சினிமா
Published:Updated:

சிறுகதை: எமதர்மன்

சிறுகதை: எமதர்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை: எமதர்மன்

27.08.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

ந்தப் பெண்மணிக்கு முப்பதுக்கும் சற்று அதிகமான வயது. கூடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தாள். அவள் மடியில் கைக்குழந்தை இருந்தது.

வேட்டியும் கைபனியனுமாக இருந்த முத்துசாமிக்குச் சட்டையைப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாமோ என அறைக்குத் திரும்பிப்போக நினைத்து, மேல் துண்டை வைத்துப் போதுமான அளவுக்குப் போர்த்தியபடி அவள் எதிரே ஈஸி சேரில் அமர்ந்தார்.

‘‘யாரம்மா நீ?’’ என்றார்.

அந்தப் பெண், குழந்தையுடன் பதற்றமாக எழ முனைந்தாள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க இயலாமல் சரிந்து அமர்ந்தாள்.

''பரவால்லம்மா.''

‘‘சார் ஜெகநாதபுரத்தில மணி ஞாபகம் இருக்குதா சார்... அதோட சம்சாரம். எம் பேரு கனகா.’’ அவள் நாற்காலியிலிருந்து மீண்டும் எழுந்து நிற்பதில் முனைப்பாக இருந்தாள்.

‘‘உட்காரும்மா.’’

‘‘காபி சாப்பிடறயா? ஜெகநாதபுரம்... ஆமா... அங்க கொஞ்ச நாள் இருந்தேனே?’’

சிறுகதை: எமதர்மன்
சிறுகதை: எமதர்மன்

‘‘சாப்பிட்டன் சார். இப்பத்தான் அம்மா கொடுத்தாங்க.’’

‘‘இவ்வளவு காலையில வந்திருக்கியே... ஊர்ல இருந்தா வர்றே?’’

‘‘இல்ல சார். இப்ப நாங்க அம்பத்தூர் வந்துட்டோம். கோயம்பேடு வந்து பஸ் புடிச்சி வந்துட்டன். சார் எங்கயாவது வெளிய கிளம்பிப் போயிடுவிங்கன்னுதான் விடிகாலைல பொறப்பட்டேன்.’’

மணி என்பது யார், இவள் எதற்காக வந்தாள், என்ன அவசரம் என முத்துசாமிக்கு யோசனை தாவியது. அவளாகச் சொல்வாள் என சிறிது நேரம் கொடுத்தார். அவளுக்கும் எப்படித் தொடங்குவது என்ற யோசனை ஓடுவதை உணர்ந்து, ‘‘குழந்தைக்கு என்ன பேரு?’’ என்றார்.

‘‘உங்க பேர்தான் சார்...’’

‘‘முத்துசாமியா?’’

‘‘ஆமாங்க சார்! அவருக்கு உங்க அட்ரஸைக் கண்டுபிடிச்சு உங்ககிட்ட கொழந்தையோட வந்து ஆசீர்வாதம் வாங்கணும்னு ஆசை!’’

‘‘மணின்னு சொல்றியே, அதுதான் சட்டுனு நினைவு வரல.’’

கனகா அவருக்கு நினைவுபடுத்த ஓர் உத்திவைத்திருந்தாள். அது மணி அவளுக்குச் சொன்னதுதான். ``ஒரு வேளை சார் என்னை மறந்தி்ருந்தார்னா, எருமை மாட்டுமேல உக்காந்து இஸ்கூலுக்கு வருவாரே... அவருன்னு சொன்னா பளிச்சுனு ஞாபகம் வந்துடும். எமதர்மன்னுதான் என்னைக் கூப்பிடுவாருன்னு சொன்னாரு.'’

‘எருமை மாட்டு மேல உக்காந்து பள்ளிக்கூடத்துக்கு வருவாரே... அவரு!’ முத்துசாமி ஆசிரியர் முகத்தில் ஒரு ‘பளிச்’ ஏற்பட்டு அது மேலும் பிரகாசமாக விரிந்தது.

மணி, எருமை மாட்டின் மீது அமர்ந்தபடி பள்ளிக்கூடத்துக்கு வந்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. புதிதாகத் தலைமை ஆசிரியராக வந்திருந்த முத்துசாமி, ‘‘யாரப்பா நீ?’’ என்றார். ‘‘மணி சார். இங்கதான் படிக்கிறேன்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எருமையோடு சேர்த்து அவனை எடைபோட்டார். அவனுக்குச் சுமார் பதினேழு, பதினெட்டு வயது இருக்கும். லுங்கி கட்டி, சிவப்பு கலரில் கட் பனியன் போட்டிருந்தான்.

‘‘படிக்கிறியா... இங்கயா?’’ என்றார்.

‘‘எட்டாப்பு சார்.’’

‘‘எரும மாட்டு மேலெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’’ என்று கண்டித்தவர், ‘‘யூனிஃபார்ம் எங்கே?’’ என்றார்.

‘‘உள்ள வர்ல சார். அட்னஸ் சொல்லிட்டுப் போயிடுவேன் சார். டெய்லி அப்படித்தான் சார்’’ என்றான்.

‘‘மாட்டை மரத்தில கட்டிட்டு உள்ள வா.’’

பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வருகிற லாகவத்தோடு அதை ஓரங்கட்டிவிட்டு வந்தான். விநோதமாக இருந்தது. தலைமையாசிரியர் முத்துசாமி விசாரணையைத் தொடங்கினார்.

அவன் சொன்னபடி வருகைப்பதிவேட்டில் அவனுடைய பெயர் இருந்தது. தினமும் அவன் பள்ளிக்கு வந்ததாகவும் பதிவாகியிருந்தது. ஆனால், தினமும் காலை வந்து ஆசிரியரிடம் ஒரு ``வணக்கம் சார்'' சொல்லிவிட்டுச் செல்வது மட்டும்தான் பழக்கம் என்பதையும் சொன்னான்.

‘‘பள்ளிக்கூடத்தில் அப்படியெல்லாம் விதி இல்லை. தினமும் வரவேண்டும். யூனிபார்ம் அணிந்து வரவேண்டும். புத்தகப்பை கொண்டு வரவேண்டும்’’ என்று அவர் சொன்னார்.

மணி சிரித்துக்கொண்டே, ‘‘நெறய வேலைகிது சார். டெய்லிலாம் வர முடியாது சார்’’ என்றான் மிகச் சாதாரணமாக. அவனிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று தெரியவில்லை.

‘‘உனக்கு என்ன வயசு?’’

‘‘18.’’

‘‘பதினெட்டு வயசுல எட்டாவது படிக்கிறது தப்பு. பேரன்ட்ஸைக் கூட்டிக்கிட்டு வந்து டிசி வாங்கிட்டுப் போய்விடு’’ என்றார்.

‘‘சார், நான் எட்டாவது படிக்கிறதே முடிச்சுட்டு போலீஸ் வேலையில் சேர்றதுக்குத்தான். எட்டாவது முடிச்சா போதும்னு சொல்லிக் கிறாங்க. அதனால்தான் சார் வரேன். பெயில்னு போட்டுக் கொடுத்துட்டாக்கூட போதும்.’’

உலக வழக்கத்துக்கு மாறான ஒரு பேச்சு வார்த்தையாக இருந்தது. ‘‘தம்பி, சொன்னா கேளு. அதெல்லாம் நான் பண்ண மாட்டேன். இதுக்கு முன்னாடி எப்படியோ இருந்திருக்கலாம். உன்ன ஒரு நாள்கூட அனுமதிக்க முடியாது’’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கிவிடுவார்கள் என்பதெல்லாம் அவன் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. ‘‘சார் முன்னாடி இருந்த ஹெட் மாஸ்டர் ஒண்ணும் சொல்ல மாட்டார். நான் பாத்துக் கிறேன்னு சொல்லியிருந்தாரு. என்னப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும் சார். அவர்கிட்ட வேணா கேட்டுக்கங்க’’ என்று நியாயமே இல்லாத சிபாரிசை துணைக்கு அழைத்தான்.

‘‘முதல்ல உன் எருமை மாட்டை ஓட்டிக்கிட்டு கிளம்பு. நாளைக்கு உங்க அப்பா அம்மாவோட வா. போ வெளியே’’ சத்தம்போட்டு அதட்டிக் கூறினார். மணி வழக்கம்போல ‘‘இன்னா சார்...’’ என ஏதோ சொல்ல ஆயத்த மானான். ஆசிரியர் அடித்து விடுவார் போல ஆக்ரோஷமாக எழுந்து நின்ற காட்சியைப் பார்த்து தலையைச் சொறிந்துகொண்டு வெளியே வந்தான்.

எருமைமாட்டுக்கு அருகே வந்து தன் வாழ்க்கையே முடிந்து விட்டதுபோல கொஞ்ச நேரம் நின்றிருந்தான். மறுபடி மாட்டின்மீது ஏறி, காலால் அதன் வயிற்றில் லேசாகத் தட்டினான். அவன் துக்கம் உணர்ந்ததுபோல அதுவும் மெல்ல நடக்க ஆரம்பித்தது. ஆற்றங்கரைப் பக்கமாக மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதை முத்துசாமி பார்த்தபடி இருந்தார்.

ஆற்றங்கரைக் கரம்புமேட்டில் பொழுதெல்லாம் எருமைமாடு மேய்ப்பதுதான் இன்றைய வேலை. அறுவடை வேலைக்குப் போவதும் உண்டு. இன்னும் சில நேரங்களில் நாற்று பிடுங்குவான். இது எல்லாமே பள்ளிக்கூடத்துக்குப் போய் அட்டனன்ஸ் போட்டுவிட்டுத்தான். இதற்கு முன்னால் இருந்த தலைமையாசிரியர் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார். ‘‘அட்டனன்ஸ் போட்டுர்றண்டா. நீ இங்க வர்றதுதான் பயமா இருக்கு. நீ வரவே வேணாம்’’ என்றுதான் அவனுக்குச் சொல்லியிருந்தார்.

ஆனால் மணிக்கு அது தர்மம் இல்லைபோலத் தோன்றியது. ‘‘எல்லாத்துக்கும் ஒரு தர்மம் நியாயம் இருக்கில்ல சார். வராதியே வந்துட்டதா அட்னஸ் போடறது தப்பு சார்’’ எனப் பிடிவாதமாக தினமும் வந்தான்.

இவ்வளவு நியாயமாக இருந்தும் என்ன புண்ணியம்? புதிய ஹெட்மாஸ்டர் இப்படிக் காலை வாரிவிட்டாரே... எட்டாவது படித்தால் போலீஸ் வேலைக்குப் போகலாம் என்பது பொய்த்துப்போய்விட்டதே என்றெல்லாம் வருந்திக்கொண்டு நிழலான ஓர் இடத்தில் மாட்டைக் கட்டிவிட்டு உட்கார்ந்தான்.

மாணவர்களிடம் தலைமையாசிரியர் மணியைப் பற்றி விசாரித்தார். இந்தப் பள்ளியில் முதலில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.அப்போது மணி ஐந்தாம் வகுப்பு வரை படித்ததையும், பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எட்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் தரம் உயர்த்தப்பட்ட பிறகு மீண்டும் ஆறாம் வகுப்பில் வந்து சேர்ந்ததையும் சொன்னார்கள். அதாவது அவ்வப்போது வந்துபோவான். ஆறாவது, ஏழாவது படித்ததில் ஒன்றும் பிரச்னை இல்லை. பாஸ் மார்க் போட்டு எட்டாவது அனுப்பிவிட்டார்கள்.

மணிக்கு ஓர் ஆசை இருந்தது. எட்டாவதில் எப்படியாவது பாஸ் ஆகி பிரைவேட்டாக 10-ம் வகுப்பு எழுதி பெயில் ஆகிவிட்டாலும் போதும். அரசு உத்தியோகத்தில், ஏட்டாகச் சேர்ந்துவிடலாம் என்ற கனவு இருந்தது.

உண்மையில் போலீஸ் வேலை மட்டும்தான் அரசு உத்தியோகம் எனவும் அவன் நினைத்திருந்தான். யாரோ அப்படித் தப்பிதமாகக் கனவை வளர்த்திருந்தார்கள். மாணவர்கள் ஆளுக்கு ஒருவிதமாகச் சொன்னதில் முத்துசாமி புரிந்துகொண்டது இதைத்தான்.

தலைமை ஆசிரியர் யோசித்தார். இது சட்டப்படி சரியா, ஏற்கெனவே இருந்த ஹெட்மாஸ்டர் செயல் சரியானதா என்றெல்லாம் யோசித்தபடி இரண்டாம் பெல் அடித்து அடுத்த வகுப்பைத் தொடங்கப் போய்விட்டார். பழைய ஹெட் மாஸ்டர் இப்போது சோழவரத்தில்தான் இருந்தார். முத்துசாமி மனசு கேட்காமல் அவரிடமும் பேசிப்பார்த்தார். ‘‘விடுங்க சார், மூணு மாசம்தானே?’’ அவர் சொல்வது விசித்திரமாக இருந்தது.

பாலாம்பிகா டென்ட் கொட்டாயில் படம் பார்க்கப் போன ஹெட் மாஸ்டர், அங்கே மணியைப் பார்த்தார். ஊதிக்கொண்டிருந்த பீடியை மரியாதை நிமித்தம் கீழே போட்டு நசுக்கிவிட்டு, லுங்கியைச் சற்று இறக்கிவிட்டபடி வந்து நின்றான் மணி.

‘‘இன்ன சார், இன்னும் நாலு மாசம் கிது. அதுவரைக்கும் விட்டீங்கன்னா போதும் சார்'' என்றான்.

மணி என்பவனின் சித்திரம் கட் பனியன் போட்டு, லுங்கி கட்டி, கோடு போட்ட டவுசர் பாக்கெட்டில் பீடி, வத்திப்பெட்டி சத்தத்தோடு உலா வருபவன் என்பதாக ஆசிரியரின் மனதில் பதிந்திருந்தது.

மணி சொன்னபடி அவன் அப்பாவை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு வந்தான்.

ஒரு படி வேர்க்கடலை, கொஞ்சம் கிழங்கு, கொஞ்சம் முந்திரிக்கொட்டை என்று ஒரு பையில் போட்டு எடுத்து வந்திருந்தார் மணியின் அப்பா.

``சார் இதான் எங்களால முடிஞ்சது. ஒரு மூணு மாசம் விட்டுட்டீங்கன்னா போலீஸ் வேலைல சேர்த்துடுவான்'' என்றார் மணியின் அப்பா முனுசாமி.

``போலீஸ் வேலையில் சேருவது லேசு கிடையாது. படிச்சிருக்கணும். எட்டாவது சர்ட்டிபிகேட் மட்டும் போதாது. படிக்கத் தெரியணும்... எழுதத் தெரியணும்... வெறும் சர்ட்டிபிகேட் மட்டும் எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுவீங்க?'' என்று லாஜிக் பேசினார்.

``சார், படிச்சவனெல்லாம் என்ன சாதிக்கிறான்... எல்லாம் ஒண்ணுதான் சார்'' முனுசாமி ஏதோ நியாயத்தைப் பேசிக்கொண்டிருந்தார்.

ஹெட் மாஸ்டருக்கு அதற்குமேல் பேசப் பிடிக்கவில்லை. ``சரி இந்தப் பையை எடுத்துக்கிட்டு நீங்க கிளம்புங்க. நாளைக்கு வந்து டி.சி வாங்கிக்கங்க.''

யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தடாலென்று காலில் விழுந்து, ``ஐயா, எப்படிப் பேசறதுன்னு எனக்குத் தெரியாது. ஏதோ தெரியாம உளறிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க. இத வெச்சுக்கோங்க. எம் புள்ளைய சீட்டு கிழிச்சு அனுப்பிடுங்க... பரவாயில்ல'' என்றார் முனுசாமி.

முத்துசாமிக்கு உடம்பு நடுங்கிவிட்டது. வகுப்பில் அத்தனை மாணவர்களுக்கு முன்னால் ஒரு பெரியவர் தடால் எனக் காலில் விழுந்து கெஞ்சுவது பதறவைத்துவிட்டது. அவர் மனம் நெகிழ்ந்துபோனார். கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். அமைதியாக அவரையும் மணியையும் பார்த்தார்.

``சரி, தினமும் ஒரு மணி நேரமாவது கிளாஸில் இருக்கச் சொல்லுங்க... நான் கொஞ்சம் கொஞ்சம் கத்துக் கொடுக்குறேன். ஒருநாலு எழுத்து தெரிஞ்சுக்கறது நல்லது'' என்றார்.

``அது போதும் சாமி. டேய், டெய்லி அய்யா கிட்ட வந்து ஒரு மணி நேரம் கத்துக்கடா'' என்றார் பையனிடம். மணி தலையாட்டினான்.

ஆனால், தினமும் ஒரு மணி நேரம் என்பதை அவன் வேறு விதமாகப் புரிந்துகொண்டான்..

சிறுகதை: எமதர்மன்
சிறுகதை: எமதர்மன்

அவனுக்கு வசதிப்படுகிற ஒரு மணி நேரத்துக்கு அவன் வந்து போவான். மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு. அல்லது, காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு. அல்லது, மாலை வகுப்பு விட்ட பிறகு என்று ஏதாவது ஒரு நேரத்தில் வருவான். முத்துசாமியும் அதற்கு மேல் அவனை வளைக்க முடியாமல் அவன் போக்குக்குப் போக ஆரம்பித்தார்.

அவனிடம் ஒரே ஒரு நோட்டும் ஒரு பேனாவும் இருந்தன. சில சின்ன வாக்கியங்கள் சின்ன சின்ன சொற்றொடர்கள் எல்லாவற்றையும் எழுதிப் பழகச் சொன்னார். ஒவ்வொரு வார்த்தையிலும் குறைந்தது ஒரு பிழை இருந்தது. கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் கணிதம் என்று எல்லாமே சுருங்கிய வடிவில் எட்டாம் வகுப்புப் பாடத்தை உருவாக்கியிருந்தார் ஹெட்மாஸ்டர்.

மணியைப் பொறுத்தவரைக்கும் அதுவே மலைப்பான பாடமாக இருந்தது. ஒரு பாடத்தையும் நடத்தி முடித்து அதை மறுநாள் ஐந்து ஐந்து முறை எழுதி வரச் சொல்வார். அது கேள்வி பதிலாக இருக்கும் அல்லது ஒரு செய்யுளாக இருக்கும். மணிக்கு பெரும்பாலும் நேரம் இருக்காது. சிலநாள் எழுதி வருவான். ஒரு சில நாள் ``மன்னிச்சுக்கோங்க சார்'' என்பான். தினமும் வகுப்புக்கு வரும்போது சாருக்கு வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு கொண்டு வந்து தருவான். ஆரம்பத்தில் அதை லஞ்சம்போல பாவித்து வெறுத்துத் திருப்பியனுப்பினார். ஓரிரு வாரத்தில் அவனுடைய அன்பைப் புரிந்துகொண்டு வாங்கிக்கொள்ள ஆரம்பித்தார். ``இதெல்லாம் தேவையில்லடா... என் பேரைக் காப்பாத்துடா போதும்'' என்பார்.

எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஆரம்பித்தது. அந்தத் தேர்வை நம்பிக்கையோடு எழுதினான். இரண்டு மணி நேரத் தேர்வில் முழு நேரம் உக்கார்ந்து எழுதுவதற்கான வேலை இருந்தது.

பொதுவாகக் கேள்வித்தாள் கொடுத்ததும் அதில் இருப்பதையே பதில் எழுதும் தாளிலும் எழுதிவிட்டு வந்துவிடுவது வழக்கம். இந்த முறை ஒரு கேள்விக்கு பதில் எழுதும் துணிச்சலும் அவனுக்கு இருந்தது.

தேர்வு முடிவு எப்படி இருக்கும் என்பதில் அவனைவிட ஆசிரியருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த முடிவை... அவனுடைய முடிவைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது. ஆசிரியரைச் செங்கல்பட்டுக்கு மாற்றிவிட்டார்கள். மணி என்ன ஆனான் என்பதைப் பற்றி யோசிக்கக்கூட வாய்ப்பில்லாத தூரமாகிவிட்டது. அங்கிருந்து தொலைபேசியோ, வந்துபோக வாகன வசதியோ சரியாக இல்லை. ஒரு வசதி இருந்தது. போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பலாம். அது மணிக்குப் போய், பதில் வருமா என்றெல்லாம் யோசித்து, விதியின் மீது பழியைப் போட்டுவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார்.

அடுத்த ஆறு ஆண்டுகள் போனது தெரியவில்லை.

பிஎஃப் பென்ஷன் பணம் எல்லாம் போட்டு செங்கல்பட்டிலேயே ஒரு வீட்டை வாங்கி... இதோ அந்த வீட்டில்தான் ஈஸி சேரில் உட்கார்ந்திருந்தார். கனகா கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்.

``மணி எப்படியிருக்கான், ஏன் அவன் வரலே?'' என்றார் முத்துசாமி.

கனகா முந்தானையால் முகம் பொத்தி விசுக் என அழுதாள். ``அவர் இப்ப இல்லீங்க அய்யா.''

முத்துசாமி ஆறுதல் சொல்ல எத்தனித்தார். அதற்குள் அவர் மனைவி நிலைமையை உணர்ந்து அருகில் அமர்ந்து தோளில் பாந்தமாக சாய்த்துக்கொண்டார்.

``அவர் ஆக்ஸென்ட்ல செத்துட்டார். பையனுக்கு உங்க பேர்தான் வெச்சாரு. இந்த வாழ்க்கைக்கே நீங்கதான் வழிகாட்னீங்கன்னு சொல்லுவாரு. உங்களை ஒரு தடவையாவது நேர்ல பார்த்து நன்றி சொல்லிடணும்னு அவருக்கு ஆத்மா. அதான் வந்தேன்'' தனித்தனி விஷயங்களை ஒரே மூச்சில் சொன்னாள். அவள் பேசுவது பலவும் எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிப்பதுபோல இருந்தாலும் கணக்கு வாத்தியாரால் கூட்டிக்கழித்துப் புரிந்துகொள்ள முடிந்தது.

எட்டாம் வகுப்பில் மணி பாஸ் ஆகிவிட்டான். ஏதோ ஒரு குருட்டு முயற்சிதான். போலீஸ் வேலைக்கும் தேர்வானான் என்பதைப் புரிந்துகொண்டார்.

``நாங்க அம்பத்தூர்ல இருந்தோம். உங்கள மெரியா ஒரு வாத்தியார் ஊட்லதான் வாடகைக்கு இருந்தோம். உங்களைப் பத்தி அப்பப்ப சொல்வாரு. அந்த வாத்தியார் வூட்டு பத்திரத்தில ஏதோ சிக்கல். இன்னொரு கோஷ்டி வந்து அதை அவங்க வூடுன்னு வம்பு பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ரவுடிகள வெச்சி அந்த வாத்தியாரை மிரட்ட ஆரம்பிச்சாங்க.''

``உங்க வீட்டுக்காரர்தான் போலீஸ் ஆச்சே? என்னன்னு விசாரிச்சிருக்கலாமே?''

``விசாரிக்காமியா... விசாரிச்சாரு. உங்கள மெரியா அவரும் ஒரு வாத்தியார்னு அவருக்கு ஒரு இது. அவனுங்க மசியல. அந்தப் பட்டா பத்திரம் எல்லாம் பொய். மூணு பேருக்கு மாறிட்டாப்ல செட்டப் செஞ்சிருந்தாங்க. எம் புருஷன் வாத்தியாருக்கு எல்ப் பண்ணுறதுக்காகத் தெரிஞ்ச ஆபீஸர்கிட்டல்லாம் பேசிப் பார்த்தாரு. ஒரு கட்டத்துல டிஎஸ்பி கன்ட்ரோல்ல இந்த விஷயத்தைக் கொண்டு போய்ட்டாரு. அந்த ரவுடி கும்பலுக்கு ஆத்திரம். எங்க வூட்டுக்கார் மேல காண்டு ஆயிடுச்சு. ஒரு நா சைக்கிள்ல வீட்டுக்குத் திரும்பி வரும்போது லாரி அடிச்சுச் செத்துப் போய்ட்டாரு. அந்த ரவுடிப்பசங்கதான் காரணம்னு பேசிக்கிட்டாங்க. ஆனா அதுக்கு ஆதாரம் இல்லியே... என்ன பண்ணுறது சார்? ஏதோ அந்த வீடு வாத்தியாருக்குத்தான் முடிவாச்சு அது போதும்.''

''அடடா...'' என்றபடி குட்டி முத்துசாமியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார் ஹெட்மாஸ்டர்.

``கமிஷனர் ஆபீஸ்லயே எனக்கு வேல போட்டுக் கொடுத்தாங்க சார்'' என்றாள்.

``நல்லா இருங்கம்மா'' என்றார் முத்துசாமி.

``சரிங்க சார். நாங்க கிளம்புறோம்'' என்றபடி, அவள் தன் பையில் கொண்டு வந்திருந்த ஒரு சீப்பு வாழைக்காயையும் ஒரு வாழைப்பூவையும் எடுத்து ஹெட்மாஸ்டரின் மனைவியிடம் கொடுத்தாள்.

எருமைமாட்டின்மீது வந்து வணக்கம் சொன்ன மணியின் முகம் அவர் நினைவில் பனி போலப் படர்ந்து மறைந்தது.

- தமிழ்மகன்

(27.08.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)