கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: சுப்பிரமணி

சிறுகதை: சுப்பிரமணி
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: சுப்பிரமணி

திங்கள் கிழமை காலை, நேரே என் இருக்கை எதிரே, வெள்ளைச் சீருடையில் வந்து நின்றான் சுப்பிரமணி.

சுப்பிரமணி இறந்துவிட்டான். எங்களோடு வேலைபார்த்து, ஓய்வுபெற்றுச் சென்றவன். அதே ஊர்க்கார நண்பர் ஒருவர் அழைத்துச் சொல்லும்போதே சங்கடமாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் சுப்பிரமணியின் மகன் அழைத்து, “சார், அப்பா போயிட்டாரு சார்... என்னன்னு தெரியல...

நல்லாத்தான் இருந்தாரு... தங்கச்சி போச்சி, இப்ப அப்பாவும் போயிட்டாரு சார், என்ன பண்ணுவேன் சார்...” என்று தேம்பித்தேம்பி அழும்போது அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

சுப்பிரமணி, உன்னால் சாகக்கூட முடியுமா...

ஐந்து ஆண்டுகளுக்குமுன் வங்கியில் ஸ்டேஷனரி துறைக்கு மாற்றலில் செல்லும்போது, சிலர், “உங்களுக்கெல்லாம் அந்த டிப்பார்ட்மென்ட் சரிப்பட்டு வராது, வேற எங்கேயாவது மாத்தி வாங்கிக்குங்க” என்று அறிவுரை சொல்லத் தொடங்கினர்.

எப்போதும் காட்டும் வீறாப்பு போலவே, “எல்லா இடமும் ஒன்றுதான், நமக்கென்ன, நம்ம வேலைய பாத்துட்டு போகப் போறோம்” என்று சொல்லியபடி அங்கே சென்று சேர்ந்த முதல் நாள் சுப்பிரமணியைப் பார்க்கவில்லை. அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் பேர் இருக்கிறதே, அவர் எங்கே என்று கேட்ட அந்த முதல் நாள் வந்த பதில் மறக்க முடியாதது. “அவனை எதுக்கு சார் தேடறீங்க, தேவையில்லாத பிரச்னை... வராத வரைக்கும் லாபம்.”

தொழிற்சங்க ஊழியனாக இருந்ததால், நகரத்தில் பல்வேறு கிளைகளில் பணியில் இருப்போரைப் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ``யாரு சுப்பிரமணி” என்று யோசித்தபோது முகம் பிடிபடவில்லை. மறுநாள், நான் சுப்பிரமணியை சந்தித்த காட்சி, சினிமாக்களில் கதாநாயகன் என்ட்ரி கொடுக்கும் விதமாக இருந்தது. காட்சியை விவரித்தால், நாயகனா, வில்லனா என்று நீங்கள் குழம்பக்கூடும். எனக்கு நாயகன்தான் சுப்பிரமணி, அப்போதும் எப்போதும்.

அன்றைக்கு, துறையின் அதிகாரி சங்கர் ஏதோ கோபமாக இரைந்து பேசிக் கொண்டிருந்தார். இளைஞர். சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பவர். துறையில் அவருக்கும் சீனியர்கள் இருவர் இருந்தனர். முதன்மை மேலாளர் அருகே தனி அறையில் இருந்தார். யாரைப் பார்த்து இத்தனை சத்தம் போடுகிறார் என்று நிமிர்ந்து பார்க்கையில், சராசரிக்குச் சற்றுக் கூடுதல் உயரம், மிக மெலிந்த உடல், அழுக்கான உடை, குறைந்த முடியோடு ஓவல் வடிவில் முகம்... தலையைச் சொறிந்தபடி உள்ளே நுழைந்து, “இன்னா சார், ஏன் கத்துறீங்கோ... இன்னா வோணும் ஒனக்கு... அல்லாம் ஒயுங்காத்தான் எடுத்துக் கொடுக்கிறேன்... சொம்மா கத்துற வேலையெல்லாம் என் கிட்ட வேணாம்... அப்புறம் நடக்கறதே வேற...” என்று பெருங்குரலெடுத்துப் பேசிய மனிதரை நிமிர்ந்து பார்க்கிறேன்... சங்கரைக் கைநீட்டிப் பேசியபடி போன வேகத்தில், விட்டால் அடித்துவிடுவார் போலத் தெரிந்தது.

சட்டென்று புரிந்துவிட்டது, அதுதான் சுப்பிரமணி. ஊழியர் கூட்டுறவுச் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் இந்த முகத்தைப் பார்த்திருக்கிறேன்.

வேகமாக எழுந்து நின்று, “சுப்பிரமணி, என்ன இது, ஆபீஸர்கிட்ட மரியாதை இல்லாம...’’ என்றேன்.

சிறுகதை: சுப்பிரமணி
சிறுகதை: சுப்பிரமணி

“சார், புதுசா டிபார்ட்மென்ட்ல வந்து சேந்திருக்கிறது நீதானா... யூனியன் லீடர் கோபால் சார்தானே, நல்லாத் தெரியுமே ஒன்ன... நீயே சொல்லு... சஸ்பெண்ட் பண்ணுவேன், சீட்டக் கிழிப்பேன்னு சொல்ல இவரு யாரு... எனக்குக் குடும்பம் இருக்கு சார், பொண்ணு இஸ்கூல்ல படிக்குது...பையன காலேஜ்ல சேக்கப் போறன்... சொம்மா சவுண்டு உட்டா, வுட்ருவனா?”

இருக்கையில் இருந்து எழுந்து சுப்பிரமணி அருகே சென்றேன். குப்பென்று சாராய வாடை அடித்தது.

“சுப்பிரமணி... மொதல்ல ஒங்க இடத்துக்குப் போங்க... குடும்பம் இருக்கு இல்ல...பிள்ளைகளைப் பாக்கணும் இல்ல... ஒங்க இடத்துக்குப் போங்க” என்றேன்.

அதற்கு சுப்பிரமணி சொன்ன பதில், அப்புறம் அவன் ரிடையர் ஆகிற வரை எல்லோரும் என்னை கிண்டல் அடிக்கக் காரணமாகிவிட்டது.

“ஆமா சார்... குடும்பம் இருக்கு இல்ல... புள்ளைங்க படிக்குது இல்ல... சொம்மா ஜோல்னாப் பைய மாட்டிக்கிட்டு எப்போ பாத்தாலும் யூனியன் யூனியன்னு அலையறியே... மொதல்ல குடும்பத்தப் பாரு சார்...” என்று என்னைக் கேள்வி கேட்டுவிட்டுத் தனது நகைச்சுவையைத் தானே சிரித்து ரசித்தபடி வெளியே போன அந்த நடையை மறக்கமுடியாது. எத்தனை அராஜகம் செய்தாலும் அவனை என்னால் வெறுக்க முடியாமல்போனது.

சுப்பிரமணி வேலையில் ஒழுங்காக அமர்ந்து செய்தால் யாரும் அவனுக்கு ஈடுசொல்ல முடியாது. மொபைலில் எம் ஜி ஆர் பாட்டு ஓடிக்கொண்டி ருக்கும். தலைவர் என்றால் உயிர் அவனுக்கு. கிளைகளுக்கான ஸ்டேஷனரி பொருள்களுக்கு இன்வாய்ஸ் போட்டு, கடைநிலை ஊழியர்களிடம் பார்சல் செய்யக் கொடுப்போம். பட்டியல் பார்த்துப் பொருள்களை அடுக்கி பேக்கிங் செய்து மூட்டையைத் தைக்க வேண்டும். அதற்கு ஒரு சிறிய எந்திரம் உண்டு. சுப்பிரமணி தையல் அவ்வளவு சுத்தம்.

அதெல்லாம் ‘மூடு’ பொறுத்தது. அண்ணன் எப்போது வேலைக்கு வருவார், வந்தாலும் டிபார்ட்மென்ட்டுக்குள் எத்தனை மணிக்குத் தலையை நீட்டுவார், பொருந்தி உட்கார்ந்து வேலை நடக்குமா, மற்ற ஊழியர்களை ஒழுங்காக அவரவர் வேலையைச் செய்ய விடுவாரா என்பதெல்லாம் வாரன்டி, கியாரன்டிக்கு அப்பாற்பட்ட விஷயம்.

நான் அந்தத் துறைக்குச் சென்ற இரண்டாவது வாரம் ஒரு சனிக்கிழமை, பதினொரு மணிக்கு நுழைந்தான் சுப்பிரமணி.

“அப்படியே வெளியே போ” என்று முதன்மை மேலாளர் இரைந்து கத்தியது, அடுத்த அறையில் எங்கள் காதிலும் விழுந்தது.

நான் உடனே எழுந்தேன். அருகே இருந்த சக ஊழியர், “வேஸ்ட் சார், எதுக்கு உங்க எனர்ஜியெல்லாம் கொடுத்து அவனைக் காப்பாற்றப் பாக்கறீங்க, போகட்டும் விடுங்க” என்றார்.

அவர் கையைத் தட்டிவிட்டு, நேரே முதன்மை மேலாளர் அறைக்குள் போய் நின்றேன்,

“எதுக்கு சார் இவ்வளவு கோபமா பேசுறீங்க... லேட்டா வந்தா, அனுமதிக்க மாட்டேன்னு சொல்லுங்க, வெளியே போன்னு உங்க லெவல்ல ஒருத்தர் சொன்னால் நல்லாவா இருக்கு?” என்றேன்.

“கோபால் சார், உங்களுக்குத் தெரியாது. இதெல்லாம் கேக்காதீங்க... இவன் திருந்தவே மாட்டான்... இன்னிக்கு அரை நாள்தான் ஆபீஸ். துரை வர்றதே 12 மணிக்கு. அதுவும் சொல்லாமக்கொள்ளாம கையெழுத்து போட்டுட்டுப் போவாரா... இங்க ஒருத்தன் எதுக்கு இருக்கேன்?” என்றார்.

அவரிடம் எதையோ பேசி சமாதானப்படுத்திவிட்டு, வெளியே வந்தேன். சுப்பிரமணியைக் காணவில்லை. அவன் அதற்குள் அலுவலகத்திற்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தான்.

“சுப்பிரமணி, உள்ளே போ... வேலைய பாரு. சார்கிட்ட சும்மா ஒரு ஸாரி சொல்லு. இனிமேல் ஒழுங்கா வரேன்னு சொல்லிட்டு உன் இடத்துக்குப் போ” என்றேன்.

ஸ்டைலாகத் திரும்பி என்னை முறைத்தபடி, “நீ எதுக்கு சார் எனக்காக அந்த ஆள்கிட்ட போய் ஸாரி கேக்கறே...வாணாம் வுடு. போனாப் போவுது... லீவ் மார்க் பண்ணிக்கச் சொல்லு, டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுத்துட்டுப் போயிட்டே இருப்பேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

உள்ளே வந்தால், முதன்மை மேலாளர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. “என்ன, போய்ட்டானா... இன்னிக்கு நேத்தா பாக்கறேன் அவனை... உங்களுக்கு எத்தனை பெரிய பிடுங்கலெல்லாம் இருக்கு, இவன் மேட்டர்ல எதுக்கு சார் டயத்தை வேஸ்ட் பண்றீங்க?’’ என்றார்.

மதியம் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு புறப்படும்போது, அலுவலகக் கட்டடத்திற்கு அருகில் உள்ள சந்தில், செருப்பு தைக்கும் ஆள் கடையில் அவருக்கு அருகில் உட்கார்ந்து கதை அடித்துக்கொண்டிருந்தான் சுப்பிரமணி. நாலு கட்டடம் தாண்டினால் டாஸ்மாக். நான் நிற்காமல் போய்க்கொண்டிருந்தேன்.

திங்கள் கிழமை காலை, நேரே என் இருக்கை எதிரே, வெள்ளைச் சீருடையில் வந்து நின்றான் சுப்பிரமணி.

“பாத்தியா நீதான் லேட்டு. நான் ஒன்பதரை மணிக்கு டூட்டிக்கு வந்தாச்சு... நீ பைய தூக்கிக்கினு ஏதாவது கல்யாணம், கருமாதி, ஆஸ்பத்திரி அப்படின்னு சுத்திட்டு வந்திருப்ப... அதுதானே...” என்றான்.

“என் கதையை விடு, சனிக்கிழமை லீவுக்கு டாக்டர் சர்ட்டிபிகேட் எங்கே?” என்றேன்.

“ அதெல்லாம் கொடுக்கலாம் சார்... உடனே முடியுமா...கோச்சுக்காத சார்... ஒன்னால என்மேலே கோபப்பட முடியாது, நீ காம்ரேட் ஆச்சே...”

என்று சொல்லிவிட்டு, பற்கள் அதிகம் கொட்டிப்போயிருந்த பொக்கை வாய்நிறைய சிரித்தபடி சென்றுவிட்டான்.

எத்தனையோ நாள்... எத்தனையோ தடவை, யாராவது புகார் சொன்னால் அவன் இருக்கைக்குத் தேடிப்போய் சத்தம் போட்டுவிட்டு வருவேன். சரக்கு அடிச்சிட்டு வந்தா, உள்ளே இருக்கக் கூடாது என்று வெளியே அனுப்பியும் இருக்கிறோம். ஆனால் அவன் சொன்னது சரிதான். எனக்கு அவன் மேல் கோபம் கொள்ள முடியவில்லை. யாரையும் வெறுக்க முடியாத இயல்பாக இருக்கக் கூடும்.

ஒரு நாள் முதன்மை மேலாளர் வந்து என்னோடு வாதம் செய்தார். “எல்லாம் உங்க மாதிரி யூனியன் ஆளுங்க கொடுக்கற இடம் சார்... நீங்கதான் எல்லாரையும் கெடுக்கிறீங்க.’’

“ஆமாம், நான் இங்க வந்து அஞ்சாறு மாதம்தான் ஆச்சு, இதோ இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலே ரிட்டையர் ஆகப் போற அவனை நான் கெடுத்தேன்... அவன் எங்க யூனியன் மெம்பர் இல்ல. என்ன சார் பேச்சு இது?” என்று பதிலுக்குப் பேசினேன்.

“ஒண்ணும் வேணாம், ஒரு நாள் அவன் குடிச்சிட்டு வர்ற அன்னிக்கு டாக்டரைக் கையோடு இங்க கொண்டு வந்து நிறுத்தறேன், இல்லன்னா, பக்கத்து ஆஸ்பத்திரிக்கு அவனை இழுத்துக்கொண்டுபோய் நிறுத்தி கையோடு சர்ட்டிபிகேட் வாங்கறேன்... நீங்க விட்னஸ் போடணும் சரியா?” என்றார்.

சிறுகதை: சுப்பிரமணி
சிறுகதை: சுப்பிரமணி

“சார்... இந்தக் கைகள் காட்டிக் கொடுக்கும் கைகள் கிடையாது சார், காக்கும் கரங்கள்’’ என்றேன் சிரித்துக்கொண்டே.

“அப்ப, எங்க கையில எல்லாம் ரத்தம் கொட்டிக்கிட்டே இருக்கா... எங்களுக்கு இதுதான் வேலையா, போங்க சார்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவரும் ஓய்வில் சென்று, அவர் இடத்திற்கு அடுத்து இருவர் வந்து அவர்களும் போராடி வெறுத்துத்தான் போனார்கள். அவன் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்து.

ஆனால், சங்கருக்குக் கள்ளக்குறிச்சியில் திருமணம் என்று நாங்கள் மூன்று பேர் டிப்பார்ட்மென்ட் சார்பில் புறப்பட்டபோது, நூறு ரூபாய் என்னிடம் கொண்டு வந்து கொடுத்து, “சார், என் பேர்ல மொய் எழுதிடு சார், சங்கர் நல்ல ஆபீஸர், பாவம் தங்கமான பையன்’’ என்றான் சுப்பிரமணி.

என்னதான் செய்யறது இந்த சுப்பிரமணியை... என்னால் அவனை வெறுக்க முடிந்ததில்லை.

எந்த லஞ்சு பார்ட்டிக்கு அழைத்தாலும், மற்றவர்களோடு ஓட்டலுக்கு சுப்பிரமணி வருவது வழக்கமில்லை. ‘கையில காசு கொடுத்திரு சார்’ என்று சில சமயம் கேட்பான். கொடுக்க மாட்டோம். நேரே ‘கடை’க்குப் போய்விடுவான் என்று. ஆனால், பிரியாணிப் பொட்டலம் வாங்கி வரச் சொல்வான். அதைச் சாப்பிடவும் மாட்டான். அப்புறம் மற்றவர்கள் சொல்வார்கள், வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் மகளை சாப்பிட வைத்துப் பார்த்து மகிழ்வான் என்று. அவ்வளவு உயிர் அவனுக்கு, தான் பெற்ற பெண் குழந்தைமீது. அவள் ஒன்பதாம் வகுப்போ என்னவோ படித்துக்கொண்டிருந்தாள்.

பையன்மீதும் பாசம் அதிகம். நான் துறைக்குச் சென்ற ஆண்டு, மகனைக் கல்லூரியில் சேர்த்திருந்தான். ஆனால், அவன் தனக்கு விருப்பமில்லை என்று டிசி வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டான். என்னிடம் அழைத்து வந்தான் சுப்பிரமணி.

“சார், பையனுக்கு அட்வைஸ் பண்ணு சார்... காலேஜ்ல சேத்து விட்டா முடியாதுன்னு வந்துட்டான்.”

அப்புறம் கொஞ்ச நேரம் அருகே உட்கார வைத்து நிறைய எடுத்துச் சொல்லி வேறு கல்லூரியில் சேர வற்புறுத்தி அனுப்பி வைத்தேன்.

மூன்றாண்டுகள் படிப்பை நல்லபடி முடித்தும்விட்டான். அவனுக்கும் தங்கைமீது பாசம் அதிகம். ‘பத்தாம் கிளாஸ் நல்ல மார்க் சார். என்னைவிட தங்கச்சி நல்லாப் படிக்கும். அதை எப்படியாவது காலேஜ்ல சேக்கணும் சார்’ என்று ஒரு முறை அலைபேசியில் பேசினான்.

“நிச்சயம் நாங்க உதவி பண்ணுவோம், உங்க அப்பாவைக் கொஞ்சம் ஒழுங்காக வேலைக்கு வரச்சொல்லுப்பா...இன்னும் ஒரு வருஷம் மூச்சுப் பிடிச்சு வந்துட்டுப் போனால், நல்லபடியா ரிட்டையர் ஆகிப் போகலாம். பென்சன் பணம் வரும். வங்கியில் நடவடிக்கை எடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டா ஒரு பைசா வராது” என்று பேசினேன். இப்படியும் அப்படியுமாக நாள்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன.

எப்படியோ மருத்துவச் சான்றிதழ்களெல்லாம் இணைத்து அவன் லீவுக் கணக்கை நேர்செய்து முடிக்கவும், ரிட்டையர்மென்ட் நாளும் வந்துசேர்ந்தது.

வெவ்வேறு டிபார்ட்மென்ட் நண்பர்களையும் அழைத்து, ஐம்பது பேருக்கு அலுவலகத்தில் லஞ்சு ஏற்பாடு செய்திருந்தான் சுப்பிரமணி. வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. அவன் மகனை அழைத்துப் பேசினேன்.

“இருக்கட்டும் சார்... ஆசைப்படுறாரு.. இதுதானே ஒரு சான்ஸ்... இத்தோடு தங்கச்சி படிச்சி கல்யாணம் அது இதுன்னு ஏதாவது வந்தால்தான் எங்க வீட்டில் விசேஷம்...இது ஒண்ணும் பெரிய செலவு இல்ல சார்’’ என்று சொல்லிவிட்டான்.

சுப்பிரமணி குடும்பம் முழுவதும் வந்து சேர்ந்தனர். அவன் பெண்ணை அன்றுதான் பார்த்தேன்... ரொம்ப நன்றி சார் என்றாள். ‘நீங்கதான் அப்பாவுக்கு எல்லாமே’ என்று சொல்லும்போது அவள் கண்கள் கலங்கியிருந்தன.

மாலையில், சுருக்கமாக ஒரு ரிட்டையர்மென்ட் மீட்டிங் நடந்தது. சுப்பிரமணி பையன் எழுந்து எல்லாருக்கும் நன்றி தெரிவித்தான்...

“சார் பாத்தியா பையனை...எப்படி சோக்கா பேசறான் பாரு... கெட்டிக்காரன். வந்து... அவன்தான் எல்லாம் இனிமே.பணத்தையெல்லாம் அவன் கிட்ட கொடுத்திருவேன்...வீட்டை முழுசா கட்டி முடிக்கணும்... பொண்ண காலேஜ் படிக்க வைக்கணும்...வூட்டுக்கு வா சார்’’ என்றான்.

நானும் இன்னொரு ஊழியரும் கார் வைத்து சுப்பிரமணி குடும்பத்தை அழைத்துக்கொண்டு அவன் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

முப்பது கிலோ மீட்டர் தூரம். முன்னால் சுப்பிரமணி பையன் பைக்கில் போய்க்கொண்டே இருக்க தொடர்ந்து போய்ச் சேர்ந்தோம்...

நன்றாக இருட்டி விட்டி ருந்தது. ரயில்வே கேட் அருகில் தொடங்கி வீடு வரையில் மூன்று இடங்களில் சுப்பிரமணியை வாழ்த்திக் குடும்பப் புகைப்படத் தோடு ஃப்ளெக்ஸ் பேனர்கள் கண்ணில் பட்டன. கட்சி ஆட்கள் வைத்திருக்க வேண்டும். சுப்பிரமணிக்குப் பெருமை தாங்கவில்லை. வீடு சேர்கையில் அருகில் இருக்கும் வீடுகளிலிருந்து தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. சுண்ணாம்புப் பூச்சு பூசாத சுவர்கள். புதிய வீடு. நிறைய வேலைகள் இருந்தன.

“சார்... எனக்கு திரும்ப டிபார்ட்மென்ட்லேயே ஒரு வேலை போட்டுக் கொடு சார்’’ என்றான் சுப்பிரமணி.

“யப்பா... உன்னை இதுக்கு மேலயும் சமாளிக்க எங்களுக்குத் தெம்பு இல்ல” என்று சிரித்தோம். தனியே அழைத்து, ‘`சுப்பிரமணி, உடம்ப அழிச்சுக்காதே... இனியாவது ஒழுங்கா இரு’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

`உடம்பைப் பார்த்துக்கொள்’ என்று யாராவது சொன்னால் சிரிப்பான் சுப்பிரமணி.

சிறுகதை: சுப்பிரமணி
சிறுகதை: சுப்பிரமணி

“சார், நான் செத்துருவேன் செத்துருவேன்னு என்னைச் சொன்ன ஆளுங்க எனக்கு முன்னே பூட்டாங்க சார்... நா லேசுல சாவமாட்டேன் சார்... நீ வேணா பாரு... நம்ம ஆபீஸ்ல நீ ஜாயின் பண்ணபோது இருந்தாரே ஒரு ஆபீஸர், கமலநாதன், `உடம்ப பாத்துக்க, போயிருவ போயிருவ’ன்னு என்னைச் சொல்லிக்கினே இருப்பாரு... இன்னா ஆச்சு... அவரு ஆக்ஸிடன்ட்ல போயிட்டாரு” என்று சிரிப்பான்.

உடல் உழைப்பாளிகளில் எல்லோருமே கடுமையாக உழைத்தாலும், ஒரு பகுதியினர் அதற்காகவே மதுவிற்கு அடிமையாவதும், கடன் ஏறிக்கொண்டே போவதும், பின்னர் வேலையில் கவனம் பிசகுவதும், காணாமல்போவதும், ஒழுங்கீனன் என்று பெயர் வாங்குவதும், அதையே ரசித்து ருசிக்க ஆரம்பிப்பதும், எடுத்துச் சொல்லும் எந்த அறிவுரையும் உள்ளே எந்த வினையும் புரிய முடியாதபடி ஆல்கஹால் ஆட்டிப் படைப்பதும் நிறைய பார்த்தாயிற்று. மணிக்கணக்கில் அலுக்காமல் புத்திமதி சொல்லிப் பார்ப்பதும் உண்டு.

வெற்று உதாரில் மிரட்டுவது, சாதுரியமாகப் பம்முவது, அன்பாயிருக்கும் ஆள் சொன்னால் மட்டும் அடங்கிப்போவது என்று எத்தனையோ விதங்களில் பார்த்துப் பழகிப்போயிருந்தது. ஆனால் கொஞ்சமும் கெத்து குறையாத ஆளாய் இருந்தான் சுப்பிரமணி. எப்படி வெறுப்பது அவனை!

ஐந்து மாதங்களுக்கு முன், அவன் பையன் திடீர் என்று ஒரு நாள் அழைத்தான். இந்த முறை அவன் குரல் பதற்றமாக இருந்தது.

“சார். தங்கச்சிக்கு டெங்கு காய்ச்சல் சார்... ராமச்சந்திராவுல சேர்த்திருக்கு... பயமா இருக்கு சார்’’ என்றான்.

‘`ஏதாவது பணம் வேணுமா?’’ என்று கேட்டதற்கு, ‘`வேண்டாம் சார், ஆஸ்பத்திரில இலவச வார்டுலதான் சேர்த்திருக்கு... கொஞ்சம் ப்ரே பண்ணிக்குங்க சார்’’ என்று அழுதான். இரண்டு நாள்கள் கழித்துக் கேட்டபோது, ‘`அப்படியேதான் இருக்கு’’ என்றான்.

ஆனால், பத்தாம் நாள் சுப்பிரமணியின் செல்ல மகள் போய்விட்டாள். அவளுக்கு உள்ளேயே இரண்டு மூன்று வருடங்களாக சில உடல்நல பிரச்னைகள் இருந்திருக்கிறது. காய்ச்சல் வந்தபோது எதிர்ப்பு சக்தி குறைந்திருக்க, எதுவும் செய்து காப்பாற்ற முடியாமல்போய்விட்டது.

சிறுகதை: சுப்பிரமணி

‘`அப்பா எங்கே இருக்கிறார்?’’ என்று கேட்டேன். ‘`சார், இப்பவும் அப்படியேதான் இருக்காரு சார், பேசுங்க’’ என்று லைன் கொடுத்தான். ‘`சார், பொண்ணு பூட்சி சார்... ஏமாந்துட்டேன் சார்’’ என்று சொன்ன குரலில் தெளிவு இல்லை. ஆனால், அவன் கனவு தகர்ந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அப்புறம் சுப்பிரமணியோடு பேசிய நினைவு இல்லை. இப்போது அவனே இல்லை.

கொரானாப் பரவல் தடுப்பு ஏற்பாட்டுக்கு அந்த ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த அன்றுதான் சுப்பிரமணியின் மறைவுச் செய்தி வந்தது. ரயில்கள் கிடையாது. போக்குவரத்துக்கு வழி கிடையாது. அவன் ஊரும் அருகில் சட்டென்று போய்விட்டு வரும் தொலைவில் இல்லை.

“சார், எல்லார்க்கும் தகவல் சொல்லுங்க சார்... நாளைக்குத் தான் எடுப்போம்... நீங்க வருவீங்களா சார்?” என்று சுப்பிரமணியின் மகன் கேட்டபோது பதில் சொல்லும் துணிவுகூட அற்றுப்போயிருந்தது...

“வாய்ப்பு இல்லையே தம்பி, அம்மாவைப் பார்த்துக்கப்பா” என்று சொன்னேன்.

“சரிங்க சார்... தகவல் மட்டும் எல்லார்க்கும் கொடுத்திருங்க சார். அவருக்கு எல்லாமே நீங்கதான் சார். அப்புறமா வந்து பாக்கறேன். அம்மாவுக்கு பென்சன் உண்டுதானே சார்... நீங்க தான் உதவணும் சார்” என்றான். எந்திரம்போல, ‘`சரிப்பா’’ என்றேன்.

பாவி, வாழ்க்கையை இப்படி முடிச்சிக்கிட்டானே என்று அரற்றியது மனம். ‘ஒன்னால கோபப்பட முடியாது சார்’ என்ற சொற்கள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்தப் பொக்கைவாய்ச் சிரிப்பும், தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் உடல்மொழியும் கண்முன் வந்து நின்றது. கடைசியாய்ப் பார்க்க முடியாமல் போகிறதே என்று அன்றிரவு வேதனை அரித்துத் தின்றது.

`என்னை மன்னிச்சிரு சுப்பிரமணி...’ என்று மனத்திற்குள் விசும்ப ஆரம்பித்தேன்.