Published:Updated:

சிறுகதை: பலிபீடம்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

அவனைவிடக் கொடூரமானதுபோல அந்த ரோந்து வண்டி.

``இங்க பாரு… கடைசியா சொல்றேன். இப்பவே இந்த நிமிஷமே இந்த இடத்துல இருந்து என்னைக் கூட்டிட்டுப் போய் வீட்ல விட்ரு. இல்லாட்டி நடக்குறதே வேறயாகிடும்.’’

``ஏய் எதுக்கு இப்ப சத்தம் போடுற… உன் லைஃப்ல இப்படியெல்லாம் யாருமே உன்ன அப்ரோச் பண்ணதில்லையா... சும்மா சொன்னதையே சொல்லிட்டிருக்க?’’

``என்னைக் கொண்டுபோய் வீட்ல விடப்போறியா இல்லையா?’’

மூன்றாம் பிறை வானம். லேசான வெளிச்சம் கொண்ட இரவு. ஒரு பேச்சுக்குக்கூட தன் கிளைகளை அசைத்து நானிருக்கிறேன் துணைக்கு என்று தைரியம் கொடுக்காத மரங்கள் கொண்ட நீண்ட கரிய சாலை அது.

`வொய்ங்…வொய்ங்…வொய்ங்…’

தூரத்திலிருந்து போலீஸ் ரோந்து வாகனம் வருவது சன்னமாகக் கேட்டது.

சட்டெனச் சுதாரித்தவனாய், எனக்குப் பின்பக்கமாக வந்து நின்றுகொண்டான்.

``கொஞ்ச நேரம் அப்படி வந்து ஓரமா நில்லேன். ப்ளீஸ்’’

``முடியாது. வீட்ல கொண்டுபோய் விடு.’’

``உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களாடி?’’

என் வாயைப் பொத்துகிறான். அவனுடைய இன்னொரு கை என் இடுப்பை வளைத்துப் பிடித்திருந்தது. நான் நெளிகிறேன். அவன் செய்கை எனக்குள் அச்சத்தையும் அளவுகடந்த கோபத்தையுமே கொடுக்கிறது.

சிறுகதை
சிறுகதை

`வொய்ங்…வொய்ங்…வொய்ங்…’

மீண்டும் அந்த ரோந்தின் சத்தம் கொஞ்சம் அருகில் வருவதுபோல் இருக்கிறது. சத்தத்தின் டெசிபல் அளவு கூடக் கூட கொஞ்சம் நல்லதாகப்பட்டாலும் இவன் இறுக்கிப்பிடித்து வைத்திருக்கும் கையையும் வாயில் பொத்திய கையையும் எடுத்துவிட்டு என்னை விடுதலை செய்யவேண்டுமே. இந்த ஆண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை உடல் வலிமை? இத்தனைக்கும் இவன் என்னைவிட ஏழெட்டு வயது குறைவானவனாகத்தான் இருக்கவேண்டும். ஆனாலும் அவன் தோள்களையும் தடிமனான கைகளையும் பார்த்தால் அவன் ஒரே அடி போட்டால் போதும். அநேகமாய் அதன்பிறகு அவன் கொலைக் கேஸில் உள்ளே போகக்கூடும். அவன் கொலைக் கேஸில் உள்ளே போவதைவிட எனக்கு என் உயிர் முக்கியம். வீட்டில்வேறு மகள் உறங்கிக்கொண்டிருப்பாள். ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவதாக அவளிடம் போனில் சொன்னதாக ஞாபகம்.

`` குட்டிம்மா… மம்மி வர இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகும் போல, நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன். நீ ஆன்லைன்ல புக்பண்ணி சாப்ட்டுக்கோ… ஒரு ஒன் ஹவர்ல வந்துடுவேன்’’

``ம்ம்ம் ஓகே மீ… பை’’

``ம்ம்ம்… ஓகே மீ… பை ’’ – என்பது மட்டும் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நேரம் பொண்ணு என்ன செய்கிறாளோ தெரியவில்லை. இந்த அரைமென்டலிடம் வந்து சிக்கிக்கொண்டோமே என்கிற கவலை. இருந்தாலும் என் புத்தியைத்தான் செருப்பால் அடிக்கவேண்டும். இவனையெல்லாம் போய் நம்பி வந்தேனே என்று பலமுறை கன்னத்தில் அறைந்துகொள்கிறேன். அந்த இருட்டின் சாலையில் சில மஞ்சள் பூக்கள் உதிர்ந்திருப்பதைப் பார்க்க மட்டும் என் கண்களைப் பொத்தாமல் விட்டுவைத்தானோ என்னவோ?

`வொய்ங்… வொய்ங்…வொய்ங்..’

எனக்கு அப்போது அழவேண்டும்போல் இருந்தது. அழுவதைப் பார்த்தால் ஒருவேளை நான் பயந்துவிட்டதாக அவன் நினைத்துக் கொள்ளலாம்.

அவனைவிடக் கொடூரமானதுபோல அந்த ரோந்து வண்டி. தடிமாடுபோல ஒரு பல்சர் வண்டி அந்தச் சாலையில் பார்க்கிங் செய்தமாதிரி நிறுத்தப்படாமல் ஏதோ அவசரத்துக்கு விட்டிருப்பதுபோல் இருப்பதைக்கூட கவனிக்காமல் அந்தச் சாலையில் சிதறிக்கிடந்த மஞ்சள் பூக்களையெல்லாம் மிகக் கொடூரமாக நசுக்கிவிட்டுப் போயிருந்தது. இனி தொண்டை கிழியக் கத்துவதில் பிரயோஜனமில்லை. சாதுர்யம் முக்கியம் எனப்பட்டது. ரோந்தின் சத்தம் குறைந்ததும் மீண்டும் வாயில் இருந்த கையை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேட்டான்.

``ப்ளீஸ் ஒரே ஒருமுறை ஓகே சொல்லேன். நாம இந்த ஒரு நைட் மட்டும் இங்க இருந்துட்டுப் போயிடலாம்.’’

எனக்கு அப்போது அழவேண்டும்போல் இருந்தது. அழுவதைப் பார்த்தால் ஒருவேளை நான் பயந்துவிட்டதாக அவன் நினைத்துக்கொள்ளலாம். அவனை எதிர்க்கிற வலிமை என் உடலில் இல்லை. மிகத்திண்ணமாக என் மனவலிமையை நம்புகிறேன். அவனிடம் அன்பாகப் பேச்சுகொடுக்க நினைக்கிறேன்.

``நான் சொன்னா… கேட்பேதானே… என்னை எங்க வீட்ல விட்றேன்பா. நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூடப் பாக்கல. ப்ளீஸ்… உன் அக்காதானே நானு...’’

அவன் தன் வாயைப் பொத்திக்கொண்டு அடக்க முடியாமல் சிரிக்கிறான். ஒருவேளை அவன் அந்த வாயை, பொத்தாமல் சிரித்திருந்தால் பெருஞ்சப்தம் கேட்டிருக்கலாம். அது, அந்தப் பக்கமாக வந்த ஏதோ ஒரு மரமண்டையின் காதிலாவது விழுந்து திரும்பிப்பார்த்து என்னவென்று கேட்க வைத்திருக்கலாம்.

ஓர் இரவு. மயான அமைதி. மயக்கத்தின்று விடுபடாமல் குறி வைத்துத் தாக்கத் துடிக்கும் ஒருவன். சிந்தாமல் சிதறாமல் சேதாரமில்லாமல் பத்திரமாய் வீடுபோய்ச் சேரவேண்டும் என்கிற பெரிய பயம் எனக்கு. பெரும் குழப்பத்திற்குப் பின் பேச ஆரம்பிக்கிறேன்.

``கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கவா?’’

``ஒன்னும் அவசரமில்ல… நீ யோசிச்சுக்கூடச் சொல்லு ஆனா நல்ல பதிலா சொல்லு.’’

மரத்தடியில் கல்திட்டுபோல ஒன்று இருந்தது. அங்குபோய் உட்கார்ந்துகொண்டேன்.

``உனக்கு இப்ப என்னதான் வேணும்?’’

``ஹாஹா… அதான் சொல்றேன்ல கொஞ்ச நேரம் சப்போர்ட் பண்ணு போயிடலாம். யோசிச்சுப் பாரு. உனக்கும் இதெல்லாம் கொடுக்க யார் இருக்கா? ம்ம்ம்ம்… ஐயம் ஸாரி மே பீ இருக்கலாம். அதுல ஒருத்தனா என்னையும் நினைச்சுக்கலாம்ல.’’

``அடச்சீ வாயை மூடு. நான் யாரோடவாச்சும் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு உன்கிட்ட எப்பயாச்சும் சொல்லியிருக்கேனா? எதை வச்சு இதெல்லாம் கேட்குற?’’

``இப்ப என்ன தப்பா கேக்குறேன். நீ ஒரு சிங்கிள் பேரன்ட் தானே? கண்டிப்பா உனக்கு ரிலேஷன்ஷிப் இருக்கும். அப்படி எதுவுமே இல்லாட்டி இப்ப நான் கூப்ட்ட உடனே ஓகேனு சொல்லியிருப்ப. உனக்கு செக்ஸ் பார்ட்னர் இருக்குறதாலதான் என்னை அவாய்டு பண்ற.’’

``ச்சை... என்ன பேச்சு இதெல்லாம்… அப்புறம் என்ன டேஷுக்குக் கல்யாணம் ஆன நீ என்கூட செக்ஸுக்கு அலையுற? ஒருவேளை உன் பொண்டாட்டி உனக்கு கம்பெனி தரலையோ?’’

``ஏய் எனக்கு அவகிட்ட எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா நீ இதுக்கெல்லாம் ஒத்துப்பேன்னு பாத்தா இவ்ளோ மொரண்டு பிடிக்கிறே?’’

அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை. நான் பாட்டுக்கு நடந்து போய் யாரிடமாவது உதவிகேட்டு அங்கிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தாலும் இவன் விட்டபாடில்லை. கையைப்பிடித்து இழுக்கிறான். சற்று எழுந்து நின்றவள் மீண்டும் அந்தக் கல்திட்டின் மீதே அமர்ந்துகொள்கிறேன்.

பக்கத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ரிசார்ட் இருக்கிறதாம். இந்த இரவுக்கு அங்குதான் தங்குவதற்காகப் புக் செய்திருக்கிறானாம்.

சிறுகதை: பலிபீடம்

“கொஞ்சநேரம் கம்பெனி கொடேன். வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுடறேன்” என்கிறான். அந்த ரிசார்ட்டில் இறங்கும்போது நான் முழுச் சம்மதத்துடன் இறங்கவேண்டும் என நினைக்கிறான். ஒருவேளை அங்கு போன பின் நான் ஏதாவது வம்பில் மாட்டி விடுவேன் என்று பயப்படுகிறானா எனத் தெரியவில்லை. அதனால் அங்கு போகும் வழியில் இருக்கும் இந்தப் பொட்டல் காட்டில் நிறுத்தி வைத்துக்கொண்டு இத்தனை இம்சிக்கிறான்.

இந்த நிமிடம் இங்கு வந்த நொடியை மட்டும் மீண்டும் ஒருமுறை யோசித்துப்பார்க்கிறேன். ``மம்மி ஒன் ஹவர்ல வந்துடறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போனை வைக்கும்போது அவனுடன் ஒரு ஹோட்டலில் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்து இருக்கையில் தான் அமர்ந்து கொண்டிருந்தான்.

`` சொல்லு ... சஞ்சய்! ஃபாரின்ல போயி செட்டில் ஆகப்போறே. ஜாப் கிடைச்சதுமே முதல் ட்ரீட்டே எனக்குத்தானா?’’

``பின்ன, சும்மா பேசலாம்னு கூப்ட்டா நீயெல்லாம் வரவே மாட்டே. அதான் ட்ரீட் கொடுக்கணும்னு கூப்ட்டேன். இப்ப மட்டும் வந்துட்ட பாத்தியா?’’

``அய்யோ டேய்… ட்ரீட் தரேன்னு சொன்னதுக்காகல்லாம் வரல நான். உன்னோட கல்யாணத்துக்குக்கூட நான் வரலை. ஒரே அப்பார்ட்மென்ட்ல எதிரெதிர் வீட்ல இருந்தாலும் நாம ரொம்ப பேசிக்கிட்டதே இல்லல. நம்ம காம்பவுண்ட்ல ‘ப்ளட் டொனேட்’ கேம்ப் நடத்துனப்போதான் உன் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சது. நான் வீடு மாத்திட்டு வேற ஏரியா வந்ததுல இருந்து உன்கூட பேசணும்னு எப்பவாச்சும் நினைப்பேன்... பட்… வொர்க் பிஸி. ஸாரிப்பா. ஆனா அதுக்காக ஏதோ ட்ரீட்டுக்கு ஓடிவந்த சாப்பாட்டு ராமின்னு நினைச்சிக்காத… புரியுதா?’’

``அய்யோ… நீயெல்லாம் தனியா யார் கூப்ட்டாலும் வர மாட்டே. நான் கூப்ட்டதும் வந்துட்டே. அதுலயே தெரியுது. உனக்கு என் மேல எவ்ளோ அன்பு இருக்குன்னு.’’

``அன்பு… அக்கறை…மரியாதை… எது வேணும்னாலும் சொல்லலாம். அப்புறம் ஃபர்ஸ்ட் ட்ரீட் கொடுக்குற அளவுக்கு நான் முக்கியமா?’’

``இல்லையா பின்ன... காட் பிராமிஸ், நம்பு!’’

ட்ரீட் சம்பிரதாயம் முடிந்ததும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தோம்.

``சரி.. நீ கிளம்பு. நான் கேப் பிடிச்சுப் போய்க்கிறேன்.’’

``எதுக்கு கேப். நான் உங்க ஏரியா பக்கம்தான் போறேன். டிராப் பண்றேன்.’’

எனக்கும் அவனிடத்தில் பெரிதாகத் தயக்கம் இல்லை.

``ம்ம்ம்.. சரி போவோம்.’’

வண்டியில் ஏறி உட்கார்ந்த வேகத்தில் அவன் பல்சர் கொஞ்சம் வேகமெடுக்கத் தொடங்கியது. பிடிமானத்துக்காக அவன் தோளில் கைபோட்டுக் கொண்டது எனக்கு அப்போது தவறாகவே தெரியவில்லை. ``நான் உனக்கு ரூட் சொல்றேன்’’ என்றேன்.

சிக்னலில் திரும்பிய பிறகு, ``ஒரு ரெக்வெஸ்ட்’’ என்றான்.

``சொல்லு சஞ்சய்... நான் பேலன்ஸ்டா உட்காரலையோ?’’

``இல்ல… அடுத்து உன்ன எப்போ மீட் பண்ணிப் பேசுவேன்னு தெரியலை. ஒரு அரை மணிநேரம் இப்டி வண்டியிலேயே டிராவல் பண்ணிப் பேசிட்டு, அப்புறம் கொண்டு போய் வீட்ல விட்றவா... ப்ளீஸ்.’’

``ம்ம்ம்… சரி, பொண்ணுகிட்ட ஒரு போன் பண்ணிச் சொல்லிடுறேன். வெயிட்!’’

சிறுகதை
சிறுகதை

மொபைலில் இருந்த பேட்டரி ஐகான் சிவப்பு நிறத்தில் ஒற்றைக்கோட்டில் ஊசலாடிக் கொண்டிருந்தது. மகளுக்கு போன் செய்கிறேன். ஒன்று, இரண்டு, மூன்றாவது ரிங் போவதற்குள் சார்ஜ் தீர்ந்து ஸ்விட்ச் ஆப் ஆகிறது.

``ச்சை… இப்ப என்ன பண்றது. போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு. உன் போன்ல இருந்து கால் பண்ணிக்கவா?’’

``ம்ம்ம்.’’

அவன் போனை வாங்கி நம்பரை டயல் செய்கிறேன். 98431655… 98431566… 98431556... எத்தனை முறை யோசித்தாலும் குழம்புகிறது. மொபைலில் அப்படியே நம்பரைப் பெயரிட்டு சேவ் செய்வதால் எத்தனை தொல்லைகள். ஒரு நம்பரைக்கூட, அதுவும் மகளின் நம்பரைக்கூட ஞாபகத்தில் வைத்திராமல் நானெல்லாம் என்ன அம்மா? போன வாரம்தான் அவள் பாதுகாப்பு முக்கியம் என்று என்னுடைய போன் நம்பரை மனப்பாடம் செய்ய வைத்தேன். ஆனால் நான் இப்போது கோட்டை விட்டுவிட்டேனே.

``சஞ்சய்… போன் நம்பர் மறந்துட்டேன். நாம வாட்ஸ் அப் லைவ்ல பேசிக்கலாம். இப்ப நீ வீட்ல கொண்டு போய் விட்றேன்.’’

``ம்ம்ம்… ஓகே... நோ... இஷ்யூஸ்! பொண்ணை தனியா வீட்ல விட்டுட்டு எப்படிச் சமாளிக்குற?’’

``நான் வர லேட்டாகும்னு தெரிஞ்சா அவ லாக் பண்ணிட்டுத் தூங்கிடுவா. அப்புறம் நான் போய் திறந்துக்குவேன்.’’

``அப்போ அவ சமாளிச்சுப்பா… இருந்தாலும் என்கூட வரத்தான் யோசிக்கிறல்ல!’’

``யப்பா டேய்… இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கிறதுக்கு நான் எப்பவோ கேப்ல ஏறிப் போயிருக்கலாம். இன்னும் அரை மணி நேரம்தானே. அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். நீ பேச வேண்டியதைப் பேசிட்டு என்னைக் கொண்டு போய் விடு.’’

அதன்பிறகு அவன் வண்டி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.

பிறகு, அந்தப் பாழாய்ப்போன வண்டி திரும்பிய சாலையெல்லாம் எங்கே ஆரம்பித்து எங்கே முடிந்தது என்றுதான் தெரியவில்லை. கண்ணை மூடித் திறப்பதற்குள் இந்த இருட்டுச் சாலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டான் கிராதகன்.

வண்டியில் இருந்து இறங்கினேன்.

``ஆமா... இது எந்த ஏரியா? நீ போன ஸ்பீட்ல நான் வந்த ரூட்டைக்கூட கவனிக்கல. இங்க என்ன பண்ணப்போறோம்? ஒரே இருட்டா இருக்கு. போலாம் வா!’’

``நான் கொஞ்சம் பேசணும்.’’

``சரி பேசு.’’

``நீ ஏன் இவ்ளோ அழகா பொறந்தே... உன்னை நான் எவ்ளோ சைட் அடிச்சிருக்கேன் தெரியுமா?’’

``ஏய் … என்னடா மென்டல் மாதிரி பேசிட்டு இருக்கே? மத்தவனுங்க மாதிரி வழியாம இருக்கேன்னு உன் மேல அவ்ளோ மரியாதை வச்சிருந்தேன். உனக்கு டெக்ஸ்ட் பண்றப்போ கூட `ப்ரோ’ன்னுதான் சொல்லியிருப்பேன். எடுத்துப் பாரு. உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது?’’

``ப்ரோவா…’’ அவன் சிரிப்பு கேவலமாக இருந்தது.

``ஹாஹா... நீதான் அதெல்லாம் சொன்னே. நான் ஒருநாளாச்சும் உன்ன அக்கா... சொக்கான்னு கூப்ட்டேனா?’’

அவன்மேல் வைத்த அத்தனை பிம்பமும் சுக்குநூறாகச் சிதைந்துகொண்டிருந்தது. ஓங்கி அறைய வேண்டும்போல் இருந்தது. ஆனால் கோபத்துக்கும் அச்சத்துக்கும் இடைவெளி பெரியது. அந்தச் சூழல் என்னை இரண்டுக்கும் நடுவில் சமன்செய்துகொண்டே இருந்தது.

‘`இப்ப நான் சத்தம் போட்டு ஊரைக் கூட்டப் போறேன்.’’

``இங்க எவ்ளோ சத்தம் போட்டாலும் கேட்க யாரும் இல்ல. நான் என்ன இப்ப தப்பா கேட்டுட்டேன். இதெல்லாம் இப்ப ரொம்ப சகஜமாகிடுச்சு. லிவிங் ரிலேஷன், ஃபிரெண்ட் ஃபார் பெனிஃபிட், த்ரிசம், ஃபோர்சம்னு டெவலப் ஆகிட்டு இருக்காங்க. நீ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? ஏன், என்னைப் பிடிக்கலையா?’’

``ச்சீ... அசிங்கமா இல்ல உனக்கு. ப்ரோனு சொல்றேன்.வெட்கமே இல்லாம எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டு இருக்க. மரியாதையா வீட்ல கொண்டு போய் விடு.’’

‘`மாட்டேன்... மாட்டேன்.’’

அந்தச் சாலையில் சிதறிக்கிடந்த மஞ்சள் மலர்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துக்கொண்டே தெனாவட்டாகப் பேசிக்கொண்டிருந்தான்.

உள்ளுணர்வுக்கு நிலைமை சரியில்லை என்று புரிகிறது. அவனிடத்தில் ராட்சசத்தனத்தைக் காட்டினால் தப்பிக்கமுடியாது என்று உணர்கிறேன். சிறிதளவில் மட்டுமே குரலை உயர்த்திப் பேசிக்கொண்டிருக்கிறேன். அது என் அச்சமின்மையைக் காட்டிக்கொள்ள துணிந்து அவனிடம் மீண்டும் கேட்கிறேன்.

``என்கிட்ட உனக்கு என்னதான் வேணும்?’’

‘`நீ… நீதான். இன்னிக்கு ஒரு நாள் மட்டும். அப்புறம் உனக்கே பிடிச்சிரும். போகப் போக நீயே என்னைத் தேடி வருவே பாரு!’’

வழக்கமான பெண்ணாய் இருந்தால் செத்துவிடலாம் அல்லது அவனை அப்படியே கொன்றுவிடலாம் என்று தோன்றியிருக்கும். அதென்ன வழக்கமான பெண்? எனக்கும் தோன்றியது. எந்தத் தவறும் செய்யாத நான் சாவதோ அவனைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவதோ எனக்குத் தேவையற்ற வாழ்நாள் தண்டனைகள். அவனைச் சாமர்த்தியமாக போலீஸில் பிடித்துக் கொடுக்கலாம் என்றால், நீ ஏன் அவன்கூட அந்த ராத்திரி தனியா போனே என்று கேஸை நம் மீதே திருப்பிவிடலாம். எனக்கு இப்போது வீடு திரும்பவேண்டும். அதுவும் பத்திரமாகப் போனால் போதும் என்று தோன்றியது. அவன் கொடுத்த ட்ரீட்டுக்கு இவ்வளவு சீக்கிரம் என்னையே பதில் ட்ரீட்டாகக் கேட்பான் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எந்த தைரியத்தில் இப்படிக் கேட்கிறான்?’’

உனக்கு டெக்ஸ்ட் பண்றப்போ கூட `ப்ரோ’ன்னுதான் சொல்லியிருப்பேன். எடுத்துப் பாரு. உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது?’’

``யோசிச்சது போதும் வா போகலாம்... டைம் ஆகுது’’ என்கிறான்.

என் தலையை அவன் உலுக்கிய வேகத்தில் நடந்த நினைவுகளிலிருந்து மீண்டு அவன் முகத்தைப் பார்க்கிறேன். எரிச்சல்மயிராக இருக்கிறது.

பக்கத்தில் ஏதாவது பெரிய பாறாங்கல் இருந்தால் தூக்கி எடுத்து `பொள்’ளென்று போடலாம் போலத்தான் கைகால் துடிக்கிறது. இந்தப் பாழாய்ப்போன எண்ணங்களை எல்லாம் நிறைவேற்ற முடியாது என்பதுதானே வாழ்வின் சிக்கல். பொறுமை பொறுமை! என்று மைண்ட் வாய்ஸின் கட்டளைக்குப் பின் பேசுகிறேன்.

``நான் யோசிச்சிட்டேன். இந்த இடம்லாம் எனக்கு சரியா படலை. எங்க வீட்டுக்கே போலாம் வா.’’

``ரியலி… இத மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல… சூப்பர்டி சூப்பர்!’’

துள்ளிக் குதித்தான்.

அதன்பிறகு அந்த பல்சர் வண்டி இன்னும் இன்னும் அதிக வேகமெடுத்தது.

`ஆங் லெஃப்ட் போ… ஆங் லாஸ்ட் ரைட்… அங்க ஒரு தண்ணி டேங்க் இருக்குல்ல… அதுக்குப் பக்கத்துல போ… ஆங் இங்கதான் நிறுத்து.’’

``ஓ இதான் உன் வீடா? போலாமா?’’

அவனிடம் இனிமேல்தான் தைரியமாகப் பேச வேண்டும்.

``என்ன சொன்னே… நான்தான் வேணுமா? இப்ப சொல்லு பாப்போம். எங்க கையைப் பிடிச்சு இழுத்தியே இப்ப இழு பாப்போம். ராஸ்கல். உன்னையெல்லாம் போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு... த்தூ!’’

சிறுகதை
சிறுகதை

``ஏய்ய்…ஏய்ய்… இதப்பாரு… இதெல்லாம் தப்பு. பப்ளிக் ப்ளேஸ்.. சத்தம் போடாத. எதுன்னாலும் விடிஞ்சதும் பேசிக்கலாம். யாராவது முழிச்சிக்கப்போறாங்க.’’

``உம் மொகரக்கட்ட… போடா பொறுக்கி. மரியாதையா தடயமே இல்லாம ஓடிப்போயிரு. ஏன்னா இது எங்க ஏரியா.’’

அவன் பதற்றத்தை அவன் உடல்மொழியே காட்டிக்கொடுத்தது.

ஏதேதோ உளறுகிறான். அல்லது, தான் இவ்வளவு நேரம் செய்தது எதுவுமே தவறில்லை என்பதுபோல சாதிக்கிறான்.

அநேகமாக என் சத்தம் கேட்டுத்தான் எதிர் வீட்டின் ஜன்னல் கதவு திறந்திருக்கக் கூடும்.

அவன் கிளம்ப எத்தனித்தான்.

``இதெல்லாம் யாருகிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்’’

``அதெல்லாம் தெரியாது. ஆனா கண்டிப்பா உன் வொய்ப் கிட்ட சொல்லமாட்டேன்’’ என்றேன்.

``தேங்க்ஸ்’’

அவசரமாகச் சொல்லிக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அதன்… வ்ர்ர்ர்ரூம் சத்தம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்னும் இன்னும் இன்னும் வேகமாகப் போவதை உறுதி செய்தது.

எவனோ ஒருவன் வெறும் உடலுக்காக இந்த ராத்திரியில் ஏன் இத்தனை போராட்டம் நடத்துகிறான். எப்படிக் கூச்சமே இல்லாமல் என் உடைமையை அவன் உரிமைபோல சட்டெனக் கேட்கமுடிகிறது. இதெல்லாம் இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது? நான்தான் விருப்பமில்லாத ஒருவனைச் சகோதரன் என்று நினைத்திருக்கிறேனா? அல்லது, அவன் தான் விரும்பிய ஒரு பெண்ணைச் சகோதரியாய் ஏற்க மறுத்திருக்கிறானா?

எவ்வளவு நுட்பமாய் யோசிக்க வேண்டியிருக்கிறது? இந்த இரவைத் துண்டுத் துண்டாய் வெட்டிப் போட்டுவிட்டு நடக்கிறேன்.

வீட்டுக்குள் நுழைந்ததும் மகளைப் பார்க்கிறேன். தூங்கிக்கொண்டிருக்கிறாள். அந்தச் சிறிய உடலின் மீது அனுமதியில்லாமல் கடித்துக்கொண்டிருந்த கொசுவை நசுக்கிவிட்டு, போர்வையை இழுத்து அவளுக்குப் போர்த்திவிடுகிறேன்.