடியில் உள்ள கொடியில் போட்டு வருவான்.
ஐந்து நாள்களில், ரவிக்கே சந்தேகமாக இருந்தது, தான் ஹைதராபாத்திற்கு எதற்கு வந்தோம்; வந்த வேலையைத் தவிர மற்றதெல்லாம் நன்றாக நடக்கிறது என்று.
ஊருக்குப் போவதற்கு முதல் நாள் இரவுதான் சந்தீப், ரவியை டீ சாப்பிட அழைத்தான். அதற்கு முந்தைய நாளிலெல்லாம் சந்தீப்பின் நண்பர்கள் யாராவது உடன் இருந்தார்கள். பியர் குடிப்பார்கள், ஏதாவது படம் பார்த்துவிட்டு, ஒரு மணிக்கு மேல்தான் தூங்கப் போவார்கள். இவன் பெட்ரூமிலேயே இருந்துகொள்வான். சந்தீப் மட்டும் கேட்டான், “You don’t eat non-veg; don’t drink, don’t even like Gobi Manchurian. How on earth you survive man.”
பெசரட்டு உப்புமா, கார தோசை, நெய் மசாலா என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுப்பான்.
விருப்பமில்லாட்டியும், சந்தீப்பிற்காக எரிச்சலையும் சோம்பலையும் மறைத்துக்கொண்டு கிளம்பினான். ரவிக்கு பொதுவாகவே டீ என்றாலே பிடிக்காது. எப்போதும் காபிதான். ஆனால், ராத்திரி 11 மணிக்கு, ஹைதராபாத்தில் ஃபில்டர் காபி கடையை எங்கு போய்த் தேடுவது? தெருவில் இறங்கி நடந்தார்கள். ஆள் நடமாட்டம் ஓரளவு இருந்தது. டிபன் சென்டரில், காலையில் பூரி போட்டுக்கொண்டிருந்தவன் இப்போது சப்பாத்தி போட்டுக்கொண்டிருந்தான். டிபன் சென்டருக்கு நேரெதிரில், ஒரு பெண் ஜோவார் ரொட்டியை இரண்டு கைகளாலும் தட்டிக் கொண்டிருந்தாள். “That’s good for health, wanna try” என்றான் சந்தீப். ரவி கையெடுத்துக் கும்பிட்டான். வயிறுமுட்ட சோற்றைச் சாப்பிட்டிருந்தான். இன்னும் சில பெட்டிக்கடைகள், பேக்கரிகள் திறந்திருந்தன. கிருஷ்ணா நகர்த் தெருக்களின் அமைப்பு, மசூதி, கையேந்தி பவன்கள், டிபன் சென்டர்கள், மக்கள் நடமாட்டம் எல்லாமே ரவிக்குத் திருவல்லிக்கேணியைக் கண்முன் கொண்டுவந்தது.
மெயின் ரோட்டில் இருந்த டீக்கடைக்குப் போனார்கள். கடை வாசலில், ஆள் உயரத்திற்கு வட்ட வடிவிலான மேசைகள் இருந்தன. பீங்கான் கோப்பையில் இரானி டீ கொடுத்தார்கள். திரும்பி ரூமிற்கு வரும்போது ஒரு கடையின் பெயர்ப்பலகையைப் பார்த்து ரவி சில நொடிகள் நின்றான். கல்லூரியில் படிக்கும்போது ரவிக்கு மிகப்பிடித்த பெண். அவள் பெயரில் அந்தக் கடை இயங்கியது. இப்போது அவள் எங்கு இருப்பாள், கல்யாணம் எப்போது ஆனது என்றுகூட ரவிக்குத் தெரியாது. அவளைக் கல்யாணம் செய்திருந்தால் ஒருவேளை சந்தோஷமாக இருந்திருக்கலாமோ என்று மட்டும் நினைத்துக்கொண்டான்.

எவ்வளவு சொல்லியும் சந்தீப் ஏர்போர்ட்டுக்குக் கூடவே வந்தான். கராச்சி பேக்கரியில் வாங்கிய பிஸ்கட்டுகளை வலுக்கட்டாயமாக ரவியிடம் திணித்தான். அடுத்த முறை வரும்போது சார்மினார், ஷில்பாராமம் இடங்களுக்குப் போகலாம் என்றான். பெங்களூரு போனதும் வாட்ஸப் செய்யச் சொன்னான். விமானத்தில் போகும்போது சந்தீப்பைப் பற்றியே நினைவுகள் இருந்தன. ரவியை யாரும் இப்படி விழுந்து விழுந்து கவனித்ததில்லை.
பெங்களூரில் இறங்கியதும், மேலாளர் கால் செய்தார், “ஒழுங்கு மரியாதையா கேப் புடிச்சு வா, பஸ்ல வராத. கேப் பில்ல ஆபீஸ்ல க்ளெய்ம் பண்ணிக்கலாம்.” ``சரி’’ என்று போனை கட் செய்துவிட்டு பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்புக்குப் போனான். அங்குள்ள ஆளிடம் BMTC பஸ்கள் எங்கு நிற்கும் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.