
28.05.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
உள்வாசல் மரக்கதவுக்கு மேல் உள்ள நிலைப்பலகையில் ‘அனந்தநம்பிகுறிச்சி அழகர் சாஸ்தா துணை’ என்று மஞ்சள் நிறத்தில் எழுதியிருந்தது. அதை எழுதியது ரத்தினத்தின் சித்தப்பா பிச்சையா. தான் சின்னப்பையனாக இருக்கும்போது சிரட்டையில் மஞ்சள் பெயின்ட்டை பிரஷ்ஷால் தொட்டு பிச்சையா எழுதும்போது துணைக்கு சின்ன ‘ன’ போட்டு எழுதியதைத் தான் சுட்டிக்காட்டியதையும், “எல என்னைப் பெத்த அய்யா! நீ சொல்லலென்னா சித்தப்பா தப்பால்லா எளுதியிருப்பென்” என்று மீசை கன்னத்தில் குத்த, குனிந்து பிச்சையா தன் கன்னத்தில் முத்தியதும் இதோ இந்த நிமிஷத்தில் நடந்ததுபோல ரத்தினத்துக்குத் தோன்றியது.
அனிச்சை யாகத் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். கடைசி யாக வீட்டுக்கு எப்போது வந்தோம் என்று யோசித்துப் பார்த்தான். ஒற்றை மனுஷியாக இந்த வீட்டில் வசித்துவந்த ஆச்சி காலமானதற்குப் பிறகு ஒரே ஒரு முறைதான் வந்திருக் கிறான். அதுவும் ஏழெட்டு மாதங்களுக்கு முன்.

ரத்தினத்துக்கு இப்போது வீடு முழுவதும் ஆச்சி வாசனை அடித்தது. அது ஒருமாதிரி பழஞ்சீலையும், நெல் அவிக்கும் மணமும், குழம்புக் கொதியும் கலந்த ஒரு வாசனை. அறைவீட்டுக்குள் இருந்த பரணில் இருந்த பழைய அட்டைப் பெட்டிகள் மற்றும் பச்சை பெயின்ட் அடித்த டிரங்க் பெட்டியைக் கீழே இறக்கினான். டிரெங்க் பெட்டிக்குள்தான் சின்ன வயதில் பயன்படுத்திய பொருள்களை ஆச்சி பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். செப்பு சாமான்கள், பித்தளைப் பல்லாங்குழி, பிய்ந்த நிலையில் உள்ள ஒரு பஞ்சுத் தொப்பி, கைக்குழந்தைக்கு அணிவிக்கும் மல்துணி சட்டை, மருந்து புகட்டும் வெண்கலக் கிண்டி. ஒவ்வொன்றையும் தொடும்போது ஆச்சியின் விரல்களைத் தொடுவதுபோல இருந்தது. ஆச்சியின், அம்மையின் பழஞ்சீலைகள் இரண்டு. இரண்டிலும் ஆச்சி வாசம். அம்மையின் வாசத்தை நினைவுக்குக் கொண்டு வர ரத்தினம் முயன்றதே இல்லை. அப்பாவின் வாசமும்தான். எட்டு வயது வரைக்கும்தான் அவனுடன் அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு டி வி எஸ் 50-ல் வரும்போது கடையத்துக்கு அருகில் எதிரே வந்த லாரிக்கு அடியில் போய்ச் சிக்கிக் கொண்டார்கள். பொட்டலமாகக் கொண்டு போய்தான் எரிக்க வேண்டியிருந்தது.
அதன்பிறகு அவனுக்கு ஆச்சிதான் அம்மையும் அப்பாவும். ஆச்சிக்கு ரத்தினம்தான் உலகம். ரத்தினம் மட்டுமே. பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போய் விடுவதிலிருந்து, ஆற்றுக்குத் துணிகளைச் சுமந்துகொண்டு இவனையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டு போய்க் குளிப் பாட்டுவது என எப்போதும் அவனுக்கான எல்லாவற்றையும் அவள்தான் செய்தாள். எல்லாம் ஒரு பருவம் வரைக்கும்தான்.
நொறுங்குகிற நிலைமையில் இருந்த ஒரு பழைய புகைப்படத்தைத் துணிமணிக்குள் இருந்து எடுத்தான் ரத்தினம்.
ஹெர்குலிஸ் சிலம்புப் பள்ளிக்கூடம் ஆண்டுவிழாவில் சிலம்பு வாத்தியாருடன் கட் பனியனும், தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக, கையில் சிலம்புடன் மீசையை முறுக்கியபடி தான் நிற்கும் புகைப்படம். முப்பிடாதி அம்மன் கோயில் கொடையை ஒட்டி சப்பரம் ஊர்வலமாக வரும்போது வாத்தியாரின் முன்னிலையில் ரத்தினமும், பிற சிலம்புப் பள்ளிக்கூட மாணவர்களும் சிலம்பு சுற்றிக்கொண்டு செல்வார்கள். அவர்களில் ரத்தினம் மட்டுமே கல்லூரி மாணவன். மற்றவர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள். பால் பண்ணையில் வேலை செய்யும் திருமலையும், ரத்தினமும்தான் முன்னால் கம்பு சுற்றிச் செல்லும் மூத்த மாணவர்கள். ஆச்சிக்கு ரத்தினம் சிலம்பு படிக்கும் விஷயம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ரத்தினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“இந்தக் கூத்து வேற எங்கெயாவது உண்டுமா? காலேஜ்லயே பஸ்ட்டு மார்க்கு வாங்குதான். கூடவெ சண்டியன் மாரி சிலம்பு சுத்துதான்.இதெல்லாம் பாக்கணும்னு எனக்கென்ன தலையெளுத்தா?”

“இப்பம் ஏன் இப்படி கெடந்து கூப்பாடு போடுதே ஆச்சி?” என்று கேட்டு அவளை சமாதானப்படுத்த முயன்று முடியாமல் போனது. அவள் போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டு ஜன்னலிலிருந்து செண்பகவல்லி, “ஏ பெரியம்ம. உன் சத்தம் பிள்ளையார் கோயில் வரைக்கும் கேக்கு. கொஞ்சம் மெதுவாத்தான் பேசேன்” என்றாள். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆச்சியின் சத்தம் மேலும் அதிகமாக, ஆச்சியை சாந்தப்படுத்த ரத்தினம் பயன்படுத்திய ஆயுதம் ஒரு சொல்லாகவே இருந்தது. கடைசியில், “ஏளா நீ எனக்கு ஆச்சியா? எங்க அம்மைல்லா” என்றான். அதற்குப் பிறகு ஆச்சியிடம் இருந்து ஒரு சொல் கிளம்பவில்லை. அதனால்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தன் காதில் விழுந்த சிலம்பு வாத்தியாரின் மகள் விஷயம் குறித்து அவள் ஆரம்பத்தில் அவ்வளவு கவலை கொள்ளவில்லை.
ரத்தினம் சிலம்பு படிக்கும்போது வாத்தியாருக்குக் கூழ் கொண்டு வரும் மங்கையை நேருக்கு நேராகப் பார்த்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் வாத்தியார் ஆற்றங்கரைக்குப் போயிருந்தபோது வந்த மங்கை, சிலம்பு சுற்றிக்கொண்டிருந்த ரத்தினம் சுற்றி முடிக்கும் வரைக்கும் காத்திருந்து அவன் முன் வந்து நின்றாள். வியர்க்க விறுவிறுக்க மூச்சிளைக்க அவள் முகத்தை முதன் முறையாகப் பார்த்த ரத்தினத்தின் கண்களுக்கு அவள் செப்புச்சிலைபோலத் தெரிந்தாள். உடம்போடு இறுக்கமாகக் கட்டிய நூல்சேலையில் மங்கை ஒரு பலசாலிக்கான தோள் களுடன், ஒட்டிய வயிறும், நிமிர்ந்த நெஞ்சுமாக இருந்தாள். முகத்தில் மஞ்சள் மினுமினுத்தது. நெற்றியில் பெரிய சாந்துப்பொட்டு. கூர்நாசி. எச்சிலில் பொதுமிய உதடு. காதுகளில் சின்ன கவரிங் குண்டு. கழுத்தில் சின்னதும் பெரிதுமாக மேல்மார்பு வரை தொங்கிய பாசி மாலை. கூடவே கழுத்தை ஒட்டிய ஒரு கறுப்புக்கயிறு. கழுத்துக்குக் கீழே வியர்த்திருந்தது. ரத்தினம் பேசுவதற்காகக் காத்திருப்பதுபோல அவனுக்கு முன்னால் நின்று அவன் கண்களைப் பார்த்தாள். ரத்தினத்துக்கு தாகம் எடுத்தது. குரல் எழவில்லை. கஷ்டப்பட்டுக் குரலைத் தேடி எடுத்துத் தொண்டைக்குக் கொண்டு வந்தான்.
“அப்பா ஆத்துக்கு . . . ”
ரத்தினத்தை முழுசாகச் சொல்லி முடிக்க விடவில்லை மங்கை.
“நான் ஒன்னைப் பாக்கத்தான் வந்தென்.”
சொல்லிவிட்டு அவள் கண்கள் சிரித்தன. ரத்தினத்துக்கு பூமி நகர்ந்தது. மங்கைக்குப் பின்னால் தெரிந்த மரங்கள் வேகமாக ஆடின. வியர்வை வற்றி உடம்பு லேசாகக் குளிர்ந்தது.
“ஏ கோட்டி. நெதமும் ஒன்னப் பாக்கத்தான் வாரென். இன்னைக்கு உனக்கும் சேத்து கூளு கொண்டாந்திருக்கென். போய்க் குடி.”
ஹேண்டில் பாருக்கும் சீட்டுக்கும் குறுக்கே கம்பி வைத்த ஆம்பிளை சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். சைக்கிளில் ஏறி அழுத்திச் சென்றவள் ஒரு முறை திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றாள்.

ஆழ்வார்குறிச்சி மாதிரியான சின்ன கிராமத்தில் அவ்வளவு எளிதாக ஒரு பையனும் பெண்ணும் சந்தித்துப் பேசிவிட முடியாது. ஆனாலும் ரத்தினமும், மங்கையும் காதலர்களாகிவிட்டிருந்தனர், ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாம லேயே. சிலம்புப் பள்ளிக்கூடத்தில் அதிக நேரம் பார்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அங்கு தினமும் பார்க்க முடியும்.
நீண்ட நேரம் பார்ப்பதாக இருந்தால் கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும். பரமகல்யாணி கோயிலில்கூட உள்ளூர் ஆட்கள் வருவார்கள். இன்னும் கொஞ்சம் அழுத்திச் சென்றால் சிவசைலம் கோயில். அங்கு ரத்தினமும் மங்கையும் பார்த்துக்கொள்ள கொஞ்சம் தோதாக இருந்தது. அதற்குமே ஒரு முடிவு வந்தது. பிரதோஷ அர்ச்சனை பிரசாதத்தைக் கொடுக்க வீட்டுக்கு வந்த கைலாச குருக்கள் ஆச்சியின் காதுகளில் ஓதிவிட்டுச் சென்றார்.
“ஒங்க பேரன் கோயிலுக்கு வரும் போதெல்லாம் சிலம்பு வாத்தியார் மக மங்கை யர்க்கரசியும் வாராம்மா. ஒரு தடவகூட தப்பினதே இல்ல. ஒங்ககிட்ட நான் இதச் சொல்லாம இருக்கக்கூடாதுல்லா.”
அதற்குப்பிறகு சிவசைலம் கோயிலுக்குப் போவதாக ரத்தினம் சொல்லும்போதெல்லாம் ஆச்சி தானும் உடன் வருவதாகச் சொன்னாள். அதற்கு மேல் ரத்தினமும் அதை வளர்க்காமல் விட்டான். அதற்குப் பிறகு இது எங்கு வெடித்தது? பண்டிதன் கிணற்றில்தான்.
பண்டிதன் கிணறு அவ்வப்போது மூடப்பட்டிருக்கும். பிறகு தண்ணீருக்காக மூடியை அகற்றி விடுவார்கள். ஊரிலுள்ள கிணறுகளில் ஏனோ பண்டிதன் கிணற்றில்தான் தண்ணீர் அதிகம்.
“அந்தக் காலத்துல பண்டிதன் கிணத்தை யொட்டித்தான் பள்ளிக்கூடமே இருந்திருக்கு. விக்கிரமசிங்கபுரத்திலேருந்து யாரோ ஒரு வேதக்காரர் வந்து கிணத்தையொட்டி பிள்ளேள உக்கார வச்சு பாடம் சொல்லிக்கு டுத்துக்கிட்டு இருந்திருக்காரு. அதுபோக நல்ல நாள் பாத்துச் சொல்ல, மண்டையிடி காய்ச் சலுக்கு மருந்து குடுக்க, அரசாங்கத்துக்கு மனு எளுதிக் குடுக்கன்னு எல்லாத்துக்கும் அவர்தான். படிச்ச ஆளுல்லா. அதான் எல்லாருக்கும் அவர் மேல அப்பிடி ஒரு மதிப்பு. அவர் பேரு ஒருத்தருக்கும் தெரியாது. எல்லாரும் அவரைப் பண்டிதர்னு தான் அடையாளம் சொல்லியிருக்காங்க. வளக்கமா பொளுது சாயறதுக்குள்ளெ கெளம்புற ஆள ஒருநாளு ராத்திரி வரைக்கும் அங்கென உக்காந்து என்னமோ எளுதிக்கிட்டு இருந்திருக்காரு. அன்னைக்கு பௌர்ணை. ஊரு பூரா லைட்டு போட்ட மாரி நெலா வெளிச்சம். பண்ணையார் வீட்டு வண்டிக்காரன் செல்லையா பொண்டாட்டி தண்ணி கோர கெணத்துக்கு வந்திருக்கா. அவ போட்ட சத்தத்துல ஊரே ஓடி வந்து, கெணத்துல மொதந்துகிட்டிருந்த பண்டிதரைத் தூக்கி வெளியே போட்டுது. இந்தக் கெணறு மொதல்ல குடிச்ச உயிரு. அப்புறம் பேரும் பண்டிதன் கெணறாயிட்டு. இதுவரைக்கும் சின்னதும், பெருசுமா நெறைய உயிரக் குடிச்சுட்டு. ஒங்க சித்தப்பன் பிச்சையா உயிரையும் சேத்துதான்.”
இந்தக் கதையை பால் பண்ணையில் வேலை பார்க்கும் கிட்டுணக் கோனார் சொல்லிக் கேட்டிருக்கிறான் ரத்தினம். பண்டிதன் கிணற்றில் கிட்டுணக்கோனாரின் பசுமாடு விழுந்ததை விதி என்றுதான் சொல்ல வேண்டும். சிலம்பு வாத்தியாருடன் முதலில் கிணற்றுக்குள் துணிந்து இறங்கியது ரத்தினம்தான். சுற்றிலும் ஜனங்கள். கனத்த கயிறுகளைக் கிணற்றை நோக்கி வீசினார்கள். கிணற்றுக்கு எதிரே உள்ள மண் திண்டில் ஆளோடு ஆளாக நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த மங்கையின் பார்வை ரத்தினத்தை மேலும் உற்சாகப்படுத்தியது. அதனால்தான் அவன் கிணற்றில் இறங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும். சட்டையில்லாத உடம்புடன் கிணற்றுக்குள் வீசப்பட்ட கயிற்றைத் தன் உடம்பிலும், கைகளிலும் சுற்றிக் கொண்டான் ரத்தினம். மற்றொரு கயிறு சிலம்பு வாத்தியாரின் உடம் பிலும் கைகளிலும். வாத்தி யார்தான் நீருக்குள் இறங்கி பசுவின் கழுத்திலும், பின் அடிவயிற்றிலும் கயிற்றைக் கட்டினார். அடிவயிற்றில் கட்டும் போது மிரண்டு நகர்ந்த பசுவைப் பிடித்துக் கொள்ள ரத்தினமும் நீருக்குள் சென்றான். கிணற்றுக்குள்ளே ஒற்றைக் கற்களாக இறங்கும் படிகளில் ஆளுக்கொரு படியில் ஆட்கள் நின்றார்கள். தேர் இழுப்பதுபோல இழுத்தார்கள். தேர் இழுக்கும்போது கேட்கும் ஜனங்களின் சத்தம்தான் அங்கும் கேட்டது. வயதான கிட்டுணக்கோனார் கிணற்றின் விளிம்பருகே நின்று, “லெச்சுமி லெச்சுமி” என்று அழுது கொண்டிருந்தார். “பாட்டையா அளாதீரும். கயத்தை மாட்டியாச்சு. இப்பம் வந்திருவா ஒம்ம லெச்சுமி” என்று யாரோ சொன்னார்கள். முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி என்று எல்லோரும் முக்கி இழுத்தார்கள். சிலம்பு வாத்தியாரும், ரத்தினமும் பசுவுக்கு அடியிலிருந்து உந்தித் தள்ளினார்கள். ஓ ஓ வென சத்தம். இந்தா, தூக்கு, விடாதே, வந்துட்டு, கொஞ்சம்தான்டே, ம்க்கூம், ஏல கால அகட்டி நின்னு இளு, ஒரு பக்கமா சாய்க்காதீங்கலெ சவத்துக் . . . எல பொம்பளையாள் இருக்கு . . . ம்ம்மா என்று லெச்சுமியின் சத்தம் கிட்டுணக் கோனாரின் காதுகளில் கேட்கவும் அவர் சந்தோஷத்தில் அழுதபடியே நிலத்தில் சாய்ந்தார். அவரைத் தூக்கி அப்புறப்படுத்தினார்கள். “ஏட்டி. கொஞ்சம் தண்ணி கொண்டா...” மங்கையின் கண்கள் ரத்தினத்தைத் தேடின. இன்னும் ரத்தினம் கிணற்றுக்குள்ளிருந்து வெளியே வரவில்லை. பசுவை வெளியே கொண்டு வந்தார்கள். மங்கை திண்டிலிருந்து குதித்துக் கிணற்றை எட்டிப் பார்த்தாள். உள்ளே சோர்ந்திருந்த தன் தகப்பனாரை ரத்தினம் தாங்கிப் பிடித்து மேலே கொண்டு வர முயன்றுகொண்டிருந்தான்.
“என்னைப் பெத்த அய்யா” ஊரையே கிழிக்கும் கூக்குரலுடன் ரத்தினத்தின் ஆச்சி மார்பிலும, தலையிலும் அடித்தபடி பண்டிதன் கிணற்றை நோக்கி ஓடி வந்தாள்.
“என் மக்கள நான் பறிகொடுத்தது போதாதா?” என்றபடி அவள் கிணற்றருகே வரவும், ரத்தினத்தின் தோள்களில் சாய்ந்திருந்த தன் தகப்பனாரைத் தன் தோளுக்கு மாற்றினாள் மங்கை.
ரத்தினத்தின் ஜாதகத்தைக் கையில் எடுத்தாள் ஆச்சி. இனி தாமதிக்கலாகாது. அவன் இந்த ஊரிலும் இருக்க வேண்டாம். அவனுக்குத் திருமணம் செய்து இந்த ஊரை விட்டே விரட்டி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இந்தமுறை அவளை ‘அம்மை’ என்றழைப்பது வெறும் தந்திரமாக இருக்கும் என்பதைத் தானே உணர்ந்ததனால் ரத்தினம் அதைச் சொல்லவில்லை. ஆச்சி கிட்டத்தட்ட ஓர் அரக்கிஆகியிருந்தாள். கட்டிய, பெற்ற உயிர்களை இழந்த துயர் அவளை இரும்பாக்கியிருந்தது. தான் சிலம்பு வாத்தியாரின் மகளைத்தான் கட்டுவேன் என்று உறுதியாகச் சொன்ன ரத்தினத்திடம் அவள் பதிலேதும் சொல்லவில்லை. ரத்தினத்தை உட்கார வைத்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்காக கல்லிடைக்குறிச்சி ஆசாரியிடம் தான் சொல்லிச் செய்து வாங்கிய மர ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு தோட்டத்துக்குப் போனாள். கொடியில் காய்ந்துகொண்டிருந்த சேலையை உருவிக் கையில் எடுத்துக்கொண்டாள். வேப்ப மரத்துக்கு முன் அதைப் போட்டு அதில் அவள் ஏறி நிற்கவும், ரத்தினம் ஓடி வந்து அவள் காலைக் கட்டிக்கொண்டான்.
“இப்பம் காலப் புடிக்கதுக்கு நீ இருக்கெ. நாளைக்கு நீ வெளியெ போயிருக்கும் போது நிச்சயம் தொங்கிருவென்” என்றாள்.
ரத்தினம் புகைப்படத்தைக் கையில் வைத்தபடியே படுத்துக் கிடந்தான். வெளியே இருட்டியிருந்தது.
அதற்குப்பிறகு தனக்கு நடந்த திருமணம், திருமணத்துக்குப் பிறகு கிடைத்த ஆசிரியர் வேலை, முதல் மகள் பிறந்தது, இரண்டாவது மகன் பிறந்தது, ஆச்சியிடம் கொண்டு வந்து தன் பிள்ளைகளைக் காட்டியது. முதன் முறை யாக தான் பார்த்த ஆச்சியின் சந்தோஷமான அழுகை. இத்தனைக்கும் மத்தியில் மங்கையைப் பற்றிக் கிடைத்த தகவல்கள்.
“நீ உங்க ஆச்சிக்கு பயந்து ஊர விட்டே போயிட்டே. சிலம்பு வாத்தியாருக்குப் புத்து நோய். ஆளே உருகிபோயி செத்தாரு. அவரு பொண்டாட்டிக்கு ஒரு கூறு கெடயாது. இந்தப் பிள்ளையை ஒருத்தனும் கெட்ட வரல. பீடி சுத்துச்சு. சினிமாக் கொட்டகை கேன்டீன்ல தட்டு களுவுச்சு. அங்கெ னதான் நம்ம சொஸைட்டி நடராஜன் மகன்கூட பளக்கம் வந்திருக்கு. அந்த செறுக்கியுள்ளையவிட இந்தப்பிள்ளை அஞ்சாறு வயசு மூப்பு பாத்துக்கோ. வயித்துல வாங்கி, அப்புறம் அந்தப் பய அதைக் கலைச்சு... அதுக்குப் பெறவும் கெட்ட மாட்டென்னு சொல்லி என்ன கதைல்லாம் நடந்துட்டுடே. இவ்வளவும் ஆன பெறகு நாங்க எல்லாருமா போயி நடராஜன்கிட்ட பேசிக் கெட்டி வச்சோம். இப்பமும் அவன் சொத்துல பத்து பிசா குடுக்க மாட்டென்னுட்டான். மாசா மாசம் அவன் பொண்டாடி என்னமோ படியளக்கா. வண்டி ஓடுது.”
ஆச்சி செத்த வீட்டில் திரவியம்தான் சொன்னார். ஆச்சியின் சாம்பலைக் கரைத்து விட்டு ஆற்றிலிருந்து வரும்போது, வெயில் சூடு தாங்காமல் தரையில் குதித்துக் குதித்து நடந்து வந்துகொண்டிருந்தான் ரத்தினம். பிள்ளையார் கோயிலுக்கு எதிரே உள்ள செட்டியார் கடையில் சீயக்காய் வாங்கிக்கொண்டிருந்த மங்கையை கவனித்தான். ஒரு கணம் ரத்தினத்தைப் பார்த்த மங்கை, செட்டியார் கடைக்கு முன் வெயிலுக்குத் தொங்க விட்டிருந்த சாக்குக்குள் தன்னை மறைத்தபடி திரும்பிக்கொண்டாள்.

ரத்தினத்துக்கு தான் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. காலை யாரோ பிடிப்பது போல உணர்ந்தான். கண்களைத் திறக்க முடியவில்லை. கண்ணாடி வளையல்களின் சத்தம் துல்லியமாகக் கேட்டது. முப்பிடாதி அம்மன் கோயிலுக்குள் அடிக்கும் பூவும் எண்ணெயும் கலந்த வாசத்தை நுகர்ந்தான். சிறிது நேரத்தில் கால்களிலிருந்த அழுத்தம், தொடைக்கு ஏறி, மார்பில் படர்ந்து முழுவதுமாகத் தன் உடம்பின் மேல் சாய்ந்தது. கண்களை இப்போது திறக்க முடிந்தது. முகத்துக்கு நேரே பெண் முகம். தெரிந்த முகம். தெரிந்த வாசம். தெரிந்த மஞ்சள். தெரிந்த பெரிய சாந்துப் பொட்டு. கழுத்தை ஒட்டிய கறுப்புக் கயிறு. பாசி மாலையைக் காணோம். காதில் கவரிங் குண்டுக்கு பதிலாக பொட்டுத் தோடு. எச்சிலில் பொதுமிய அதே உதடு. ரத்தினத்தின் உதடும் எச்சிலில் பொதுமியது. அதே எச்சிலில். “வேற ஒண்ணும் வேண்டாம். பிள்ள குடு. என்கிட்ட தங்கல” காதைக் கடித்தபடி சொன்னாள். எதையோ சொல்ல வாயெடுத்தான். சொல்ல விடாமல் வாயெல்லாம் எச்சில் வழிந்தது. ஆவேசமான சிலம்பு சுற்றல். சட்டையைக் கழற்றிவிட்டுக் கிணற்றில் இறங்கினான். அடிவயிற்றில் கைகொடுத்து மேலே தூக்கினான். உந்தித் தள்ளினான். இன்னும் இன்னும். இந்தா முடிஞ்சுட்டு. அவ்ளோதான். காலை அகட்டி நின்னு இளு. ஏ தண்ணி கொண்டா...
கதவை யாரோ தட்டிக்கொண்டே இருந்தார்கள். கண்ணைத் திறக்கும்போது பின் வாசலிலிருந்து வெளிச்சம் வீட்டுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. கதவைச் சாத்தாமல் படுத்திருக்கிறோமா?! எப்போது தூங்கினோம். மெல்ல மெல்ல நினைவு வந்தது. இதற்குள் கதவு தட்டும் சத்தம் வலுவானது. கூடவே “ஏ ரத்தினம். என்ன இன்னுமா உறங்குதெ? கதவைத் தொறடே. ஆத்துக்குப் போணும்லா.”
“இந்தா வந்துட்டென் மாமா.”
தெரு ஏனோ வெறிச்சோடியிருந்தது. ரத்தினத்தைவிடவும் திரவியம் வேகமாக நடந்தார். பிள்ளையார் கோயிலில் பூஜை மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கடக்கும் போது திரவியம் செருப்பைக் கழற்றி, தோளில் இருந்த துண்டை இறக்கி முட்டு மடங்காமல் நாசூக்கான தோப்புக்கரணம் போட்டுத் தலையில் குட்டிக்கொண்டார்.

ரத்தினம் தோப்புக்கரணம் போடாமல் பிள்ளையாரைக் கும்பிட்டான். எதிரே உள்ள செட்டியார் கடையில் சாக்கு தொங்கவில்லை.
வெயில் ஏறும் போதுதான் சாக்கை இழுத்து விடுவார். கடையில் செட்டியாரின் பேரன் உட்கார்ந்திருந்தான். சாமான் வாங்க யாரும் வரவில்லை. செருப்பை மாட்டிக்கொண்டு நடக்கும்போது ஏனோ திரவியத்தின் நடைவேகம் குறைந்திருந்தது. ஒருவேளை ரத்தினத்துக்காக மெதுவாக நடக்கிறாரோ என்னவோ.
ஒரு நிமிடம் தயங்கி பின் திரவியத்திடம் கேட்டான் ரத்தினம்.
“சிலம்பு வாத்தியார் மக மங்கை எப்படி இருக்கா மாமா?”
“புருசன் பொண்டாட்டி சண்ட. போய்ச் சேந்துட்டா.”
ரத்தினம் அதிர்ந்துபோனான்.
“என்ன மாமா சொல்லுதீங்க, எப்போம்?”
“போன வாரம் நீ வந்திருந்தா தெரிஞ்சிருக்கும். இன்னும் பதினாறு களியல.”
“எ... எப்படி?”
“எப்படின்னா என்னத்தச் சொல்ல... பண்டிதன் கெணத்துல குதிச்சுட்டா!”
- சுகா
(28.05.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)