
அனுசுயா எம்.எஸ்
“இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு?”
``அஞ்சு நிமிஷம் காட்டுது.’’
``இருபது நிமிஷமா இதைத்தான் சொல்ற மதி.’’
``நான் என்ன பண்ண, ஆப்ல வரதைத்தானே சொல்ல முடியும்!’’
``இப்படிக் காத்துட்டிருக்கறதுக்கு நாமளே போய் வாங்கிட்டு வந்திருக்கலாம்போல!’’
``எப்படி, எப்படி! திரும்ப சொல்லு... கொஞ்சம் கேட்டுக்கட்டும். நாலு நாளா நானும் இதைத்தான் சொல்றேன். இட்லி அரிசி இல்லை, பருப்பு இல்லை, காய்கறி எல்லாம் காலி, தாளிக்கக் கடுகுகூடத் தீரப்போகுதுன்னு. அப்ப எல்லாம் நான் சொன்ன எதுவும் காதுல விழலை. இன்னிக்கு பாஸ் டின்னருக்கு வராருன்னு இவ்வளவா?’’
ஆதங்கம் கோபம்... கொஞ்சம் எள்ளல் என எல்லாம் கலந்த குரல்!
பெங்களூரில் நாங்கள் வசிக்கும் ஹோங்க சந்திரா - ரெட் அலர்ட் ஏரியா! நாள் முழுவதும் தெருமுனையில் நிற்கும் இரண்டு போலீஸ்காரர்கள் தொடங்கி, பத்துத் தெருக்கள் தள்ளியிருக்கும் சூப்பர் மார்க்கெட் போவதற்குள் தெருவுக்கு இருவர் என ஒவ்வொருவரிடமும் லைசன்ஸ், ஆர்சி புக், ஆதார் கார்டு எல்லாத்தையும் கொடுத்து, ஒவ்வொரு முறையும் மாஸ்க்கை நீக்கி, முகம் காட்டி, ஐடி கார்டில் இருக்கும் முகத்தை என் முகத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்த்து அவர்கள் ஓகே சொன்னபின் மீண்டும் மாஸ்க்கைப் போட்டு, கடைக்குப் போய் வரிசையில் நின்று வேண்டியதை வாங்கி வீடு வந்து சேருவதற்குப் பதிலாகப் பட்டினி கிடக்கலாம் எனத் தோன்றும்.

காலையில் பால் பாக்கெட் எடுக்கப் போன சமயம்தான் லிங்கம் சாரைப் பார்த்தேன். என் புராஜெக்ட் ஹெட்; தப்பு! அவருக்குக் கீழிருக்கும் 30+ புராஜெக்ட்களுள் ஒன்றில் அவரிடம் வேலை பார்க்கும் மேனேஜர் நான். பக்கத்துத் தெருவில் வீடு என்ற பெயரில் அவரின் குட்டி பங்களா! எங்கள் கம்பனியின் முதல் செங்கல் நட்ட நாளாக வேலை பார்க்கும் சூப்பர் சீனியர். ஒன் ஆஃப் த டைரக்டர் ஆஃப் கம்பனி; ஆனால் சுலபன். கார்ப்பரேட் கம்பெனிகளில் இவர் போன்றோர்கள் அதியசப் பிறவி என்பேன். பாசாங்குகள் இல்லாத மனிதர். அலுவலகத்தில் பலரின் தலையெழுத்தை மாற்றும் அதிகாரம் அவர் கையில். இந்த 25 வருடங்களில், “லிங்கம் சார் சொன்னால் மட்டும் போதும், என்ன வேணாலும் செய்வேன்!’’ எனச் சொல்லும் ஏகப்பட்ட மனிதர்களைச் சம்பாதித்தவர். எல்லோரையும் தட்டிக்கொடுத்து, பேசும்விதத்தில் பேசி, அவர் வழிக்குக்கொண்டு வந்து, தான் நினைத்ததை நடத்திக்கொள்ளத் தெரிந்த சூத்திரதாரி. இதோ நானே அவரைப் பற்றி ஒரு பாரா எழுதிவிட்டேனே… மதியிடம் கேட்டால் ஒரு கட்டுரையே எழுதுவாள்.
அவருக்குக் குழந்தைகள் கிடையாது. அதனால்தானோ என்னவோ, எங்களையெல்லாம் பிள்ளைகள்போலப் பார்த்துக்கொள்வார்.
காதலித்த நாள்களில் நானும் மதியும் அவரின் கீழ்தான் வேலை பார்த்தோம். கல்யாணத்திற்குப் பிறகு ஒரே டிபார்ட்மென்டில் கணவனும் மனைவியும் வேலை பார்க்க கம்பனி விதிமுறைகள் அனுமதிக்காததால், லிங்கம் சாரின் மனைவி ஸ்மிதாவிற்குக்கீழ் வேறு ஒரு புராஜெக்ட்டிற்கு மதி மாற்றப்பட்டாள். இவை எல்லாவற்றையும் ஒரு போன் கால் மூலம் சாத்தியப்படுத்தியது அவரே.
என்னைவிட மதியை ரொம்பப்பிடிக்கும். அக்மார்க் ஊர்ப்பாசம். எங்கள் டிபார்ட்மென்ட் மொத்தமும் அவளை ‘மதி’ எனக் கூப்பிடும்போது, ‘காந்திமதி’ என அவளின் முழுப்பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்.
அசல் அம்பாசமுத்திரக்காரர் – இன்றிரவு எங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறார்.
அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். போன வருடம் ஒருமுறை நானும் மற்றொரு டீம் மேட் லோகேஷும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயம் வந்தவர், உரிமையுடன் என் லஞ்ச் பாக்ஸிலிருந்து எடுத்துச்சாப்பிட்டு, என்ன கைமணம் பாரு! காந்திமதின்னு பேரு வச்சதுக்கு பதிலா, அன்னபூரணின்னு இல்ல வச்சிருக்கணும்? ப்பா... எப்படி செஞ்சிருக்கா... இந்த டிஷ் பேரு தெரியுமா ராஜு உனக்கு?’’
“வெஜிடபிள் ஸ்டூ.’’
“அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல. எங்கூர்ல இதுக்குப் பேரு சொதி! நான்லாம் ஒரு காலத்துல நல்லா சொதி செய்யத் தெரிஞ்ச பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்!’’
“ஹாஹாஹா’’
“நிஜமாதான் பாய்ஸ்... டிரஸ்ட் மீ!’’
“அப்புறம்?”
“என்ன அப்புறம்?’’
``அப்புறம் எப்படி மங்களூரில் போய் பொண்ணைக் கட்டுனீங்க?’’
“ஹோட்டிகே இட்லிக்கும், கொரி ரொட்டிக்கும் மயங்கிட்டேன்!’’
“ஓஹோ!”
கண் சிமிட்டி... “கொஞ்சம் அந்த மங்களூர்காரிகிட்டயும்தான்.’’
எந்த இடத்தில் புரொபஷனலாகப் பேசவேண்டும், எதை எந்த நேரத்தில் பர்சனலாகப் பேசவேண்டும், இது புரொபஷனல், இதுதான் பர்சனல் என்ற கோட்டை எதிராளியைக் காயப்படுத்தாமல் அதே சமயம் தீர்க்கமாகத் தன் நிலைப்பாட்டை உணர்த்திக் கோடுபோடும் சூட்சுமம் அறிந்தவர்.
முக்கியமான ஒன்றைச் சொல்லவில்லையே!
ஹெல்தி காம்ப்படிஷன் என்ற பெயரில் நடக்கும் ஒரு புது புராஜெக்ட்டின் சீனியர் மேனேஜருக்கான மறைமுக கார்ப்பரேட் ரேஸில் என்னை வெல்ல வைக்கும் முழு அதிகாரம் அவர் கையிலும் , “He will crack it... just leave it with him and see” என அவர் சொல்லுவதிலும் இருக்கிறது. சொல்ல மாட்டார் என்றில்லை. நானும் என் டீமும் பெஸ்ட் பர்ஃபாமிங்தான். ஆனால்... கொரோனா லாக்டௌனால் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவரிடம் என் விருப்பதைச் சொல்லவோ, இதுபற்றிக் கோடிட்டுக்காட்டவோ வாய்ப்பு அமையவில்லை.
உடன் வேலை பார்க்கும் மற்றொரு டீம் மேனேஜர் ரவி போனில் புது புராஜெக்ட்டைப் பற்றிய விஷயத்தைச் சொன்னான்.
“மச்சி, பக்கத்துத் தெருவில் வீடு. அவர் வைஃப் வேற புராஜெக்ட் விஷயமா ஆஸ்திரேலியா போய், லாக்டௌனில் அங்கேயே மாட்டிக்கிட்டாங்க. நீ ஒரு வீக் எண்ட் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டு, பேச்சுவாக்கில உனக்கு அந்த புராஜெக்ட் ஹேண்டில் பண்ணுறதுல இஷ்டம்னு அவர் காதில போட்டுடு.”
“இதெல்லாம் சரியா வருமா?”
“ஏன் வராது... நானா இருந்தா இந்நேரம் அவருக்கு மினிமம் இரண்டு விருந்து வச்சிருப்பேன். நீ வேஸ்ட்டு டா.”
“சரி, நீ ஏன் கேட்கலை?”
“இப்போ பார்க்கிற புராஜெக்ட்டை எனக்குக் கொடுத்தே முழுசா ஒரு வருஷம் ஆகலை. அதுக்குள்ள இன்னொன்னு கேட்டேன், மனுஷன் புரோபஷனலா மூஞ்சிலே துப்புவார். நீ மூணு வருஷமா இதே புராஜெக்ட்ல இருக்க. உனக்கு நல்ல சான்ஸ் இது. வேஸ்ட் பண்ணாத’’ எனச் சொன்னதிலிருந்து மனதிற்குள் இருக்கும் சாத்தான் சதா என்னை நோண்டிக்கொண்டே இருந்தான்.
மதியிடமும் இதுபற்றி நேற்றிரவு பேசினேன்.
“நீ பார்க்கற வேலைக்கான ரிகக்னேஷன் எப்பவும் உனக்குக் கிடைச்சிருக்கு இல்ல?’’
“ம்ம்ம்... அல்மோஸ்ட் யெஸ்.”
“அப்புறம் எதுக்கு இந்த பக்கட்டிங் வேலை... காக்கா பிடிச்சுக்கிட்டு?”
“நான் என்ன அவர்கிட்ட என்னை சிபாரிசு பண்ணவா கேட்கறேன், எனக்கு அடுத்த ரோல் மூவ் ஆகறதுல இன்ட்ரஸ்ட் இருக்குன்னுதான சொல்லப்போறேன்?”
“Let your work speak baby...’’
“What do you mean ?”
“நீ பண்ற வேலையைப் பார்த்திட்டு, ராஜு, ஒரு புது புராஜெக்ட் வருது... உன்னைக் கன்சிடர் பண்ணலாமான்னு அவரில்ல உங்கிட்ட கேட்கணும்?”
“……………”
“எனக்கு இதில சம்மதம் இல்லை. இது உன் சுபாவம் கிடையாது! Don’t step down from your standards! Good night.”
திரும்பிப்படுத்தவளையே வெகு நேரமாகப் பார்த்தேன். சலனமே இல்லை. உறங்கிவிட்டாள்.
எனக்குத்தான் தூக்கம் வரவே இல்லை. ஆனால் போன முறை புரொமோஷன் மீட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

“இப்பதான் புரொமோஷன் ஆனவன் அவன். அவனுக்கு எப்படி புது புராஜெக்ட்டைக் கொடுத்தீங்க? அவனைவிட நான் எப்படி கம்மி ஆகிட்டேன்?” என சௌரவ்விற்குப் புது புராஜெக்ட்டைக் கொடுத்ததற்கு அரவிந்தன் கேட்க, “உனக்கு ஏன் கொடுக்கலைன்னு கேட்டா, பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கேன். I have my reasons and obliged to answer. அவனுக்கு ஏன் கொடுத்தேன்னு கேட்கற ரைட்ஸ் உனக்கில்லை & I have no obligation to explain you.’’
“ஆனா உனக்கு இன்னும் அதைப்பத்தித்தான் பேசணும்னா, பேசலாம். Be prepared with your data points. அதெல்லாம் எடுத்து வச்சுட்டு என்கிட்ட பேசு. I will come up with all my points. என்ன, பேசலாமா?’’ என்று சொன்ன தொனியில் சர்வமும் ஸ்தம்பித்தது.
சிறிது நேர மெளனத்திற்குப் பின்… “Guys, First deserve and then desire. Don’t ever lower your standards and lose life in this corporate world. Got it?’’ என்ற போது அன்று அந்த மீட்டிங் ரூமில் நாங்கள் பார்த்தது லிங்கம் அல்ல; ருத்ரன்!
அந்தச் சம்பவத்தை நினைத்ததும் முற்றிலும் குழம்பிப் போன மனநிலை.
நான் என்ன காக்காவா பிடிக்கிறேன்?
இல்லைதானே?
என்னைக் கன்சிடர் பண்ணச் சொல்லித்தானே கேட்கப் போறேன்?
எனக்குத்தான் கொடுக்கணும்னோ, ஏன் இன்னொருத்தனுக்குக் கொடுக்கறீங்கனோ கேட்கப் போறதில்லைதானே?
ஏதேதோ கேள்விகள்…
இந்த ஐந்து வருடங்களில் அவரிடம் சம்பாதிச்சு வச்சிருக்கற நம்பிக்கையைக் கெடுத்துப்பேனோ என்ற பயமும் வந்தது.
இதில்லை, அப்படியில்லை என என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ளும் கேள்விகளையும் பதில்களையும் யோசித்தபடியே உறங்கிப்போனேன்.
காலையில் சீக்கிரமே எழுந்தேன். ஆனாலும் அதே எண்ணங்களும் கேள்விகளும் கூடவே எழுந்தன.
ரவி சொன்னதுபோல வலிந்துபோய் கேட்க வேண்டாம். வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டு, ஒரு வேளை அவராகவே அதைப் பற்றிப் பேசினால் மனதில் இருப்பதைச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டேன்.
மதி கேட்டிற்குப் பக்கத்தில் இருந்த செடிகளில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள்.
பால் பாக்கெட்டை எடுக்க கேட்டைத் திறந்தால் எதிரில் லிங்கம் சார்.
“குட் மார்னிங் லவ் பேர்ட்ஸ். என்ன இவளோ சீக்கிரம் எழுந்தாச்சு?’’
“சங்கரலிங்கம் சார்வாள், என்ன திடீர்னு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க? இப்ப எல்லாம் உங்களைப் பார்க்கவே முடியலை... ரொம்ப பிஸி போல?”- மதி.
“அம்மே காந்திமதி… அதெல்லாம் இல்லை. வழக்கம்போல வேலை. வேறென்ன?”
“போதாக்குறைக்கு வெயில் வேற.வாக்கிங்கூட போகமுடியல. திடீர்னு நேத்து ராத்திரி மழை அடிச்சு விளாசிச்சுல்லா? அதான் ஒரு சேஞ்சுக்கு வெளிய வந்தேன். இப்பக்கூட நம்மூர் சொதி செஞ்சு தரேன்னு சொல்லு, நைட்டே சாப்பிட வாரேன். எனக்கும் அந்த மங்களூர்க்காரன் பண்ணுற சக்கரைத் தண்ணீரும், நீரு தோசையும் தின்னு அலுத்துப்போயாச்சு.”
“இவளோதானா... செஞ்சுட்டாப் போச்சு. சொதி சாப்பிட மதியம் வரலாம்ல, அதென்ன ராத்திரிக்கு?”
“மதியம் முழுக்க மீட்டிங் கால்னு இருக்கு.’’
“சனிக்கிழமை கூடவா?”
“ஆமாம். கேளு உன் பாய் ஃபிரெண்டை. நாள் கிழமை எல்லாம் பாக்காமல்லா உழைக்கோம்!”
“ஹாஹாஹா’’
“சிரிச்சு மழுப்பப் பாக்குதியா, வாட் யங் சேம்ப்? உன் வீட்டுக்கு நான் இன்னிக்கி டின்னருக்கு வரலாமா? ரெக்கமெண்ட் பண்ணேன்!”
எப்படி இவரைப் பார்க்க ஒரு வாய்ப்பை அமைத்துக்கொள்ள என நேற்று யோசித்ததை நினைத்ததும் உடல் முழுக்கப் பட்டாம்பூச்சி. அதைக் கொஞ்சம் மறைத்து, “இட்ஸ் மை ப்ளஷர் ஜி” என்றேன்.
“மெட்ராஸ் பசங்க எல்லாம் பெரிய இங்கிலீஷ்காரனுவ. சரி, சி யூ டு நைட்’’ என்றுவிட்டு வாக்கிங் போனார்.
மதி உற்சாகமானாள்; அவளைவிட நான்.
சொதி செய்ய, கூடவே நல்ல விருந்து சாப்பாடு செய்யத் தேவையான காய்கறிகள் இல்லை. வாங்கப் போகலாம் என்றாலோ, ராவிடியப் பெய்த மழைநீர் முழங்கால் அளவு தேங்கிக் கிடந்தது. கார் டயர் பஞ்சர். மதி லிஸ்ட் போட்டுக்கொடுத்த அத்தனையையும் பைக்கில் போய் வாங்கி வருவதும் கஷ்டம். வெளியில் பலமான தூறல் வேறு.
தெரிந்த சூப்பர் மார்க்கெட்காரருக்கு போன் பண்ணினால், கடையில் ஆட்கள் யாரும் இல்லை. இருக்கும் இரண்டு பேரையும் மழையில் அனுப்பமுடியாது. வேணும்னா சாயங்காலம் வீட்டுக்கு வந்து தானே கொடுப்பதாகச் சொன்னார். சாயங்காலம் வரை எல்லாம் காத்திருக்க முடியாது.
லிங்கம் சார் கேட்ட சொதி செய்ய தேங்காய்ப் பால் வேண்டும். அதற்குத் தேங்காய் இல்லை. அது வந்து சேர்ந்து, துருவி எத்தனையோ கட்டங்களாகப் பால் எடுத்து, அந்தப் பாழாய்ப் போன சொதியைச் செய்யவே நேரமாகும். அப்படி என்னதான் அந்தச் சொதியில் இருக்குமோ இந்த நெல்லைக்காரர்களுக்கு. வேறு என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருள்களை வாங்கிவந்து வீட்டில்போட , ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொருள்களைக் கொண்டு சேர்க்க என நமக்கு ஊழியம் பார்க்க இருக்கும் ‘ஆப்’காரனைஆபத்பாந்தவனாக நினைத்து ஆர்டர் செய்தால், ஆபத்பாந்தவன் அபத்தபாந்தவனாகி, 30 நிமிடங்களுக்கு முன்னே வர வேண்டிய பொருள்கள் இன்னும் வந்தபாடில்லை!
ஆப்பைப் பார்த்தேன்.
அதே ஐந்து நிமிடம். எனக்கோ கோபம் வந்தது.
போன் செய்தேன், ஸ்விட்ச் ஆஃப்.
சொன்ன நேரத்திற்கு ஆர்டர் டெலிவரி பண்ணத் தெரியலை, இதுல ஆன்லைன்லேயே இவனுங்களுக்கு டிப்ஸ் வேற வாங்கராங்க. “முழுசா 50 ரூபாய் கொடுத்தேன் தெரியுமா மதி?”
“ரிலாக்ஸ்!”
“எனக்கு ஒண்ணும் இல்லை. உனக்குத்தான் சமைக்க நேரமாகும்.”
“நான் பார்த்துப்பேன். நீ அப்னார்மல் ரியாக்ஷன் கொடுக்காதே.”
“யாரு நானா, அப்னார்மலா ரியாக்ட் பண்றேன்?”
“எஸ். உண்மையைச் சொல்லு. அந்தப் புது புராஜெக்ட்டைப் பத்தின உன் இன்ட்ரஸ்ட்டை காட்டற சான்ஸாகத்தானே நீ இதைப் பார்க்கற?”
கணவனுடன் மனைவி வாக்குவாதம் செய்தால் கணவனுக்குக் கோவம் வரும். அதே வாக்குவாதத்தின்போது அவன் மனதை அப்படியே படித்ததுபோல உள்ளிருப்பதை மனைவி ஒப்பித்தால் கோபம் இரட்டிப்பாகும். எனக்கும் ஆனது.
பதற்றத்துடன், “அதெல்லாம் இல்லை! நீ… நீ தான் ரொம்ப எக்ஸைட்டடா சமைக்கத் தயாராயிருக்க?”
“அஃப் கோர்ஸ் யெஸ். என்ன செஞ்சு போடறேன்னு பார்க்காம டிவியைப் பார்த்தே சாப்பிடறவன் நீ. இப்படி இருக்கறப்ப, “இது சமைச்சுப் போடு” எனக் கேட்டு, மணக்க மணக்க நான் சமைச்சதை ரசிச்சு சாப்பிட்டு, அதைவிட மணக்க மணக்க எங்க ஊர்த் தமிழ் பேச ஒருத்தரு வாராருனா நான் ஏன் சந்தோஷப்பட மாட்டேன்?”
இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது. மீண்டும் ஆப்பைப் பார்த்தேன்… அதே ஐந்து நிமிடங்கள்.
டெலிவரி பாயின் நம்பருக்குக் கூப்பிட்டேன், ‘`நாட் ரீச்சபில்.’ சுத்தமாகப் பொறுமையை இழந்து, கஸ்டமர் கேருக்குக் கூப்பிட்டு... மேலும் பத்து நிமிடங்கள் காத்திருந்து கோபத்தை யெல்லாம் கத்தித் தீர்த்தபோது மதி வந்தாள்.
“கோபப்படாதே. கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… ப்ளீஸ்!’’
“நான் என்னத்த’’ எனத் தொடங்கிய சமயம்...
“சார்” என்றபடி கேட்டைத் தட்டும் சத்தம்.
வெளியே வந்து பார்த்தால்…
டெலிவரி பாய்.
“ஸாரி சார். லேட் ஹோகையா!”
முழுவதும் நனைந்திருந்தான்...
கேட்டைத் திறந்து, போர்ட்டிகோ ஸ்டூலிலிருந்த புக்கை கையில் எடுத்து, ஸ்டூலை நகர்த்திப் போட்டு உட்காரச் சொன்னேன். வேணாம் என மறுத்து, முதுகில் இருந்த பொதியை இறக்கி, சட்டைக்குள்ளிருந்து போனை வெளியே எடுத்துத் தட்டத் தொடங்கினான்.

போன் ஸ்கிரீன் முழுக்கக் கீறல்கள். தட்டித் தட்டி ஆன் செய்து போனில் இருந்த ஆர்டரை சரி பார்த்தபடி பொருள்கள் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்து, “மொத்தம் பத்து அயிட்டம் சார்… எண்ணிக்கோங்க.”
“நான் தமிழ்னு எப்படித் தெரியும்?”
கையில் இருந்த பிரபஞ்சன் சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தைக் காட்டிச் சிரித்தான்.
“நீங்களும் தமிழா?”
``ஆமாம்.’’
``எந்த ஊர்?’’
``திருநெல்வேலி பக்கம்.’’
``அப்படியா... எந்த ஊரு?’’ என்றபடி மதி வந்தாள் (எப்படித்தான் கேட்டதோ).
“சேர்ந்த மரம்.”
“ஓஹோ. நான் அம்பாசமுத்திரம்… மழைல நல்லா நனஞ்சுட்டீங்கபோல?”
“பரவாயில்லக்கா.”
அவனைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
முழங்கால் வரை சேறு... ஷூவில் சேற்றுத் திட்டுகள். தொப்பலாக நனைந்ததால் உடலோடு ஒட்டிய சட்டைக்குப் பின் ஒடிசலான தேகம். பள்ளத்திற்குள் பதுங்கிய கண்கள், மிஞ்சிப்போனால் 22 வயசுதான் இருக்கும்.
“வீட்ல எல்லாரும் எங்க இருக்காங்க?’’
“ஊர்லதான்க்கா.”
“இங்க எங்க தங்கியிருக்கீங்க?” (மதியால் யாருடனும் சகஜமாகப் பேசிவிட முடியும்).
பசி... பணம்... பொறுப்புகள் என ஏதோ ஒன்று துரத்தியதால்தானே, ஏதோ ஊர்க்காரன் இங்கு இந்த மழையில், பெங்களூரில் முதுகில் கழுதைபோல பொதி சுமந்து, முட்டியளவு ஓடும் சாக்கடைத் தண்ணீரில் வந்து டெலிவரி செய்கிறான். இவன்மேல்தானே கொஞ்சம் முன் கம்ப்ளயின்ட் செய்தேன்.
மனதை ஏதோ அழுத்த உள்ளே போய் பர்ஸை எடுத்துக்கொண்டு வந்தேன்.
“இருப்பா… காபி தாரேன். குடிச்சுட்டுப் போ.’’
“நீங்க கேட்டதே போதும்க்கா. அதெல்லாம் வேணாம். தாங்க்ஸ்!”
“இன்னும் ரெண்டு கஸ்டமர் வீட்டுக்குப் போவணும். திடீர்னு மழை வேற பெய்யுதுலா? யாராலும் வீட்டை விட்டு வெளியே வர முடியலை. நிறைய ஆர்டர் டெலிவரிக்குக் காத்துக்கிடக்கு.”
“ஜாமான் எல்லாம் சரியா இருக்குல்லாக்கா?”
“எண்ணிக்கிட்டேன்… சரியாத்தான்னிருக்கு.”
“வாரேன்கா...”
மதி விட்டால் அவனையும் இரவுச் சாப்பாட்டிற்குக் கூப்பிட்டு சுடச் சுட சொதி பண்ணிப் போடுவாள். “தம்பி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சுன்னு கஸ்டமர் கேருக்குக் கால் பண்ணிட்டேன். திரும்பக் கூப்பிட்டு விவரம் சொல்றேன் சரியா? இந்தா இதை வச்சுக்கோ’’ என்றுவிட்டு பர்சிலிருந்து நான் எடுத்த நோட்டுகளைப் பார்த்தவன்,
“காசெல்லாம் வேணாம்... நீங்க திரும்பக் கூப்பிட்டுச் சொல்லவும் வேணாம்ண்ணே! கொரோனா பயத்தால கொஞ்சம் டெலிவரி பாய்ஸ்தான் இப்ப வேலைக்கு வரத் தயாராயிருக்கோம். மழை பெஞ்சதாலதான் லேட்டுனு எல்லாருக்கும் தெரியும். அதனால ஆக்ஷன் எதுவும் பெருசா எடுக்க மாட்டாங்க. நான் செஞ்ச வேலைக்கான ஸ்டார் மட்டும் கொடுங்க போதும்” என்று சொல்லி, குனிந்து பெரும் பொதியைத்தூக்கி முதுகில் வைத்த நொடியில், என் மனதுள் பாரம் ஏறியது!