Published:Updated:

சிறுகதை: அந்நிய தேசம்

சிறுகதை: அந்நிய தேசம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: அந்நிய தேசம்

சி.மகேந்திரன்

த்ரியின் தாடிக்கு நெருப்பு வைக்கப்பட்டது. நெருப்பு வைத்தவன் நீலநிறச்சட்டை அணிந்திருந்தான். கருகிய வாடையிலிருந்துதான் பத்ரியின் தாடிக்கு நெருப்பு வைக்கப்பட்டது தெரியவந்தது. பதினைந்து பேரும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒருவிதமான பதற்றம், அடுத்து என்ன நடக்குமோ என்ற சிந்தனை. ஆனால் கதிருக்கு பயம் இல்லை. முடி கருகிய வாடையை முதலில் கதிர்தான் கண்டுபிடித்தான்.

கதிருக்கு அசாத்தியமான நாசியும் கண்களும் இருந்தன. எதையும் விரைவாக அறிந்துகொள்ளும் நுட்பம் அவற்றுக்கு உண்டு. விலங்குகளில் புலிக்கு மோப்ப சக்தியும் கண்களில் கூர்மையும் அதிகம். தொலைதூரத்தில் இருக்கும் எதையும் நாசியால் மோந்து, தன்னுடைய கண்களால் கூர்ந்து கண்டறிந்து இலக்கை நிர்ணயித்து, கண்சிமிட்டும் நேரத்தில் இரையைப் பிடித்துவிடும்.

ஆனாலும் அதன் சக்தி அனைத்தும் கண்களில் நிரம்பி வழிகின்றன. பத்ரியின் தாடியில் தீ வைக்கப்பட்டதை இந்தப் பதினைந்து பேரில் முதலில் அறிந்தவை கதிரின் புலிக் கண்கள்தான்.

பத்ரியின் மீது எப்போதுமே கதிருக்குத் தனிப்பிரியம் உண்டு. எங்கிருந்தாலும் பத்ரி அலாதியாகத் தெரியக்கூடியவன். எளிதில் ஒடிந்துவிடும் குச்சியைப்போல உடலமைப்பு. ஜீன்ஸ் பேன்ட்டும் ஒரு தொளதொளப்பான பனியனும் அணிந்திருந்தான். அவன் அணியும் ஆடைகள் எப்போதுமே அவனைத் தனித்து அடையாளம் காட்டி விடும். இதைப்போலவே எப்போதுமே ஒருவிதமான குறும்பும் விளையாட்டும் அவனிடம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நெருக்கடியான தருணத்தில்கூட, அவன் விளையாட்டுத்தனமாகவே காணப்பட்டான். அவன் தாடியில் நெருப்பு வைக்கப்பட்டதற்கும் அவன் தோற்றமும் விளையாட்டுத்தனமான இயல்பும் காரணமாக இருக்குமோ என்று யோசித்தான் கதிர்.

சிறுகதை: அந்நிய தேசம்
சிறுகதை: அந்நிய தேசம்

தாடிக்கு நெருப்பு வைத்த அந்த நீலநிறச் சட்டைக்காரன், பதுங்கிப் பதுங்கி முன்னேறுவதில் மகா கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். இங்கு இவன் எப்படி வந்தான் என்பது தெரியவில்லை. கதிர் உட்பட அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு அமர்ந்திருந்தார்கள். மிஷின்கன்கள் ஏந்திய ஆயுதப்படை ஒன்று அவர்களைச் சுற்றி வளைத்திருந்தது. ராணுவவீரர்களைப்போல உடையணிந்திருந்த இவர்கள் மாநில போலீஸ் சிறப்புப் படைப்பிரிவைச் சார்ந்தவர்கள். மணிப்பூர் மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சுற்றிவளைத்து நிற்கும் போலீஸுக்கு அப்பால் ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டம் கூடிவிட்டது. அந்தக் கூட்டத்திலிருந்துதான் அந்த நீலநிறச் சட்டைக்காரன் புறப்பட்டிருக்கிறான்.

மணிப்பூர் என்பது கதிருக்கு மிகவும் பிடித்த மாநிலம். அழகிய ஏரிகளையும் பள்ளத்தாக்குகளில் விரிந்து நிற்கும் நெல் வயல்களைப் பற்றியும் அவன் அறிந்திருக்கிறான். லோக்தாக் ஏரி குன்றுகள் அடர்ந்த பிரதேசத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தது. அதன் நீர்ப்பரப்பு 40 சதுர மைல்கள். உலக நன்னீர் ஏரிகளில் முதல் வரிசையில் உள்ளது. இயற்கை ஆர்வலர்களின் நேசத்திற்குரிய ஏரி. எந்த ரசாயனமும் கலக்காமல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுவருகிறது. இந்தப் பாதுகாப்பை அரசாங்கம் தரவில்லை. தொன்மையான கூட்டு வாழ்க்கையைக் கொண்ட பழங்குடி மக்கள் பாதுகாத்துவருகிறார்கள். 4000 குடும்பங்கள் அந்த ஏரியில் மீன் பிடிப்பதையும் ஏரியைப் பாதுகாப்பதையும் வாழ்வதன் அர்த்தமாகக்கொண்டு வாழ்ந்துவருகிறார்கள்.

லோக்தாக் ஏரியைப் பற்றிய ஒரு நீண்ட நாள் கனவு கதிருக்கு உண்டு. கதிர் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. தன்னை ஒரு சிற்பமாக வடித்தெடுத்த அந்த இயக்குநரை நினைத்துப் பார்க்கிறான். அவர்தான் தனக்கு சினிமா தீட்சை அளித்த குரு என்று ஆழ்மனம் சொல்ல, உதடுகள் அவனறியாமலேயே முணுமுணுக்கின்றன. அவருடன் எத்தனையோ படப்பிடிப்புகள். எத்தனையோ காட்சி அமைப்புகள். ஆனால் லோக்தாக் ஏரி கதிர் மனதில் அவனே உருவாக்கிக் கொண்ட ஆழ்மன ஓவியம்.

மலைகள் சூழ்ந்த ஏரியின் நடுவில் திட்டுத்திட்டாக அமைந்த நிலப்பரப்பு பற்றியும் அதில் பூர்வகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் முன்னரே குறிப்புகளாகச் சேகரித்து வைத்திருந் தான் கதிர். பல நேரங்களில் நீண்ட நீர்ப்பரப்பை ஒட்டிய மலைகளில் மறையும் மாலைச் சூரியக் கதிர்களையும் அவை நீரில் உருவாக்கும் வண்ண வித்தைகளையும் தன் மனத்திரையில் ஓட்டிப் பார்த்துக் கொள்வான். ஏரிகளில் பிரதிபலிக்கின்ற அந்தக் காட்சியைப் படமாக்க வேண்டும் என்பதுதான் கதிரின் நீண்ட நாள் கனவு. கதிர் இப்போது மணிப்பூருக்கு வந்திருப்பதும் இந்தப் படப்பிடிப் பிற்காகத்தான்.

சிறுகதை
சிறுகதை

காவல்துறை அதிகாரி ஒருவர் மிகுந்த தோரணையோடு ஜீப் ஒன்றிலிருந்து இறங்கினார். மிகவும் இளமையானவர். அண்மைக் காலத்தில்தான் ஐபிஎஸ் முடித்துப் பணிப்பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். போலீஸ் வேனில் விலையுயர்ந்த கேமராவும், படப் பிடிப்புச் சாதனங்களும் ஏற்றப்படுகின்றன.

சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்தவுடன் போலீஸ் அதிகாரியிடம் வேகம் கூடுதலாகியது. எல்லாப் பொருள்களும் எல்லா நபர்களும் ஏற்றப்பட்டுவிட்டார்களா? சரிபார்க்கச் சொல்வது தெரிகிறது. போலீஸ் வேன் போலீஸ் நிலையம் வந்து சேருகிறது. சப்பை மூக்கும் உயரக்குறைவும் கொண்ட போலீஸ்காரர்கள். சட்டையைக் கழற்றச் சொல்லுகிறார்கள். அங்க அடையாளங்களை உடலில் தேடுகிறார்கள். அவை அனைத்தும் பதிவேடுகளில் பதிவுபெறுகின்றன. ஆனால் வேறொரு பிரச்னை கதிரின் மனதுக்குள் எழுகிறது.

கதிருக்கு நீதிமன்றங்களில் அலைந்த அனுபவம் இருக்கிறது. தமிழ்நாட்டு நீதி மன்றங்களில் அலைந்ததை அவன் நினைத்துப்பார்க்கிறான். நீதிமன்றத்தின் படிகளில் அடியெடுத்து வைத்துவிட்டால் வேறு எந்த வேலையைத்தான் செய்ய முடியும்? கடந்த கால நீதிமன்ற அனுபவங்களில் மனம் கசப்படைகிறது.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள மணிப்பூர்ச் சிறைச்சாலையில் இருப்பதையும் நீதிமன்றங்களை எதிர் கொள்வதையும் அவனால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை. அங்குள்ள இன்றைய நிலையில் கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது.

சுதந்திர இந்தியாவிலும்: இந்தக் கொடுமை தொடர்ந்தது. பேசும் உரிமையை வழங்கிய சுதந்திரம் மணிப்பூர் மக்களுக்கு அவர்கள் மொழியில் எழுதும் உரிமையைத் தரவில்லை.

ராணுவ வாகனங்களின் சைரன் ஒலிப்பதைக் கதிரால் கேட்க முடிகிறது. நாராசிங் சொன்ன வார்த்தைகள். சைரன்களைப்போலவே கதிரின் காதுகளில் ஒலித்துக்கொண்டே. இருக்கிறது. நாராசிங் மணிப்பூர் மாநிலத்தின் மதிப்பு மிக்க மனிதர். குடியுரிமைச் சட்டம் வந்துவிட்டது. இனிமேல் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தில் மணிப்பூர் நிலமெங்கும் அதிரப்போகிறது என்றார். கதிருக்கு அப்போது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. குண்டுவெடிப்புக்கும் குடியுரிமைக்கும் என்ன சம்பந்தம் என்று உண்மையில் அவன் யோசிக்கத் தொடங்கிவிட்டான்.

நாராசிங் அவன் சந்தேகத்தைப் புரிந்துகொண்டு பேசினார். இமயமலையின் மலைசூழ் பள்ளத்தாக்குகளில் அமைந்த ஏழு சகோதரிகளில் மணிப்பூருக்குத் தனிச்சிறப்பு உண்டு. அவள் பற்றி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. இதில் தன் மொழியைப் பாதுகாக்க அவள் நடத்திய போராட்ட வரலாறும், இதன் போராட்ட காலமும் நீளமானது. மணிப்பூர் மொழி மைத்தி என்று அழைக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மணிப்பூரைக் கைப்பற்றிய வங்காள மன்னன், மைத்தி மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தடை விதித்தான். மொழியைப் பேசினாலும் எழுதினாலும் கொடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. மக்கள் மாற்றுவழியைக் கண்டுபிடித்தனர். காடுகளிலும் மலைப் பிரதேசங்களிலும் தங்கள் மொழியை மறைந்து மறைந்து பேசி, செத்துவிடாமல் பாதுகாத்து வந்தனர். இதனால் மொழி பாதுகாக்கப்பட்டது. ஆனால் இதில் கொடுமை என்னவெனில், 150 ஆண்டுகள் அந்த மொழி பேச்சு வழக்கில் இருந்தாலும் அதற்கு எழுத்து வடிவம் இல்லாமல் போய்விட்டது. மணிப்பூர் மொழிக்கு வங்க மொழியின் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். இந்தத் துயரம்தான் மணிப்பூர் மக்களின் மாபெரும் துயரமாக வடிவம் எடுத்தது என்று வரலாற்றைத் தீவிர உணர்வோடு எடுத்துச் சொன்னார் நாராசிங்.

சுதந்திர இந்தியாவிலும் இந்தக் கொடுமை தொடர்ந்தது. பேசும் உரிமையை வழங்கிய சுதந்திரம் மணிப்பூர் மக்களுக்கு அவர்கள் மொழியில் எழுதும் உரிமையைத் தரவில்லை. மக்கள் தொடர்ந்து நிகழ்த்திய இயக்கங்களின் அழுத்தத்தால் மணிப்பூர் மொழிக்கான எழுதும் உரிமையை இந்தியா 1992ஆம் ஆண்டில்தான் வழங்கியது. சுதந்திரம் கிடைத்து 45 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எங்களுக்கு மொழிச் சுதந்திரம் கிடைத்தது என்று நாராசிங் சொன்னபோது அவரிடம் எழுந்து நின்ற கோபத்தைக் கதிரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. கடைசியாக நாராசிங் மணிப்பூர் மக்களின் வீரத்தை அதுவும் பெண்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நீங்கள் இமாம் மார்க்கெட் சென்று பார்க்க வேண்டும் என்றார்.

சிறுகதை
சிறுகதை

இமாம் மார்க்கெட் மணிப்பூர் தலைநகர் இம்பாலின் மையப் பகுதியில் அமைந்திருந்தது. கதிர் ‘ஒரு காலை நேரத்தில் இமாம் மார்க்கெட் வந்து சேர்ந்தான். சென்னையில் பல பெரிய மார்க்கெட்டுகளை அவன் பார்த்திருக்கிறான். இமாம் மார்க்கெட் முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் அவனை வியப்புலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. தாமரைத் தண்டுகள் குவியலாகக் கிடக்கின்றன. அதைச் சமைத்துச் சாப்பிடலாமா என்று கேட்கிறான். ஒடித்து அப்படியே வேக வைக்காமல் சாப்பிடலாம் என்கிறார்கள். இதைப்போலவே கருவாடு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை வாங்கி மக்கள் அப்படியே சாப்பிடுகிறார்கள். அதை அப்படியே சாப்பிடமுடியுமா என்று யோசிக்கிறான். அது சுட்டுப் பதப்படுத்தப்பட்ட மீன் என்கிறார்கள். வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கிறான்.

மார்க்கெட் பற்றிய தகவல்கள் அனைத்தும் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த மார்க்கெட் பெண்கள் சொசைட்டியால் நடத்தப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பெண் வியாபாரிகள் ஐந்தாயிரம் பேர். அரசாங்கம் உதவி செய்யலாம் அவ்வளவுதான். நிர்வாகத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி இல்லை.

இமாம் மார்க்கெட்டுக்குப் பெண்களின் வீரஞ்செறிஞ்ச வரலாறு ஒன்று இருக்கிறது. ஒருகாலத்தில் மூங்கில் வனங்கள் நிறைந்திருந்தது மணிப்பூர்ப் பிரதேசம். எல்லா இடங்களையும் கைப்பற்றிய ஆங்கிலேயரால் மணிப்பூரைக் கைப்பற்ற முடியவில்லை. அடர்வனங்களில் பூர்வகுடிகள் இருந்தன. அவர்களை நெருங்க விடாமல் மூங்கில் காடுகள் காத்து வந்தன. கடைசியில் பீரங்கிகளைப் பயன்படுத்திப் பல தந்திரங்களைக் கையாண்டு அந்தப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அப்போது நேர்ந்த அந்தப் பெருந்துயரில் பிறந்ததுதான் இமாம் மார்க்கெட்.

இமாம் என்றால் மணிப்பூர் மொழியில் அம்மா என்று அர்த்தம். சென்னைக் கோயம்பேடு மார்க் கெட்டைவிட இது இரண்டு மடங்கு அதிக பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரமாண்டமான மார்க் கெட்டில் ஓர் ஆண் வியாபாரி கூடக் கிடையாது. ஆண்கள் அனைவரும் வெண்டர்கள். வண்டிகளிலும் தலையிலும் பாரம் சுமந்து வருகிறவர்கள். பாரத்தை இறக்கி வைத்துவிட்டு உடனே வெளியே வந்துவிடுகி றவர்கள். இவ்வாறாகப் பெண்களின் வீர வரலாற்றைத் தன் தலையில் சுமந்து நிற்கும் இமாம் மார்க்கெட் தொடங்கி 350 ஆண்டுகள் நிறைவுபெற் றுவிட்டன.

மணிப்பூரின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் ஆண்கள் அனைவரையும் கைது செய்தனர். சித்ரவதை முகாம்களைக் காடுகளில் அமைத்து அங்குள்ள மூங்கில்களை அழிக்க உத்தரவிட்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பு தந்த மூங்கில் காடுகளை அந்த மக்களின் கைகளாலேயே அழிக்க வைத்தனர் ஆங்கிலேயர். அந்நியரின் இந்தக் கொடிய செயலால் ஒரு காலத்தில் மணிப்பூர் ஆண்களற்ற பிரதேசமாக மாறியது. வயல்களில் விவசாயம் இல்லை. மணிப்பூரின் கைத்தொழில்கள் அனைத்தும் தடைப்பட்டுப்போயின. இந்த அழிவின் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவைகளாக மணிப்பூர்ப் பெண்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்கள். ஆண்களைவிட அதிக அளவில் உற்பத்திசெய்து குவித்தார்கள்.

இதிலும் ஒரு புதிய பிரச்னை வந்துசேர்ந்தது. உள்ளூர்த்தேவையின் நிறைவுக்குப் பின்னர், எஞ்சியவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியின் விளைவுதான் இமாம் மார்க்கெட். மிஞ்சிய பொருளை விற்று, தேவையான பொருளை வாங்கிக்கொள்ளும் சமூகக் கூட்டுச் சந்தையாக இது மாறியது. பெண்களின் இந்த தைரியமும் வீரமும் இன்றும் இங்கு தொடர்வதைக் கதிர் மீண்டும் யோசிக்கிறான்.

மணிப்பூர் மக்கள்: அனைவரும் ஆதிவாசிகள்தான். மொத்தம் 29 ஆதிவாசி பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஏதாவது கலப்பு ஏற்பட்டால் பாலில் விஷத்தைக் கலப்பதாகவே இந்த மக்கள் துடித்துப் போகிறார்கள்.

சினிமா ஷூட்டிங் தடுக்கப்பட்டு அங்கு நடந்த கலவரம் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது கதிருக்கு. எல்லா இடங்களைப்போல ஷூட்டிங் பார்க்கத்தான் மக்கள் அங்கும் வந்தார்கள். வழக்கமாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்றும் கதிர் நினைத்தான். ஆனால் நடுத்தர வயதுடைய பெண் ஒருத்தி அங்கு வந்தாள். அவள் உரத்த குரலில் பேசினாள். அதன் பின்னர்தான் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதலானது. பிரச்னையும் ஆரம்பமானது. அவளது குரல் கம்பீரம் கொண்டிருந்தது. அந்தப் பெண் என்ன பேசினாள் என்பதைக் கதிரால் யூகிக்க முடியவில்லை. ஆனாலும் அவளது ஒவ்வொரு சொல்லுக்கும் கூட்டம் கட்டுப்பட்டு நின்றது. இந்தப் பெண்ணின் செயல்பாட்டை நாராசிங் முன்னர் கூறிய ஒரு தகவலோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டான் கதிர்.

ஒருநாள் பனியின் குளிர் பொருந்திய ஒரு நடு இரவில் அப்பாவி இளைஞன் ஒருவன் துணை ராணுவத்தால் கைதுசெய்யப்படுகிறான். கறுப்புத் துணியால் கண்களை மறைத்துக் கைகளைக் கட்டி ஜீப்புக்குள் ஏற்றப்படுவதை ஒரு தாய் பார்த்துவிடுகிறாள். வீட்டுக்குள் விரைந்து சென்று ஒரு இரும்புத் துண்டை எடுத்து வேகமாக வருகிறாள். மின் கம்பங்கள் இரும்புத் தண்டவாளத்தில் அமைந்தவை. தண்டவாளத்தில் அடித்ததில் எழுந்த ஓசை நான்கு பக்கங்களிலும் அதிர்வுகளை உருவாக்குகிறது. மின்கம்ப சத்தத்தைக் கேட்ட மற்ற பெண்கள் ஏதோ அபாயம் என்பதை உணர்ந்து எல்லோரும் மின் கம்பங்களில் அடித்து ஓசை எழுப்புகிறார்கள். தெருவெங்கும் ஒரே சத்தம். பெண்கள் கூட்டம் தெருவெங்கும் கூடிவிடுகிறது. ராணுவத்தால் எதுவுமே செய்ய முடியவில்லை. இளைஞன் விடுவிக்கப்படுகிறான்.

அந்தப் பெண் ஷூட்டிங்கை நிறுத்தியதற்கான காரணத்தை இன்னமும் கதிரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்பால் விமான நிலையத்தில் கதிர் தன் குழுவினருடன் இறங்கியபோது, அவனுக்குக் கிடைத்த முதல் செய்தி எல்லைப்புறத்தில் குண்டு வெடித்து 23 பேர் இறந்துபோனார்கள் என்பது தான். இதைத் தொடர்ந்து மணிப்பூர் முழுவதும் குண்டுகள் சத்தம். இந்தக் குண்டு வெடிப்பை ஒட்டி எல்லோரிடமும் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு அனல் பறக்க வெளிப்படுகிறது.

புதிய குடியுரிமைச் சட்டத்தை மணிப்பூர் மக்கள் இவ்வளவு தீவிரம் கொண்டு ஏன் எதிர்க்க வேண்டும். மணிப்பூர் மக்கள் அனைவரும் ஆதிவாசிகள்தான். மொத்தம் 29 ஆதிவாசி பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஏதாவது கலப்பு ஏற்பட்டால் பாலில் விஷத்தைக் கலப்பதாகவே இந்த மக்கள் துடித்துப்போகிறார்கள்.

நூற்றாண்டுக் காலமாக வாழும் தங்கள் பூர்வீக பிரதேசத்தில் விரும்பத்தகாத சக்திகளைக் குடியேற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தைப் புதிய குடியுரிமைச் சட்டம் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கதிருக்கு ஒருவாறாக நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு காரணங்களில் மக்களிடம் தேங்கி நிற்கும் கோபம், ஏதோ ஒரு இடத்தில் வெடித்துச் சிதறிப் போராட்ட மாகிவிடுகிறது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்பதை உணர்ந்தாலும், அடிப்படைக் காரணம் என்ன என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுகதை: அந்நிய தேசம்

மாடியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அழைப்பதாகக் கூறப்படுகிறது. கதிர் இறுக்கமாகிறான். தாறுமாறாக எதுவும் நடந்து விடுமோ என்று கவலைகொள்கிறான். மாடிப்படிகளில் ஏறுவதற்குக் கால்கள் தயங்குகின்றன.

என்ன சொல்லப்போகிறார் என்ற அச்சத்துடன் போலீஸ் அதிகாரியின் முகத்தைப் பார்க்கிறான் கதிர். போலீஸ் அதிகாரியின் முகத்தில் பழைய கடுமை இப்போது இல்லை. அவரது குரலில் அதிகாரம் இல்லை. அவரது ஆங்கில உச்சரிப்பு கதிருக்குக் கொஞ்சம் சிக்கலாக இருந்தது.

இந்திப்படங்களுக்கு மணிப்பூரில் தடை, உங்களுக்குத் தெரியுமா என்றார் போலீஸ் அதிகாரி. கதிர் இன்றுவரை அறியாதது இந்தத் தகவல். ஒரு சிறிய மாநிலம் வலிமை பொருந்திய இந்தி சினிமாவிற்குத் தடைவிதிக்க முடியுமா என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. மேலும் அதிகாரியிடம் வார்த்தைகள் வெளிவந்தன. ‘‘அரசாங்கம் தடைசெய்யவில்லை. போலீஸ் தடை செய்யவில்லை. மக்களே தடைசெய்து விட்டார்கள். இதற்குத் தலைமறைவு இயக்கங்களுக்கு முக்கியப் பங்குண்டு’’ என்றார்.

‘‘மணிப்பூர் மக்களை மற்ற மாநிலத்தவர்கள் புரிந்துகொள்வது கஷ்டமானது. எங்கள் கலாசாரம் எங்கள் உயிர் போன்றது. உயிர் கொடுத்தும் இதைக் காக்க மணிப்பூர் மக்கள் தயாராகி விடுவார்கள். எங்கள் பண்பாட்டின் முதல் எதிரி இந்தி சினிமாதான். பெரிய மாநில மொழிகளான மராத்தியையும் பஞ்சாபியையும் இந்தி சினிமா ஒழித்துவிட்டது. மணிப்பூரில் அனுமதித்தால் அவ்வளவுதான். ஆவணப்படம் என்றும் மற்ற இந்திய மொழிகளின் ஷூட்டிங் என்றும் பொய் கூறி மீண்டும் எங்கள் பண்பாட்டை அழிக்க இந்தி ஆதிக்க சினிமா உலகம் சதிசெய்கிறது. இந்தக் கோபம்தான் ஷூட்டிங் நிறுத்தியதற்குக் காரணம்’’ என்றார்.

போலீஸ் அதிகாரி கடைசியாக வெளிப்படுத்திய வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. ‘‘நீங்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். அவர்கள்தான் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து முதலில் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் என்று போராட்டக் காரர்களிடம் சொன்னேன்’’ என்றார் அவர்.

திடீரென்று அந்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் ஒருவித மலர்ச்சி காணப்பட்டது. அவர் ஏதோ ஒரு மகிழ்ச்சியைச் சொல்லப்போகிறார் என்று கதிர் நினைத்தான். அவன் நினைத்தது உண்மையாகிவிட்டது. யார் ஷூட்டிங் நடத்தக் கூடாது என்று நிறுத்தச் சொன்னார்களோ அந்தப் பகுதி மக்களே ஷூட்டிங்கை நடத்திக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். இரண்டு நாள்களில் விரைந்து ஷூட்டிங்கை முடித்துக்கொள்ளுங்கள் என்றார் அதிகாரி.

ஒருவிதமான ஆறுதலோடு போலீஸ் நிலையத்தை விட்டு கதிர் வெளியேறினான். ஆனால் அவனுக்குள், எதிர்கால இந்தியா இதுபோன்ற மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எவ்வாறு ஒற்றுமையோடு வாழப் போகிறது என்ற கவலை மனதைக் கவ்விப்பிடித்துக்கொண்டது.