Published:Updated:

சிறுகதை: நடைப்பயிற்சி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

க.அரவிந்த் குமார்

நடை - 1

னத்த அமைதிக்குப் பிறகு பல்லாவரம் நகர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பேச ஆரம்பித்தார் முன்னாள் நகரச் செயலாளரான ஆரோக்கிய தாஸ். ``எல்லா போஸ்டர்லயும் உன்னோட போட்டோ மட்டும் பெரிசா போட்டுக்குற... கட்சின்னு ஒண்ணு இருக்கு, நிர்வாகிங்கன்னு இருக்கோம், அதெல்லாம் தெரியுமா தெரியாதா?’’ என்று கொந்தளித்தார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல செயற்குழு உறுப்பினர்கள் சிலர் முணுமுணுத்தனர். எல்லோர் பேசுவதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த துளசி பாண்டியன் மெதுவாக எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்.பித்தார்.

``இந்தக் கட்சியில நா சேரும்போது மொத்தம் மூணு சூப்பர் மார்க்கெட் வெச்சிருந்தேன். இப்போ ஒண்ணுதா மிஞ்சியிருக்கு. கட்சித் தலைமை போராட்டம் ஆர்ப்பாட்டம் அறிவிச்ச அன்னிக்கு இந்த நிர்வாகிங்க எல்லாம் எங்க போனீங்க? கூட்டத்தைக் கூட்ட நான்தானே செலவு பண்றேன். மேடை, மாலை, மரியாதை, மைக் செட், பட்டாசு, பேனர், போஸ்டர், சரக்கு, சைடிஷ் வரைக்கும் நான்தானே செலவு பண்றேன், அப்போ போஸ்டர்ல என்னோட படத்தைப் போடாம உங்க பேமிலி, பெரிய வூடு சின்ன வூடு படத்தையா போடுவேன்’’ என்று அடித்தொண்டையிலிருந்து அழுத்தம் திருத்தமாகப் பேச, செயற்குழு உறுப்பினர்கள் பதில் பேச முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

``வார்த்தைய அளந்து வுடு துளசி, உன் இஷ்டத்துக்குப் பேசுற’’ என்று ஆரோக்கிய தாஸின் மருமகன் செல்லத்துரை நாற்காலியைத் தள்ளி விட்டுக் கொண்டு எழுந்தான்.

சிறுகதை: நடைப்பயிற்சி

``ஓ, மருமகப் பிள்ளையா, வாங்கையா வாங்க... குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்டு பக்கத்துல போன வாரம் பண்ணுன மறியல் போராட்டத்துல நீயும் உங்க மாமனாரும் எவ்ளோ செலவு பண்ணீங்கன்னு சொல்லிட்டு நாற்காலியை தாராளமா உடைச்சுப் போடு செல்லத்துரை’’ என்று துளசி அமைதியாகக் கூற, மருமகன் செல்லத்துரையின் தோளைப் பற்றி உட்கார வைத்தார் ஆரோக்கிய தாஸ்.

``தாராளமா போஸ்டர்ல பெரிசு பெரிசா படம் போட்டுக்க, வேணும்னா புதுசா நாலு போட்டோ புடிச்சு வெச்சிக்க, அடுத்த போஸ்டர்க்கு யூஸ் ஆகும்’’ என்று கூறிவிட்டு, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஆரோக்கிய தாஸ். அவர் பின்னாலேயே செல்லத்துரையும் அவர்களது ஆதரவாளர்களும் செல்ல, செயற்குழு கூட்டம் முடிவுக்கு வந்தது.

கட்சி அலுவலகத்திலிருந்து துளசி பாண்டியன் வெளியே வர, அவர் வார்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ``ஐயா, பொண்ண காலேஜ்ல சேர்க்க பணம் தர்றேன்னு சொல்லியிருந்தீங்க, அதா ஞாபகப்படுத்திட்டு வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்’’ என்றார்.

காரில் ஏறப்பார்த்த ஆரோக்கிய தாஸைக் கைத்தட்டி அழைத்த துளசி பாண்டியன், ``நம்ம கட்சிக்காரங்கதான், பொண்ண காலேஜ்ல சேர்க்கணுமாம். நீங்க பீஸ் கட்றீங்களா’’ என்று எகத்தாளமாகக் கேட்க, காரின் கதவைப் படாரென்று அறைந்து சாத்திப் புறப்பட்டார் ஆரோக்கிய தாஸ். ``போஸ்டர்ல படம் மட்டும் வேணும், கைக்காச செலவு பண்ண மனசு மட்டும் வராது’’ என்று முணுமுணுத்தபடியே பாக்கெட்டிலிருந்து சில ஆயிரங்களை எண்ணிக் கொடுத்தார் துளசி பாண்டியன்.

பல்லாவரம் நகரச் செயலாளர் என்ற இந்த இடத்தைப் பிடிக்க துளசி பாண்டியன் எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. துளசி பாண்டியனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் முன்னாள் நகரச் செயலாளர் ஆரோக்கிய தாஸ் எப்போதும் மல்லுக்கு நிற்பது வழக்கம்.

காரில் சென்றபோதும் இதனையே பொருமியபடி சொன்னான் செல்லத்துரை, ``மாமா, அவனை நீங்க ரொம்ப வளர்த்து விட்டுட்டீங்க. இன்னிக்கு நம்மளையே கடிக்கிறான்’’ என்று ஆரோக்கிய தாஸைப் பார்த்துப் புலம்பினான்.

``அவன் போஸ்டர்ல படம் வரணும்னு தானே ஆசைப்படறான், அதற்கு ஏற்பாடு பண்ணிடு’’ என்று பற்களைக் கடித்தபடி கூறினார் ஆரோக்கிய தாஸ். செல்லத்துரை தன்னுடைய செல்போனை எடுத்து யாரிடமோ அடங்கிய குரலில் பேசினான்.

நடை - 2

மணலி புதுநகர் மீனாட்சி தியேட்டருக்குப் பின்னால் இருந்தது பிரியாணி ஷெரீப் பாய் வீடு. ``அவளோ ரோஷம் பார்க்குறவன் உருப்படியா படிச்சு பாஸாகி இருக்கணும். காலேஜ் கட் அடிச்சிட்டு எல்லா பேப்பர்லையும் அரியர் வச்சிட்டு தெருமுக்குல ஒக்காந்துகிட்டு ஊர்க்கதை பேசிட்டு இருந்தா காசு வானத்துல இருந்து வந்து குதிக்குமா? லட்ச ரூபாய் பைக் வாங்க மட்டும் இந்த அப்பா வேணும், அதுக்கு பெட்ரோல் போட இதே அப்பா வேணும். ஆனா, வேலை வெட்டிக்குப் போகாம வூட்ல இருக்கியே, வந்து கூடமாட ஒத்தாச பண்ணுனா மட்டும் மானக்கேடா இருக்கோ...’’ என்று கொட்டித் தீர்த்தார் ஷெரீப்.

அவர் எதிரே தாடையைச் சொறிந்தபடி நின்றிருந்தான் மகன் முகமது பாரூக்.

``அப்பா சொல்றத கேளு தம்பி, நீ ஒரு நல்ல வேலைக்குப் போற வரை, அப்பா கூட இரு. இதுல எந்தக் கேவலமும் இல்லைப்பா’’ என்று அப்பா - மகன் இடையே எழுந்துள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் அமைதியாகப் பேசிப் பார்த்தார் பாரூக்கின் அம்மா.

``அழுக்கு லுங்கியைக் கட்டிக்கிட்டு நெருப்பு பக்கத்துல நின்னுக்கிட்டு வேர்த்து விறுவிறுத்து கல்யாண வூட்ல கரண்டியப் புடிச்சிக்கிட்டு பிரியாணி கிளற முடியாது. என் பிரெண்ட்ஸுங்க எல்லாம் பார்த்தா என்ன நெனப்பானுங்க’’ என்று திடமாகக் கூறினான் பாரூக்.

``என்னது அசிங்கமா, எதுடா அசிங்கம். செய்ற தொழில்டா அது. அந்தத் தொழில செஞ்சுதான் இந்த ஊர்ல ஒரு ஆளா நிமிர்ந்து இருக்கேன். இவ்ளோ பெரிய குடும்பத்தக் கட்டிக் காப்பாத்த முடிஞ்சிருக்கு. வெளிய போய்ப் பாரு, நாலு காசு சம்பாரிக்க எவ்ளோ கஷ்டம்னு தெருதெருவா சுத்துனாதான் தெரியும். வீட்ல சுகமா ஒக்காந்துக்கிட்டு வேலைவெட்டிக்குப் போகாம இருக்குறதால தான் பிரியாணி கிண்டறது உனக்குக் கேவலமா தெரியுது’’ என்று மூக்கு புடைக்கக் கத்தினார் ஷெரீப்.

``என்னால முடியாது, நான் பிரெண்ட்ஸுங்க கூட சேர்ந்து யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். என்னால வேலைக்குலா போக முடியும்னு தோணல’’ என்று அப்பாவைப் பார்க்காமல் சுவரைப் பார்த்துப் பேசினான் பாரூக்.

``நீ என்ன கர்மமோ பண்ணித் தொலை, ஆனா ஒரு வேலை ஒசத்தி இன்னொரு வேலை மட்டம்னு நெனச்சிக்கிட்டு இருந்தா உன்னால எந்த வேலையும் உருப்படியா செய்ய முடியாது. கடைசியா கேக்குறேன், இப்போ என்கூட கல்யாணத்துக்கு வரப்போறியா, இல்லையா’’ என்று ஷெரீப் அழுத்தமாகக் கேட்க, பதிலுக்குக் காலருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய அண்டாவை எட்டி உதைத்தான் பாரூக்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஷெரீப் பாய், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நீண்ட கரண்டியை எடுத்து பாரூக்கின் காலில் பட்டென்று அடித்தார். வலியில் துடித்த பாரூக் கோவத்தில் அப்பாவை நோக்கிக் கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷெரீப் அமைதியாக நிற்க, பாரூக்கின் அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். பைக் சாவியை எடுத்துக்கொண்டு ஆவடியில் உள்ள தன்னுடைய நண்பன் லோகுவின் அறையை நோக்கி வேகமாகச் செல்ல ஆரம்பித்தான் பாரூக்.

நடை - 3

ரெட்ஹில்ஸ் அரிசிச் சந்தையை ஒட்டிய சந்து வீடு ஒன்றில் பச்சிளம் குழந்தையின் சிரிப்புச் சத்தம். ``அப்பனப்போலவே முட்டைக்கண்ணு... எப்படி முழிக்குது பாரு, கண்ண உருட்டி உருட்டி பார்க்குறதுகூட அப்பனப்போலவே இருக்கு... முட்டக்கண்ணு, முட்டக்கண்ணு’’ என்று, பாயில் கை காலை உதைத்தபடி சிரித்துக்கொண்டிருந்த குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள் பவித்ரா.

பின்னால் வந்து நின்று அவள் தலையில் ஓங்கிக் குட்டினான் மணிகண்டன். ``எத்தினி வாட்டி சொல்றது, குழந்தையை முட்டக்கண்ணுன்னு கூப்பிடாதன்னு. இந்த முட்டக்கண்ணு என்னோட போகட்டும். அவனாச்சும் நல்ல கண்ணோட பாக்கட்டும்’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனது செல்போன் ஒலித்தது.

சிறுகதை: நடைப்பயிற்சி

போனை எடுத்துக்கொண்டு மனைவி பவித்ராவைப் பார்த்தபடி வீட்டை விட்டு வெளியேறி சந்தை இரைச்சலுக்கு நடுவே பேசினான் மணிகண்டன் என்கிற முட்டக்கண்ணு மணி.

வாசல்வரை வந்து நின்று திரும்பி குழந்தையைப் பார்த்த மணிகண்டன், ``இதுவே கடைசியா இருக்கும்’’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வெளி யேறினான்.

``சொல்லுங்க நாகராஜ் சார், என்ன பண்ணணும். அப்பிடியா, நிஜமாதான் சொல்றீங்களா, நம்பவே முடியல. இப்போதான் வாய்த் தகராறு வந்திருக்குன்னு சொல்றீங்க, இப்போ பண்ணுனா சரியா இருக்கும்ங்களா’’ என்று பேசினான். மறுபக்கம் பேசிய நாகராஜ், ``எல்லாம் சரியா வரும், வேலைய முடி, பணம் வந்து சேரும். வந்து அட்வான்ஸ் வாங்கிக்க’’ என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.

வீட்டிற்குள் சென்ற மணிகண்டன் எதுவும் பேசாமல் பீரோவிலிருந்து இரண்டு பேன்ட் - சர்ட்டுகளை எடுத்து சிறிய பையில் வைத்துக் கொண்டு, ``வர ஒருவாரம் ஆகும் பார்த்துக்க’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். வாசல்வரை வந்து நின்று திரும்பி குழந்தையைப் பார்த்த மணிகண்டன், ``இதுவே கடைசியா இருக்கும்’’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

சந்தையைத் தாண்டிப் பிரதான சாலையைத் தொட்டதும், செல்போனை எடுத்து மீண்டும் நாகராஜை அழைத்து, ``இந்தத் தடவை பழைய ஆளுங்க யாரும் வேண்டாம், ரெண்டு புதுப் பசங்கள மட்டும் உஷார் பண்ணுங்க, என்னன்னு தெரியாம சத்தமில்லாம வேலைய முடிச்சிட்டு வந்துடலாம்’’ என்று பேசிவிட்டு, பல்லாவரம் நோக்கிப் புறப்பட்டான் மணிகண்டன்.

பயிற்சி - 1

படபடவென்று தட்டப்பட்ட கதவைத் திறந்தான் லோகு. தலையெல்லாம் கலைந்து கண்கள் சிவந்து வெளிறிப்போய் நின்று கொண்டிருந்தான் பாரூக். வந்த வேகத்தில் லோகுவின் கையில் இருந்த சிகரெட்டை வாங்கி வேகவேகமாக ரெண்டு இழு இழுத்தான்.

``இனிமே எங்க அப்பன் மூஞ்சில எப்படி முழிப்பேன்னு தெரியல மச்சி, அவரை அடிக்கக் கைய ஓங்கிட்டேன், கஷ்டமா இருக்கு’’ என்று அழத் துவங்கினான்.

``பலபேரு மனசுக்குள்ள செய்றத, நீ வெளியில செஞ்சிருக்க... ம்ம்ம் தைரியம்தான்’’ என்று எகத்தாளமாகச் சொல்ல, லோகுவை எட்டி உதைத்தான் பாரூக்.

``நானே எங்க அப்பாவ அடிக்கக் கைய ஓங்கிட்டேன்னு நொந்துபோய்க் கெடக்கேன், உனக்கு டயலாக் கேக்குதோ’’ என்று எறிந்து விழுந்தான்.

இல்ல மச்சி, நாம எடுக்கப் போற படத்துல இதுபோல ஒரு சீன் வந்தா என்ன டயலாக் வச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அருமையா வந்து விழுந்திருக்கு'’ என்று சொல்லும்போதே அவனது செல்போன் ஒலித்தது.

``ஹலோ யாரு, நாகராஜ் அண்ணனா, சொல்லுங்கண்ணே, அப்படியானே, ரொம்ப சந்தோஷம், இப்பவே வந்துர்றோம்னே’’ என்று சிரித்தபடியே போனை கட் செய்தான்.

``பலபேரு மனசுக்குள்ள செய்றத, நீ வெளியில செஞ்சிருக்க... ம்ம்ம் தைரியம்தான்’’

``மச்சி, நமக்குத் தெரிஞ்ச ஒரு ரியல் எஸ்டேட் பார்ட்டி, பேரு நாகராஜ். கொஞ்சம் பசையான ஆள். அவர் ஆபீஸ்ல வந்து ரெண்டு நாளு தங்கச் சொல்றாரு. வேலைக்கு நடுவுல அப்படியே கதை கேக்குறாராம். ஓகே-னா மத்ததப் பேசிக்கலாம்னு சொல்றாரு. மச்சி நீ வந்த நேரம் மகாலட்சுமியே வந்திருக்காடா. பாரூக்கின் மகாலட்சுமி, எப்படி டைட்டில்’’ என்று சிரிக்க, கண்களில் கண்ணீரோடு பாரூக்கும் சேர்ந்து சிரித்தான். ``கதைய ரொம்ப வித்தியாசமா சொல்லணும் மச்சி’’ என்று பேசியபடியே இருவரும் பைக்கில் புறப்பட்டு பல்லாவரம் வந்து சேர்ந்தனர். அங்கு ஏற்கெனவே அமர்ந்திருந்தான் மணிகண்டன்.

பயிற்சி - 2

மாதா ரியல் எஸ்டேட் என்ற பெயர்ப் பலகைக்கும் நாகராஜுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஊரில் உள்ள எல்லா அம்மன் படங்களும் சுவரில் இருக்க நெற்றி நிறைய குங்குமத்துடன் வரவேற்றான் நாகராஜ். ``தம்பிங்களா வாங்க, சார் பேரு மணி. வெட்டிட்டு வான்னா கட்டிட்டு வந்துடுவாரு அவ்ளோ கெட்டிக்காரரு’’ என்று சொல்லிவிட்டு மணிகண்டனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் நாகராஜ்.

``அண்ணன்தான் கதை கேப்பாரு. அவர் கூட போங்க, கதை சொல்லுங்க... அவர் எனக்கு ஒப்பீனியன் சொல்வாரு, அப்புறம் நான் புரொட்யூசர் கிட்ட பேசுறேன்’’ என்று சொல்ல... கேட்டுக்கொண்டிருந்த பாரூக்கிற்குத் தலை சுற்றியது.

சிறுகதை: நடைப்பயிற்சி

யாருனே தெரியாத ஒருத்தன்கிட்ட கதைய சொல்லி, அவன் இன்னொருத்தனுக்குக் கருத்து சொல்லி, அதைக் கேட்டு தயாரிப்பாளர் கிட்ட கூட்டிக்கிட்டுப் போறதுக்கு எதுக்காக இவ்ளோ தூரம் வரணும்னு தோணுச்சு. ``தெரு தெருவா சுத்தத்தான் போற பாரு'’ என்று அப்பா சொன்ன வார்த்தைகள் அப்படியே நடப்பதாக எண்ணிக் கொண்ட போது பாரூக்கிற்குச் சிரிப்பு வந்தது. ``தம்பிங்களா, காலையில் 5 மணிக்கு என்கூட வாக்கிங் வந்துடுங்க. அங்க பேசிக்கலாம். இப்போ இங்கேயே தங்கிடுங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினான் மணிகண்டன்.

பயற்சி - 3

காலை 5 மணி. குரோம்பேட்டை நியூ காலனி பூங்கா. மூன்று பக்கம் சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்தது பூங்கா. ஒருமுறை முழுதாக அந்த இடத்தைச் சுற்றி வந்தான் மணிகண்டன். எந்தப் பக்கம் நடைப்பயிற்சிக்கு ஆட்கள் வருவார்கள் என்று ஏற்கெனவே நாகராஜ் எல்லாவற்றையும் சொல்லியிருந்ததால், தோதான இடமாகப் பார்த்து வைத்தான்.

``தம்பிங்களா உங்க கதைய சொல்லுங்க’’ என்று நடந்தபடியே பேசினான் மணிகண்டன். பாரூக் ஆர்வமாக விவரித்தான். ``நம்ம கதை அரசியல் சப்ஜெக்ட் சார். பதவிக்காக ரெண்டு குரூப் சண்டை போட்டுக்குறாங்க. யார் ஜெயிக்கிறாங்க, யார யார் கவிழ்க்கிறாங்க என்பதுதான் ஒன்லைன்’’ என்று சொல்ல, ``ரொம்பப் பழசா இருக்கே தம்பி’’ என்று கூறிவிட்டுச் சிரித்தான் மணிகண்டன்.

பாரூக்கைப் பார்த்து, ``தம்பி, நீ பரபரப்பா இருக்க. இவ்ளோ அவசரமா கதை சொன்னா எனக்கு ஏறாது. லோகுக்கு உன்னோட கதை தெரியும்ல. நான் அவன்கிட்ட பேசிட்டிருக்கேன். நீ என்ன பண்ற, பார்க்கோட லெப்ட் என்ட்ரன்ஸ் இருக்குல அங்க போய்ட்டு இவர் வர்றாரானு பார்த்துட்டு லோகுக்கு போன் பண்ணு'’ என்று தன்னுடைய செல்போனில் இருந்த ஒரு அரசியல் வாதியின் படத்தைக் காண்பித்தான். ``அவர் நமக்கு ரொம்ப முக்கியம் தம்பி, கிட்டத்தட்ட அவர் தான் நம்ம பைனான்சியர்னு வச்சுக்கோயேன்’’ என்று சிரித்தான்.

``அப்போ நாம எல்லோரும் அங்கேயே போய்ப் பார்க்கலாமே, எதுக்கு நான் மட்டும் போகணும்’’ என்று தயக்கத்துடன் கேட்டான் பாரூக்.

``ஒரே கதைதானே ரெண்டு பேரும் யோசிச்சிருக்கீங்க, ஆனா லோகுகிட்ட தனியா கேட்டா வேற மாதிரி இருக்கும், அதையே உன்கிட்ட கேட்டா வேறமாதிரி இருக்கும். ஒரே கதைதான், ஆனா எனக்கு ரெண்டு ஆங்கிள் கிடைக்கும். நீயும் கூட இருந்தன்னு வையி, நீ சொன்ன கதையை அப்படியே சொல்லதான் லோகு நெனப்பான், அவனோட சொந்த ஐடியா அடிபட்டுப் போய்டும்’’ என்று சொல்ல, அந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு பாரூக் ஒன்றும் சொல்லாமல் மணிகண்டன் சொன்ன இடத்திற்குப் போய் நின்றான். அங்கிருந்து பார்த்தால் லோகுவும், மணிகண்டனும் தெரியவில்லை.

யாருமற்ற சாலையில், விடியாத இருளில் தனியாக நிற்கும்போது அப்பாவின் ஞாபகம் வந்தது பாரூக்கிற்கு. வியர்த்துக் கொட்டியபடி கரண்டியால் பிரியாணியைக் கிளறும் அவரது உருவம் மனதில் தோன்ற அவனை அறியாமல் கண்களில் நீர் தளும்பியது. கம்பளிப் பூச்சி போன்று ஏதோ ஒன்று சாலையின் இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் மெதுவாக ஊர்ந்து சென்றது. புல்லட் ஒன்று பட்பட்டென்ற ஒலியோடு அந்தப் பக்கம் வர, பாரூக்கின் இதயம் தடக் தடக்கென்று அடித்துக்கொண்டது. எதிர்ப்புறம் இனோவா கார் ஒன்றும் வர பாரூக்கிற்கு இன்னும் பயம் அதிகரித்து விட்டது. ஐயோ, இந்தப் பூச்சி மேல ஏதாச்சும் ஒண்ணு ஏறிடுமோ என்று என்னமோ போல் ஆனான் பாரூக். இது ஏதுமறியாத பூச்சி மெதுவாக சாலையின் நடுவே ஊர்ந்துகொண்டிருந்தது.புல்லட் கடந்து போன பிறகுதான் மணிகண்டன் காட்டிய படத்தில் இருந்தவர் அவர் என்று நினைவு வந்தது. இரவில் சார்ஜ் போடாததால் அவனது செல்போன் அணைந்துபோயிருந்ததை அப்போதுதான் கவனித்தான் பாரூக்.

நடைப்பயிற்சி

புல்லட்டிலிருந்து இறங்கிய துளசி பாண்டியன் குனிந்து நிமிர்ந்து எழுந்து பூங்காவைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். தகவல் சொல்வதற்காக மணிகண்டனும், லோகுவும் சென்ற திசையில் ஓட ஆரம்பித்தான் பாரூக். அங்கு லோகு மட்டும் தனியாக நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ``என்ன மச்சி நீ இங்க இருக்க அவர் எங்க’’ என்று பதற்றத்துடன் கேட்டான் பாரூக். ``என்கிட்ட வேற ஒரு போட்டோவக் காட்டி அவர் வர்றாரான்னு பாக்கச் சொல்லிட்டு மெயின்கேட் பக்கம் போய்ட்டாருடா’’ என்று சொல்லும்போதே மெயின் கேட் பக்கம் பெரிய அலறல் கேட்டது. தபதபவென்று ஆட்கள் ஓடுகிற சத்தமும் கேட்டது.

பாரூக்கும், லோகுவும் ஓடிப்போய்ப் பார்த்தபோது கழுத்து வெட்டப்பட்ட ஒருவர் ரத்தம் கொப்பளிக்க விழுந்து துடித்துக் கொண்டிருந்தார்.

``ஐயோ, செல்லத்துரையை யாரோ வெட்டிட்டாங்க’’ என்று கத்தியபடியே ஓடிவந்தார் துளசி பாண்டியன். ``ஓடி வாங்களேன், ஓடி வாங்களேன்’’ என்று கூறியபடியே போனை எடுத்து போலீஸுக்கு அழைத்தார்.

``தம்பிங்களா வாங்க. வாங்க நாம போயிடலாம். இன்னிக்கு நேரம் சரியில்ல போல இருக்கு. அரசியல் கதையைக் கேக்க ஆரம்பிச்சதும் அரசியல் கொலை நடக்குது’’ என்று வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான் மணிகண்டன்.

பாரூக்கின் கைகளைப் பதற்றத்தில் பிடித்துக் கொண்ட லோகு, ``மச்சி என்கிட்ட போட்டோல காட்டுன ஆளுதாண்டா செத்துப் போய்க் கெடக்கான்'’ என்று உதறியபடியே கூறினான் லோகு. முன்னால் சென்றுகொண்டிருந்த மணிகண்டனின் கைகளில் போஸ்டரால் சுற்றப்பட்ட பண்டல் ஒன்று இருந்தது.

``மச்சி, என் கிட்ட காட்டுன போட்டோல இருந்தவர்தாண்டா அந்த போஸ்டர்ல சிரிக்குறவரு'’ என்று லோகுவின் கைகளைப் பிடித்தபடி கூறினான் பாரூக்.

அந்த போஸ்டரில் சிரித்தபடி போஸ் கொடுத்தார் துளசி பாண்டியன்.